Search This Blog

7.8.10

அய்யப்பனைவிட ஏழு மலையானைவிட தீவிரவாதிகள் தீர மிக்கவர்களா?


கண்காணிப்பு!

சபரிமலைக் கோவிலில் கூடுதல் கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத் திட கேரள உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

எதற்காக இந்த ஏற்பாடாம்? பயங்கரவாதி களின் அச்சுறுத்தல். உண்டியல் பணம் எண்ணப்படு வதைக் கண்காணித்தல் உள்ளிட்டவைகளுக்காக இந்த ஏற்பாடாம்.

இதுபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளன.

இவை குறித்து யாராவது மூளையைப் பயன் படுத்தியதுண்டா? இந்த ஏற்பாடுகள் கடவுளின் சக்தியைக் கேலி செய்வது ஆகாதா? பக்தர்களின் ஒழுக்கத்தைக் கொச்சைப் படுத்துவது ஆகாதா என்பதைக் கொஞ்சம் சிந்திப்பது நல்லது.

நாத்திகர்கள் நையாண்டி செய்கிறார்களே என்று சினம் கொள்ளாமல் ஆறுவது சினம் என்று ஆற்றுப்படுத்தி அவர்களைச் சிந்திக்க வைப்பதுதான் எங்களின் தலையாய நோக்கம்.

தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் என்று பாட்டுப்பாடி பக்தர்கள் செல்லுகிறார்களே - இந்தச் சொற்களுக்கு உள்ளார்த்தமான பொருளும், நம்பிக்கையும் இருந்தால், வழியில் சிறுத்தை அடித்துவிடுமே - புலி பாய்ந்து கொன்று விடுமே என்ற அச்சம் வரலாமா? அதுவும் அய்யப்பன் புலி மீது சவாரி செய்பவன் ஆயிற்றே!

இதில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலிலிருந்து பக்தர்களைக் காப்பாற்றவும் இந்த ஏற்பாடாம்.

அய்யப்பனைவிட ஏழு மலையானைவிட தீவிரவாதிகள் அவ்வளவு தீர மிக்கவர்களா? எல்லாம் அய்யப்பன் பார்த்துக் கொள் வான் - ஏழுமலையான் கவனித்துக் கொள்வான் - இந்த ஏற்பாடுகள் எல்லாம் வேண்டாம் - வேண்டவே வேண்டாம் என்று அடித்துச் சொல்ல நாட்டில் ஒரே ஒரு பக்தன்கூட இல்லாமற் போய்விட்டானா?

நம்பிக்கைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத இதனை நாங்கள் சுட்டிக்காட்டும்போது நாத்திகர்களை நாக்கில் நரம்பின்றித் திட்டித் தீர்க்கலாமா?

சபரிமலையில் கண்காணிக்க கேமரா என்ற சேதியை வெளியிட்ட தினமலர் (6.8.2010) பழைய ஒரு தகவலையும் நினைவூட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்த கோவில் ஊழியர் ஒருவர் ஆயிரம் ரூபாய் நோட்டை வாய்க்குள் திணித்ததை கண்காணிப்புக் கேமரா காட்டிக் கொடுத்துவிட்ட தாம்.

பலே, பலே! பகவானின் பக்கத்தில் இருப்பவர்களின் ஒழுக்கமே இப்படித்தான் இருக்கிறது! பக்தி ஒழுக்கத்தை வளர்க்குமா? எண்ணிப் பாரீர்!

--------------------- மயிலாடன் அவர்கள் 7-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

ஒசை said...

பகுத்தறிவே. தீவிரவாதத்தை எதிர்த்து எந்த மத கடவுளர்களாலும் ஜெயிக்க முடியாது.குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருக்கிற அரசியல்வாதிக்கும் பொருந்தும்.

பகவானின் பக்கத்தில் இருப்பவர்களின் ஒழுக்கமே இப்படித்தான் இருக்கிறது///!

தேனே எடுத்தவன் நக்காமலா இருப்பான. (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே. கலைஞர் அய்யா தன் தவறுக்கு சொன்ன உதாரணம்)

பக்தி ஒழுக்கத்தை வளர்க்குமா
http://oosssai.blogspot.com/2010/08/blog-post_04.html