Search This Blog

12.9.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 28

 இதுதான் வால்மீகி இராமாயணம்

(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)
 
 அயோத்தியா காண்டம் 

எட்டாம் அத்தியாயம் தொடர்ச்சி


இராமன் வெட்கத்துடன், கோசலைக்கும் சீதைக்கும் இலக்குவனுக்கும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு பெரிய பயம் நேர்ந்திருக்கிறது என்கிறான். இதனால் தனக்கு நேர்ந்த கதியை நினைத்து அவன் மிகுந்த கவலையடைந்தவனாகிறான். இருவரும் அவன் உலக இயற்கையை நன்கறிந்தவனாதலாலும், எப்படியாவது தன்னைப் பார்க்கவரும் பரதனை ஏமாற்றி நாட்டைப் பெறலாமென்ற தீர்மானத்தை உடையவனானதாலும் ஒருவாறு கவலையை அடக்கிக் கொள்ளுகிறான்.


மாமிசத்தை விலக்கிக் காய்கனிகளைத் தின்பேன் என்று இராமன் கூறுவதால், அவன் புலாலுண்பவனே யாகும். இதையே மொழி பெயர்ப்பாசிரியராகிய சீனிவாச அய்யங்காரும் அயோத்தியா காண்டம் இரண்டாம் பதிப்பு 88 ஆம் பக்கத்தில், இராம இலக்ஷ்மணர்கள் மாமிசத்தைப் புசித்ததாகச் சிலவிடங்களில் சொல்லப் படுகிறது என்று எழுதியிருக்கிறார்.


இவ்விதமாகப் புலாலுண்டு சாதாரணமாகத் திரிந்த ஆரியனாகிய இராமனைத் தமது தெய்வமெனக் கருதி வழிபடு கின்றனரே தமிழ் மக்களிற் சிலரும்! இனியாவது அவர்கள் உண்மையை யுணர்ந்து நல்வழிப்படுவார்களாக!
நான் அரசனுடைய முதல் மனைவியாக இருந்தாலும் அதற்குரிய செல்வம், நகை என்னிடம் இல்லையென்று கோசலை கூறுவதாக வால்மீகி எழுதுகிறார். அவரே பின் கோசலையோ மிகவும் பொருளுடையவள். அவள் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு அநேகமாயிரம் ஊர்களைக் கொடுத்திருப்பதை நாம் பார்த்ததில்லையா, என்று இலக்குவன் இராமனிடம் கூறியதாக எழுதுகிறார்.
இவ்விரண்டும் நம்முள் முரண்படுகின்றமை காண்க. வால்மீகி இவ்வாறு முன்னுக்குப்பின் முரணானவற்றை எழுதுவதோடு, முன் நடக்காத செய்திகளையும் நடந்ததாகப் பின்னால் எழுதுகிறார்.


இதற்கு உதாரணம், இராமன் இலக்குவனைத் தன்னுடன் அழைத்துப் போக இயைந்தவுடன் அவனை நோக்கி மிதிலையில் வருணன் தங்களுக்கு நேரில் கொடுத்த இரண்டு வில் முதலிய பொருள்களை வசிட்டர் வீட்டிலிருந்து எடுத்துவரச் சொல்லுவதே. இது முழுப்பொய்யான செய்தி. வருணன் இவர்களிடம் ஒன்றும் கொடுக்கவேயில்லை.


இதைப் பற்றியே, தமது குறிப்பாக நம் திரு.சீனிவாச அய்யங் காரும் அயோத்தியா காண்டம் பக்கம் 138-இல் இப்படி வருணன் ஆயுதங்களைக் கொடுத்தாரென்று பால காண்டத்தில் சொல்லப்படவில்லை.
பக்கம் 77-இல் பரசுராமர் போனபிறகு தன் கையிலிருந்த விஷ்ணுவின் வில்லையும் பாணத்தையும் மற்றவர்களால் பார்க்கப் படாமல் நின்ற வருணனிடத்தில் இராமன் கொடுத்தா னென்று மாத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது என்று எழுதியிருக்கின்றனர்.


இதனால வால்மீகி முனிவருடைய ஞாபகசக்தி புலனாகிறது. மேலும் அவரது கவித்திறம் இத்தன்மையதென விளங்குகிறது. இதனை அறிஞர் சிந்திப்பாராக!
கோசலை தன் மகன் காட்டுக்குப் போகிறானென்று கவலைப்படவேயில்லை. அவன் காட்டுக்குப் போவதால் பல கேடுகள் தனக்கு விளையுமே என்றே ஏங்குகிறாள். தான் கிழப்பருவமடைந்துவிட்டதால் தசரதன் தன்னை விரும்பக் கூடான், அப்படியே கூட வந்தாலும் தன்னுடைய சக்களத்திகள் அவனை வந்து கைப்பிடித்து இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.


இவ்வாறு கைக்கெட்டியதும் வாய்க்கெட்டாது போகுமே, பெண்களுக்கு இதைவிடத் துன்பம் உண்டோ என்பதை எண்ணியே தவிக்கிறாள், இராமன் போய்விட்டால் சக்களத்திகள் செய்யும் கொடுமை அதிகமாகு மென்றே அவன் இராமனைத் தடை செய்ய முயல்கிறாள். அதற்காக அவள் நீ என்னை விட்டுப் பிரிவாயேல், இந்த உலகத்தில் என்றும் அழியாத துக்கத்தை அடைவாய் என்று கூடச்சபிக்கிறாள்.


இலக்குவன் தசரதனைச் சிறையில் வைத்தோ கொன்றோ அரசைக் கவரவேண்டு மென்று கூற, கோசலை இராமனை அவன் சொல்லுக்கு இணங்கச் சொல்லுகிறாள். இதனால் தசரதனாகிய தன் கணவன் செத்தாலும் சரி, தனக்கு அதிகாரம் வந்தால் போதும் என்ற மிகவும் இழிவான அற்பக் குணமுடையவளாகக் காணப்படுகிறாள் கோசலை.


இலக்குவனுடைய பேச்சிலிருந்து அவனுக்குத் தசரதன் கைகேயியைத் திருமணஞ் செய்யும்போது செய்து கொடுத்த வாக்குறுதி தெரியாதென்றே தோன்று கிறது. தந்தையைக் கொன்றேனும் அரசைக் கைப்பற்ற வேண்டுமென்பதே அவனுடைய கேவலமான எண்ண மாக இருக்கிறது. இவனைப் போலும் பிள்ளைகள் வேண்டுவது அவசியமே! இராமனும் கூட அவனை நோக்கி நம் தகப்பனாராயிருந்தாலும் அவரைக் கொன்று நாடாளுவோமென்ற கேவலப் புத்தியை விட்டுவிடு என்று கூறுகிறான். இலக்குவன் இவ்வளவோடு நின்ற தாகத் தெரியவில்லை.


இலக்குவனுடைய பேராசை அதன்மேலும் அளவு கடந்து செல்லுகிறது. அவன், அண்ணா, தசரதனையும் கைகேயியையும் காட்டிற் கனுப்பி உமக்கு அரசைத் தருகிறேன். அரசாட்சி அடிக்கடி மாறுமென்று தங்களுக்குச் சந்தேக முண்டாகித் தங்களுக்கு அரசாட்சி வேண்டாமென்றால் நானே அர சாட்சியை ஏற்றுக்கொண்டு நாட்டைக் காப்பாற்றுவேன் என்று கூறுகிறான். இதனால் அவன் உள்ளக்கிடை இதுவென விளங்குகிறது.


இராமன் தனக்கு அரசாட்சி கிடைக்கவில்லை என்ற கவலையாலோ உள்ளபடி உலகத்திலுள்ள வெறுப் பாலோ அரசாட்சி வேண்டாமென்றால், தானாவது அதைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற கெட்ட எண்ணம் இலக்குவனிடமிருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவன்தான் இராமனை அணுகியிருந்து எப்படியாவது ஒரு காலத்தில் தானே அரசனாக வரலாம் என்ற பேராசையுடையவனாக இருந்தானென்பது புலனாகிறது. தந்திரசாலியாகிய இராமன் இலக்குவனை இவ்வளவுதூரம் வசப்படுத்தி வைத்திருக்கிறான்.
அயோத்தியா காண்டம் சருக்கம் நாலில் பின் வரும் செய்தி காணப்படுகிறது. முடிசூட்டுத் தீர்மானத்தைத் தன் தாயிடம் கூற வந்த இராமன், தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இலக்குவனை நோக்கி, என் இரண் டாவது பிராணனாகிய உனக்காகவே இந்த இராஜ்ய லட்சுமி எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆகையால் இராஜ்ய பரிபாலனம் செய்வது உன் வேலை.


சுமித்தி ரையின் புத்திரா! தாயின் உத்திரவுப்படி இஷ்டமான போகங்களையும், விலையற்ற இரத்தினா பரணங்கள், வஸ்திரங்கள் முதலியவற்றையும் அனுபவிக்கலாம். இந்த இராஜ்யமும் நான் பிழைத்திருப்பதால் எல்லாம் உனக்கேயன்றி வேறில்லை என்று கூறியதாகக் காணப்படும் செய்தி இங்கே சிந்திக்கத்தக்கது.

                                   --------------------------------- ”விடுதலை” 12-09-2014

6 comments:

தமிழ் ஓவியா said...


அண்ணா வெறும் படமல்ல - பாடம்! அவற்றைப் படிப்போம் - செயல்படுத்துவோம்! தமிழர் தலைவர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணாவின் 106ஆம் பிறந்த நாள் பெரு விழா! (செப்.15- 2014) இன்று.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்து, அவர் கண்ட பகுத்தறிவு - சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாய் உயர்ந்து, பிறகு கோலோச்சும் நிலைக்கு மக்கள் ஆட்சியின் மகத்தான வாய்ப்புக் காரணமாக உயர்த்தப்பட்ட நிலையில், இளமையில் கற்ற பாடங்களை மறக்காது, ஆட்சியின் அரிய திட்டங்களாக - சட்டங்களாக ஆக்கி, தன்னை ஆளாக்கிய தலைவனின் பாராட்டையும், வாழ்த்தையும் பெறும் அளவுக்கு வாழ்ந்து காட்டி, வரலாறு படைத்தவர் அறிஞர் அண்ணா. ஆட்சி அவருக்கு அலங்கார பீடமல்ல; அவனியோர்க்கு ஆற்ற வேண்டிய மனித நேயக் கடமைக்களுக்கான வாய்ப்பு ஆகும்.

அப்படித்தான் செயற்கரிய செய்து குறுகிய காலத்தில் சாதனைச் சரித்திரம் படைத்தார்.

இன்றோ அண்ணாவைப் பற்றிய வெளிச்சங்கள், வாண வேடிக்கைகள் அதிகம்; ஆனால், அண்ணா எந்த பகுத்தறிவுக் கொள்கையை இறுதி மூச்சடங்கும் வரை ஆட்சியில் இருந்தபோதும் செயல்படுத்துவதில் சமரசம் விரும்பாத தலைவராக இருந்தாரோ, அந்தப் புரிதலும் அதை ஒட்டிய செயல்பாடும் தேடித் தேடியும், காணாமற் போனவைகளாகி விட்டது - வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது!

கடவுள் படங்களை நீக்கச் சொன்னார்

ஆட்சிக்கு வந்தவுடன், மதச் சார்பின்மை என்பது ஆட்சியின் தத்துவம் ஆனதால், அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டியிருப்பது தவறு; அவைகளை அகற்றிட வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பி தலைமைச் செயலகத்திலேயே அதனை செயல்படுத்தவும் வற்புறுத்தினார் 1967-இல்.

அவருக்கு ஆதரவு கொடுத்த ஆச்சாரியார் - ராஜாஜி அவர்களேகூட இந்தச் சுற்றறிக்கையை பின் வாங்கிட வேண்டும் - தமிழக அரசு என்று அறிக்கை விட்டு, எதிர்ப்புத் தெரிவித்ததையும் பொருட்படுத் தாது, ஆட்சியைத் தொடர்ந்த துணிச்சலின் சொந்தக்காரராக முதல் அமைச்சர்அண்ணா திகழ்ந்தார்!

ஆனால், அது பிறகே செயல்பாடற்றுப் போனது - வேதனையான நிலையே!

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே பார்ப் பனர் இல்லாத அமைச்சரவையை அமைத்து வெறும் 9 பேர்களையே (முதல்வர் உட்பட) கொண்டு ஆட்சியை நடத்தி, அகிலத்தையே வியக்க வைத்தார்!

எங்கும் பகுத்தறிவு முழக்கம் செய்தார்; பட்டமளிப்பு விழாக்கள் என்றாலும் சரி, பாராட்டு விழாக்களானாலும் சரி, அதை ஒரு முக்கிய கடமையாகவே செய்து சரித்திரம் படைத்தார்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களையும் அண்ணாவையும் பிரித்துப் பார்க்க முடியாது!

ஆனால், இன்று அண்ணா பெயரைப் பயன்படுத்தியும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கொடியில் பொறித்தும் நடத்துகின்றவர்கள் இம்மூன்றையும் கடைப் பிடித்து ஒழுகும் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் தானா என்று நெஞ்சில் கைவைத்து கேள்வி கேட்டு நேர்மையான விடை காண முயல வேண்டும்.

அண்ணா வெறும் படம் அல்ல.
பாடம்! பாடம்! படிப்பினை
பெரியார் வாழ்க! அண்ணா விரும்பிய புதிய சமுதாயம் மலர்க!

சென்னை
15.9.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://www.viduthalai.in/e-paper/87808.html#ixzz3DOLbVtcU

தமிழ் ஓவியா said...


அண்ணாவின் மூன்று சாதனைகள் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி


சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்குக் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அண்ணா என்பவர் ஒரு தத்துவம்; அவர் ஒரு பெரும் பாடம் என்பது மிக முக்கியமானது. படத்தோடு அண்ணா முடிந்துவிட்டார் என்று கருதாமல், கொள்கையோடு வாழ்வதுதான் அண்ணாவிற்கு நாம் காட்டக் கூடிய சிறப்பு என்று மிகப்பெரிய அளவிலே உணர்வுகளைப் பெற வேண்டும்.

அண்ணா செய்த சாதனைகள்

அண்ணா மூன்று சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்தார். ஆட்சிக்கு வந்த நிலையில்!

தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார்.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை - இந்திக்கு இடமில்லை என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு இந்தியும், சமஸ்கிருதமும் மீண்டும் இந்தத் தமிழ் மண் ணிலே மட்டுமல்ல, இந்தியாவையே ஆளத் துடித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அண்ணா, தந்தை பெரியார் வழியிலே மிகவும் நினைவூட்டப்பட வேண்டி யவர் மட்டுமல்ல, அண்ணாவை ஏந்தி, அவர்தந்த களத்தை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டியதுதான், அண்ணாவின் பிறந்த நாளில் நாம் ஏற்கவேண்டிய சூளுரையாகும்.

மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் பலிக்காது!

செய்தியாளர்: இப்பொழுது தொடர்ந்து மோடி அரசாங்கம் இந்தியை பல வகைகளில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர் பதில்: மோடியை ஆதரித்தவர் களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. எங்களைப் பொறுத்த வரையில், இது வியப்பானது அல்ல; எதிர் பார்க்காததும் அல்ல. ஏற்கெனவே, மோடி வந்தால் என்ன செய்வார் என்பதை தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் சொன்னோம்.

அதைத் தாண்டி, அவர் ஆட்சிக்கு வந்தால் எதை எதையோ செய்துவிடுவார்கள் என்று நினைத் தார்கள்; எனவே, மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் பலிக்காது!

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/87803.html#ixzz3DOLpSmv8

தமிழ் ஓவியா said...


பெருமை

மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக் காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://www.viduthalai.in/page-2/87810.html#ixzz3DOMSSGWU

தமிழ் ஓவியா said...


ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம்!


ரகசியம் என்றாலே அனைவரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான்.

ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால், ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாமல் அவ்வப்போது ஏதேனும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். இப்படி போதிய இடைவெளி விட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புகள் தங்குவதைத் தடுக்கிறது.

அதேசமயம் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். ஒல்லியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட்டானது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்துவிடும்.

உணவில் அவ்வப்போது கசப்பான உணவுகளையும் சேர்த்து சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் தங்குவதில்லை. மேலும் எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை. நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும். எனவே குறைந்தது தினமும் 7 மணி நேர தூக்கமானது மிகவும் அவசியம். ஒல்லியாக இருக்க நினைப்பவர்கள் அதிகம் இனிப்பு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடக்கூடாதவை: முட்டை ஒரு சத்தான உணவுதான். ஆனால் உடற்பயிற்சிக்கு பின் முட்டை, தயிர், சாக்லெட், பீட்சா போன்றவற்றை சாப்பிடக் கூடாது. குளுட்டென், சர்க்கரை அதிகம் இருக்கும் பிரட் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு சர்ரென்று ஏறிவிடும் ஆபத்து உள்ளது.

செரிமானத்திற்கும் நல்லதல்ல. உடற் பயிற்சிக்குப் பின், நம் உடலில் ரத்தமானது வயிற்றுக்குள் செல் லாமல் வெளியே பாய்ந்து கொண்டிருக்கும். அப்போது ஒரே ஒரு ஸ்பூன் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதற்கு மேல் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதல்ல.

தமிழ் ஓவியா said...


நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்


மேதி என்று அழைக்கப்படும் வெந்தயம் ஒரு மாமருந்து. கீரைவகையில் இருந்து கிடைக்கும் விதையாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் வெந்தயம் விளைகிறது. வாரம் ஒருமுறை வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல், வாயு, கபம், இருமல், சீதக்கழிச்சல், வெள்ளைப்படல், இளைப்புநோய் என எந்த நோயும் அண்டாது. இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், செரிமானமின்மை போன்றவை ஏற்படாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தப் பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருள்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.

இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் போலிக் அமிலம், ரிபோபிளேவின் (பி2), வைட்டமின் ஏ, பைரிடாக்சின், வைட்டமின் சி, செலினியம், துத்தநாகம், மாங்கனீஷ், இரும்பு சத்து, தாமிரச்சத்து, பொட்டாசியம், உலோகச் சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன.

வெந்தயம் உடலுக்குக் குளிர்ச்சி அளிப்பதுடன், உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில், அந்தத் தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலச்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சினையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரைமணி நேரம் தலையில் தடவி குளித்து வந்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்யும்.

பொடுகு பிரச்சினை, அரிப்பு குறைவதோடு, முடி உதிர்வது நீங்கி தலைமுடி நன்கு வளரும். வெந்தய காபி, வெந்தய தேநீர் குடிக்கலாம். வெந்தயத்தில் ஹைட்ரோ அய்சோலியூசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டக் கூடிய தன்மை உடையது.

தாவர வகைகளிலேயே வெந்தயத்தில் மட்டுமே இந்த அமினோ அமிலம் உள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

தமிழ் ஓவியா said...


அரிசியும் நோய் தீர்க்கும்

தென்னிந்திய மக்களின் மிக முக்கிய உணவுப் பொருள் அரிசி. நம்மில் பெரும்பாலா னோருக்கு ஒரு வேளையாவது அரிசி சாதம் சாப்பிட்டே ஆகவேண்டும். அண்மைக் காலமாக அரிசிக்குப் பதில், அரிசியைக் குறைத்துக்கொண்டு கோதுமையை அதிக உணவாகப் பயன்படுத்தும் பழக்கம் பெருக ஆரம்பித்திருக்கிறது. அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று சிந்திப்பதே தவறு.

பதார்த்தகுண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்களில் 25-க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் முறை விளக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெல் மற்றும் அரிசியின் பயன்பாடும் நம் முன்னோர்களிடையே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அரிசியையும் மற்ற தானியங் களையும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உணவாக்கிக் கொள்வது நல்லது.

அரிசி என்றால், மேலோட்டமாய் புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசுமதி அரிசி, சிகப்பரிசி இவைகளைத்தான் நம்மில் பலர் அரிசி என்று தெரிந்து வைத்திருக்கிறோம். இவைதவிர வெவ்வேறு சூழல்களில் வளரக்கூடிய பல்வேறு வகையான நெல் வகைகள் அந்தந்தச் சூழலின் மண்ணின் தன்மையையும் சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

கருங்குறுவை என்றொரு அரிசி கறுப்பு நிறத்திலும் செங்குறுவை என்றொரு அரிசி சிகப்பு நிறத்திலும் இருக்கும். இவைபோல வண்ண அரிசி வகைகளும் நம் பாரம்பரியத்தில் இருந்தன. அரிசியில் மட்டுமல்ல, எந்தப்பொருளிலுமே நிறமிகளிருந்தால் அவற்றில் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லா வற்றிலும் நல்ல மருத்துவக் குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி வேக அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை. உதாரணத்துக்கு மணிச்சம்பா அரிசியை கூறலாம். இதுபோல், மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம்.

புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து எல்லாம் இந்த அரிசியில் நிரம்ப உள்ளன. விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க (கெட்ட நீரைப் போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் பச்சரிசி சாதம் சாப்பிடக்கூடாது.

கைக்குத்தல் அரிசி என்பது தவிடு பிரியாமல் இருக்கக் கூடியது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கூடவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையும் உள்ளது. புழுங்கல் அரிசி எளிதில் செரிமானமாகும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. அரிசி சாதம் மட்டுமல்ல அரிசிப் பொரியும் பித்தத்தைச் சமப் படுத்தக்கூடியது தான்.

அவல் வாதத்தைச் சமப்படுத்தும் மாவுச்சத்து மிகுந்தது. அரிசியை முற்றிலுமாகத் தவிர்க்காமல் அதனூடாகவே மற்ற பல தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.