(இதிகாசங்கள் என்றும் புராணங்கள்
என்றும் மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள்
குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும்
- நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம்
செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு
இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி
இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை
(சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும்
வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் -
பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)
அயோத்தியா காண்டம்
எட்டாம் அத்தியாயம் தொடர்ச்சி
இதைப்பற்றி நாம் அயோத்தியா காண்டம் முதற்
கட்டுரையிலே ஆராய்ந்துள்ளோம். இவ் விதமாக இராமன் அடிக்கடி இலக்குவனிடம்
தனக்கு அரசாட்சியில் உண்மையில் பற்றில் லாதது போலப் பலதடவை பாசாங்கு
செய்திருக்கிறான். அதனாலேயே இலக்குவன், உனக்கு நிலையில்லாத அரசாட்சியில்
பற்றில்லையானால் நானே அரசாளு வேன் என்று கூறத்துணிகிறான். இராமன் இதைப்
போலவே கைகேயியிடமும் கூறியதை முன் கட்டுரையில் கண்டோம்.
இராமன் மகா தந்திரசாலி. பின்
வருவதையெல்லாம் நன்றாக முன்னாலேயே தேர்ந்தறியும் நுண்ணிய அறிவுத்
திறமுடையவன். அவன் தன் தந்தை மனப்படி செய்த சூழ்ச்சி பலிக்காது போகவே
எப்படியாவது பரதனிட மிருந்து தந்திரமாக அரசைக் கைப்பற்ற வேண்டுமென்ற எண்ணமே
அவனுக்கு மேலிடுகிறது. அதனால் அவன் அப்போது போரிட்டாலோ வேறு சூழ்ச்சி
செய்தாலோ தனக்கு அரசு கிடைக்காதென நன்கறிவான்.
ஏனெனில், பரதன் வந்துவிட்டானேயானால் அவனே
அரசாட்சிக் குரியவன் என்பது யாவருக்கும் தெரிந்துவிடும். அந்த
மும்முரத்தில் பரதன் அரசாட்சியைத் தனக்குக் கொடுக்கத் துணிந்தாலும் கைகேயி
முதலியோர் அதற்கு இடங்கொடார்.
ஆதலின், தான் விரைவில் காட்டுக்குப்
போய்விடவேண்டும். அப்படியானால் தன்னைப் பார்க்கக் கட்டாயம் பரதன் வருவான்;
அவனிடத்தில் தந்திரமாக அரசைக் கவரலாம் என்று துணிந்தவனாத லாலேயே, கோசலையோ
இலக்குவனோ கூறிய பேச்சுக்கும், வேண்டுதலுக்கும் அவன் செவி சாய்க்காதும்
இணங்காதும் கட்டாயம் காட்டுக்கே போவேனெனக் கூறுகிறான்.
இருந்தாலும் அவன் மனிதனே யாதலின், அப்போது
அவனடைந்த அவமானத்தால் மிகவும் துக்கமும் வெட்கமும் தன்னையறியாமலே அவனைப்
பற்றிக் கொள்கின்றன.
அதனால் அவன் கோசலை தன்னை ஓர் ஆசனத்தில்
இருக்கச் சொன்னபோது வெட்கமடைகிறான். மேலும் தன் அரண்மனையில் தன்
பரிவாரங்கள் தன்னுடைய முடிசூட்டுக்காகச் செய்து கொண்டிருந்த
அலங்காரங்களையும், அவர்கள் மகிழ்ச்சியையும் பார்த்து வெட்கத்தால் சற்று தலை
குனிகிறான். அவன் துக்கத்தால் வாடிய முகத்துடனும், கவலையால் இந்திரியச்
சுவாதீனமின்றியும் தலைகுனிந்து வருவதைச் சீதை கண்டு நெஞ்சம்
துணுக்குறுகிறாள்.
என் கையிற் கிடைத்த அரசாட்சி
தவறிப்போனதும் என்னிடத்தில் அளவில்லா அன்பு வைத்திருந்த கைகேயி மனம்
மாறியதும் தெய்வச் செயலே எனக்கூறுகிறான் இராமன். இவ்வாறு தெய்வச் செயலை
நினைத்து வருந்தும் இராமனைத் தெய்வமாக நினைக்கின்றனரே மக்கள் சிலர்.
பரிதாபம்! பரிதாபம்!
இலக்குவன், வீரமற்றவர்களும்
பித்தேறியவர்களும் பேசுமாறு விதியின் பெருமையைப் பேசினீர். தங்களுக்குச்
சித்தப்பிரமையே தவிர வேறில்லை எனக்கூறியதையும், இராமன்
முயற்சியுடையானாதலின் ஓர் இகழ்ச்சியாக நினைத்தானில்லை. பின்னால்
எப்படியாவது அரசைப் பெற உடன் காடேகுவதே தகுந்த தந்திரம் எனத் தீர்மானமாக
அவனுக்குத் தோன்றினாலும், அப்போத டைந்த அவமானம் அவன் மனத்தை வருத்துகிறது.
இராமன் தசரதனடைய உண்மையான தன்மையை
அறிவானானதால், பரதன் வந்தவுடன் தசரதன் சூழ்ச்சி முழுவதும் வெளியாகும்.
அப்போது வரும் அவ மானத்தைப் பொறுக்க முடியாமல் மனமுடைந்து இறந்துபோவான்
என்பதை நன்றாக அறிந்து தனக்கு வேண்டியவளாகிய கோசலையாவது கூட இருக்க
வேண்டுமென்று அவளிடம் கூறுகிறான்.
அவளைப் பார்த்தாவது தசரதனுடைய மனம்
ஆறுதடையுமென்பது அவன் நோக்கம். அதனாலேயே அவனை நோக்கி என்னைப் பிரிந்தால்
ஏற்படும் துக்கத்தால் அவர் இறக்காமல் நீ பாதுகாக்க வேண்டும் என்று
கூறுகிறான்.
இராமன் தன் முடிசூட்டுக்கு வந்த இடையூறால்
உண்டான துக்கத்தை எவ்வளவுதூரம் அடக்கியும் முடியவில்லை. கடைசியாகக்
கோசலைமுன் அவன் அழுகின்றான். அவ்வழுகையும் துக்கமும் சீதையைக் கண்டபோது
மேலிடுகிறது. கையில் கிடைத்த அரசாட்சியை இழந்தேன், நானும் காட்டுக்குப் போக
வேண்டியதாயிற்று என்று எப்படிச் சொல்லுவதென்ற சோகத்தால் அவன் உடம்பு
வியர்த்தது. கவலையை அடக்கமுடியாது தவித்தான்.
கோசலை இராமனைப் பார்த்து நீ பிறந்த இந்தப்
பதினேழு ஆண்டுகளாய் என்று கூறுவதிலிருந்து இராமனுக்கு அப்போது பதினேழு
வயதுதான் என்று தெரிகிறது. ஆனால் அயோத்தியா காண்டம் நாலாவது சருக்கத்தில்
தசரதன் கூற்றாக, பரதன் அம்மான் வீட்டுக்குப் போய் வெகு நாளாயிற்று என்றும்,
முப்பதாம் சருக்கத்தில் சீதை கூற்றாக, அதிபாலியத்தில் தன்னைக் கல்யாணம்
செய்து தன்னுடன் பல்லாண்டு களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியைத் தானே
பிறரிடத்தில் ஒப்புவித்து அதனால் பிழைக்கிறவனைப் போல் என்றும் வருவதைக்
கவனித்தால், இராமனுக்குக் கலியாணமானபின் பல ஆண்டுகள்
கழிந்த பின்னரே இவ்வித நிகழ்ச்சிகள் எற்படுகின்றன என்று தெரிகிறது. இதையே
நமது சீனிவாச அய்யங்காரும் பக்கம் 131-இல் எழுதிய குறிப்பில், அயோத்தியில்
பழகியும் என்று எழுதுகிறார். இதனாலும் வால்மீகி முனிவர் முன்னுக்குப் பின்
முரணாக எழுதுகிறார் என்பது வலியுறுகிறது.
மேலும் வால்மீகி முனிவர் இராமன் இரவில்
தன் தந்தையைக் கண்டபின் கோசலையைக் கண்டு, பின்னரே தன் அரண்மனையை
அடைகிறானென்று கூறிவிட்டு, மறுநாள் காலை நிகழ்ச்சியின்போது, கோசலை
பலநாளாகக் காணாத இராமனை ஆவ லோடெதிர் கொள்கிறாள் என்று கூறுகிறார்.
இவ் விதமாறுபாடுகள் எழுந்தது மிகவும்
வியப்பே. இதெல் லாம் வால்மீகி முனிவருடைய அறிவுக் குறைவைக் காட்டும்.
அன்றேல் இடையில் பலர் அந்நூலிற் செய்த மாறுபாடுகளைக் காட்டும்.
------------------------------"விடுதலை” 16-09-2014
0 comments:
Post a Comment