பெரியார் அன்றும்-இன்றும்-என்றும்! ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் மீதான விமர்சனம்
சென்னை தனியார் தொலைக்காட்சி ஒன்றில்
பெரியார் அன்றும் - இன்றும் - என்றும் எனும் தலைப்பில் விவாத மேடை ஒன்று
ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. நால்வர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று
உரையாடினர் (20.9.2014).
விவாதத்தின் கருப்பொருள் தந்தை பெரியார் என்றும் தேவைப்படுகிறார் என்ற உணர்வில் நடைபோட்டது போற்றத்தகுந்ததே!
அதேநேரத்தில், அந்த விவாதத்தில்
சொல்லப்பட்ட சில தகவல்களும், கருத்துகளும் மிகத் தவறாக இருந்ததையும்
சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.
தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை
திராவிட இயக்கம் பின்பற்றவில்லை, செயல்படுத்தவில்லை என்பது பொத்தாம்
பொதுவில் பேசியது சரியானதாகாது.
குறிப்பாக, தி.மு.க.வையே குறியாக வைத்துத் தாக்குதல் தொடுத்ததும் சரியானதல்ல.
தி.மு.க. - அரசியல் வடிவம் கொண்டு,
தேர்தலில் குதித்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்
கோட்பாடுகளில் குறிப்பாக கடவுள் மறுப்பு - மத மறுப்புப் போன்றவற்றில் முழு
அளவில் ஈடுபாடு கொண்டதாக இல்லை என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும், அதன்
பொதுச்செயலாளர் அவர்களும்கூட இதனைப் பல நேரங்களில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதேநேரத்தில், தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல, சமுதாயக் கொள்கையுடைய
அமைப்பு என்பதையும் சொல்லத் தவறிவிடவில்லை. திராவிட இயக்கக் கொள்கையில்
தி.க.வுக்கு அடுத்தபடி தி.மு.க.தான் என்று கலைஞர் அவர்கள் கூறியதுண்டு
(முரசொலி, 23.9.2006).
டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவில்
பகுத்தறிவுக் கொள்கையைக் கண்டிப்பாக தி.மு.க.வினர் பின்பற்ற வேண்டும் என்று
முதலமைச்சர் கலைஞர் கட்டளையாகக் கூடத் தெரிவித்ததுண்டு.
இதில் மிக முக்கியமான ஒன்றை விவாதக்காரர்கள் எப்படித் தவற விட்டார்கள் என்று தெரியவில்லை.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க. தந்தை
பெரியார் கொள்கை வழி நின்று பல சட்டங்களையும், திட்டங்களையும்
நிறைவேற்றியதே - அவற்றை எப்படி மறந்தனர்?
1. சுயமரியாதைத் திருமணச் சட்டம்
2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்
3. இந்திக்கு இடமில்லை, தமிழ், இங்கிலீஷ் மட்டுமே என்ற இருமொழிச் சட்டம்
4. பெரியார் நினைவு சமத்துவபுரம்
5. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம்
6. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம்
7. பொதுத் தொண்டில் ஒளிவிட்ட பெண்
தலைவர்கள் பெயரில் பெண்களுக்கான உதவித் திட்டங்கள்.
8. தீண்டாமை வெறி
காரணமாக நீண்டகாலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாப்பட்டி,
கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற ஊராட்சிகளில் தி.மு.க. வெற்றிகரமான
தேர்தலை நடத்திக் காட்டவில்லையா?
ஆட்சியில் இருந்து தந்தை பெரியார் கொள்கை
வழியில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டங்கள், சட்டங்கள்பற்றி ஒருவர்கூட
வெளிப்படுத்தாதது ஏன்?
தி.மு.க. ஆட்சியில்தானே இவை நிறைவேற்றப்பட்டன - இவையெல்லாம் தந்தை பெரியார் கொள்கை வழி செயல்பாடுகள் அல்லவா?
சமுதாயத் துறையில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்போல இடதுசாரிகள் ஆண்ட மாநிலங்களில்கூடக் கிடையாதே!
இவற்றையெல்லாம் துப்பட்டிப் போட்டு மறைத்துவிட்டு தி.மு.க.மீது சேற்றைவாரி இறைப்பது எந்த வகையில் அறிவு நாணயம்?
தந்தை பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு
அண்ணா பெயரில் கட்சியையும் வைத்துக்கொண்டு, அண்ணாவின் உருவத்தைக் கட்சியின்
கொடியிலும் பொறித்துக் கொண்டு, திராவிட இயக்கம் என்றும் சொல்லிக் கொண்டு
முழுக்க முழுக்க பெரியார் கொள்கைக்கு விரோதமாக நடந்துகொண்டு வருகிறதே -
அன்றாடம் பெரியாரின் கொள்கைக்கு விரோத மாக ஆன்மிகத்திற்கு என்று இடம்
ஒதுக்கி அவர்களின் அதிகாரபூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.
நாளேட்டில் கட்டுரைகளையும், புராணக் குப்பைகளையும் கொட்டிக் கொண்டு
இருக்கிறார்களே - பூணூலை ஆணவமாகத் தூக்கிக் காட்டிப் பூணூலின் தத்துவம்
என்கிற அளவுக்கு அந்த ஏட்டில் தத்துவார்த்தம் பேசுகிறார்களே - அதைப்பற்றி
மூச்சு விடவில்லையே, ஏன்?
ஒரே ஒருவர் அதனை ஒரே ஒரு இடத்தில்
சுட்டிக்காட்டிய போது - ரொம்பவும் ராஜதந்திரமாக(?) கணக்கில் எடுத்துக்
கொள்ளவேண்டிய அளவுக்கு அ.தி.மு.க. அருகதை பெறவில்லை என்று சொன்னால்
போதுமா?
பெரும்பாலும் தி.மு.க.வை மட்டும் குறை
சொன்னதால், அதன் அரசியல் லாபம் என்பது - பெரியார் கொள்கையை முற்றிலும்
கைகழுவிவிட்ட அ.இ.அ.தி.மு.க.வுக்குப் போய்ச் சேராதா? ஒரு பிற்போக்குத்தனமான
கட்சிக்குப் பேருதவி செய்தது ஆகாதா?
இன்னொன்றை நிச்சயமாக சுட்டிக்காட்டிக்
கண்டித்தாக வேண்டும். திராவிட இயக்கக் கட்சிகள் பிற்படுத்தப்பட்டோருக்
கானவை என்று கூறியதன்மூலம் குணா போன்றவர்கள், ஒரு காலகட்டத்தில் தலித்
என்று சொல்லிக் கொண்ட எழுத்தாளர்கள், சிலர் தந்தை பெரியார்மீது வீசிய
அவதூறுச் சகதி அல்லவா இது.
மத்திய அரசுத் துறைகளில்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது;
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அறவே மறுக்கப்பட்டிருந்த நிலையில், மண்டல்
குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்தவேண்டும் என்று போராடியதால்,
பிற்படுத்தப் பட்டோருக்காக கட்சி என்று முத்திரை குத்துவதில் பொருள் உண்டா?
மண்டல் குழு பரிந்துரைகளில் வேலை
வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை
சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் செயல் படுத்தியதை எதிர்த்து
தொடுக்கப்பட்ட வழக்கில், சம்பந்தா சம்பந்தமே இல்லாமல்
தாழ்த்தப்பட்டவர்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பதையும் இதில்
கொண்டு வந்து திணித்து, தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இட
ஒதுக்கீடு கிடையாது என்று ஒரு தீர்ப்பை வழங்கி, தாழ்த்தப் பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோருக்கிடையே மித்திர பேதம் செய்த நீதிமன்றத்தின் போக்கைப்
புரிந்துகொள்ளாமல், விமர்சனங்களைச் செய்ததை மறந்துவிடலாமா?
இன்னொரு காலகட்டத்தில் அதன் தன்மை புரிய
வைக்கப்பட்டது. இவ்வளவுக் காலத்திற்குப் பிறகு பழைய பஞ்சாங்கத்தைப்
புதுப்பிப்பது அபாயகரமானது.
அரசியல் காரணங்களுக்காக கொள்கைக் கோட்பாடு
அற்றவர்கள் ஜாதியைக் கையில் எடுத்துக் கொள்வதைப் புரிந்து கொண்டு
பேசியிருக்கவேண்டாமா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதி அரசியல்
சவக்குழிக்குப் போனதன்றி, பொட்டு அளவுக்கும் வெற்றி பெற்றதில்லை என்பது
கடந்தகால வரலாறாகும்.
மின் ஊடகத்தில் உட்கார்ந்து கொண்டு
வித்தாரம் பேசியவர்கள் பெரியார்கொள்கையைப் பரப்புவதில் இந்த ஊடகத்தின்
பங்கு என்னவாக இருந்தது என்று ஒரு கிழி கிழித்திருக்கவேண்டாமா?
பெரியார், அண்ணா விழாக்களை சடங்காச்சாரமாக
நடத்துவதாகக் கூறும் இந்தத் தொலைக்காட்சிகள், இந்தத் தலைவர்களின் பிறந்த
நாள்களையொட்டித்தானே - வியாபார ரீதியாக, சடங்காச்சாரமாக இந்தத்
தலைப்புகளைக் கொடுத்து விவாதிக்கச் செய்கின்றன- மறுக்க முடியுமா?
பெரியார் கொள்கைகள்மீது அப்படியே உயிரையே
வைத்துள்ளதுபோல பாவனை காட்டும் காகித ஊடகங் களும், மின் ஊடகங்களும் எந்த
அளவுக்குப் பெரியாரின் தத்துவங்களை, பகுத்தறிவுச் சிந்தனைகளைப்
பரப்புவதற்கு உதவி புரிந்துள்ளன என்பதற்கு நாணயமான விடை உண்டா?
அவற்றுக்காகத் தொடர்ந்து பாடுபடும் திராவிடர் கழகத்தின் செய்திகளை வெளியிட்டு உதவுகின்றனவா?
காலைமுதல் இரவுவரை முட்டாள்தனம்,
மூடத்தனங்கள், பேய், பிசாசு, ஆவி சமாச்சாரங்கள், சாமியார்களின்
இதோபதேசங்கள், இராமாயணம், மகாபாரதத் தொடர்கள், கும்பாபிஷேக நேரடி
ஒளிபரப்பு, மகரஜோதி நேரடி ஒளிபரப்பு (அது பித்தலாட்டம் என்று
தெரிந்திருந்தும்) என்னும் சீழ்பிடித்த சமாச்சாரங்களையெல்லாம் தேடித்
தேடிச் சென்று ஒளிபரப்புகின்றனவே!
இந்த வெட்கக்கேட்டில், பெரியார் கொள்கைகளை
திராவிட கட்சிகள் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றங்கூற அருகதை உண்டா?
மக்களை அறிவுத் திசையில் கொண்டு வருவதில் ஊடகங்களுக்குப் பொறுப்பு இல்லையா?
பகுத்தறிவு இயக்கங்கள்நடத்தும் நிகழ்ச்சிகளை எந்த அளவு ஒளிபரப்புகின்றன? செய்திகளை வெளியிடுகின்றன?
தொலைக்காட்சிகள் என்ன சாயிபாபா கையசைப்பில் குதித்தனவா? ஏழுமலையான் கிருபையால் பிரசவிக்கப்பட்ட வையா?
பகுத்தறிவு - விஞ்ஞான வளர்ச்சியின் நன்கொடை யல்லவா அவை?
விஞ்ஞானக் கருவியை அஞ்ஞானத்தின் குப்பைத் தொட்டியாக மாற்றலாமா?
வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர்!
---------------------------மின்சாரம் அவர்கள் ”விடுதலை” 21-09-2014 இல் எழுதிய கட்டுரை
2 comments:
என்றும் தொடரும்... எம் இனிய பயணம்!
இன்று நமக்கெல்லாம் விழிதிறந்த வித்தகர் தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாள் பெருநாள் - திராவிடத்தின் திருவிழா!
அறியாமை இருளில் கிடந்து அவலத்தில் உழன்ற நமக்கு, அறிவொளி பாய்ச்சிய அறிவு ஆசானாம் நம் பகுத்தறிவுப் பகலவன் இந்தப் பாருக்குக் கிடைத்த நாள்! செப்டம்பர் 17.
பிறவி இழிவைச் சுமந்து, காலங்காலமாய்
தற்குறித்தனத்தைத் தம் உடைமை எனக் கருதி,
சிந்திக்கத் தெரியாத
அடிமைகளாய் வாழ்ந்த கோடானுகோடி மக்களுக்கு
அதிலிருந்து விடுதலை பெறுவதற்கு
சுயமரியாதைச் சூடுகாட்டி நம்மைத் தட்டி எழுப்பிய
ஏந்தலின் பிறந்த நாள் என்ற அறிவுத்திருநாள்!
அவருக்கு விழா என்பது நமது விடுதலையின்
விடிவெள்ளியின் வெளிச்சம் நம்முள்
பாய்ந்த நாள் என்ற வரலாற்றுக் குறிப்பு நாள்!
நம் மக்கள் பயன்பெற்று நாம் நிமிர்ந்த நாள்!
சமத்துவம் அறியா மக்களுக்கு அதை அடைய
சரித்திரப் போராட்டங்களை நடத்தி சரி நிகர்
வாழ்வைப் பெற்ற நம் அருட்கொடை வள்ளலின்
பிறந்த நாள்!
பண்பாட்டுப் படையெடுப்பால் வீழ்த்திட்ட
ஆரியத்தை எதிர்த்து, அறப்போர்க் களத்தில்
நம்மை நிறுத்தி போராடச் செய்த
நம் அய்யாவின் பிறந்த நாள் இன்று!
அவர்கள் உருவத்தால் இன்று நம்மோடு இல்லை.
ஆனால், உணர்வால், தத்துவத்தால், இலட்சியமாய்
நம் இரத்தத்தின் அணுக்களாகி இரண்டறக்
கலந்துவிட்டார்!
பெரியார் தத்துவங்கள் நமது குருதி ஓட்டம்
என்றும் நமது கழகம் என்ற கலத்திற்கு
கலங்கரை வெளிச்சமும் அவருடைய வழி
முறைகளே!
அவர் போட்டுத் தந்த பாதை நமக்குத்
தடம்புரளாப் பாதை,
அவர் வகுத்துத் தந்த கோட்பாடுகளும்
கொள்கைகளும் நம் உயிர் மூச்சு!
அவர் காண விரும்பிய, ஜாதியற்ற சமூகம், நமது இலக்கு!
மூட நம்பிக்கைகள் ஒழிந்த பகுத்தறிவு வாழ்க்கை முறை - சுயமரியாதை வாழ்வு -
அனைத்துலகத்தின் உடைமையாய் மாறிட
அலுப்பின்றி உழைத்து,
அகிலத்தை ஏற்கச் செய்வதே நம் இலக்கும்
இலக்கு நோக்கிய பயணமும்!
எத்தனை இடர்கள், இமயமான
எதிர்ப்புகள், உடனிருந்தே கிளம்பும் துரோகங்கள்
- இவைகளையெல்லாம் எதிர்கொண்டும்
எமது பயணம் இலக்கினை அடையும்
இனிய பயணமாகத் தொடரும்
என்ற சூளுரை ஏற்கும் நாளே இந்நாள்!
வேடிக்கைத் திருவிழா அல்ல
வினை முடிக்க விண்கலமாய்ப் புறப்படும்
ஆயத்த நாள் இன்று!
ஜாதி - தீண்டாமை ஒழிப்பும்,
சமூகநீதி களத்தின் தொடர் அறப் போர்களும்
பெண்களை நோக்கிய வன்கொடுமைகளுக்கு
வகையான முடிவுகளை ஏற்படுத்தும்
விழிப்புணர்வுக் கடமையும்
எம்மை அய்யா தந்த
அறிவுச் சுடருடன் அயராப் பணி
யாளர்களாக விரைவுபடுத்தும்
சோர்வறியா சுயமரியாதைப்
படையாய் களத்தை நோக்கிய
பயணத்தின் மற்றொரு மைல் கல்லே -
136 ஆம் பெரியார் ஆண்டின் தொடக்கம்!
தொடங்கிய பயணம் தொய்வின்றித் தொடரும்!
வெற்றி நமதே!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
17.9.2014
Read more: http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/87953-2014-09-17-10-19-22.html#ixzz3E2fP3NrI
அட, அண்டப்புளுகு தினமலரே!
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தினமலரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டுரையை வெளியிட வேண்டாமா?
வெளியிட்டது - ஆனால், விஷமமாக!
இதோ தினமலர்....
நட்புக்கு மரியாதை பெரியார் - ராஜாஜி இருவரும் இரண்டு துருவங்களாக இருந்த போதும், இறுதிவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.
பெரியார் நாத்திகர், ராஜாஜி ஆத்திகர்; கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு நீடித்தது. ராஜாஜி இறந்தபோது மயானம் வரை சென்று கண் கலங்கி அழுதவர், பெரியார். பெரியாரின் தந்தை, பெரியார் இளைஞராக இருந்தபோது பொறுப்பில் லாமல் இருக்கிறார் என்று தன் சொத்துக் களை பழனி முருகனுக்கு என்று உயில் எழுதி வைக்க, பெரியார், ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டபோது ராஜாஜி சொன்னார்:
கவலை வேண்டாம். பழனியில் இருப் பது தண்டாயுதபாணிதான்; பழனியில் ஒரு இடம் வாங்கி முருகன் கோவில் கட்டி, நீங்களே அந்தக் கோவிலுக்குத் தர்மகர்த்தா ஆகிவிடுங்கள். சொத்துகள் உங்கள் வசமே இருக்கும் என்று ஆலோசனை வழங்கி னார். அன்று தொடங்கிய அவர்களின் தூய நட்பு, மூச்சு உள்ளவரை தொடர்ந்தது தினமலர் (17.9.2014) எழுதுகிறது.
தந்தை பெரியார் அவர்களைப் பெருமையாகக் கூறுவதுபோல முற்பகுதி - பிற்பகுதியிலோ அதற்கு மாறான - தாறுமாறான அக்கப்போர்!
தினமலர் இப்படி கிறுக்கியுள்ளதே - இதற்கு ஆதாரம் என்ன? அதை நாணய மாக வெளிப்படுத்தவேண்டாமா?
இதே பாணியில் நாம் எழுத முடியாதா? செத்துப்போன சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஒரு கட்டத்தில் பணமுடை ஏற்பட்டு யாருக்கும் தெரியாமல் ஈரோடு சென்று பெருந்தனவந்தரரும், பக்திமானுமான பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கரிடம் சென்று பண உதவி கேட்டார்;
என் மகன் ராமசாமியிடம் வர்த்தகத்தையெல்லாம் ஒப்படைத்து விட்டேன்; அவனிடம் எதற்கும் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார். ஈ.வெ.ரா. விடமா? அது நடக்குமா? என்ற யோச னையில் காஞ்சிபுரம் திரும்பி விட்டார் என்று எங்களால் எழுத முடியாதா?
கவர்னர் ஜெனரலாக இருந்த தனது நண்பர் ராஜாஜியிடம் - திருமண ஏற்பாடு, சம்பந்தமாக ஆலோசனை கேட்க, அப் பொழுது ராஜாஜி சொன்ன யோசனை யையே தூக்கி எறிந்துவிட்டு தன் போக்கில் நடந்துகொண்டு, அதில் முழு வெற்றியும் பெற்றவர் தந்தை பெரியார் என்பதெல்லாம் இந்த இனமலர்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் நாணயமாக அவற்றை யெல்லாம் ஏற்றுக்கொள்ளும் நற்புத்தியும் தான் ஏது?
தினமலரே! தினமலரே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள் ளாதே - எச்சரிக்கை!
- கருஞ்சட்டை
Read more: http://www.viduthalai.in/page-8/88079.html#ixzz3E3QXNaBz
Post a Comment