Search This Blog

13.9.14

காதலுக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்? ஊடகங்களாவது கண்டிக்க வேண்டாமா?


அனைத்து இஸ்லாமியர்களும் இந்துப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களை மத மாற்றம் செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். இஸ்லாமியர்களின் இந்த லவ் ஜிஹாத் என்ற பெயரில் நடைபெறும் அனைத்து மதமாற்றக் கொடுமையை நாம் நமது பெண்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று மோகன்பகவத் கூறியுள்ளார்.


வில்வித்தை வீராங்கனை தாரா சஹாதேவின் திருமண முறிவு என்ற அவர்களின் சொந்த விவகாரத்தை சங்பரிவார அமைப்புகள் லவ் ஜிஹாத் என்ற பெயரில் சமூகத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே பெரும் பிரிவினை ஏற்படுத்தி அமைதியைக் கெடுத்து வருகிறது.


தாரா சஹாதேவ் திருமணம் மற்றும் அவர்களின் திருமண முறிவு அவர்களின் சொந்தப் பிரச்சினை. இந்த பிரச்சினையை கையில் எடுத்து காவி அமைப்புகள் வடமாநிலங்களில் தீவிரமாக பிரிவினைவாதத்தை வளர்த்து வருகின்றன. மத்தியில் பா.ஜ.க. தலைமையில் ஆன ஆட்சி வந்த பிறகு சமூகப் பிளவை ஏற்படுத்த ஏதாவது ஒரு காரணத்தை தேடிக் கொண்டு இருந்த சங்கப் பரிவார் அமைப்பினர் தற்போது லவ் ஜிஹாத்  என்ற ஒன்றை கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.


காசியாபாத் நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது மோகன் பகவத் லவ் ஜிஹாத் குறித்து பேசியுள்ளது வன்மம் கொண்டது.


தற்போது நமது ஆட்சி நடக்கிறது, இனி நமக்கு எதிராக எந்த ஒரு செயலையும் பிற மதத்தார் செய்யத் துணிந்தால் அதை முதலில் வார்த்தைகளால் எச்சரிக்கை செய்வோம், நமது குடும்பப் பெண்களை இஸ்லாமியர்கள் திட்டமிட்டு காதலித்து அவர்களை மதமாற்றம் செய்து பிறகு கைவிட்டு விடுகின்றனர்.


இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. மத்தியில் மதச்சார்பின்மை என்ற பெயரில் முந்தைய அரசுகள் இந்துச் சமூக மக்களிடையே நடந்த இந்த மதமாற்றச் செயல்களை தடுக்க இயலாமல் ஓட்டு வங்கி அரசியல் செய்து வந்தது. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. இந்துக்களின் ஆட்சியில் இனி இந்துக்களுக்கு பாதுகாப்புதான்.


இருப்பினும் நாம் நமது பாதுகாப்பிற்காக நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். முக்கியமாக  பெண் பிள்ளைகளுக்கு நமது இந்துக் கலாச்சாரம் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். நமது பெண் குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் ஒழுக்கம் மற்றும் மதம் கூறிய விதிகளைக் கற்றுக் கொடுக்கவேண்டும்.

இதனுடன் பிற மதத்தவர் நம் பிள்ளைகளை காதல் என்ற பெயரில் சீரழித்து மதம் மாற்றி அவர்களை கைவிட்டு விடுவது குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். முக்கியமாக லவ் ஜிஹாத் பற்றி நாம் கற்றுத் தருவது தேவையான ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். என்பது எத்தகைய பிற்போக்குப் பார்வை கொண்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். அதுவும் அகில இந்தியத் தலைவராக இருக்கக் கூடியவரே இப்படி ஒரு குரூரப் பார்வையோடு எதனையும் அணுகுவது அவ்வமைப்பின் தரத்தைத்தான் பறைசாற்றும்.

காதல் என்பது ஜாதியைப் பார்த்தோ மதத்தைப் பார்த்தோ வருவதில்லை. எங்கேயோ ஓரிடத்தில் ஓர் இஸ்லாமியர் ஓர் இந்துப் பெண்ணைக் காதலித்து - இடையில் முறிந்தது என்பதைப் பொது விதியாக மாற்றுவது சிந்தனையில் பீடித்த கிரகணத்தைத்தான் வெளிப்படுத்தும். விதி விலக்குகள் பொது விதியாக முடியாது என்பது பொதுவான நியதியே!


இந்து ஆண் இஸ்லாமியப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து இடையில் முறிவு ஏற்பட்டால் அதனை வேறு மாதிரியாக இவர்கள் கூறுவார்களா?


ஓர் இந்துப் பெண்ணுக்காக நூறு முஸ்லிம் பெண்களை மதம் மாறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யா கூறியதும் இங்க குறிப்பிடத்தக்கதாகும் (28.8.2014).

ஆளும் கட்சியில் உள்ளவர்கள் இப்படி பாசிச முறையில் பேசுவதன்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதன் விளைவு விபரீதமாகத் தானே முடியும் - சமூக அமைப்பே சீர்குலைந்து போய் விடும்.

காவல்துறையும் ஆளும் கட்சிக்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதும் நடைமுறையில் காணக் கூடியதே!

ஆர்.எஸ்.எஸில் போக்கைக் குறைந்தபட்சம் ஊடகங்களாவது கண்டிக்க முன் வர வேண்டாமா? ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் இந்த அமளியென்றால், மீதிக் காலம் எப்படி கழியும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே!

                               ------------------------” விடுதலை”  தலையங்கம் 13-09-2014

5 comments:

தமிழ் ஓவியா said...


அண்ணாவின் மூன்று சாதனைகள் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி


சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்குக் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அண்ணா என்பவர் ஒரு தத்துவம்; அவர் ஒரு பெரும் பாடம் என்பது மிக முக்கியமானது. படத்தோடு அண்ணா முடிந்துவிட்டார் என்று கருதாமல், கொள்கையோடு வாழ்வதுதான் அண்ணாவிற்கு நாம் காட்டக் கூடிய சிறப்பு என்று மிகப்பெரிய அளவிலே உணர்வுகளைப் பெற வேண்டும்.

அண்ணா செய்த சாதனைகள்

அண்ணா மூன்று சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்தார். ஆட்சிக்கு வந்த நிலையில்!

தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார்.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை - இந்திக்கு இடமில்லை என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு இந்தியும், சமஸ்கிருதமும் மீண்டும் இந்தத் தமிழ் மண் ணிலே மட்டுமல்ல, இந்தியாவையே ஆளத் துடித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அண்ணா, தந்தை பெரியார் வழியிலே மிகவும் நினைவூட்டப்பட வேண்டி யவர் மட்டுமல்ல, அண்ணாவை ஏந்தி, அவர்தந்த களத்தை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டியதுதான், அண்ணாவின் பிறந்த நாளில் நாம் ஏற்கவேண்டிய சூளுரையாகும்.

மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் பலிக்காது!

செய்தியாளர்: இப்பொழுது தொடர்ந்து மோடி அரசாங்கம் இந்தியை பல வகைகளில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர் பதில்: மோடியை ஆதரித்தவர் களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. எங்களைப் பொறுத்த வரையில், இது வியப்பானது அல்ல; எதிர் பார்க்காததும் அல்ல. ஏற்கெனவே, மோடி வந்தால் என்ன செய்வார் என்பதை தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் சொன்னோம்.

அதைத் தாண்டி, அவர் ஆட்சிக்கு வந்தால் எதை எதையோ செய்துவிடுவார்கள் என்று நினைத் தார்கள்; எனவே, மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் பலிக்காது!

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/87803.html#ixzz3DOLpSmv8

தமிழ் ஓவியா said...


பெருமை

மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக் காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://www.viduthalai.in/page-2/87810.html#ixzz3DOMSSGWU

தமிழ் ஓவியா said...


ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம்!


ரகசியம் என்றாலே அனைவரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான்.

ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால், ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாமல் அவ்வப்போது ஏதேனும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். இப்படி போதிய இடைவெளி விட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புகள் தங்குவதைத் தடுக்கிறது.

அதேசமயம் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். ஒல்லியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட்டானது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்துவிடும்.

உணவில் அவ்வப்போது கசப்பான உணவுகளையும் சேர்த்து சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் தங்குவதில்லை. மேலும் எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை. நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும். எனவே குறைந்தது தினமும் 7 மணி நேர தூக்கமானது மிகவும் அவசியம். ஒல்லியாக இருக்க நினைப்பவர்கள் அதிகம் இனிப்பு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடக்கூடாதவை: முட்டை ஒரு சத்தான உணவுதான். ஆனால் உடற்பயிற்சிக்கு பின் முட்டை, தயிர், சாக்லெட், பீட்சா போன்றவற்றை சாப்பிடக் கூடாது. குளுட்டென், சர்க்கரை அதிகம் இருக்கும் பிரட் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு சர்ரென்று ஏறிவிடும் ஆபத்து உள்ளது.

செரிமானத்திற்கும் நல்லதல்ல. உடற் பயிற்சிக்குப் பின், நம் உடலில் ரத்தமானது வயிற்றுக்குள் செல் லாமல் வெளியே பாய்ந்து கொண்டிருக்கும். அப்போது ஒரே ஒரு ஸ்பூன் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதற்கு மேல் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதல்ல.

தமிழ் ஓவியா said...


நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்


மேதி என்று அழைக்கப்படும் வெந்தயம் ஒரு மாமருந்து. கீரைவகையில் இருந்து கிடைக்கும் விதையாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் வெந்தயம் விளைகிறது. வாரம் ஒருமுறை வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல், வாயு, கபம், இருமல், சீதக்கழிச்சல், வெள்ளைப்படல், இளைப்புநோய் என எந்த நோயும் அண்டாது. இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், செரிமானமின்மை போன்றவை ஏற்படாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தப் பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருள்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.

இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் போலிக் அமிலம், ரிபோபிளேவின் (பி2), வைட்டமின் ஏ, பைரிடாக்சின், வைட்டமின் சி, செலினியம், துத்தநாகம், மாங்கனீஷ், இரும்பு சத்து, தாமிரச்சத்து, பொட்டாசியம், உலோகச் சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன.

வெந்தயம் உடலுக்குக் குளிர்ச்சி அளிப்பதுடன், உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில், அந்தத் தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலச்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சினையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரைமணி நேரம் தலையில் தடவி குளித்து வந்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்யும்.

பொடுகு பிரச்சினை, அரிப்பு குறைவதோடு, முடி உதிர்வது நீங்கி தலைமுடி நன்கு வளரும். வெந்தய காபி, வெந்தய தேநீர் குடிக்கலாம். வெந்தயத்தில் ஹைட்ரோ அய்சோலியூசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டக் கூடிய தன்மை உடையது.

தாவர வகைகளிலேயே வெந்தயத்தில் மட்டுமே இந்த அமினோ அமிலம் உள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

தமிழ் ஓவியா said...


அரிசியும் நோய் தீர்க்கும்

தென்னிந்திய மக்களின் மிக முக்கிய உணவுப் பொருள் அரிசி. நம்மில் பெரும்பாலா னோருக்கு ஒரு வேளையாவது அரிசி சாதம் சாப்பிட்டே ஆகவேண்டும். அண்மைக் காலமாக அரிசிக்குப் பதில், அரிசியைக் குறைத்துக்கொண்டு கோதுமையை அதிக உணவாகப் பயன்படுத்தும் பழக்கம் பெருக ஆரம்பித்திருக்கிறது. அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று சிந்திப்பதே தவறு.

பதார்த்தகுண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்களில் 25-க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் முறை விளக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெல் மற்றும் அரிசியின் பயன்பாடும் நம் முன்னோர்களிடையே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அரிசியையும் மற்ற தானியங் களையும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உணவாக்கிக் கொள்வது நல்லது.

அரிசி என்றால், மேலோட்டமாய் புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசுமதி அரிசி, சிகப்பரிசி இவைகளைத்தான் நம்மில் பலர் அரிசி என்று தெரிந்து வைத்திருக்கிறோம். இவைதவிர வெவ்வேறு சூழல்களில் வளரக்கூடிய பல்வேறு வகையான நெல் வகைகள் அந்தந்தச் சூழலின் மண்ணின் தன்மையையும் சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

கருங்குறுவை என்றொரு அரிசி கறுப்பு நிறத்திலும் செங்குறுவை என்றொரு அரிசி சிகப்பு நிறத்திலும் இருக்கும். இவைபோல வண்ண அரிசி வகைகளும் நம் பாரம்பரியத்தில் இருந்தன. அரிசியில் மட்டுமல்ல, எந்தப்பொருளிலுமே நிறமிகளிருந்தால் அவற்றில் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லா வற்றிலும் நல்ல மருத்துவக் குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி வேக அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை. உதாரணத்துக்கு மணிச்சம்பா அரிசியை கூறலாம். இதுபோல், மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம்.

புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து எல்லாம் இந்த அரிசியில் நிரம்ப உள்ளன. விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க (கெட்ட நீரைப் போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் பச்சரிசி சாதம் சாப்பிடக்கூடாது.

கைக்குத்தல் அரிசி என்பது தவிடு பிரியாமல் இருக்கக் கூடியது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கூடவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையும் உள்ளது. புழுங்கல் அரிசி எளிதில் செரிமானமாகும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. அரிசி சாதம் மட்டுமல்ல அரிசிப் பொரியும் பித்தத்தைச் சமப் படுத்தக்கூடியது தான்.

அவல் வாதத்தைச் சமப்படுத்தும் மாவுச்சத்து மிகுந்தது. அரிசியை முற்றிலுமாகத் தவிர்க்காமல் அதனூடாகவே மற்ற பல தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.