காலத்தைத் தாண்டி சிந்தித்தவர் பெரியார்!
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி வருமாறு:
பெரியாரைப்பற்றி உங்கள் கருத்து களைப் பதிவு செய்யுங்கள்?
தொண்டு செய்து பழுத்த பழமான அறிவாசான்
தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி 136
ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவாகும். தந்தை பெரியார் என்பவர், பேரறிஞர் அண்ணா
அவர்கள் குறிப்பிட்டதைப்போல, வெறும் தனி நபர் அல்ல; அவர் ஒரு சகாப்தம்;
அவர் ஒரு காலகட்டம்; ஒரு திருப்பம் என்று அழகாகச் சொன்னார். அதுபோல தந்தை
பெரியார் அவர்கள் சுயமாகச் சிந்திக்கக்கூடிய ஒரு தலைவர். எந்த நூலையும்
படித்து அவர் தன்னுடைய முடிவிற்கு வரவில்லை. அல்லது போதி மரத்தைத் தேடிய
புத்தனைப் போல அவர் எங்கும் செல்லவில்லை. அவரை உருவாக்கியது என்பது,
பெரியாராக உருவாக்கியது என்பது, அவருடைய வாழ்க்கையில், அவர் கண்ட சமூக
அநீதிகள்தான் அவரை சிந்திக்க வைத்தது; ஒரு புரட்சிக்காரராக மாற்றியது.
அவருடைய ஆரம்ப நாள்களில், திண்ணைப் பள்ளிக் கூடத்திலிருந்து ஜாதிக் கொடுமை
என்ன என்பதை அவரால், தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து உணர முடிந்தது.
எடுத்துக்காட்டாக, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்திருந்த தந்தை பெரியார்
அவர்கள், இடையில் தாகம் ஏற்பட்டதால், இடைவேளை விட்ட நேரத்தில், எதிரே
இருக்கின்ற உயர்ஜாதிக்காரர்கள் வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டபொழுது,
அவர்கள், தண்ணீரைக் கொடுக்கும்பொழுது, தூக்கிக் குடிப்பா என்று
சொன்னார்கள். இவரோ சிறு பிள்ளை என்பதால், தூக்கிக் குடிக்கும்பொழுது
மூக்கிற்குள் தண்ணீர் சென்று புரை ஏறிவிட்டது மூச்சுத் திணறி விட்டு பிறகு
குவளையை எடுத்தார். இவர் குவளையைக் கீழே வைக்கும்பொழுது, அதை அங்கே வை
என்று சொன்னார்கள்.
இவர் குவளையை வைக்கும்பொழுது, அந்த
வீட்டில் உள்ளவர்கள் அதன்மீது தண்ணீர் தெளித்து அந்தக் குவளையை
எடுத்தார்கள். ஏன் இதை செய்கிறார்கள் என்று அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஒரு
கேள்விக்குறி எழுந்தது. எப்பொழுதுமே சிந்தனை என்பது கேள்விப் பொறிகளில்
இருந்துதான் கிளம்புவது.
பெரியாருக்கு மாணவப் பருவத்திலேயே ஜாதியை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை தோன்றியது
அடுத்த நாள் இதேபோல் தண்ணீர் கேட்க அந்தப்
பழைய வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல், அதற்குப் பக்கத்திலிருந்த
வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டார். அந்த அம்மையாரும், இவர் பணக்கார
வீட்டுப் பிள்ளை, ஊரில் எல்லோருக்கும் அறிமுகமான நாயக்கர் வீட்டுப் பிள்ளை
என்கிற அளவில் அவரை தெரிந்து கொண்டிருந்தபொழுது, அந்த வீட்டி லுள்ள
அம்மையார், தம்பி எங்கள் வீட் டில் நீ தண்ணீர் வாங்கிக் குடிக்கக்கூடாது;
நாங்கள் கீழ்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்.
உடனே இவர், நான் தாகத்திற்குத் தானே தண்ணீர் கேட்டேன்; பரவாயில்லை, கொடுங்கள் என்று சொல்கிறார்.
அந்த அம்மையார், உங்கள் வீட்டிற் குத் தெரிந்தால், எங்களைக் கண்டிப் பார்கள் என்று சொல்கிறார்.
இல்லை, இல்லை கொடுங்கள் என்று பிடிவாதமாக இவர் கேட்டவுடன், அந்த அம்மையாரும் தண்ணீரைக் கொடுத்தார்.
இவர் தண்ணீர்க் குவளையை வாங்கி, வாயை
வைத்துக் குடிக்கும்பொழுது, அந்த அம்மையார் ஒன்றும் சொல்லவில்லை. நன்றாக
குடிப்பா என்று சொன்னார்.
இவர் தண்ணீரைக் குடித்துவிட்டு குவளையை
கீழே வைத்தார். அந்த அம்மையார் அந்தக் குவளையை சாதாரணமாக எடுத்தார்.
தண்ணீர் தெளித்தெல்லாம் எடுக்கவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளையும்
ஒப்பிட்டுப் பார்த்த அந்தப் பிஞ்சு உள்ளத்தில், பெரியாருக்கு மாணவப்
பருவத்திலேயே, அதுவும் திண்ணைப் பள்ளிக்கூடத் திலேயே இதுதான் மிகப்பெரிய
கேள்விக் குறியை உருவாக்கியது.
ஏன் அந்த வீட்டில் அப்படி? இந்த வீட்டில் இப்படி? என்று யோசித்தார்.
இவர்கள் உயர்ஜாதி என்று சொல்லி, வாயில்
வைத்துக்கொண்டு குடிக்கக் கூடாது என்று சொல்லி, புரையேறி னாலும்,
அதைப்பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. தண்ணீர்க் குவளையைத் தண்ணீர்த்
தெளித்து எடுக்கிறார்கள்.
ஆனால், அதேநேரத்தில், அடுத்தவர் வீட்டில்
மனிதாபிமானத்தோடு சொன்னா லும், தண்ணீர் கொடுக்க மறுத்தார்கள். காரணம்
என்னவென்றால், உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் நீங்கள். எங்கள் வீட்டில்
தண்ணீர் குடித்தால், உங்களுக் குச் சங்கடம் என்று சொன்னார்கள்.
இதனால்தான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று பிஞ்சுப் பருவத் திலேயே தந்தை பெரியார் நினைத்தார்.
சமுதாயத்தின்மீது பெரியாருக்கு ஏற்பட்ட கோபம்
அதுபோலவே, ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக,
குழந்தைத் திருமணம் என்பது சாதாரணமாக இருந்த நிலையில், பெரியாருடைய உறவினர்
பெண்ணுக்கு குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. இவர் அப்பொழுது ஒரு வாலிபராக
இருந்து, வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். அந்த நிலையில்
குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. இரண்டு பேருமே பக்குவப்படாதவர்கள்;
முதிர்ச்சி பெறாதவர்கள், சிறு பாலகர்கள். பூப்பெய்தாத நிலை அந்தப் பெண்
ணுக்கு. அந்தக் குழந்தைத் திருமணம் நடந்து முடிந்த ஆறு மாதத்திற்
குள்ளாகவே, மணமகனாக இருந்த சிறுவன் காலரா நோயினால் இறந்து விடுகிறான். உடனே
அந்தப் பெண்ணை விதவைக் கோலத்திற்கு ஆளாக்குகின்ற நேரத்தில், அந்தப் பெண்
12 வயதிற்குள் இருக்கின்ற ஒரு குழந்தை; (பெரியார் திரைப்படத்தில் இந்தக்
காட்சிகள் எல்லாம் மிகத் தெளிவாக வரும்). அந்தப் பெண் பெரியாருடைய
கால்களைக் கட்டிக்கொண்டு, மாமா, நான் என்ன கல்யாணம் வேண்டும் என்று கேட்
டேனா? என்னை ஏன் இப்படி அலங் கோலம் செய்கிறார்களே என்று அழுது புலம்பி,
கண்ணீர் வடித்துச் சொன்ன நேரத்தில்,அந்த நேரத்தில் அவருக்கு இந்த வைதீகச்
சமுதாயத்தின்மீது மிகப்பெரிய கோபம் ஏற்பட்டது. எதுவும் அறியாத ஒரு பெண்ணை
விதவைக் கோலத்திற்கு ஆளாக்குகிறார்கள்; அதுவும் குழந்தைத்
திருமணத்தின்மூலம், வாழ்க்கையே என்னவென்று தெரியாத ஒருவருக்கு இப்படி
விதவைக் கோலம் திணிக்கப் பட்டிருக்கிறதே என்று நினைத்தவுடன், பெண் ஏன்
அடிமையானாள்? என்ற நூலில், அவர் எழுதுகிறார், நான் தூக்கி
நிறுத்தும்பொழுதே, அந்தப் பெண்ணுக்கு புதுவாழ்வு, மறுவாழ்வு கொடுக்க வேண்
டும் என்ற உறுதியோடு தூக்கி அவரை நிறுத்தினேன். நீ கவலைப்படாதே அம்மா,
உன்னுடைய வாழ்க்கை சரியாக இருக் கும் என்று சொல்லி, தன்னுடைய
பெற்றோர்களுக்கே தெரியாமல், அந்தப் பெண்ணுக்கு ஒரு மணமகனைப் பார்த்து,
சிதம்பரம் கோவிலுக்கு அனுப்பி, இரண்டு பேரையும் வெவ்வேறு பாதையில் அனுப்பி,
இவர் வீட்டிலிருந்தபடியே அதனை சிறப்பாக செய்து, தன்னுடைய பெற்றோர்,
உற்றார் உறவினர்களுடைய கோபத்திற்கு ஆளாகிறார்.
ஒப்பற்ற சுயசிந்தனையாளராக தந்தை பெரியார் அவர்கள் உருவானார்
எனவே, தன்னுடைய வீட்டிலேயே ஜாதி மறுப்பு,
பெண்ணடிமை ஒழிப்பு, அதேபோல, மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு மிகப்பெரிய
புராணிகர்கள், வைதீகர்கள் வந்து, ராமாயணம், பாரதங்களை காலட்சேபம்
பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில், இவர் குறுக்குக் கேள்வி கேட்டு, கேட்டு,
அவர்களை மடக்குகின்ற பழக்கத்தை சிறுவனாக இருந்த நேரத்தில்
ஏற்படுத்தியபோது, தன்னுடைய பகுத் தறிவை, அந்தக் கேள்விகள் மூலமாக
மிகப்பெரிய அளவிற்கு, தானே உருவாக் கிக் கொண்டார். எனவேதான், ஒப்பற்ற
சுயசிந்தனையாளராக தந்தை பெரியார் அவர்கள் உருவானார். பெரியார் அவர் கள்,
எந்த நூலகத்திற்கும் செல்லவில்லை; எந்தப் பள்ளிக்கூடத்திற்கும் செல்ல
வில்லை. துணிச்சல் அவருக்கு இயற்கை யாகவே இருந்தது. அதைவிட நினைப் பதைத்
தயங்காமல் கூறும் அறிவு நாண யம் தேவை என்பதை அவர்கள் நினைத் தார்கள்.
அவருடைய வாழ்க்கையில் ஒரு சம்பவம்
நடைபெற்றது. இதுவும் பெரியார் திரைப்படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. தான்
எழுதிய சுயசரிதை என்கிற சிறிய நூலில், தந்தை பெரியார் அவர்கள் மிகத்
தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.
ஒரு தடவை எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப்பேட்டை
சாமியார் (சங்கராச் சாரி போன்றவர்) வந்தார். அது 1902 ஆம் வருஷமாய்
இருக்கலாம்; அவருக்கு, எங்கள் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள்
தடபுடலாய் பிக்ஷை (பிட்சை) நடத்துகிறார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபாய்
கொடுத்தார். பெரிய சமாராதனை நடக்கிறது. அந்தச் சாமியாரின் தம்பி
(பார்ப்பான்) ஒரு மைனர்; கடன்காரன்; அவனும்கூட வந்திருந்தான். அவன்,
ஈரோட்டில் ஒரு வியாபாரிக்குக் கடன் கொடுக்கவேண்டும்; அது கோர்ட்டில் டிகிரி
ஆகியிருந்தது. அந்த சமயம், அந்த வியாபாரி அக் கடனை வசூல் செய்ய, என்னை
யோசனை கேட்டார். நான் அவசரமாய், படி போட்டு, வாரண்டு கொண்டு வா என்று
சொன்னேன். உடனே, நிறைவேற்ற விண்ணப்பம் போட்டு, அன்றே, வாரண்டு வந்தது.
மறுநாள், பகல் 12 மணிக்கு வாரண்டை எடுத்துக்கொண்டு, சேவக னுடன் (ஒரு
இஸ்லாமியர்) அந்த வியாபாரி என்னுடன் வந்தார்.
உயர்ஜாதி, சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று பெரியார் நினைத்தார்
நான் அவர்களைக் கூட்டிக்கொண்டு, ஈரோட்டில்
சாமியார் இறங்கியிருந்த எல்லைய்யர் சத்திரம் என்கின்ற இடத்திற்குப்
போனேன். உள்ளே சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.
சத்திரத்திற்குப் பக்கத்தில், வெளியில் நான் நின்று கொண்டு, சாமி யாருடைய
தம்பிக்கு ஆள் அனுப் பினேன்; உள்ளே இருந்து, அவர் ரோட்டுக்கு வந்தார்.
சேவனுக்குக் கைகாட்டி, இவர்தான் என்று
சொன்னேன். சாமியாருடைய தம்பி, வாரண்டு என்று தெரிந்ததும், ஓடினார். நான்
கூடவே கையைப் பிடித்துக்கொண்டு, இழுத்துக் கொண்டே போனேன்; திமிறிவிட்டு,
சட்டென்று வீட்டுக்குள் புகுந்து, உள் கதவைத் தாளிட்டுக் கொண்டான். நான்
உடனே தூணைப் பிடித்து, தாழ்வாரத்தின் மீது ஏறி, ஓடுகள் உடைய ஓடி,
புறக்கடைப்பக்கம் வீட்டிற்குள் குதித்து, சாப்பாடு இருக்கும் இடத்தையும்,
பார்ப் பனர் சாப்பிடும் பந்தியையும் தாண்டி வந்து, வீதிக் கதவைத்
திறந்துவிட்டு, சாயபு சேவகனைக் கூப்பிட்டு, ஓர் அறைக்குள் ஒளிந்துகொண்ட,
சாமியாரின், தம்பியின் கையைப் பிடித்து ஒப்புவித்தேன். அவன் திமிறினான்;
என் கடை ஆட்கள் நாலைந்து பேர்கள் அங்கிருந்தவர்களை - இவனைப் பிடித்து
வெளியில் தூக்கிக் கொண்டு போங்கள் என்று சொன்னேன்; தூக்கி
வந்துவிட்டார்கள். கூட்டம் சேர்ந்து விட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த
பார்ப்பனர்கள் சுமார் 200 பேர்கள், அரைச் சாப்பாட்டோடு இலையை விட்டெழுந்து
கைகழுவிக் கொண்டார்கள். அந்த பிட்க்ஷை நடத்துபவர்கள் வியாபாரிகள்; என்
தகப்பனாரும் 50 ரூபாய் கொடுத் திருக்கிறார். அந்த விருந்தே தீட்டாகி
விட்டது, என்று அந்தச் சாமியாரும், சாமியாரைச் சார்ந்த பார்ப்பன பிர
முகர்கள் என் தந்தையாரிடம் வந்து, நாயக்கரே உங்கள் பையன் இப்படி
செய்துவிட்டான் என்று சொன்னவுடன்,
என் தந்தையார் ராமா இங்கே வா என்று
சொல்லி, தன்னுடைய செருப்பை எடுத்து, ஓங்கி அடி அடியென்று அடித்து விட்டார்,
எல்லோர் முன்னிலையிலும், விசாரணை ஏதுமின்றி!
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக் காமல்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அவனைப் பிடித்து, சட்டபூர்வமாக அவனைப்
பிடித்ததற்காக, தந்தையார் இப்படி அடிக்கிறாரே, அதற்கு என்ன காரணம்?
பார்ப்பன தருமத்திற்கு இவ் வளவு பயப்படுகிறாரே! இந்த சமூக அநீதியை உயர்ஜாதி
காப்பாற்றிக் கொண் டிருக்கிறது, சனாதனம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது
என்றெல்லாம் பெரியார் நினைத்தவுடன், அதனை ஒழித் தாகவேண்டும் என்ற உறுதி
தோன்றியது.
எனவே, இப்படி ஒவ்வொரு சம்பவங்களும்
பெரியாரை செதுக்கின. பெரியாரை ஒரு பெரிய புரட்சிக்காரராக, ஒரு சமூகப்
புரட்சித் தலைவராக அவரை உருவாக்கின. அந்த அடிப்படையில்தான், பெரியார்
சுயசிந்தனையாளர் ஆனார்; வியாபாரத்தில், நாணயத்தில் மிகவும் தெளிவாக
இருந்தவர் அவர்.
----------------------”விடுதலை” 19-09-2014
0 comments:
Post a Comment