Search This Blog

31.3.13

தமிழர்கள் என்றால் பார்ப்பனர்களுக்குப் பகைவர்கள்-

தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் கைபர் கணவாய்கள்!

கேள்வி: அய்.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி.களிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளாராமே? சென்ற முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தவர், இந்த முறை இப்படி நடந்து கொள்வார் என்று நினைக்கிறீர்களா?

பதில்: இலங்கையை ஒரு விரோத நாடாக மாற்றிக்  கொள்ள வேண்டும் என்று இந்தியா நினைப்பதற்கு வாய்ப் பில்லை. இது சரியாகவும் இருக்காது. ஆகையால் அய்.நா. தீர்மானம் இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு தேள் என்று வைத்துக் கொண்டால் அதனுடைய கொடுக்கை வெட்டுகின்ற மாதிரி ஏதாவது செய்து, அந்தத் தேளுக்கு இந்தியா ஆதரவு கொடுக்கலாம்.

                   -------------------------------------------------(துக்ளக்  20.3.2013 பக்கம் 27)

திருவாளர் சோ ராமசாமி அய்யர் வாளின் பதில் இது; தமிழர்களுக்கு யார் விரோதிகளோ அவர்கள் எல்லாம் இந்தப் பார்ப்பனர்களுக்குக் கெழுதகை நண்பர்கள்தாம்!

(அவரை அறியாமலேயே இலங்கை என்பது விஷக் கொடுக்கு என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்!)

அதுவும் சிங்களவர்கள் தங்களை ஆரிய இன வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவர்கள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் பார்த்து இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே முன்பு சொன்னது நினைவிருக்கிறதா?

நீங்களும் நாங்களும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள்; நம் இருவரின் மூக்குகளும் ஆரிய இனத்திற்கே உரித்தானவை என்று சொன்னதை நினை வூட்டிக் கொண்டால், சோ ராமசாமிகள் தமிழர்களின் விரோதிகளான சிங்களவர் களை ஆதரிப்பதன் ரகசியம் தெற்றென விளங்குமே!

இப்பொழுது இலங்கைக்கான இந்தியத் தூதர் (டெல்லி) கரியவாஸம் என்பவர் சிங்களவர்கள் வட இந்திய பூர்வீக வாசிகள் எனக் குறிப்பிட்டு அனுப்பிய மின்னஞ்சல் வெளியாகியுள்ளது

12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவிகித சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர் களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும் என்று மின்னஞ்சல் வாயிலாக டில்லியில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். இதனை இதுவரை இந்திய அரசு கண்டிக்கவில்லை. சம்பந்தப்பட்ட தூதரை அழைத்துக் கண்டனத்தைத் தெரிவிக்க வில்லை.

இது சாதாரணமான ஒன்றல்ல. வெளிநாட்டுத் தூதர் ஒருவர் உள்நாட்டில் குழப் பத்தை ஏற்படுத்தும் வேலையில், மித்திரபேதம் செய்யும் வேலையில், தமிழர்களுக்கும், இந்திய அரசுக்கும் மோதலை உண்டாக்கும் போக்கிரித் தனமான வேலையில் ஈடுபட் டவரை இந்தியாவிலிருந்து வெளியேற்றியிருக்க வேண் டாமா?

இதைச் செய்யாவிட்டால் முன்பு ஜெயவர்த்தனே கூறியது உண்மையாகி விடும். சிங்கள ஆரியர்களும்,  இந்திய ஆரியர் களும் தமிழர்களை ஒழிக்கக் கூட்டுச் சதியில் இறங்கி விட் டனர் என்று கருதும் நிலை யைத் தான் ஏற்படுத்தும்.

ஏற்கெனவே இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களும் அதையேதான் செய்து வரு கிறார்கள்.

இலங்கையை ஒரு விரோத நாடாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா நினைப்பதற்கு வாய்ப்பில்லையாம் எழுதுகிறார் திருவாளர் சோ. என்ன காரணம்? -விளக்கவில்லையே!

இந்தியா - சீனா போரின்போது (1962)  இலங்கை யார் பக்கம் நின்றது? இந்தியா வுடன் நட்பு நாடாக நடந்து கொண்டதா? அய்.நா.வில் சீனாவுக்கு ஆதரவாக இலங் கைப் பிரதிநிதி நீட்டி முழங்கவில்லையா?

இந்தியா - பாகிஸ்தான் போரின்போது கூட (1972-73) பாகிஸ்தான் விமானங்கள், போர்க் கப்பல்கள் கொழும்பு விமான நிலையத்தையும், துறைமுகத்தையும் பயன்படுத் திக் கொள்ளவில்லையா?

திரிகோணமலையில் ஏவுகணை அமைத்துக் கொள்ள சீனாவுக்கு இலங்கை உதவப் போகிறது - அப்பொழுது தெரியும் இந்தியாவின் நிலைமை!

ஹிட்லர்  இந்தியாவைப் பிடிக்கப் போகிறான் என்று நம்பி ஜெர்மன் மொழி படிக்க ஆரம்பித்தவர்கள் அல்லவா பார்ப்பனர்கள்! (இதைக் கல்கியே அலைவோசை நாவலில் ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே!)

சீனாக்காரன் வந்தாலும் அந்த மொழியை சமத்தாகப் படித்துண்டு, அர சாங்கப் பணிகளில் அமர்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கலாம் அல்லவா!

உலகிலேயே தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாதவர்கள் பார்ப்பனர்கள்; அதனால் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அதனால் சு.சாமி பார்ப்பானிலிருந்து (அவசர அவசரமாக இலங்கைக்கு ஓடிச் சென்று ராஜபக்சே வைச் சந்திக்கிறார் - அமெரிக்கா பறந்து சென்று அங்குள்ள ஓர் உதவி செயலாளரைச் சந்தித்துத் தூபம் போடுகிறார்) கல்கி ஆனந்த விடகன் இந்து பார்ப்பனர்கள் வரை ஈழத் தமிழர்கள் முற்றிலும் அழிக்கப்படுவதை ஆனந்தமாகக் கொண்டாடுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம் - மறக்கவே வேண்டாம். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழிலேயே பத்திரிகை நடத்திக் கொண்டு, தமிழர்களிடையே விற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டு அந்தத் தமிழர்களையே காட்டிக் கொடுக்கும் இந்தக் கைபர் கணவாய்களை என்றைக்கு நம் மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கப் போகிறார்களோ தெரியவில்லையே!

கேள்வி: ஜெயலலிதா ஆட்சியின் போது புலிகளின் ஆதரவு மாவீரர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்?

பதில்: ஜெயலலிதா ஆட்சியின்போது, புலி  ஆதரவாளர்கள், தாங்கள் எங்கே போக வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள். மவுனம் சாதித்தார்கள். அதனால்தான் அவர்கள் அப்போது எங்கே போயிருந்தார்கள் என்று நீங்கள் இப்போது கேட்கிறீர்கள்.

                                -------------------------------------------------------------- துக்ளக் 25.2.2009

இலங்கைப் பேரினவாத அரசு ஈழத் தமிழர்களை அழித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் இப்படி எழுதினார் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
இலங்கையில் தமிழர்கள் சிங்கள அரசால் கொடுமைப்படுத்தப்படுவது குறித்துத் திசை மாற்றிப் பேனாவைப் பயன்படுத்தும் திருவாளர் சோ காஷ்மீர்ப் பண்டிட்டுகளான பார்ப்பனர்கள் பற்றி என்ன எழுதுகிறார் என்பதையும் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.

லட்சக்கணக்கான ஹிந்துக்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி அகதிகளாக டெல்லியிலும், நாட்டின் வேறு பகுதி களிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக் கிறது. சொந்த நாட்டிலேயே ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்த தும்; அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலைகளை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை.

                                -----------------------------------------------------------(துக்ளக் 20.8.2008)

இதுவும் சோ எழுதியதுதான். இலங்கைத் தீவிலே பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் அகதிகளாக வாழும் நிலை - வெளிநாடுகளுக்கும் அகதிகளாகச் சென்ற நிலையை இதே கண்ணோட்டத்தில் காஷ்மீர் பண்டிட்டுகளான பார்ப்பனர்கள்பற்றிய கண்ணோட்டத்தில் எழுதுகிறாரா?

காரணம் என்ன? தமிழர்கள் என்றால் பார்ப்பனர்களுக்குப் பகைவர்கள் _- காஷ்மீர் பண்டிட்டுகள் என்றால் பார்ப்பனர்கள் என்ற உணர்வு தானே?
எவ்வளவு சாமர்த்தியமாக சோ போன்ற பார்ப்பனர்கள் எழுதினாலும் அவர்களை அறியாமலேயே உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளத் தான் படுகிறார்கள்.

எனக்குத் தெரிந்த நியாயம் சொல்கிறேன் என்ற தலைப்பில் திரு. சோ ராமசாமி துக்ளக்கில் (15.4.1985) எழுதியது என்ன?

அவருடைய கட்சியில் இன்று ஒரு மவுனக் கலகம் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயவர்த்தனேயின் பதவியை அவருக்குப்பின் யார் அடைவது என்பதில் போட்டா போட்டி ஏற்பட்டிருக்கிறது - அந்தப் பதவியின் மீது குறி உள்ள அவர் கட்சியினர் ஒரு சிலர், மெஜாரிட்டி மக்களாகிய சிங்களவர்களிடையே தங் களுடைய புகழைப் பரப்பிக் கொள்வ தற்காக, தமிழ்ப் பேசும் மக்களை ஒடுக் குவதில் முன்னிலையில் நிற்கிறார்கள்.

எதிர்க்கட்சியைக் கையில் வைத்திருக்கும் சிரீமாவோ பண்டார நாயகாவைப் பற்றிக் கேட்க வேண்டாம்.

சிங்கள வெறிதான் அவருடைய அரசியல் மேடை. ஆகையால் ஜெயவர்த்தனேவுக்குப் பிறகு இருந்தாலும் சரி அவர்கள் ஜெயவர்த்தனேவைவிடப் பல மடங்கு அதிகமான வெறியைத்தான் காட்டுவார்கள். அதன் பிறகு தனி நாடு தானே தவிர, வேறு தீர்வே கிடையாது என்ற நிலைதான் தோன்றும். இப்போதே இந்தப் பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தைகளின் மூலமாக ஒரு நல்ல முடிவு ஏற்பட்டால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட காரியம் என்று சொல்லி அதை ஏற்பது, அடுத்து வரும் ஆட்சியாளருக்கு வசதியாகி விடும் என்று சோ எழுதினாரே!
ஜெயவர்த்தனேக்குப் பிறகு வருபவர்கள் அதிக அளவு சிங்கள வெறியர்களாகத்தான் இருப்பார்கள். அந்த நிலையில் தனியீழம் கேட்பது தவிர்க்கப்படாததாகி விடும் என்று 1985ஆம் ஆண்டிலேயே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே!

அதுதானே இப்பொழுது நடக்கிறது? நியாயமாக இதனை ஏற்றுக் கொண்டு, நாணயமான முறையில் ஈழத் தமிழர்கள் தனியீழம் கேட்டதை வரவேற்று எழுதிட சோ கூட்டம் தயங்குவது ஏன்?

1985இல் எழுதியதை இன்னொருமுறை புரட்டிப் பார்க்கட்டும்!

***********************************************************************
ஜெர்மன் படித்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்

இரத்த வெறியன் இட்லர் தொடங்கிய இரண்டாம் உலகப் போரில் (1939_45) உயிர் இழந்தோர் எண்-ணிக்கை அய்ந்தரை கோடியாகும். அது போக அவன் சித்-திர-வதை செய்து அநியாயமாகக் கொன்ற அப்பாவி யூத மக்கள் எண்ணிக்கை 60 லட்சமாகும். இரக்கமென்று ஒரு பொருள் இலாத அத்தகைய கொடிய-வன் அப்போரின் முற்பகுதியில் பெற்ற வெற்றிகளை வரவேற்று இந்திய நாட்டிற்குள் எப்-பொழுது ஜெர்மன் படைகள் நுழையும் என்று நடை பாவாடை விரிக்கத் துடித்துக் கொண்டு இந்தியாவில் ஒரு தேசத் துரோகக் கூட்டம் இருந்திருக்குமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம், இருந்தது! அக்கூட்டத்தினர்தான் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள். இரண்டாவது உலகப் போரின் தொடக்க ஆண்டுகளில் அவர்கள் விழுந்து விழுந்து ஜெர்மன் மொழி படித்ததை தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளார். இச் செய்தியை அப்பொழுது இந்திய அரசில் அதிகாரியாகப் பணியாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர் 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தமது இந்திய நினைவுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்காரப் பார்ப்பனர்கள் ஜெர்மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிட விருப்பதால், அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக (வேறு எதற்கு? ஜெர்மானியருடைய கைக்கூலிகளாக, கங்காணிகளாக இருக்கத்தான்!) ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.*

பின்னர் 1942 முற்பகுதி-யில் இட்லரின் கூட்டாளி-களான ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர், பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்கள் என்றவுடன் அந்த ஜெர்மன்(!) பார்ப்பனர்கள் ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டனராம்.** பாவம் பார்ப்பனர்கள்! அவர்களுடைய கூட்டாளிகளான ஜெர்மானிய ஜப்பானியப் போர் வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போய்விட்டனர் கடைசியாக! அவர்கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!
* “When France fell . . . some clever Brahmins in the south were said to be learning German to be ready for the forthcoming takeover.”
PP. 74-75 of “India Remembeld” by Percival and Margaret Spear,Orient Longman: 1981
** The “German Brahmins” of Madras were indeed said now to be learning Japanese (after Pearl Harbour and fall of Singapore and Burma.)
P.78 of the above book.

*************************************************************************
டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் கூறியது என்ன?
டில்லியில் உள்ள இலங்கை நாட்டுத் தூதர் பிரசாத் கரிய வாஸத்தின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து இலங்கையைத் தலைமையிட மாகக் கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19ஆம் தேதி இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நிறுவனம் மூலம் இலங்கைத் தூதரின் மின்னஞ்சல் தற்போது டில்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப் பப்பட்டுள்ளது. அந்த மின்னஞ் சலின் விவரம் வருமாறு:  "அசோகச் சக்ரவர்த்தி ஆட்சி நடை பெற்ற கிறிஸ்து பிறப்பதற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்பே (கி.மு.300) கலிங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பதிவாகியுள்ளன. புத்த மதத்தால் ஈர்க்கப்பட்ட அசோகர், தனது மகன் அர்ஹத் மஹிந்தாவையும், மகள் சங்கமித்ராவையும் இலங்கைக்கு புத்த மதச் செய்தியைப் பரப்ப அனுப்பி வைத்தார். இலங்கையில் புத்த நிலையங்களை அவர்கள் நிறுவினர்.

இந்தியாவில் புத்த கயையில் போதி மரத்தடியில் புத்தர் ஞானோதயம் பெற்ற மரத்தின் கன்றை இலங்கையின் அனு ராதபுரத்தில் சங்கமித்ரா நட்டார். புனிதம் மிக்க அந்த மரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு உலகின் மிகப் பெரிய மரமாகத் திகழ்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு கலிங்கத்தில் இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத் மஹிந் தாவும், சங்கமித்ராவும் வந்த நிகழ்வை இப்போதும் இலங்கை கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் தற்போது இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தின் பூர்வீகம் கலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதி யில் இருந்தும் உருவானதாக நம்பப்படுகிறது. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஒடிசா, வங்கம் ஆகியவற்றை பூர்வீக மாகக் கொண்டவர்கள்.

மொகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்தியாவின் வட மாநிலத்தை குறிப்பாக கலிங்கத்தை சிங்கள மக்கள் தற்போது இணைத்து வருகின் றனர். ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர்.

சமஸ்கிருதம்

ஆனால், தமிழ்நாட்டில் இன ரீதியாக தொடர்பில் உள்ள 12 சதவீத இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஒடிசா, வட இந்தியாவுடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டவர்கள் சிங்களர்கள். ஹிந்தி, ஒரியா, வங்காளி ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்தோ ஆரிய மொழியான சம்ஸ்கிருதத்தை சிங்களர்களால் பேசவும் எழுதவும் முடியும்.
இந்தியா அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் கவலைப்பட வேண்டும். இலங்கையில் பிரிவினைவாத சக்திகளை ஒடுக்கி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகளை அழித்த அதிபர் மகிந்த ராஜபக்சே பாராட்டுக்குரியவர்'' என்று பிரசாத் கரியவாஸம் மின்னஞ்சலில் கூறியுள்ளார்.
 ******************************************************************
 ------------------------------------ மின்சாரம் அவர்கள் 30-3-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

30.3.13

2009 இல் தி.மு.க. விலகியிருந்தாலும் எந்த மாற்றமும் வந்திருக்காது!


  • காங்கிரசின் கொள்கைதான் பி.ஜே.பி.க்கும்
  • தி.மு.க. விலகியிருந்தாலும் எந்த மாற்றமும் வந்திருக்காது
  • தனியீழத்துக்கு இடதுசாரிகளின் இசைவு இல்லை
எல்லாவற்றையும் மறந்து திமுகவை குறை கூறுவதா?
இதயத்தில் ஏந்திய இலட்சியச் சுடர் தனியே எரியட்டும்! ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில், ராஜபக்சே அரசின் பயங்கரவாத ஒழிப்புப் போர் என்ற போர்வையில் - கொன்று அழிக்கப்பட்ட இனப்படுகொலைக்கும், போர்க் குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும், பதில் கூற வேண்டிய நெருக்கடி பன்னாடுகளின் மூலமே அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலமும் இரண்டாவது முறையாக (ஓராண்டில்) வந்துள்ளது. இந்திய அரசு - ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுக்காரர்களான தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்குகளால் அமைந்ததைக் கூட மறந்துவிட்டு, போரின்போது இராணுவ உதவிகளை இலங்கைக்குத் தாராளமாகச் செய்த கொடுமை போதாது என்று, அய்.நா. மனித உரிமை ஆணையத் தீர்மானத்தை - அமெரிக்கா கொண்டு வந்த நிலையில், தலையிட்டு நீர்த்துப் போகச் செய்துள்ளதைவிட, தமிழினத்திற்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும் செய்த மகத்தான துரோகம் வேறு இருக்க முடியாது.

தி.மு.க.வின்  பேருதவியாலும், இக்கட்டான கட்டங்களிலும் தந்த ஆதரவினாலும், ஆட்சியில் இன்னமும் நீடிக்கும் காங்கிரஸ், இப்பிரச்சினையால் பச்சையாகவே தமிழர் விரோதப் போக்கைத்தான் கடைப்பிடித்துள்ளது! மிகவும் வெட்கக் கேடானதாகும்!

தி.மு.க.வும் மற்ற சில கட்சிகளும் விடுத்த வேண்டுகோளையோ,  மாணவர்கள் பொங்கி எழுந்து காட்டிடும் உணர்வுகளையோ அது மதித்து நடந்து கொள்ளவில்லை! வெளியுறவுத்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி, எல்லாம் காற்றில் பறந்து விட்டன!

கெட்டிக்காரன் புளுகுக்குக்கூட எட்டு நாள்கள் தான் கெடு; காங்கிரஸ் ஆட்சி சார்பில் எந்தத் திருத்தங்களும் அமெரிக்கத் தீர்மானத்திற்குத் தரப்படவே இல்லை என்ற உண்மையை, அமெரிக்க அதிகாரி நேற்று அம்பலப்படுத்தி விட்டார்!

 இதை அறிந்த நிலையில்தான், தி.மு.க. இதுவரை எத்தனையோ சோதனைகள் வந்த நேரத்தில்கூட, தனது கட்சிக்கார அமைச்சர்கள் எம்.பி.கள் கூட அவமதிப்புக்கும் ஆண்டுக்கணக்கில் டில்லி சிறையில் வதியும் நிலை ஏற்பட்ட போதுகூட, நாட்டின் பொது நலம் - மதச் சார்பின்மைக் கொள்கைக் கொடி தாழ்ந்து விடக் கூடாதே என்ற பெரு நோக்கில், எங்கள் கட்சி நலனைவிட நாட்டு நலனே முக்கியம் என்று கருதி, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விட்டு வெளியேறாமல் உள்ளோம் என்று உறுதி காட்டினார்கள். அவப்பெயர்களைக் காங்கிரசுடன் சேர்ந்து தூக்கிச் சுமந்தனர். எதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?

ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பறிப்பதில் ஒரு நாடகத்தைத் தான் காங்கிரஸ் அரங்கேற்றியதே தவிர, இதய சுத்தியாக எந்த உதவியும் செய்யவில்லை.  அதற்குக் முக்கிய காரணம் என்னவென்பது உலகறிந்த ஒன்று!

பல வெளி நாட்டவர்கள் - போர் நடக்கும் போது எடுத்த சமாதான முயற்சிகளைக்கூட இந்தியா செய்தது இல்லை; மாறாக இராணுவ உதவி, இராஜபக்சேக்களை தலைமை விருந்தினராக அழைத்து, தமிழர்களின் வெந்த புண்ணில் வேலைச் சொருகிய கொடுமையே மிஞ்சியது! தி.மு.க.வின் தலைவர் கலைஞரும், பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியரும் மற்றும் பொறுப்பாளர்களும் சரியான நேரத்தில் சரியான முடிவாக - அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்தே விலகுகிறோம்; எக்காரணம் கொண்டும் அரசினை ஆதரிக்க மாட்டோம் என்று கூறி, குடிஅரசுத் தலைவரிடமே கடிதம் தந்து தெரிவித்து, தி.மு.க.வின் தலைமைச் செயற்குழுவும் அதனையே அப்படியே ஏற்றதன் மூலம், வெறும் பதவிக்காக இருக்கும் கட்சி அல்ல; தமிழர்களின் நலன் காக்கும் லட்சியத்தை மூச்சாகக் கொண்டது என்பதை அகிலத்திற்கும், எப்போதும் இவர்கள் நம்மிடம்தான் இருப்பர் என்ற ‘Take  it for granted’ மனப்பான்மை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கும் சிறப்பாக  உணர்த்தி விட்டனர்!

இதைப் பாராட்டி வரவேற்க மனமில்லாத வன்நெஞ்ச அரசியல் வக்கணையாளர்களும் வாய்சவடால்காரர்களும் தி.மு.க.மீது சேற்றை வரி இறைப்பதையே தமது பிறவிப் பெருங் கடமையாகக் கொண்ட இன எதிரிகளின் ஊடகங்களும் ஏன் இவர்கள் 2009இல் வெளியே வந்திருக்க வேண்டாமா? என்றுதான் இன்னமும் குறுக்குசால் ஓட்டி வருகின்றனர்!
இதற்கு எத்தனையோ முறை பதில் அளித்து விட்டாகி விட்டது; முன்பு வெளியே வந்திருந்தால் அது யாருக்கு லாபம் - மதவெறி சக்திகளுக்கு லாபமாக அமைந்து காவிமயமாக்கிடும் ஆட்சி அமையவே அப்போது அது வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும்!

இந்திய அரசியலில் ஒரே பிரச்சினை ஈழத் தமிழர் பிரச்சினை மட்டும்தானா? இங்குள்ள தமிழர்கள் - பார்ப்பனரல்லாதார் நலம் - உரிமைகள் காக்கப்படல் முக்கியமல்லவா? அனைவரும் அனைத்தும் பெற வேண்டாமா?

இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில்கூட, மனம் மாறாத, குணம் மாறாத காங்கிரஸ் ஆட்சி அப்போது மட்டும் மாறி உடனே தனது இலங்கை ஆதரவுப் போக்கை  மாற்றிக் கொண்டிருக்கும் என்று எவராவது உறுதியாகக் கூற முடியுமா?

அதன் விளைவு... பா.ஜ.க. போன்ற மதவாத ஆட்சி மீண்டும் அரியணை ஏறியிருக்கும். ஆனால் இவர்களால் வெளிஉறவுக் கொள்கைதான் மாறியிருக்குமா? சில அறிவு ஜீவிகள் சொல்லட்டும்! இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில்கூட பிஜேபியின் இலங்கை பற்றிய நிலைப்பாடு என்ன? திருமதி சுஷ்மாசுவராஜ் - எதிர்க்கட்சித் தலைவர் - நாங்கள் போர்க் குற்றம் புரிந்தது இலங்கை என்றே ஒரு போதும் கூற மாட்டோம் என்கிறாரே!

வெளிஉறவுக் கொள்கையை மாற்றிக் கொள்ளச் சொல்ல மாட்டோம் என்கிறார்களே; ஏற்கெனவே அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இதே வெளி உறவுக் கொள்கைதானே செயல்பாடாக இருந்தது!

அவர்கள் (பா.ஜ.க.) பாகிஸ்தானைப் பார்க்கும் கண்ணாடி வேறு, இலங்கையைப் பார்க்கும் கண்ணாடி வேறு என்ற ஒன்றைத் தவிர வேறு என்ன பெரிய மாற்றத்தை ஏற்பார்கள்?

இடதுசாரிக் கட்சிகள் - ஏதோ தமிழ்நாட்டில் சிலர்  பேசுகிறார்களே தவிர - ஈழத்தை ஆதரிக்கின்றனரா? அய்க்கிய ஸ்ரீலங்கா என்பதன்மீது தான் எங்கள் நிலைப்பாடு இருக்கும் என்றுதானே தலைகள்பேசுகின்றன. இங்குள்ள வால்கள் ஆடினால் போதுமா? நல்லெண்ணம் படைத்தவர்களுக்குத்தான் நமது இந்த விளக்கமே தவிர, விஷமப் பிரச்சார விதண்டாவாத விவேக சிந்தாமணிகளுக்கு அல்ல!

தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ள தீர்மானம்! சருகுகளின் சலசலப்பு, இதை வைத்து தி.மு.க.வில் ஓட்டை போடலாமா என்ற சேட்டை செய்யும் செய்தி ஏடுகள்பற்றி திமுக தலைமை சற்றும் யோசிக்க வேண்டியதே இல்லை! எந்தக் காலத்திலும் தன் உழைப்பை மட்டும் தந்து கொள்கைக்காக தனது உயிரையும் தரத் தயாராக இருக்கும் கட்டுப்பாட்டின் கவசங்களான லட்சோப லட்சம் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி பொங்க இம்முடிவினை வரவேற்று, புதிதாக களம் காண புத்துணர்ச்சி பொங்கத் தயாராகி உள்ளனர். அதுதான் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமே தவிர, மற்றவை அல்ல.  அண்மையில், வங்கத்து சிங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் றுயடம ஹடடிநே தனித்தே நடங்கள் என்ற கவிதை ஒன்றின் உயிரோட்டமான வரிகளை திமுக விற்கு தாய்க்கழகம் என்ற உரிமையோடும் பாசத்தோடும் சுட்டிக் காட்ட விழைகிறோம்.

“if they answer not your call walk alone
with the thunder flame of pain ignite thine own heart,
And let it burn alone
- Ravindranath Tagore, ‘Walk Alone’

(இதன் தமிழாக்கம்)

உங்கள் அழைப்புக்கு அவர்கள் பதில் அளிக்காவிட்டால் (நீங்கள்) தனியே நடங்கள்!

உங்கள் உள்ளத்தில் எரி இடி போன்று ஏற்பட்ட வலி இதயத்தில் ஏற்றிய அந்தச் சுடர் தனியே எரியட்டும்!..

------------------------- கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்  

தனித்தே நடங்கள் கவிதையில்

இன்னமும்கூட தி.மு.க. எனும் யானையைப் பார்த்து வர்ணித்த அய்வர்கள் இனிமேல் புரிந்து கொள்ளும் நிலையை வரலாற்றின் அடுத்தக் கட்டம் உருவாக்குவது உறுதி! டெசோவைப் பற்றிய திண்ணைப் பேச்சுக்காரர்களின் வெண்ணெய் வெட்டிப் பேச்சு என்ற மாயத்தில் கிழிந்து தொங்குகிறது! போலி எது? உண்மை எது என்பதைப் புரிந்து கொள்ளும் காலம் ஞாலத்திற்கு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது!

                              -----------------------------கி.வீரமணி  தலைவர்,  திராவிடர் கழகம்-"விடுதலை” 29-03-2013

29.3.13

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானத்தை திராவிடர் கழகம் வரவேற்கிறது! ஆனால்!!


அதே நேரத்தில் எதிரி ராஜபக்சேவை முன்னிலைப்படுத்தாமல் தி.மு.க. தலைவரை விமர்சிப்பது விவேகம் ஆகாது!
பிரச்சினையைத் திசை திருப்ப வேண்டாம்! தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்று, அதே நேரத்தில், எதிரி ராஜபக்சேவை முன்னிறுத்தாமல், திமுக தலைவரை தேவையில்லாமல் விமர்சிப்பது, விவேகம் ஆகாது; பிரச்சினையைத் திசை திருப்புவதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (27.3.2013) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதி மன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திட வும்; ஈழத் தமிழர்களின் எதிர் கால நலனைக் கருத்தில் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானத்தை திராவிடர் கழகம் வரவேற்கிறது.

ஏற்கெனவே இவை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை இலங்கையின்மீது உலக நாடுகள் விதிக்க வேண்டும் என்பதின் தொடர்ச்சியாகவும் அமைந்துள்ளது.

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தாக்கம்தான் தமிழ்நாடு  சட்டப் பேரவைத் தீர்மானம்

ஏற்கெனவே ஏழு மாதங்களுக்குமுன் ஆகஸ்டு 12 (2012) சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற டெசோ மாநாட்டின் 14 முக்கிய தீர்மானங்களில் இவை முக்கியமானவையாகும்.

டெசோவின் தாக்கம் எத்தகையது என்பதை முன்பு டெசோ அமைப்பைக் கேலியும் கிண்டலும் செய்த அத்துணைப் பேரும் உணருவார்கள் என்பது - இதன் மூலம் புரியவில்லையா?

டெசோ மாநாட்டை தடை செய்ய முயன்ற தமிழ்நாடு அரசு

இந்த டெசோ மாநாட்டையே நடத்த தமிழ்நாடு அனுமதி மறுத்தது; ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அருகில் இருப்பதாகவும், நோயாளிகளுக்குத் தொந்தரவு ஏற்படும் என்றும் விநோதமான - விசித்திரமான காரணங்களைக் கூறியது. (ஆனால் இதே ஆளுங் கட்சியின் சார்பில் முன்பும் பின்பும் முதல் அமைச்சர் கலந்து கொண்ட பெரும் நிகழ்ச்சிகள்    நடந்தன என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டியவை)

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு டெசோவின் சார்பில் அம்மாநாட்டின் வரவேற்புக் குழு மேல் முறையீடு வரை சென்று, மாநாட்டிற்கு அனுமதியே பிற்பகல் 2 மணி அளவில்தான்  கிடைத்தது என்பதும் நினைவை விட்டு  அகலாத ஒன்று; மாற்று ஏற்பாடுகளும் தயாராகி விட்ட நிலையில், அந்த அனுமதி சில நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்டது.

டெசோ  மாநாட்டுத் தீர்மானங்களும்  அடுத்த நடவடிக்கைகளும்

அம்மாநாட்டின் தீர்மானங்களைத் தான் டெசோவின் சார்பில் அய்.நா. தலைமை அலுவலகம் சென்று, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் டெசோ தலைவரின் குழுவின் முடிவினை ஏற்று, முக்கிய பொறுப்பாளர்களிடம் அளித்து, ஒரு கருத்து உருவாக்கத்தைச் செய்தனர். அதே மூச்சில் ஜெனிவா சென்று அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களையும் சந்தித்து விளக்கித் திரும்பினர்.

அந்தத் தீர்மான வெளிச்சம் ஒரு கலங்கரை வெளிச்சம் போன்றது என்று நாம் முன்பு ஒரு அறிக்கையில் குறிப்பிட்டோம்.

வரவேற்கிறோம் ஆனால்..

அதற்கு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துக்காட்டாக அமைவதாகும். அதனை வரவேற்கிறோம். இந்திய அரசு எந்தளவு இதில் அக்கறை காட்டும் என்பது நாமறிந்ததுதான் என்றாலும் இது தமிழ்நாட்டின் உணர்வாகும்.

ஆனால் அதே நேரத்தில் முதல் அமைச்சர் அவர்கள் டெசோ தலைவர் கலைஞர் பற்றிய விமர்சனத்தின் மூலம் நமது பொது எதிரி இலங்கை போர்க் குற்றவாளி ராஜபக்சே என்பதற்குப் பதிலாக, இங்குள்ள அரசியல் தலைவர் கலைஞர் தான் என்பது போன்ற ஒரு விரும்பத்தகாத போக்கை கடைப்பிடித்துள்ளது - ஏற்கத்தக்கதல்ல.

காங்கிரசும் - சி.பி.எம்.மும்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இது எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று வெளியே வந்து கூறி, தங்களை தமிழகத்திற்கு, தமிழர்களுக்குச் சரியாக அடையாளம் காட்டியுள்ள நிலையில், கொள்கை அளவில் இதில் ஏற்புடைத்தான தி.மு.க.வை கடுமையாக விமர்சிப்பது - அரசியல் விவேகம் ஆகாது; ஆத்திரம் அறிவுக்கு எதிரியாகும் எப்போதும்.

முன்பு இப்படி நடந்தது என்று ஆளுங்கட்சி சுட்டிக் காட்டி குற்றஞ்சாட்ட முயன்றால், அது ஆளுங்கட்சியின் - அத்தலைமையின் ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பற்றிய பழைய பேச்சுகள், செய்கைகள் அவருக்கு எதிராகவே ஏராளம் அணி வகுத்து நிற்கும்.

அதில் லாவணிக் கச்சேரிபோல இப்போது ஈடுபட்டால், இலங்கைக் கொடுங்கோலர்கள் ராஜபக்சேக்களே தப்பித்துக் கொள்வர். பிரச்சினை திசை திரும்பி விடும். எனவே அருள்கூர்ந்து அது கைவிடப்படல் வேண்டும்.

இலங்கைத் தூதர் கருத்தை  இந்தியா ஏற்கிறதா?

இலங்கை சிங்களவர்கள் இந்தியாவில் உள்ள வடநாட்டவர்தான் தங்கள் மூதாதையர்கள் - வம்சாவளியினர் என்ற திடீர் ஞானோதயத்தை இலங்கைத் தூதர் அவிழ்த்து விட்டுள்ளார்.

இதுபற்றி மத்திய அரசு இந்திய அரசு இதை ஏற்கிறதா, மறுக்கிறதா? என்பதை இலங்கைத் தூதுவரை அழைத்துக் கூற வேண்டும்.

எப்படியோ பூனைக்குட்டி இதன் மூலம் வெளி வந்துள்ளது!


------------------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்-”விடுதலை” 28-3-2013

28.3.13

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்தில் சமூகநீதிக்குச் சவக்குழியா?


கடந்த ஆண்டு இறுதியில் (13.12.2012) சென் னையில் ஓர் அவசரத் திருவிழா அரங்கேறியது. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை! விடிய விடிய கலந்தாய்வு நடத்தி பணியிடங்கள் இறுதி செய்யப்பட்டன.
இதுவரை கல்வித் துறை வரலாற்றில் இல்லாத   ‘‘மாபெரும் புரட்சி!‘‘ 36 பேருக்குத் தமிழக முதல்வரே நேரில் வந்து ஆணை வழங்கினார். மற்ற அனைவருக்கும் அமைச்சர்கள் ஆணை வழங்கினர் என்று ஊடகங்களெங்கும் செய்திகள் நிரம்பி வழிந்தன. ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நாட்டில் இத்தகைய நிகழ்வு புரட்சிதான்.

‘‘அப்படியே, இன்னும் இருக்கும் ஆசிரியர் தேவையையும் உடனடியாகத் தீர்த்து வைத்து விட வேண்டியதுதானே, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தான் லட்சக் கணக்கில் இருக்கிறார்களே?’’ என்றொரு கேள்வி எழுந்தது.


‘‘இல்லை, அவர்களுக்கெல்லாம் இன்னும் தகுதி வரவில்லை.’’

‘‘அப்படியா, அவர்களெல்லாம் ஆசிரியர் பயிற்சியோ, ஆசிரியர் பட்டப்படிப்போ முடித்த வர்கள் தானே!’’

‘‘இருக்கலாம். இருந்தாலும் அவர்களுக்குத் தகுதி உண்டா - இல்லையா என்பதைத் தனித் தேர்வு நடத்தித் தீர்மானிக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் ஆணை. அதுதான் ஆசிரி யர் தகுதித் தேர்வு. அதில் தேர்வானவர்கள் தான் ஆசிரியர் ஆவதற்கான தகுதி பெற்றவர்கள்.’’

‘‘ஓகோ... பிறகெதற்கு ஆசிரியர் பட்டமோ, பயிற்சியோ? சரி, அது இருக்கட்டும். அப்படி தமிழ் நாட்டில் எத்தனைப் பேர் ஆசிரியர் களாகத் தகுதி பெற்றவர்கள்? அதில் எத்தனைப் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது?’’

‘‘தகுதி வாய்ந்தவர்கள் அத்தனைப் பேருக் கும் வேலை 
வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தானே இந்த விழா!’’

‘‘பரவாயில்லையே... தகுதி உடையவர்கள் அத்தனைப் பேருக்கும் வேலை என்பது சாதனை தான். எவ்வளவு பேர் மொத்தம் தேர்வு எழுதி னார்கள்?’’

‘‘6.5 லட்சம் பேர்.’’

‘‘தேர்வானவர்கள்?’’

‘‘அதுதான் சொன்னோமே... முதுநிலைப் பட்ட தாரிகள் தவிர்த்து கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேருக்கும் மேல்.’’

‘‘என்னப்பா இது? அப்போ மிச்சமிருக்கிற 6.25 லட்சம் பேர் ஆசிரியர் தகுதியற்றவர்களா?’’

‘‘தகுதியும், திறமையும் தானுங்களே முக்கியம். தரம் தான் நிரந்தரம். அதனால தான் இப்படி வடிகட்டி எடுத்திருக்காங்க..’’

‘‘ஆமா... மொத்தம் எவ்வளவு பணியிடங்கள் காலி. அதுல எவ்வளவு பேர் நிரப்பப்பட்டி ருக்காங்க... எந்தெந்தப் பிரிவுல எவ்வளவு பேர் வேணும். எவ்வளவு பேர் தேறியிருக்காங்க...’’

‘‘அது தெரியலிங்களே....’’

‘‘அட... வேலைக்குப் போடுறதுன்னா... அதுக்கு முன்னாடியே அறிவிக்கை ஒன்னு முறைப்படி கொடுப்பாங்கப்பா... எவ்வளவு இடங்கள் காலி? அதில் திறந்த போட்டி எவ்வளவு? பிற்படுத்தப் பட்டோருக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோ ருக்கு எவ்வளவு? தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு? அதில் பெண்கள் எவ்வளவு? மாற்றுத் திறனாளி கள் எவ்வளவு? எல்லாமே விவரமா வந்திருக் குமே! அதைப் பார்த்தா தெரிஞ்சுடுமே!‘‘

‘‘அது வந்து... அது வந்து.... அது வரலீங்களே!’’

‘‘எது வந்தது... எது வரல?’’

‘‘தேர்வானவங்களுக்கெல்லாம் வேலை கொடுத்தாச்சுங்க... ஆனால் வேலை கொடுக் கிறதுக்கான அறிவிக்கை வரலீங்க...’’

‘‘அட.. நீ தெரியாம சொல்றப்பா... கண்டிப்பா வந்திருக்கும். சட்டப்படி அது வராம வேலையே போட முடியாதுப்பா!’’

‘‘இல்லீங்க... எவ்வளவு இடம் காலியாயி ருக்குங்கிற அறிவிக்கை வரவே 
இல்லீங்க’’

‘‘என்ன?’’

இந்த அதிர்ச்சிதான் ஆரம்பம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. முடிவு வெளிவந்தது. கொஞ்சம் பேர் தான் தகுதியானார்கள். பாவம், போனால் போகுதே என்று மற்றவர்களுக்கு மட்டும் மறுதகுதித்(!?)தேர்வு நடத்தப்பட்டது. முடிவு வெளிவந்தது. அதில் தகுதி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கெல்லாம் பணிகள் வழங்கப்பட்டன. இதுவரை இல்லாத புரட்சி இது!

- என்று 'சுபம்' போட்டு முடித்துவிட்டார்கள் கதையை!

ஆனால், இதற்கு நடுவே தொக்கி நிற்கின்றன ஆயிரம் கேள்விகள்? அதற்கெல்லாம் யார் விடை சொல்வார்? 21 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்றால், திறந்த போட்டியில் எவ்வளவு பேர் தேர்வு செய்யப் பட்டனர்?

பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர்?

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர்?

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் எவ்வளவு பேர்?

ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு உண்டே?

பிற்படுத்தப்பட்டோரில் இஸ்லாமியர் எவ்வளவு பேர்?

தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியர் எவ்வளவு பேர்?

மாற்றுத் திறனாளிகள் எவ்வளவு பேர்?

இன்னும் இருக்கும் இட ஒதுக்கீட்டு வாய்ப்புப் பெற்றோரெல்லாம் எவ்வளவு பேர்?

‘‘அப்படியெல்லாம் கிடையாது சார்? தகுதியான வங்களுக்கெல்லாம் வேலை. அதில எல்லா பிரிவினரும் இருக்காங்க ’’இதுதான் பதில்.

தகுதி, தகுதி என்று மீண்டும் மீண்டும் இவர்கள் அழுத்திச் சொல்லும்போதே இதில் ஏதோ மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது என்று பொறி தட்டவில்லையா?
‘‘தகுதியானவர்களுக்கெல்லாம் வேலை. அதில் அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள்.’’

சரி, தகுதிக்கான அளவுகோல் என்ன?

தகுதித் தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல் எங்கே? அதில் இட ஒதுக்கீடு அளவுப்படியே தேர்வானவர்கள் எண்ணிக்கையும் இருக்கிறதா? இல்லை, மிகச் சரியாக அவரவர் இட ஒதுக்கீடுக்கேற்ப தேர்வாகியிருக் கிறார்களா?
தேர்வு என்று முடிந்தால் அதற்கு முடிவு என்று வெளியிடப்பட்டிருக்க வேண்டுமே? எங்கே அது?

வேலைவாய்ப்புப் பெற்றோரின் இடஒதுக்கீட்டு விவரம் என்ன? என்ற கேள்விகள் நம் முன் எழும்.

ஆனால், இதற்கெல்லாம் மூலமான கேள்விகள் இன்னும் இருக்கின்றன. ஆனால், அப்படியொரு கேள்வியையோ, அதை எழுப்புவதற்கான வாய்ப்பையோ மறந்தும் ஏற்படுத்தவில்லை, ஆசிரியர் தேர்வு வாரியம்.
அந்தக் கேள்விதான். ‘‘ஒவ்வொரு பிரிவினருக்கு மான, கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு?’’ என்பது. இட ஒதுக்கீட்டை சந்தேகமற உறுதி செய்யும் ஒரே அளவுகோல் கட்ஆப் மதிப்பெண்கள்தானே!

சமூகநீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் நடந் திருக்கும் மாபெரும் சமூகநீதி மோசடி அங்கேதான் தொடங்குகிறது. ஒட்டுமொத்தமாக சமூகநீதிக்குக் குழி தோண்டியிருக்கும் இந்த பணி நியமனத்தில் நடந்திருப்பது என்ன?
தகுதித் தேர்வின்மூலம் இட ஒதுக்கீட்டு அளவு கோலின்படி ஆசிரியர் தகுதி கிடைத்திருக்க வேண்டிய 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் படிப்பு முடித்தவர்களின் எதிர்காலத்தை இருளாக்கியது யார்?
நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து ஆணை வழங்கிய பின்னும், அடுத்த மாதமே அந்த ஆணையைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிட்டு, அதேபோன்ற புதிய மோசடியை அரங்கேற்றும் தைரியம் எங்கே இருந்து வந்தது?

மறுக்க முடியாத ஆதாரங்களுடன் மேலும் விவரங்கள் நாளை 'விடுதலை'யில்!

சமூகநீதியில் அக்கறை கொண்டோரே, இந்த மாபெரும் மோசடிக்கெதிராக களம் காணவேண்டிய நாள் தொடங்குகிறது, எதிர்பாருங்கள்!

                 -------------------------"விடுதலை” 27-3-2013

27.3.13

ஹோலிப் பண்டிகை-பங்குனி உத்தரம்!



இந்து மதக் கடவுள்களுள் கிருஷ்ணன் என்னும் கடவுள் பலே கில்லாடி! பெண் ணென்று அடையாளம் தெரிந்து விட்டால் போதும் - அவ்வளவுதான் - காமக் குரூரன்! அவாள் பாஷையில் லீலை என்று சொல்லி விஷயத்தை வேறு ஜிகினா ஒட்டித் திசைமாற்றி விடுவார்கள்.

பதினாயிரம் கோபிகா ஸ்திரீகளுடன் கூடிக் குலாவினான் என்று சொல்லுவதற்கு வெட்கப் படாமல், அதனையே பெரிய சாதனை போல பக்திக்கான பெரிய நிலை என்பது போல உருட்டல் புரட்டல் செய்து வைத் துள்ள தந்திரத்தைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆசையை அறு உள்ளிட்ட பல ஒழுக்க ரீதியான வழி முறைகளை கவுதமப் புத்தர் மக்களிடம் பரப்பி, ஆபாச வேத மத மான இந்து மதத்தின் ஆணி வேர்களை சுட்டுப் பொசுக்கினார்.

இதற்கு மாறாக, நேர் எதிர்ப்பாக - எப்படி இப்பொழுது சினிமாவைக் காட்டி, வசீகரங்களைக் காட்டி மக்களை, இளைஞர்களை மயக்குகிறார்களோ, அரசியலில் தூண்டில் போட இந்த வலையை விரிக்கிறார்களே, அதுபோலவே கவுதமப் புத்தரின் ஒழுக்கப் பத்தியங்களைப் புறந் தள்ளுவதற்கு காம இச்சைக் கதாநாயகனாக கிருஷ்ணன் என்ற கட வுளைக் கற்பித்து மக்களி டத்திலே உலாவ விட்டார் கள் என்பதுதான் உண்மை.

அந்தக் கிருஷ்ணன் பிறந்த  ஒரு ஊரைக் கற்பித்துள்ளனர். உ.பி. மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் தான் கில்லாடிக் கிருஷ்ணன் கடவுளின் ஊராம். விதவைப் பெண்கள் அதிகம் இருப்பது இந்த ஊரில் தான்! (கடவுளின் கிருபையோ!)

அங்கு ஒரு வேடிக்கை வினோதம்! ஹோலிப் பண்டிகை என்னும் பெய ரில் - இந்து மதத்தில் விதவைப் பெண்கள் என்றால் பூ வைக்கக் கூடாது; பொட்டு வைக்கக் கூடாது, நல்ல விதமாக துணி மணிகளை உடுத்தவும் கூடாது, சுபகாரியங்களில் கலந்து கொள்ள வும் கூடாது. அப்படித்தானே?

ஹோலிப் பண்டிகை என்பது முட்டாள்தன மானது என்றாலும் அதில் ஒரு திருப்பம் என்ன தெரியுமா?

விதவைப் பெண்கள் ஒருவர்மீது ஒருவர் பூக்களையும் வண்ணப் பொடிகளையும் தூவி மகிழ்ந்து இவ்வாண்டு ஹோலியைக் கொண் டாடினார்களாம்.

மதப் பண்டிகை என்றாலும், விதவைப் பெண்கள் இதன்மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தான் கருத வேண்டும். விதை ஏதோ ஒரு வகையில் ஊன்றப்பட்டதாகவே கருத வேண்டும்.

அடுத்தடுத்து விளைவுகளைப் பார்ப்போம்!

             ------------------ மயிலாடன்  அவர்கள் 26-3-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
*******************************************************

எதையாவது சொல்லி, புராணப் பொய்களைக் கொட்டி பண்டிகை, திருவிழா, உற்சவம், தேரோட்டம் என்று கதையளந்து மக்கள் பணத்தைச் சுரண்டுவது தானே பக்தி!

இப்பொழுது பங்குனி உத்தரமாம்! இந்த நாளில் ஏகப்பட்ட கடவுள்களுக்குக் கலியாணங்களாம்!

மதுரை மீனாட்சியம்மன்  சுந்தரப் பெருமான், ஆண்டாள் - அரங்கநாதன் - ராமன் - சீதைக் கல்யாணம் எல்லாம் இந்த நாளில்தானாம்.

இந்த நாளில் விரதம் இருந்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல் யாணம் நடக்குமாம். (கடவுள் என்ன கல்யாண புரோக்கரா?) குழந்தை பிறக்காதவர்களுக்கு குழந்தை பிறக்குமாம் (மருத்துவமனைகளை இழுத்து மூடி விடலாமா?)

இப்படி எல்லாம் விஞ்ஞான உதவியைப் பயன்படுத்தி அச்சிட்டு வெளியிடப்படும் இதழ்கள்தான் சற்றும் வெட்கமின்றிப் பறைசாற்றுகின்றன.
உருவமற்றவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இப்படி கடவுள்களுக்கு புருஷன் - பெண்டாட் டிக் கதைகளை எழுதி வைத்து, விழா கொண்டாடுவது சரியானதுதானா? இவர்கள் கூறும் கடவுள் தத்து வத்தையே கொச்சைப்படுத்திக் காலில் போட்டு மிதிப்பது ஆகாதா?

புருஷன் - பெண்டாட்டி, வைப்பாட்டி,  விபச்சாரம் என்று கடவுள்கள் பெயரால் பிரச்சாரம் செய்தால் நாட்டில் ஒழுக்கம் வளருமா?

பாலியல் வன்முறை பற்றியெல்லாம் வக்கணையாகக் கருத்துக்களைக் கூறும் கனவான்கள், கட்டுரைகளைத் தீட்டும் அறிவு சீவிகள் கடவுள் மதத்தின் பெயரால் மிகக் கீழ்த்தரக் கூவமாக, ஆபாசச் சாக்கடையாக எழுதிக் குவிக்கிறார்களே - பிரச்சாரம் செய்கிறார்களே, பக்கம் பக்கமாக ஆன்மீக சிறப்பிதழ்களை வெளியிடு கிறார்களே - இவற்றைக் கண்டிக்க  முன் வராதது ஏன்?

ஓ, அவர்களும் அந்த ஆபாசக் குட்டையில் ஊறிய மகாவிஷ்ணுவின் வராக அவதாரங்கள் தானோ? வெட்கக் கேடு! வெட்கக்கேடு!! வெட்கத்துக்குப் பிறந்த ஆபாசக் கேடு! ஆபாசக் கேடு!!

இனமலர் எழுதுகிறது - பங்குனி பெருவிழாவை காண வந்திருந்த பக்தர்கள் அனைவரும் கபாலீஸ்வரர் கையில் இருப்பது என்ன என ஆவலுடன் பார்த்தனர். அவர் கையில் இருப்பது சந்திராயுதம். சந்திரன் வளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. சந்திரனின் ஒளி உயிரினங்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் தீய சக்தி, இயலாமை, தாழ்வு மனப் பான்மை போன்ற துஷ்ட சக்திகளை ஒடுக்கக் கூடியது; இவற்றை உணர்த் துவதாக கபாலீஸ்வரர் கையில் சந்திராயுதம் இருப்பதாக சிவாச்சாரியார் ஒருவர் கூறினார் என்று கூறித் தப்பித்து ஓடுகிறது இனமலர்.

இப்படி ஒரு கருவி கபாலீஸ்வரர் கையில் இருக்கும்போது அரசு ஏன்? காவல்துறை ஏன்? நீதிமன்றம்தான் ஏன்?

சந்திராயுதத்தைக் கையில் வைத்துள்ள கபாலீஸ்வரன் எந்தத் தீய சக்தியை அழித்தான்? எந்தத் துஷ்ட சக்திகளை, ஏற்றத் தாழ்வுகளை அழித்தான்?
நாள் ஒன்றுக்கு சென்னையில் மட்டும் எத்தனைக் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள், விபச் சாரங்கள்? கபாலீஸ்வரன் கையில் இருக்கும் அந்த சந்திராயுதம் குறைந்த பட்சம் முகச் சவரம் செய்யவாவது பயன்படுமா என்று தெரியவில்லை.

இப்படி எல்லாம் யாரோ ஒரு சிவாச்சாரியார் கூறினாராம். ஏன், அவர் பெயரைச் சொல்லுவதுதானே. அக்கப்போர் பேர் வழிகள் இப்படித்தான் மொட்டைத் தலையன் குட்டை யில் விழுந்தான் என்று எழுதுவார்கள்.
அடேயப்பா, இந்தக் கூட்டம் அரசியல் பிரச்சினை என்றால் எப்படி யெல்லாம், முடி பிளந்து ஆராய்ச்சி (?)களை எல்லாம் செய்கின்றன? ஆன்மீக விடயங்கள் என்றால் மட்டும் என்று ஒரு சிலாச்சாரியார்  சொன் னார்... என்பது நம்பிக்கை... என்பது அய்தீகம்... என்று சொல்லித் தப்பிக்கும் அறிவு நாணயமற்ற தன்மையை யோசித்துப் பாரீர்!

         -----------------------”விடுதலை” 26-3-2013

26.3.13

டெசோ எதிர்ப்பாளர்களே சிந்தித்துப் பாருங்கள்!... தெளிவாகப் புரியும்!!.


இன்றைக்கு தமிழகமெங்கும் ஈழத்தில் நடந்த இனப்  படுகொலையினை எதிர்த்து சாதி, மத, கட்சி வேறுபாடுகளை கடந்து ஒரு பெரிய எழுச்சி உண்டாகியுள்ளது. வேதனையான தருணத்திலும் ஆறுதலான ஒன்று. அதுவும் சமீப காலங்களாக சாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்திய கட்சி களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. (ஆமாம் அவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்! கொஞ்ச நாட்களாக கடை மூடியே உள்ளதே) பற்பல அமைப்புகள் இனப் படுகொலையினை  எதிர்த்தும், ஈழ தமிழரின் இன்னல்கள் நீங்க தொடர்ந்து குரலெழுப்பி வந்தாலும், டெசோ அமைப்பின் மறுவுருவாக்கத்திற்குப்  பிறகு போராட்டம் அடுத்த முக்கிய கட்டத்திற்கு சென் றது என்றால் அது மிகையாகாது. டெசோ அமைப்பு சரியான நேரத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்களால் தமிழர் தலைவர் ஆசிரியர், எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் மற்றும் பேராசிரியர் சுபவீ  அவர்கள் ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டது. டெசோவின் சாதனை!

ஈழத் தமிழர் பிரச்சினையினை பல சிறிய அமைப்புகள் ஆதரித்து குரல் எழுப்பி வந்தாலும் தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ அதைப்  பெரிதாக அவர்களால் கொண்டுச் செல்ல முடியவில்லை, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. டெசோ அதை செய்து காட்டிவிட்டது. இந்த தருணத்தில், எல்லோரும் ஒருங்கிணைந்து தங்கள் சுய விருப்பு வெறுப்புகளை களைந்து  டெசோ மூலமாக இப்பிரச்சினைக்கு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு இது மிக முக்கியமான காலக் கட்டம். ஆனால் நடப்பதோ வேறு. ஒரு சில அமைப்புகள்  மற்றும் பத்திரிகை கள் தாங்கள் தான் ஈழத்  தமிழரின் வாழ்விற்கு  ஏக போக உரிமையாளர்கள் போலவும் மற்றவர் களுக்கு இதில் என்ன வேலை என எண்ணிச்  செயல்படுவது வேதனையிலும் வேதனை. அது மட்டுமின்றி, குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழி பறித்தது போல,டெசோ அமைப்பையும் குறிப்பாக திமுக மற்றும் கலைஞர்  அவர்களை குறிவைத்து தாக்குவது நமக்கு அவர்களின் அடிப் படை நோக்கத்தினையே சந்தேகப்பட வைக்கிறது. எந்த தொலைக்காட்சியில் நடக்கும் விவாதம் ஆகட்டும், எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு எதுவேண்டும் என்றாலும் இருக்கட்டும், ஒரே  குறிக்கோள் கலைஞரைக் கொச்சைப்படுத்த வேண்டும். தாக்க வேண்டும்.

ஆபிரகாம் லிங்கன் சொன்னது மாதிரி, ஒரு சிலரை எப்போதும் ஏமாற்றிவிடலாம். எல்லோரையும் ஒரு சில முறை ஏமாற்றிவிடலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்றி விட முடியாது என்பதுதான் உண்மை. இவர்களால் தொடர்ந்து தங்கள் பொய்ப்புரை மூலமாக மக்களை ஏமாற்றி விடமுடியாது. நேற்று முளைத்த மழையில் இன்று முளைத்த காளான்கள் நுரை யீரல் பிதுங்கக்  கத்துவதுதான் வேடிக்கை. இதில் ஒரு காளான், ஏதோ தம்பி பிரபாகரனின் தளபதியாக போர்முனையில் இருந்து போரினை நடத்தியது  போல பேசுவதுதான் 'சுத்தக்  காமெடி'. தமிழ் திரைபடங்களில்தான் எவ்வளவு சோகமான துயரமான கதையாக  இருந்தாலும் இடை யிடையே நகைச்சுவை காட்சி  என்கிற கோமாளித் தனம் அரங்கேறும். ஒருவேளை அத் துறையினை சார்ந்த 'தமிழர்' என்பதால் தொடர்ந்து நகைச் சுவையாக பேசி வருகிறார் போலும். வரலாறுகளை மறந்துவிட்டாரா  அல்லது தெரியாமலேயே பேசுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது. 

80களின் தொடக்கத்தில் வெளிக்கடை சிறையில் குட்டி மணி தங்கதுரை உட்பட 35 பேர்  ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நேரத்தில்  தமிழகத்தில் பெரும் கிளர்ச் சியையும் கொந்தளிப்பையும் உரு வாக்கியதில் பெரும் பங்கு திமுக விற்குதான்  என் பதை மறக்கமுடியுமா? அன்று முதல் திமுக கட்சி தலைமை மட்டுமின்றி. எல்லா மட்டத்திலும்,  கடைநிலைத்  தொண்டன், மற்றும் திமுக அனுதாபிகள் வரை  தொடர்ச் சியாக முழு மூச்சாக ஈழப் பிரச் சினையில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள்.

 எம்.ஜி.ஆர்.,

 மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜியார் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பண உதவி செய்திருந்தாலும் உளமார அவர் இந்த ஈழப் பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை என்பதுதான் உண்மை. இதை அனை வரும் அறிந்திருந்தாலும் காலஞ்சென்ற டி ஜீ பி  மோகன்தாஸ் அவர்களின் புத்தகம் இதற்கு கூடுத லாக இன்னொரு  சாட்சி. (கொடுமை என்னவென் றால் திமுக 1981இல் அறவழியில் போராட்டம் நடத்திய பொழுது அதிமுக அரசு கலைஞரை கைது செய்து சிறையில் தள்ளியது). அதிமுக கட்சியின் தலைமையே இப்படியென்றால் அதிமுக கட்சியினரைப்  பற்றி ஒன்றுமே கேட்கவேண்டாம். அய்யோ பாவம், அரிச்சுவடியே அறியாதவர்கள். 'இங்கிருந்து பிழைப்புக்காக அங்கே போய்விட்டு தனி நாடு கேட்பது என்ன நியாயம்' என்கிற அளவு தான் அவர்களுக்கு ஈழ மக்களின் இன்னல்களைப்  பற்றிய அறிவு. ஆனால்,  திமுகவின்  நிலையே வேறு. அவர்கள் உணர்வு பூர்வமாக இதை எதிர் கொண்டவர்கள். ஈழப்  பிரச்சினைக்காக தன் இன்னுயிரை முதன்முதலாக மாய்த்துக் கொண்ட வன் ஒரு திமுக தொண்டன். 80களின் இறுதிவரை ஈழ உணர்வினை அணையாமல் பார்த்துக் கொண் டவர்கள் திமுகவினர்.

திமுக சந்தித்த இழப்புகள் இதனால் அவர்கள் எந்தக்  காலகட்டத்திலும் அரசியல் பயன் அடைந்தவர்கள் அல்ல. இழந்தது தான் ஏராளம்.  ஆட்சிப்  பறிபோனது ஒருபுறம். சிறை தண்டனை, பொருள் இழப்பு, கட்சிப் பிளவு, அவமானம் எத்தனை எத்தனையோ. ஒரு முறையல்ல இருமுறை ஆட்சியை இழந்த கட்சி திமுக.தான்.  இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் ஏற்படாத சோதனைகள் திமுகவிற்கு மட்டும் தான் ஏற்பட்டது. எந்த அரசியல் கட்சி இதுவரை இப்படி தங்கள் எதிர்காலத்தையே விலை கொடுத்திருப்பார்கள்? (பாரதீய ஜனதா கட்சி கூட ஒட்டு வராது  என்று தெரிந்ததும் இராமரை கழட்டி விட்டுவிட்டார்களே!). ஆனால் திமுக தலைமை என்றுமே தடம் புரண்டது இல்லையே. அதைவிட அக்கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்கள் நெஞ்சில், ஈழம் என்றத் தீயை அணையாமல் வைத்திருந்தனரே. (அதன் வெளிப் பாடே இன்றைக்கு டெசோவின் ஆர்ப்பாட்டங் களுக்கு கட்சியினரிடம்  பெரும் எழுச்சி காண முடிகிறது). காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய தும் பட்டாசு வெடித்து கொண்டாடியது, 

 இதுநாள் வரை மூடிவைத்திருந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு தானே. வேறு எந்தக்  கட்சிக்கும், குறிப்பாக மற்றொரு பெரிய கட்சியான அதிமுக வினர்க்கு ஈழப் பிரச்சினை  என்பது என்றைக்கும் நோக்கமாக இருந்தது இல்லை. திமுகவின் தொடர் தோல்விகளை  அவர்கள்தானே அறுவடை செய்து கொண்டனர். ராஜீவ் கொலையை ஏதோ திமுக தலைமை திட்டம் போட்டுச்  செய்தது போல சுப்பிரமணிய சுவாமி, சோ மற்றும் வாழப்பாடிக்  கூட்டங்கள்,  ஊடகங்கள் மூலமாக பரப்பிவந்தனர்.

அதுமட்டுமின்றி, மத்திய அரசும் (இதில் காங் கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட்  என்ற வித்தியாசம் பாராமல்) மாநில அதிமுக அரசும், தமிழகத்தில் ஈழம், பிரபாகரன் என்கிற சொற்றொடர்களை பயன்படுத்துவதே தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற ஒரு நிலையினைக்  கொண்டுவந்தது. அப்படி மீறிப்  பயன் படுத்தியவர்களை பொடா சட்டத்தில் சிறையில் தள்ளி அச்ச உணர்வினை உருவாக்கினர்.

அதிமுகவைக் குறை கூறாதது - ஏன்? 

இன்றைக்கு திமுகவை குறை கூறும் 'ஞானிகள்' அதிமுகவையோ, முதல்வர் ஜெயலலிதாவையோ எந்தக்  குற்றமும் கூறமாட்டார்கள். காரணம்  ஒரு பக்கம் 'அவாள்' பாசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சிறைக்கு போய்விடுவோமோ என்ற பயம். கலைஞரைத்  தானே சகட்டு மேனிக்கு விமர்சிக்க முடியும். மே 2009இல்,   பெரிய உலக நாடுகளின் , இந்தியா உட்பட, மேற்பார்வையில் ஈழத்தில் இனப் படுகொலை நடந்து முடிந்த பிறகு, இன்றைக்கு திமுகவின்  மீதும் அதன் தலைவரின் மீதும் ஒரு சில விஷமிகள்,  வேண்டுமென்றே குற்றச்சாற்றுகள் சுமத் துவது ஏதோ உள்நோக்கம்  உள்ளது  போல இருக் கிறது. திமுகவின் மீது மட்டும்  குற்றம் சொல்பவர்கள் ஏன் அதிமுகவினரை வசதியாக விட்டுவிட்டார்கள் என்பது புரியவில்லை. அன்றைக்கு வாய்மூடி மௌனியாக இருந்தது எல்லா அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, மக்களும் தானே. ஏன் இன்றுப் போல அன்று மக்கள் வீதிக்கு வந்து போராடவில்லை? எந்த திரைக்காட்சி அன்றைக்கு ரத்து  செய்யப்பட்டது?

 மக்கள் எப்பொழுதும் போலத் தானே தொலை காட்சியிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி இருந் தார்கள். மேதகு பிரபாகரன் அவர்களின் மரணம் சாதிக்க முடியாததை இன்று அவர்தம் அன்பு மகனின் மரணம் சாதித்து விட்டது. 30 ஆண்டுக்களுக்குப்  பிறகு மீண்டும் அதே எழுச்சி. அதே உணர்ச்சி பிரவாகம். இதை மட்டுப்படுத்த உளவுத்துறை இந்த அமைப்புகள் மூலம் சதி செய்கிறதோ என்கிற அய்யம் தான்  வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இனப் படுகொலையினை, 'போர் என்றால் பொது மக்கள் சாவது நடைமுறையில் ஒன்று' என்றார். அதைப்பற்றி இன்று யாரும் விவாதிப்பது இல்லையே. திரும்பத்  திரும்ப திமுகவே  தாக்கப்படுகிறது.  'அன்றே ஆட் சியை விட்டு திமுக வெளியேறி இருக்க வேண்டும்' என்று கூறுவது  ஈழத் தமிழரின்பால் உள்ள அக்கறை போலத் தெரியவில்லை. நிச்சயமாக இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. இன்றைக்கு கூட மாணவர் களின் எழுச்சியினை ஒடுக்க ஆளும் அதிமுக அரசு தொடர் விடுமுறை அளித்து போராட்டத்தை நீர்த்துப் போக முயற்சிக்கிறதே  ஏன் வாய் திறந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அப்பப்பா என்ன கபட நாடகம்! இரட்டை வேடம்!

ஏற்கனவே இருமுறை திமுக ஆட்சியை இழந்தபொழுது, மக்கள் ஈழப் பிரச்சினையை கருத்தில்  கொண்டு திமுகவை வெற்றிப்  பெற செய்யவில்லையே. ஏன் ஈழ போராட்ட வரலாற் றின் அசகாய 'சூரர்' வைகோவை 2009 நாடாளு மன்ற தேர்தலில் அவர்தம் தொகுதி மக்களே அவரைத் தோற்கடித்து விட்டனர்-- அதற்கு என்ன பதில்? எந்த அரசியல் கட்சியும் மக்கள் நாடித் துடிப்பை அறிந்துதான் செயல்பட முடியும் என்பது வரலாறு நமக்கு சொல்லும் பாடம் -- திமுக அதையும் தாண்டி தேர்தல் இலாப நட்ட கணக்கு பாராமல் தங்களை ஈழப் பிரச்சினையில் ஈடுப்படுத்தி கொண்டது என்பது தான் உண்மை. இன்னொரு செய்தியையும்  நினைவில் கொள்ள வேண்டியது, ஆட்சிதான் திமுகவிடம்  இருந்ததே தவிர அரசாங்கம் பார்ப்பனியத்திடமும் மலை யாளிகளிடமும் தான் இருந்தது. பெரும்பாலான தமிழர்கள் கணினி துறைக்கு வேலைக்கு சென்று விட்டு, முகநூலில் 'லைக்', 'கமெண்ட்' போடுவ தோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக் கின்றனர். தமிழர்கள்  முக்கிய முடிவெடுக்கும் மத்திய அரசுத்  துறைகளிலும், ஆங்கில ஊடகங் களிலும்  கோலோச்சவில்லை என்பது  இன்னொரு குறை.

அம்மாவுக்கு டில்லி சிம்மாசனமா?

திமுகவை அரசியலில் தோற்கடித்துவிட்டு  எப்படியாவது 'அம்மாவை' டில்லியில் அரியாசனம் ஏற்றிவிடவேண்டும். அதற்காக பக்கம்பக்கமாக இன்றைக்கு திமுக மீது குற்றம் சுமத்தும் ஆனந்த விகடன், மே 19க்கு  பிறகு அவர்கள் பத்திரிகையின் போக்கில் என்ன மாறுதல் செய்து விட்டார்கள் ? இனிமேல் அரை குறை ஆடையோடு நடிகைகளின் கவர்ச்சிப்  படம் போட மாட்டேன் என்று முடிவு செய்ததார்களா? இல்லையே. புலம் பெயர்ந்த தமிழர்களின் உணர்வு களை தூண்டி இங்கு கல்லா கட்டியதுதான்  மிச்சம் . ஒரு பக்கம் ஈழ மக்களுக்கு கண்ணீர். அடுத்த பக்கத்திலேயே நடிகையின் ஆபாசப்  படம் போட்டு இன உணர்வினை காயடிப்பது. இதைத் தானே விகடன் செய்து வந்தது. ஏமாளி தமிழன் வெட்கம் கெட்டு அந்தப் பத்திரிகையை வாங் கியதுதான் வேதனை. ஆமாம் திமுக அப்படித்தான் தமிழர்க்கு துரோகம் செய்தது என்றால்  ஏன் தளபதி ஸ்டாலின் அவர்களைப் பற்றி விகடன் நூல் வெளியிட்டுக்  காசு பார்க்க வேண்டும். அடடா என்ன தமிழ்ப் பற்று!

தொலைக்காட்சி விவாதங்களில் வரலாறுகளை திமுகவினரோ அல்லது திமுக ஆதரவாளர்களோ சொல்ல  வரும்பொழுது இடைமறித்து 'எதற்கு பழைய கதை, மே 2009அய்ப் பற்றி பேசுங்கள் என்று விவாதத்தினை திசை திருப்புவதும் ஒருவகையில் முரண் தானே!. மே 2009 மட்டும் பழையக்  கதை அல்லாமல் புதிய கதையா ?

அடுத்த படம் சூட்டிங்குக்கா?

இப்பொழுது வாய் கிழிய தொலைக்காட்சியில் பேசுபவர்கள்  அப்போது எங்கிருந்தார்கள் என்பதுதான்  நம் கேள்வி. எல்லோரையும் போல இவர்களும் இனப்படுகொலையை வேடிக்கை தானே பார்த்தார்கள். குறைந்தப் பட்சம் 'அய்யோ எல்லாம் முடிந்து போய்விட்டதே, இனி நான் இருந்து என்ன பயன்' என்று யாரும் தங்கள் வாழ்கையை முடித்துக்  கொள்ளவில்லையே. அடுத்த படச் சூட்டிங்குக்கு தானே கிளம்பினார்கள். இன்னும் சிலர், இன்னும் 'தம்பி இறக்க வில்லை'யென்று எல்லோரையும் நம்பவைத்து பிரச்சினையை வேறு திசைக்கு அல்லவா திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்.. இவர்கள் என்றைக் குமே ஈழப் பிரச்சின்னைக்கு உருப்படியாக எதுவுமே செய்தது இல்லை. தாங்கள்தான்  ஒட்டு மொத்த  குத்தகைகாரர்கள்  போல நினைத்துக் கொண்டு  மற்றவர்கள் எல்லோரையும் ஏளனப்படுத்தி மொத்த  பிரச்சினையையும் செயலிழக்க செய்து கோமாவில் வைத்திருந் தார்கள். இதைத்  தானே மத்திய அரசும், உளவுத் துறையும் எதிர்ப்பார்த்தது . டெசோ தொடங்கிய  பிறகுத் தானே தமிழகத்தில் மீண்டும் உணர்வு பூர்வமான எழுச்சி, அமைப்புரீதியாக ஏற்பட்டது.  வட இந்தியர்களும், ஏன் உலக அளவிலும் பல  நாட்டு தூதுவ ர்கள் அளவில் கொண்டு சென்றது டெசோ தானே. தயவுசெய்து 'தமிழ் ஆர்வலர் களிடம்' வேண்டுவது இந்த நேரத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசாங்கத்திற்கும், அய்.நா. அமைப்புக்கும் அழுத்தம் கொடுத்து, ராஜபக் சேவிற்கு தண்டனை வாங்கித்தருவதும், ஈழ விடுதலை அடைவதுமாக நம் லட்சியம் இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் குறை கூறி லட்சியத்தை சிதைத்து விடக் கூடாது. தமிழர் தலைவர் கூறியது போல எது நம்மை இணைக்கிறதோ அதில் கவனம் செலுத்திக்  குறிக் கோளினை நோக்கி முன்னேறுவோம். இலக்கை அடைந்தவுடன் வேண்டுமானால் மோதிக் கொள் ளலாம். ஆதலினால்,  உங்களது  செய்கைகளால்  இப்பொழுது ஏற்பட்டுள்ள உணர்வுகளை மங்கச் செய்து விடவேண்டாம். இதுவே தாழ்மையான வேண்டுகோள்.

சிந்தித்துப் பாருங்கள்... தெளிவாகப்  புரியும்.

                       ------------------------------- வெளிச்சம் --”விடுதலை” 24-3-2013

25.3.13

இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்?

அறிவின் பயன்


பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப்படுத்தப்படுவதாகும்.
மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற ஜீவன்களின் உயிர் போலவே
மனிதனுடைய உயிரும் ஒரு உயிரேயானாலும், மற்ற ஜீவன்களுக்குக் குறிப்பிடும் சரீர தத்துவம், ஜீவ தத்துவம் போலவே மனிதனுக்கும் உடையது என்றாலும், பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மாத்திரம் உண்டு என்று சொல்லப்படுவதனாலே தான் மனிதன் மற்ற ஜீவப் பிராணிகளைவிட வேறு பட்டவனாகவும் மேலானவனாகவும் உலக வழக்கில் மதிக்கப்படுகிறான்.

இப்படி மதிக்கப்படுவது சரியா தவறா என்பது விவகாரத்திற்கு உரியதானாலும், இப்பகுத்தறிவை மனிதன் உடையவனா யிருப்பதன் காரணமாய் மனித ஜீவனுக்கு ஏதாவது உண்மையான சந்தோஷமும், திருப்தியும் தரப்பட்டிருக்கின்றதா என்று பார்ப்போமேயானால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. அதுவும் பகுத்தறிவு ஏற்பட்டதாலேயே மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது என்றுகூடச் சொல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால், இதைச் சரியென்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று பார்த்தால் பகுத்தறிவின் காரணமாக மனிதனுக்குச் சுகமும், திருப்தியும் இல்லையென்று சொல்லுவது நியாயமாகாது என்றாலும் பிரத்தியட்சத்தில் அப்படித்தான் காணப்படுகின்றது.
ஆகவே, இதற்கு ஏதாவது காரணம் இருந்தாக வேண்டும் அல்லவா? அந்தக் காரணம் என்னவென்றால் மனிதன் தன் பகுத்தறிவைச் சரியானபடி பயன்படுத்தாமலும், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களை மனிதன் ஏற்றுக் கொள்வதாலும், மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் இல்லாமல் போய்விட்டன.
மனிதன் உலக சுபாவத்தையே தப்பாய் நிர்ணயித்துக் கொண்டு, மனித ஜென்மமே சுகமனுபவிக்க ஏற்பட்டதென்றும், வாழ்க்கையே துக்கமென்றும், சம்சாரமானது சாகரம், துக்கம் என்று கருதுவதன் மூலம் தனது துக்கத்திற்கும், அதிருப்திக்கும் பரிகாரம் தேடாமல் அனுபவித்து வருகிறான்.
இந்த மேற்கண்ட நம்பிக்கைகளும், எண்ணங்களுமே மனித சமூக துக்கத்துக்கும், அதிருப்திக்கும் இடம் கொடுத்து வருகின்றன என்பதை உணருவதில்லை. இப்படி உணர முடியாமல் போனதற்கு பகுத்தறிவைச் சுதந்திரத்தோடும், துணிவோடும் பயன்படுத்தாத காரணமேயாகும்.
இந்தப்படி சுதந்திரத்தோடும், துணிவோடும் பகுத்தறிவு என்பதைப் பயன்படுத்தக் கூடாது என்கின்ற நிபந்தனைகள் வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் இருந்துவர, மனிதன் ஆதியில் அனுமதித்துக் கொண்டதே இந்நிலைக்குக் காரணமாகும். என்றாலும் அதிலிருந்து விடுதலை பெற முடியாது என்று தீர்மானித்துவிடுதல் கூடாது. இப்பொழுதுகூட மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தியும், தன்னைச் சூழ்ந்து, தனக்குள் புகுத்தப்பட்டும் இருக்கின்ற விஷயங்களாகிய சமூகக் கட்டுப்பாடு, அரசியல் கட்டுப்பாடு, மதக் கட்டுப்பாடு, பழக்க வழக்கக் கட்டுப்பாடு முதலியவைகளை விலக்கி விட்டுத் தனியாகச் சுதந்திர மனிதனாக, பரிசுத்த உணர்ச்சியுடன் ஒவ்வொன்றையும் நிர்வாணமாகப் பார்க்கும் பரிசுத்தக் கண்ணுடன் இருந்து, பகுத்தறிவைத் துணிவோடு உபயோகப்படுத்துவானேயாகில் பகுத்தறிவால் அறியக் கூடிய உண்மையையும், பயனையும் அறியாமலும், அடையாமலும் இருக்க முடியாது.
இன்று மனிதனுடைய பகுத்தறிவை அடக்கிக் கொண்டிருப்பவைகளில் முக்கியமானவை இயற்கையின் உண்மையை அறிய முடியாமல் செய்து வருவதற்கு ஏதுவான தலைவிதி, முன் ஜென்ம பலன், கடவுள் செயல் என்பன போன்ற உபதேசங்களேயாகும். இவ்வுபதேசங்களுக்குக் கட்டுப்பட்ட எவனும் பகுத்தறிவின் பயனான இயற்கையை உணர்ந்து அதைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு சந்தோஷமும், திருப்தியும், அடையும் பேற்றை எவனும் அடையவே முடியாது. ஆதலால், ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவை அவனது சந்தோஷமும், திருப்தியுமான வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப்படி பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஒவ்வொரு மனிதனும் அவனவனுடைய கண்ணையும், மனத்தையும், நிர்வாணமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும்.
இந்த நிலைமையையும், தன்மையையும் ஒவ்வொரு மனிதனும் அடையவே பகுத்தறிவு உலகில் உலவி வந்து மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

                                           -------------------------------------(பகுத்தறிவு ஜூலை 1, 1935)
மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது, அம்மன்கள் விக்கிரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடுநாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப் பட்டை மற்ற விக்கிரகங்களைக் கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவற்றின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவற்றின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே! இவற்றைப் பார்த்தும், கேட்டும் கூடவா அந்த இடங்களில்,  அந்த விக்கிரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில், புனிதத் தன்மை, தெய்வத் தன்மை, அருள் தன்மை ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவை இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்களிலும் மூடர்கள் இனியும் என்றாகிலும் உண்டா? தயவு செய்து சொல்லுங்கள்.
இன்னும் ஒரே ஒரு குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோடீஸ்வரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய், பாப்பராய்ப் போகின்றான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்? இன்னும் ஒன்றுதான் அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி; காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்?
மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான் கடவுள்.
பதில்: சரி அப்படியானால், அந்தக் காரணத்தை - கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம். (பகுத்தறிவு).
மூடர்: கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள்தனமாகும்.
பதில்: அப்படியானால், உலகப் படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.
மூடன்: உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில்: சரி, நல்ல காரியமாச்சுது சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலை(ரை)க்காதே.

--------------------------------------சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் எழுதியது, குடிஅரசு 4.1.1931

24.3.13

ஈழத் தமிழர் பிரச்சினயில் காங்கிரஸ் மட்டும்தான் துரோகம் செய்கிறதா?

அன்று இந்திரா என்ன சொன்னார்?

நினைவிருக்கிறதா? அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய திருமதி சோனியா காந்தி அவர்கள் வங்க தேசத்தின் தலைநகரமான டாக்காவுக்குக் கம்பீரமாகச் சென்றாரே - நினைவிருக்கிறதா?

அந்த நாள் 2011 ஜூலை 25; எதற்காகச் சென்றார்? வங்கதேசத்தின் ஸ்வதீனாடா சம்மனோனா? (Swadhinata Sommanona) என்ற அந்நாட்டின் மிகப் பெரிய விருதினைப் பெற்றுத் கொள்ளத்தான் சென்றார்.


எதற்காக? வங்கதேசத்தைப் பெறுவதற்கு அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பேருதவி புரிந்ததற்காக?


இந்திய நாடாளுமன்றத்திலேயே பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் கூடத் தயக்கம் இல்லாமல் இன்னொரு நாட்டுப் பிரச்சினையாயிற்றே என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்நாட்டில் இனப்படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) நடக்கிறது என்று கூறினாரே. அந்தப் பெண்மணிக்கான விருதினைப் -  பெறுவதற்காகத்தான் அவரின் மருமகளும் இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவருமான சோனியாகாந்தி சென்றார்.


மறுபடியும் நினைவூட்டுகிறோம் இன்னொரு நாட்டில் இனப்படுகொலை நடப்பதை கொஞ்சம்கூடப் பொறுத்துக் கொள்ளாமல் பூகம்பமாய், புயலாய் புறப்பட்டு பொங்கி எழுந்து ஒரு நாட்டையே பெற்றுக் கொடுத்தார்.

ஏன் சுற்றி வளைப்பானேன்? இதே இலங்கையின்மீது பகிரங்கமான குற்றச் சாற்றை வைக்கவும் தயங்கவில்லையே!


அது 1983 ஆகஸ்டு 16 அந்நாள் மிக முக்கியமான நாள்! இலங்கையிலே நடப்பது இனப்படுகொலையே என்று அதே இந்திராகாந்தி தான் பிரதமர்தான் நாடாளுமன்றத்திலே நறுக்கென்று குட்டு வைத்ததுபோலவே சொன்னாரே!

இதற்குமேல் என்ன வேண்டும் இந்திய தேசிய காங்கிரஸ்காரர்களுக்கும் அதன் தலைவருக்கும்?


இரும்புப் பெண்மணி என்று இந்திரா காந்தியை தங்கத் தட்டில் வைத்து தாலாட்டினால் போதுமா?


அந்த அம்மையாரின் துணிவையும் சிந்தனை நோக்கையும் சிக்கெனப் பிடித்துக் கொள்ளத் தவறியது ஏன்?


மிகப் பெரியதோர் பிரச்சினையை அணுகியபோது சொந்த பந்தம் பிரச்சினைகளை முன்னெடுத்துத் தம் கண்களை இருட்டாக்கிக் கொள்ளக் கூடாது என்பது பொது வாழ்வில் பால பாடம் ஆயிற்றே!


ஏற்கெனவே பலகீனப்பட்டு தள்ளு வண்டியைத் தேட வேண்டிய நெருக் கடிக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் ஒரு மனிதநேயப் பிரச்சினைச் சுடரைக் கையில்  எடுத்துக் கொண்டு புறப்பட்டு, உலக நாடுகள் மத்தியில் கம்பீரமாக வலம் வரக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டதே!


சுடரைக் கையில் ஏந்துவதற்குப் பதிலாக அதனைத் தனக்குத்தானே வைத்துக் கொண்டு கருகிப் போய் விட்டார்களே!

இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டது என்ற உண்மை உலகெலாம் தெரிந்து விட்டது; போதும் போதாதற்கு பிரிட் டனின் சேனல் 4 ஈழத்திலே தமிழர்களைக் கொன்று குவித்துக் குப்பை மேடாக மனித உடல்கள் குவிக்கப்பட்டதை படம் எடுத்துக் காட்டி விட்டதே! 12 வயது பாலகன் பாலச்சந்திரன் மார்பினிலே அய்ந்து குண்டுகளை வீசி பதறப் பதற உயிரைக் குடித்தனரே!


உலகில் உள்ள மனிதர்களின் நாடி நரம்பெல்லாம் ஒடுங்கி விட்டது. உடல் அணுக்கள் எல்லாம் குத்திட்டு நின்றன. கண்கள் குளமாகின.


ஆனால் இந்தியாவை ஆளும் அதிகார வர்க்கத்துக்கோ தேசிய காங்கிரசின் தலைமைப் பீடத்துக்கோ.. அந்த நேயம் மருந்துக்கும் இல்லாமற் போனது ஏன்?


உலக நாடுகள் முன்பும் தலைக் குனிவு உள் நாட்டிலும் தலைக் குனிவா?
இது தேவைதானா? ஒன்பதாண்டுகள் மத்திய கூட்டணி ஆட்சியிலே அறிவு நாணயத்தோடு நடந்து கொண்ட திமுகவை இழந்து விட்டார்களே..


இரண்டு முறை மத்தியில் ஆட்சிப் பீடம் ஏறியதற்குக் காரணமாக இருந்தது தமிழ்நாடு அல்லவா - திமுக அல்லவா!


கைப் பொருளை இழந்து விட்டனர்! விதை நெல்லை இழந்து விட்டனரே!

1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பறி கொடுத்த காங்கிரஸ் தோல்விக்குப் பொன் விழா கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதே!


காங்கிரசை கிட்டே சேர்க்க இங்கு யார் இருக்கிறார்கள்?


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வது என்பதை ஒரு முடிவாக எடுத்துக் கொண்டு விட்டனர் என்பதுதான் உண்மை.


அய்ரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி, இலங்கை அதிபர் மீது  விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு - வாழ்வுரிமைக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம் (26.5.2009).


அந்த மனித நேய தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்த மகத்தான இழிநிலை மகுடத்தைச் சூட்டிக் கொண்டதும் இதே இந்தியாதான்; இந்தியாவின் பிரதிநிதியான கோபிநாத் அச்சங்குளங்கரே  பவள வாய் திறந்து பகன்றது என்ன தெரியுமா?


இந்தக் கூட்டமே அவசியமற்றது -_ உலகில் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்த தற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, தண்டிக்க, - கண்டிக்க முயற்சி எடுக்கக் கூடாது என்று பேசவில்லையா?


எந்தப் பிரதமர் இந்திராகாந்தி இலங்கை அரசில் ஈவு இரக்கமற்ற நடடிக்கைகளை இனப்படுகொலை என்று வருணித்தாரோ - அந்தக் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலை யில் இப்படியொரு காட்டிக் கொடுத்துப் பேசும் கீழ் நிலையா? இலங்கை என்றாலே விபீஷணர்களுக்கு இடம் இல்லாமல் போகுமா, என்ன?

இந்திரா காந்தியை விட்டுத் தள்ளுங்கள் - அவர் மறைவிற்குப் பிறகு திடீர் பிரவேசம் செய்து பிரதமர் நாற் காலியையும் அலங்கரித்தவர் ராஜீவ்காந்தி அவர்கள் தானே!


அவரும்கூட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களை அம்பேத்கர் நூற்றாண்டு விழா பற்றிய கூட்டத்தில் கலந்துகொள்ள புதுடில்லி சென்றபோது (2.6.1990) ராஜீவ்காந்தி அவர்கள் திராவிடர் கழகத் தலைவரை தனிமையில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி விவாதித்த போது இலங்கையில் நடப்பது இனப் படுகொலைதான்! என்று கூறிய துண்டே!

அவர் காலத்தில் _ ராஜீவ் ஜெயவர்த் தனே ஒப்பந்தம் முக்கியமான (29.7.1987)  ஒன்று தானே?


வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டதே - இதுவரை நடந்திருக்கிறதா? இது குறித்துஒரே ஒரு வினா இந்தியத் தரப்பில் எழுப்பப் பட்டதுண்டா?


அந்த ஒப்பந்தத்திற்கு ஏற்பட்ட கதி என்ன தெரியுமா? ஜெ.வி.பி என்ற இனவெறியில் புழுத்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்திலே வழக்கொன்றைத் தொடுத்து, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்படக் கூடாது என்ற தீர்ப்பையும் பெற்றுக் கொண் டனர் (எல்லாம் ராஜபக்சே ஏற்பாடுதான்)


தமக்கு ஒத்துவரவில்லை என்றவுடன் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஷிராணி பண்டார நாயகாவை தூக்கி எறிந்துவிட்டாரே இலங்கை அதிபர்.

எந்த உறுதி மொழியையும் நிறை வேற்றாத இலங்கை அதிபரிடம் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று வீணையின் நரம்பினை மெல்ல மீட்டுவது போல கெஞ்சுவது - கொஞ்சுவது யாரை ஏமாற்ற? பன்றிகள் முன் முத்துக்களை வாரி இறைத்து என்ன பயன்?


அய்.நா. சார்பில் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய வல்லுநர் குழு கொடுத்த அறிக்கையையே (13.4.2011) ஒரு வரியில் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று எத்திவிடவில்லையா?


இவ்வளவுக்கும் பிறகும் போர்க் குற்றவாளி என்று ராஜபக்சே அறிவிக்கப் படாவிட்டால் அய்.நா. இருந்து என்ன பயன்?

உலகில் பல நாடுகளிலும் ஆட்சிகள் இருந்துதான் என்ன பயன்?


ராஜபக்சே தண்டிக்கப்படா விட்டால் உலகில் எந்த அநீதியையும் அக்கிரமத் தையும் கொடுமையையும், வன்முறை யையும் யாரும் தட்டிக் கேட்க முடியாது என்பது கல்லில் வடிக்கப்பட்ட எழுத்து.


எதிர்க்கட்சிகள் மட்டும் என்ன வாழ்கிறது? 

ஈழத் தமிழர் பிரச்சினயில் ஏதோ காங்கிரஸ் மட்டும்தான் துரோகம் செய்கிறது என்று நினைக்கக் கூடாது!


இங்கு தேசிய கட்சிகள் தான் என்ன வாழ்கிறது? கடந்த 20ஆம் தேதி இரவு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்களவைத் தலைவர் மீராகுமார் கூட்டினார்.


காங்கிரஸ் பி.ஜே.பி. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ,சமாஜ் வாடி, அய்க்கிய ஜனதா தளம், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து கருத்துக் கேட்கப்பட்டது.


தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வைத் தவிர்த்து மற்ற அத்தனைக் கட்சிகளும் ஒருமுகமாக அது கூடாது. தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என்று சொன்னார்களே!


முன்னுதாரம் எதற்கும் தேவையா? அந்த முன் உதாரணத்தை இப்பொழுது ஏன் நாம் துவக்கி வைக்கக் கூடாது? இது என்ன புது மூடநம்பிக்கை?


மார்ச்சு 7ஆம் தேதி மக்களவையில்  பிஜேபியைச் சேர்ந்த யஷ்வந்த சின்கா என்ன முழக்கம் முழங்கினார்?


அதே கட்சியைச் சேர்ந்த மக்களவையில் அதி காரப் பூர்வ எதிர்க்கட்சித் தலைவரான சுஸ்மா ஸ்வராஜ் மீராகுமார் கூட்டிய

கூட்டத்தில் அந்தர் பல்டி அடித்து விட்டாரே!


அப்சல்குரு இந்தியாவில் தூக்கிலிடப்பட்டது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் போட்டதைக் குறை கூறிவிட்டு நாம் இங்கே இலங்கைப் பிரச்சினைக்காக தீர்மானம் போடுவது சரியா என்று கேட்டுள்ளார்.

அதையேதான் நாம் திருப்பிக் கேட்கிறோம்; தன் நாட்டுப் பிரச்சினைக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கூட்டித் தீர்மானம் போடும்போது இந்தியா ஏன் அதனைக் கையாளக் கூடாது?


நாடாளுமன்றம் என்பது எதற்கு இருக்கிறது? இது போன்ற பிரச்சினைகளில் அழுத்தமாகக் கருத்தைப் பதிவு செய்வதற்குத்தானே; சட்ட ரீதியாக அதற்குத் தடை ஏதும் இல்லையே!

இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? இது அரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான பிரச் சினை என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

அப்படி என்றால் இந்தப் பிரச்சினை நாடாளு மன்றத்தில் வந்த போது இந்தக் கருத்தை பிஜேபி சொல்லியிருக்க வேண்டியதுதானே!


அங்கு மட்டும் நீட்டி முழங்கி விட்டு ஒரு முக்கியமான கட்டத்தில் ஓர் இனத்தையே படுகொலை செய்த மாபெரும் மனித உரிமைப் பிரச்சினையில் இவ்வளவு கேவலமாக பொறுப்பற்ற தன்மையில் கருத்தைச் சொல்லும் இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன ஆகப் போகிறதாம்?


பிஜேபி தான் இப்படி சொல்லித் தொலைத்தது;- அது ஒரு பிற்போக்கு மதவாதக் கட்சி, விட்டுத் தொலையுங்கள்.


இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய முக்கிய தலைவரான குருதாஸ் குப்தா பிஜேபியை ஒட்டி அதே கருத்தை திருவாய் மலர்ந்து சொல்லியிருக்கும் வெட்கக் கேட்டை எங்கே போய் சொல்லுவது? எதில் போய்தான் முட்டிக் கொள்வது?


அரசுக்கும் - திமுகவுக்கும் உள்ள பிரச்சினை என்று ஒரு வரியில் தன் கடமையை முடித்துக் கொண்டு விட்டார். இந்த இடதுசாரி!


ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இந்திய அரசுக்கும் திமுகவுக்கும் உள்ள பிரச்சினைதானா?


தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகளின் நிலைப் பாடு இதுதானா?

குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இதற்கு விளக்கம் அளிக்கக் கடமைபட்டுள்ளது.


தோழர் தா. பாண்டியன் அடேயப்பா எப்படியெல்லாம் குதி குதிக்கிறார் இங்கே.

ஜெனிவா தீர்மானம் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் இலங்கை ஒன்றும் செய்ய முடியாது என்கிற அளவுக்கு இதில் மிகப் பெரிய கருத்துகளை வைத்துக் கொண்டுள்ளார் தோழர் தா. பாண்டியன்.


ஈழத்திலே பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொடுங்கோலன் ராஜபக்கேவால் படுகொலை செய்யப் பட்ட பிரச்சினை என்பது திமுகவுக்கும், இந்திய அரசுக்கும் இடையே உள்ள பிரச்சினைதானா?


(தி.மு.க.வை எவ்வளவுக் கொச்சைப்படுத்தினாலும் இன்னொரு வகையில் இந்தப் பிரச்சினை என்பது திமுகவுக்கு மட்டுமே உரியது என்கிற கருத்தின் மூலம் திமுகவுக்குரிய முக்கியத்துவத்தை அவர்கள் அறியாமலேயே ஒத்துக் கொண்டு விட்டனர் என்று கருதலாமா?)


உலக அளவில் இருக்கும் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும் சரி, ஈழத் தமிழர் பிரச் சினையில் காங்கிரசைவிட இந்திய அரசைவிட எந்த வகையிலும் மேல் என்று சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

திமுகவை விட்டால் டெசோவை விட்டால் வேறு நாதியில்லை- -தமிழர்களே புரிந்து கொள்வீர்!
 ------------------------------ கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள்  23-3-2013 "விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை