Search This Blog
9.11.12
இரண்டில்லொன்று வேண்டும் - பெரியார்
ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும். அவையாவன.
1. “கை” பலம் (பலாத்காரம்)
2. “புத்தி” பலம் (சூக்ஷி அல்லது தந்திரம்)
மொகலாயர் கை பலத்தில் ஆண்டார்கள். வெள்ளையர் புத்தி பலத்தில் ஆண்டார்கள்.
இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை. ஆதியில் ஆங்காங்குள்ள கொள்ளைக் கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லரை சில்லரையாய் ஆண்டிருப்பார்கள்.
ஆனால், ஆரியர்களுடைய சூக்ஷியானது மக்களைப் பிரித்து வைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார்களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை.
திரு.காந்திக்கு பலமும் இல்லை, புத்தியும் இல்லை. ஆனால் ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூக்ஷியை திரு.காந்தி மூலமாய் வெளியாக்குவதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றி கிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்கக் கூடியதாகும். மற்றும் ஆரியருக்கு சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளுவார்கள்.
ஆகவே, இந்தியப் பொது மக்களுக்கு வெற்றி அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும். ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும். ஜாதி வகுப்புபிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.
பலம் இல்லாமல் சூக்ஷியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும். கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம் என்னும் பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும்.
இரண்டும் இல்லாமல் காரிய சித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமூகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.
------------------------ சித்திரபுத்திரன்என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய கட்டுரை-” குடி அரசு ”- கட்டுரை - 25.10.1931
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஈரோட்டுப் பாதையில் ராம்ஜெத்மலானி!
- கி.வீரமணி -
புதுடில்லியில் நேற்று ஆண் - பெண் உறவுகள் பற்றிய நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பிரபல வழக்குரைஞரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரு மான ராம்ஜெத்மலானி அவர்கள் ராமன் ஒரு மோசமான கணவன் என்ற உண்மையைக் கூறி, இராமனை புருஷ உத்தமனாகக் காட் டும் பொய்மையை மறுத்துள்ளார். (ராம் ஜெத் மலானி மாநிலங்கள் அவை உறுப்பினரும் ஆவார்!)
ராமன் ஒரு மோசமான கணவன். எனக்கு அவனைப் பிடிப்பதே இல்லை. யாரோ சில மீனவர்கள் கூறினார்கள் என்பதற்காக பரிதாபத்திற்குரிய சீதையை வீட்டை விட்டு வெளியேற்றி, காட்டுக்கனுப்பினான் அவன்.
அது மட்டுமா? லட்சுமணன் அவனைவிட மோசமானவன். சீதையைக் கடத்திக் கொண்டு போன நிலையில், அவளைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படி இராமன் லட்சுமணனிடம் கூறிய போது, லட்சுமணன் இராமனிடம் மறுமொழி யாக என்னால் அது இயலாது, காரணம் அவள் என் அண்ணி. அவள் முகத்தையே நான் பார்த்ததே இல்லை; எனவே அவளை என்னால் அடையாளம் காணவே முடியாது என்று கூறியதாக இராமாயணத்தில் உள் ளதைக் கூறினார் ராம்ஜெத்மலானி!
அது மட்டுமல்ல; நம் நாடு மிகவும் சிக்கலான கட்டத்தில் உள்ளது. மதம் முழு மையாக மாறிவிட்டது! மதம் பயங்கர வாதத்தைத்தான் உருவாக்கியுள்ளது. கொலை செய்யும்படி, தலையைக் கொணரவும் கட் டளை இடும் அளவுக்கு மதம் பிடித்துள்ளது!
- இவ்வாறு உண்மைகளைத் தோலுரித் துக் காட்டியுள்ளார் ராம்ஜெத்மலானி.
தந்தை பெரியார் அவர்களும், சுய மரி யாதை இயக்கமும் இதனை சுமார் 80 ஆண்டு களுக்குமுன்பே சொல்லி- மக்களைப் பக்கு வப்படுத்தியதால்தான் இன்றும் தமிழ்நாட்டில் இராமனைக் காட்டி அரசியல் வட நாட்டைப் போல நடத்த எந்த அரசியல் கட்சியாலும் முடியவில்லை.
இராமன் மோசமான கணவன் மட்டுமா? இல்லை இல்லை, அதைவிட அவன் ஒரு மோசமான மனிதனும் கூட!
1. சிறுவயதிலேயே தாடகையைக் கூனி யைக் கல்லெடுத்து அடித்தவன்.
2. இராவணனின் தங்கை சூர்ப்பனகையை மானபங்கப்படுத்துவதாகக் கூறி, மூக்கை யும், முலையையும் அறுத்த மனிதாபி மானமற்றவன்.
3. சீதையைத் தீக்குளித்து வரச் சொல்லி, (கடவுள் அவதாரமாயினும்) மனைவியின் கற்பு பற்றிச் சந்தேகப்பட்ட கொடுமைக்கார கயவன்.
4. நிறைமாத கர்ப்பிணியான சீதையை காட்டிற்கு அனுப்பியவன்.
இராம இராஜ்யம் எப்படி? ஆளும்போது பார்ப்பனச் சிறுவன் ஒருவன் இறந்ததற்கு வர்ணதர்மம் கெட்டுப் போனதே காரணம். சூத்திர சம்பூகன் தவம் செய்தான். கட வுளை நேரே காணும் உரிமை சூத்திரனுக் குக் கிடையாது. எனவே தரும விரோதம் அது. தவமிருந்த சம்பூகனை எவ்வித விசா ரணையும் இன்றி நேரே புறப்பட்டுச் சென்று கண்டந் துண்டமாக தனது வாளால் வெட் டிய அரசநீதி கொன்ற அயோக்கியன்.
5. பல வகையான மதுவகைகளைக் குடித்த குடிகாரன்.
6. வாலியை மரத்திற்குப் பின்னால் மறைந் திருந்து கொன்ற கோழை - பேடி!
இவ்வளவும் செய்த இராமர் இந்தியன் பீனல்கோட்படி பல்வேறு கிரிமினல் குற்ற செக்ஷன்கள்படி, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவன்.
இராமாயணம் நடந்த கதையாக இல்லா விட்டாலும், தெய்வீக புருஷனாகச் சித்திரிக் கப்பட்டு இன்று அயோத்தியில் கோயில் கட்ட வற்புறுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன சனாதன ஹிந்து அமைப்புகள் கூறுகிறதே - அந்த பாத்திரத்தின் தன்மை - இதிகாசப் படியே - எப்படி உள்ளது என்பதைத்தான் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கத்த வரும் கூறி வந்தனர்; வருகின்றன.
இப்போது ராம்ஜெத்மலானிகளே கூறும் அளவுக்கு பொய்த்திரை விலக்கப்பட்டு, இராமன் சாயம் வெளுக்கிறது!
இராம பக்தர்களே, இனியாவது திருந்துங் கள்! இராமாயணத் திற்குப் பதில் திருக்குறள் படியுங்கள்.
திருக்குறளைப் பரப்புங்கள்! 9-11-12
பலன்கள் பலிப்பது ஏன்?
ஜோதிடர்கள் நமது ஜாதகத்தை பரிசீலித்து வாக்குக் கூறும் போதும், வாரபலன், தினபலன் படிக்கும் போதும் அவர்கள் கூறுவது சரியாக வே உள்ளது போன்று நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்கள் கூட சில சமயம் இவ்வாறு மனச் சஞ்சலம் அடைவ துண்டு. பலன்கள் பலிப்பது போன்று தோன்றுவது ஏன்?
எடுத்துக்காட்டாக தினமணி மே 11, 2001இல் காலம் உங்கள் கையில் பகுதியில் வெளியான ஒரு ஜாதகப் பலன் குறிப்பைப் பார்க்கலாம்.
கனகாம்பாள், ஈரோடு.
கேள்வி: நான் பல கடிதங்கள் எழுதியும் தங்களுக்கு ஏன் பதில் கூற மனம் வரவில்லை? என் மகனின் ஜாத கத்தில் தோஷம் இருக்கிறதா? எனக்கு 60 வயதாகிறது. என் மகனுக்கு எப்போது விவாகம் நடைபெறும்?
என்ற கேள்விக்கு ஜோதிட ஆராய்ச்சி மய்யத்தினை சார்ந்த ஏ.எம்.ராஜகோபாலன் பதில் அளித்துள்ளார். அவர் என்ன பதில் கொடுத்துள்ளார் என்று பார்க்கும் முன் பதில் எத்தன்மையுடையதாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்?
உங்கள் மகனுக்கு ஜாதகத்தில் இந்த தோஷம். ஆகவே கல்யாணம் - ஆண்டுகள் கடந்து நடக்கும். அல்லது, உங்கள் மகன் ஜாதகம் சரிதான், ஆகவே - தேதி என்று திருமணம் நடக்கும் என குறிப்பான, தெளிவான பதில் நமது எதிர்பார்ப்பு. ஆனால் ஜோதிடரின் பதில் என்ன தெரியுமா?
பதில்: தங்கள் மகனின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்திற்கு எவ்வித தோஷமும் ஏற்படவில்லை. வரும் 13ஆம் தேதியிலிருந்து கிரக நிலைகள் சாதகமாக உள்ளதால் விவாக முயற்சிகளை மேற்கொள்ளவும். சுத்த ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும்.
என்ன பதிலின் தன்மையை உற்று கவனித்தீர்களா? எந்த தேதியில் திருமணம் நடக்கும், அல்லது எந்தக் கால இடைவெளியில் திருமணம் கை கூடும் என்பது குறித்த தகவலே இல்லை. முயற்சி மேற்கொள்ளவும் என்று உள்ளது. அத்தாயாரும் முயற்சி மேற்கொண்டு திருமணம் கை கூடினால் அது ஜாதகப் பலனா? அல்லது முயற்சியின் பலனா?
இதுபோன்றுதான் பல ஜாதகப் பலன்கள் வார பலன்கள் பொதுப்படை யானவை. குறிப்பாக கணிப்பு ஏதுமிருப்ப தில்லை. பொதுவான செய்திகள் பலிப்பது போன்று தோன்றுவது இயல்புதானே! இங்கு ஒரு செய்தியைக் கவனத்திற்குக் கொண்டு வரவும் விரும்புகிறேன். இல்லஸ்டிரேடட் வீக்லி என்ற இதழின் ஆசிரியராக குஷ்வந்த்சிங் இருந்த போது, தற்செயலாக வாரபலன் எழுதும் ஜோதிடரிடமிருந்து அவ்வார பலன் வரவில்லை.
அலுவலகத்தில் அனைவரும் கலக்கமுற்று எவ்வாறு இதழைப் பதிப்பிக்கப் போகிறோம் என்று அச்சமுற்றிருந்தனர். குஷ்வந்த்சிங் ஒரு யோசனை செய்தார். கடந்த இதழ்களில் வெளியான பலன்களை அங்கும் இங்கும் வெட்டி ஒட்டி அவரே ஒரு வாரபலன் தயார் செய்தார்.
ஜோதிடரிடமிருந்து வந்ததாகக் கூறி இதழில் பதிப்பித்தும் விட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த இதழின் வாசகர்கள் பலரும் அந்தவாரம் வெளியான வாரபலனே மிகவும் சிறப்பாக பொருந்தியதாக வாழ்த்தியதுதான்! இதற்குப் பிறகு வாரபலனுக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டதாக குஷ்வந்த் சிங் ஒரு நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
(நூல்:- நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்? - த.வி.வெங்கடேஸ்வரன்.
இலட்சார்ச்சனை
நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வர ஒட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, சிறீரங்கசேத்திரத்தில் சிறீரங்கநாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது.
அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகித கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தை போக்க இதுவா வழி?
இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே இலட்ச்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவின் கல்லறை மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது! இந்தப் பிரிட்டிஷ் வல்லரசை இன்று ஜப்பான் சில இடங்களிலே தோற்கடித்தது.
அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள்; பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழைமைகள்!
... பொன்னும், பொருளும், நேரமும், நினைப்பும் போருக்குச் செலவிட வேண்டிய இந்தப் பயங்கரமான வேளையிலே வெண்பொங்கலும், சித்ரான்னமும் உண்ண, ஒரு சாக்குக்காக இலட்சார்ச்சனை செய்யுங்கள், ரங்கநாதர் இரட்சிப்பார் என்று புரோகிதக் கூட்டம் கூறி மக்களின் பணத்தையும், நேரத்தையும் பாழாக்குகிறதே, இதை என்னென்பது?
- அறிஞர் அண்ணா, திராவிட நாடு இதழ் - (5.3.1942)
ஜோதிடமும் - அறிவியலும்!
சஞ்சலமான மனதின் வெளிப்பாடாகவே ஜோதிடம் போன்ற புனைவுகளும் பொதுவாக அமைவதைக் காணலாம். ஆகவே, இத்தகைய கருத்துக்கள் நமது மனதில் இடம் பிடிக்கத் துவங்கியதும் உடனடியாக தாமதியாது ஒரு மருத்துவரின் உதவியை நாடுவதோடு நல்ல உணவும் ஓய்வும் அவசியம்
- விவேகானந்தர்
அதோ பாரப்பா! தினமலராவது திருந்துவதாவது!!
சிறீரங்கத்தில் பிராமணாள் உணவு விடுதி - அதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் நடவடிக்கை குறித்து தினமலர் (1.11.2012) நம்மை ஆதரித்து வந்த கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.
ஆச்சரியம்; ஆனால் உண்மை! என்று விடுதலையும் அந்தக் கடிதத்தை வெளியிட்டு இருந்தது.
அதுதானே பார்த்தோம் - தினமலருக்காவது நல்ல புத்தி வருவதாவது!
நேற்றைய தினமலரில் (9.11.2012) அதற்கு நேர்மாறாக - ஏடா கூடமாக ஒரு கடிதத்தை வெளியிட்டது.
நாட்டில் என்ன என்னவோ நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஜாதியைப்பற்றி பேசுகிற வீரமணிபற்றி என்ன சொல்வது.
நாட்டுப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் எழுதுவது இல்லையாம் - தினமலர் ரொம்பவும்தான் கவலைப்படுகிறது.
தினமலரின் இன்றைய கடிதத்துக்கு முதல் தேதி தினமலர் கடிதமே பதில் - போதுமானது!
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, ஏற்கெனவே ஓட்டல் நடத்திவந்த பார்ப்பான் திடீரென்று பிராமணாளைப் புகுத்துவானேன்? ஏன் இந்த விஷம வேலை என்று தினமலர் எழுதவேண்டாமா?
சரி, திராவிடர் கழகத் தலைவர் வேறு பிரச்சினைகள்பற்றி எழுதுவது, பேசுவது கிடையாதா?
இந்த ஒரு வாரத்திலேயே எத்தனை எத்தனையோ அறிக்கைகள், கருத்துகள்!
மருத்துவக் கல்லூரி மாணவர் பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினை, மத்திய அரசு மின்சாரம் அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்குத் தொடுத்த பிரச்சினை, கீழத்தஞ்சை மாவட்டத்தில் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு ஈட்டுத் தொகை அளிக்கவேண்டும் என்ற அறிக்கை என்று எத்தனை எத்தனையோ நாட்டுப் பிரச்சினைகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாரே - இவற்றில் ஒரே ஒரு வரியையாவது தினமலர் திரிநூல் வெளியிட்டதுண்டா?
நிழற்படங்களை வெளியிடும்போதுகூட அதில் திராவிடர் கழகத் தலைவர் படம் இருந்தால், அதனை அப்படியே கத்தரித்துவிட்டு செய்தி வெளியிடும் அக்கிரகார தினமலர்கள் திராவிடர் கழகத் தலைவர்பற்றி எழுதுவதுதான் விஷமம் கலந்த வேடிக்கையாகும்!
காலைக்கதிரிலும், தினமலரிலும் வெளிவரும் (இது உங்கள் இடம்) ஒரே கடிதத்தை பெயர் மாற்றி வெளியிடும் பித்தலாட்ட ஏடுகள் பேனா பிடிக்கலாமா?10-11-2012
சாதீ,இன பாகுபாடு நீங்க.? ஒரே வழி ...
-தந்தை பெரியார்
இங்கு சொடுக்கி படிக்கவும்
http://unnmaygal.blogspot.com/2012/09/blog-post_26.html?m=0
Post a Comment