Search This Blog

15.11.12

நான் சுகவாசி அல்ல! - பெரியார்


இரயில் பிரயாணம் செய்யும் பொழுது மூன்றாம் வகுப்பில் தான் செல்வேன். அப்படி யாராவது வலுக் கட்டாயம் செய்து முதலாவது, இரண்டாவது வகுப்பு வண்டிகளில் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார் களானால் நான் அவர்களிடம் சரி என்று சொல்லிவிட்டு, முதலாவது அல்லது இரண்டாவது வகுப்புக்கு உள்ள பிரயாணச் சீட்டின் கட் டணத்தை வாங்கிக் கொள்வேன்.
ஆனால் பிரயாணச்சீட்டு வாங்கும் பொழுது மூன்றாவது வகுப்புக்கு வாங்கிக் கொண்டு, மீதி உண்டாகும் தொகையை பத்திரமாக முடிப்போட்டு வைத்துக் கொள்வேன்.
ஏனெனில், அவசியமற்ற காரியத்துக்காக பணத்தை வீண் விரய மாக்குவது என்பது எனக்கு வெறுப்பானதும், பிடித்தமில்லாததுமானதாகும். காசு கையில் சிக்கிக் கொண்டது என்பதற்காக தேவையற்றதை அனுபவிக்க ஆசைப்படுவதா? இப்போதைய புதுப்பணக்காரர் பலர் இப்படித்தான் செய்து பணத்தைப் பாழாக்குகிறார்கள்.
நான் காங்கிரசுத் தலைவனாக இருக்கும் போதும் 3ஆம் வகுப்பிலும், கட்டை வண்டியிலும்தான் செல்வேன். சுயமரியாதை இயக்கத் தலைவனாக இருந்தபோதும், கண்ணப்பர் செகண்ட் கிளாசில் வருவார்; நான் கூடவே தேர்ட் கிளாசில் போவேன். ஆச்சாரியார் திரு.வி.க., டாக்டர் நாயுடு செகண்ட் கிளாசில் வருவார்கள்.
நான் தேர்ட் கிளாசில்தான் போவேன். சாதாரணமாக நான் ஈசிச்சேரில் உட்காருவது கிடையாது. எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும், சோபாக்களும் இருக்கிறதென்றாலும்,  ஈசிச் சேர் (சாய்வு நாற்காலி) கிடையாது; இருந்தாலும் அதை உபயோகிப்பதில்லை. ஏனெனில், நான் முதலாவதாக உட்காரும் பொழுது சாய்ந்து கொண்டு கால் கைகளை நீட்டிக் கொண்டு உட்காருவதுமில்லை.
இவையெல்லாம் சுகவாசிகள் அனுப விக்க வேண்டியவை. அப்படி சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புகிறவன் அல்ல. மேலும், சீட்டில் உட்காரும் போது முழு சீட்டில்கூட இல்லாமல் பாதி அளவு மட்டும் சீட்டில் முன் தள்ளி உட்காருவேன். மேலும் என்னுடைய வாழ் நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்ற போதிலும், பிரயாண காலத்தில் அனேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக் கொண்டேதான் செல்வேன்.
ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்குமும் படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதோதோ கூறி தப்பித்துக் கொள்ள பார்த்துவிட்டு கடைசியல் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால், அதிகம் தூங்கமாட்டேன். இப்படிப்பட்ட ரகளையின் காரணமாகக்கூட, நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் வரை ஒருவருக்கொருவர் பேசாமல் கூட வருத்தமாக இருப்போம்.
எனக்கு சுகம் பிடிக்காது!
இப்படி, எனக்கு தூங்குகின்ற பழக்கம்கூட வெறுப்பாகிவிட்டது. தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதாகவேயில்லை. அப்படி சுகம் என்கிற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவித கஷ்டமும் இன்றியும் இருக்கிறது. அப்படி இருக்கும் எனக்கு திடீரென்று சுகம் பிறந்து விட்டால் அதை அனுபவிக்க வெட்கமாகத் தானே இருக்கும்!
                      -----------------------------21.12.1955 அன்று சென்னையில் தந்தை பெரியாருக்கு புதிய வேன் வழங்கப்பட்ட பொழுது தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து

2 comments:

தமிழ் ஓவியா said...


அசல் நாத்திகம்!


தமிழ்நாடு இந்து சமய அற நிலையத் துறை திடீரென்று நாத்திகக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியது ஆச்சரியமானது - ஆனா லும் அது உண்மைதான்.

கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியார் அவர் களின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டது வியப்பை அளிக்கிறது.

சக்தியுள்ள சாமிக்குச் சாவியும் - பூட்டும் ஏன் என்று சுவர் எழுத்தாளர் சுப்பையா அன்று எழுதி னார்.

இந்தக் கருத்தையும் இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.

நமது தமிழக முதல் அமைச்சர் திடீரென்று சென்று தரிசிக்கக் கூடிய ஒன்று உண்டென்றால் அது சென்னையை அடுத்த - திருவொற்றியூரில் உள்ள வடிவுடைஅம்மன் கோயில் தான்.

ஓகோ, அவ்வளவு சக்தியுள்ள (ஆ) சாமியோ - இருந்துவிட்டுப் போகட்டும் - அதனாலென்ன?

சரி, என்ன வந்தது அந்தக் கோயிலுக்கு? ஒன்றும் இல்லை - கோலி விளையாட்டுப் பையன்கள் தீபாவளியன்று வெடித்த பட்டாசு ஒன்று ராஜகோபுரத் தின்மீது போடப்பட்டு இருந்த கீற்றுக் கொட்டகை யின்மீது விழுந்து தீப் பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது போலும்!

என்ன சொல்கிறீர்கள்? சக்திக் கடவுளான வடி வுடை அம்மன் கோயிலிலா இந்தச் சமாச்சாரம்!

வெடித்தது பட்டாசு. கடவுள் சக்தியோ புஸ் வாணமாகி விட்டது! தீபாவளி நாளில் மிகவும் பொருத்தம்தான் - பேஷ்! பேஷ்!!

வடிவுடை அம்மனுக்கு என்ன வந்தது? அதுதான் அடித்து வைத்த சிலை யாயிற்றே! சீறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயில் பற்றி எரிந்தபோது கடவுள் ரெங் கநாதன் சிலையும் வெடித் துச் சிதறவில்லையா?

முதல் அமைச்சர் பிரத்தியேகமாகக் கும்பிடும் சாமி ஆயிற்றே! அதிகாரி களால் சும்மா இருக்க முடியுமா?

உத்தரவு பறந்தது. இனிமேல் இது போன்ற கீற்றுக் கொட்டகைகளைக் கோயில்களில் போடக் கூடாது. தீப்பிடிக்காத ஆஸ் பெஸ்டாஸ் பொருள்களைத் தான் பயன்படுத்த வேண் டும் என்பது இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளின் உத்தரவு சுற்றறிக்கை.

அது மட்டுமல்ல; கோயில் அதனைச் சுற்றி யுள்ள இடங்களில் அக்னி பகவானுக்கும் தடையாம். தீப்பெட்டி, பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற பொருட் களைப் பக்தர்கள் எடுத்து வரவும் தடையாம்.

மின் கசிவு ஏற்பட்டு பகவானுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்ப தற்காக மின் இணைப்பு களை உடனே சரி பார்க் கவும் உத்தரவாம்!

வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னாரே நினைவு இருக்கிறதா? சாமி கும்பிடுவது என்பது பிள்ளை விளையாட்டே என்றாரே! அதனை இந்த இடத்தில் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டால், அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம் என்பது!

- மயிலாடன்17-11-2012

தமிழ் ஓவியா said...


நவம்பர் 25 அழைக்கிறது!


திராவிடப் பெருங்குடி மக்களே! வரும் 25ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் ஒரு புரட்சி விழா!

எத்தனையோ புரட்சி அத்தியாயங்களை நம் மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்த திராவிடர் கழகம் இப்பொழுது அதன் திசையிலே என்றென்றும் ஒளி உமிழும் ஓர் செயல்பாட்டுக்கு உங்களை அழைக் கிறது.

ஜாதி என்பது நமக்கு உரியதன்று. அது இடையில் வந்த ஒரு கூட்டத்தால் திணிககப்பட்ட தீய நஞ்சு.

திராவிடர் இனத்தின் ஒற்றுமையை உருக் குலைத்த எலும்புருக்கி நோய்! நாம் ஓர் இனம் என்ற உணர்வை ஒழித்துக் கட்டிய திட்டமிட்ட ஏற்பாடு அது.

பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் இந்த வருணாசிரம ஏற்பாட்டை ஒழித்துக் கட்டினால் ஒழிய நம் இனத்துக்கு மீட்சியில்லை.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் வாழ் நாள் முழுவதும் பிரச்சாரம் செய்ததும், பாடுபட்டதும் ஜாதி ஒழிப்பு சமத்துவ சமுதாயம் ஒன்றைப் படைப்ப தற்காகத்தான்; ஜாதியின் பாதுகாப்புக் கோட்டை யாக இருந்துவரும் கடவுள் மதம், சாஸ்திரம், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டம் முதலியவற்றின் ஆணி வேருக்கே சென்று அறிவாயுத அணுக்குண்டைப் போட்டவர் அறிவுலக ஆசான் அய்யா.

நாட்டில் ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் - மத மறுப்புத் திருமணங்கள் நடக்கத் தொடங்கின. கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே வேரில் பழுத்த பலா என்று துணைவரை இழந்த பெண்களின் நிலையைக் கண்டு கவிதை வரியில் படம் படித்துக் காட்டினார் நமது இயக்கக் கவிஞர் பாரதிதாசன்.

துணைவரை இழந்தால் இன்னொரு துணை வியை தேடிக் கொண்டால் என்ன என்று துணிச்ச லாக வினா எழுப்பி மக்கள் மத்தியில் சிந்தனை அலைகளை எழுப்பி வந்திருக்கிறோம். அதன் விளைவு ஏராளமான திருமணங்கள் இந்தத் திசையில் நடந்து வருகின்றன.

சிவகாமி - சிதம்பரனார் ரெங்கம்மாள் - சிதம்பரம் என்று தொடங்கி நீண்ட பட்டியலே உண்டு.

மத மறுப்புத் திருமணங்களும் நடந்து வருகின்றன - நாமும் நடத்தியும் வைத்திருக்கிறோம்.

பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்த சுயமரியாதைத் திருமணங்கள் நாட்டில் நடக்கப் புதுமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியவர் புரட்சியின் சின்னமாம் தந்தை பெரியார்! சட்டப்படி அவை செல்லாது என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், சட்டமா? சுயமரியாதையா? என்று வெடித்தெழுந்த வினாவுக்கு சுயமரியாதையே என்று பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், புரோகித மறுப்புத் திருமணங்களை நடத்தித்தான் வந்தனர்.

அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டு தந்தை பெரியார் அவர் களுக்கு காணிக்கையாக்கப்பட்டது.

இப்பொழுது அடுத்த கட்ட அத்தியாயத்தை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் எழுதிட உள்ளது.

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் விதவையர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம், திருமண விடுதலை பெற்று மறு திருமணம் செய்து கொண்டோர்களுக்கு ஒரு பாதுகாப்பு என்று கூடச் சொல்லலாம். இந்த இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது இடர்ப் பாடுகள் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றிடவும், ஜாதி மறுப்பு - மத மறுப்பு திருமணங்கள், விதவையர் திருமணங்கள், மறு வாழ்வு திருமணங்கள் இவற்றை ஊக்கப்படுத்தவும் வரும் நவம்பர் 25ஆம் தேதி காலை முதல் மாலை வரை முழு நாள் என்று சொல்லும் அளவுக்கு மன்றல் 2012 நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் விதவைப் பெண்கள் திருமணங்கள் விவாக விடுதலைப் பெற்றோர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம் இவற்றை செய்து கொள்ள விரும்புவோர் அன்று பெரியார் திடலில் கூடலாம்.

முன்னதாகவே பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநருக்குத் தகவல்களைத் தெரிவிக்க லாம்.

ஜாதிக்குள் சுயம்வரங்கள் நாட்டில் நடப்பதுண்டு. இந்த வகையில் நாட்டில் நடைபெறுவது இதுதான் முதல் முறை.

மேலும் மேலும் தொடர்ந்திடவும் வாய்ப்பு இருக் கிறது. திராவிடர் கழகம்தானே எல்லா மறு மலர்ச்சிக்கும் முன்னோடி!

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்! வாகை மலர் சூட்டிக் கொள்வீர்!!

நவம்பர் 25 அழைக்கிறது! அழைக்கிறது!!17-11-2012