Search This Blog

3.11.12

தீபாவளிப் பண்டிகை: நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? -2
ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத் தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்தபுராணம், பெரியபுராணம், திரு விளையாடற்புராணம் முதலியவை பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லா வற்றையும் பொய்யென்று ஒப்புக் கொண்டாய் விட்டது. அப்படியிருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில், இந்தக் காலத்தில், இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வ தென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகா சூரன், கிருஷ்ணன். அவனது இரண் டாவது பெண்ஜாதியாகிய சத்திய பாமை ஆகியவைகளாகும் எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும், இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமுகக்காரர்களென்றும், கலைகளிலும் ஞானங்களிலும், நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிரசண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளை மாடு கன்று போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர் களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர் களுக்குள்ளும், பாமர மக்கள் என்பவர் களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய, காளைமாடு எப்படி கன்றுப் போடும் என்று கேட்கின்ற மக்களை காண்பது என்பது அரிதாகவே இருக்கின்றன, மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்திரங் களில் இருப்பவர்களைவிட, பட்டணங் களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தன மாகவும், பட்டணங்களில் இருப்பவர் களை விட சென்னை முதலான பிர தான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதைப் பார்க்கின்றோம்.  உதாரணமாக, தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு கிருத் திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும், மற்ற நகரங்களை விட சென்னையில் அதிகமாகவும் கொண் டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான் மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகிறோம் என்பதே தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களை பின்பற்றி நடக்கும் மோச மான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லையென்று சொல்லி விடலாம்.

ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங் களில் பாரத இராமாயணக் காலட்சே பங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் சகதா கலாட்சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌ ரவப்பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ் தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப் பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லா தார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு, தமிழர் வேறு என்பாரும், புராணங்களுக்கும், திராவிடர் களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனரல்லாத சமுகத்தாருக்கு நாங்கள் தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்களின் பழைய நாகரிகத் திற்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பாரும் பெரு வாரியாக இருப்பார்கள். ஆகவே, இதுபோன்ற படித்த கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்த மான காரியங்களை எதிர்பார்ப்பதை விட, உலக அறி வுடைய, சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரச்சாரம் செய்வதும் பயன் தரத்தக்க தாகும்.

உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிப்போர்ட்டில் மக்கள் ராமேஸ் வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத் திரைக்கு வருவதில்லையென்றும், அத னால் வரும்படி குறைந்து விட்டதென் றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட் டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத் திரைக்காரர்கள் மிகக் குறைந்துபோய், அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங் களைவிட பகுதி வரும்படிகூட எதிர் பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதனாலும், சங்க ராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களிலெல்லாம் முன் போல் வரவேற்பு ஆடரம்பரங்களும், வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிர மாக சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும், பிராமண மகாநாடுகளும், சமய பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டி களென்றும், தலைவர்களென்றும், பொது ஜனங்களின் தர்மகர்த்தாகளென்றும், படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுக்குள் அநேகமாக சிறிது உணர்ச்சி கூடக் காணாம லிருப்பதால் அவர்களைப் பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

எப்படியானாலும், இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மை யான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக் கவோ, கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன். அன்றியும், இத்தீபா வளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமாயிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின் கதைச் சுருக்கம்

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும், பூமிக்கும் பிறந்தவனாம்.  அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம்.
உடனே, திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூமிதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டா னாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டு மென்று வாக்களித்தாராம். அதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண் டாடும்படி கடவுள் செய்துவிட்டாராம். ஆதலால், நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத் திப் பார்ப்போம்.  முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா?
எல்லா உலகங்களையும் உண்டாக் கிய, நான்முகனைப் பெற்றவரும், உல கங்களையெல்லாம் காத்துவருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும், பூமிதேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும்? பூமிதேவி என்றால் உலகம் அல்லவா? அப்படித் தான் பிறந்த அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்ல வேண் டுமோ?
மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது அதன் தாயாகிய பூமிதேவியும் சத்தியபாமையாகப் பிறந்து உடனிருந்த தாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! பொறுமையில் பூமிதேவிபோல் என்ற உதாரணத்திற்கு கூட பண்டிதரும், பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமிதேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்க வேண்டுமென்று திரு மாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!

தமிழர்களாகிய நம்மையே அசுரர் களென்றும், ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவ -அசுரப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாக கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக் கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண்செலவு செய்வதென் றால், நமது சுயமரியாதையை என்னென் பது? நமது பகுத்தறிவை என்னவென்று சொல்லுவது?


சென்றது போக, இனிமேற் கொண் டாவது தீபாவளியை, அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை, நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிட நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள் கிறேன்.
 
(நிறைவு)
                      -----------------------தந்தைபெரியார் -”குடிஅரசு” - கட்டுரை - 01.11.1936

22 comments:

தமிழ் ஓவியா said...


மத்திய அமைச்சரவையின் மக்கள் நல முடிவு!


சமையல் எரிவாயு என்பது இன்றைய தினம் அன்றாட வாழ்வின் அவசியமான பொருளாகி விட்டது. நடுத்தரக் குடும்பங்களில் சமையல் எரிவாயு இடம் பெற்று, புழக்கத்தில் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

விறகு, விராட்டி என்பவை புதிய தலை முறையினர்க்குத் தெரியாத பொருள்கள் ஆகிவிட்டன.

ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிள்ளை களும் குறிப்பிட்ட நேரத்தில் கல்விக் கூடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை!

இதில் காலப் பங்கீடு என்பது மிகமிக அவசியமாகி விட்டது. அவசர கதியில் வாழ்க்கைப் பயணம் ஓடிக் கொண்டு இருக் கிறது. பழைய முறைப்படி எரி பொருள்களைப் பயன்படுத்தி சமைப்பது என்பது நடக்காத காரியம் ஆகும் - கால விரயமும் ஆகும்.

சமையல் எரிவாயு தான் இதனை நேர் செய்கிறது. காலப் பகிர்வில் இது முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. இந்தச் சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த பத்தாண்டுகளில் பத்து மடங்கு அதிகமாகி விட்டது. தவிர்க்கவே முடியாத பொருளாக சமையல் எரிவாயு அமைந்துவிட்டதால், விலை உயர்வு ஏற்பட்டாலும் அதனைத் தாங்கியே தீர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது.

பத்து மடங்கு விலை அதிகமாகும் அதே நேரத்தில் பத்து மடங்கு கூடுதலாக யாருக்கும் சம்பளம் கிடைத்து விடவில்லை. சம்பள உயர்வு அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள லாம் என்றாலும் 10 மடங்கு உயர்வு என்பதெல்லாம் கிடையாது. சமையல் எரிவாயு மட்டுமல்ல, மளிகைச் சாமான்கள், காய்கறிகள், மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, வீட்டு வாடகை உயர்வு என்று எல்லாம் இறக்கையைக் கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டன.

புதிய பொருளாதாரம் புதிய அத்தி யாயத்தைப் பூக்க வைக்கப் போகிறது என்று விளம்பரம் செய்யப்பட்டதற்கும், நடப்புக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை.

மக்கள் வெறுப்பு கொண்டு ஆளும் கட்சியை மாற்றினாலும்கூட மாற்றம் ஒன்றும் நிகழ்ந்து விடுவதில்லை.

பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். குறைந்தபட்சம் அத்தியாயவசியப் பொருள்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பாகும். இதில் மாநில அரசைவிட மத்திய அரசுக்குத்தான் பொறுப்பு அதிகம். ஆனால் யார் தலையில் விடியும் என்றால் மாநில அரசின் தலையில்தான் விடியும். மத்திய அரசுக்கு மக்கள் ஏது? மாநில அரசுக்குத்தானே மக்களிடம் நேரடித் தொடர்பு.

எனவே விலையேற்றம் என்றால் முதலில் கெட்ட பெயர் வாங்க வேண்டிய ஆட்சி மாநில ஆட்சியே!

நேற்றைய மத்திய அமைச்சரவையில் நல்லதோர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மானிய விலையுடன் ஆண்டு ஒன்றுக்கு 6 எரிவாயு உருளை என்பது ஒன்பதாக உயர்த்துவது என்ற முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ஏற்றமும் நிறுத்தப்பட்டது என்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தரக் கூடிய தாகும்.

இமாச்சலப் பிரதேச தேர்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பி.ஜே.பி. குற்றம் சுமத்தியுள்ளது. எந்த அரசுக்கு, அரசி யல் கட்சிக்குத் தேர்தல் நோக்கம், கண்ணோட் டம் இல்லை என்று சொல்ல முடியும்?

தேர்தலுக்கு முன்னதாக அளிக்கப்படும் நிதி நிலை அறிக்கையைப் பார்த்தாலே விளங்குமே. இதில் எந்தக் கட்சி விதி விலக்கு?

விரல் நீட்டி சொல்ல முடியுமா? எது எப்படி இருந்தாலும் பொது மக்கள் கண்ணோட்டத்தில் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கதே!3-11-2012

தமிழ் ஓவியா said...


மோடியின் தரமற்ற பேச்சு


கடந்த சில நாள்களாக, இந்திய ஜனநாயகத்தின் தரம் தாழ்ந்து கொண்டே போகிறது.

தந்தை பெரியார், காந்தியார், ஜவகர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், முகம்மது அலி ஜின்னா போன்றோர் போற்றிப் பாதுகாத்திட்ட நாகரிகம் அடியோடு மறைந்தே மறைந்து விட்டது. நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்து மறைந்தவர்கள் மேற்கண்ட தலைவர்கள்.

குஜராத் மாநிலத்தின் முதல்வராகக் கோலோச்சுபவர் நரேந்திர மோடி.

தன்னுடைய அடாவடிப் பேச்சினால், மக்களை மயக்கி வெற்றி பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்.

அண்மையில் பிரதமர் மாற்றி அமைத்த அமைச்சரவையில் சசிதரூர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவருடைய மனைவி சுநந்தா புஷ்கர் என்பவர்.

சுநந்தா புஷ்கரைப்பற்றி தரம் தாழ்ந்து பேசியுள்ளார் மோடி. அய்ம்பது கோடிக்குக் கிடைத்த மனைவி என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட பேச்சுகளில் அசிங்கமான பேச்சு இதுதுன்.

ஒரு மாநில முதலமைச்சராக இருப்பவர் தான் வகிக்கும் பதவியைப் பற்றி எண்ணிப் பார்க்காமல் மனம் போனபோக்கில் நாகரிகமற்றுப் பேசுவது அசிங்கமாக உள்ளது என பலர் முகஞ்சுளிக்கின்றனர்.

மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களைப் படுகொலை புரிந்தவர் என்ற குற்றச்சாட்டு அவர்மீது கடந்த பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த நிலைமையில் இந்தப் புதிய குற்றச்சாட்டு வேறு.

இந்த நிலையில் இவர் தேசியத் தலைவர் என்றாகி பிரதமராகப் போகிறாராம். அப்படி ஏதாவது நிகழ்ந்தால் அது இந்தியாவின் வெட்கக் கேடாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்த அழகில் பாரதீய ஜனதா கட்சி நாகரிகமான கட்சி என்று ஜம்பம் அடித்துக் கொள்வதைப் பற்றி நாம் என்ன சொல்வது.

- பாலா -3-11-2012

தமிழ் ஓவியா said...


உரிமையுண்டு

எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்து என்ற பெயரால் எதையும் எடுத்துச்சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது அயோக்கியத்தனம்.
(விடுதலை, 2.4.1950)

தமிழ் ஓவியா said...

ளபதி மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு பயணம் பயனுள்ளதுஇலங்கை அரசிடம் கண்டிப்புக் காட்டி ஈழத் தமிழர் வாழ்வுரிமை பெற்றிட

அய்.நா.வும், பன்னாடுகளும் முன்வர வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கைடெசோ மாநாட்டுத் தீர்மானங் களை, அய்.நா. துணைப் பொதுச் செயலாளரிடம் தளபதி மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு ஆகியோர்அளித்து விளக்கியிருப்பது - நல்ல பயன்களை விளைவிக்கக் கூடியதாகும்.

இலங்கை அரசிடம் அய்.நா. மற்றும் பன்னாடுகளும் கண்டிப்புக் காட்டி ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பெற ஆவன செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்க, சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற பன்னாட்டுப் பேராளர்களும் கலந்து கொண்ட டெசோ மாநாட்டின் தீர்மானங்களை, டெசோ செயற் குழுவினர் முடிவு செய்ததற்கேற்ப, அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுடைய இணைப்புக் கடிதத் துடன் 1.11.2012 அன்று, நியூயார்க்கில் அய்.நா. மாமன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் திரு. யான் லியாசன் அவர்களை நேரில் அய்.நா. தலைமையகத்தில் தி.மு.க.வின் பொருளாளரும் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவருமான மானமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க.வின் நாடாளு மன்றக் குழுத் தலைவரான மானமிகு டி.ஆர். பாலு அவர்களும் நேரில் சந்தித்து, அளித்து, விளக்கினார்கள்.

சுமார் 25 மணித்துளிகளுக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்பின், உரையாடல்மூலம் ஈழத்தில் போர் முடிந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இன்னமும் அத்தமிழர்களின் வாழ்வுரிமை உறுதி செய்யப்படாததோடு, இராணுவக் கண்காணிப்பில் தமிழர்கள் - வடகிழக்குப் பகுதியிலும் உள்ளார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் சூழ்நிலை இல்லை; தமிழர் பகுதிகள் திட்ட மிட்டே சிங்களர் வசம் ஒப்புவிக்கப்படுகிறது. எந்தத் தொழிலையும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையில் ஈழப் பகுதி வாழ் மக்கள் இன்னமும் வாழும் அவலம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்து, அய்.நா. போன்ற பொது மன்றம் மூலம்தான் இலங்கை அரசை வற்புறுத்தி அம்மக்களின் வாழ்வுரிமையை மீட்டுடெடுக்க முடியும் என்பதைக் கூறியுள்ளனர்.

பொறுமையாகவும், ஆர்வத்துடனும் கவலை யுடனும் கேட்டுக் கொண்ட துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் இப்பிரச்சினையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் ஒத்த கருத்துள்ளவர்களாகவே இருப்ப தற்காக மகிழ்ச்சி; பொதுச் செயலாளர் அவர்களும் இதை முறையாகத் தெரிவித்து வழிவகை காண முயலலாம் என்று கூறியுள்ளார்கள் என்பது மிகவும் நிம்மதியளிக்கக் கூடியது.


தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்டெடுப்பதற்கான விடியலுக்கான வெள்ளி முளைத்துள்ளது இதற்கான நம்பிக்கை இதன்மூலம் கிடைத்திருக்கிறது ஈழத் தமிழர் களுக்கு.

சாண்டி புயல், மழை, வெள்ளம் காரணமாக, அமெரிக்காவின் கிழக்குப் பகுதியே செயலற்று மின்சாரம்கூட இல்லாமல், போக்குவரத்துப் பாதைகள், சுரங்கப் பாதைகளில் எல்லாம் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மூடப்பட்ட நியூயார்க் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள அய்.நா. தலைமையகம் நவம்பர் ஒன்றாம் தேதிதான் மீண்டும் செயல்படத் துவங்கிய நிலையில், தடைக்கற்களையும் தாண்டி நமது தளபதி அவர்களும், நண்பர் டி.ஆர். பாலு அவர் களும் அய்.நா. துணைப் பொதுச் செய லாளரைச் சந்திக்கக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு கூட மிகவும் அசாதாரணச் சூழ்நிலையில்தான்! கடமையைச் செய்ய முன்வந்த அந்த அலுவல கத்தாரும், குறிப்பாக துணைப் பொதுச் செய லாளரும் தமிழ் கூறு நல் உலகத்தின் நன்றிக் கும், பாராட்டுக்கும் உரியவர்கள் ஆவார்கள்!

தமிழ் ஓவியா said...

நேற்று மாலை, நம்மிடம் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு, நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினார்கள்.

சென்னையில் 31ஆம் தேதி, புறப்பட்ட அவர்கள் 30 மணி நேரம் பயணம் செய்து பிறகு சந்தித்த தகவலைக் கேட்டதும் மிகவும் வியப்பாகவும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது!

டெசோ மாநாட்டின் விழுமிய பயன் துளிர்த் துக் கிளைக்கும்; ஈழத் தமிழரின் பறிக்கப்பட்ட வாழ்வுரிமை மெல்ல மெல்லத் திரும்பும் என்று நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிகிறது.

சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் உள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் இத்தீர்மானங்கள் முறையாக சென்றடைவதும் உறுதி.

நவம்பர் ஒன்றாம் தேதி அங்கே பல நாடுகளும் இலங்கை அரசின் மெத்தனப் போக்கு, தமிழர் விரோத நடவடிக்கைகள், மனித உரிமைகள் மீறல், தங்கள் காலடியில் போட்டு மிதித்துவரும் கொடுமைகள்பற்றி அலசப்பட்டுள்ளது; ஆம்னெஸ்டே இன்டர் நேஷனல் பிரதிநிதி இலங்கையின் ராஜபக்சே அரசு நம்பகத்தன்மை உடையதல்ல என்றே கூறியுள்ளார்.

இனி இந்திய அரசும் இதில்போதிய உறுதிகாட்ட வேண்டும். நம் அமைப்புகள் அத்துணையும் அதனை விடாது இந்திய அரசு காதுகளில் ஓதிக் கொண்டே இருந்து, வாக்கெடுப்பில் முன்பு செயல்பட வைத்தது போன்று செயல்பட வைக்க தவறக் கூடாது!

இன்றுள்ள சூழலில் ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமையை நியாய உணர்வும், மனிதாபி மானமும் கொண்டு பன்னாடுகளும், அய்.நா. போன்ற பொது மன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும், பாதுகாக்க உதவிட முடியும்.

அதற்கெல்லாம் மேலாக, தொப்புள் கொடி உறவுள்ள, தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்கு வங்கியை எதிர்பார்க்கும் இந்திய மத்திய அரசின் ஆளுங் கட்சி ஈழத் தமிழர் உரிமைப் பிரச்சினையில் உறுதி காட்டாவிட்டால், தங்களது எதிர்கால அரசியலைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாது.

எனவே மனிதநேயக் கண்ணோட்டத்திலும் சரி, தேர்தல் அரசியல் கண்ணோட்டத்திலும் சரி, இலங்கை அரசிடம் கண்டிப்பு காட்டி அரசின் தீர்வுக்கு வலியுறுத்தி, வெற்றி பெற முயற்சிக்க முன்வர வேண்டும் என்பது அவசரம் அவசியம்!


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

3.11.2012 சென்னை

தமிழ் ஓவியா said...


இது என்ன நீதியோ?


சிறீரங்கத்தில் திராவிடர் கழகம் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி மறுக்கிறது. உயர்நீதிமன்றம் சென்று ஆணை பெற்று வர வேண்டி யுள்ளது. அதே நேரத்தில் பார்ப்பனர்கள் சங்கம் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினால், கூட்டம் போட்டால் திராவிடர் கழகம் பொதுக் கூட்டம் நடத்தும் அதே நாளில் (நவம்பர் 4இல்) சிறீரங்கத்தில் முக்கியமான இடத்தில் (பழைய பேருந்து நிலையம்) காவல்துறை அனுமதி வழங்குகிறது.

இது என்ன மனுநீதி? ஏனிந்த இரட்டை அளவுகோல்?

தமிழ் ஓவியா said...


தோடி ராகம் இனிமையானது மோடி ராகம் மோசமானது- ஊசி மிளகாய் -

இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அநேகமாக முடிந்த நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற குஜராத் முதல் அமைச்சர் மோடி என்கிற இந்துத்வாவின் அருமருந்தன்ன வாரிசு திருவாய் மலர்ந்துள்ள கருத்துக்கள் அடடா! எவ்வளவு அரசியல் சிந்தனைகளின் அற்புதப் பெட்டகமாகக் காட்சியளிக்கிறது!

நாடும், ஏடும் அதைப்பற்றியே ஆய்வு செய்து கொண்டுள்ள நிலை!

புதிதாக இணையமைச்சரான சசிதரூர் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு மனைவியைப் பெற்றுள்ளாராம்! என்று திருவாசகங்களை உதிர்த்துள்ளார் இவர்!
தரந்தாழ்ந்த அரசியலுக்கு எவ்வளவு சொந்தரக்காரராக இருக்கிறார் மோடி பார்த்தீர்களா?

சசிதரூர் மனைவிக்கும், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?

அது மட்டுமல்ல; வீட்டுப் பெண்களை விமர்சித்து அரசியல் மேடைகளில் பேசுவதை விட ஒரு அநாகரிக அரசியல் வேறு உண்டா?

இந்த லட்சணத்தில் இந்த மோடி பிரதமராக வேறு வர வேண்டுமாம்! என்னே கொடுமை!

இதற்குப் பதில் சொல்ல முனைந்த சசி தரூர், என் மனைவி, விலை மதிப்பற்றவர்; மோடி காதலித்துப் பார்க்கத் தெரியாதவர் என்று கூறியுள்ளார். மோடிஒரு கட்டைப் பிரமச்சாரி -ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பிரம்மச்சரியம் ஒரு கூடுதல் தகுதி போலும்!

அது எப்படியோ இருக்கட்டும்!

அரசியல் மேடைகளில் இப்படி தனிப்பட்ட தாக்குதல், தரக் குறைவான விமர்சனங்கள் தேவையா? நியாயமா?

இந்தியத் தேர்தல் ஆணையம் இதனை வேடிக்கை பார்க்கலாமா? உடனே மோடிமீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டாமா?

மோடியைப் புரிந்து கொள்ள, அவரிடம் உள்ள சரக்கைப் புரிந்துகொள்ள இது ஒன்று போதாதா?

ராகங்களில் தோடி ராகம் சிறந்தது, கேட்க இனிமையானது என்பார்கள்; ஆனால் இந்த மோடி ராகம் மிக மிக மோசமானதாக அல்லவா இருக்கிறது?

பொதுவாக எந்தக் கட்சித் தலைவராகட் டும், பேச்சாளர்களாகட்டும் இரு பொருள்படும் படி பெண்களைப்பற்றிப் பேசினால் அவர்களை அத்தலைமையே அனுமதிக்கக் கூடாது.

பெண்ணுரிமை - பெண்கள் சமத்துவம், பற்றிப் பேசும் எந்த இயக்கமும் - மகளிர் வாக்கு வங்கிக்காக தவமாய் தவம் கிடக்கும் எந்தக் கட்சியையும் அதன் தலைமையும் அனுமதிக் கவே கூடாது!

மோடி ராகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்!

இணை அமைச்சர் சசிதரூரின் துணைவி யார் திருமதி சுனந்தா புஷ்கர் அவர்கள், இவ்வளவு கீழிறக்கத்திற்கு மோடி செல்வார் என்று நினைக்கவே இல்லை; அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்றுகூட நான் கேட்க மாட்டேன்;

காரணம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி குஜராத்தி மக்களைக் கொன்று குவித்த அதற்கே மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க முன்வராத மோடியா, என்னிடம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்கப் போகிறார்? என்று தனது பெருந்தன்மையால் மோடி ராகத்தின் மோசடித் தன்மையை உலகுக்குப் புரிய வைத்துள்ளார்.

குஜராத் பெண்கள் எல்லாம் சரியாகக் கூட, உண்ணாமல் பட்டினி கிடக்கிறார்கள், கேட்டால் அது தான் பேஷன் என்கிறார்கள் என்று பேசி மோடி ராகம் பாடிய மேதைதான் இவர்; இவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? என்றும் நறுக்கெனக் கேட்டுள்ளார் சுனந்தா அவர்கள்!

தமிழ் ஓவியா said...


சோழவந்தான் மகாநாடு!


நிறைவேறிய தீர்மானங்கள்

(1) சென்னை மாகாணத்தில் இந்தி பாஷையைக் கட்டாயப் பாடமாக பள்ளிகளில் வைக்கக் கூடாதென்று இம்மாகாணத் தமிழ் மக்கள் எவ்வளவோ தக்க காரணம் சொல்லி ஆட்சே பித்தும் லட்சியம் செய்யாமல், 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்திருக்கும் மந்திரி சபையின் செய் கையை இம்மகாநாடு கண்டித்து, தமிழ் மக்களின் அதிருப்தியை சர்க்காருக்குத் தெரிவிக்கிறது.

(அ) சர்க்காரின் செயலை வெற்றிபெறாமல் செய்ய பயனளிக்கத்தக்க முறையில் பலமான முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு திருச்சி தமிழர் மகாநாட்டில் நிறுவப்பட்ட கமிட்டியாரையும், காஞ்சிபுரத்தில் கூடிய சென்னை மாகாண இந்தி எதிர்ப்பாளர் மகாநாட்டாரால் நிறுவப்பட்ட கமிட்டி யாரையும் காஞ்சிபுரத்தில் கூடிய சென்னை மாகாண இந்தி எதிர்ப்பாளர் மகாநாட்டாரால் நிறுவப்பட்ட கமிட்டியாரையும் இந்தி கட்டாயப் பாடமாவதை எதிர்க்கும் இதர பிரமுகர்களையும் கேட்டுக் கொள்கிறது. 2. மதுரை ஜில்லா சம்பந்தப்பட்ட வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்திருக்கிற கலாசாலைகளில் மாணாக்கர்கள் வாசியாமல் வேறு பள்ளிகளில் வாசிக்குமாறு பெற்றோர்களைக் கேட்கும்படி தூண்டவும், அவசியமானால் மறியல் செய்வது போன்ற இதர துறைகளில் வேலை செய்யவும் கீழ்க் கண்டவர்களடங்கிய தோழர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

1. டபிள்யு. பி. ஏ. சவுந்திரபாண்டியன், 2. டி. ஆவுடையப்பன், 3. ப. வ. விநாயகமூர்த்தி, 4. எம். ஆர். மத்திரன், 5.எஸ். பாதம்பரி முதலியார், 6. சரவணை, 7. டி. சோமு நாடார்; அவசிய மேற் பட்டால் மேற்படி கமிட்டியார் வேண்டியவர்களையும் சேர்த்துக் கொள்ள அதிகாரம் கொடுக்கிறது. 3. இந்தி கட்டாய பாடமாவதைத் தடுக்க இந்தி எதிர்ப்புக் கமிட்டியாரால் செய்யப்படுகிற வேலைத் திட்டங்களை இந்த ஜில்லாவாசிகள் முழுமனதுடன் வரவேற்பதுடன், கூடிய விரைவில் கமிட்டியார்கள் கூடி இந்தி எதிர்ப்பு வேலை முறைகளைச் செய்யுமாறு இம்மகாநாடு கேட்டுக்கொள்கிறது. 4. மதுரையில் நடந்த மதுரை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் மீதியான பணத்தையும், இந்த மகாநாட்டில் மீதியான பணத்தையும் இந்தி எதிர்ப்பு நிதிக்கு வைத்துக் கொண்டு வேலைகள் ஆரம்பிக்குமாறு கமிட்டியாரைக் கேட்டுக் கொள்கிறது.

8.5.1938 அன்று சோழவந்தானில் நடைபெற்ற மதுரை இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்

தமிழ் ஓவியா said...


தமிழர் போர் மூண்டுவிட்டது!


எதற்காக? தமிழுக்காக.
தமிழர் தன்மானத்துக்காக தமிழர் அறிவு, கலை, வீரம் ஆகியவற்றிற்காக,
எனவே,
தமிழா உன் கடமை என்ன?
மாதம் 75 ரூபாய் காசுக்கு எதிரியின் காலை நக்குவதா? அற்ப பதவிக்காக சகலத்தையும் உதிர்த்து தமிழை, தமிழனை, தமிழ் நாட்டை காட்டிக்கொடுத்து விட்டு வளையல் போட்டுக்கொண்டு முக்காடிட்டு மூலையில் குந்தி இருப்பதா? சீச்சீ இது சிற்றினப் பிழைப்பல்லவா?
மற்றென்ன உன் கடமை?
எதிரியின் கூட்டுறவை ஒழி.
வீரத்துடன் வெளியில் வந்து மார்தட்டு.
கிளர்ச்சிப் போரில் முன்னணியில் நில்லு.
எதிரி வெட்கப்பட, அறிவு பெற, ஓடி ஒளிய உன் உயிர் விடத் தயாராகு.
இவை உன்னால் ஆகாவிட்டால் காசு கொடுத்து ஆதரித்து நீ தமிழன் என்பதையாவது காட்டிக்கொள்.


குடிஅரசு - பெட்டிச்செய்தி - 29-05-1938

தமிழ் ஓவியா said...


தமிழா என்ன செய்யப்போகிறாய் இந்தி வந்துவிட்டது!


பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறத்த - தமிழனின் தன்மானத்தை அழித்து தமிழனை ஆரியருக்கு என்றென்றும் நிலையான அடிமையாக்க இந்தி தமிழ் மக்களுக்கு கட்டாயப் படிப்பாக ஏற்படுத்தப்பட்டாய் விட்டது.

யாரால்? ஆரியரால்

எப்படி? தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூக்குரலைச் சிறிதும் மதியாமல்.

தமிழா இனி என்ன செய்யப்போகிறாய்?

தலைவணங்கி வரவேற்கப் போகிறாயா?
எதிர்த்து நின்று விரட்டி அடிக்கப்போகிறாயா? இதில்தான் தமிழன் இருப்பதா - இறப்பதா என்கின்ற முடிவு இருக்கிறது. தலைவணங்குவதானால் காங்கிரசில் இரு. எதிர்த்து நிற்பதானால் உன் பெயரை எதிர்ப்புக் கமிட்டிக்குக் கொடு.


குடிஅரசு - பெட்டிச்செய்தி - 15-05-1938

தமிழ் ஓவியா said...


திருவிதாங்கூரில் பார்ப்பனியத் தாண்டவம்

திவான் பார்ப்பனர்
பைனான்ஸியல் செக்ரடெரி பார்ப்பனர்
அக்கவுண்டு ஆபீசர் பார்ப்பனர்
இன்கம்டாக்ஸ் ஆபீசர் பார்ப்பனர்
எக்ஸயிஸ் கமிஷனர் பார்ப்பனர்
வனம் டெவலப்மெண்டு ஆபீசர் பார்ப்பனர்
அஞ்சல் சூப்பரின்டென்டண்டு பார்ப்பனர்
அட்வகேட் ஜெனரல் பார்ப்பனர்
தண்ணீர் சப்ளை சீப்-இன்ஜினீயர் பார்ப்பனர்
புரோவைஸ் சான்சல்லர் பார்ப்பனர்
இரண்டு கல்லூரித் தலைமை ஆசிரியர்கள் பார்ப்பனர்
டீன் ஆப் டெக்னாலஜி பார்ப்பனர்
இவை பெரிய உத்தியோகங்கள்.

இதர உத்தியோகஸ்தர்கள் வரலாறு பின்னர் வெளிவரும்.


குடிஅரசு - பெட்டிச் செய்தி - 24-04-1938

தமிழ் ஓவியா said...


காந்தி எச்சரிக்கை


காந்தியார், மந்திரிகள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்திருப்பதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன். இதற்குக் காரணம் சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு மந்திரி தனது அந்தரங்க நண்பனுடன் நடு ஜாமத்தில் பெண் வேட்டைக்குச் சென்று திரும்பும் வேகத்தில் ஒரு நபரின் மீது மோட்டாரை விட்டுத் தள்ளினதோடு அந்த அடிபட்ட நபரைச் சிகிச்சைக்கு வேண்டிய காரியம் கூடச் செய்யாமல் விட்டு விட்டு ஓடிப்போய் விட்டதாகக் கூறப்படும் விஷயம் காந்தியாருக்குத் தெரிந்துதான் இம்மாதிரியான எச்சரிக்கை விட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

போலீஸ் இலாகா கமிஷனருக்குக் கூட இது சேதி எட்டி கவர்னர் பிரபு காதுக்கு எட்டி இருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.


ஒரு காங்கிரஸ் சி.அய்.டி., குடிஅரசு - 01.05.1938

தமிழ் ஓவியா said...


காந்தியாரிடம் - ம.பொ.சி.,


ம.பொ.சி.,

சென்னைக்கு வந்த காந்தியாரை 1.2.1946 அன்றுதான் முதன்முதலாக ம.பொ.சி. காந்தியாரைச் சந்திக்கிறார். திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரியார் ம.பொ.சி.யை அழைத்துச் சென்று காந்தியாரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றார். எப்படி சொல்லி அறிமுகம் செய்து வைக்கின்றார் என்பதுதான் இதில் முக்கியமானது. எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத் துணைக்கழைக்கும் துக்ளக்குக்கும் கே.சி. லட்சுமி நாராயணருக்கும் ஒரு சேதி...

அந்த ம.பொ.சி.யைக் காந்தியாரிடம் அக்ரகாரத் தலைவர் ராஜாஜி எப்படி அறிமுகப்படுத்தினார் தெரியுமா?

கள் இறக்குவோர் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்று அறிமுகம் செய்து வைக்கின்றார்.

ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 918

எதிலும் ஜாதி பார்க்கும் குணம் ஆச்சாரியாரைச் சார்ந்தது.

தமிழ் ஓவியா said...


பஞ்சாலை வெள்ளையா?


தமிழில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முந்தைய கலைஞர் அரசு வைத்த வேண்டுகோளுக்கிணங்க நல்ல தமிழ்ப் பெயர்களிலேயே திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தன. இப்பொழுதும் மீண்டும் ஆங்கிலத்திலும் தமிழ் என்று நம்பிக் கொண்டே வடமொழிப் பெயர்களிலும் படங்கள் வரத் துவங்கியுள்ளன. (எடுத்துக்காட்டு: பீட்சா, ஈகோ, சாரி டீச்சர், கேடி பில்லா, கில்லாடி ரங்கா, விஸ்வரூபம், சௌந்தர்யா, ஆரோகணம்)

இது ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுது இன்னொரு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் கையாண்ட எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரித்து எம்.ஜி.ஆர். அவர்கள் தனது ஆட்சியின் போது சட்ட ரீதியாகவே நடைமுறைக்கு கொண்டு வந்தார். அதிலிருந்து எல்லோரும் அதனை பின்பற்றி வருகின்றனர். இப்பொழுது இதனை சிதைக்கும்விதமாக மீண்டும் பழைய தமிழ் எழுத்து வடிவத்தை திரைப்படத் துறையினர் கொண்டு வருகின்றனர்.

சிறிது நாட்களுக்கு முன் வெளிவந்த கிருஷ்வேணி பஞ்சாலை என்ற படத்தை கிருஷ்ணவேணி பஞ்சாலை என்று போட்டிருந்தனர். இப்பொழுது வெளிவந்துள்ள சாட்டை என்கின்ற திரைப்படத்தில் பள்ளி ஆசிரியராக வருபவர் (சமுத்திரக்கனி) மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முதல் காட்சியில் வெள்ளை என்று கரும்பலகையில் எழுதுவார்.

ஆசிரியராக வருபவரே இப்படி எழுதுவது போலக் காட்டுவது தவறான நடைமுறை ஆகாதா? தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் ;நடைமுறைக்கு வந்து 24 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இப்படி எழுதுவது மாணவர்களை குழப்பம் அடையச் செய்யாதா?

இப்பொழுது இன்னொரு படம் வெளிவரவிருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் வெள் எச்சரிக்கின்றோம். தெரிந்தே செய்து கொண்டிருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். தெரியாமல் செய்து கொண்டிருந்தாலும் மாறிக் கொள்ளுங்கள்.
முன்னேறி வாருங்கள் - பின் சவாரி செய்யாதீர்கள்!

தகவல்: இசையின்பன்

தமிழ் ஓவியா said...


தீபாவளி


ஆரியம்
அழிந்தொழியும்
நாளே
திராவிடர்களுக்குத்
தீபாவளி
அதுவரை அது
துக்க நாளே!
தூங்காதே
தமிழா
தீபாவளிக்கு
இப்பொழுதே
தயார்படுத்து!

- மா.செயராமன்

தமிழ் ஓவியா said...

சின்மயி -சர்ச்சை! உங்கள் கருத்தை எழுதுங்கள்!
தமிழன்னை மீதும், மறைந்த தமிழ் அறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தி யவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழறிஞர்கள் கொடுத்த விண்ணப்பம் (மனு எண்: E//268872 நாள்: 3-0_9--_-2012) காவல்துறை ஆணையருக்குச் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மீனவர்கள் மீன்களை கொல்வதால் மீனவர்களை சிங்களவர் கொல் கிறார்கள் என்று சின்மயி எழுதி யுள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிக்கும் இட ஒதுக்கீடு தவறு என்றும் தொடர்ந்து கலகத்தை தூண்டும் நோக்குடன் எழுதினார். சின்மயி தூண்டியது வெளிவரவில்லை! அவ ருடைய தவறுகள் வெளிவரவில்லை.

சமூக உணர்வுகளைத் தூண்டிவிட்ட சின்மயி மீதல்லவா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு வந்திருக்க வேண்டும்? ஆனால் சின்மயி திட்டமிட்டுத் தமிழர்களைத் தொடர்ந்து உணர்ச்சிவயப்படவைத்து தான் விரித்த வலையில் விழச்செய்து பின்னர் அவர்கள் மீதே கொடுத்த புகாரால் பாலியல் கொடுமை சட் டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப் பட்டனர்.

ஆனால் புகார் கொடுக்கப் பட்டு இரண்டு மாதங்களாகியும் (மனு எண்: E/268872 நாள்: 3-0_9_-2012), பாவாணரைப் பற்றி நாகூசும் சொற்களால் கீழ்த்தரமாக எழுதியதற்கு என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டது ?

செர்மனியில் உள்ளவர் வா.கொ விசயராகவன். அவருக்குத் தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் , சமற்கிருத எதிர்ப்பு போன்ற காரணிகளால் தமிழர் மீது வெறுப்பு. 25-_03_-2010 அன்று அதாவது இரண்டரை ஆண்டுகட்கு முன்னர் பெயர் மாற்றம்" என்ற குழு மடலாடலில் மின்தமிழ் வலைத் தளத்திலே மறைந்த மாபெரும் தமிழறிஞர்களைக் கீழ்த்தரமாக எழுதினார் .மீண்டும் 2012- இல் ஆகத்து மாதத்தில் பாவாணரை நாகூசும் சொற்களால் எழுதினர்.

முதுபெரும் தமிழறிஞர்களையும், மொழியையும், இனத்தையும் ஒரு கூட்டம் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கிறது. இந்த அரசு தமிழ் எதிரிகளுக்கு ஆதரவான அரசு என்று பெயர் வாங்கிக்கொடுக்க பல்லாற்றானும் சதிவலைகள் பின்னப்படுகின்றனவோ என்ற அச்சம் எங்களுக்கு எழுகிறது. இதில் இணைய வலைத் தளங்கள் என்ற போர்வையில் தமிழர்களைச் சீண்டுவதும் உணர்வு களைத் தூண்டுவதுமாகக் கலகத்தை உருவாக்கி அரசுக்குத் தொல்லைகளைத் தந்திட சில தீய சக்திகள் அறிந்தே செயல்பட்டு வருவது அரசின் பார்வைக்கும் வந்திருக்கும்.

தமிழ் மரபு அறக்கட்டளை நடத்திவரும் மின் தமிழ் என்ற வலைத்தளத்தில் மறைந்த தமிழ்ச் சான்றோர்களை இழித்தும் பழித்தும் குழு மடலாடல் என்ற பெயரில் இழி செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இணையத்தளத்தில் முதுபெரும் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரையும், தமிழ் மொழியையும் , தமிழர்களையும் பண்பற்ற ஆங்கில சொற்களைப் பயன்படுத்தி தமிழர்களுக்குத் தீரா மனவலியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவருகிறார்கள். மின் தமிழ் வலைத்தளப் பக்கத்தில் விஜயராகவன் என்பவர் ஒருமையிலும், மறைந்த மனிதரைப் பற்றி இகழ்தலும் கூடாது என்று அறிந்தே இழிவுபடுத்தியும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரைப் பற்றி எள்ளி நகையாடி எழுதியுள்ளார்:

ஞானமுத்து தேவநேயனின் உளறல்களை பற்றி பேசினால், வழக்கா? இதை நான் மிகவும் ரசிக்கி றேன். லெமூரியர்களே, போடுங்கள் உங்கள் கேஸ்களை, எனக்கு ஜாலி தான். அவருடைய ஜாதி, மதம், பொருளதாரம், அரசியல் பார்வை கள், பெண் உறவுகள், அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டவரா இல்லையா, அவர் முனிவரா, கயவனா எதுவும் எனக்கு தெரிய வேண்டியதில்லை. அவருடைய மொழி பற்றிய எழுத்துகள்தான் படித்தேன் - அதைப்போல் உளறல்களை எங்கும் பார்த்ததில்லை. அதைத்தான் இங்கு படித்து, பகிர்ந்து கொண்டேன்.

தமிழ் ஓவியா said...

இதுக்கு எந்த ஜோக்கராவது கேஸ் போடுவேன் என்றால், உலகம் தான் சிரிக்கும். இது தமிழுலகத்தில் அறிவு சார் விவாதங்கள் எவ்வளவு கீழ் மட் டத்தில் இருக்கிறது எனக்காட்டுகிறது. G. Devaneyan is a charlatan. ஞா.தேவநேயன் பூகோளம், சரித்திரம், இந்திய மரபு சொற்கள், மொழியியல் ஒன்றையும் மதிக்காமல் புருடா விட்டு வைத்துள்ளார். சரமாரியாக பொய்களை உதிர்க்கிறார். ஞான முத்து தேவநேயன். அதற்கு மேல் தன்கால விஞ்ஞானத்தை ஜோக்காக கருதி, அறிவியல் துறையை கிள்ளுக் கீரையாக்கி அதன் மேல் மொழி யியலை கட்டுபவன். fraudster, quake, charlatan என்றெல்லாம் விஜயராகவன் எழுதியுள்ளார்.

இன்றும் தொடர்ந்து தமிழையும், தமிழறிஞர்களையும் தாக்கி எழுதி வருகின்றார். முன்பு இதே போல் மறைமலை அடிகள், இலக்குவனார், பெரியார், அண்ணா முதலியோரை இழிவாக மின்தமிழில் எழுதினார். இவ் வாறு தொடர்ந்து தமிழையும், தமிழறிஞர்களையும் இழிவுபடுத்தித் தமிழர்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதைக் கண்டிக்கிறோம். தாங்கள் உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுத்து, மின்தமிழ் வலைத்தளத்தை முடக்கவும் இணையதளக் குற்றவாளி களைக் கைது செய்யவும் வேண்டு கிறோம். சின்மயி என்ற சினிமா பாடகி தமிழரை, மீனவரை, இட ஒதுக்கீட்டை கேவலமாக எழுதியது வெளிவர வில்லை.

எனவே இப்போதாவது உடனே தமிழ்நாடு காவல் துறை இணையக் குற்றப் பிரிவின் வழியே கடும் நட வடிக்கை எடுத்துக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத் தும்படி வேண்டும்.

தஞ்சை கோ.கண்ணன்
தலைவர், தமிழ் எழுச்சிப்பேரவை முனைவர் இறையரசன் செயலாளர், தமிழ் எழுச்சிப்பேரவை ஈ-1,
வேங்கடாத்திரி அடுக்ககம்,
11, மருத்துவமனை சாலை,
வளசரபாக்கம்,
சென்னை -60 00 87.
பேசி: 24763443, 9840416727.

குறிப்பு: இதுகுறித்த கருத்துக்களை விடுதலை ஞாயிறுமலருக்கு எழுதுங்கள்.3-11-12

தமிழ் ஓவியா said...


தண்ணீருக்கும் ஒரு நாள் இருக்கிறதுகாதலர் தினம், அன்னையர் தினம், தந்தையார் தினம் என்பதுபோல் நீர் தினம் அதாவது உலக நீர் நாள், உலக நீர் தினம் இருக்கிறது என்பது சுவையான செய்தி. உலக நீர் நாள் ஏற்பட்ட வரலாறு இது. 1992ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோ என்னு மிடத்தில் அய்க்கிய நாடுகள் அவையின் உற்பத்தி தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் நாளை உலக நீர் நாள் எனக் கொண்டாடலாம் என அய்க்கிய நாடுகள் அவை அறிவித்தது. எனவே அதைத் தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளாக உலக நீர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஏன் கொண்டாட முடிவு செய்தனர்?
இந்தப் பூமிப் பந்தின் நிலப்பரப்பில் நீர் 75 விழுக்காடு இடம் பிடித்து இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? உலக மக்களில் நான்கு பேரில் மூன்று பேர் அதாவது 75 விழுக்காட்டினர் அருந்திடத் தூய நீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் என்பது தான் இயல்பான நிலை. அது மட்டுமா?

இன்னுமொரு குட்டி புள்ளி விவரம், மானிடத்தைக் கவலை கொள்ளச் செய்யும் புள்ளி விவரம் உள்ளது. உலகில் பாதுகாப்பான நீர் குடிக்க இல்லாமல் எட்டு நொடிகளுக்கு ஒரு குழந்தை அதாவது ஒரு நிமிடத்திற்கு ஏழு குழந்தை எனும் வீதத்தில் மரணத்தைத் தழுவுகின்றன என்கிறது புள்ளி விவரம். ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஒரு கோடியே அய்ம்பது இலட்சம் குழந்தைகள் குழிக்குள் வைத்து மூடப்படப் பாதுகாப்பற்ற குடிநீரே முதல் காரணமாக அமைந்துள்ளது. நீரின் தூய்மைக் கேட்டினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, காலரா, டெங்குக் காய்ச்சல், காய்ச்சல் என்று பல்வேறு காய்ச்சல் நோய்களுக்கு நீர்தான் காரணம் என்பதை நாம்தான் நன்கு அறிவோமே. உலகில் மூன்று பேரில் ஒருவர் பாதுகாப்பான குடிநீர் பெறுவதில்லை. இதுதான் இன்றைய நீர் வளத்தின் நிலைமை எனில் நிலைமை விளங்கும். தமிழின் பெருமை கூறவதற்காக இதைக் கூறவில்லை. நீரின் சிறப்பைச் சங்கப் புலவர் முதல், வள்ளுவர் அவ்வை யார் வரை பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

நீரின்றி அமையாது உலகம் என்றார் வள்ளுவர்.

அவ்வையார்,

நீர் உயர வரப்புயரும்
வரப்புயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடிஉயரக் கோன் உயரும்
என்று கோன் உயர அடிப்படையாக விளங்கியது நீர் என்று 2000 ஆண்டுகளுக்கு முன் எடுத்துக் காட்டி யிருக்கிறார். அவ்வையாருக்குமுன் நற்றிணையில் நீர்பற்றிய கூற்று இங்கே நினைவில் வருகிறது.
நீரின்றி அமையாது உலகம்போல்
தம்மின்றி அமையாது நன்னயந்தருளி
இப்பாடலில் தலைவனைப் பிரிந்த தலைவி புலம்புகையில் கூட நீரின்றி அமையாத உலகம் போல, தலைவனின்றி அமையாத தன் நிலையை அறிந்து அவன் வந்துவிடுவான் என ஒருதலைவி தன் தோழியிடம் கூறுகிறார்.

நெடுநல் வாடையில் தொகுவாய்க் கலத்து நீரை அருந்தாமல் பகுவாய் கலத்து நெருப்பில் குளிர் ஆறுவர் என்று கூறப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் மக்கள் குவிந்த வாயை உடைய குடத்துத் தண்ணீரைக் குடிக்காமல் பெரிய வாயையுடைய காரைச் சட்டியில் நெருப்பை இட்டு அதில் குளிர் காய்வார்கள் என்பதைப் புலப்படுத்தும். குளிர்ந்த நீரைக் கோடை காலத்துப் பருகவே மனம் விரும் பினாலும் அதையும் காய்ச்சிக் குளிர் வைத்தே குடிப் பது நல்லது.

காய்ச்சிய நீரைச் சூடாகப்படுத்தினால் நெஞ்செரிச்சல், தலைவலி, புளிச்சேப்பம், வயிற்றுவலி இருமல்ஆகியன உடனே குணமாகும். வெந்நீரைத் தங்கப் பாத்திரத்தில் சேமித்து அருந்தினால் வாயு, கவம், வெப்பு நோய்போகும் என்றும் நல்ல புத்தி உண்டாகும் என்றும் அறிவு விருத்தி அடையும் என்கிறது மருத்துவ நூல் நம்மால் முடியுமா?

வெள்ளிப் பாத்திரத்தில் சேமித்து அருந்துவதால் பித்தம், காய்ச்சல், வெப்பு நோய் ஆகியவை நீங்குவ துடன் உடலும் செழிப்பாகி வலிமை கிடைக்குமாம். தாமிரப் பாத்திரத்தில் வெந்நீரைச் சேமித்து அருந்துவதால் பித்தம் கண் புகைச்சல் கண் எரிச்சல் நீங்குமாம். வெண்கலப் பாத்திரத்தில் நீரைச் சேமித்து அருந்தினால்தாது விருத்தி ஆகுமாம்.

குண சிந்தாமணி எனும் நூல் தண்ணீரைக் கால் கூறு காய வைத்தால் பித்தம் போக்கும் என்றும், அரைக் கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகியன போக்கும், முக்கூறு காய்ந்த வெந்நீர், வாதம், குளிர் நடுக்கம், பித்த சுரம்வெக்கை வாத பித்தம் போக்கும் என்கிறது. வெந்நீரைக் காய்ச்சிக் குடிப்பது உடலுக்கு நோய் வராமல் காக்கும் வழியாகுமாம்.

- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...


பெரியாரின் சிந்தனையில் உருவாகும் விஞ்ஞானி - புதிய கண்டுபிடிப்பு


நெசவு தொழிலில் புதிய கண்டுபிடிப்பு _ நாளொன்றுக்கு 4 பேர் இணைந்து செயல்பட்டால் 20 கன்னி பாவு வரை உற்பத்தி ஆகும். இதன் மூலம் வருவாய் ரூ.200 பெற்று வந்தனர். பொதட்டூர்பேட்டை திராவிடர் கழக நகர தலைவர் பி.ஏ. சேகர் புதிதாக கண்டுபிடித்ததில் நாளொன்றுக்கு ஒரு நபர் மட்டும் வேலை செய்தால் 100 கன்னி பாவு வரை தயாரிக்க முடியும்.

இதன் மூலம் வருவாய் ரூ.1000 வரை பெற்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பு பெரியாரின் தன்னம்பிக்கையூட்டும் சிந்தனையால் உதித்தது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றார் தோழர் சேகர். இதுவரை 52 எந்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 52 குடும்பங்கள் நாளொன்றுக்கு ரூ.200 வரை சம்பாதித்தவர்கள் இன்று ரூ.1000 வரை வருமானம் பெறுகின்றார்கள் மேலும் பல குடும்பங்கள் இதன் மூலம் பயன் பெற வாய்ப்புள்ளது. கழகத் தோழரின் அரிய கண்டுபிடிப்புக்கு வாழ்த்துகள்!

Arun sankar said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தமிழ் ஓவியா said...


பிராமணாள் இனியும் தலை காட்டக் கூடாது!


சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் பிராமணாள் என்னும் ஓட்டல் 6.11.2012 ஆம் நாள் இரவோடு இரவாகக் கடையைக் கட்டிக் கொண்டது.

திராவிடர் கழகத் தோழர்கள் கேட்டுக் கொண்ட போதே அந்தப் பிராமணாள் பெயரை நீக்கி யிருந்தால், இப்பொழுது அந்த உணவு விடுதியையே மூடிவிடும் அவல நிலை ஏற்பட்டு இருக்காது.
பார்ப்பனர்கள் உணவு விடுதி நடத்தக் கூடாது. அவர்கள் பிழைப்புக்காக எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற அற்பப் புத்தி நமக்கொன்றும் இல்லை.

பார்ப்பனர்கள் நன்றாகவே பிழைக்கட்டும்; நன்றாகவே சகல சம்பத்துகளுடனும் வாழட்டும் நமக்கொன்றும் அட்டியில்லை.

பார்ப்பான் பணக்காரனானால் என்ற கட்டுரையை குடிஅரசு இதழில் (9.11.1946) தந்தை பெரியார் தெளிவாகவே எழுதியுள்ளார்.

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது; அவன் ஏழையாக இருக்க வேண்டும் என்பதல்ல.

ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக கோடீஸ்வரனாக வும், லட்சாதிபதியாகவும் ஆகி விட்டாலும் சரியே எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும் மடாதிபதிகள் உட்பட எவரும், சிறிதுகூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்று தெளிவாக, நீரோட்டமாகக் கூறியுள்ளாரே!

பிராமணாள் உணவு விடுதி என்பதில் உள்ள பிராமணாள் என்பதை ஒழிப்பது என்பதற்கான விளக்கம் இதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறதே!

பார்ப்பனர்களுக்கு இது தெரியாதா? பிராமணாள் என்பது உயர் வருணத் தன்மையைப் பறைசாற்றக் கூடியதென்று தெரிந்துதானே அதனை இன்றளவும் நிலைநாட்டிடத் துடிக்கின்றனர் - அடம் பிடிக்கின்றனர்.

அரசர்கள் முதல் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து விட்டதாலும், வருணாசிரம தர்மத்தில் உயர் ஆளுமை அவர்களுக்கு எல்லா வகையிலும் வசதி வாய்ப் புள்ளதாக இருப்பதாலும் அதனை விட்டுக் கொடுக்க மனம் இர(ற)ங்கி விடுவதில்லை.

பிராமணாள் என்று தங்களை உச்சமான இடத்தில் ஆசனம் போட்டு உட்கார வைத்தாலும் கூடப் பரவாயில்லை; அந்த வருணாசிரமத் தன்மையில் பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் என்று சுட்டுவதுதான் சகிக்க முடியாததாக இருக் கிறது. ஏன் சகிக்க முடியாதது என்று சொல்லு கிறோம்? சூத்திரன் ஏழு வகைப்படுவான். அதில் ஒன்று தமது விபச்சாரி மகன் என்று பார்ப்பான் எழுதி வைத்திருப்பதுதான்.

பிராமணாள் ஒழிப்புப் போராட்டத்தை எதிர்த்து எழுதுவோர்கூட, திராவிடர் கழகம் எடுத்து வைக்கும் இந்தக் குற்றச்சாற்றுக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், பிரச்சினையைத் திசை திருப்பும் தன்மையில் எழுதுகோல் பிடிப்பது பரிதாபமே!

சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் நடத்திய உணவு விடுதியில் இடம் பெற்ற பிராமணாள் ஒழிப்பு - இத்தோடு முடிவுக்கு வந்தாக வேண்டும். மறுபடியும் சிறீரங்கத்திலோ, வேறு இடங்களிலோ பிராமணாள் முளைப்பதை அனுமதிக்க முடியாது, முடியவே முடியாது.

அப்படி எந்த ஊரிலாவது பிராமணாள் தலை காட்டுமேயானால் முதலில் கோரிக்கையை நேரிடையாக வையுங்கள். நாகரிகமாகப் பிரச் சினையை முடித்துக் கொண்டால் பிரச்சினை இல்லை; முரண்டு பிடித்தால் உடனே தலைமைக்குத் தெரிவிக்குமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். உரிய முயற்சியைத் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு மேற் கொள்ளலாம்.

திராவிடர் கழகத்தின் முறையான முயற்சியும், பண்பாட்டுடன் கூடிய அணுகுமுறையும்தான் இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

கொள்கையும் முக்கியம் - வழிமுறையும் முக்கியம் என்பதை எந்தக் காரணத்தோடும் கழகத் தோழர்கள் மறந்துவிட வேண்டாம். இந்தப் பிரச்சினையில் முழு முயற்சியுடன் செயல்பட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.8-11-2012