Search This Blog

28.11.12

கார்த்திகைத் தீபமா? இதற்கு என்ன கதையளப்பு?


இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் அது சடங்குகளின் - பண்டிகைகளின் குவியல். மனிதனின் அறிவைப் பாழ்படுத்துவதோடு நின்று விடாது; மனிதன் கடும் உழைப்பால் ஈட்டிய பொருளையும் சுரண்டக் கூடியதாகும்.

சித்திரை - தமிழ் வருஷப் பிறப்பு, சித்ரா பவுர்ணமி, இராம நவமி, ஆடி மாதம் பூர நட்சத்திரம் விழா, ஆடிப்பூரம் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி புரட்டாசி, நவராத்திரி (ஒன்பது நாள் கூத்து)

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி இன்னோரன்ன... புரட்டாசி சனி (4 சனிக்கிழமைகளிலும் விரதம்) மகாளய அமாவாசை அய்ப்பசி - தீபாவளி கந்தர்சஷ்டி கார்த்திகை மாதம் - கார்த்திகைத் தீபம்
மார்கழி: ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி.
தை தமிழர் திருநாளையும் மாற்றி சங்கராந்தி ஆக்கப்பட்ட கொடுமை! (புராணக் கதை புகுத்தப் பட்டுள்ளது) தைப் பூசம், தை அமாவாசை மாசி மகம், மகாசிவராத்திரி; பங்குனி - பங்குனி உத்திரம், காமன் பண்டிகை.
இப்படி பார்ப்பன சுரண்டலுக்கு நீண்ட பட்டியலை உருவாக்கி வைத்துள்ளனர். தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்த கதையாக ஒவ்வொரு நாளும் பண்டிகை - பண்டிகை என்று கூறி மக்களை சக்கையாக உறிஞ்சி எடுக்கும் மகா மகா கொடுமை.

இந்தப் பண்டிகைகளுக்காகக் கூறப்படும் கதை களோ ஆபாசம் - அருவருப்பு - அடி முட்டாள்தன மாகும்.

ஒரு கதையா? இரு கதையா? பைத்தியக்கார னுக்குக் கள் ஊற்றிய மாதிரி உளறல்! உளறல்!!

நவராத்திரி, தீபாவளி முடிந்த கையுடன் கார்த்திகை வந்து விட்டது. வீட்டுக்கு வீடு அகல் விளக்கு ஏற்றி வைப்பது என்பது எண்ணெய் செலவுக்குத்தான் கேடு.

இன்று திருவண்ணாமலையில் மகா தீபமாம்.

இதற்கு என்ன கதையளப்பு?

பிர்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் போட்டி- இரண்டு பேர்களில் யார் பெரியவன் என்ற சண்டையாம் (கடவுள்களிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது சண்டைதானா?)

பரமசிவன் நடுவில் புகுந்து ஜோதி உருவெடுத்து என் அடி, முடிகளை யார் முதலில் காண்கிறார்களோ அந்த ஆள் தான் பெரிய ஆள் என்றானாம்.
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டே போனானாம். அடியைக் காண முடியாமல் திரும்பினானாம். (இதனை வைஷ்ணவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வேறு கதை!)
பிரம்மன் அன்னப் பறவை உருவெடுத்து மேலே பறந்து சென்றானாம். அப்பொழுது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே வந்து கொண்டு இருந்ததாம்! எங்கிருந்து வருகிறாய் என்று அன்னப் பறவை தாழம் பூவைப் பார்த்துக் கேட்டதாம். சிவன் முடியிலிருந்து நீண்ட காலமாக வந்து கொண்டுள்ளேன் என்றதாம் தாழம்பூ.

எனக்கு ஒரு உதவி செய். சிவன் முடியை நான் பார்த்துவிட்டதாக சாட்சியம் சொல்லு என்று அன்னப் பறவை - கெஞ்ச, தாழம்பூவும் பரிதாபப்பட்டு பொய்ச்சாட்சி சொல்ல ஒப்புக் கொண்டதாம். சிவனிடம் வந்து சொல்ல, சினம் கொண்ட சிவன் சபித்து விட்டானாம். உனக்குக் கோயில் இல்லாமல்  போகக் கடவது! என்று பிர்மாவுக்கும் - பூசைக்கு உதவாமல் போகக் கடவாய் என்று தாழம்பூவுக்கும் சிவன் சாபமிட்டானாம்!

விஷ்ணுவும், பிர்மாவும் தவறுகளை ஒப்புக் கொண்டு - சிவனே நீதான் சக்தி வாய்ந்தவன் என்று ஒப்புக் கொண்டு, தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததன் அடையாளமாக இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்! என்று கேட்டுக் கொள்ள, சிவபெருமானும் சம்மதித்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகைப் பண்டிகையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று கூறினானாம். அதுதான் திருவண்ணாமலையில் மகா தீபம் கொண்டாடப்படும் இலட்சணம்!

இதில் சில கேள்விகள் உண்டு. பிர்மா, விஷ்ணு எனும் கடவுள்களிடையே யார் பெரியவன் என்று சண்டை போடுவது அசல் சிறுபிள்ளைத்தனம் அல்லவா!
இரண்டாவது, படைத்தல் கடவுள் என்று பார்ப்பனர்கள் கூறும் பிர்மா பொய் சொல்கிறானே, இது எந்த வகை ஒழுக்கம்?

மூன்றாவது, சிவன்தான் மற்ற இரு கடவுள் களையும்விட பெரியவள் என்பதை வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்வார்களா?

நான்காவது, கார்த்திகையில் ஜோதியாய்த் தோன்றுவேன் என்று சிவன் சொன்னபடி, அவனாக அல்லவா ஜோதியாக உருவெடுக்க வேண்டும்? மாறாக மனிதர்களே கொப்பறை சட்டியில் நெய்யை ஊற்றி காடாத் துணியைப் பற்ற வைப்பது யாரை ஏமாற்ற? இது பச்சையான மோசடியல்லவா!
பக்தி வந்தால்தான் புத்தி போய் விடுமே - யார் சிந்திக்கப் போகிறார்கள்? உணவுக்குப் பயன்பட வேண்டிய நெய்யை டன் டன்னாக நெருப்புக்கு இரையாக்குகிறார்களே - இதைவிட பொறுப்பற்ற செயல் வேறு உண்டா? சிந்திப்பீர்!

                        --------------------------"விடுதலை” தலையங்கம் 27-11-2012

12 comments:

தமிழ் ஓவியா said...


ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோக மாட்டோம் என்ற தி.மு.க. நிலைப்பாடுதான் சரியானது!


சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு மூலதனம் பிரச்சினை:

வாக்கெடுப்பு நடத்தினால் ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோக மாட்டோம் என்ற தி.மு.க. நிலைப்பாடுதான் சரியானது!

தமிழர் தலைவர் அறிக்கை

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க., மத்தியில் ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கருத்துத் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (27.11.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு மூலதன முதலாளிகளை அனுமதித்தால் நம் நாட்டு சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், காங்கிரஸ், மற்றும் ஒரு சிலர் தவிர, எல்லோரும் எதிர்க்கிறார்கள். ஏனோ ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைமை இதில் பிடிவாதம் காட்டுகிறது.
மாநில அரசுகளுக்குச் சுதந்தரம் உண்டு. அனுமதிக்கவோ, மறுக்கவோ என்று கூறிடும் நிலையில் இதில் பிடிவாதம் காட்டுவது முரண்பட்ட ஒரு நிலைப்பாடு ஆகும்.

தி.மு.க. இதில் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது; வாக்கெடுப்பை வலியுறுத்தி, பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சி திட்டமிட்டே நாடாளுமன்றத்தை முடக்குவது நியாயமல்ல. மக்கள் விரோதப் போக்கே ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சியினர் கேலிக் கூத் தாக்குகின்றனர்.

வாக்கெடுப்பு நடத்தினால்கூட, இன்றுள்ள சூழ்நிலையில் பல எதிர்க்கட்சிகளே ஆட்சியைக் கவிழ்க்க அவசரப்படாதபோது, தயாராக இல்லாதபோது, இப்போது பாராளுமன்றத்தை நடக்க விடாமல் செய்வது எப்படி நியாயமானதாகும்?

இந்நிலையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க., ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; அதன் மூலம் பிற்போக்கு மதவாத சக்திகளுக்கு வலுவூட்டும் வகையில் காரணமாக அமைய மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. திராவிடர் கழகம் தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டைப் பாராட்டுகிறது.

பொறுப்புள்ள முற்போக்கு சிந்தனை உள்ள எதிர்க்கட்சிகளும் இதே நிலையை எடுப்பதன் மூலம் மதவெறிக் கட்சிகளை கரங்களை மறைமுகமாக வலுப்படுத்தக் காரணமாகி விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
27.11.2012

தமிழ் ஓவியா said...


இந்துத்துவா என்பது உயர் ஜாதியினரின் ஆதிக்கம்


வரலாற்றாளர் இராமச்சந்திர குஹா படப்பிடிப்பு

பிரபல வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குஹா அவர்களால் எழுதப்பட்ட புதிய நூலில் இந்துத்துவாவின் ஜாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறார்.

(தன்னுடைய புதிய புத்தகத்தில் திரு. இராமச்சந்திர குஹா பரந்த பகுதிகளைத் தொட்டிருந்தாலும், ஒரு வரலாற்றாளனைவிட, ஒரு விசாரணையாளனாகவே தன்னை ஆட்படுத்திக் கொள்ளுகிறார் - சரோஜ்கவுர்)

தனது அண்மை வெளி யீடான தேச பக்தர்களும், பிரிவினைவாதிகளும் (Patriots and Partisans) என்ற புத்தகத்தின் முன்னுரை யில், சுற்றுச்சூழல் இயலார், மட்டைப் பந்து இயலார், மற்று வரலாற்றாளர் ஆகி யோர்பற்றி குஹா எழுது கிறார்:

நான் ஒரு மிதமான போக்குடையவன் சமயங் களில் அவற்றை வேகமான முறையில் வெளிப்படுத்து பவன். இது என்னை ஒரு முரண்பட்டவனாகவும், பொருந்தாதவனாகவும் காட்டுகிறது! வாதங்களில் இடதுசாரியாகவும், வலது சாரியாகவும் காட்டப்படு கிறேன். பல்வேறு வகைப் பட்ட இந்தக் கட்டுரைத் தொகுப்பில், இடதுசாரி, வலதுசாரி சித்தாந்தங் களுக்கு நடுநிலையை தனது வேகமானதாகவும், ஆத்திரமூட்டக் கூடியது மான கருத்துக்கள் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுகிறார்.

முக்கியமான ஆபத்துகள்

இந்தப் புத்தகம், அவருடைய பார்வையில் இந்தியக் குடியரசிற்கு விளைய இருக்கும் முக்கிய ஆபத்துகளைப் பற்றி முன்னோட்டத்துடன் தொடங்குகிறது. மற்ற கட்டுரைகள் இந்துத்துவம், இடதுசாரி கம்யூனிஸ் டுகள், பரம்பரை ஆட்சி எண்ணம் பீடித்த காங் கிரஸ் கட்சிபற்றிய விமர் சனக் கண்ணோட்டத்து டன் எழுதப்பட்டவை. பிறகு குஹா, காந்தியின் பன்முக மதங்கள் எவ்வாறு இன் றைய சூழலுக்குப் பொருந் தும் என்பதையும் ஆய் கிறார். ஜவகர்லால் நேரு வின் மரணத்திற்குப் பிறகு, அவரது பேரும், புகழும் சரிந்ததையும் அவர் ஆய்வு செய்கிறார்.

இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் எழுத்தாளர்களைப் பற்றி யும், படிப்பாளிகள் பற்றியும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் இரு மொழி வல்லுநர் களான அறிவாளிகள் ஏன் தற்பொழுது வலுவிழந்த நிலையில் உள்ளனர் என் பது பற்றியும் விளக்கு கிறார்.

துணிச்சலான விவாதங்கள்

அவர், இதழ் ஆசிரிய ராக, புத்தகக் கடை உரிமை யாளராக, ஒரு பெரிய புத்தக வெளியீட்டகமாக, மற்றும் புகழ்பெற்ற வர லாற்று ஆவணக் காப்பக மாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறார். அரசியலைப் பற்றியோ, பண்பாட்டைப் பற்றியோ, தனி மனிதர் களைப்பற்றிய சித்திரத் திலோ, சமூக நிகழ்வு களைப் புகுத்திப் பார்ப்ப திலோ குஹா துணிச்ச லாக விவாதத்துக்குள்ளா கும் முறையில் எழுதி யுள்ளார்.

அவர் எல்லாத் துறை களையும்பற்றி எழுதியி ருந்தாலும், மேலெழுந்த வாரியாக அவரது எழுத் துக்களைப் படித்தால், அரசியல் பன்முகத்தில், அவர் யாரைக் குறி வைக் கிறார் என்பது வெளிப் படையாகும். நாம் அவரை ஒரு தெளிவு பெற்ற இந்து மத நம்பிக்கையாளராக, இந்துத்துவாவின் கோபம் ஊட்டுபவராக, அல்லது நாட்டுப்பற்றுடையவராக அடையாளம் கண்டு கொள் வது நமது கண்ணோட் டத்தைப் பொறுத்தது.

தமிழ் ஓவியா said...

இந்துத்துவா என்பது உயர்ஜாதியினரின் ஆதிக்கம்

இந்தியாவைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சியி னரால் முரண்பட்ட முறையில் குறிப்பிடப்படும் இந்து ராஷ்டிரா அதை இன்னும் உறுதியாகச் சொல்லும் ராஷ்டீரிய சுயம் சேவக் சங்கம் ஆகிய வற்றின் கூற்றுக்கள் பற்றி அவர் வன்மையாக எதிர்க் கிறார். அவருடைய கண் ணோட்டத்தின்படி, இந்துத் துவா அமைப்பானது வேறுபாடில்லாத ஆண் ஆதிக்கம் நிறைந்த உயர் சாதியினரைக் கொண்ட பெரும்பாலான நேரங்களில் இங்கே வசிக்காத இந்தியர் (Non-president Indians) களைக் கொண்டதாகும்.

சங்பரிவார், ஆர். எஸ்.எஸ். இந்துத்துவா விழைவோர், மற்றும் பல்வேறு இந்துத்துவா வேண்டிகள் மீது, அவரது தாக்குதல்கள் வேக வீச் சுடன் கூடியவை. காரணம் பல்வேறு திசைகளிலிருந்து அவர் பெற்ற ஈமெயில்கள், அவரைக் காயப்படுத்திய துடன், இந்துத்துவா எதிர்ப்பாளராக அவரைக் குற்றம் சாட்டியதும்தான்.

தலைசிறந்த ஒரு இந்திய வரலாற்றாளன் இம்மாதிரி சிறு பிள்ளைத் தனமான விளையாட் டுகளில் ஈடுபடலாமா? அவர் சிறந்த முதிர்ந்த பங்களிப்பைச் செய்து இருக்க வேண்டும் என்று சிலர், கருத்து தெரிவித்து உள்ளனர். சிலருக்கு வர லாற்றை ஆவணப்படுத் துவதில் சிறந்த பணி செய்தவருக்கு இந்தக் கட்டுரை தொகுப்பானது ஒரு காமாலைப் பார் வையை எடுத்துக் காட்டு கிறது என்ற கருத்து நிலவு கிறது. அவரது இந்தி யாவைப் பற்றிய எந்தவித கோணமும் அவரது கருத் துக்கு விருப்பமற்றதாகத் தெரிவதால் அவை அவரது கட்டுப்பாடற்ற கருத்துக் களாக இல்லாமல் வெறுப் பின் விளிம்பில் நிற்கின்றன.

1920-லிருந்து சங்பரிவர்கள்பற்றி

குஹாவின் குறியான இந்துத்துவா 1920 சாவர்க் கார் காலத்திலிருந்தே எழுதப்பட்டு வந்தன. சாவர்க்கார், இந்து என்பதற்கு, வருங்கால சுதந்திர இந்தியாவின் இனம், மதம், சாதி மற்றும் வகுப்பு வேறுபாடில்லாத இந்தியக் குடிமகன் என்று விளக்கம், சொல்லியுள் ளார். சமபந்தி விருந்து முறையை முதலில் ஆரம் பித்து வைத்த சாதி இந்துக் களில் அவரும் ஒருவர். அது 1925இல் H.B. ஹெட்கிவார் (H.B. Hedgewar) என்பவ ரால் ஆர்.எஸ்.எஸ். தொடங்க காரணமாயிருந் தது. இந்திய விடுதலை உணர்வு, வடமொழியான சமஸ்கிருதத்தின் பாரம்பரியத்தை அறி யாததால்தான் என்ற நிலை ஆச்சரியத் திற்குள்ளானது இல்லை, அந்தக் குறைக்காக நாட்டின் இந்துக்கள் தங்கள் மேலே கோபம் கலந்த வெறுப்படைந்தனர்! அவரது சொந்த எல்லைக்குட்பட்ட பார்வைகளின் படியே, குஹா நாட்டுப் பற்றா ளர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே எதிர்ப்புணர்வை ஊதி விடுகிறார்.

விசாரணை போல

மைனாரிட்டிகளைப் பற்றி பேசும்போது, அவர் வன்முறை பற்றிய கேள்விகளை எழுப்புகிறார். தற்பொழுதும், சமீப காலங் களிலும் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளான இந்துக்கள் அல்லாதவர்களால் தாக்கப் பட்ட நிகழ்ச்சிகளை அவர் தவிர்த்து, இந்துக்களால் தாக்கப்பட்ட நிகழ்வுகளை மட்டும் பொறுக்கி எடுத்துக் குறிப்பிட்டுச் சொல்கிறார். குஹா, தன் கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, ஒரு வரலாற்று ஆசிரியனைப் போல் அல்லாமல் ஒரு விசாரணையாளரின் பங்கைப் பற்றியி ருப்பது நன்கு தெரிய வருகிறது.27-11-2012

தமிழ் ஓவியா said...


பெரிய மனிதர்கள் - பதவியாளர்கள் விஞ்ஞான விரோதிகளா?-ஊசி மிளகாய்-

நீதிஅரசர் ஜஸ்டீஸ் சந்துரு அவர்கள் ஒரு விழாவில் பேசும் போது,

வகுப்பறைகளில்கூட விஞ் ஞானத் தேடல் இல்லாத நிலைதான் இன்று உள்ளது. இப்போது, வாஸ்து சாஸ்திரத்தால், மக்கள் படாத பாடுபடுகின்றனர்.

நீதிபதிகளிடம்கூட, இதுபோன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்ப்பதன் மூலம், மூடநம் பிக்கைகளை ஒழிக்கலாம்.
- என்று குறிப்பிட்டுள்ளது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. வரவேற்க வேண்டியது மட்டுமல்ல; அரசினருக்கும் தேவையான அறிவுரையுமாகும்.

தமிழ் ஓவியா said...

உலகிலேயே பல மணி பகல் நேரங்களை - ராகு காலம், எம கண்டம், கெட்ட நேரம், மரண யோகம் என்ற சாக்கைக் காட்டி வீணாக்கும் விந்தை மனிதர்கள் இங்கு ஏராளம் உண்டு.

படிப்பறிவு அவர்களை பகுத் தறிவைப் பயன்படுத்துவோராக்க முனையவில்லை; பெரியார் போன்ற தலைவர்களும், அவர்தம் இயக்கமும், ஏடுகளும் பிரச்சாரமும்தான் இதனைச் செய்கின்றன.

நம் நாட்டு அரசியல் சட்டத்தின் 51ஏ பிரிவு அடிப்படைக் கடமைகளில் முக்கியமான கடமைகள் பற்றி வலியுறுத்திச் சொல்கின்றது!

பல அரசுத் துறைகளைப் பொறுத்த வரைகூட மதச் சார்பின் மையை காலில் போட்டு மிதிப்ப துடன் மூடநம்பிக்கைகளை வழிபட்டு பரப்பிடும் கருவிகளாக உள்ளன!

ஊடகங்கள் - பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் எல்லாம் நல்லநேரம், சகுனங்கள், வாஸ்து சாஸ்திரம், யாகம், பூஜை புனஸ் காரம், தீபாவளி, ஆயுத பூஜை (குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் களில்) - வசூல் ராஜாக்களாகவும் மாறி, கேவலமாக - பாமரத் தனத்தின் உச்சிக்கே சென்று அறியாமைச் சேற்றைப் பூசி, தங்கள் அலுவலகங்களையே கழுதை புரண்ட களங்களாக ஆக்கி விடு கின்றனர்!

அய்யப்பன் கோயில் போவ தற்குப் போடும் வேஷத்திற்கு அரசு விதிகள், காவல்துறை விதிகள்படி அனுமதி இல்லை; ஆனால் அந்த விதிகள் எல்லாம் இன்று குப்பைக் கூடையில் கிடக்கின்றன!

தாடி மீசை, கழுத்தில் மணி, காவி கன்னிசாமி, குருசாமி, பெரியசாமி என்ற சாமிகளாக கான்ஸ்டே பிளிலிருந்து போலீஸ் மேலதிகாரி வரை ஆகிவிடுகின்றனர்.

ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியே இந்த வேடத் தில் - அய்யப்ப சீசனில் காட்சி அளித்ததை நாம் கண்டி ருக்கிறோம்.

எண் கணித மூட நம்பிக்கை காரர் (Numerology) கத்தியால் குத்தப்பட்டு டெல்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மயக்கந் தெளிந்த பிறகு அறை எண் 13 என்பதைப் பார்த்து அலறி அடித்து, அய்யோ எனக்கு 13ஆம் எண் ஆகாதே என்று அலறி, மாற்றச் சொல்லி அடம் பிடித்தார்; வேறு அறைகளே காலி இல்லை, அவர் திருப்திக்காக - அவர் தூங்கும் போது பார்த்து 13ஆம் எண்ணை 12A என்று மாற்றி பெயிண்ட்டரை அழைத்து வந்து எழுதி வைத்து, மாற்றம் செய்தனர்; அதன் பின்னரே அவருக்கு நிம்மதி!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் (சீக்கிய) பிரதமர் வரை திருப்பதி கோயிலுக்குப் போவது - ஏழு மலையானிடம் வேண்டுவது என் றால் என்ன பொருள்? மதச்சார் பின்மையா?

51A பிரிவில் கூறிய அடிப்படைக் கட மையைப் பரப்புவதா அது?

to develop scientific temper, humanism, spirit of enquiry and reform - என்று கூறும் அரசியல் சட் டக் கடமைக்கு இதுவா விளக்கம்?

அறிவியல் மனப்பான்மையைப் பெருக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மூடநம்பிக்கையைப் பரப்பாமலாவது இருக்க வேண் டாமா?

விஞ்ஞான ஆசிரியர், மாணவர் எல்லாம் கிரகணங்களுக்கு முழுக் குப் போடுவது அறிவியல் மனப் பான்மையா? பட்டினி கிடப் பது, சாப்பிட மறுப்பது ஆதாரமற்ற செயல் அல்லவா? அய்யோ பாரத நாடே! அஞ் ஞான பூமியே!27-11-2012

தமிழ் ஓவியா said...


செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல்


வாஷிங்டன், நவ.27- செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் ஏற்பட்டுள்ளதை, கியூரியாசிட்டி' விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து, 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள், பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் ஆராய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரோவர் விண்கலம் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்டில் தரையிறங்கியது. ரோவர் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, கியூரியாசிட்டி' என்ற ரோபோ வாகனம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து வருகிறது. கடந்த, 10ஆம் தேதி, செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட, புழுதி புயலை பதிவு செய்து கியூரியாசிட்டி, படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த படத்தை, நாசா விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஒரே மாதிரி மணமகனை தேடும் இரட்டை சகோதரிகள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற ஏடுகளிலிருந்து

ஒரே மாதிரி மணமகனை தேடும் இரட்டை சகோதரிகள்

மணமக்களை தேடும் விழாவில் ருசிகரம்

வாழ்க்கைத் துணை! ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. ஆனால் அதை தேர்வு செய்வது அவ்வளவு எளிதல்ல.

மனம் ஒத்து கைபிடித்தவர்கள்கூட மணமுறிவு ஏற்பட்டு தவிக்கிறார்கள். எல்லா பொருத்தமும் பார்த்து திருமண பந்தத்தில் இணைந்தவர்களும் துணையை இழந்து வாடுகிறார்கள். சாதி, மத கட்டுப்பாடுகளால் விரும்பிய துணையோடு இணைய முடியாமல் தவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களுக்காக சாதி மதங் களுக்கு அப்பாற்பட்டு மணமக்களை தேடும் நவீன திருமண தேடல் விழா பெரியார் திடலில் இன்று (நவ.25) நடந்தது. பொதுவாக ஜோடி சேர இளசுகள் படையெடுக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். ஆனால் இந்த இணை தேடல் விழா சற்று வித்தியாசமாக இருந்தது.

சாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்று திறனாளிகள், மணமுறிவு எற்பட்டவர் கள், துணையை இழந்தவர்களுக்காக தனி தனி பதிவு மையங்கள் அமைக் கப்பட்டிருந்தது. சாதி வேண்டாம், மதம் வேண்டாம் மனசுக்கு பிடித்த துணை வேண்டும் என்று தேடியவர்கள் கல கலப்பாக அரங்கத்தை சுற்றி வந்தார்கள்.

ஆனால் மண முறிவு ஏற்பட்டு மனம் ஒடிந்து போனவர்களும், துணையை இழந்து தவித்தவர்களும் இனி வாய்க்கும் துணையாவது காலமெல்லாம் துணையாய் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு தேடி னார்கள். அவர்களில் பலர் காமி ராவுக்கு முகத்தை காட்ட தயங்கி னார்கள். அப்போது அவர்களையும் அறியாமல் அவர்கள் கண்கள் கலங்கி யதை பார்க்க முடிந்தது.

தமிழரசி

இல்லத்தரசியாக வாழ்ந்து வெறும் 3 மாதங்கள்தான் ஆகிறது தமி ழரசிக்கு. ரயில் விபத்தில் கண வனை பறி கொடுத்து திரு மணமான மூன்று மாதத் தில் விதவை கோலத்துக்கு மாறினார். தற்போது திருப்பத்தூரில் பாலி டெக்னிக்கில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கிறார். தன்னை கண் கலங்காமல் காப்பாற்ற ஒரு துணை வேண்டும் என்பதே இவரது ஆசை.

தேவகி

திருமணமான 2 வருடத்தில் கண வனை இழந்தார். குழந்தைகளும் இல்லை. தனி மரமாக 25 ஆண்டுகளை ஓட்டி விட்டார். அயனாவரத்தில் சொந்தமாக டெய்லர் கடை நடத்தி வருகிறார். வயது ஆக ஆக வாழ்க்கையை பற்றிய பயம். நமக்கென்று துணை இல்லாவிட்டால் கடைசி காலம் எப்படி இருக்கும்....? நினைத்து பார்த்த தேவகி உறவினர்களுடன் இணை தேடி வந்துவிட்டார்.

மனைவியை இழந்தவர் கிடைத்தாலும் பரவாயில்லை கடைசி காலத்தில் எனக்கு அவரும் அவருக்கு நானுமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை நிறை வேறுமா? என்கிறார் ஏக்கத்துடன்.

தமிழ் ஓவியா said...


கீதா - சீதா

கரூர் பள்ளிப்பட்டை சேர்ந்த இவர்கள் இரட்டை சகோதரிகள் கீதா-சீதா. பள்ளி மாணவிகள்போல் ஒரே சீருடையில் வந்திருந்த கீதாவும், சீதாவும் கூறிய தாவது:-

ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாகவே படித்தோம். இப்போது இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாகவே வேலை பார்க்கிறோம். இதுவரை எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகூட வந்தது இல்லை. எங்களைப்போல் இரட்டையர் கள் மாப்பிள்ளையாக கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவோம். இல்லாவிட்டால் அண்ணன், தம்பிகளுக்கு ஒரே வீட்டில் வாழ்க்கைப்பட வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.

நாங்கள் நன்றாக படித்து சம்பாதிக் கிறோம் வரப் போகிறவரும் படித்தவராக நல்ல குணம் கொண்டவராக கொஞ்சம் அழகாக இருக்க வேண்டும் அவ்வளவு தான் என்றார்.

அமுதா

பாண்டிச்சேரியில் தனியார் மருந்து கம்பெனியில் நிர்வாக அதிகாரியாக பணி புரிகிறார் அமுதா. நாங்கள் 2 பெண்கள். அம்மாவும்- அப்பாவும் சுயமரியாதை திரு மணம் செய்தவர்கள். அதேபோல் நானும் சுயமரியாதை திருமணத்தை விரும்புகிறேன். ஆனால் ஒரு கண்டிசன் வரப்போகிறவர் எங்க வீட்டு பிள்ளையாக என் அப்பாவுக்கு மகனைப்போல் இருக்க வேண்டும் என்கிறார்.

ஜெயந்தி

பார்ப்பதற்கு ரதியாக இருந் தாலும் கால்கள் இரண்டையும் கடவுள் பறித்து விட்டானே என்று ஜெயந் தியை பார்த்த வர்கள் ஆதங்கப் பட்டார்கள். ஊன்று கோல் களுடன் வந்த ஜெயந்தி கூறிய தாவது:-

எம்.ஏ., எம்.பில் படித் துள்ளேன். நெற்குன்றம் மேட்டுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறேன். என் நிலையை உணர்ந்து எனக்கு உற்றதுணையாக இருந்து என்னை கவனித்து கொள்பவர் மாப்பிள் ளையாக கிடைக்க வேண்டும் என்றார்.

மகேந்திரன்

இரு கால்களையும் இழந்து தவழ்ந்து வந்த தாம்பரம் மகேந்திரன் (30), சொந்தமாக பழக்கடை நடத்தி மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறார்.

ஊனம் இல்லாத நல்ல மனம் படைத்த பெண் வேண்டும் என்பது இவரது ஆசை.

பாலசுப்பிரமணியன்

தேவகோட்டை பாலசுப்பிரமணியன் துபாயில் பணிபுரிகிறார். குடும்பத்தில் எல்லோரும் சமூக கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தாலும் சுயமரியாதை கொள்கை பிடிப்பு கொண்ட இவர் தனது சிந் தனைக்கு ஏற்ற பெண்ணை தேடி வந்திருந்தார்.

மதியம் வரை 200-க்கும் மேற்பட்டவர் கள் ஜோடி தேடி பதிவு செய்திருந்தார் கள். திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் மருத்துவ மற்றும் மனவள சோதனைக்கு பிறகு திரும ணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். திருமணத்துக்கு சம்மதிக்கும் ஜோடி களுக்கு கி.வீரமணி இன்று (நவ.25) மாலையில் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

நன்றி: மாலைமலர் 25.11.2012

தமிழ் ஓவியா said...


குமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு


ஆசிரியருக்குக் கடிதம்

குமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு

பேரன்புமிக்க தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு கோ. வெற்றிவேந்தன் வணக்கத்துடன் எழுதிக் கொள்வது கன்னியாகுமரியில் இருக்கும் திருவள் ளுவர் சிலை பராமரிப்பு தொடர்பான தகவலை தங்களுக்கு எழுதுகிறேன்.

கன்னியாகுமரியில் அமைக்கப்பட் டுள்ள திருவள்ளுவர் சிலை தனிக் கல்லி னால் ஆனது. கடலின் நடுவே கல்லினால் எழுப்பப்பட்ட சிலை உலகிலேயே இது ஒன்றுதான். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு வானுயர அவரது சிலை இருப்பது உள்நாட்டு வெளிநாட்டு சுற் றுலா பயணிகளை மிகவும் கவருகிறது.

திருவள்ளுவர் சிலையை தாங்கும் பீடம் 38 அடியாகவும் அந்த பீடத்தின் மேல் அமைந்துள்ள சிலை 95 அடியாகவும் கொண்டு மொத்தம் 133 அடி உயரத்தில் கடலின் நடுவே உள்ள பாறையில் அமைந்துள்ளது. பீடத்தை சுற்றி மண்டபம் உள்ளது.

திருவள்ளுவர் சிலைப் பணியின் மொத்த செலவு 10 கோடி ரூபாய். இத்திட்டத்திற்குப் பயன்படுத்திய கற் களின் எடை 7000 டன் இந்த சிலை யினை கணபதி சிற்பி அவரது தலைமை யில் 500 சிற்பிகள் கடுமையாக உழைத்து இந்த சிலையினை நிறுவினர்.

திருவள்ளுவர் சிலையினை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் 2000ஆம் ஆண்டின் முதல் நாள் அன்று கன்னியா குமரியில் திறந்து வைத்தார்கள்.

திருவள்ளுவர் சிலை உப்புக்காற்று மழை, வெயிலால் பழுதுபடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசிலிக் கான் இரசாயனம் பூசப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு (2011) இரசாயன கலவை பூசப்பட்டு இருக்க வேண்டும். இதுவரை பூசப்படாததால் சிலை மிகவும் சேத மடையும் ஆபத்து உள்ளது.

இந்த சிலையினை பராமரிக்க வேண் டும் என்று குமரி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கும், குமரி மாவட்ட ஆட்சி யருக்கும் கோரிக்கை மனு பல முறை கொடுத்தும் இதுவரை பராமரிக்கவே இல்லை. கலைஞர் அந்த சிலையை நிறுவினார் என்ற ஒரே காரணத்திற்காக தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்த சிலையினை பராமரிக்கவும், பாதுகாக்கவும் முன்வர வில்லை. கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையினை பராமரிக்க வேண்டும் என குமரி மாவட்ட தமிழர்களும் உலகத் தமிழர்களும் மிகவும் விரும்புகின்றனர். குமரி மாவட்ட திராவிடர் கழக தோழர்களின் விருப்பமும் இதுவே.

- கோ. வெற்றிவேந்தன்
மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்
கன்னியாகுமரி

தமிழ் ஓவியா said...

தமிழை, தமிழனை நேசித்த ஒரே வடநாட்டுத் தலைவர்


அரசியலில் நேர்மையையும் நியா யத்தையும் கடைப்பிடிப்பவர்களுக்குச் சோதனைகள் அதிகமாகவே இருக்கும். வி.பி.சிங்கிற்கும் அப்படித்தான். ஆதர வளித்துவந்த பாரதிய ஜனதா கட்சி தரப்பிலிருந்து நெருக்கடிகள், துணைப் பிரதமர் தேவிலால், சந்திரசேகர், சுப்ர மணியசாமி போன்றவர்களும் வி.பி. சிங் கிற்கு நெருக்கடிகளை உண்டாக்குபவர் களாக இருந்தார்கள். எத்தனை குறுக் கீடுகள் ஏற்பட்டாலும் அவர் அது பற்றிக் கலங்காதவராகவே செயல்பட்டார்.

எது நியாயம் என நினைத்தாரோ அதனைச் செயல்படுத்துவதில் உறுதியாகவே இருந்தார். உள்கட்சி நெருக்கடிகள் அதி கரித்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவேன் என்ற உறுதியை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரி அவர் நிகழ்த்திய உரையில் சமூக நீதியின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத் தினார். அதனை வலியுறுத்திப் பேசும் போதெல்லாம் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரது பெயர்களை உச்சரித்தார்.

தன் அரசைக் கவிழ்க்க முயல்வது ஏன் என்பதை விளக்கிப் பேசிய அவர், மண்டல் பரிந்துரையை அமல்படுத்த முயன்றது தான் எல்லாவற்றிற்குமே அடிப்படைக் காரணம். அதை நேரடியாக எதிர்க்க முடியாத சக்திகள் வேறு காரணங்களைக் காட்டி திரை மறைவிலிருந்து ஆட்சியைக் கவிழ்க்கச் செயல்பட்டனர் என்றார். எனது கால்கள் உடைக்கப்பட்டிருக் கலாம். ஆனால் அடைய வேண்டிய இலட் சியத்தை நான் அடைந்துவிட்டேன். மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம்.

அதற்காகப் பெருமைப்படுகிறோம். அரசியல் நாள்காட்டிகளில் கடைசி தேதி என்று எதுவும் கிடையாது என்று உறுதியான குரலில் தெரிவித்துவிட்டு தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொண்டார். பிரதமர் பதவியைத் துறந்ததுமே தனக்கு அளிக் கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி தெரிவித்த கண்ணியமான மனிதர் வி.பி.சிங். அவரது அரசைக் கவிழ்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர்.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.க் களை மட்டுமே தன்வசம் வைத்திருந்த அவரை காங்கிரஸ் கட்சி ஆதரித்ததால் சந்திரசேகரை பிரதமர் பொறுப்பேற்க அழைத்தார் அன்றைய குடியரசுத் தலை வர் ஆர். வெங்கட்ராமன். தனது ஆட்சி யைக் கவிழ்த்துவிட்டு சந்திரசேகர் பிரதம ராகப் பதவியேற்றார் என்றபோதும் அது பற்றிய அரசியல் காழ்ப்புணர்வு ஏதுமின்றி சந்திரசேகரின் பதவியேற்பு விழாவில் தம் மனைவி சீதாசிங்குடன் கலந்து கொண்ட பண்பாளர் வி.பி.சிங். தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக் கும் கலைஞருடன் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் வி.பி.சிங். மண்டல் ஆணை யத்தின் அறிக்கையை அமல்படுத்திய வெற்றிவீரராக அவரைப் பொதுமக்கள் திரண்டு வரவேற்றனர்.

தமிழ் ஓவியா said...

எந்த ஊருக்குச் சென்றாலும் வழியெங்கும் கூட்டம் நிறைந் திருந்தது. அவரை வரவேற்று ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தன் இனிஷியல் ஆங்கிலத்திலும் சிங் என்பது தமிழிலும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த வி.பி.சிங் காரில் பயணித்தபடியே அதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிப் பழகினார். தமிழ்மொழியும் தமிழர்களின் அன்பும் அவரைக் கவர்ந்தன. தன் கவிதைகள் தமிழில் வெளிவரு வது பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ள வி.பி.சிங் தமிழக மக்கள் என்மீது நிறைந்த பாசத்தைப் பொழிந்துள்ளனர்.

அவர்கள் எனக்குக் காட்டும் பாசவுணர்வுக்கு எந்தவொரு பொருளும் மாற்றுப் பரிசாக இருக்க முடியாது. ஆகையால் என்னுடைய ஆழ்ந்த உணர்வுகளை அவர்கள் முன்பு வைக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரி வித்தார். அதோடு தனது தமிழாக்க கவிதை நூலிலிருந்து கிடைக்கும் வரு மானத்தை திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளித்துவிடு மாறு தெரிவித்தார் வி.பி.சிங். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங் களில் கலவரங்கள் வெடித்தன.

இத்தகைய தொடர் வன்முறைகளால் இந்தியா மதவெறிக்காடாக மாறிவிடும் என அச்சம் கொண்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரை எதிர்த்து உண்ணும்விரதம் இருந்தனர் மதவாதிகள். தனது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதால் தண்ணீர் கூடக் குடிப்பதை நிறுத்திவிட்டார் வி.பி.சிங். அதனால் சிறுநீர் வெளியேறுவது நின்றது. இதனால் அவரது இரண்டு சிறுநீரகங் களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப் பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வி.பி.சிங்கின் ஆட்சியைப் பறித்த மதவாதம் அவரது சிறுநீரகங்களையும் பறித்துவிட்டது. வி.பி.சிங்கிற்கு சிறுநீரகக் கோளாறு என்றதும் துடித்துப் போயினர் தமிழக மக்கள். அவருக்கு மாற்று சிறு நீரகம் பொருத்துவதற்காகத் தங்களின் சிறுநீரகத்தைத் தர முன்வந்தனர் ஒரத்த நாட்டைச் சேர்ந்த திராவிடர் கழக இளை ஞர்கள். ஆனால் வி.பி.சிங் வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகத்தைப் பெற்று என் ஆயுளை நீட்டித்துக்கொள்ள விரும்ப வில்லை.

என்மீது அன்பு கொண்டு சிறு நீரகம் தர முன்வந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னதுடன் அடுத்த பிறவி என ஒன் றிருந்தால் நான் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் என்றார் இதயம் நெகிழ. 15 ஆண்டுகளாக அவரை வாட்டி வதைத்த நோய்கள் உச்சக்கட்டத்தை எட்டின. 2008 நவம்பர் 27ஆம் நாள் (இன்று) தமது (77 வயது) இறுதி மூச்சு வரை சமூகநீதியையும் மதச்சார்பின்மை யையும் இறுகப் பற்றியிருந்த வி. பி. சிங்கின் உயிர் பிரிந்தது. அவர் கொள்கையும் எண்ணமும் வென்றது. (நன்றி: கவின்மீடியா)

தமிழ் ஓவியா said...

துறவறத்தை விட தொண்டறமே மேலானது!
அரிமா சங்கங்களின் மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரை

திருச்சி, நவ. 27- துறவறத்தை விட தொண்டறமே மேலானது! என்றார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். அரிமா சங்கங்களின் மண்டல மாநாடு திருச்சி ஓட்டல் பெமினாவில் 25.11.2012 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

அரிமா சங்க மண் டலத் தலைவர் எம்.எஸ்.பற்குணன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட்ட ஆளுநர் ஆர்.முருகேசன் தொடக்கவுரையாற்றினார். மாநாட் டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது கூறியதாவது:

பிறவி பேதம்

இந்நாட்டில் மதப்பற்று இருக்கிறது. எல்லைப் பற்று இருக்கிறது. மொழிப்பற்று இருக்கிறது. ஜாதிப்பற்று இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி மானூடப்பற்று வேண்டும். தன்பெண்டு, தன்பிள்ளை என இல்லாமல் பொது வாழ்க்கைக்கு பாடுபட வேண்டும். நாத்திகமா? ஆத்திகமா? என்பது வேறு பிரச்சினை. நாட்டில் பிறவி பேதம் இன்னும் இருக்கிறது.

ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவர் என்ற நிலை மாற வேண்டும். இம்மாநாட்டில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கியுள்ளீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களை நான் பாராட்டுகிறேன்.

தொண்டறமே சிறந்தது

பல நாடுகளில் மதம், மொழி, இனம் என மக்கள் பிளவுப்பட்டுக்கிடந்தாலும் இந்தியா வில்தான் ஜாதி நம்மை மேலும் பிரிக்கிறது. மற்றவர் களின் துன்பதைத் தன்னுடைய துன்பமாகக் கருதி தொண்டாற்றுவதுதான் உண்மையான தொண்டு. அதுதான் தொண்டறம். அறிவு நிரம்பியவர் என்ப தன் அர்த்தமே அடுத்தவரின் துன்பத்தை போக்குவ தால்தான் முழுமை பெறும். துறவறம் பூண்டவர்கள் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக இருக்கிறார்கள். துறவறம் முக்கியமல்ல. தொண்டறமே முக்கியம். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

இரக்கப்படுவது என்பதையும் தாண்டி, பாதிக்கப்படுபவர்களின் மனநிலையில் இருந்து அவர்களுடன் இணைந்திருந்து ஒத்தது அறிவான் என்ற குறளின்படி வாழ்வது அவசியம். அவர்கள் தான் வள்ளுவத்தின்படி வாழ்கிறார்கள் என்று கருத முடியும்.

ஒழுக்கச் சிதைவை தடுக்க வேண்டும்

பொது உணர்வுடன் சிந்திப்பவர்களாக மக்களை உருவாக்க வேண்டியது நமது கடமை. அதன் மூலம் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.

பொது ஒழுக்கத்தைச் சொல்லித்தர தனியே அமைப்புகள் இல்லை. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வாக்குகள் மட்டும் எங்களுக்கு வேண் டும் என்றுதான் பல கட்சிகளும் சொல்கிறார்கள். எனவே பொது ஒழுக்கச் சிதைவைத் தடுக்க வேண்டியது அரிமா போன்ற அமைப்புகளின் கடமை. அதே போன்று நேர்மையான ஜனநாயகமும் தேவை. இதையும் அரிமா போன்ற சங்கங்கள் முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி பேசினார்.

பாராட்டு

விஜய் டி.வி.யில். செல்லக்குரலுக்கான இசை நிகழ்ச்சியில் திருச்சியை சார்ந்த ஆஜித் என்ற 6 ஆம் வகுப்பு மாணவர் வெற்றி பெற்றார். அவருக்கு இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்கள். மேலும் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து ஆஜித்தை பாராட் டினார். முன்னதாக செயலாண்மைக் குழுத்தலைவர் பி.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் ஆர்.ராமதாஸ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மண்டல அளவில் அரிமா சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.