Search This Blog

13.11.12

தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாட அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்!

தீ நாள்!

(1949இல் தந்தை பெரியார் (அக்டோபர் 10-இல்) எழுதிய தீபாவளிபற்றிய தீ நாள் எனும் கட்டுரையைப் படியுங்கள். மானமுள்ள - திராவிடர்கள் - தீபாவளி எனும் ஆரிய கற்பனைப் பண்டிகையைக் கொண்டாடும் பரிதாபத்திற்குரியவர்களே - சிந்தியுங்கள்  - ஆசிரியர்)

என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை - பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத் தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.
செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண் டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம் -  சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால்  நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.

சுயமரியாதைக்காரர்கள் - திராவிடர் கழகத்தார்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்ட தென்றோ எப்படிப்பட்ட ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப் பார்ப்பனர்களும் கொண்டாடத்தான் செய்கிறார் கள். பார்ப்பனர் அல்லாதவர்களிலும் பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?

பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத - நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?

மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகாவிஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூல விக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் - நம்ப முடியாது.

ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்? சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன் - பட்டதாரி - அரசியல் தந்திரி - மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால்.

இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல்படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோத மான இந்நாட்டுப் பழங்குடி மக்களை - மக்களின் தலைவர்களை அசுரர்கள் - அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கினின்றெல்லாம் எழுதிவைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் - அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.
இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வரமுடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப் படுவதா?

திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டி கையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம்.
தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!

        ----------------------------தந்தை பெரியார்- "குடிஅரசு' - தலையங்கம் - 15.10.1949

14 comments:

தமிழ் ஓவியா said...


வெட்கங் கெட்ட இனமலர் பூணூல்களே! இப்படி புத்தி கெட்டு அலையலாமா?


ஊருக்கு இளைத்தவன் பிராமணன்!

என்ற தலைப்பில் பி.தனபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஸ்ரீரங்கத்தில், பாவப்பட்ட ஒரு ஐயர், தன் ஓட்டலுக்கு, "பிராமணாள் ஓட்டல்' என்று எழுதி வைத்ததில், வீரமணிக்கு அப்படி என்ன கடுப்பு?ஒருவர், தன் ஓட்டலில், "பிராமணாள் கபே' என்று எழுதி வைக்கக் கூட, இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா?அந்த ஓட்டலுக்கு வீரமணி சாப்பிடப் போக, அங்குள்ள வர், "இங்கு பிராமணாளுக்குத்தான் சாப்பாடு போடுவோம்' என்று சொன் னார்களா?

இல்லையே...பிராமணாள் ஓட்டல் என்றால், பருப்பு, நெய்யுடன், அருமையான முழுச் சாப்பாடு கிடைக்கும் என, பலரும் வருவர்; நாமும் சில சில்லறையைப் பார்க்கலாம் என, அப்படி எழுதி இருக்கலாம் அல்லவா! "பிராமணாள் கபே' என, எழுதியதால், சைவம் சாப்பிடுபவர்கள், தைரியமாகப் போய் சாப்பிடுவர்.

மிலிட்டரி ஓட்டலிலும், சைவ சாப்பாடு கிடைக்கும்; ஆனால், சமைக்கும் பாத்திரம், சைவம் சமைக்க மட்டுமே உபயோகிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் வரும் அல்லவா?"பிராமணாள்' என்று எழுதியதில், எங்கிருந்து வந்தது - வர்ணாசிரமம்? வர்ணாசிரமம் என்றால் என்ன தெரியுமா?வர்ணம் என்றால் என்ன ஜாதி என்பது பொருள். ஆசிரமம் என்பது, ஓர் ஆசானிடம் கற்றுக் கொள்வது.

இங்கு, மகன், தந்தையிட மிருந்து கற்றுக் கொள்கிறான். அதுதான், வர்ணம், ஆசிரமம் = வர்ணாசிரமம். இப்போது, எல்லாவற்றிற்கும் பட்டய படிப்பு வந்துள்ளது; சொல்லிக் கொடுக்கின்றனர். அன்றைய கால கட்டத்தில், தந்தையைப் பின்பற்ற, அந்தத் தொழிலை, அவன் கற்று வந்தான்.இன்று, முடி திருத்தம் செய்வது, மண்பாண்டம் செய்வது போன்றவற் றிற்கு பட்டய படிப்பு உள்ளது. இன்று வரை அது வர்ணாசிரமம் தான்.

வீரமணியிடம் ஒரு கேள்வி... இஸ்லாமிய சாப்பாட்டுக் கடைகளில், "இங்கு, எல்லாம் "ஹலால் செய்யப் பட்டது' என, எழுதியிருப்பர். அப்போது தான், அங்கு முஸ்லிம்கள் சாப்பிடுவர்; அவர்களிடம், "இனி,"ஹலால்' என் பதை எடுத்து விடும்படி சொல்லவேண் டியது தானே...சொல்லமாட்டார்; அப்படி சொன்னால், வீரமணி, "ஹலால்' ஆகி விடுவார்.

எவருக்கு விருப்பம் இருக்கிறதோ, அவரவர்கள், அந்தந்த ஓட்டலுக்குப் போய் சாப்பிடப் போகின்றனர். இந்த, "பகுத்தறிவு' மேதையைக் கேட்டுக் கொண்டா, ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டும்?உங்களது அறை வாயிலில், "மானம் தமிழனின் உயிர்' என, எழுதி இருக்கும். ஆனால், வாயிலில், செருப்பை கழற்றி போட்டு விட்டுத் தான் போக வேண்டும்' என, எழுதப்பட்டிருக்கும்.

இப்போது எங்கே போனது தமிழனின் தன்மானம்? முதலில், நீங்கள் திருந்திய பின், மற்ற வரைத் திருத்த முயற்சியுங்கள்.ஈ.வெ.ரா., போய்விட்டார்; வீரமணிக்கு நல்ல காலம்.பாவம்... ஊருக்கு இளைத்தவன், பிராமணன் என்றாகி விட்டது.... என்ன செய்ய!

தினமலர், 12.11.2012

தமிழ் ஓவியா said...

பூணூல் மலரில் இப்படி எழுதி புளகாங் கிதம் அடையும் புண்-ணாக்கே, நீர் புரிந்து கொள்ள சில செய்திகள்.

மற்றவர்களைப் புண்படுத்த (கீழ் ஜாதியாக) அரசியல் சட்டத்தில் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதா? மாறாக, அரசியல் சட்டப்படி உள்ள அடிப்படைக் கடமைகளில் முக்கியமானது, அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) இதன்படியோ அல்லது அது வற்புறுத்தும் மனிதநேயம் (Humanism) சமூக சீர்திருத்தம் (Reform) படியோ எந்த வகையில் அதற்கு நியாயம் கற்பிக்கப்பட முடியும்?

பிராமணள் ஓட்டல் என்றால் பருப்பு நெய்யுடன் அருமையான முழுச்சாப்பாடு கிடைக்கும் என பலரும் வருவர், நாமும் சில்லறையைப் பார்க்கலாம் என, அப்படி எழுதியிருக்கலாம் அல்லவா என்று கேட்கும் அதிமேதாவியே, அதுபோது ஏராளம் பேர் அன்றாடம் பருப்பு, நெய், வெத்தக்குழம்பு (அவாள் பாஷையில்) வடபாயாசம், தயிருஞ்சா, எல்லாம் தர்ற சரவண பகவான்களும், சங்கீதாக்களும் பல நூற்று கணக்கில் வியாபாரம் செய்து கோடீசுவரர் ஆகியுள் ளனரே - அவர்கள் பிராமணாள் போடவில்லையே - அதற்கு பதில் கூறுவீர்களா?

வேண்டுமானால் பருப்பு, நெய்யுடன் முழுச்சாப்பாடு கிடைக்கும் போடலாமே!

வங்காளத்தில் பிராமணாள் கடையில் மச்ச அவதாரம் - மீன்கறியும் கிடைக்குமே. அதுபோல அங்கே இந்த பருப்பு மட்டும் வேகாது! மீன் வகையறாக்கள் ஏராளம் உண்டே!

ஏழை மிலிட்டரி ஓட்டலிலும் சைவ சாப்பாடு கிடைக்கும் ஆனால் சமைக்கும் பாத்திரம் சைவம் சமைக்க மட்டுமே என்ற சந்தேகம் வரும் அல்லவா? என்று வியாக் கியானம் செய்யும் விவஸ்தையற்றதுகளே, விஜிட்டேரியன் என்று போட்ட ஓட்டல் களுக்கு நாட்டில் பஞ்சமா? அரிதா?

பிராமணாள் என்பது ஜாதி அல்ல; வர்ணம் என்பதை காஞ்சி சங்கராச்சாரியார் கூறியிருப்பது ஒருபுறம் இருக்கட்டும் - சிலநாள்களுக்கு முன், எதற்கு இந்த வீண் வேலை என்று ஓட்டல்காரருக்கு அறிவுரை யாக எழுதி வெளியிட்ட உங்கள் ஏட்டில் வெளிவந்த கடிதமே (1.11.2012) சரியான சான்று அல்லவா?

ஏன் இப்போது இரட்டை வேடம்? ஹலால் என்று போடப்பட்டதால் எந்த முஸ்லீம் யாரைத் தாழ்த்துகிறார்? சூத் திரன் என்பதால் தாசி புத்திரன் என்ற அவமானத்தை, இழிவைச் சுமக்கச் செய்கிறான் என்று கூறமுடியுமா?

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கின் விலை இவ்வளவு என்று கூறி திசை திருப்பும் இந்த தில்லுமுல்லு, திருகுதாளம் - சிண்டு முடியும் சில்லரைத் தனம் ஏன்?

வீட்டுக்கு வெளியே வருபவர் எவரும் செருப்பை முன்பகுதியில் விட்டு விட்டு வருகின்றனர். சுகாதாரம் கருதியே தவிர, அவமானப்படுத்தும் அடிமைத்தனம் ஆகாது. நீங்கள் எல்லாம் - அது இராமன்பீடத்தில் 14 ஆண்டு ஆட்சி புரிந்தது என்பதற்காக வெளியில் வைத்துக் கொண்டே பெரியார் திடலுக்கு வாருங்கள். எங்களுக்கு மறுப்பேது மில்லை உங்கள் வீட்டில் செருப்பைத் தான் வீடு முழுவதும் போட்டுச் செல்லுங்கள்.

எங்களுக் கென்ன ஆட்சேபணை?

இதே பார்ப்பன உணவு விடுதிகள் முன்பு பிராமணர்-கள் சாப்பிடும் இடம் சூத்திராளுக்கு இந்த இடம் என்று எழுதி வைத்திருந்ததை மாற்றிய இயக்கம் இது!

அங்கேயே கிருஷ்ணய்யர்கூட சிறீரங்கத் தில் மாற நினைத்தாலும் இந்த கோபிகை களின் மைந்தர்கள் மாறவிட மாட்டார்கள் போலும்! அட பூணூல் வக்கிரங்களே, மனிதன் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறப் போகிற விஞ்ஞான காலத்தில் இப்படி ஒரு விதண்டாவாதமா? வெட்கமாக இல்லையா, உங்களுக்கு? மகா மானக்கேடு!

தமிழ் ஓவியா said...


இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கூடாது!
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்
இந்தக் கோரிக்கைகளை நாம் தொடர்ந்து வைத்து வந்தாலும் இந்திய அரசு நமக்கு உதவிட முன்வரவில்லை

நமது ஒத்துழைப்பு தொடர வேண்டுமா என்பதை டெசோ தலைவர் முடிவு செய்யட்டும்!
தமிழர் தலைவர் இன முழக்கம்!

சென்னை, நவ.12- இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் இராணுவப் பயிற்சி அளிக்கக் கூடாது; தமிழக மீனவர்கள் தாக்குவது நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து நாம் குரல் கொடுத்தும் இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் நமது ஒத்துழைப்பு அவர்களோடு தொடர வேண்டுமா என்பதை டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.


தமிழ் ஓவியா said...

டெசோ தீர்மானங்களை அய்.நா. மன்றத்திற்கும், மனித உரிமைகள் ஆணையத்திற்கும் அளித்து, உண்மை நிலைகளை நேரில் விளக்கி நல் ஆதரவு பெற்றுத் திரும்பி வந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர்களுக்கு அளிக்கப்பட்ட பாராட்டு வரவேற்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆற்றிய சங்கநாத உரை. (11.11.2012)

டெசோ சார்பில் தூதுவர்களாக மட்டுமல்ல; துருப்புகளாகச் சென்று, வெற்றிகரமாக தம் பணிகளை முடித்துத் திரும்பியிருக்கக் கூடிய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோள்கள்மீது மேலும் சுமை!

பாராட்டு விழா என்ற பெயரில் அவர்களின் தோள்கள்மீது மேலும் சுமைகளை - பொறுப்புகளை சுமத்தும் விழா என்று கூடச் சொல்லலாம்.

ஈழத் தமிழர் பிரச்சினையை திராவிட இயக்கங்கள் கைவிட்டது என்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை சிலர் உருவாக்கப் பார்க்கின்றனர்.

எந்தக் கதவைத் தட்டுவது?

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக எந்தக் கதவு தட்டடப்பட வேண்டுமோ, அந்தத் கதவினை டெசோ தட்டியிருக்கிறது அதுவும் வெற்றிகரமாக முடிந்திருக் கிறது.

நமது தளபதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அதற்கு அவர் அளித்த பதில் பெருமைப்படத்தக்கதும் - மற்றவர்களால் பின்பற்றப் படத்தக்கதுமான பண்பாடு செறிந்ததாகும்.

தளபதி ஸ்டாலின் அவர்களின் போற்றத்தக்க பதில்!

உங்கள் நாட்டிலே ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஒத்த கருத்தோடு இருக்கிறார்களா - என்ற கேள்விக்கு ஆமாம்; ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையின்மீது அக்கறையோடு எல்லா கட்சியினரும் இருக்கிறார்கள் என்று பதில் சொன்னது இருக்கிறதே - அது சாதாரணமானதல்ல.

திராவிட இயக்கத்தில் இந்த அணுகுமுறையை எண்ணிப் பார்க்க வேண்டும்; குறிப்பாக இந்நாட்டில் உள்ள ஊடகங்கள் கவனிக்கவேண்டும்.

நமது நாட்டு ஊடகங்களின் வருந்தத்தக்க நிலை

நாம் மிகவும் வருந்த வேண்டியது - நமது நாட்டின் ஊடகங்களைப் பற்றித் தான்; ஊடகங்களே நீதிபதிகளாகி இங்கு தீர்ப்புகளை எழுதிக் கொண்டு இருக்கிறார்களே - இது எந்தவகையில் சரி?

லண்டன் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற தளபதி மு.க. ஸ்டாலினை சுற்றிக் கொண்டு கேள்வி களைக் கேட்டார்கள் - ஸ்டாலின் பதில் சொல்ல முடியாமல் திணிறினார் என்றெல்லாம் எழுதினார்கள் புளுகினார்கள் - அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா?

நடக்காதபோது இவர்கள் எழுதுகின்றனர் என்றால், அதன் பொருள் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும் என்ற ஆசைதான். (விடுதலைச்சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் அப்படி ஒரு நிகழ்ச்சியே அங்கு நடக்கவில்லை என்று கூறியதையும் நினைவூட்டிக் கொள்வது நல்லது)

கலைஞர் கனிமொழியும் தளபதி ஸ்டாலினும்

மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருக்கக் கூடிய திருமதி நவநீதம் பிள்ளை அவர்களைச் சந்திப் பதற்கு, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி பங்காற்றியதை மறக்காமல் இங்கே குறிப்பிட்டார் - நமது ஸ்டாலின் அவர்கள் இனிமேலாவது சிண்டு முடியும் வேலையை நமது ஊடகங்கள் கைவிட வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் இந்த நிகழ்ச்சிக்குச் சற்றுத் தாமதமாக வந்தார். ஒருக்கால் அவர் இந்த நிகழ்ச்சியில் இன்று பங்கு ஏற்காமல் போயிருந்தால் தொடர் கதைகளை எழுதலாம் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஊடகக்காரர்களுக்கு ஏமாற்றம்தான்! (பலத்த கைதட்டல்).

ஊடகங்களை நம்பி கட்சி நடத்தவில்லை

ஊடகங்களை நம்பி நாங்கள் ஒன்றும் இயக்கம் நடத்தவில்லை; தொலைக்காட்சிகள் தோன்றாத கால கட்டத்திலே திராவிடர் இயக்கத்தைத் தோற்றுவித்து இயக்கம் நடத்தியவர்கள் நாங்கள்.

சில புலம் பெயர்ந்த தமிழர்கள்கூட உண்மைகளைப் புரிந்து கொண்ட நிலையில் இல்லை. இப்பொழுது தான் புரிந்து கொண்டு வருகிறார்கள்.

ஏன் நியாயம் கிடைக்கவில்லை?

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஏன் நியாயம் கிடைக்க வில்லை? முக்கிய காரணம் முன்பு அந்தப் பிரச்சினை சர்வதேச அளவில் ஆதரவு பெற்றிருக்கவில்லை; உரிய முறையில் அவர்களின் கவனத்தை எட்டச் செய்யவில்லை. அந்தப் பணியைத்தான் டெசோ செய்திருக்கிறது.

இலங்கையில் நடந்தது சுதந்திரப் போராட்டமே தவிர தீவிரவாத செயல்பாடுகள் அல்ல. அங்கு ஏதோ தீவிரவாதம் தலை தூக்கி நிற்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உலக நாடுகளில் பரப்பி விட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

உண்மையின் வெளிச்சம்!

அந்த நிலை மாறி அந்நாடுகளின்மீது உண்மையின் வெளிச்சம் விழச் செய்யப்பட்டுள்ளது. டெசோ மாநாடு - அதனைத் தொடர்ந்து நமது ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும் மேற்கொண்ட பயணம் இவை உலக நாடுகள் மத்தியில் மேலும் வெளிச்சத்தைக் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

ஒரு புயல்அல்ல - இன்னும் பல புயல்களை சந்தித்தாக வேண்டும், கடந்தாக வேண்டும். அதற்கான திராணியும் நமக்குண்டு.

இன்றுகூட இலங்கையில் என்ன நடந்து கொண்டுள்ளது?

இலங்கையில் இப்பொழுதுகூட என்ன நடந்து கொண்டு இருக்கிறது? பாதுகாப்பான இடம் என்று சிறைச் சாலையைத் தான் சொல்லுவார்கள் - அங்கேயே கலகம் துப்பாக்கிச் சூடு வெளிக் கடைச் சிறையில் பத்திரியாளர்கள் தாக்கப்படுகின்றனர் - அதற்கென்று கூலிப் படைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

பாரீஸ் நகரத்தில் விடுதலை இயக்கப் போராளியைக் கூலிப் படையையமர்த்தி சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.

இடி அமீன்களை நாம் பார்த்ததில்லையா? அவர்களின் முடிவு என்ன? இட்லர்களையும், இடிஅமீன்களையும் வரலாறு குப்பையில் தானே தூக்கி எறிந்திருக்கின்றது.

தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு எழுதவில்லை என்பதற்காக அந்த நீதிபதியையே பதவி நீக்கம் செய்கிறார் - சிங்கள இனவாத ராஜபக்சே!

இராணுவத் தளபதியாக இருந்தவர் சிறைக்குள் தள்ளப்படுகிறார்? இலங்கையில் ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா? நடக்கிறதா?

அய்.நா.வில் முக்கிய அதிகாரியை சந்தித்தேன்!

நியூயார்க் நகரில் அய்க்கிய நாடுகள் சபையில் தெற்காசியாவின் முக்கிய அதிகாரியாக இருப்பவர் ஹியோகிடென் - அவரை கடந்த ஜூன் மாதத்தில் (27) சந்தித்து 50 நிமிடங்கள் உரையாடினேன். அவர் கடைசியாக என்னிடம் சொன்னது - இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் அழுத்தம்தான் மிக முக்கியமானது அதனைச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் என்று குறிப்பிட்டார்.

டெசோ தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!

இந்த நேரத்தில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒருவேண்டுகோளை முன் வைக்கிறேன்.

இலங்கை இராணுவத்துக்கு இங்கு பயிற்சி கொடுக்கக் கூடாது; தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தி யாவில் எந்த இடத்திலும் இராணுவப் பயிற்சியைக் கொடுக்கக் கூடாது என்று ஒரு முறையல்ல; இரு முறையல்ல; பல முறை வற்புறுத்தியுள்ளோம் - டெசோ மாநாட்டிலும்கூட அழுத்தத் திருத்தமாகக் கூறினோம்.

நாம் தொடர முடியுமா?

ஆனால் இந்திய அரசு நமது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளதா?

அதே போலவே தமிழக மீனவர்கள் பிரச்சினை; எத்தனையோ முறை நமது அமைப்புகள் சார்பிலும், மாநில, மத்திய அரசுச் சார்பிலும் இலங்கை அரசிடம் இந்தக் கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டதே - ராஜபக்சே அவற்றை ஒரு பொருட்டாக மதித்தாரா? இன்று வரை அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு தானே உள்ளது!

எனவே டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்களே! இந்திய அரசு மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நமக்கு உதவவில்லையென்றால் நாம் அவர்களோடு தொடர முடியுமா என்பதை ஓர் நிபந்த னையாக (Ultimatum) வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். டெசோ தலைவர் அவர்களில் முடிவுக்கே இதனை விட்டு விடுவோம் என்று குறிப்பிட்டார்.

கழகத்தின் சார்பில் பாராட்டு

திராவிடர் கழகத்தின் சார்பில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி., ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

இது மனித உரிமை இயக்கம்!

இந்த இயக்கம் பிறந்ததே மனித உரிமைக்காகத்தான் - தருமபுரி அருகில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக தாழ்த்தப்பட்டோர் வீடுகள் நூற்றுக்கணக்கில் எரிக்கப்பட்டுள்ளன. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜாதி, தீண்டாமை எனும் கொடிய நோய்களை எதிர்த்துப் போராடுவோம். எங்களுக்கென்று பல அஜண்டாக்கள் உள்ளன. எந்தப் பிரச்சினைக்கு, எந்த அளவுக்கு இடம் என்று இருக்கிறது.

மனித உரிமைகள்பற்றி எங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம்! முள் வேலிக்குள் இன்னும் ஈழத் தமிழர்கள் எனும் நிலை உள்ளது. இந்து ஏடே கூறுகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் யாழப்பாண பகுதியில் 18 ஆயிரம் இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளனராம். இதுவும் மனித உரிமைப் பறிப்புதான் - அச்சுறுத்தல்தான்! இவற்றை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுப்போம் - வாருங்கள்!

- தமிழர் தலைவர்

தமிழ் ஓவியா said...


உறுதுணையாக இருக்குமா இந்தியா?


சென்னை - அண்ணா அறிவாலயம் கலைஞர் மண்டபத்தில் நேற்று (11.11.2012) மாலை நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் ஈழத் தமிழர் வரலாற்று ஓட்டத்தில் முக்கிய இடம் வகிக்கக் கூடியதாகும்.

டெசோ மாநாட்டில் (சென்னை - 12.8.2012) நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை குறித்த விளக்கங்கள் அடங்கிய ஆவணத்தை அய்.நா.விலும், மனித உரிமை ஆணையத்திடமும் வழங்கிட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் சென்றிருந்தனர். அந்தப் பணி களை வெற்றிகரமாக நடத்தித் திரும்பிய அவ்விருவர்க் கும் நடைபெற்ற வரவேற்புப் பாராட்டு விழா நிகழ்ச்சி அது.

பாராட்டு விழா என்று சொல்லப்பட்டாலும், அதனை மய்யப்படுத்தி ஈழத் தமிழர் உரிமைகள்பற்றி விளக்கமான கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டன.

ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அறவழி யில் போராடியது ஒரு கட்டம். இலங்கை அரசு அசல் சிங்கள இனவாத அரசாக உருவெடுத்து, ஈழத் தமிழினம் என்ற ஒன்று வரலாற்றில் இருக்கக் கூடாது என்கிற திட் டத்தில் செயல்பட்டதன் காரணமாக ஈழத் தமிழர்களிலே போராளிகள் உருவாகி ஆயுதம் தாங்கிப் போராடியது இன்னொரு கட்டம்.

பன்னாட்டு இராணுவ உதவிகளுடன், ஈழத் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்தது மற்றொரு கட்டம்.

இந்த மூன்று கால கட்டங்களிலும் தமிழ்நாடு பலவகைகளிலும் ஈழத் தமிழர்கள் பக்கம் நின்று வந்திருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சியே இதுகுறித்து கருத்தும் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய கால கட்டத்தில் கவனிக்கப்பட வேண் டியது - எஞ்சி இருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமையைப் பற்றியதும் மற்றும் அரசியல் தீர்வுமாகும்.

அய்.நா. மூலம் தான் இதற்குத் தீர்வு காணப்பட முடியும் என்ற நிலையில் பன்னாடுகளின் ஆதரவு மிக முக்கியமாகத் தேவைப்படும் இந்தக் கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட டெசோ என்ற அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தி.மு.க. திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆகியவை இந்த அமைப்பில் இணைந்துள்ளன.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில் பல விமர்சனங்கள் எழுந்ததுண்டு.

ஆனாலும் டெசோ உருவாக்கப்பட்டு, சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்பட்டதும், அம்மாநாட்டில் இந்தி யாவின் பல மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல; பன்னாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு திறந்த மனதோடு கருத்துக்கள் வெளியிட்டதும், அவசியமான, ஆழமான கருத்தாக்கம் கொண்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் உலகக் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு நிலையை உருவாக்கி விட்டன.

இந்திய அரசின் போக்கிலும் சில மாற்றங்கள் ஏற்படவும் வழி வகுத்தது.

அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சந்திப்பு என்பது - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் மேலும் அடுத்த கட்ட பாய்ச்சலாகும்.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி வந்த இலங்கை அரசு இப்பொழுது பன்னாடுகளின் முன்னிலையில் கைகட்டி நிற்கும் ஒரு அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு இந்த நேரத்தில் ஓர் அழுத்தத்தைக் கொடுக்குமேயானால் அனேகமாக ராஜபக்சே தண்டனைக்குரிய குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற் கான கூடுதல் சூழல் விரைவில் உருவாகும்.

இந்த விடயத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியா நடந்து கொள்ளவில்லை. குறிப்பாக இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டை யாடப்படுவது என்பதில் இந்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு வருகிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்த இரு பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, இந்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது பற்றிய முடிவினை டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் கூறினார்.

நிறைவுரையாற்றிய மானமிகு கலைஞர்அவர்கள் இந்திய அரசு நமக்கு உறுதுணையாக இருந்தால், நாமும் உறுதுணையாக இருக்க முடியும் என்று அறிவித்திருப்பது அர்த்தம்மிக்கதும், அவசியமானதுமாகும்.

உறுதுணையாக இல்லாவிட்டால் நாமும் உறு துணையாக இருக்க முடியாது என்பதை இதன் மூலம் கலைஞர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள்.

இது உல கெங்கும் அலைகளை ஏற்படுத்தக் கூடியதுதான், இதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியா என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்!

பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது. 12-11-12

தமிழ் ஓவியா said...


கட்டப்பட்டிருக்கின்றன


உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.

(விடுதலை, 12.10.1962)

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்புக்கு அய்.நா. மன்றத்தைத் தயார்படுத்த வேண்டும்


ஈழத் தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்புக்கு அய்.நா. மன்றத்தைத் தயார்படுத்த வேண்டும்; அதற்கு
இந்திய அரசு உறுதுணையாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உறுதுணையாக நாமும் இருக்க முடியும்!
டெசோ தலைவர் கலைஞர் இனமான உரை

சென்னை, நவ. 12 - இலங்கைத் தமிழர்களுக்காக அய்.நா மன்றத்திற்கும் - சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அய்.நா. மனித உரிமை ஆணையத் திற்கும் சென்று வெற்றியுடன் திரும்பிய மு.க.ஸ்டா லின், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு நேற்று மாலை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் `டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற வரவேற்பு - பாராட்டு விழாக் கூட்டத்தில் (11.11.2012) தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை வருமாறு:-

இன்று இந்த அரங்கத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சி நம்முடைய கழகத்தினுடைய பொருளா ளர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர்.பாலு அவர் களையும் வரவேற்று, அவர்களைப் பாராட்டுகின்ற நிகழ்ச்சி என்று தலைப்பிடப்பட்டு, விளம்பரப் படுத்தப்பட்டு அவர்களை இன்று மாலை முதல் இது வரையில் அவர்களைப் பாராட்டுகின்ற வகையில் மாத்திரமல்லாமல், அவர்கள் எந்தப் பிரச்சினைக் காகப் பாராட்டப்படுகிறார்கள்,

தமிழ் ஓவியா said...

அவர்கள் எங்கே சென்று வந்தார்கள், சென்ற இடத்திலே அவர்கள் செய்த சாதனைகள் என்ன, இன்று இங்கு வந்த பிறகு அவர்கள் நடத்திய சுற்றுப் பயணத்தின் விளைவாக நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன, தமிழ்ச் சமுதாயத்திற்கு இந்தப் பயணத்தின் மூலமாக நாம் சொல்லுகின்ற செய்தி என்ன என்பதைப் பற்றி யெல்லாம் இன்று மாலையிலே தொடங்கி, இது வரையிலே பல கருத்துக்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அவை களுக்கிடையே நாம் ஆற்ற வேண்டிய கடமை குறித்த அறிவுரைகள் அனைத் தும் சொல்லப்பட்டு இருக்கின்றன. நான் அதிகம் பேச விரும்பவில்லை.

காரணம் சொல்ல வேண்டியவைகளை விளக்கமாக, வெகு வாக இதுவரையிலே உரையாற்றிய தலைவர் களெல்லாம் சொல்லியிருக்கின்றார்கள். நான் ஸ்டாலினை இங்கே குறிப்பிட்டுப் பாராட்டுகிறேன் என்றால், தம்பி டி.ஆர்.பாலுவை குறிப்பிட்டுப் பாராட்டுகின்றேன் என்று சொன்னால், அவர்களே இங்கே சொன்னதைப் போல, குடும்பத்திலே உள்ள பிள்ளைகளை குடும்பத் தலைவன் மகிழ்ந்து பாராட்டுவதைப் போலத்தான் இந்தப் பாராட்டு அமைகிறதேயல்லாமல், வேறு யாரையோ நாங்கள் பாராட்ட இங்கே வந்திருக்கிறோம் என்ற நிலை யிலே அல்ல.

ஆனால், உங்களுடைய பாராட்டுக்களை யெல்லாம் கேட்டபோது, கட்சியினுடைய தலைவர் என்ற முறையிலே அல்ல, ஸ்டாலினுடைய தந்தை என்ற முறையில் எனக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. திருக்குறளிலே வள்ளுவப் பெருந் தகை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். ஒரு மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவி, அதைப்போல தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய நன்றி - இவை களைப் பற்றி வள்ளுவர் குறட்பாக்களிலே மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

`தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்`

தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நன்றி அவரை அவையத்தில் முந்தியிருப்ப செய்தல் -- முதல்வனாக இருக்கச் செய்தல் என்று வள்ளுவர் குறிப்பிட்டிருக் கிறார். (கைதட்டல்) நான் சொன்ன முதல்வனுக்கு நீங்கள் வேறு ஏதோ பொருள் புரிந்து கொண்டு (கைதட்டல்) முதல்வன் என்று ``ன் என்ற எழுத்தை நான் பயன்படுத்துகின்றபோது பொருள் வேறு. அதில் ``ர் என்ற எழுத்தைப் பயன்படுத்தினால் அது தருகின்ற பொருள் வேறு. அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொண்டு என்னுடைய பேச்சுக்கு புதுவிளக்கத்திற்குப் போகாமல் இப்பொழுது உள்ள விளக்கத்தையே நீங்கள் உங்கள் இதயத்திலே வைத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

ஒரு தந்தையினுடைய கடமையை நிறைவாகச் செய்திருக்கிறேன்

``தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். இதுபோன்ற அவைகளில் முதல்வனாக எல்லோராலும் பாராட்டத்தக்க வனாக இருக்க வேண்டும் என்பதுதான். அதை நான் செய்திருப்பதாகக் கருதுகின்றேன். (கைதட்டல்) அதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார். ஏனென்றால், அவரை இன்றைய தினம் உங்கள் முன்னி லையில் நீங்களெல்லாம் பாராட்டு கின்ற அளவிற்கு, மகிழ்ந்து போற்றுகின்ற அளவிற்கு, வாழ்த்து முழக்கங் களைச் செய்கின்ற அளவிற்கு அவையத்து முந்தி யிருக்கின்ற அந்தச் செயலை ஒரு தந்தையினுடைய கடமை என்ற முறையிலே நான் நிறைவாகச் செய்து முடித்திருக்கின்றேன்.

ஆனால், மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவி என்ன என்பதை வள்ளுவர் குறிப்பிடும்போது சொல்லுகின்றார். ``இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல். இவனைப் பெறுவதற்கு இவனுடைய தந்தை என்ன தவம் செய்தாரோ என்று பிறர் பேசுகின்ற அந்தப் பாராட்டுரைதான் மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவி, கடமை என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லுகின்றார். அத்தகைய குறளுக்கு இன்றைக்கு வடிவமாக, பொருளாக தம்பி ஸ்டாலின் திகழ்வது எனக்கு எவ்வளவு பெருமை, எவ்வளவு மகிழ்ச்சி, எவ்வளவு பூரிப்பு, (கைதட்டல்) இதையெல்லாம் சொன்னால் இங்கே நம்முடைய தலைவர்களெல்லாம் எடுத்துக்காட்டியதைப் போல, நாளை காலையிலேயே பத்திரிகைகளில் விஷம வேலைகளை தூவ ஆரம்பித்து விடுவார்கள்.

நான் யார் என்ன சொன்னாலும், யார் என்ன விஷ விதைகளைப் பரப்பினாலும் கவலைப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காக்க எனக்கு இருக்கின்ற பொறுப்புக்கு யார் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதை - அதை நிறை வேற்றுவதற்கு நடைபெறுகின்ற ஒரு தேர்வாக இருந்தால், அந்தத் தேர்விலே நானும், பேராசிரியரும் யாருக்கு வாக்களிப்போம் என்பதை ஏற்கனவே நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள்.
அதனால்தான் தம்பி ஸ்டாலினையும், என்னுடைய அருமைத் தம்பிகளிலே ஒருவரான பாலுவையும் மேல்நாடுகளுக்குச் சென்று, குறிப்பாக ஐ.நா. மன்றத்திற்குச் சென்று புலம்பித் தவித்துக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழர்கள் - அவர்களுடைய வாழ்விலே புதிய ஒளி பரவிட ``டெசோ இயக்கத்தின் சார்பாக நாம் எடுத்திருக் கின்ற இந்த முயற்சிகளுக்கு வெற்றிவாகை சூடி வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தோம். ``டெசோ அமைப்பின் சார்பில் நான் அனுப்பி வைத் தேன், நான் அனுப்பி வைத்தேன் என்று ஸ்டாலினும் சொன்னார், பேசியவர்களும் சொன் னார்கள்.

தமிழ் ஓவியா said...

நான் உண்மையிலே சொல்லுகின்றேன், என்னைப் பொறுத்தவரையில் ``டெசோ இயக்கம் ஒருவர் தலைமையிலே மாத்திரம் இயங்குகின்ற இயக்கம் அல்ல. டெசோ இயக்கத்தில் நானும், கழகத்தினுடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும், திருமாவளவன் அவர்களும், சுப.வீர பாண்டியன் அவர்களும், என்னுடைய அருமை இளவல் தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இது ஏற்கெனவே தொடங்கப்பட்டு, இடையிலே பணி புரியாமல் தடுக்கப்பட்டு, பணியாற்றாமல் இருந்த இயக்கம்தான் டெசோ இயக்கம். இப் பொழுது மீண்டும் அந்த இயக்கத்தை கையில் எடுத்திருக்கிறோம் என்றால், அப்பொழுது டெசோ இயக்கத்தைத் தொடங்கிய போது, அகில இந்தியத் தலைவர்களெல்லாம் இந்த இயக்கத்தை ஆதரித்து, டெசோ சார்பாக நடைபெற்ற மதுரை மாநாட்டில் கலந்து கொண்டார்கள். மறைந்த என்.டி. ராமாராவ் கலந்து கொண்டார். வாஜ்பாய் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

நாம் விட்ட பெருமூச்சிலே எழுந்ததுதான் மீண்டும் டெசோ இயக்கம்

இன்னும் பல பெரிய தலைவர்கள் எல்லாம் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலத்தை உருவாக்க வேண்டும் என்று அரிய பல கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அது நிறைவேற முடியாமல் போயிற்று. அதற்கு அந்தத் தலைவர்கள் காரணமல்ல.

யாருக்காக அந்த யோசனைகள் சொல்லப்பட்டதோ - யாருக்காக அந்த முடிவுகள் எடுக்கப்பட்டதோ - அவர்கள், அதற்கு உரியவர் களாக நடந்து கொள்ள இயலாத காரணத்தால் - இயலாத அளவிற்கு பல சூழல்கள் உருவான காரணத்தால் - இன்னும் தமிழன் அங்கே அடிபட வேண்டும், உதைபட வேண்டும், கொல்லப்பட வேண்டும் என்று - புராணிகர்கள் சொல்வதைப் போல விதி இருந்த காரணத்தாலோ என்னவோ, அங்கே அப்போதே டெசோ இயக்கத் தின் சார்பில் நாம் எடுத்த முடிவுகள் நிறைவேற்றப்பட முடியாமல் போயிற்று.

அப்போது நிறைவேற்றப்பட முடியாமல் இருந்து - மீண்டும் இலங்கையிலே ஆயுதப் போரே வெடித் தது. அந்த ஆயுதப் போர் நடைபெறுகிற நேரத்தில், நமக்குள்ளேயே ஒற்றுமை குலைக்கப்பட்டு - நாமே ஒற்றுமையாக இல்லாமல், அதன் காரணமாக நாம் அப்போது நடைபெற்ற போராட்டத்திலே எதிர் பார்த்த வெற்றியைப் பெறாமல், இலட்சக்கணக்கான தமிழர்கள், இளம் பெண்கள் கொல்லப்பட்டும் - தாலியற்றவர்களாக ஆக்கப்பட்டும் - வாழ்விழந் தவர்களாக ஆக்கப்பட்டும் - அதற்குப் பிறகு இந்தச் சோகத்தை எப்படித் துடைப்பது என்றுதான், நாம் விட்ட பெரு மூச்சிலே எழுந்ததுதான் மீண்டும் இந்த டெசோ இயக்கம்.

தமிழ் ஓவியா said...

டெசோவை மீண்டும் தொடங்கிய பிறகு, ஏற்கெனவே இந்த அமைப்பிலே இடம் பெற்றிருந்த திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் இயக்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை இவை எல்லாம் இணைந்து இந்த இயக்கத்தை இன்னும் பரவலாக, இன்னும் அழுத்தந் திருத்தமாக பிரச்சினைகளை மக்களிடத் திலே பரவலாக எடுத்து வைக்கக் கூடிய அளவிற்கு நடத்த வேண்டுமென்ற முனைப்போடுதான் டெசோ இயக்கத்தை இன்றைக்கு நாம் அதனுடைய மறு பிறப்புக்குப் பிறகு வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வளர்ச்சிக் கட்டத்திலேதான் அந்த டெசோ குழந்தை மீண்டும் வளரத் தொடங்கிய இந்தக் காலக் கட்டத்திலேதான், இலங்கைத் தமிழர் களுக்கு நாம் எடுக்கின்ற இந்த முடிவால் விடிவு ஏற்படாதா என்ற ஏக்கத்தோடு, ஐ.நா. மன்றத்திலே உள்ளவர்களைச் சந்திக்கவும் - மனித உரிமை ஆணையத்திலே உள்ள வர்களைச் சந்திக்கவும் - நம்முடைய தம்பிகள் ஸ்டாலின் அவர்களையும், டி.ஆர்.பாலு அவர்களையும் அனுப்பி வைத்து - அவர்கள் வெற்றிகரமாக தங்க ளுடைய பணிகளை முடித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

வெற்றியுடன் உச்சத்திற்குச் செல்ல மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை!

இங்கே யாரும் தவறாக நான் சொல்கின்ற இந்த வாசகத்தை, வார்த்தையை புரிந்து கொள்ளக் கூடாது. இவர்கள் முழு வெற்றியைப் பெற்று வந்து விட்டதாக நான் சொல்லவில்லை. அவர்களுடைய பயணத்தைப் பொறுத்தவரை வெற்றிகரமாக நடந் திருக்கிறது. இன்னும் அந்த வெற்றி யின் உச்சத்திற் குச் செல்ல நாம் இன்னும் வெகு தூரத்திற்குப் போக வேண்டியிருக்கிறது.

அந்தத் தொலைவைக் குறுக்கு வதற்கும், விரைவுபடுத்துவதற்கும் தமிழ்நாட்டு மக்கள் உங்களுடைய ஒத்துழைப்பு - அதே நேரத்தில் இங்கே நம்முடைய திருமாவளவன் அவர்களும், வீரமணியார் அவர்களும் எடுத்துச் சொன்னதைப் போல - இந்திய மத்திய அரசின் ஒத்துழைப்பும் நமக்குத் தேவை.

மத்திய அரசை ``கலைஞர் நினைத்தால் சம்மதிக்க வைக்க முடியும் என்று திருமாவளவன் சொன்னார். பணிய வைக்க முடியும் என்று சொன்னார். அது அவர் வழக்கமாக கையாளுகின்ற வார்த்தை. பணிய வைக்க முடியும் என்பதை விட, அவர்களை நம்முடைய வழிக்கு வரவழைக்க முடியும் என்று சொல்லியிருப்பா ரேயானால், ஒருவேளை இந்திய அரசுக்குக் கோபம் வராமல் சிந்திக்கக் கூடும். (கைதட்டல்) அதை பணிய வைக்க முடியும் என்று, அதுவும் கருணாநிதியால்தான் முடியும் என்று சொன்னால், அவர்களுக்கு ரொம்பக் கோபம் வரும்.
எங்களை பணிய வைக்க யார் இந்தக் கருணாநிதி என்று அவர்கள் கோபமடையக் கூடும். அங்கே மேலே இருப்பவர்கள் அப்படிக் கேட்கா விட்டாலும், தூண்டி விட்டு அவர்களைக் கேட்கச் செய்பவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

தமிழ் ஓவியா said...

அதனால்தான் இந்தக் காரியத்தை நாம் ஜாக்கி ரதையாக அணுக வேண்டியிருக்கிறது. ஜாக்கிரதை என்றால் நமக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதற்காக அல்ல. எனக்கோ, பேராசிரி யருக்கோ, வீரமணிக்கோ யாருக்கு ஆபத்து வந்தா லும் கவலை யில்லை. இங்கேயுள்ள தமிழனுக்கு மீண்டும் ஒரு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதில் எவ்வளவு எச்சரிக்கையாக இதைக் கையாள வேண்டுமோ, அந்த அளவிற்கு கையாண்டு, இந்திய அரசின் ஒத்துழைப் பையும் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம்.

டெசோ மாநாட்டில் நாம் நிறைவேற்றியிருக்கின்ற 14 தீர்மானங்களில் - பொது வாக்கெடுப்பு நடத்தி - இலங்கைத் தமிழர்களை சுதந்திரமாக, சுயமரி யாதையோடு வாழ வைப்பதற்கு என்ன வழியோ, அந்த வழியைத் தேடுவதற்கு எடுக்கின்ற முடிவுகளை நிறைவேற்ற எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ, அவ்வளவு அழுத்தம் கொடுக்க நானும் சரி, திராவிட முன் னேற்றக் கழகமும் சரி, இந்த விழாவில் கலந்து கொண் டி ருக்கின்ற டெசோ இயக்கத்தின் தலைவர்களும் தயாராக இருக்கிறோம் என்ற உறுதியை உங்களுக் கெல்லாம் நான் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

டெசோ இயக்கத்தைப் பிளவுபடுத்த பத்திரிகைகள் எண்ணினால் அது நடக்காது!

டெசோ இயக்கத்தில் யாரும் காலைப் பத்திரிகை, மாலைப் பத்திரிகைகளில் தவறான விவரங்களைச் சொல்லி பிளவுபடுத்தலாம் என்று எண்ணினால் அது நடக்காது. (கைதட்டல்) நடப்பதற்கு நாங்கள் விட மாட்டோம். ஏனென்றால் என்னைப் பற்றி வீரமணியிடம் சொன்னாலும், வீரமணி அவர் களைப் பற்றி என்னிடம் சொன்னாலும் நாங்கள் தொலைவிலே இருப்பவர்கள் அல்ல.

இருவரும் நெருக்கமாக இருப்பவர்கள். என்ன, இப்படி பத்திரி கையிலே வந்திருக்கிறதே, இது உண்மையா என்று அவரை நான் கேட்க நீண்ட நேரம் ஆகாது. அவரும் என்னைப் பார்த்து இது உண்மையா என்று கேட்க வெகு நேரம் ஆகாது. இருவரும் ஒருவருக்கொருவர் அளவளாவி, அதைப்பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடிய வாய்ப்பும் வசதியும் இருக்கின்ற காரணத்தால் எந்த வஞ்சக நரியும் இந்த டெசோ இயக்கத்தை பிளந்து விடலாம் என்று கருதினால், அது நடக்காது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டையொட்டி நம்மால் தமிழ கத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர், தம்பி ஸ்டாலின், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலு இருவரும் அங்கே ஆற்றிய கடமைகளை - நடத்திய விவாதங்களை - அதனால் ஏற்பட்ட விளைவுகளை - பெற்றிருக்கின்ற இந்த முடிவுகளை இந்தக் கூட்டத்திலே உங்களிடம் எடுத்துச் சொல்லி - உங்களுடைய அங்கீகாரத் தையெல்லாம் பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் சாதித் திருக்கிறார்கள், இந்தச் சாதனை இலங்கைத் தமி ழர்களின் வேதனைகளைத் துடைக்க நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கையை நீங்கள் எல்லாம் பெற்றிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த நம்பிக்கையை நாம் வென்றெடுக்க வேண்டுமேயானால், இன்னும் ஒவ்வொரு கிராமப் புறத் திலும், குக்கிராமத்திலும் வீட்டுக்கு வீடு ஈழத் தமிழர்களின் துயரத்தை எடுத்துச் சொல்கின்ற கடமையை நம்முடைய இயக்க ஏடுகள் அது முர சொலியானாலும், விடுதலையானாலும், சுப.வீ. நடத்துகின்ற ஏடு ஆனாலும், நம்முடைய திருமா வளவன் பேசுகின்ற கூட்டத்திலே எடுத்துச் சொல்லப் படுகின்ற கருத்துக்கள் ஆனாலும், அங்கே கேட்பது, இங்கே படிப்பது என்ற நிலையோடு இல்லாமல், அவைகளை எடுத்துச் சென்று ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்ற நிலைக்கு ஒரு முடிவினை ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

தமிழ் ஓவியா said...

ஏனென்றால் ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக நாம் பேசுகின்ற பிரச்சினை, ஈழத் தமிழர்களின் பிரச்சினை. தந்தை செல்வா அவர்கள் தொடங் கியது, தமிழர் களுடைய சுயமரியாதை, தமிழர்களு டைய சுயாட்சி இந்தக் கொள்கைகளுக்காக நடத் திய போராட்டம். அந்தப் போராட்டம் காந்திய வழியில் அமைதியான போராட்டமாகத் தொடங்கி, அந்தப் போராட்டத்தை விரிவுபடுத்த செல்வ நாயகத்தின் முதல் மாணவராகத் திகழ்ந்த மறைந்த அமிர்தலிங்கம் போன்றவர்கள் பாடுபட்டு இன் றைக்கு அதனுடைய உத்வேகம் தணிகின்ற அள விற்கு எப்படி காந்தியடிகளுடைய சாத்வீகப் போராட்டத்திற்கு குறுக்கே பகத்சிங் அவர்களு டைய தீவிரவாதப் போராட்டம் வந்தாலுங் கூட, அதற்காக காந்தியின் சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது என்ற நிலை இல்லை.

அந்த வன்முறைப் போராட்டத்தை விட காந்தியடிகளின் சாத்வீக அமைதியால், அகிம்சா போராட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது என்பதைப் போல நாமும் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற கவலை நமக்கு இருந்தாலும், ஏதோ விட்டு விட்டோம், ஏதோ நடந்து விட்டது, அதற்காக அதையே நினைத்து, நடந்ததையே பற்றி ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லிக் கொண்டு - பொதுப் பிரச்சினையிலே நாம் ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழர், இங்கே வாழ்கின்ற தமிழர், இலங்கையிலே வாழ்கின்ற தமிழர் - அந்தத் தமிழர் களுக்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டுமென் பதற்காகத் தான் - மிக விளக்கமாக இங்கே நம்முடைய நண்பர்கள் எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

பொது வாக்கெடுப்பு நடத்த அய்.நா. மன்றத்தை தயார்படுத்த வேண்டும்!

பொதுவாக்கெடுப்புகள் மூலமாக எத்தனை நாடுகள், சிறிய நாடுகள் எல்லாம் தம்பி முரசொலி மாறனின் மொழியிலே சொல்ல வேண்டுமென்றால், கீரைப் பாத்தி நாடுகள் எல்லாம் விடுதலை பெற்றிருக்கின்றன இந்தப் பொது வாக்கெடுப்பைப் பயன்படுத்தி; அதைப் போல பொது வாக் கெடுப்பை நாமும் பயன்படுத்துகின்ற ஒரு காலக் கட்டத்தை உருவாக்க வேண்டும். அப்படி பொது வாக்கெடுப்புக்கு ஐ.நா. மன்றத்தைத் தயார் படுத்த வேண்டும்.

அப்படி தயார்படுத்துவதற்கு நாம் தருகின்ற அழுத்தம் மாத்திரம் போதாது, நாம் தருகின்ற அழுத்தம் என்றால், அது தமிழ்நாடு தருகின்ற அழுத்தமாக மாத்திரம் இல்லாமல், இந்தியாவே தருகின்ற அழுத்தமாக அது அமைய வேண்டும். அப்படி அமை வதற்கு இந்திய அரசு நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

அவர்கள் உறுதுணையாக இருந்தால், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும். (பலத்த கைதட்டல்) எனக்காக அல்ல, பேராசிரியருக்காக அல்ல, வீரமணிக் காக அல்ல, திருமாவளவனுக்காக அல்ல, சுப. வீரபாண்டியனுக்காக அல்ல, இதை நான் சொல்வது. பல கோடி தமிழர்களுக்காக (கைதட்டல்) இங்கே வாழ்கின்ற தமிழர்களுக்காக மாத்திரமல்ல, கடல் கடந்து வாழ்கின்ற தமிழர் களுக்காக, புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர் களுக்காக - சில தமிழர்கள் புலம் பெயர்ந்து தங்கள் சொந்த தாயகத்திலே வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களையெல்லாம் மீட்டு வருவதற்காக நாம் எழுப்புகின்ற குரல்தான் டெசோ இயக்கத்தின் குரல்.

டெசோ இயக்கத்தை நீங்கள் வலுப்படுத்த, வலுப்படுத்த அந்தக் குரல் வென்று காட்டும் - நிச்சயமாக வென்று காட்டும். வெற்றியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை - வீழ்ச்சி இல்லை என்ற நம்பிக்கை யோடு நாம் நம்முடைய கடமையைச் செய்வோம் என்று கூறி, வெளி நாடுகளுக்குச் சென்று ஒளி மிகுந்த கருத்துக் களையெல்லாம் எடுத்துச் சொல்லி, தாயகம் திரும்பி யிருக்கின்ற தம்பிகளுக்கு உச்சி முகர்ந்து முத்தமிட்டு, உள்ளன்போடு அவர்களை வாழ்த்தி வருக வருக என்று வரவேற்கின்றேன். - இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.12-11-2012