Search This Blog

4.11.12

தீபாவளி தமிழர் விழாவா?


தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர் என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள். அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள். இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறு-ஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்! எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி யார் எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்-கிறார்கள்! இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்? நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மை-யையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்? 

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகா-சூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். 


இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்துப் போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்? பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லு-கிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்-வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

               ------------------------------தந்தைப் பெரியார் -  "விடுதலை" பெரியார் 94ஆவது பிறந்தநாள் விழா மலர்

14 comments:

தமிழ் ஓவியா said...


பாசிஸ்டுகள்


பாகிஸ்தான் கிரிக் கெட் அணிக்கு, இந்தி யாவில் கிரிக்கெட் விளை யாட அனுமதியளிக்கப் பட்டது - வெட்கக் கேடா னது என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார்.

கிரிக்கெட்டை எதிர்ப் பது என்பது வேறு - முஸ்லிம் நாடான பாகிஸ் தான் நாட்டைச் சேர்ந்த வர்கள் இங்கு விளை யாடக் கூடாது என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல!

சிவசேனாவோ, சங்பரிவார்களோ இப்படி நடந்து கொள்வதில் ஆச் சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பாசிஸ்டுகள் பொதுவாக இப்படித் தான் நடந்து கொள் வார்கள்.

இதற்குமுன்புகூட பாகிஸ்தான்காரர்கள் இங்கு விளையாட வந்த போது ஆடுகளத்தைச் சேதப்படுத்தினார்கள்.

1998 டிசம்பர் 2இல் மும்பை நகரிலும், டிசம்பர் 3இல் டில்லியிலும் தீபக் மேத்தாவின் ஃபயர் திரைப்படத்திற்கு எதிராக இதே சிவசேனையினர், சங்பரிவாரத்தினர் பெரும் ரகளையில் ஈடுபட வில்லையா?

1998 ஏப்ரல் 26 அன்று பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான குலாம் அலி நிகழ்த்த விருந்த நிகழ்ச்சி அரங் கினுள் நுழைந்து அடித்து நொறுக்கினரே!

1996 மே திங்களில் மும்பையில் இர்ஃபான் உசேனின் ஓவிய அரங்கு தீக்கீரையாக்கப்பட்டதும் இந்த இந்துத்துவாவாதி களால்தான்.

ஓவியர் உசேனின் ஓவியங்கள் தீக்குத் தீனியாக்கப்பட்ட போது சிவசேனா தலைவர் பால் தாக்கரே பாசிச வாய் திறந்து பகன்றது என்ன தெரியுமா?

உசேன் இந்துஸ் தானத்துக்குள் நுழைய முடிகிறது என்றால், நாங் கள் அவர் வீட்டுக்குள் நுழைய முடியாதா? என்று ஆணவத் திமிரு டன் அநாகரிகமாகப் பேசிய பேர்வழிதான்.

1999 செப்டம்பர் 23 அன்று உத்தரப்பிரதேசத் தலைநகரான லக்னோ வில் நாடகத்தை நடத்தி முடித்துவிட்டு சஹ்மத் ரங்க்மஞ் நாடகக் குழு திரும்பி கொண்டிருந்த போது, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழி மறித்துத் தாக்கி கலை ஞர்களைப் படுகாயப் படுத்தவில்லையா? உ.பி. மாநில பி.ஜே.பி. மேலவை உறுப்பினர் அஜீத்சிங் என்பவரின் டாடா சுமோ வாகனத்தில் வந்துதான் அந்தக் கா(லி)விக் கும்பல் சூறையாடியது. இன்னுமா ஆதாரக் குவியல்கள் தேவை - சிவசேனா, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. சங்பரிவார்க் கும்பல் என்பது பாசிசத் தின் மறுபெயர் என்பதற்கு?

- மயிலாடன் 4-10-12

தமிழ் ஓவியா said...

மனித உரிமைக்குழுவின் விசாரணை தொடங்கியது


இலங்கை அரசின் நடவடிக்கைகள் அம்பலமானது!

- மூச்சுத் திணறலில் இலங்கை அரசு -

ஜெனிவா, நவ. 4- இலங்கை அரசின் மீதான விசாரணை ஜெனிவாவில் தொடங் கப்பட்டது. இலங்கை அரசின் சமாதானங்கள் வெறும் மழுப்பலாகவே இருக்கின்றன என்பது அம்பலமாகிவிட்டது.

அய்க்கிய நாட்டுச் சபையின் மனித உரிமை விசாரணைக் குழு ஜெனிவாவில் இயங்கி வருகிறது.

மேற்கத்திய நாடுகள் இலங்கை மீது சுமத்தும் குற்றச் சாட்டுகளுக்கும், இலங்கை கூறும் சமா தான கருத்துக்களுக்கும் நிறைய இடைவெளி இருப்பது விசாரணைக் குழுவில் அம்பலமாகி வருகிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் எவ்வா றெல்லாம் நடைபெற்றுள்ளன என்பதை மேற்கத்திய நாடுகள், பல எடுத்துக் காட்டுகளுடன் விசா ரணைக் குழுவில் அடுக் கடுக்காக விளக்கி வரு கின்றன.

இலங்கைப் பிரதி நிதிகள் மேற்கத்திய நாடுகள் கூறும் குற்றச் சாட்டுகளுக்கு மழுப் பலான விளக்கங்களைக் கூறி மறுத்து வருகின் றனர்.

இவ்வகைப் பிரநிதிதி களின் விளக்கம் போது மானதாகவும், விளக்க மாகவும் இல்லை.

உள்கட்டமைப்பில் தாங்கள் செய்து வரும் முன்னேற்றங்களைப் பற்றி எடுத்துக் கூறு கிறார்களேயன்றி, மனித உரிமை மீறல்களைப் பற்றி மழுப்பலாகவே விடையளிக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

போரால் பாதிக்கப் பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற போர்க் குற்றங்களைப் பற்றி இலங்கைப் பிரதிநிதி கள் பேச முற்படுவ தில்லை.

இலங்கை அரசால் விளக்கப்பட முடியாதவை

2006ஆம் ஆண்டு ஜனவரியில், திரிகோண மலையில் அய்ந்து மாணவர்கள் கொல்லப் பட்டார்கள். இதைப் பற்றி விளக்கம் தருமாறு இலங்கையை அமெ ரிக்கா வற்புறுத்துகிறது.

அதே 2006ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உதவிப் பணியில் ஈடுபட் டிருந்த 17 தொழிலாளர் களை முத்தூர் என்னும் இடத்தில் கொலை செய்யப்பட்டது ஏன் என்பதை இலங்கை யால் விளக்க முடிய வில்லை.

2009 ஜனவரியில் பத்திரிகை ஆசிரியர் இலாசந்தா விக்ரம துங்கே கொலை செய் யப்பட்டார்.

கார்ட்டூன்கள் வரை யும் ஓவியர் பிரஜீத் ஏக நலிகோடா (ஞசயபநநவா நுமயடேபைடினய) இருப்பிடம் தெரியாமலே காணா மல் போய்விட்டார்.

அமெரிக்கா தெரிந்து கொள்ள விருப்பம்

இந்த கொலைகளுக் கெல்லாம் சாட்சிகளாக இருப்போரைக் காப் பாற்றிட இலங்கை அரசு என்ன நடவடிக்கை களை எடுத்தது என அமெரிக்கா தெரிந்து கொள்ள விரும்புகிறது. ஆனால் இலங்கையிட மிருந்து பதில்தான் இல்லை. காணாமல் போனவர் களைத் தேடும் பணி நடைபெறுவதாகத் தெரியவில்லை.
வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்த அரசு தயக்கம் காட்டு கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி யின்மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்திட இலங்கை அரசு முனைந்துள்ளது.
தமிழர்களாக இருக் கும் போர் அகதிகள் தங்கள் வாழ்விடங்களுக் குச் செல்ல இயலாமல் தவிக்கின்றனர் என்று கனடா குற்றம் சாட்டு கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - தடுமாற்றம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர இலங்கை அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என கனடா விளக்கம் கேட்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மாகா ணங்களுக்கு ஏன் அதி காரப் பரவல் வழங்கப் படவில்லை எனவும், கனடா இலங்கை அரசைக் கேட்கிறது.

போர்க் குற்றங் களை விசாரித்து வரும் இலங்கை இராணுவ நீதிமன்றத்தின் செயல் பாட்டில் என்ன முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது என இங்கிலாந்து தெரிந்து கொள்ள விரும்புகிறது.

இத்தகைய குற்றச் சாட்டுகளுக்கெல்லாம் நேரடியாக பதில் அளிக் காமல் இலங்கை அரசு மழுப்புகிறது. அதற்குப் பதிலாக, பொதுவான சூழ்நிலையை எடுத் துரைக்கிறது. குறிப் பிட்ட குற்றச் சாட்டு களுக்கு பதிலளிக்க இலங்கையால் இயல வில்லை.

அனைத்து அகதி களும் அவர்களின் வாழ் விடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டதாக இலங்கை பொய்யான சமாதானம் கூறுகிறது.

12000 விடுதலைப் புலிகள், போரின்போது சரணடைந்துள்ளனர். ஆனால் இதுவரை 782 பேர்களுக்குத்தான் குடி அமர்வு செய்யப்பட்டுள் ளது. 262 விடுதலைப் புலிகள் மீது சட்ட நட வடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

2010இல் 7940 விடு தலைப்புலிகள் காணா மல் போயுள்ளனர். 6653 பேர் தேடிக் கண்டுபிடிக் கப்பட்டுள்ளனர்.

2011இல் 7296 பேர் காணாமல் போய் 5183 பேர் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றங்களை விசாரிக்கும் இராணுவ நீதிமன்றம், ஜனவரி மாதத்தில் முப்பது தட வைகள் கூடி விசாரணை யில் ஈடுபட்டதாக கூறிக் கொள்கிறது. அக்கால கட்டத்தில் 50 குற்றங் களை அந்த நீதிமன்றம் விசாரித்ததாக கூறிக் கொள்கிறது.

பாலியல் குற்றங்கள்

பாலியல் குற்றங் களும் விசாரிக்கப்பட் டன. ஆனால் இராணு வம் அதில் ஈடுபட்ட தாகத் தெரியவில்லை. அதற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் மசோதா பிரதிநிதி சபை யின் தீவிர ஆலோ சனையில் உள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மறுசீரமைப்புக்காக இதுவரை இலங்கை அரசு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து உள்ளதாம்.

1,25,184 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ள தாகவும் 98 விழுக்காடு பரப்பில் வைக்கப்பட்டி ருந்த கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு பீற்றிக் கொள்கிறது 4-11-12

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம் நாட்டுக்கே நலம் தரும் திட்டம்


முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழர்களின் கனவுத் திட்டம் எத்தனை ஆண்டுக் காலக் கனவு - ஒன்றல்ல, இரண்டல்ல 150 ஆண்டு காலக் கனவுத் திட்டம்.

இத்திட்டம் தமிழகத்திற்குக் குறிப்பாகப் பல ஆண்டுகளாகக் கடும் வறட்சியில் வாடித் தவித்து வரும் தென் மாவட்டங் களுக்குப் பொருளாதார வேலை வாய்ப்பு உள்ளிட்ட பலவற்றில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தித் தரும் திட்டம்.

சேதுசமுத்திரத் திட்டம் ஏன்?

கன்னியாகுமரியில் இருந்து மன்னார் வளைகுடா, ஆதம்பாலம், பாக்கடல், பாக் நீர்ச்சந்தி ஆகியன வழியாக வங்கக் கடல் சென்றடைய ஒரு கடல் வழிப்பாதை அமைக்கும் திட்டம் தான் சேது சமுத்திரத் திட்டம். மன்னார் வரைகுடாவிற்கும் பாக் கடலுக்கும் இடையிலுள்ள ஆதம்பாலம் என்றும் இடத்தில் ஆழம் குறைந்து இருப்ப தால் சிறிய மிகவும் ஆழம் குறைவான இதனைச் சிறுபடகுகள் கூடக் கடக்க முடியாது.

தமிழ் ஓவியா said...


இதனால் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கும், மேலை நாடுகளில் இருந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங் களுக்கும், குறிப்பாகத் தூத்துக்குடியிலி ருந்து மற்ற கிழக்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் கூட இலங்கையைச் சுற்றித்தான் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

இவ்வாறு சுற்றிச் செல்வது பத்து, இருபது மைல்கள் என்றாலும் பரவா யில்லை. சுற்றி வர வேண்டிய தொலைவு 254 கடல் மைல்களிலிருந்து 424 கடல் மைல்கள் வரை.

இதனால் என்ன நட்டம்; சுற்றிப் போவதால் அதாவது நேரடியாக மூக்கைத் தொடுவதற்குப் பதிலாகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல் ஆகின. சுற்றிச் சுற்றிச் செல்வதால் எரிபொருள் செலவு கூடுகிறது. நிலக்கரி, டீசல் செலவு அதிக மாகும். எரிபொருள் செலவு அதிகமாவ துடன் அயல்நாட்டுச் செலவாணியும் அதிகமாகிறது.

அதிகக் கட்டணம் செலுத்துவதால், இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கும், இறக்குமதி பொருட்களுக்கும் பயணச் செலவு அதிகமாகிறது.

நேரடியாகக் கடல் வழி இல்லாமல் சுற்றிப் போவதால், நம் நாட்டினுடைய ஏற்று மதி, இறக்குமதிப் பொருட்கள் சரக்குப் பரிமாற்றத்தை அயல்நாட்டுத் துறைமுகங் களில் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் பயணச் செலவு கூடுதல்.

மேலும் ஆதம்பாலம் பகுதியில் கடல் ஆழமில்லாததால் மீன்பிடி படகுகள் மன்னார் வளைகுடாவிற் கோ, மன்னார் வளைகுடாவில் இருந்து வங்கக் கடலுக்கோ செல்ல இயலாத நிலை வேறு ஏற்படுகிறது.

எனவே, இவ்வளவு இடைஞ்சல், பொருட்செலவு தவிர்க்க இந்தக் கடல் வழி நெடுஞ்சாலை, மன்னார் வளைகுடாவை வங்கக் கடலுடன் இணைத்து ஏற்படுத் துவது இன்றியமையாதது. இதனால் தமிழகம் வளர்ச்சி பெறும், இந்தியப் பொருளாதாரம் வளம் பெறும். இந்திய ஏற்றுமதிகள் மிகவும் பெருகிடும்.

சேது சமுத்திரத் திட்டத்தின் பின்னணி

இந்தத் திட்டம் குறித்து இந்தியா விடுதலை பெறும் முன்னர் இருந்தே சிந்திக்கப்பட்டது. இந்திய தீபகற்ப எல்லைக்குள் கிழக்கு, மேற்குக் கரைகளை இணைக்கும் கடல் வழிப்பாதை இல்லை. இதற்கு முக்கியகாரணம், இந்தியாவில் தென் கிழக்குக் கடற்கரைக்கும், இலங்கை யில் தலைமன்னாருக்கும் இடையே ராமேசுவரத்திற்கு அருகில் ஆதம்பாலம் என அழைக்கப்படும் பகுதியில் கடல் ஆழமாக இல்லாததே.

இப்பகுதியில் கடல் ஆழம் சுமார் மூன்று மீட்டர் அளவுதான். இதனால் இலங் கையைச் சுற்றியே கிழக்குக் கடற்கரையி லிருந்து மேற்குக்கரைத் துறைமுகங்கள் செல்லும் கப்பல்களும், தூத்துக்குடியிலி ருந்து நம் நாட்டுத் துறைமுகங்களான சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், கொல்கத்தா ஆகிய துறைமுகங்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் இலங்கையைச் சுற்றி அதாவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல், சுற்றிச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு 254 முதல் 424 கடல் மைல்கள் கூடுதலாகப் பயணிக்க வேண்டும். அதோடு 32 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.

இந்தியக் கடற்படைக் கப்பல்கள்கூட இவ்வாறு இலங்கையைச் சுற்றியே வர வேண்டியுள்ளது. இதை இன்னும் கொஞ்சம் நன்கு விளக்குவோர் கன்னியாகுமரியி லிருந்து சென்னைக்கு இப்போது பயணிக்கும் தொலைவு 755 கடல் மைல் சேது சமுத் திரக் கால்வாய் வந்து பயணம் செய்தால் 402 கடல் மைல்தான். அதாவது 353 கடல் மைல் மிச்சம்.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இப்போதுள்ள வழித் தடத்தில் 769 கடல் மைல். சேதுசமுத்திரக் கால்வாய் ஏற்பட்டு விட்டால் 335 கடல் மைல். 434 கிலோ மைல் மிச்சம்.

இனிமேல் கன்னியாகுமரியிலிருந்து கல்கத்தாவிற்கு 259 கடல் மைல் மிச்சம்.

தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டி ணம் போவதற்கு 376 கடல் மைல் கல்கத் தாவிற்கு 340 கடல் மைல் மிச்சம் ஆகிறது. எவ்வாறு காலம், எவ்வளவு பணம், எவ் வளவு எரிபொருள் வீணடிக்கப்படு கிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில்

எனவே பெருங்கடற் பயணக் கப்பல் களுக்குக் குறுக்கு வழி ஒன்றை ஏற்படுத்தும் நோக்குடன், மன்னார் வளைகுடாவையும், பாக் நீர்ச்சந்திப்பையும் இணைக்கும் வகையில், குறுகிய நிலப்பரப்பு வழியாக சுற்றாமல் கப்பல் செல்லும் கால்வாயை வெட்டுவதற்கு 1860-ஆம் ஆண்டு முதல் 1922ஆம் ஆண்டு வரையில் ஒன்பது செயற்குறிப்புகளை முன் வைத்தது ஆங்கிலேய அரசு. அவ்வாறு அமைத்தது வாஜ்பாய் அரசோ, மன்மோகன் அரசோ அல்ல, ஆங்கிலேய அரசுதான்.

1. 1860 - கமாண்டர் டெய்லரின் செயற் குறிப்பு

2. 1861 - டவுள்செண்டின் செயற் குறிப்பு

3. 1862 - பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவின் செயற் குறிப்பு

4. 1863 - சென்னை மாநில ஆளுநர் வில்லியம் டென்னிசனின் செயற் குறிப்பு.

5. 1871- ஸ்டோடார்டின் செயற்குறிப்பு.

6. 1872 - இந்திய அரசின் துறைமுகப் பொறியாளர் ராபர்ட்சனின் செயற் குறிப்பு.
7. 1884 - சர் ஜான்கோட் என்பவர், தென்னிந்தியக் கப்பல் கால்வாய்த் துறைமுகம், நிலக்கரி ஏற்றுமதி நிலை சார்பில் அளித்த செயற் குறிப்பு.

8. 1903 - தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் பொருட்டு ரயில்வே பொறியாளர்கள் நடத்திய ஆய்வுக் குறிப்பு.

தமிழ் ஓவியா said...

9. 1922 - சென்னை மாநில அரசின் துறைமுகம் பொறியாளர் சர். இராபர்ட் பிரிஸ்டோவின் செயற் குறிப்பு.
இவ்வளவு செயற்குறிப்புகள் இருந்தும் நிதிப் பற்றாக் குறையினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1922-இல் சர் ராபர்ட் பிரிஸ்டோவின் அறிக்கையில் ஏன் இத்திட்டம் குறிப்பிடத் தக்கது எனத் தெரிவிக்கிறார்.

சர் ராபர்ட் பிரிஸ்டோவின் குறிப்பு

தென்கிழக்கு இந்தியத் துறைமுகங் களின் வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும் காரணங்களில் ஒன்று இதுதான். கன்னி யாகுமரியிலிருந்து வடக்கு நோக்கிக் கப்பல்கள் செல்வதற்கு உரிய ஆழ் கடற்பாறை எதுவும் இல்லை. அவ்வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. எனவேதான், இந்தத் தொல்லையை நீக்கும் பொருட்டு, ராமேசுவரம் தீவு வழியாகக் கால்வாய் ஒன்று வெட்ட வேண்டியது விரும்பத் தக்கதா என்றும் வினா எழுப்பப்பட்டது.

இந்தச் செயற் குறிப்பினால் ஏராள மான விவாதங்களும், கருத்துக்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் வாழ்கின்ற மக்களிடையே இப்படி ஒரு கால்வாய் வெட்டப்படும் கருத்து முழுமை யாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், இவ்வாறு வெட்டப்படும் கால்வாய் - தனுஷ்கோடியிலிருந்து சென்னை செல்லும் முதன்மை இருப்புப் பாதையை கடந்து செல்வதால், அங்கே துறைமுகம் தோன்றி வளர்ச்சியடையக் கூடும் எனவும், அதனால் தூத்துக்குடியில் நடைபெறும் வாணிபமும், வர்த்தகமும் இராமேசு வரத்துக்குச் சென்று விடக் கூடும் எனவும் அவர்கள் அச்சம் கொண் டுள்ளனர்!

இவ்வாறு சர். ராபர்ட் பிரிஸ்டோவின் கால் வாய்த் திட்டம் குறித்துக் கருத்து வெளிப்பட்ட தால், தூத்துக்குடித் துறைமுகத் தனிக்குழு, ராபர்ட் பிரிஸ்டோவின் திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை ஒன்று அளித்தது.

தமிழ் ஓவியா said...

அந்த அறிக்கையின் ஒரு பகுதி இது. அறிக் கையின் சுருக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளவாறு கால்வாயின் பயன்கள் குறித்துக் கலந்துரையாடி விவாதங்கள் நடத்தியபோது சிறிதளவே கருத்து மாறுபாடு இருந்தது. உண்மையில் கடற்பயணத் தொலைவுகளைக் குறைக்கும் என்னும் பொதுவான அடிப்படையில் கவனித்தால், இந்தக் கால்வாய் அமைவ தனால் ஏற்படும் வெளிப்படையான பயன், இதை அமைப்பது சரியே என்றும் விரும் பார்வம் ஆகியன இதைக் குறித்துக் கடுமையாக விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என ஆக்கிவிட்டது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரமாக வருகின்ற அனைத் துக் கப்பலகளும் கன்னியாகுமரியைக் கடந்து சென்றாக வேண்டும். அவ்வாறு கடந்து செல்லும் கப்பல்கள் பயணம் செய்யும் தொலைவு குமரிமுனையிலிருந்து சென்னைக்கு 333 மைல்கள் குறைகிறது.

கொல்கத்தாவுக்குச் செல்லும் கப்பல்களின் பயணத் தொலைவு 240 மைல்களும் ரங்கூனுக்குச் செல்லும் கப்பல்களின் பயணத் தொலைவு 109 மைல்களும் குறைகிறது. இதைப்போலவே குமரிமுனை யிலிருந்து திரிகோணமலைக்குச் செல்லும் பயணத் தொலைவு 125 மைல் குறைகிறது.

தமிழ் ஓவியா said...

மேலும், பயணத் தொலைவிலும், பணச் செலவிலும் ஏற்படும் உண்மையான சேமிப்பு (அதாவது சிக்கனம்) பின்வரும் காரணத் தால் இன்னும் அதிகமாக உயர்கிறது.

அந்தச் சேமிப்பு நேரடியாகத் தெரியாது. அதை மறைமுகமாக மட்டுமே உணரலாம். அந்தச் சேமிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. அது குறிப்பாகப் பருவக் காற்று வீசும் காலங்களில் ஸ்ரீலங்காத் தீவை வட்டமாகச் சுற்றிக் கொண்டு, புயல் வீசிக் கடல் கொந்தளிக்கும் காலத்தில் மேற்கொள்ளும் கப்பற் கபயணம் தவிர்க்கப்படுவதால் ஏற்படும் மிச்சம் ஆகும். அவ்வாறு பயணிக்கும் கப்பல்களிலும் ஏற்படக் கூடும் தேய்மானம், புயல் வீசுதல், கடல் கொந் தளித்தலின்போது மேற்கொள்ளும் பயணத் தினால் ஏற்படும் அச்ச உணர்வு, ஆபத்து ஆகியன யாவும், புதிதாக உருவாக்கும் கால்வாய் (சேது சமுத்திரக் கால்வாய்) வழியே பயணிக்கும் அனைத்துக் கப்பல் களுக்கும் ஏற்படாது.

ஆக, இவ்வாறான பொதுவான கூறுகளின் அடிப்படையில் கருதி நோக் கினால், இந்தக் கால்வாய் அமைப்பது விரும்பத் தக்க மிகச் சிறந்த குறிக்கோள் என்றாகிறது.

6 ஆண்டுகளுக்கு முன் வேண்டத் தக்கது விரும்பத்தக்கது என்று முடிவு செய்யப்பட்ட அற்புதத் திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம்.

இந்திய விடுதலைக்குப்பின்

1947இல் இந்தியா விடுதலை பெற்ற பின் நேருவின் தலைமையில் அமைந்த அரசு, 1952 தேர்தலில் வெற்றி பெற்றது. 1.11.1955ஆம் நாளிட்ட தீர்மானம் எண் 9-பி-2 (23) 55ன் வாயிலாகக் சேது சமுத்திரத் திட்டக் குழு என்றும்.

ஆதம்பாலம் இருக்கும் கடற் பரப்பின் அணுகு பகுதியில் கால்வாய் ஒன்றை வெட்டுவதைக் குறித்த இயல்பு நிலை, விரும்பத்தக்க தன்மை ஆகியவை குறித்து ஆராய்ச்சி அறிக்கை அளிக்கும் பொறுப்பை அக்குழுவிடத்து இந்திய அரசு ஒப் படைத்தது.

தமிழ் ஓவியா said...

ராமசாமி முதலியார் குழு

இக்குழுவின் தலைவராக அக்காலத் தில் மிகச் சிறந்த நிருவாகியாகவும், கப்பல் போக்குவரத்து வல்லுநராகவும் விளங்கிய டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் (முன்னாள் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவர் நியமிக்கப் பெற்றார்.)
இக்குழுவில், எஸ்.கே. முகர்ஜி, முதன்மை வணிகக் கண்காணிப்பாளர் தென்னக ரயில்வே, பி.என். சாட்டர்ஜி ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர், கொல்கத்தா துறைமுகம், கேப்டன் ஜே.ஆர். டேவீஸ், கடல் பயண ஆலோசகர், இந்திய அரசு, ஆர்.ஏ. கோபாலசாமி, அய்.சி.எஸ். (உறுப்பினர் செயலாளர்).
இக்குழு விரிவான ஆய்வுகளை நடத்தித் தன் அறிக்கையினையும், அத னுடன் சேர்த்த மதிப்பீடுகளையும் 1956ல் அளித்தது. இந்த அறிக்கை பெரு நிலப் பகுதியில் மண்டபத்திற்குக் குறுக்கே கால்வாய் ஒன்று வெட்டுவதற்குப் பரிந் துரைத்தது.

கேப்டன் டேவீஸ் செயற்குறிப்பு

1960ஆம் ஆண்டில் அரசுப் பணியி லிருந்து ஓய்வு பெற்ற கேப்டன் டேவீஸ், பயணிகள் கப்பலைச் செலுத்துதல் சார்ந்த தேவைகளைக் குறித்து அரசுக்குப் பரிந் துரை செய்யவும், அறிக்கை அளிக்கவும், உரிய ஆய்வுகளை நடந்துவதற்காகவும் கொழும்புத் திட்டத்தின் (ஊடிடடிஅடி ஞடய) தொழில் நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் கோரிப் பெறப்பட்டன.

கேப்டன் டேவிஸ், அந்தப் பகுதியில் மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு, கால்வாய் அமைப்பதற்காகும் செலவைக் குறைத்தல் பொருட்டு முந்திய கருத்துக் களில் சிறிய திருத்தங்கள் சிலவற்றைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தவாறான கடல் வழிப் பாதைகளுக்கு டேவீசின் கடல் வழிப்பாதைகள் என்று பெயர். இச் சேது சமுத்திர ராமசாமி முதலியாரின் குழுவின் கடல் வழிப்பாதையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் மேற்கில் தள்ளி அமைத்தது. மேலும் மேற்கில்

1960-61இல் இந்திய அரசின் தலைமை நீரியக்க வரைப்பட வல்லூநர் (ஊநைக ழலனசடிபசயயீல) மண்டபம் பகுதி பாம்பன் கடற்பகுதி, பாக் நீர் சந்தி, பெருங்கடற் பகுதி ஆகியவற்றின் நீர்ப்பரப்பு குறித்து விரிவான நீர் இயக்க வரைப்படஆய்வு நடத்தியதன் அடிப்படையில் கால்வாயின் வழித்தட நேர அமைவினை, மேலும் சற்று மேற்கில் அமையும் வகையில் சென்னை மாநில அரசுத் துறைமுக அலுவலரும், இந்திய அரசுத் தலைமை நீரியக்க வரைப்பட வல்லுநரும் மாற்றினர்.

இந்த மாற்றம் தென் பகுதி அணுகு கால்வாய்க்காக கடற்பரப்பில் சர்வ ஆழ மாகவுள்ள நீர்ப்பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையி லானது. அதன்பின் இந்தக் கால்வாய் அமையும் பாதையில் துளைகள் இடப்பட்டு, அவற்றின் அடிப்படையில் சென்னை மாநில அரசு இத்திட்டத்திற்கான மதிப்பீடு ஒன்றை உருவாக்கியது.

கப்பல்கள் அமிழ் அளவு

சேது சமுத்திரத் திட்டக் குழுவின் செயற் குறிப்பு, கேப்டன் டேவீசின் செயற் குறிப்பு, சென்னை மாநில அரசின் செயற் குறிப்பு ஆகியன எல்லாம் உயர்த்த அளவு இருபத்தி ஆறு அடி அமிழ் அளவு கொண்ட கப்பல்கள் மட்டுமே செல்ல வழிவகை செய்யப்பட்டன.
4-11-12

தமிழ் ஓவியா said...


ஈழத்தமிழர்களின் எதிர்காலம் ஒளிமயமாகும்


அய்.நா. துணைப்பொதுச்செயலர் சந்திப்பு

ஈழத்தமிழர்களின் எதிர்காலம் ஒளிமயமாகும் எனும்

நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது - கலைஞர் பேட்டி

சென்னை,நவ.4-அய்.நா.வில் டெசோ தீர்மானங் கள் - விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக் கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் (3.11.2012) அன்று. செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

செய்தியாளர்: அய்.நா. சபையில் தளபதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு பற்றிய விவரங் களைத் தெரிவிக்க முடியுமா?

கலைஞர் : அய்.நா. மன்றத்தில் டெசோ சார்பி லும், தி.மு.கழகம் சார்பிலும், தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்ற கழகக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் அமெரிக்க நேரப்படி நவம்பர் 1ஆம் தேதி பகல் 11.15 மணிக்கு ஈழத் தமிழர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வகை செய்யும் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களும், அதன் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத் தின் கருத்துக்களும் அடங்கிய விரிவான க்ஷநயவள டிக க்ஷடநநனபே ழநயசவள என்ற தலைப் புடன் கூடிய நீண்ட அறிக்கையை வழங்கியிருக் கிறார்கள். அதன் தொடர்ச்சியாக மனித உரிமை ஆணையத்திலும் இந்த மனுக்கள் வழங்கப்பட்டி ருக்கின்றன.

டெசோ செயல் திட்டத்தின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் என்னுடைய கையெழுத்தோடு கூடிய அந்த ஆவணத்தையும் அய்.நா. மன்றத் தினுடைய துணைப்பொதுச் செயலாளர் பெற்றுக்கொண்டு, இலங்கை யில் நடைபெற்ற - இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலவரங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் மு.க.ஸ்டாலின் அவர்களிட மும், பாலு அவர் களிடமும் நேரடியாகத் தெரிந்து கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதி அளித் திருக்கிறார்கள்.

நம்பிக்கை இருக்கிறது

டெசோ மாநாட்டின் விளைவாக விளைந் துள்ள இந்த முன்னேற்றம் ஈழத் தமிழர்களு டைய வாழ் வாதாரத்தையும் அவர்களுடைய அரசியல் எதிர் காலத்தையும் ஒளிமயமாக ஆக்குவதற்கு பயன்படும் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்வுகள் மூலம் நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதை மிகுந்த மன ஆறு தலோடு செய்தியாளர்களாகிய உங்க ளுக்குத் தெரி விக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏற்கெனவே ஈழத்தில் நடைபெற்ற குரூரமான காட்சிகள் சி.டி.யாகத் தயாரிக்கப்பட்டு அவற் றையும் எங்களுடைய வேண்டுகோள் மனு வோடு இணைத்து தந்திருக்கிறோம்.

அய்.நா.வை அணுகுவது இது முதல் தடவையல்ல

திராவிட முன்னேற்றக் கழகம் அய்.நா. மன்றத்தை அணுகுவது இது முதல் முறையல்ல. இலங்கையிலே தமிழர்களுக்கு எதிராக அமளி வெடித்த அந்தக் காலத்திலேயே ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று, அந்த கையெழுத்து இயக்கத்தின் மூலமாக அவற்றை 1985ஆம் ஆண்டில் அய்.நா. மன்றத்துக்கு கொடுத்திருக்கிறோம்.

அதற்கு முன்பே 1961ஆம் ஆண்டு தூத்துக் குடியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவிலும் இலங்கைத் தமிழர் களைப் பாதுகாப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அய்.நா. மன்றம் உடனடியாக இதில் தலையிட்டு தமிழர்களைப் பாதுகாக்க வேண்டு மென்று கோரிக்கை வைத்தோம். இப்போது ஈழத்தில் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் தமிழர்கள் கண்ணீரும் செந்நீரும் வடிக்கின்ற அளவுக்கு நடைபெற்றுள்ள சூழ்நிலையில் இனி மேலாவது ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் ஏற்பட வேண்டும்; அதற்கு அனைத்து நாடுகளும் ஒத்து ழைப்புதர வேண்டும்; அதற் கான முயற்சிகளை அய்.நா. மன்றம் எடுத்திட வேண்டும்; அதற்குத் தேவையான ஒத்து ழைப்பை இந்திய அரசும் வழங்கிட வேண்டும் ஆகிய இத்தனை கருத்து களும் வேண்டு கோள்களும் அடங்கிய ஆவணம் தான் இப்போது ஸ்டாலின், பாலு மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பொதுவாக்கெடுப்பு

செய்தியாளர்: குறிப்பாக உங்கள் கோரிக் கையில் பொது வாக்கெடுப்பைத்தான் முக்கியமாக வலியுறுத்தியிருக்கிறீர்கள்.அதற்காக நீங்கள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வீர்களா?

கலைஞர்: வலியுறுத்தியிருக்கிறோம். டெசோ மாநாட்டில் தீர்மானமாகவே நிறைவேற்றி யிருக் கிறோம். அந்தத் தீர்மானங்களைச் செயல்படுத்து வதற்கு இலங்கை அரசை தூண்டி அதற்கான அழுத்தத்தை இந்தியப் பேரரசும் தந்தாக வேண்டும் என்பது எங்களுடைய கருத்தாகும்.

செய்தியாளர்:வாக்கெடுப்பு நடத்த வேண்டு மென்று இந்திய அரசிடம் பேசியிருக்கிறீர்களா?

கலைஞர்:மத்திய அரசுக்கு டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்புடைய அமைச்சரிடத்தில் அந்தத் தீர்மானங்கள் விளக்கிக் கூறப்பட்டிருக் கிறது. இந்தியாவிற்குள்தான் நமது தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், தமிழ்நாட்டில் நடைபெற்ற டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அதன் முக்கியத் துவத்தை இந்தியா உணராமல் இருக்க முடியாது.

13ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம்

செய்தியாளர்: 1980-களில் உருவாக்கப்பட்ட டெசோவில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 13ஆவது இலங்கை அரசின் சட்டத்திருத்தத்தை அப்போது தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. இப்போது அதே 13ஆவது சட்டத் திருத் தம் ஒரு தீர்வாக முன் வைக்கப்பட்டிருக்கிறதே?
கலைஞர்: இவைகள் எல்லாம் விவாதிக்கப் பட வேண்டியவைகளாகும். நாளைக்கே இது தான் என்று எந்த முடிவையும் எடுத்து விடப் போவ தில்லை. நாம் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வு, வாழ்வாதாரம் இவைகளுக்காக எடுக்கின்ற முயற்சிகளை வெற்றிகரமாக ஆக்கு வதற்கு நிறைய விவாதிக்க வேண்டியிருக்கிறது. எங்கள் தீர்மா னத்தில் நாங்கள் குறிப்பிட்டிருப் பதைப்போல, ஈழத்தில் இருக்கின்ற மக்களுக்கு என்ன தேவை என்று கருதுகிறார்களோ, அதை அவர்கள் பெற்றுக் கொள்ள எந்தச் சட்டத் திருத்தமானாலும், வாக் கெடுப்பு ஆனாலும் அது நடைபெற வேண்டு மென்றுதான் நாங்கள் எங்கள் தீர்மானத்தில் தெரிவித்திருக்கிறோம்.

செய்தியாளர்:இந்திய அரசின் எண் ணம் எப்படி இருக்கிறது என்றால், இலங்கை ஒரு தனி நாடு, அவற்றின் உள் நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவது சரியாகாது என்று இந்திய அரசு நினைப்ப தைப்போல தெரிகிறதே?

கலைஞர்:நாங்கள் இலங்கையிலிருந்து ஈழம் பிரிந்து தனி நாடாக அமைய வேண்டும் என்பது டெசோ மாநாட்டுத் தீர்மானம் அல்ல. சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டுத் தீர்மானத்தில் பொது வாக்கெடுப்பு என்பதைத் தான் நாங்கள் இப்போது வலியுறுத்தியிருக் கிறோம். அதில் ஈழத் தமிழர்களுக்கு தற்போது நன்மைகள் கிடைக்கும், உரிமைகள் கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

செய்தியாளர்:இலங்கையில் உள்ள தமிழ்க் கைதிகளின் நிலை என்ன?

கலைஞர்:நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் எங்களுடைய மனுவிலே அடங்கியிருக்கிறது.

தகவல் அறியும் சட்டம்

செய்தியாளர்:தகவல் அறியும் சட்டத்தில் அரசியல் கட்சிகள் வரலாமா என்று சர்ச்சை எழுந்துள்ளதே?

கலைஞர்:அதைப்பற்றி விவாதம் வந்தால், அப்போது எங்கள் கட்சியில் அதைப்பற்றி கலந்தாலோசிப்போம்.

செய்தியாளர்:இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி கொடுப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலைஞர்:கூடாது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறோம்.

செய்தியாளர் :நீங்கள் பலமுறை தி.மு.க. சார்பில் கண்டனம் வெளியிட்ட பிறகும், தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்கிறார் களே?
கலைஞர்: எனக்கு வந்த தகவலின்படி நாங்கள் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க மாட்டோம், இந்தியாவில் வேறு எங்கேயாவது பயிற்சி அளிப் போம் என்றார்கள். நான் சொல்கிறேன், தமிழ் நாடும் இந்தியாதான்.

செய்தியாளர்:பொது வாக்கெடுப்பு என்று சொல்கிறீர்கள். இதற்கு உலக அளவில் நெருக்கடி கொடுப்பீர்களா?

லண்டன் மாநாடு...

கலைஞர் : லண்டனில் மாநாடு நடைபெற வுள்ளது.அந்த மாநாட்டிற்கு எங்களுக்கும் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று தளபதி ஸ்டாலின், டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ். ராதா கிருஷ்ணன் ஆகியோரெல்லாம் கழகத்தின் சார்பில் அந்த மாநாட்டிற்குச் செல்கிறார்கள். அங்கேயும் இதைப் பற்றி விவாதிப்பார்கள். -இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.
4-11-12

வலையுகம் said...

பல விடயங்களை தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

தமிழ் ஓவியா said...

சிறீரங்க முழக்கம்!


நேற்று (4.11.2012) கழக வரலாற்றில் மறக்க முடியாத எழுச்சிப் பாசறை தீட்டிய உணர்ச்சிக் காவியம்!

சிறீரங்கத்தைச் சேர்ந்த திருவானைக்காவலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டம் அது! பொதுக் கூட்டமா அது! பொங்கி எழுந்த இனவுணர்வின் பிரவாகம்! வெடித்தெழுந்த தன்மான உணர்வின் தணல் மலை!!

இருக்காதா? இந்த 2012-லும் இந்நாட்டுக்குரிய திராவிட மக்களை - எங்கள் தேவடியாள் பிள்ளைகளே! என்று சொல்லக் கூடிய திமிர்வாதம், ஒண்ட வந்த ஒரு கூட்டத்துக்கு வருமேயானால், மானம் ஒன்றே நல் வாழ்வெனக் கொண்ட மறவேந்தர்கள் பூனைகள் அல்லர் புலி நிகர் தமிழ் மாந்தர் என்று வெடித்துக் கிளம்ப மாட்டார்களா?

அந்த எழுச்சிக் கோலத்தைத்தான் நேற்று காண முடிந்தது. அதுவும் இன இழிவை ஒழிக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்குக் காவல்துறை மூன்று முறை அனுமதி மறுத்தது என்றால் அதனை எப்படி எளிதாக எடுத்து கொள்ள முடியும்?

திருவானைக்காவலில் நேற்று திரண்ட மக்கள் கடல் -அவர்கள் கண்களில் வெடித்த கோபக் கனல் -முகம்காட்டிய போர்க் குணம் காவல்துறையினரைக் கூட தவறு செய்தது நாம்தான் என்ற எண்ணத்தை உணரச் செய்திருக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடம் இல்லை.

அவ்வளவுப் பெரிய எழுச்சிக் கடல் அமைதி காத்த அந்தப் பாங்கு - நடுநிலையாளர்கள் மத்தியிலேகூட ஆச்சரியக் குறியை எழுப்பி இருக்கும்.

திராவிடர்கழகம் மேற்கொண்டிருக்கும் இந்தத் தன்மான போர்பற்றி தங்கள் கவனத்தை இதுவரை எந்தக் காரணத்தாலோ செலுத்தாத அரசியல் வாதிகள் - அமைப்புகள் மத்தியில்கூட சிந்தனை அலைகளைத் தட்டி எழுப்பிய போர்க்களக் கூட்டம் அது என்றால் மிகையாகாது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துகள், அறிவித்த அறிவிப்பு மிக மிக முக்கியமானவை.

1) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51a(h) குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்னும் பகுதியில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்ற அந்த அடிப்படைக் கடமையினைத் தானே திராவிடர் கழகம் செய்கிறது. அதற்கு எப்படி அனுமதி மறுக்கலாம்?

2) எம்.ஜி.ஆர் அரசு, தெருக்கள் பெயரில் ஜாதி இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அவர் வழி வந்ததாகக் கூறும் அ.இ.அ.தி.மு.க. அரசு, அதன் முதல் அமைச்சர் பிராமணாள் பெயரை - அதுவும் அவர் தொகுதியில் எப்படி அனுமதிக்கலாம்?

3) சூத்திரர் இழிவு ஒழிப்பு என்பது ஏதோ திராவிடர் கழகப் பிரச்சினையல்ல, ஒட்டு மொத்தமான தமிழர்களின், திராவிடர்களின் தன்மானப் பிரச்சினை.

கட்சிகளைத் தூக்கி எறியுங்கள் - உங்கள் மான உணர்வை - சுயமரியாதை உணர்வை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

4) பிராமணாள் என்ற வருணாசிரம ஆதிக்கப் பெயர் நீக்கப்படாவிட்டால் டிசம்பர் முதல் தேதியன்று சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் போராட்டத் திட்டம் அறிவிக்கப்படும். அந்த ஆணவப் பெயர் நீக்கப்படும் வரை தொடர் போராட்டமாக இருக்கும்.

5) கழகம் நடத்தும் எந்தப் போராட்டத்திலும் அமைதிக்குக் குந்தகம் ஏற்படாது. அந்த அறப் போராட்டம் தந்தை பெரியார் வகுத்த வழியில் தொடரும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

டிசம்பர் முதல் தேதி என்ன? இப்பொழுதே தயாராகி விட்டார்கள் கழகத் தோழர்கள். சில மணி நேர அளவிலேயே திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்கள் 500 பேர்கள், கையொப்பமிட்டு போராட்ட வீரர்களின் பட்டியலை திருவானைக்காவல் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவரிடம் ஒப்படைத்து விட்டார்களே.

பட்டியல் விடுதலையில் தொடரும்.

கழகத் தோழர்களே!

தன்மான தமிழ்ப் பெருங்குடி மக்களே!

கட்சிகளைத் தூக்கி எறிந்து தன்மானம் காக்க போர்க் கொடி தோளில் ஏந்துவீர்!

பெரியார் இல்லை; அண்ணா இல்லை; புரட்சிக் கவிஞர் இல்லை என்று பூச்சாண்டிக் காட்டிப் பார்க்கலாம் என்று ஆரியக் கூட்டம் பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறது.

தந்தை பெரியார் மறைந்தாலும் அவர் மூட்டிய தணல் தணிந்து போய்விடவில்லை என்பதை நிரூபிக்க நீறு பூத்த நெருப்புகளே, தயாராவீர்! தயாராவீர்!! 5-11-2012

தமிழ் ஓவியா said...


பிராமணாள் இனியும் தலை காட்டக் கூடாது!


சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் பிராமணாள் என்னும் ஓட்டல் 6.11.2012 ஆம் நாள் இரவோடு இரவாகக் கடையைக் கட்டிக் கொண்டது.

திராவிடர் கழகத் தோழர்கள் கேட்டுக் கொண்ட போதே அந்தப் பிராமணாள் பெயரை நீக்கி யிருந்தால், இப்பொழுது அந்த உணவு விடுதியையே மூடிவிடும் அவல நிலை ஏற்பட்டு இருக்காது.
பார்ப்பனர்கள் உணவு விடுதி நடத்தக் கூடாது. அவர்கள் பிழைப்புக்காக எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற அற்பப் புத்தி நமக்கொன்றும் இல்லை.

பார்ப்பனர்கள் நன்றாகவே பிழைக்கட்டும்; நன்றாகவே சகல சம்பத்துகளுடனும் வாழட்டும் நமக்கொன்றும் அட்டியில்லை.

பார்ப்பான் பணக்காரனானால் என்ற கட்டுரையை குடிஅரசு இதழில் (9.11.1946) தந்தை பெரியார் தெளிவாகவே எழுதியுள்ளார்.

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது; அவன் ஏழையாக இருக்க வேண்டும் என்பதல்ல.

ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக கோடீஸ்வரனாக வும், லட்சாதிபதியாகவும் ஆகி விட்டாலும் சரியே எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும் மடாதிபதிகள் உட்பட எவரும், சிறிதுகூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்று தெளிவாக, நீரோட்டமாகக் கூறியுள்ளாரே!

பிராமணாள் உணவு விடுதி என்பதில் உள்ள பிராமணாள் என்பதை ஒழிப்பது என்பதற்கான விளக்கம் இதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறதே!

பார்ப்பனர்களுக்கு இது தெரியாதா? பிராமணாள் என்பது உயர் வருணத் தன்மையைப் பறைசாற்றக் கூடியதென்று தெரிந்துதானே அதனை இன்றளவும் நிலைநாட்டிடத் துடிக்கின்றனர் - அடம் பிடிக்கின்றனர்.

அரசர்கள் முதல் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து விட்டதாலும், வருணாசிரம தர்மத்தில் உயர் ஆளுமை அவர்களுக்கு எல்லா வகையிலும் வசதி வாய்ப் புள்ளதாக இருப்பதாலும் அதனை விட்டுக் கொடுக்க மனம் இர(ற)ங்கி விடுவதில்லை.

பிராமணாள் என்று தங்களை உச்சமான இடத்தில் ஆசனம் போட்டு உட்கார வைத்தாலும் கூடப் பரவாயில்லை; அந்த வருணாசிரமத் தன்மையில் பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் என்று சுட்டுவதுதான் சகிக்க முடியாததாக இருக் கிறது. ஏன் சகிக்க முடியாதது என்று சொல்லு கிறோம்? சூத்திரன் ஏழு வகைப்படுவான். அதில் ஒன்று தமது விபச்சாரி மகன் என்று பார்ப்பான் எழுதி வைத்திருப்பதுதான்.

பிராமணாள் ஒழிப்புப் போராட்டத்தை எதிர்த்து எழுதுவோர்கூட, திராவிடர் கழகம் எடுத்து வைக்கும் இந்தக் குற்றச்சாற்றுக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், பிரச்சினையைத் திசை திருப்பும் தன்மையில் எழுதுகோல் பிடிப்பது பரிதாபமே!

சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் நடத்திய உணவு விடுதியில் இடம் பெற்ற பிராமணாள் ஒழிப்பு - இத்தோடு முடிவுக்கு வந்தாக வேண்டும். மறுபடியும் சிறீரங்கத்திலோ, வேறு இடங்களிலோ பிராமணாள் முளைப்பதை அனுமதிக்க முடியாது, முடியவே முடியாது.

அப்படி எந்த ஊரிலாவது பிராமணாள் தலை காட்டுமேயானால் முதலில் கோரிக்கையை நேரிடையாக வையுங்கள். நாகரிகமாகப் பிரச் சினையை முடித்துக் கொண்டால் பிரச்சினை இல்லை; முரண்டு பிடித்தால் உடனே தலைமைக்குத் தெரிவிக்குமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். உரிய முயற்சியைத் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு மேற் கொள்ளலாம்.

திராவிடர் கழகத்தின் முறையான முயற்சியும், பண்பாட்டுடன் கூடிய அணுகுமுறையும்தான் இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

கொள்கையும் முக்கியம் - வழிமுறையும் முக்கியம் என்பதை எந்தக் காரணத்தோடும் கழகத் தோழர்கள் மறந்துவிட வேண்டாம். இந்தப் பிரச்சினையில் முழு முயற்சியுடன் செயல்பட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.8-11-2012