Search This Blog

4.11.12

தமிழர்களும் - தீபாவளியும்


தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.
சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத் தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்குக் காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.
அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடி யில் போய் ஒளிந்து கொண்டானாம்.
மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்கு வதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து  விட்டாராம்.
அந்த சமயத்தில் அந்த பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக் குத்தான் நரகாசூரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண் டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.
விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்.
நரகாசூரன், விஷ்ணுவை தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். 

தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்ன புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?
சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?
கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசூரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?
அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக் காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?
அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டா ளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழி வானது நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்காள விரிகுடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர் களை, தாசிமக்கள், மடையர்கள், கண் டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லு வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.
ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமை களான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களுக்குச் சுரணை இல்லாவிட் டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.
இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப் பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந் தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தி யும், மனவேதனையும் படுவது உண்மை யானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?
               ------------------தந்தைபெரியார்  "விடுதலை"' குடிஅரசு - கட்டுரை மறுவெளியீடு - 31.10.1937

1 comments:

தமிழ் ஓவியா said...

சிறீரங்க முழக்கம்!


நேற்று (4.11.2012) கழக வரலாற்றில் மறக்க முடியாத எழுச்சிப் பாசறை தீட்டிய உணர்ச்சிக் காவியம்!

சிறீரங்கத்தைச் சேர்ந்த திருவானைக்காவலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டம் அது! பொதுக் கூட்டமா அது! பொங்கி எழுந்த இனவுணர்வின் பிரவாகம்! வெடித்தெழுந்த தன்மான உணர்வின் தணல் மலை!!

இருக்காதா? இந்த 2012-லும் இந்நாட்டுக்குரிய திராவிட மக்களை - எங்கள் தேவடியாள் பிள்ளைகளே! என்று சொல்லக் கூடிய திமிர்வாதம், ஒண்ட வந்த ஒரு கூட்டத்துக்கு வருமேயானால், மானம் ஒன்றே நல் வாழ்வெனக் கொண்ட மறவேந்தர்கள் பூனைகள் அல்லர் புலி நிகர் தமிழ் மாந்தர் என்று வெடித்துக் கிளம்ப மாட்டார்களா?

அந்த எழுச்சிக் கோலத்தைத்தான் நேற்று காண முடிந்தது. அதுவும் இன இழிவை ஒழிக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்குக் காவல்துறை மூன்று முறை அனுமதி மறுத்தது என்றால் அதனை எப்படி எளிதாக எடுத்து கொள்ள முடியும்?

திருவானைக்காவலில் நேற்று திரண்ட மக்கள் கடல் -அவர்கள் கண்களில் வெடித்த கோபக் கனல் -முகம்காட்டிய போர்க் குணம் காவல்துறையினரைக் கூட தவறு செய்தது நாம்தான் என்ற எண்ணத்தை உணரச் செய்திருக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடம் இல்லை.

அவ்வளவுப் பெரிய எழுச்சிக் கடல் அமைதி காத்த அந்தப் பாங்கு - நடுநிலையாளர்கள் மத்தியிலேகூட ஆச்சரியக் குறியை எழுப்பி இருக்கும்.

திராவிடர்கழகம் மேற்கொண்டிருக்கும் இந்தத் தன்மான போர்பற்றி தங்கள் கவனத்தை இதுவரை எந்தக் காரணத்தாலோ செலுத்தாத அரசியல் வாதிகள் - அமைப்புகள் மத்தியில்கூட சிந்தனை அலைகளைத் தட்டி எழுப்பிய போர்க்களக் கூட்டம் அது என்றால் மிகையாகாது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துகள், அறிவித்த அறிவிப்பு மிக மிக முக்கியமானவை.

1) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51a(h) குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்னும் பகுதியில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்ற அந்த அடிப்படைக் கடமையினைத் தானே திராவிடர் கழகம் செய்கிறது. அதற்கு எப்படி அனுமதி மறுக்கலாம்?

2) எம்.ஜி.ஆர் அரசு, தெருக்கள் பெயரில் ஜாதி இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அவர் வழி வந்ததாகக் கூறும் அ.இ.அ.தி.மு.க. அரசு, அதன் முதல் அமைச்சர் பிராமணாள் பெயரை - அதுவும் அவர் தொகுதியில் எப்படி அனுமதிக்கலாம்?

3) சூத்திரர் இழிவு ஒழிப்பு என்பது ஏதோ திராவிடர் கழகப் பிரச்சினையல்ல, ஒட்டு மொத்தமான தமிழர்களின், திராவிடர்களின் தன்மானப் பிரச்சினை.

கட்சிகளைத் தூக்கி எறியுங்கள் - உங்கள் மான உணர்வை - சுயமரியாதை உணர்வை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

4) பிராமணாள் என்ற வருணாசிரம ஆதிக்கப் பெயர் நீக்கப்படாவிட்டால் டிசம்பர் முதல் தேதியன்று சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் போராட்டத் திட்டம் அறிவிக்கப்படும். அந்த ஆணவப் பெயர் நீக்கப்படும் வரை தொடர் போராட்டமாக இருக்கும்.

5) கழகம் நடத்தும் எந்தப் போராட்டத்திலும் அமைதிக்குக் குந்தகம் ஏற்படாது. அந்த அறப் போராட்டம் தந்தை பெரியார் வகுத்த வழியில் தொடரும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

டிசம்பர் முதல் தேதி என்ன? இப்பொழுதே தயாராகி விட்டார்கள் கழகத் தோழர்கள். சில மணி நேர அளவிலேயே திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்கள் 500 பேர்கள், கையொப்பமிட்டு போராட்ட வீரர்களின் பட்டியலை திருவானைக்காவல் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவரிடம் ஒப்படைத்து விட்டார்களே.

பட்டியல் விடுதலையில் தொடரும்.

கழகத் தோழர்களே!

தன்மான தமிழ்ப் பெருங்குடி மக்களே!

கட்சிகளைத் தூக்கி எறிந்து தன்மானம் காக்க போர்க் கொடி தோளில் ஏந்துவீர்!

பெரியார் இல்லை; அண்ணா இல்லை; புரட்சிக் கவிஞர் இல்லை என்று பூச்சாண்டிக் காட்டிப் பார்க்கலாம் என்று ஆரியக் கூட்டம் பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறது.

தந்தை பெரியார் மறைந்தாலும் அவர் மூட்டிய தணல் தணிந்து போய்விடவில்லை என்பதை நிரூபிக்க நீறு பூத்த நெருப்புகளே, தயாராவீர்! தயாராவீர்!! 5-11-2012