Search This Blog

10.11.12

நான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாய் இருக்காது!-பெரியார்

ஈ.வெ.ராவுக்கு சென்னிமலை யூனியன் போர்டார் வரவேற்பு

தோழர்களே! இன்று இவ்வூர் யூனியன் போர்டார் அழைப்புக்கு இணங்கி வந்த சமயம் உற்சவக் கூட்டத்திற்காக ஒரு பொதுக்கூட்டம் கூட்ட வேண்டுமென்று சொன்னதால் இங்கு பேச ஒப்புக்கொண்டேன். ஆனால் இங்கு கூடியிருக்கும் நீங்கள் பெரிதும் இந்த உற்சவத்திற்காக வந்தவர்கள்.

நான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாய் இருக்காது, ஆனாலும் உங்கள் மனதை புண்படுத்தவேண்டும் என்று நான் பேசவர வில்லை. ஆனால் இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகிறேன்.

இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண் டது? சுப்பிரமணியசாமிக்கு கல்யாணம். கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர்மீது ஊர்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு வாசல், வேலை வியாபாரம் முதலியவைகளை விட்டு விட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள். பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள். சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா? வருஷந்தோறுமா கல்யாணம் செய்வது? இந்த காவடி தூக்கிக்கொண்டு கண்டபடி குதிப்பதிலும் உளருவதிலும் ஏதாவது அருத்தம் இருக்கிறதா? இதை அன்னிய மதக்காரனோ அன்னிய தேசத்தானோ பார்த்தால் என்ன சொல்லுவான்? வேறு மதக்காரன் இந்தபடி ஆடினால் நாம் என்ன சொல்லு வோம். நமது அறிவுக்கும் நாகரீகத்திற்கும் இது தானா அடையாளம்? எத்தனை வருஷகாலமாக இந்தப்படி மூடக்கொள்கையில் ஈடுபட்டு வரு கிறோம்? என்ன பலனைக் கண்டோம். மனிதனுக்கு முற்போக்கே கிடை யாதா? 2000, 3000 வருஷத்திற்கு முந்திய நிலை நம்மிடம் சிறிதும் மாற வில்லை. இம்மாதிரி நடவடிக்கை நம்மை மிருக பிராயக்காரன் என்று காட்டு வதுடன் நமது பணம் எவ்வளவு செலவாகின்றது, நமது நேரமும் ஊக்கமும் எவ்வளவு செலவாகின்றது பாருங்கள். கடவுளைப் பற்றிய எண்ணங்களும் பக்திகளும் நமக்கு என்ன பலனைக் கொடுக்கின்றன? அதிக பக்திக்காரன் தனக்கு வேண்டியதெல்லாம் கடவுள் தருவார் என்று எண்ணுகின்றான். கடவுளைப் பற்றி அதிகமாய் அறிந்தவன் சகலமும் கடவுள் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று எண்ணுகிறான். மனிதனுடைய முற்போக்கையும் அவனது கஷ்டத்தையும் கொடுமையையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதையும் இந்த எண்ணங்கள் தடைப் படுத்துகின்றன.

பல ஆயிர வருஷங்களாக ஒருவன் கீழ் ஜாதியாய் இருப்பதற்கும் கல்வி அறிவு பெறாமல் இருப்பதற்கும் சதா உழைத்து உழைத்து பாடுபட்டும் பட்டினியாயும் போதிய ஆதாரமும் வசதியும் இல்லாமலும் இருப்பதற்கும் இந்த எண்ணங்களே காரணமாகும் இது போலவே பாடுபடாத சோம்பேரிகள் கோடீஸ்வரர்கள் ஆகவும் தலைமுறை தலைமுறையாய் பிரபுக்களாகவும் மேல் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதற்கும் இந்த எண்ணங்கள் தான் காரணம். இந்த எண்ணங்கள் பணக்காரனுக்கும் சோம்பேரிக்கும் (பார்ப்பானுக்கும்) தான் அனுகூலம். தொழிலாளிக்கும், கூலிக்காரனுக்கும், பண்ணைய ஆளுக்கும் கெடுதியே ஆகும்.

ஏழைகள் தங்கள் தரித்திரத்திற்கும் கஷ்டத்துக்கும் கடவுளும் தலைவிதியும் தான் காரணம் என்று சொல்லிவிடுவாரேயாகில் அவர்கள் எப்படி தரித்திரத்தை நீக்கிக்கொள்ள முடியும்? அவன் தன் பாட்டின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான்? என்று பார்த்து அவை களை தடுக்கவேண்டும். இந்த காரியம் செய்ய ஒரு கடவுளும் ஒப்பாது. ஏனென்றால் கடவுளையும் தலைவிதியையும் பணக்காரனும் சோம்பேரியும் தான் உண்டுபண்ணுகிறான். ஆகையால் அவைகளை தங்களுக்கு தகுந்த மாதிரியாகத் தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். இங்கு மாத்திரம் அல்லாமல் எல்லா தேசங்களிலும் பணக்காரர்கள் தங்கள் நன்மைக்கும் அது ஸ்திரமாய் இருப்பதற்கும் இந்த மாதிரியாகத்தான் கடவுளை சிருஷ்டித்து அதைப் பிரசாரம் செய்யப் பாதிரி களை ஏற்படுத்தி அவர்களுக்கு பணம் கொடுத்து காப்பாற்றி வருகிறார்கள். இந்தப் புரட்டுகளை உலகில் வெகு பேர் அறிந்திருந்தாலும் ரஷியா தேசத் தார்கள் தான் முதன் முதலில் இதை அழித்து நிர்த்தூளியாக்கிப் பணக்காரத் தன்மையையும் பாதிரித் தன்மையையும் ஒழித்தார்கள். ரஷியா தேசமானது இந்தியாவைப்போலவே பணக்காரருடையவும், பார்ப்பனர் (பாதிரி) களுடை யவும் ஆதிக்கத்தில் இருந்து ஏழை மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால் அவர்கள் அதற்குக் காரணம் கடவுள் புரட்டும், மதப்புரட்டும் என்பதை உணர்ந்து அந்த இரண்டையும் அழிக்கத் தொடங்கி இன்று எலலோரும் சமமாய் வாழுகின்றார்கள். அங்கு சோம்பேரியோ, பிரபோ, பணக்காரனோ, முதலாளியோ, மிராசுதாரனோ, ஜமீன்தாரனோ கிடையாது. எல்லோரும் பாடுபடவேண்டியது. அதன் பயனை எல்லோரும் சமமாய் அனுபவிக்க வேண்டியது. ஒருவனை ஒருவன் ஏய்க்கவோ, ஒருவன் பாடு பட்டதை ஒருவன் அனுபவிக்கவோ முடியாது.

ஆனால் இன்று இங்கு “கடவுள் செயலால்” இருக்கும் தேசத்தில் ஒரு மனிதனுக்கு 1000 ஏக்கர் 10000 ஏக்கர் பூமி கூட இருக்கிறது. பூமிக்குச் சொந்தக்காரன் என்பவன் உழுவதில்லை, விதைப்பதில்லை, தண்ணீர் இறைப்பதில்லை, பாத்தி கட்டுவதில்லை, அறுப்பு அறுப்பதில்லை. ஆனால் விளைந்த வெள்ளாமையை எல்லாம் தன் வீட்டில் கொண்டு போய்க் கொட்டிக் கொள்ளுகிறான். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, அறுப்பு அறுத்த ஆளுக்கு ஓருபடி போராதா, இரண்டுபடி போராதா என்று அரை வயிற்றுக்குத்தான் கொடுக்கிறான். துணி வேண்டுமானால் தர்மத்துக்கு இனாம் கொடுப்பது போல் அரைத் துணி கொடுக்கிறான். வீடு வேண்டு மானால் காட்டில் கை அகலம் இடம் காட்டுகிறான். இதெல்லாம் பிச்சை கொடுப்பது போல் கொடுக்கிறான். ஆனால் மிராசுதாரனோ இவ்வளவையும் விற்று மாடி வீடு, மோட்டார் வண்டி, தேவடியாள், பிராந்தி, உஸ்கி, நாடகம், சினிமா, தாலூகா, ஜில்லா போர்டு மெம்பர், பிரசிடெண்ட்டு, முனிசிபல் சேர்மென் ஆகியவைகளுக்கு பதினாயிரக்கணக்காக வாரி செலவு செய்து ராஜ போகம் அனுபவிக்கிறான். இந்த அக்கிரமங்களுக்கு உடந்தையாய் இருக்கிற கடவுளும், அனுமதித்துக் கொண்டிருக்கிற கடவுளும், இன்னமும் நமது நாட்டுக்கு வேண்டுமா என்று கேட்கின்றேன். கடவுள் புரட்டு ஒழிந்தா லொழிய இந்த மிராசுதாரர்கள் ஒழியமாட்டார்கள். இவர்களது இப்படிப்பட்ட அகந்தையும் ஆணவமுமான காரியங்களும் ஒழியாது. உங்கள் தரித்திரங் களும் ஒழியாது.

ஆகையால் இவைகளை யெல்லாம் நன்றாய் யோசித்து உங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதன் படி நடவுங்கள்.

                      -----------------------------09.02.1933இல் சென்னிமலை போர்டு பள்ளிக்கூடத்தில் சென்னிமலை யூனியன் போர்டாரால் வழங்கப்பட்ட உபசார நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் ஆற்றிய உரை, -”குடி அரசு” - சொற்பொழிவு - 19.02.1933

12 comments:

தமிழ் ஓவியா said...


நரகாசுரன் பிறப்பு கட்டுக்கதையே!


இரணியாட்சன் ஒருமுறை ஞாலத்தைப் (பூமியை)ப் பாயாக சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, திருமால் பன்றியுருக் கொண்டு தன் கொம்பினால் அதன் மார்பைப் பிளந்து ஞாலத்தைப் பண்டுபோல் நிறுத்தினார் என்றும், அன்று நிலமகட்கும் அவருக்கும் நேர்ந்த தொடர்பினால் நரகாசுரன் பிறந்தானென்றும், கூறிக் கல்லா மக்களை விலங்காக்கும் கட்டுக் கதைகளின் இழிவையும் இடக்கரையும் பொய்மையையும் புரட்டையும் படவாயிலாகப் பெரியார் விளக்கிக் காட்டியபோது, அறிவியலும் ஞான நூலும் உயிர் நூலும் உடல் நூலும் வரலாற்று நூலும் கற்ற இக்காலத்தில் அவருடன் ஒத்துழையாது, ஆரியருடன் சேர்ந்து கண்டித்தது. அவர் கூறியவாறு காட்டு விலங்காட்டித்தனமேயன்றி வேறன்று.
தமிழ் இலக்கிய வரலாறு (பக்கம் 381 ஞா. தேவநேயப் பாவாணர்)

தகவல்: ச. அரங்கசாமி, காரைக்குடி)

தமிழ் ஓவியா said...


ஒரே பிரச்சினை: இருவகை அணுகுமுறைகள்


நேற்று வெளிவந்த நாளேடு ஒன்றில் இரண்டு செய்திகள் இடம் பெற்றன. முதல் செய்தி: கூவம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வீடுகள் - ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படவில்லை.

இதனால் கூவம் ஆறு குறுகி விட்டது என்று அங்கலாய்க்கப்பட்டுள்ளது. சென் னையைப் பொறுத்தவரை கூவம் ஆற்றின் கரை களில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டு விட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆக்ரமிப்புகள் தான் அகற்றப்படவில்லை என்று விரிவாக அந்த ஏடு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதே ஏடு இன்னொரு செய்தியையும் வெளியிட் டுள்ளது கோவில் இடிப்பை கண்டித்து இந்து அமைப்பினர் முற்றுகை என்ற தலைப்பில் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.

யானைக் கவுனியில், கோவில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, இந்து அமைப்பினர் நேற்று முற்றுகை யிட்டனர்.

யானைகவுனியில் என்.எஸ்.சி. போஸ் வால்டாக்ஸ் சாலை சந்திப்பில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அக்கோவில், பல ஆண்டுகளாக மூடியே உள்ளது.

கோவில் பரம்பரை அறங்காவலராக, முத்துலட்சுமி என்பவர் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவில் இடிக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து, இந்து அமைப்பினர்,கோவில் முன் முற்றுகை யிட்டனர். காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்.

விசாரணையில், கோவிலை இடித்து விட்டு சீரமைக்க, கடந்த, 2010ல் சந்தன்மால் என்பவர், அனைத்துத் தரப்பிலும் ஒப்புதல் வாங்கினார் என்பது தெரிய வந்தது. தீபாவளிக்கு. பிறகு, நடவடிக்கை எடுக்கலாம் என, காவல்துறையினர் கூறியதை இரு தரப்பினரும் ஏற்றனர்.

இந்தச் செய்தியின் தன்மை என்ன? முதல் செய்தியின் தன்மை என்ன? இரண்டிற்கும் இடையே இழைந்தோடும் வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டாமா?

சட்டம் எல்லாருக்கும் பொது என்றால் இரண்டு இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்தான். அதே நேரத்தில் மக்கள் குடியிருக் கும் வீடுகள் ஆக்கிரமிப்பு என்று குற்றஞ்சாட்டப்பட்டு அகற்றப்பட வேண்டும். உயிர் இல்லாத குத்துக் கல்லை நட்டு வைத்து அதற்குக் கோயில் என்ற பெயர் சூட்டினால் அது ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அகற்றக் கூடாது என்றால் இது என்ன சட்டம்? என்ன மனிதநேயம்?

கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் தீபாவளிக்குப் பிறகு கோயில் கட்டப்படுமாம். இதற்குக் காவல் துறையின் ஒத்துழைப்பு - கட்டப் பஞ்சாயத்து! நம் நாட்டின் நியாயம், நேர்மை, சட்டம் எந்த யோக்கியதையில் இருக்கின்றன என்பதற்கு பனிமலையின் ஒரு சிறு முனை என்று சொல்லும் அளவுக்குள்ள ஓர் எடுத்துக்காட்டு இது.

சட்ட விரோதமாக அத்துமீறலாக, அரசு இடங்களைக் கோயில்கள் ஆக்கிரமித்து இருந்தால், அவற்றை அகற்றக் கூடாதாம். இந்து அமைப்புகள் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகக் குரல் கொடுக்குமாம். முற்றுகைப் போராட்டம் நடத்துவார்களாம்.

சட்டப்படி அரசு என்ன நடவடிக்கையை எடுத் திருக்க வேண்டும்? அரசு இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயிலை இடிக்கக் கூடாது என்று முற்றுகைப் போராட்டத்தை நடத்தியவர்களைச் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் தள்ளி இருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை காவல்துறை?

கோயில் என்றால் பயமா? அல்லது காவல்துறை யும் தங்களுக்குள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பும் கொடுத்துள்ளார்களா?

இப்படி வேலியே பயிரை மேயும் போக்கினை காவல்துறை மேற்கொள்ளுமேயானால், மக்கள் மத்தியில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்படும்?

பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமித்துள்ள கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டமிட்ட முறையில் ஆணை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புக் கோயில்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. அவை அகற்றப்பட்ட விவரத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்ட பிறகும், காவல்துறை இப்படி நடந்து கொள்ளலாமா?

ஆக்கிரமித்துள்ள கோயில்களை சட்ட ரீதியாக அகற்றும் விழிப்புணர்வை திராவிடர் கழகம் மேற் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.10-11-2012

தமிழ் ஓவியா said...


பெண்களும், தீபாவளியும்

- மனோரஞ்சிதம்

31.10.1959 அன்று தீபாவளிப் பண்டிகை என்று நாட்குறிப்பில் குறிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி என்றால் என்ன? அது யாருடைய பண்டிகை? அதன் வரலாறு என்ன? நாம் ஏன் அதைக் கொண்டாட வேண்டும்? என்று நமது நாட்டில் அனேகருக்குத் தெரியாது. அதிலும் நம் தமிழ் மகளிர்க்கு 100-க்கு 90 பேருக்குத் தெரியாது.

ஏதோ அடுத்த வீட்டு அம்புஜம் கொண்டாடுகிறாளே, நாம் சும்மாயிருந்தால் நம் உயர்வு குறித்து அவள் ஏளனம் செய்வாளே என்றும், பக்கத்து வீட்டுப் பங்கஜம் கொண்டாடுகிறாள்; தீபாவளிக்கு 150 ரூபாயில் பட்டுப் புடவையும், 20 ரூபா யிக்குப் பட்டாசு வெடிகளும், பட்சணங் களும் தடபுடலாகச் செய்யும்போது நாம் கொண்டாடாமல் இருந்தால் மற்றவர் என்ன நினைப்பார்களோ என்று கௌரவத்தைக் காப்பாற்ற, தன் கணவனை நச்சரித்துக் கடன் வாங்கியாவது தீபாவளி கொண்டாடும் பெண்கள் அனேகர், ஏதோ வழிவழி வந்த பெரியோர்கள் செய்யும் பண்டிகையை நாம் மூளியாகக் கொண்டாடாமல் இருந்தால் ஏதாவது கெடுதி நேரும் என்று அஞ்சிப் பண்டிகை நிறைவேற்றுபவரும் உண்டு.

நம் தந்தை பெரியார் அவர்களின் சீர்திருத்தச் சுயமரியாதைப் பிரச்சாரத் தால் ஒரளவு மூடநம்பிக்கை நம் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாகக் குறைத்து வருகிறது. ஆனாலும் நமது பெண்கள் இன்னும் முழு மூடநம்பிக்கை யிலேயேதான் இருந்து வருகிறார்கள். இந்த தீபாவளிப் பண்டிகையன்று நூற்றுக்கணக்கில் பணம் விரயம் செய்து புடவைகள் எடுத்துப் பட்டாசு, மத்தாப்பு வாணம் விடுத்துக் காசைக் கரியாக்கியும், இரண்டு நாள் 3 நாள் சிரமம் எடுத்துத் தின்பண்டங்கள் செய்து பணம் விரயமாக்கினாலொழிய நம் பெண்கள் திருப்தியடைவதில்லை.

உம்! என்னவோ இந்த முறை தீபாவளி எங்கள் வீட்டில் சரியாகவே இல்லை என்று குறைபடாமல் இருக்க மாட்டார்கள். இவ்வளவு பொருள் வீணாக்குவதுடன் நம் மானத்தையும் விற்று விடுகிறோமே என்ற உண்மைக் கதை தெரிந்தால் நம் பெண்கள் நிச்சயம் தீபாவளி போன்ற ஆரிய பச்சைப் பார்ப்பனப் பண்டிகைகளைக் கொண்டாட மாட்டார்கள்!

நரகாசுரன் வங்காளப் பகுதியில் இருந்த ஒரு திராவிட அரசன். அவன் அக்கால ஜடாமுடி தரித்த முனிபுங்கவர் களாம் வஞ்சக ஆரியர்களின் அடாத செயல்களை எதிர்த்த ஒரு அரசன். அவனது எதிர்ப்பைக் கண்ட பார்ப் பனர்கள், தங்கள் தாசர்களின் தலை வனை, மகாவிஷ்ணுவின் அவதாரம் கிருஷ்ணபகவான் என்று கதை கட்டி விட்டு அவனைக் கொண்டு நரகா சுரனைக் கொன்றார்கள்! அவனது நற்செயல்களை அழித்தொழித்து அவை களைத் தீச் செயல்களாக உருவகப் படுத்தி, நாட்டில் அறிமுகப்படுத்தி அதைத் தீபாவளி யாக்கினார்கள். அதிலும் ஒரு பெண்ணின் துணையுடன் கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற தாகக் கதை! அவள் தான் சத்திய பாமாவாம்!

தமிழ் ஓவியா said...

இதைத்தான் ஆரியர்கள் தீபாவளி எனக் கொண்டாடுகிறார்கள். போகட்டும் அவர்கள் தீபாவளியைக் கொண்டாடு வதில் அர்த்தம் (பொருள்) இருக்கிறது. பார்ப்பன இனத்தின் வஞ்சகச் செயல்களைக் கண்டித்த ஒருவனைக் கொன்ற அந்த மகிழ்ச்சியால் புனல் நீராடி, புத்தாடை புனைந்து பண்டங்கள் பல அருந்திப் பரவசமடைகிறார்கள்.

ஆனால் நாம், தமிழர்கள் தீபா வளியைக் கொண்டாடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? தமிழ்த் தாய் மார்களே! நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நம் இன வீரன் ஒருவன் வஞ்சனையாக கொல்லப்பட்ட நாளை, மறைந்த நாளைத் துக்கமுடன் நடத்துவதன்றி, பார்ப்பனப் புல்லுருவிகளுடன் சேர்ந்து வித விதமாகக் கறியும், தோசையும், வடையும் இட்டிலியும் செய்து வயிறு முட்டத் தின்று கொட்டமடிக்க வேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள்!

ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட பண்டிகை நாட்கள் ஒவ்வொன்றும் இதைப் போலத் தான். அவர்கள் இனம் வாழ எந்தெந்த விதத்தில் நமக்கு நட்டப்படுத்த வேண்டுமோ அவ்வளவையும் செய்து விட்டு அவர்கள் மகிழ்ச்சியால் கொண் டாடக் கூடிய நாட்களை நமக்குப் பண் டிகை நாட்களாக மாற்றியமைத்து விட் டனர்.

தைப் பூசம், ராமநவமி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பல பண்டிகைகளையும் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.

நம் இன மன்னர்களை, வீரர்களை வஞ்சனையால் அழித்து விட்டனர். இராவணனைக் கொன்றான் இராமன், இரணியனைக் கொன்றான் நரசிம்மன். மகாபலிச் சக்ரவர்த்தியை வாமனன் என்ற பார்ப்பான் கொன்றான். சூரபத் மனைக் கொன்றது சுப்பிரமணியன்.

மதம், கடவுள், சாஸ்திரம் சம்பிர தாயம், சகுனம், நாள் நட்சத்திரம் போன்ற பல மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். நம் வீடுகளில் எந்த நல்ல காரியத்திற்கும் பார்ப்பானை (அவன் மேல் சாதி நாம் சூத்திரர் என்ற முறையில்)அழைக்கவே கூடாது.

மேல் லோகத்தை நமக்குக் காட்டி இந்த உலகில், தாம் வாழ வழி வகுத்துக் கொண்ட புத்திசாலிகள் அவர்கள். அதையும் இப்பொழுது ரஷியாக்காரன் ராக்கெட்டை அனுப்பிச் சந்திர மண்ட லத்தில் உள்ளதையும், அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதையும் படம் பிடித்து வெட்ட வெளிச்சமாக்குகிறான்.

ஆகவே நம் பள்ளி மாணவிகள் யாவரும் சிந்தித்து இன்று உலகம் விஞ்ஞான காலமாக மாறி வருவதை உணர்ந்து, மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் பஞ்சகவ்யம் என்று பருகுவதை விடுத்துப் பகுத்தறிவு பெற்றுத் தந்தை பெரியார் வகுத் திருக்கும் சுயமரியாதைப் பாதையில் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

புத்தாடை, தின்பண்டங்கள் வேண்டுமென்றால், நமக்கே உரித்தான உழைப்பின் உரிமைத் திருநாளான பொங்கல் பண்டிகை இருக்கவே இருக்கிறது! அது மட்டுமல்ல. ஆரியச் சழக்கர்களை வீழ்த்தி அவர்தம் வஞ் சனைகளைப் பகுத்தறிவால் வென்ற இந்நாட்டின் அறிவொளி, இன்பத் தமிழகத்தின் இணையற்ற ஒரே தலைவர் பெரியார் பிறந்த நாள் இருக்கிறது. இவைகளை இன்பமுடன் கொண்டாடுவோம்!!

ஆகவே தாய்மார்களே! தீபாவளி தமிழர்க்குத் துக்க நாள்! தமிழனை அடிமைப்படுத்திய நாள்! கொண் டாடாதீர்!

(நன்றி: பாவலர் பாலசுந்தரம் அவர்களின் பெண்களும் தீபாவளியும் 1.11.1959)

தமிழ் ஓவியா said...


பச்சையப்பன் கல்லூரியில் மீண்டும் பார்ப்பனர்கள்?


200 வருடங்களுக்கு மேலாக கல்விச் சேவையை அனைவருக்கும் வழங்கி வரும் பச்சையப்பன் கல்லூரி, திரும்பவும் பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.

ஆங்கிலேயர்களிடம் துபாஷாக பணிபுரிந்த, குழந்தைகளே இல்லாத பச்சையப்பன், பிராமணர் களின் செயல்களால் வெறுத்துப்போய், குழந்தை களுக்கு கல்வி புகட்ட வேண்டி தனது சொத்துக்களை விற்றுவிட்டு பச்சையப்பன் அறக்கட்டளை ஆரம் பித்தார். அதன் முக்கிய காரணமே அடித்தட்டு மக்களுக்கு உதவத்தான்.

அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் அங்கு நடத்து வரும் வருணாசிரமத்தைப் பார்த்து வருத்தப்பட்டு பிராமணர்களை விரட்டி விட்டு, சமூகத்திலிருந்த முதலியார், பிள்ளைமார், நாயக்கர் போன்ற முக்கியமானவர்களைக் கொண்டு முறைப் படுத்தினார்.

அப்பொழுது 117 மாணவர்களுடன் ஆரம்பித்த பச்சைப்பன் அறக்கட்டளையை, இன்று 5 கல்லூரிகள் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள், 1 பாலி டெக்னிக் மூலம் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கொடுத்துள்ளது. என்னே பச்சையப்பன் கல்வித் தொண்டு! இன்று அதன் சொத்து மதிப்பு ரூ.6500 கோடிக்கும் அதிகமாகும்.

அதன் பிறகுதான் பல சமூகங்களைக் கொண்ட வசதிபடைத்தவர்கள் பச்சையப்பன் அறக்கட்ட ளைக்கு தாராளமாக தங்களது சொத்துகளை கொடுத்து உதவினார்கள். அப்படிக் கொடுத்தவர் களின் நிபந்தனைகளே பச்சையப்பன் கட்டளையில் பிராமணர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதுதான். இதை நக்கீரன் நவம்பர் (03-06) 2012 - பக்கம் 40இல் உறுதிப்படுத்துகிறது.

மேலும், 149 அரசு செயலாளர் பதவிகளில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் இல்லையே! என்று டைம்ஸ் ஆப் இந்தியா படப்பிடிப்பு. மேலும் விடுதலையில் சென்னை அய்.அய்.டி.யா? - அக்கிரகாரமா என்றும் 14.9.2012இல் கேட்டுள்ளது.

அய்.அய்.டி சென்னை, மத்திய அரசின் எய்ம்ஸ் (டெல்லி) போன்ற கல்வி நிலையங்களில் உயர் சாதியின் ஆதிக்கம் அனைவரும் அறிந்ததே. இதனுடன் பச்சையப்பன் அறக்கட்டளையும் சேர வேண்டுமா? என்பதே நம் கவலை.

இன்று பச்சையப்பன் அறக்கட்டளையில் 165 காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றில் உயர் சாதியினர் நுழைந்தால் தாழ்த்தப்பட்டவர்களின் கல்விக் கனவு நொருங்கி விடும். சாதி பாகுபாடுகள் இல்லாமல் அனைவரிடமும், கையேந்தி பணம் வசூலித்து, கீழ் ஜாதி மக்களின் கை வண்ணத்தில் உருவாகும் கோயில், கட்டி முடித்ததும், கீழ் ஜாதி கோயிலுக்குள் போக முடியாது. அதன் பிறகு பணம் கொடுக்காமல், உழைக்காமல் கோயிலை கையகப்படுத்தி அனுபவித்து அதிகாரம் செய்யும் மேல் ஜாதி மக்களை என்ன செய்வது?

திரு. சேஷன் தேர்தல் பணியிலிருந்த பொழுது, தினமும் அவர்களின் அடாவடி அதிரடிகளை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அவர்களுக்குப் பிறகு வந்த தேர்தல் அதிகாரிகளின் அடக்கமும் பணிவும், இவர்களுக்கு முன் இருந்த தேர்தல் அதிகாரி திரு. சேஷன் அவர்களுடன் ஒப்பிட்டு, வெயிலின் அருமை நிழலில் தெரிவதாக எழுதினார்கள்.

மேலும் பெரியவர் சங்கராச்சாரியார் இறந்த பொழுது ஆளுயர ஒரு தடியை எடுத்துக் கொண்டு கூட்டத்தை அடாவடியாகக் கட்டுப்படுத்தியது தேவையற்ற செயல். எவ்வளவோ காவல் துறையினர் அங்கிருந்தும் இவர் போட்ட ஆட்டம் அவரது பதவிக்கு அழகல்ல. நல்ல வேளை இவர் அய்.ஏ.எஸ் அதிகாரி மட்டும்தான். ஒரு வேளை அய்.பி.எஸ் படித்திருந்தால் ஆளுயர ஒரு தடிக்குப் பதிலாக ஒரு துப்பாக்கியை வைத்து ஆட்டம் போட்டு இருப்பார்.

பச்சையப்பன் அறக்கட்டளையில் பணியாற்ற தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். எதற்கு காவல்துறை பாதுகாப்பு? பச்சையப்பன் அறக்கட்டளையில் எப்பொழுதும் இருக்கும் காவல்துறையே போதும். இவரைப் போல் மற்ற அதிகாரிகளும் கேட்டால் என்னவாகும்? ஆரம்பத்திலேயே தனக்கு வரும் ஆபத்தை புரிந்து கொண்ட இவரை மாற்றி வேறொருவரை நியமிக்க வேண்டும்.

எனவே, சேஷனை மாற்றி விட்டு ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வேறு பொருத்தமானவர்களை நியமிக்க வேண்டும். மேலும் பச்சையப்பன் அறக்கட் டளையில் உள்ள உயில்களின் கட்டளைகளை மனதில் கொண்டு பார்ப்பனர் அல்லாதவர்களை நியமிப்பதுதான் சட்டத்தின் கடமையும், நியாயமும் ஆகும்.

இதனைப் புரிந்து செயல்படுத்தாவிட்டால் இன்று அல்லது நாளை சட்டத்தின் முன் சம்பந்தப் பட்டவர்கள் தலைகுனிய நேரிடும். வருமுன் காப்பதே சிறந்தது. சாதி பாகுபாடுகள் உடனடியாக ஒழிக்கப்பட்ட நிலையில், பிராமணர்கள் கபே மீண்டும் வந்தது போல், பச்சைப்பன் அறக்கட்டளையும் மீண்டும் அவர்கள் கையில் போகாமல் பார்ப்பது தமிழகத்திற்கு நல்லது.
எப்பொழுது ஒருவரை நாம் பிராமின் என்று சொன்னால் நாம் உடனே சூத்திரர்கள் ஆகிவிடு கிறோம் என்று ஒரு பெரியவர் கூறினார். ஒருவேளை, பச்சையப்பன் கல்லூரியிலிருந்து ஆங்கிலேயர்கள் இவர்களை விரட்டி விடாமல் இருந்திருந்தால், தமிழகம் அண்ணா போன்ற சிறந்த அறிஞர்களை இழந்திருப்போம்.

வாழ்க பச்சையப்பன்! வளர்க பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்விப் பணி.10-11-2012

தமிழ் ஓவியா said...


மறக்க முடியாத நவம்பர் 10


இந்நாளில் தான் (1912) திராவிட சங்கத்தை சி.நடசேனார் தொடங்கினார். அதன் நினைவாக இதனை நினைத்துப்பாரீர்!

1918இல் நமது நிலை என்ன?

இளைஞர்களே! தாய்மார்களே! பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தின் பிரதிநிதிகளே! நீங்கள் யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். உங்கள் கொடிகள் உங்களோடு இருக்கட்டும்! உங்கள் கொள்கைகள் உங்களோடு இருக்கட்டும்!

ஆனால் நாம் தன்மான உணர்வு படைத்தவர்கள் - மனிதர்களாக வேண்டியவர்கள் - மண்புழுக்கள் அல்ல என்பதை உறுதியாக நம்புவீர்களானால், இந்த சமுதாயத்தில் பெரியார் தோன்றாததற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம்? எந்த நிலையில் இருந்தோம்! தயவு செய்து எண்ணிப் பாருங்கள்! அந்த சரித்திர நிகழ்ச்சிகளை திரும்பிப் பாருங்கள்!

40 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள்! பங்கா இழுக்கும் உத்தியோகம் தான் உங்களுடையது. ஒருவர் கையிலே பட்டைச் சேவகத்தைக் கட்டிக் கொண்டிருப்பார். மின்சார விசிறி இருக்காத அந்த காலத்தில் வெள்ளைக்காரத் துரைகளுக்கு தலைக்கு மேலே கட்டப்பட்டிருக்கும் அந்த பங்கிளாவை வெளியே உட்கார்ந்து கொண்டு இழுத்துக் கொண்டிருப்பதுதான் உங்கள் வேலையாக இருந்தது!

35 ஆண்டுகாலம் பங்கா இழுத்து விட்டு ஓய்வுபெறும் போது, அந்த வெள்ளைக்காரர் காலிலே போய் விழுந்து துரை அவர்களே, இந்த பங்கா இழுக்கும் வேலையை என்னுடைய மகனுக்கு தயவு செய்து கொடுங்கள் என்று அடிபணிந்து விண்ணப்பம் போடும் நிலையில் தான் உங்கள் சமுதாயம் இருந்தது. கையிலே கட்டியிருந்தவில்லை; அந்த வில்லையை வைத்து விண்ணப்பம் போடும் நிலைதான் இருந்தது என்பதை தந்தை பெரியார் அவர்கள் எடுத்து விளக்கினார்கள்.

இப்படி பரம்பரை பரம்பரை யாக பங்கா இழுத்துக் கொண் டிருந்த சமுதாயம்தான் இன்றைக்கு மந்திரிகளாக, அதிகாரிகளாக, டாக்டர்களாக, என்ஜீனியர்களாக உலவுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்!

மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமுதாயத்தை வில்லையை வைத்து விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்த சமுதாயத்தை பார்த்து, நீயும் மனிதன்தான்; உனக்கும் தன்மானம் உண்டு; நீயும் படிக்கலாம்; நீயும் உத்தியோகம் பெறலாம் என்று சொல்லி இதை தலைக்குப்புற கவிழ்த்துக் காட்டிய சரித்திர நாயகர் தந்தை பெரியார். அவர் சரித்திரத்திலே ஒரு ஏடு அல்ல; அவரே ஒரு சரித்திரம்!

சிந்தித்துப் பாருங்கள்! இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் உங்கள் நிலை எப்படி இருந்தது?

ஒரே ஒரு தகவலை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். இதோ, என் கையில் இருக்கும் இதழ் ஆடிசவைநைள கூயஅடையேனர தமிழ்நாட்டில் மைனாரிட்டிகள் என்ற நூல்! இது சரசுவதி என்ற பார்ப்பன அம்மையாரால், சென்னை பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சி நூல். அதிலே 1918ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் எத்தனைபேர், உத்தியோகம் பார்த்தவர்கள் எத்தனைபேர் என்ற புள்ளி விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன.

பட்டதாரிகள்

1918இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.பட்டம் பெற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 15,209, அதிலே நூற்றுக்கு மூன்று சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்கள் எண்ணிக்கை மட்டும் 10,206, 30 சதவிகித எண்ணிக்கையுள்ள பார்ப்பனரல்லாதார் 3,219, எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் மொத்த எண்ணிக்கை 511, அதிலே பார்ப்பனர்கள் 389, பார்ப்பனரல்லாதார் 65, ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் மொத்தம் 1,498, பார்ப்பனர்கள் 1094, பார்ப்பனரல்லாதார் 163, சட்டம் படித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 54, பார்ப்பனர்கள் 48, பார்ப்பனரல்லாதார் 4 பேர் மட்டுமே. என்ஜினீயரிங் படித்தவர்கள் மொத்தம் 160, பார்ப்பனர்கள் 121, பார்ப்பனரல்லாதார் 15

உத்தியோக நிலைமை

ரூ.50 லிருந்து 99 வரை ஊதியம் பெறும் உத்தியோக எண்ணிக்கை 298, பார்ப்பனர்கள் 128, பார்ப்பனரல்லாதார் 52, ரூ.100 லிருந்து ரூ.299 வரை ஊதியம் பெறும் பதவிகள் 110, பார்ப்பனர்கள் 78, பார்ப்பனரல்லாதார் 18, ரூ.300 லிருந்து 499 வரை ஊதியம் பெறும் பதவிகள் 13, பார்ப்பனர்கள் 8, பார்ப்பனரல்லாதார் 5, ரூ.500, அதற்கு மேலும் ஊதியம் பெறும் மொத்தப் பதவிகள் 27, பார்ப்பனர் 7, பார்ப்பனரல்லாதார் -0 (ஒன்று கூட இல்லை.

- இதுதான் பழைய தமிழகம் இந்த அநீதியை எதிர்த்துத்தான் நீதிக்கட்சி பிறந்தது. கம்யூனல் ஜி.ஓ வந்தது. கல்விக்கண்களை இழந்து நின்ற நாம் ஓரளவு கல்வி பெற்றோம்! அந்தக் கல்விக்கண்களை குத்துவது நியாயம் தானா? ஓரளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் வளர்ச்சியை பொருளாதார அளவு கோலைக் கொண்டு வந்து புகுத்தியதன் மூலம் வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்தை அழிக்க நினைப்பது நியாயமா? நேர்மையா? சமூக நீதியா? இதுதான் பெரியார் கொள்கையா? அண்ணா வழியா?

- சேலத்தில், கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி விடுதலை 17.7.1979

தமிழ் ஓவியா said...


தமிழர் போர் மூண்டுவிட்டது!


எதற்காக? தமிழுக்காக.

தமிழர் தன்மானத்துக்காக தமிழர் அறிவு, கலை, வீரம் ஆகியவற்றிற்காக,

எனவே,

தமிழா உன் கடமை என்ன?

மாதம் 75 ரூபாய் காசுக்கு எதிரியின் காலை நக்குவதா? அற்ப பதவிக்காக சகலத்தையும் உதிர்த்து தமிழை, தமிழனை, தமிழ் நாட்டை காட்டிக்கொடுத்து விட்டு வளையல் போட்டுக்கொண்டு முக்காடிட்டு மூலையில் குந்தி இருப்பதா? சீச்சீ இது சிற்றினப் பிழைப்பல்லவா?

மற்றென்ன உன் கடமை?

எதிரியின் கூட்டுறவை ஒழி.

வீரத்துடன் வெளியில் வந்து மார்தட்டு.

கிளர்ச்சிப் போரில் முன்னணியில் நில்லு.

எதிரி வெட்கப்பட, அறிவு பெற, ஓடி ஒழிய உன் உயிர் விடத் தயாராகு.

இவை உன்னால் ஆகாவிட்டால் காசு கொடுத்து ஆதரித்து நீ தமிழன் என்பதையாவது காட்டிக்கொள்.

குடிஅரசு - பெட்டிச்செய்தி - 29-05-1938
(இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது)

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனிதச் சமுதாயத்தை நீங்கள் இன்றைய தினம் கவலையோடு பார்த்தால் மக்களிடத்தில் ஒழுக்கம் இல்லை; நாணயம் இல்லை; திருடுவதைப் பற்றியோ, மோசம் செய்வதைப் பற்றியோ, லஞ்சம் வாங்குவதிலோ, நம்பிக்கைத் துரோகம் செய்வதிலோ யாரும் வெட்கப்படுவ தில்லை என்பது விளங்கும். இந்நிலை மாறி ஒழுக்கம் மிகுந்த சமுதாயமாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


முதல்மந்திரி வீட்டின் முன் உண்ணாவிரதம்

சென்னை, ஜூன், 1. இன்று காலை 10 மணிக்கு பல்லடம் தோழர் பொன்னுசாமி அவர்கள் தம்முடைய விரதத்தை சென்னை முதல்மந்திரியார் வீட்டின் முன்பாக ஆரம்பித்து விட்டார்.

கட்டாய இந்தி ஒழியும்வரை தன்னுடைய உண்ணா நோன்பை விடுவதில்லையென்ற ஒரே உறுதியுடன் இருக்கிறார். இந்தி ஒழிப்புத் தலைமை நிலையத்திலிருந்து ஈழத்துச் சிவானந்த அடிகளைத் தலைவராகக் கொண்ட ஓர் ஊர்வலம் இந்தி ஒழிக தமிழ் ஓங்குக முதலிய சொற்பெருக்குடன் புறப்பட்டு முதன்மந்திரி வீட்டை அடைந்ததும் தோழர் பொன்னுசாமி தம்முடைய விரதத்தை ஆரம்பித்தார்.

குடிஅரசு - பெட்டிச் செய்தி - 05-06-1938

தமிழ் ஓவியா said...


அதோ பாரப்பா! தினமலராவது திருந்துவதாவது!!


சிறீரங்கத்தில் பிராமணாள் உணவு விடுதி - அதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் நடவடிக்கை குறித்து தினமலர் (1.11.2012) நம்மை ஆதரித்து வந்த கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

ஆச்சரியம்; ஆனால் உண்மை! என்று விடுதலையும் அந்தக் கடிதத்தை வெளியிட்டு இருந்தது.

அதுதானே பார்த்தோம் - தினமலருக்காவது நல்ல புத்தி வருவதாவது!

நேற்றைய தினமலரில் (9.11.2012) அதற்கு நேர்மாறாக - ஏடா கூடமாக ஒரு கடிதத்தை வெளியிட்டது.

நாட்டில் என்ன என்னவோ நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஜாதியைப்பற்றி பேசுகிற வீரமணிபற்றி என்ன சொல்வது.

நாட்டுப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் எழுதுவது இல்லையாம் - தினமலர் ரொம்பவும்தான் கவலைப்படுகிறது.

தினமலரின் இன்றைய கடிதத்துக்கு முதல் தேதி தினமலர் கடிதமே பதில் - போதுமானது!

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, ஏற்கெனவே ஓட்டல் நடத்திவந்த பார்ப்பான் திடீரென்று பிராமணாளைப் புகுத்துவானேன்? ஏன் இந்த விஷம வேலை என்று தினமலர் எழுதவேண்டாமா?

சரி, திராவிடர் கழகத் தலைவர் வேறு பிரச்சினைகள்பற்றி எழுதுவது, பேசுவது கிடையாதா?

இந்த ஒரு வாரத்திலேயே எத்தனை எத்தனையோ அறிக்கைகள், கருத்துகள்!

மருத்துவக் கல்லூரி மாணவர் பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினை, மத்திய அரசு மின்சாரம் அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்குத் தொடுத்த பிரச்சினை, கீழத்தஞ்சை மாவட்டத்தில் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு ஈட்டுத் தொகை அளிக்கவேண்டும் என்ற அறிக்கை என்று எத்தனை எத்தனையோ நாட்டுப் பிரச்சினைகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாரே - இவற்றில் ஒரே ஒரு வரியையாவது தினமலர் திரிநூல் வெளியிட்டதுண்டா?

நிழற்படங்களை வெளியிடும்போதுகூட அதில் திராவிடர் கழகத் தலைவர் படம் இருந்தால், அதனை அப்படியே கத்தரித்துவிட்டு செய்தி வெளியிடும் அக்கிரகார தினமலர்கள் திராவிடர் கழகத் தலைவர்பற்றி எழுதுவதுதான் விஷமம் கலந்த வேடிக்கையாகும்!

காலைக்கதிரிலும், தினமலரிலும் வெளிவரும் (இது உங்கள் இடம்) ஒரே கடிதத்தை பெயர் மாற்றி வெளியிடும் பித்தலாட்ட ஏடுகள் பேனா பிடிக்கலாமா?10-11-2012

தமிழ் ஓவியா said...


உறுதுணையாக இருக்குமா இந்தியா?


சென்னை - அண்ணா அறிவாலயம் கலைஞர் மண்டபத்தில் நேற்று (11.11.2012) மாலை நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் ஈழத் தமிழர் வரலாற்று ஓட்டத்தில் முக்கிய இடம் வகிக்கக் கூடியதாகும்.

டெசோ மாநாட்டில் (சென்னை - 12.8.2012) நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை குறித்த விளக்கங்கள் அடங்கிய ஆவணத்தை அய்.நா.விலும், மனித உரிமை ஆணையத்திடமும் வழங்கிட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் சென்றிருந்தனர். அந்தப் பணி களை வெற்றிகரமாக நடத்தித் திரும்பிய அவ்விருவர்க் கும் நடைபெற்ற வரவேற்புப் பாராட்டு விழா நிகழ்ச்சி அது.

பாராட்டு விழா என்று சொல்லப்பட்டாலும், அதனை மய்யப்படுத்தி ஈழத் தமிழர் உரிமைகள்பற்றி விளக்கமான கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டன.

ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அறவழி யில் போராடியது ஒரு கட்டம். இலங்கை அரசு அசல் சிங்கள இனவாத அரசாக உருவெடுத்து, ஈழத் தமிழினம் என்ற ஒன்று வரலாற்றில் இருக்கக் கூடாது என்கிற திட் டத்தில் செயல்பட்டதன் காரணமாக ஈழத் தமிழர்களிலே போராளிகள் உருவாகி ஆயுதம் தாங்கிப் போராடியது இன்னொரு கட்டம்.

பன்னாட்டு இராணுவ உதவிகளுடன், ஈழத் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்தது மற்றொரு கட்டம்.

இந்த மூன்று கால கட்டங்களிலும் தமிழ்நாடு பலவகைகளிலும் ஈழத் தமிழர்கள் பக்கம் நின்று வந்திருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சியே இதுகுறித்து கருத்தும் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய கால கட்டத்தில் கவனிக்கப்பட வேண் டியது - எஞ்சி இருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமையைப் பற்றியதும் மற்றும் அரசியல் தீர்வுமாகும்.

அய்.நா. மூலம் தான் இதற்குத் தீர்வு காணப்பட முடியும் என்ற நிலையில் பன்னாடுகளின் ஆதரவு மிக முக்கியமாகத் தேவைப்படும் இந்தக் கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட டெசோ என்ற அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தி.மு.க. திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆகியவை இந்த அமைப்பில் இணைந்துள்ளன.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில் பல விமர்சனங்கள் எழுந்ததுண்டு.

ஆனாலும் டெசோ உருவாக்கப்பட்டு, சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்பட்டதும், அம்மாநாட்டில் இந்தி யாவின் பல மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல; பன்னாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு திறந்த மனதோடு கருத்துக்கள் வெளியிட்டதும், அவசியமான, ஆழமான கருத்தாக்கம் கொண்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் உலகக் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு நிலையை உருவாக்கி விட்டன.

இந்திய அரசின் போக்கிலும் சில மாற்றங்கள் ஏற்படவும் வழி வகுத்தது.

அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சந்திப்பு என்பது - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் மேலும் அடுத்த கட்ட பாய்ச்சலாகும்.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி வந்த இலங்கை அரசு இப்பொழுது பன்னாடுகளின் முன்னிலையில் கைகட்டி நிற்கும் ஒரு அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு இந்த நேரத்தில் ஓர் அழுத்தத்தைக் கொடுக்குமேயானால் அனேகமாக ராஜபக்சே தண்டனைக்குரிய குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற் கான கூடுதல் சூழல் விரைவில் உருவாகும்.

இந்த விடயத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியா நடந்து கொள்ளவில்லை. குறிப்பாக இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டை யாடப்படுவது என்பதில் இந்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு வருகிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்த இரு பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, இந்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது பற்றிய முடிவினை டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் கூறினார்.

நிறைவுரையாற்றிய மானமிகு கலைஞர்அவர்கள் இந்திய அரசு நமக்கு உறுதுணையாக இருந்தால், நாமும் உறுதுணையாக இருக்க முடியும் என்று அறிவித்திருப்பது அர்த்தம்மிக்கதும், அவசியமானதுமாகும்.

உறுதுணையாக இல்லாவிட்டால் நாமும் உறு துணையாக இருக்க முடியாது என்பதை இதன் மூலம் கலைஞர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள்.

இது உல கெங்கும் அலைகளை ஏற்படுத்தக் கூடியதுதான், இதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியா என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்!

பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது.12-11-2012

தமிழ் ஓவியா said...


கட்டப்பட்டிருக்கின்றன


உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.

(விடுதலை, 12.10.1962)