Search This Blog

8.11.12

சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை




சுயமரியாதைக்காரன்:- வாருங்கள் ஐயா புராணமரியாதைக்காரரே! வெகுநாளாய்க்காணோமே, எங்கு சென்றிருந்தீர்கள்?

புராண மரியாதைக்காரன்:- எனது வயிற்றுக் கொடுமை தான் உமக்குத் தெரியுமே! புராணக் காலாஷேபம் செய்யப் போயிருந்தேன்.

சு-ம:- அப்படியா? உங்கள் புராணக் காலஷேபம் சரியாய் நடக்கின்றதா? ஜனங்கள் முன்போல் புராணங்களை மரியாதை செய்து கேட்கின்றார்களா?

பு-ம:-அதை ஏன் கேட்கின்றீர்கள்? வரவர புராணம் என்றாலே மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நம்மை யாரும் லட்சியம் செய்வதே கிடையாது.

சு-ம:-ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? புராணங்கள் எல்லாம் பகவான்கள், ரிஷிகள், பரமசிவன், மகாவிஷ்ணு முதலியவர் வாக்கு என்பதாக இருக்கும்போது புராணங்களுக்கு மரியாதைப் போய் விட்டது என்பது அதிசயமாகவல்லவா இருக்கிறது?

பு-ம:- என்னைப் பரிகாசம் செய்கின்றீர்களா? என்ன? நீங்கள் போடு கின்றபோடுதான் நாட்டையே பாழாக்கி விட்டதே. நம்மைக் கண்டால் பையன்கள் கல்லெடுத்துப்போடுகின்றார்கள்? “ரிஷிகள் சொன்னார், பகவான் சொன்னார்” என்றால் “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட் கின்றார்கள்.

சு-ம:- இப்படியிருக்க சற்று முன் நீங்கள் புராணக் காலஷேபம் செய்யப்போயிருந்தேன் என்று சொன்னீர்களே?

பு-ம:-அதுவா கேட்கின்றீர்கள். நான் இப்போது காங்கிரசில் சேர்ந்து அதிலிருந்து கொண்டு காங்கிரஸ் மேடைகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சம் புராணப் பிரசங்கம் செய்து வருகின்றேன். இந்த சமயத்தில் காங்கிரசில்லாவிட்டால் புராணங்கள் நெருப்பில் போடப்பட்டிருக்குமே?

சு-ம:- காங்கிரசில் எப்படி ஐயா புராணப் பிரசங்கம் செய்ய முடியும்? அதில் அரசியல் பிரஸ்தாபம்தானே செய்ய முடியும்?

பு-ம:- அந்த இரகசியம் உங்களுக்குத் தெரியாது போல் இருக்கின்றது. இனி அதிலும் கைவைத்து விடாதீர்கள்.

சு-ம:- தெரியாதே.

பு-ம:- முதலில் மேடையில் ஏறினவுடன் “மகாத்மா காந்திக்கு ஜே, வந்தேமாதரம்!!” “ஜெயஜெயபாரத”என்று சொல்லும்போதே “நமப் பார்வதிபதஹே” என்றும் “ஹரஹர சங்கரமகாதேவ!வெங்கிட்ரமண கோவிந்தா!!கோவிந்தா!!!”என்றும் சொல்லுவேன். அங்குள்ள எல்லா உறுப்படிகளும் கூடவே கத்தும். பிறகு இரண்டொரு தேவாரம்பாடுவேன். பிறகு மெள்ள “மகாத்மா காந்திவாள் இருக்காளே, அவாளை மனிதப்பிறப்பு என்று எண்ணி விடாதீர்கள்! அவர் ஒரு அவதாரபுருஷராக்கும்!!! மகா விஷ்ணுவே அவதாரம் செய்திருக்கிறாராக்கும்!!!அதாவது பகவான் ஸ்ரீமத் பகவத்கீதையில் திருவாய் மலர்ந்தருளி இருக்கின்றபடி “யுகா யுகங்கள் தோறும்!!!” என்பதாக ஆரம்பித்துவிட்டு பாரதம், ராமாயணம், பாகவதம் முதல் பெரிய புராணம், சின்னபுராணம், மச்சபுராணம், தவளை புராணம், கெருட புராணம், பெருச்சாளி புராணம் வரையில் சும்மா அளந்து கொட்டிவிடுவேன். முண்டங்கள் வாயைத்திறந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்றது நின்றபடியே இரவு 10 மணிவரையில் கேட்டுக் கொண்டிருக்கும். உடனே மேல் வேஷ்டியை விரித்துக் கொண்டு கதர் குல் லாய் போட்ட ஒரு பையனை அந்தக்கூட்டத்தில் ஒரு சுத்து சுத்திவர சொன்னால் 10 ரூபாய்க்கு குறையாது வசூலாகிவிடும். மற்றும் எத்தனையோ உறுப்படிகள், சற்று ஸ்குரு லூஸ் ஆனதுகள், பவுண்டன் பேனா, மோதிரம், பேனாகத்தி, கை சங்கிலி, கெடியாரம் முதலியவைகளையும் கழட்டி போட்டுவிடும் பிறகு என்ன குறை?

சு-ம:- பவுண்டன் பேனா கடிகாரமெல்லாம் ஏன் போடுவார்கள்?

பு-ம:- நான் அந்த மாதிரி சொல்லுவேன்.

சு.ம:- எந்த மாதிரி?

பு-ம:- “சத் விஷயம் கேட்டுவிட்டு சும்மா போகாதீர்கள். மடியில் உள்ளதைப் போடுங்கள். அணில் பாலம் கட்ட ராமபிரானுக்கு சிறுமணல் மேலே பூசிக் கொண்டு வந்து உதரி உதவி செய்ததது போல் அவதார புருஷராகிய மகாத்மா காந்தியின் இப்புனிதமான கைங்கரியத்திற்கு தங்களால் கூடியதை உதவுங்கள், அந்தப்படி உதவாவிடில் நீங்கள் பாவி யாகிவிடுவீர்கள். உங்களுடைய வஞ்சனையை பகவான் உங்கள் மடி யிலிருந்தே அறிந்து கொண்டிருக்கிறார்.” என்று சொல்லுவேன். சொன்ன வுடனே முண்டங்கள் மடியைப்பார்த்தும் ஜேபியைப் பார்த்தும் உள்ளதை எடுத்துப்போட்டுவிட்டு ஒரு கும்பிடு கும்பிட்டு விட்டுப்போய்விடுவார்கள். காசும் பணமும் இல்லாதவர்கள் பேனா,கத்தி, மோதிரம், சங்கிலி முதலி யவைகளைப் போடுவார்கள். பிறகு அதையே ஏலம் போட்டால் அது வேறே ஒன்றுக்கு இரண்டாய் பணம் வரும். இவ்வளவு தான் நமது புராணக்காலnக்ஷபம். ஏதோ ஒரு வழியில் ஜீவனம் நடக்கின்றது. மகாராஜன் காந்தி தோன்றினான் எங்களையெல்லாம் காப்பாற்ற.

சு-ம:- இப்படிச் செய்தால் திரு.காந்தி முதலிய யாவரும் இதற்கெல்லாம் ஒன்றும் கணக்குகேட்க மாட்டார்களா?

பு-ம:- அந்த வழக்கம் தான் இதில் கிடையாது. அதல்லவா காங்கிரசில் இருக்கும் ஒரு பெருந்தன்மை.

சு-ம:- அதென்ன அப்படி? ஏன் கணக்குக் கேட்கமாட்டார்கள்?

பு-ம:- கேட்டால் தெரியும் சங்கதி? கேட்க ஆரம்பித்தால் திரு.காந்தி முதல் அவர்கள் அப்பன் வரை பதில் சொல்லியாக வேண்டும். அது மாத்திரமல்ல. இதே மாதிரி கணக்குக் கேட்டு “அவன் பணம் எடுத்துக்கொண்டான் இவன் பணம் எடுத்துக் கொண்டான்” என்று கணக்கு வெளி வந்துவிட்டால் பிறகு எவனுக்கும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள். அப்புறம் காங்கி ரசுக்கு ஆளே சேராது. ஆதலால் திருட்டு வசூலைக் கண்டு பிடித்தாலும் வெளியில் சொல்லமாட்டார்கள். அந்த ஒரு பெருந்தன்மை காங்கிரசுக்குத் தான் உண்டு. நீங்களே பாருங்களே எத்தனையோ பேர் திருப்பதி உண்டியல் மாதிரி வசூல் நடத்துகிறார்கள் யாராவது பேசுரார்களா?பாருங்கள்.

சு-ம:- இந்த முறையில் ஒருவாறு உங்களுக்கும் மற்றும் சில ஆட் களுக்கும் வாழ்க்கை நடந்து வருகின்றது என்பதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால் புராணங்களின் யோக்கியதைகளைப் பற்றி உண்மை யிலேயே உங்கள் அபிப்பிராயம் என்ன?

பு-ம:- அதென்ன அப்படி கேட்கின்றீர்கள்? அதெல்லாம் ஒரு மாதிரியாய்த்தான் இருக்கும். அதை வெளியில் சொல்ல முடியுமா? ரிஷிமூலம் நதி மூலம் கேட்கலாமா? பொதுவாகவே புராணங்களை யாராவது குற்றம் சொன்னால் எனக்குக் கோபம் தான் வரும்.

சு-ம:- சரி, சரி கோபித்துக் கொள்ளாதீர்கள். அதை நான் குற்றம் சொல்ல வரவில்லை. அதைப்பற்றி ஏதாவது சந்தேகமிருந்தால் கேட்க லாமா?

பு-ம:- பேஷாய்க் கேளுங்கள்.

சு-ம:- அப்படியானால் ஒரு சந்தேகம். ஆனால் நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது.

பு-ம:- கோபம் என்ன? சந்தேகத்திற்குக் கோபிக்கலாமா?

சு-ம:- உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மல்லிகைச் செடியின் அடியில் ஒரு குழந்தை அப்பொழுதுதான் பிறந்ததாகக் காணப்படக் கூடியது அழுது கொண்டு கிடக்கக் கண்டீர்களேயானால் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பு-ம:- என்ன நினைப்பது? யாரோ பெற்றுத் திருட்டுத்தனமாய்க் கொண்டு வந்து போட்டு விட்டு போய் விட்டார்கள் என்றுதான் நினைப்பேன்.

சு-ம:- யார்? எப்படிப்பட்டவர்கள் பெற்றார்கள் என்று நினைப் பீர்களா?

பு-ம:- யாரோ “ திருட்டு கர்ப்பம் ” அதாவது விதவையோ, கல்யாணமாகாத பெண்ணோ புருஷன் ஊரில் இல்லாமல் தேசாந்திரம் போனவருடைய மனைவியோ,சோரத்தனமாய் கர்ப்பம் ஆகி, அதைப் பெற்று நமது தோட்டத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டாள் என்று தான் நினைப்பேன்.

சு-ம:- சரி. இதுதான் நல்ல பகுத்தறிவு என்பது.

பு-ம:- அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்? இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது? இந்தப்படி அல்லாமல் பின்னை என்னமாய் நினைக்க முடியும்? மல்லிகைச் செடியா பிள்ளை பெறும்? அல்லது ஆகாயத்தில் இருந்து வந்து விழுமோ? ஒரு மூடன் கூட இதற்கு மாறாக சொல்ல முடியாது.

சு-ம:- தாங்கள் சொல்லுவது நிரம்பவும் சரி. வேறு விசேஷம் ஒன்றும் இல்லை. மல்லிகைச் செடியின் கீழ் இருந்தால்தான் அப்படிச் சொன்னீர்கள். ஒரு சமயம் துளசிச் செடியின் கீழ் கிடந்தாலோ?

சு-ம:- எங்கும் அப்படித்தானே கிடக்கும். துளசிச்செடிக்கு மாத்திரம் என்ன கொம்பா முளைத்திருக்கும்? அல்லது அது கர்ப்பமாகி பிள்ளை பிறக்குமோ? இதென்ன சிறுபிள்ளைகள் மாதிரி கேட்கின்றீர்களே?

சு-ம:- இல்லை, ஏதோ ஒரு புராணத்தில் துளசிச்செடி அடியில் ஒரு குழந்தை கிடந்தது. அதைக்கடவுள் அவதாரமாய்க் கருதினார்கள். பிறகு அது கடவுளே ஆகிவிட்டது. இப்போதும் அது கடவுளாயிருக்கின்றது என்று பார்த்ததாக எனக்கு ஞாபகம். ஆதலால் அந்த புராணங்களை யெல்லாம் தாங்கள் நம்புவதுண்டா? அல்லது நம்பும்படி காலஷேபம் செய்வ துண்டா? என்று தெரியலாம் என்பதாக ஆசைப்பட்டுத்தான் தங்களைக் கேட்டேன்.

பு-ம:- நீர் சு.ம. என்பது தெரிந்தும் உம்மிடம் நான் பேசியது சுத்தத் தப்பு. புராணத்தை சந்தேகப்படுகின்ற-தர்க்கம் செய்கின்ற-நாஸ்தீகர்களு டைய முகாலோபனமே செய்யக்கூடாது என்ற பெரியவாள் இதற்காகத் தானே சொல்லி இருக்கின்றார்கள். சு.ம.என்றாலே நாத்திகம் தானே. உம்மோடு பேசிய குற்றத்திற்காக நான் ஒரு முட்டாள் ஆக வேண்டியதும் நியாயம் தானே?

சு-ம:- இப்படிக் கோபித்துக் கொள்ளலாமா? நீங்கள் சொன்னதை உங்கள் வாயைக் கொண்டு, சொன்னதைக் கொண்டு உங்களை என்ன சொல்லுகின்றீர்கள் என்று தான் கேட்டேனே ஒழிய நான் ஏதாவது குற்றமான வார்த்தை சொன்னேனா? அல்லது என் அபிப்பிராயமாக ஏதாவது சொன் னேனா? ஏன் இவ்வளவு கோபம்?

பு-ம:- கோபம் ஒன்றும் இல்லை எனக்கு வேலையிருக்கின்றது. கொஞ்சம் அவசரம். நான் போய் விட்டு வருகின்றேன் (என்று சொல்லிக் கொண்டே நழுவிவிட்டார்.)

--------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய உரையாடல்-”குடி அரசு” - 06.09.1931

7 comments:

தமிழ் ஓவியா said...


பிராமணாள் இனியும் தலை காட்டக் கூடாது!


சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் பிராமணாள் என்னும் ஓட்டல் 6.11.2012 ஆம் நாள் இரவோடு இரவாகக் கடையைக் கட்டிக் கொண்டது.

திராவிடர் கழகத் தோழர்கள் கேட்டுக் கொண்ட போதே அந்தப் பிராமணாள் பெயரை நீக்கி யிருந்தால், இப்பொழுது அந்த உணவு விடுதியையே மூடிவிடும் அவல நிலை ஏற்பட்டு இருக்காது.
பார்ப்பனர்கள் உணவு விடுதி நடத்தக் கூடாது. அவர்கள் பிழைப்புக்காக எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற அற்பப் புத்தி நமக்கொன்றும் இல்லை.

பார்ப்பனர்கள் நன்றாகவே பிழைக்கட்டும்; நன்றாகவே சகல சம்பத்துகளுடனும் வாழட்டும் நமக்கொன்றும் அட்டியில்லை.

பார்ப்பான் பணக்காரனானால் என்ற கட்டுரையை குடிஅரசு இதழில் (9.11.1946) தந்தை பெரியார் தெளிவாகவே எழுதியுள்ளார்.

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது; அவன் ஏழையாக இருக்க வேண்டும் என்பதல்ல.

ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக கோடீஸ்வரனாக வும், லட்சாதிபதியாகவும் ஆகி விட்டாலும் சரியே எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும் மடாதிபதிகள் உட்பட எவரும், சிறிதுகூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்று தெளிவாக, நீரோட்டமாகக் கூறியுள்ளாரே!

பிராமணாள் உணவு விடுதி என்பதில் உள்ள பிராமணாள் என்பதை ஒழிப்பது என்பதற்கான விளக்கம் இதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறதே!

பார்ப்பனர்களுக்கு இது தெரியாதா? பிராமணாள் என்பது உயர் வருணத் தன்மையைப் பறைசாற்றக் கூடியதென்று தெரிந்துதானே அதனை இன்றளவும் நிலைநாட்டிடத் துடிக்கின்றனர் - அடம் பிடிக்கின்றனர்.

அரசர்கள் முதல் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து விட்டதாலும், வருணாசிரம தர்மத்தில் உயர் ஆளுமை அவர்களுக்கு எல்லா வகையிலும் வசதி வாய்ப் புள்ளதாக இருப்பதாலும் அதனை விட்டுக் கொடுக்க மனம் இர(ற)ங்கி விடுவதில்லை.

பிராமணாள் என்று தங்களை உச்சமான இடத்தில் ஆசனம் போட்டு உட்கார வைத்தாலும் கூடப் பரவாயில்லை; அந்த வருணாசிரமத் தன்மையில் பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் என்று சுட்டுவதுதான் சகிக்க முடியாததாக இருக் கிறது. ஏன் சகிக்க முடியாதது என்று சொல்லு கிறோம்? சூத்திரன் ஏழு வகைப்படுவான். அதில் ஒன்று தமது விபச்சாரி மகன் என்று பார்ப்பான் எழுதி வைத்திருப்பதுதான்.

பிராமணாள் ஒழிப்புப் போராட்டத்தை எதிர்த்து எழுதுவோர்கூட, திராவிடர் கழகம் எடுத்து வைக்கும் இந்தக் குற்றச்சாற்றுக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், பிரச்சினையைத் திசை திருப்பும் தன்மையில் எழுதுகோல் பிடிப்பது பரிதாபமே!

சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் நடத்திய உணவு விடுதியில் இடம் பெற்ற பிராமணாள் ஒழிப்பு - இத்தோடு முடிவுக்கு வந்தாக வேண்டும். மறுபடியும் சிறீரங்கத்திலோ, வேறு இடங்களிலோ பிராமணாள் முளைப்பதை அனுமதிக்க முடியாது, முடியவே முடியாது.

அப்படி எந்த ஊரிலாவது பிராமணாள் தலை காட்டுமேயானால் முதலில் கோரிக்கையை நேரிடையாக வையுங்கள். நாகரிகமாகப் பிரச் சினையை முடித்துக் கொண்டால் பிரச்சினை இல்லை; முரண்டு பிடித்தால் உடனே தலைமைக்குத் தெரிவிக்குமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். உரிய முயற்சியைத் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு மேற் கொள்ளலாம்.

திராவிடர் கழகத்தின் முறையான முயற்சியும், பண்பாட்டுடன் கூடிய அணுகுமுறையும்தான் இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

கொள்கையும் முக்கியம் - வழிமுறையும் முக்கியம் என்பதை எந்தக் காரணத்தோடும் கழகத் தோழர்கள் மறந்துவிட வேண்டாம். இந்தப் பிரச்சினையில் முழு முயற்சியுடன் செயல்பட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.8-11-2012

தமிழ் ஓவியா said...

டெசோவின் பயணம் மேலும் தொடரும்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


டெசோவின் தீர்மானங்கள் அய்.நா. மற்றும் மனித உரிமை ஆணையத்திடம் முறையாக அளிக்கப்பட்டன

தவறான புரிதலோடு இருந்த நாடுகளும்

தமிழர் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டுள்ளன

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் மற்றும் மனித உரிமை ஆணையத்தின் இயக்குநர் ஆகியோரிடம் அளித்தது குறித்தும், அதனால் ஏற்பட்டுவரும் பலன்கள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சென்னையில் நடைபெற்ற டெசோ ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானங்களை அய்.நா. மாமன்றத்தின் செயல்பாட்டிற்காக, அதன் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் கடந்த ஒன்றாம் தேதி (நவம்பர் 2012) அய்.நா. தலைமையகத்துக்கு (நியூயார்க் மேன் ஹாட்டினில்) மானமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்களும் சென்று சுமார் அரை மணிநேரம் விளக்கமாக எடுத்துரைத்து, முள்வேலிக் குள்ளும், இராணுவ வளையத்துக்குள்ளும் அவதியுற்றுக் கொண்டுள்ள ஈழத் தமிழர் வாழ்வின் பல வகை அவலங்களைப் போக்க, விடிவு காண வற்புறுத்தித் திரும்பியுள்ளனர்!

பான்-கி-மூன் பார்வைக்குச் சென்றது

அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் அவர்கள் மிகுந்த பரிவுடன் கேட்டு, அதனை பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அவர்களிடம் உடனடியாகக் கொண்டு சென்று, பரிகாரம் எப்படி, எந்த அளவுக்குத் தேடிட முடியுமோ, அதைச் செய்வதாக, ஆக்க ரீதியாக (Postive response) செய்துள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

அதன்பிறகு அதே தீர்மானங்களை தற்போது சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில், சிங்கள இராஜபக்சே அரசுமீது பற்பல நாடுகளும் சரமாரி போர்க் குற்றங்களை, அத்துமீறல் களையெல்லாம் பற்றிப் பேசியுள்ளனர்!

இலங்கை அரசின் சார்பானவர்கள் அதைத் தக்க வகையில் எதிர்கொள்ள இயலாத நிலையும், மழுப்பலான வகையிலும் - மறுக்க தங்களுக்கு இடம் உள்ளது என்று பொத்தாம் பொதுவிலும்தான் பேசியுள்ளார்கள்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் இப்போதுதான் தக்க வகையில் சர்வதேச நாடுகளின் பார்வையை ஈர்த்துப் பரிகாரம் தேடிடும் ஈர நெஞ்சக் குரலொலி கேட்கத் தொடங்கியுள்ளது!

தவறாக நினைத்தவர்கள்கூட இப்பொழுது உணர்ந்தனர்

இதற்கு முன்னர் இலங்கை அரசின் தவறான பிரச்சாரத்தை நம்பி, இது ஒரு சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை - மனித உரிமைப் பிரச்சினை என்று பார்க்காமல், ஏதோ தீவிரவாதம், பயங்கரவாதிகளை எதிர்த்து அந்நாட்டு அரசுப் போராடுவதாகவே தவறாக நினைத்திருந்தார்கள்.
இப்போதுதான் அந்தப் போலிப் பொய்யுரை பனிமூட்டம் விலகத் தொடங்கியுள்ளது!

2008 இல் தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற சாக்கில் எப்படி ஒரு இனப் படுகொலை பட்டாங்கமாய் நடந்தது என்பது அய்.நா. போர்க்குற்றம் பற்றிய குழு அறிக்கை மூலம் தொடங்கி, அது மெல்ல மெல்ல ஆனால், உறுதியாக விரிவாகி, பன்னாடுகளும் விளங்கிக் கொள்ளும் வெளிச்சமாகி வருகிறது.

மனித உரிமை ஆணையத்திடம் டெசோ தீர்மானங்கள்

அதனை மேலும் வளர்த்து, மனித உரிமையோடு, வாழ்வுரிமையை அம்மக்களுக்குப் பெற்றுத் தர, டெசோ உருவாக்கப்பட்டு மாநாடும் நடத்தப்பட்டு சிறப்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. காழ்ப்புணர் வாளர்களின் காமாலைக் கண்களுக்கு இது சரியாகத் தெரியாது; அதுபற்றி கவலைப்படாமல் முடிந்ததை முயற்சியில் எதுவும் பாக்கியில்லை என்று செய்வது நம் கடமை என்ற உணர்வோடு நடந்த அம்மாநாட்டின் தீர்மானங்களை நேற்று ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தின் கமிஷனர் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களிடம் அளித்துள்ளனர் -

நியூயார்க் அய்.நா. துணைப் பொதுச்செயலாளரது சந்திப்புக்குப் பின்!

அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவரான அம்மையாரிடம், அரசியல் தீர்வுக்கு ஒரே தீர்வு மற்ற சில நாடுகளில் அய்.நா. தலையிட்டுச் செய்ததைப்போல, வாக்கெடுப்புதான் சரியான ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

அவர்களும் அதனைப் புரிந்து, அனுதாபத்தோடு கேட்டு, ஆவன செய்வதாக வாக்களித்துள்ளார்கள் என்பது பன்னாட்டளவில் நமது உள்ளங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு அவசர முதலுதவி மருத்துவம் செய்ததுபோல உள்ளது!

கழகத் தலைவரோடு பேசினர்

ஜெனீவாவிலிருந்து சகோதரர்கள் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும் தொலைபேசியில் முதலில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் விளக்கி விட்டு, நம்மிடம் தொடர்பு கொண்டு விளக்கமாகச் சொன்னார்கள். அடுத்து இலண்டன் சென்று இப்பிரச்சினை உரிய முறையில், பிரித்தானிய தமிழர் பேரவையில் கலந்து, உரிய பிரிட்டிஷ் எம்.பி.,க்களிடம் எடுத்துச் சொல்லவிருப்பதாகக் கூறினார்கள்.

நாம் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.

பொது வாக்கெடுப்பு - வரவேற்கத்தக்கக் கருத்து

இலண்டன் மாநகரில் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் நடத்தப்பட்ட உலகத் தமிழர் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டிலும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க. முன்னணியினரும் பங்கேற்றதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற தலைசிறந்த ஆக்க பூர்வக் கருத்தினை அம்மாநாட்டில் எடுத்து வைத்து முழங்கிய மு.க. ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டுக்காகப் பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம்.

போற்றுபவர், தூற்றுபவர்பற்றிக் கவலைப்படாமல் நம் கடன் பணி செய்து முடிப்பதே என்று டெசோ தனது பயணத்தை நடத்திடுவதும் காலத்தின் கட்டாயமாகும்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
8.11.2012

தமிழ் ஓவியா said...


ஈரோட்டுப் பாதையில் ராம்ஜெத்மலானி!


- கி.வீரமணி -

புதுடில்லியில் நேற்று ஆண் - பெண் உறவுகள் பற்றிய நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பிரபல வழக்குரைஞரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரு மான ராம்ஜெத்மலானி அவர்கள் ராமன் ஒரு மோசமான கணவன் என்ற உண்மையைக் கூறி, இராமனை புருஷ உத்தமனாகக் காட் டும் பொய்மையை மறுத்துள்ளார். (ராம் ஜெத் மலானி மாநிலங்கள் அவை உறுப்பினரும் ஆவார்!)

ராமன் ஒரு மோசமான கணவன். எனக்கு அவனைப் பிடிப்பதே இல்லை. யாரோ சில மீனவர்கள் கூறினார்கள் என்பதற்காக பரிதாபத்திற்குரிய சீதையை வீட்டை விட்டு வெளியேற்றி, காட்டுக்கனுப்பினான் அவன்.

அது மட்டுமா? லட்சுமணன் அவனைவிட மோசமானவன். சீதையைக் கடத்திக் கொண்டு போன நிலையில், அவளைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படி இராமன் லட்சுமணனிடம் கூறிய போது, லட்சுமணன் இராமனிடம் மறுமொழி யாக என்னால் அது இயலாது, காரணம் அவள் என் அண்ணி. அவள் முகத்தையே நான் பார்த்ததே இல்லை; எனவே அவளை என்னால் அடையாளம் காணவே முடியாது என்று கூறியதாக இராமாயணத்தில் உள் ளதைக் கூறினார் ராம்ஜெத்மலானி!

அது மட்டுமல்ல; நம் நாடு மிகவும் சிக்கலான கட்டத்தில் உள்ளது. மதம் முழு மையாக மாறிவிட்டது! மதம் பயங்கர வாதத்தைத்தான் உருவாக்கியுள்ளது. கொலை செய்யும்படி, தலையைக் கொணரவும் கட் டளை இடும் அளவுக்கு மதம் பிடித்துள்ளது!

- இவ்வாறு உண்மைகளைத் தோலுரித் துக் காட்டியுள்ளார் ராம்ஜெத்மலானி.

தந்தை பெரியார் அவர்களும், சுய மரி யாதை இயக்கமும் இதனை சுமார் 80 ஆண்டு களுக்குமுன்பே சொல்லி- மக்களைப் பக்கு வப்படுத்தியதால்தான் இன்றும் தமிழ்நாட்டில் இராமனைக் காட்டி அரசியல் வட நாட்டைப் போல நடத்த எந்த அரசியல் கட்சியாலும் முடியவில்லை.

இராமன் மோசமான கணவன் மட்டுமா? இல்லை இல்லை, அதைவிட அவன் ஒரு மோசமான மனிதனும் கூட!

1. சிறுவயதிலேயே தாடகையைக் கூனி யைக் கல்லெடுத்து அடித்தவன்.

2. இராவணனின் தங்கை சூர்ப்பனகையை மானபங்கப்படுத்துவதாகக் கூறி, மூக்கை யும், முலையையும் அறுத்த மனிதாபி மானமற்றவன்.

3. சீதையைத் தீக்குளித்து வரச் சொல்லி, (கடவுள் அவதாரமாயினும்) மனைவியின் கற்பு பற்றிச் சந்தேகப்பட்ட கொடுமைக்கார கயவன்.

4. நிறைமாத கர்ப்பிணியான சீதையை காட்டிற்கு அனுப்பியவன்.

இராம இராஜ்யம் எப்படி? ஆளும்போது பார்ப்பனச் சிறுவன் ஒருவன் இறந்ததற்கு வர்ணதர்மம் கெட்டுப் போனதே காரணம். சூத்திர சம்பூகன் தவம் செய்தான். கட வுளை நேரே காணும் உரிமை சூத்திரனுக் குக் கிடையாது. எனவே தரும விரோதம் அது. தவமிருந்த சம்பூகனை எவ்வித விசா ரணையும் இன்றி நேரே புறப்பட்டுச் சென்று கண்டந் துண்டமாக தனது வாளால் வெட் டிய அரசநீதி கொன்ற அயோக்கியன்.

5. பல வகையான மதுவகைகளைக் குடித்த குடிகாரன்.

6. வாலியை மரத்திற்குப் பின்னால் மறைந் திருந்து கொன்ற கோழை - பேடி!

இவ்வளவும் செய்த இராமர் இந்தியன் பீனல்கோட்படி பல்வேறு கிரிமினல் குற்ற செக்ஷன்கள்படி, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவன்.

இராமாயணம் நடந்த கதையாக இல்லா விட்டாலும், தெய்வீக புருஷனாகச் சித்திரிக் கப்பட்டு இன்று அயோத்தியில் கோயில் கட்ட வற்புறுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன சனாதன ஹிந்து அமைப்புகள் கூறுகிறதே - அந்த பாத்திரத்தின் தன்மை - இதிகாசப் படியே - எப்படி உள்ளது என்பதைத்தான் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கத்த வரும் கூறி வந்தனர்; வருகின்றன.

இப்போது ராம்ஜெத்மலானிகளே கூறும் அளவுக்கு பொய்த்திரை விலக்கப்பட்டு, இராமன் சாயம் வெளுக்கிறது!

இராம பக்தர்களே, இனியாவது திருந்துங் கள்! இராமாயணத் திற்குப் பதில் திருக்குறள் படியுங்கள்.

திருக்குறளைப் பரப்புங்கள்! 9-11-12

தமிழ் ஓவியா said...


பலன்கள் பலிப்பது ஏன்?


ஜோதிடர்கள் நமது ஜாதகத்தை பரிசீலித்து வாக்குக் கூறும் போதும், வாரபலன், தினபலன் படிக்கும் போதும் அவர்கள் கூறுவது சரியாக வே உள்ளது போன்று நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்கள் கூட சில சமயம் இவ்வாறு மனச் சஞ்சலம் அடைவ துண்டு. பலன்கள் பலிப்பது போன்று தோன்றுவது ஏன்?

எடுத்துக்காட்டாக தினமணி மே 11, 2001இல் காலம் உங்கள் கையில் பகுதியில் வெளியான ஒரு ஜாதகப் பலன் குறிப்பைப் பார்க்கலாம்.
கனகாம்பாள், ஈரோடு.

கேள்வி: நான் பல கடிதங்கள் எழுதியும் தங்களுக்கு ஏன் பதில் கூற மனம் வரவில்லை? என் மகனின் ஜாத கத்தில் தோஷம் இருக்கிறதா? எனக்கு 60 வயதாகிறது. என் மகனுக்கு எப்போது விவாகம் நடைபெறும்?

என்ற கேள்விக்கு ஜோதிட ஆராய்ச்சி மய்யத்தினை சார்ந்த ஏ.எம்.ராஜகோபாலன் பதில் அளித்துள்ளார். அவர் என்ன பதில் கொடுத்துள்ளார் என்று பார்க்கும் முன் பதில் எத்தன்மையுடையதாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்?

உங்கள் மகனுக்கு ஜாதகத்தில் இந்த தோஷம். ஆகவே கல்யாணம் - ஆண்டுகள் கடந்து நடக்கும். அல்லது, உங்கள் மகன் ஜாதகம் சரிதான், ஆகவே - தேதி என்று திருமணம் நடக்கும் என குறிப்பான, தெளிவான பதில் நமது எதிர்பார்ப்பு. ஆனால் ஜோதிடரின் பதில் என்ன தெரியுமா?

பதில்: தங்கள் மகனின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்திற்கு எவ்வித தோஷமும் ஏற்படவில்லை. வரும் 13ஆம் தேதியிலிருந்து கிரக நிலைகள் சாதகமாக உள்ளதால் விவாக முயற்சிகளை மேற்கொள்ளவும். சுத்த ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும்.

என்ன பதிலின் தன்மையை உற்று கவனித்தீர்களா? எந்த தேதியில் திருமணம் நடக்கும், அல்லது எந்தக் கால இடைவெளியில் திருமணம் கை கூடும் என்பது குறித்த தகவலே இல்லை. முயற்சி மேற்கொள்ளவும் என்று உள்ளது. அத்தாயாரும் முயற்சி மேற்கொண்டு திருமணம் கை கூடினால் அது ஜாதகப் பலனா? அல்லது முயற்சியின் பலனா?

இதுபோன்றுதான் பல ஜாதகப் பலன்கள் வார பலன்கள் பொதுப்படை யானவை. குறிப்பாக கணிப்பு ஏதுமிருப்ப தில்லை. பொதுவான செய்திகள் பலிப்பது போன்று தோன்றுவது இயல்புதானே! இங்கு ஒரு செய்தியைக் கவனத்திற்குக் கொண்டு வரவும் விரும்புகிறேன். இல்லஸ்டிரேடட் வீக்லி என்ற இதழின் ஆசிரியராக குஷ்வந்த்சிங் இருந்த போது, தற்செயலாக வாரபலன் எழுதும் ஜோதிடரிடமிருந்து அவ்வார பலன் வரவில்லை.

அலுவலகத்தில் அனைவரும் கலக்கமுற்று எவ்வாறு இதழைப் பதிப்பிக்கப் போகிறோம் என்று அச்சமுற்றிருந்தனர். குஷ்வந்த்சிங் ஒரு யோசனை செய்தார். கடந்த இதழ்களில் வெளியான பலன்களை அங்கும் இங்கும் வெட்டி ஒட்டி அவரே ஒரு வாரபலன் தயார் செய்தார்.

ஜோதிடரிடமிருந்து வந்ததாகக் கூறி இதழில் பதிப்பித்தும் விட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த இதழின் வாசகர்கள் பலரும் அந்தவாரம் வெளியான வாரபலனே மிகவும் சிறப்பாக பொருந்தியதாக வாழ்த்தியதுதான்! இதற்குப் பிறகு வாரபலனுக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டதாக குஷ்வந்த் சிங் ஒரு நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

(நூல்:- நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்? - த.வி.வெங்கடேஸ்வரன்.

தமிழ் ஓவியா said...


இலட்சார்ச்சனை

நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வர ஒட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, சிறீரங்கசேத்திரத்தில் சிறீரங்கநாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது.

அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகித கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தை போக்க இதுவா வழி?

இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே இலட்ச்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவின் கல்லறை மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது! இந்தப் பிரிட்டிஷ் வல்லரசை இன்று ஜப்பான் சில இடங்களிலே தோற்கடித்தது.

அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள்; பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழைமைகள்!

... பொன்னும், பொருளும், நேரமும், நினைப்பும் போருக்குச் செலவிட வேண்டிய இந்தப் பயங்கரமான வேளையிலே வெண்பொங்கலும், சித்ரான்னமும் உண்ண, ஒரு சாக்குக்காக இலட்சார்ச்சனை செய்யுங்கள், ரங்கநாதர் இரட்சிப்பார் என்று புரோகிதக் கூட்டம் கூறி மக்களின் பணத்தையும், நேரத்தையும் பாழாக்குகிறதே, இதை என்னென்பது?

- அறிஞர் அண்ணா, திராவிட நாடு இதழ் - (5.3.1942)

தமிழ் ஓவியா said...


ஜோதிடமும் - அறிவியலும்!


சஞ்சலமான மனதின் வெளிப்பாடாகவே ஜோதிடம் போன்ற புனைவுகளும் பொதுவாக அமைவதைக் காணலாம். ஆகவே, இத்தகைய கருத்துக்கள் நமது மனதில் இடம் பிடிக்கத் துவங்கியதும் உடனடியாக தாமதியாது ஒரு மருத்துவரின் உதவியை நாடுவதோடு நல்ல உணவும் ஓய்வும் அவசியம்

- விவேகானந்தர்