சாம்பலாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பகுதிகள்!
- ஜாதி வெறியர்களின் திட்டமிட்ட தாக்குதல்
- "Q" பிராஞ்சு போல, ஜாதி, மத மோதலைத் தடுக்க காவல்துறையில் தனிப் பிரிவு தேவை!
- இன்னும் கூடுதலாக நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும்
டிசம்பர் 9 அன்று தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும்! - ஒத்த கருத்துள்ளோர் அழைக்கப்படுவர்!
ஜாதியைச் சாய்ப்போம் - சமத்துவ சமூகம் படைப்போம்!
- நமது சிறப்புச் செய்தியாளர் -
தருமபுரி, நவ.15- ஜாதி ஒழிப்பு - தீண்டாமை
ஒழிப்பை முன்னெடுத்துச் சென்று ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயத்தைப்
படைப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது
உங்களின் பரிதாப நிலையை - இங்கு
ஏற்படுத்தப் பட்டுள்ள கொடுமையை, வன்கொடுமையை நேரில் பார்க்கும்பொழுது
வெறும் கண்ணீரல்ல - ரத்தக் கண்ணீர் - இதயத்திலிருந்து பீரிடுகிறது.
தந்தை பெரியார் பிறந்த மண்!
தந்தை பெரியார் பிறந்த மண்ணிலா இந்த ஜாதி
வெறி? நம்முடைய பணிகள் இன்னும் இன்னும் தீவிரப் படுத்தப்பட வேண்டும் என்ற
உணர்வைப் பெறுகிறோம்.
இதுபோன்ற கேடு கெட்ட, வெட்கப் படத்தக்க
வன்முறைகளால் யாரும் ஜாதியைக் காப்பாற்றிவிட முடியாது. வீடு களை எரித்து
விடுவதால் ஜாதி மறுப்புத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தி விட லாம் என்று
மனப்பால் குடிக்க வேண்டாம்.
இணைந்து வாழ வேண்டியவர்கள்
தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்
பட்ட மக்களும் இணைந்து வாழ வேண் டியவர்கள்; ஆண்டாண்டு காலமாக கல்வி
வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள்.
இவர்களின் ஒற்றுமை மூலமாகத்தான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செலுத்த முடியும்.
டாக்டர் அம்பேத்கர் சொன்னதுபோல ஆரியம் உருவாக்கிய இந்த ஏணிப் படிக்கட்டு ஜாதி முறையின் கொடிய விளைவு இது.
தீண்டாமை - அதன் மூலவேரான ஜாதியை பூண்டோடு, வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்ட வேண்டும்.
பிரச்சாரம் தீவிரமாகும்!
மக்கள் மத்தியில் எங்கள் பிரச்சாரம் மிகத்
தீவிரமாகும் பரப்புவோம் - பாதுகாப்போம்! என்ற முறையிலே ஜாதி - தீண்டாமை
எதிர்ப்புணர்வைப் பரப்பு வோம் முன்னெடுத்துச் செல்லுவோம்! ஜாதி மறுப்புத்
திருமணங்கள் செய்து கொண்டவர்களைப் பாதுகாப்போம் என்ற முழக்கங்கள்
தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கச் செய்வோம்! இது ஒரு கட்சிப்
பிரச்சினையல்ல, ஒட்டு மொத்தமான சமூகப் பிரச்சினை.
டிசம்பர் 9 அன்று தருமபுரியில் மாநாடு!
வரும் டிசம்பர் 9 ஆம் தேதி தருமபுரியில்
ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும். கருத்தரங்கம்,
பேரணியும் இடம் பெறும். மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வை
ஏற்படுத்தக் கூடிய மாநாடாக இருக்கும். இரு குடும்பப் பிரச்சினை - இரு ஜாதி
பிரச்சினையாக ஆவதா?
இரு குடும்பங்களுக்கிடையே உள்ள பிரச்சினை, இரு ஜாதிகளுக்கிடையே நடந்த மோதலாக மாற்றப்பட்டது - மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும்.
ஜாதி என்பதற்கு என்ன அடையாளம் யாரேனும்
சொல்ல முடியுமா? இங்கேகூட ஜாதி மறுப்புத் திருமணங்களை ஏற்கனவே செய்து
கொண்டவர்கள் சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே - என்ன கெட்டு
விட்டது?
காதல் திருமணம் ஜாதி மறுப்புத் திருமணம் - இதனை மட்டுமே முன் னிறுத்தி நடத்தப்பட்ட வன்கொடுமையாக இதனைக் கருத முடியவில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவது - பொறுக்க முடியாத ஒன்றா?
தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவது - பொறுக்க முடியாத ஒன்றா?
இப்பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட
மக்கள் கல்வி, பொருளாதாரம் உட்பட சற்று முன்னேறியவர்களாக வாழ்ந்து
வந்திருக்கிறார்கள் - அரசுப் பணிகளில் இருக்கிறார்கள் - பிள்ளைகள் படிக்
கிறார்கள் - கல்லூரிகளிலும் படிக்கிறார் கள் என்றவுடன் - இவற்றைக் கண்டு
பொறுக்க முடியாதவர்கள் திட்டமிட்டு மேற்கொண்டு இருக்கிற வன்முறை இது.
பழிக்குப் பழி என்று வன்முறையில் இறங்கி ஆங்காங்கே ஜாதிக் கலவரங்கள் நடைபெறுவதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.
திட்டமிட்ட செயலே!
நடைபெற்று இருக்கும் சம்பவங்களைப்
பார்க்கும் பொழுது, ஏதோ எதேச்சையாக நடைபெற்ற நிகழ்வாக இதனைக் கருத
முடியாது. வீடு புகுந்து பொருள்களைக் கொள்ளையடித்து அதற்குப்பின் வீடு
களையும் கொளுத்தியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் உயிர்க் கொலையும்
ஏற்படவில்லை என்பது ஆறுதலான ஒன்றாகும். தாழ்த்தப்பட்ட மக்கள் சமயோசிதமாக
நடந்து கொண்டதால் உயிர் தப்பியுள்ளனர்.
எனக்குள்ள ஆச்சரியம் எல்லாம் கிட்டத்தட்ட
ஒரு மாத காலமாக இரு ஜாதி இளைஞர்கள் செய்து கொண்ட ஜாதி மறுப்புத் திருமணம்
செய்து கொண்டது தொடர்பான பிரச்சினை இந்தப் பகுதிகளில் இருந்து வந்துள்ளது.
காவல்துறையின் உளவுப் பிரிவு என்ன செய்தது என்றே தெரியவில்லை.
காவல் துறையில் தனிப் பிரிவு தேவை!
காவல்துறையில் ணு பிராஞ்சு என்ற ஒன்று
இருப்பதுபோல, ஜாதி, மத மோதலைத் தடுக்கும் ஒரு பிரிவு ஏற்படுத் தப்பட
வேண்டும். குறிப்பாக தீண்டாமை, ஜாதி வெறி நிலவும் இடங்களைக் கண்காணித்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும்.
குடிசை வீடுகள் பாதுகாப்பானவை என்று கருதி திமுக ஆட்சிக் காலத்தில் கல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன; குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு துறையே உருவாக்கப்பட்டது.
இங்கே பார்த்தால் ஜாதி என்னும் தீ கல் வீடுகளையும் கான்கிரீட் வீடுகளை யும் கூட எரித்துப் பதம் பார்த்துள்ளது.
நிவாரணம் போதுமானதல்ல!
வீடுகளை இழந்துள்ளவர்களுக்குத் தலா ரூ.50
ஆயிரம் அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல - இந்தத் தொகை
அதிகரிக்கப்பட வேண் டும்.
தொழில் ரீதியான பாதிப்புகளுக்கு நிவாரணம்
அளிக்கப்பட வேண்டும், குறிப் பாக படிப்புப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்
கல்வியைத் தொடர உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - எல்லாப்
பணிகளும் போர்க் கால அடிப் படையில் செயல்பட வேண்டும் என்று தமிழ் நாடு
அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
குற்றவாளிகள் தப்பித்திடக் கூடாது!
குற்றவாளிகள் எக்காரணத்தைக் கொண்டும்
தப்பித்து விடக் கூடாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்
நிறுத்தி உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
ஜாதி வெறி கொண்டு தாக்குவது என்பது இதுவே
கடைசியாக இருந்து தொலைய வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் அரசு
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இது போன்ற குற்றங்களைச் செய்வது
பற்றிய எண்ணமே இனி ஏற்படக் கூடாது - அந்த அளவுக்கு அரசின் செயல்பாடுகள்
தீவிரமாக அமைய வேண்டும்.
பாதிக்கப்பட்டோருக்கு கழக மகளிரணியினர் ஆறுதல்
அறிக்கை கொடுப்போம்!
இங்கு நடைபெற்ற கொடுமை - அதன் சமூகச்
சூழல் - பின்னணிகள் பற்றி அறிக்கை ஒன்றைத் தயாரித்து காவல் துறை தலைமை
இயக்குநரைச் சந்தித்து அளிப்போம்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது காவல்துறை, அரசு அதிகாரிகள் மெத்தனமாக ஆமை வேகத்தில் செயல் படக் கூடாது.
தனிப் பயிற்சி தேவை!
தனிப் பயிற்சி தேவை!
இது போன்ற நேரங்களில் அவர்கள் எப்படி
செயல்பட வேண்டும் என்ற வகை யில் தனிப் பயிற்சி அளிக்கப்பட்டால்கூட
நல்லதுதான். ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுவோம்.
எந்த ஒரு சூழலிலும் மனதைத் தளர விடாதீர்கள் மீண்டும் எழுவோம் என்ற உணர்ச்சியைப் பெறுங்கள். எங்களால் இயன்ற உதவி எப்பொழுதும் உண்டு.
முழுமையாக எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
தருமபுரி மாநாட்டுக்கு வாரீர்!
தருமபுரி மாநாட்டில் இவற்றின் ஒட்டு மொத்தமான எழுச்சியை, ஆக்கப்பூர்வ மான சிந்தனையை, விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
ஜாதி ஒழிந்த சமுதாயம்தான், மனிதநேயம்
உள்ள - பேதமற்ற சமுதாயம் தான் நமது ஒரே இலக்கு. தந்தை பெரியார் அவர்களின்
கருத்தும் அதுதான். திராவிடர் கழகம் பாடுபடுவது அதற்காகத் தான். தருமபுரி
மாநாட்டுக்கு வாருங்கள், அது மாநில மாநாடு என்று சொல்லும் அளவுக்கு
எழுச்சியுடன் நடைபெறும். இளைஞர்கள், மாணவர்களே வாருங்கள்! புதிய சமுதாயம்
படைப்போம் என்று கூறினார்.
அரசியலுக்கு மூலதனம் ஜாதியா?
- ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசாதீர்கள்!
- ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் பேசாதீர்கள்!
- பெரியார் அரும்பாடுபட்டு உழைத்துப் பக்குவப்படுத்தி பாடுபட்ட மண்ணை மீண்டும் பழைய நிலைக்கு விரட்டாதீர்கள்.
- நாகரிக உலகத்தில் - புத்தம் புதிய பேதமற்ற உலகில் வாழ்வோம் வாருங்கள்!
- அய்ந்தாண்டு பிரச்சாரம் செய்து மக்களைப்
பக்குவப்படுத்தினால், இந்தப் பாழாய்ப் போன தேர்தல் வந்து ஜாதி உர்ணர்வை
வளர்க்கிறதே என்று தந்தை பெரியார் கூறியதை நினைவூட்டுகிறோம். ஜாதியை
அரசியல் பொருளாக - மூலதனமாக ஆக்காதீர்கள்!
நல்ல இலட்சியங்களைக் கொள்கையாகக் கொள்ளுங்கள் நல்ல திட்டங்களை அறிவியுங்கள் அந்த அடிப்படையில் மக்களைச் சந்தியுங்கள் - கேவலம் ஜாதித் தீயை விசிறிவிட்டு தேர்தல் லாபத்தைச் சுவைக்க ஆசைப்படாதீர்கள். தமிழர்கள் என்ற உணர்வைச் சிதைப்பது ஜாதியே, மனிதன் என்ற உணர்வை உருக்குலைப்பது ஜாதியே. உணருங்கள்! உணருங்கள்!!
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழர் தலைவர் (14.11.2012)
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கப்போகிறது தருமபுரி மாநாடு
கழகத் தோழர்கள் மத்தியில் தமிழர் தலைவர்
வீடுகள் எரிக்கப்பட்ட நிலையில்
அத்தியாவசிய பொருள்கள் கூட இல்லாமல் வாடிய மக்களுக்கு ஆறுதல் கூறி,
பொருள்களை தமிழர்தலைவர் வழங்கினார்.
தருமபுரி, நவ.15-தருமபுரி பெரியார் மன்றத்தில் புதனன்று (14.11.2012) மாலை - கழகத் தோழர்கள் மத்தியில் கழகத் தலைவர் உரைத்ததாவது:
இந்தச் சந்திப்பு எதிர்பாராதது.
சந்திப்பு மட்டுமல்ல தருமபுரியில் டிசம்பர் 9ஆம் தேதியன்று ஜாதி ஒழிப்பு -
தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்ற அறிவிப்பும் கூட எதிர்பாராததுதான்.
ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்
வாழும் மூன்று கிராமங்களைக் கொளுத்தி இருக் கிறார்கள் - வன்மையாகக்
கண்டிக்கத்தக்கது. மனிதன் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று திரும்பும்
இந்தக் காலகட்டத்தில் இன்னும் ஜாதியின் பெயரால் வன்கொடுமை காண்பது
கண்டிக்கத் தக்கது - எந்த வகையிலும் மன்னிக்கப் பட முடியாததாகும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஜாதி வெறியால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்த தமிழர் தலைவருக்கு மக்கள் நன்றி செலுத்தும் காட்சி.
அண்மைக் காலமாக பரமக்குடி, தருமபுரி,
அம்பாசமுத்திரம், திருக்காட்டுப்பள்ளி என்று ஜாதிப் பாம்பு தலையை
நீட்டுகிறது. இதனை வளர விடக்கூடாது.
டெங்கு காய்ச்சலை ஒரு குறிப்பிட்ட வகை
கொசு பரப்புகிறது. அந்த கொசு உற்பத்தியாகும் குப்பைகளை, சாக்கடைகளை
அழிப்பதுபோல, ஜாதி என்னும் நோய்க்குக் காரணமான கடவுள், மதம், சாத்திரக்
குப்பைகளை மக்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும். இனியும் இந்தக் கொடுமைகள்
தொடரப் பட அனுமதிக்கப்படக் கூடாது.
எரிக்கப்பட்ட வீட்டின் தூண் அருகே தனது துயரத்தை தமிழர் தலைவரிடம் வெளிப்படுத்தும் பெண்.
வாக்கு வங்கிக்காக ஜாதியைப்
பயன்படுத்துவது வெட்கக் கேடானது. திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்பு இயக்கம்.
அதற்காக அரசமைப்புச் சட்டத்தையே எரித்த இயக்கம் இது. நாம் இவ்வளவுப் பேர்
கூடியிருக்கிறோம் என்றால், யார் எந்த ஜாதி என்று தெரியுமா? அப்படி ஜாதி
அடையாளம் தெரியாமல் இருக்கக் கூடிய தொண்டர்கள் உள்ள கழகம் நமது கழகமே!
அப்படிப்பட்ட நாம் நடத்த இருக்கும் தருமபுரி மாநாட்டை இந்தியாவே
திரும்பிப் பார்க்க வேண்டும்.
இளைஞர்களுக்கு நற்செய்தி - ‘MESSAGE’
கொடுக்கும் மாநாடாக அதனை நடத்துவோம். ஜாதிக்குள் திருமணம் செய்து
கொள்ளமாட்டோம் என்று இளைஞர்கள் சூளுரை எடுக்க வேண்டும். எடுக்க வைப்போம்.
ஜாதி ஒழிப்பும், பெண் ணடிமை ஒழிப்பும் நமது இரு கண்கள்.
ஜாதிவெறியின் கோரத்தால் பாதிக்கப் பட்ட சிறுவன் தெருவில்...
உங்களை எல்லாம் நம்பியே இந்த மாநாட்டை
அறிவித்துள்ளேன். தருமபுரி, கிருட்டினகிரி, திருப்பத்தூர், சேலம் மாவட்டக்
கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர் கள் இணைந்து
தருமபுரி மாநாடு என்று பேசப் படும் அளவுக்கு ஒரு திருப்புமுனை மாநாடாக
நடக்க வேண்டும்.
எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும் நீங்கள் -
குறிப்பாக தருமபுரி மாவட்டத் தோழர்கள் வெற்றி கரமாக நடத்தி
முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. தொடக்கவுரையாக திராவிடர்
கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மாநாட்டின் அவசியம் குறித்து சிறிது
நேரம் பேசினார்.
கரியாக்கப்பட்ட வீட்டின் பொருள்களை குவித்து வைத்திருப்பதை காண நெஞ்சம் பதைக்கிறது.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ஊமை
செயராமன் வரவேற்புரையாற்றினார். தருமபுரி மாவட்ட கழகத் தலைவர் புலவர்
வேட்ராயன் நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் சிவாஜி மாநாட்டைச் சிறப்பாக
நடத்துவோம் என்று உறுதி கூறினார். வழக்குரைஞர் வீரசேகரன், கிருட்டினகிரி
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தா.திருப்பதி, மாவட்ட செயலாளர்
கே.திராவிடமணி, சேலம் மண்டல செயலாளர் காவேரிப்பட்டணம் தியாக ராசன், வேலூர்
மண்டல செயலாளர் பழ.வெங்க டாசலம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்
தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, அண்ணாசரவணன், மாநில மகளிர் பாசறையைச்
சேர்ந்த அகிலா எழிலரசன், திருப்பத்தூர் மாவட்டக் கழக செயலாளர் இளங்கோ,
தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், தருமபுரி மாவட்ட கழகத்
துணைத்தலைவர் கதிர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்
கிருட்டினமூர்த்தி, சேலம் மண்டல தலைவர் பழனி. புள்ளையண்ணன், மேட்டூர்
மாவட்டக் கழகத் தலைவர் கவிஞர் சிந்தா மணியூர் சுப்பிரமணியம், மாவட்ட
செயலாளர் கிருட்டினமூர்த்தி, பாலு ஆகியோர் வந்திருந்தனர். முன்கூட்டியே
உங்களுக்கு வாழ்த்துப் பாராட்டுகள்.
வாழ்க பெரியார்!
வாழ்க பகுத்தறிவு!!
வருக தருமபுரி மாநாடு!!! பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழர் தலைவருடன் தோழர்கள்
தருமபுரி - நத்தம் காலனி, அண்ணாநகர்,
கொண்டாம் பட்டி ஆகிய பகுதிகளில் நடந்த ஜாதி வன் கொடு மையால்
தீக்கிரையாக்கப் பட்ட பகுதிகளை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்
பார் வையிட்டு அம்மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் அரிசி, பாய், துணி,
போர்வைக ளை வழங்கினார். இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட அமைப்பாளர்
பீம.தமிழ் பிரபாகரன், மாவட்ட ப.க. அமைப்பாளர் கதிர்செந்தில், மாவட்ட
துணைத் தலைவர் க.கதிர், பொதுக்குழு உறுப்பி னர்கள்: அ.தீர்த்தகிரி,
விடுதலை தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் மு.சிசுபாலன், மாவட்ட
மேனாள் பொறுப்பாளர்கள் மா.கிருட்டிணன், கரு.பாலன், மு.பரமசிவம், மாவட்ட
ப.க. துணைச் செயலாளர் கே.ஆர்.குமார், நகர தலைவர் துரை.சித்தார்த்தன், நகரச்
செயலாளர் உண்மை சரவணன், கழக இளைஞரணி தலைவர் சி.காமராஜ், செயலாளர்
காரல்மார்க்ஸ் மற்றும் கழக நிருவாகிகள் வினோவடிவேல், துரைசாமி, இ.மாதம்,
சின்னராஜ், வினோபாஜி, காமலாபுரம் தோழர்கள் இராஜா, மாணிக்கம் பிஎஸ்.என்எல்
சின்னசாமி, அமாசி, மணி, சின்னபாப்பசக்கரை, ஏங்கல்ஸ், பிரபாகரன்,
உதயசூரியன், மேட்டூர் மாவட்ட தலைவர் சி.எஸ்.சுப்பிரமணி.
கிருட்டினகிரி: கிருட்டினகிரி மாவட்டத்தி
லிருந்து மாவட்ட தலைவர் தா.திருப்பதி, செயலாளர் கோ.திராவிடமணி, பையூர்
மதிமணியன், பெரியசாமி, சுப்பிரமணியன், மூர்த்தி, பழனி சாமி, ஜீவா,
வேடியப்பன், சீனிவாசன், மத்தூர் ஊற்றங்கரை யிலிருந்து மேனாள் மாவட்ட
செயலாளர் பழ.பிரபு, வித்யா, மத்தூர் இரவி, ஆசிரியை இந்திராகாந்தி,
ஜான்சிராணி, கலைமணி, சிவராஜ், முரு கேசன், சுகு மார், பழனி, வெங்கடாசலம்,
விஸ்வநாதன்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் இளங்கோ,
துணைச் செயலாளர் இளங்கோவன், மகளிரணி செயலாளர் கவிதா, கவிஞர் சுப்பு
லட்சுமி, புலவர் அண் ணாமலை, மண்டல மாணவரணி செயலாளர் சிற்றரசு,
தமிழ்ச்செல்வன், பெரியார், அசோகன், ராஜேந்திரன், பாண்டியன், பெருமாள்,
ஆனந்தன், திருப்பதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
10 comments:
தருமபுரி மாநாடு - புதிய வரலாற்று ஏடு
தருமபுரி மாவட்டத்தில் நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராமங்களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி - ஜாதி வெறியர்களால் தீயிடப்பட்டு எரிந்து சாம்பலானது.
2012இலும் ஜாதி வெறியின் கோரத் தாண்டவத்தை எண்ணி வெட்கப்பட வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரையடுத்த வெண்மணி என்னும் சிறிய ஊரில் ஜாதி வெறியாட்ட மிராசுதாரர்கள் தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதியைக் கொளுத்தி 42 அப்பாவித் தோழர்கள் வெந்து சாம்பலாகும் கொடிய நிலையை உருவாக்கினார்கள் (26.12.1968)
அப்பொழுது மருத்துவமனையில் இருந்த தந்தை பெரியார், அங்கிருந்தபடியே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட கருத்து இப்பொழுதாவதும் கவனிக்கத்தக்கதாகும்.
கடைசி நடவடிக்கையாக நேற்றைய முன்தினம் தற்காப்புக்காக ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டை பூட்டிக் கொளுத்தி 42 பேரும் கருகிச் சாம்பலாக் கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளையும், இது போன்ற அராஜகங்களையும், சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சிகளால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. இதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை என்று மனம் வெதும்பி எழுதினார் ஜாதி ஒழிப்புச் சீலத்தின் தத்துவ நாயகராம் தந்தைபெரியார். 44 ஆண்டுகளுக்குப்பிறகு அதனை மீண்டும் நினைக்க வேண்டியுள்ளது.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பிறப்பின் அடிப்படையிலான ஜாதி பேதம் பாழாய்ப் போன முடை நாற்றமெடுக்கும் இந்து மதத்தின் தீய விளைவால் இந்தியா முன்னேற்றத் திசையில் முற்போக்குப் பாதையில் அடி எடுத்து வைக்காமல் திணறிக் கொண்டு இருக்கிறது.
சுதந்திரம் என்பது மனிதனுக்கா? மண்ணுக்கா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்வி இன்னும் உயிர்த் துடிப்புடன்தான் நடமாடுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியை எரியூட்டியது ஜாதி என்னும் கொடுந்தீயே .
இந்த ஜாதியை ஒழித்துக் கட்டாமல் சுதந்திரம் பற்றிப் பேச நாம் அருகதை உடையவர்கள்தானா? ஆட்சி நடத்துகிறோம் என்று கூறத் தகுதி உடையவர்கள்தானா?
இதனை ஒழித்துக் கட்ட அந்நியர் ஆட்சி வந்தால் தான் என்ன குற்றம்? சுதந்திர ஆட்சி என்ற பெயரால் பெரும்பான்மை மக்கள் இன்னும் சூத்திரர் தானா - பஞ்சமர்கள் தானா? இதுதான் தந்தை பெரியாரின் கேள்வி.
இந்த வினாக்களை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்வோம் - பரப்புவோம் ஜாதி மறுப்புத் திருமணங்களை, மத மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம். அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு புறப்படுவோம் - வாருங்கள் தோழர்களே.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கடும் அளவில் பாதிக்கப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாகப் பரிதவித்த மக்களிடையே தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சங்கநாதம் செய்தார்.
உடனடியாக ஒரு மாநாட்டையும் (தருமபுரியில்) டிசம்பர் 9 அன்று அறிவித்தார். அப்பகுதி இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், இருபால் தோழர்களுக்கும் அழைப்பு கொடுத்தவர் அதே நேரத்தில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணங்கள்பற்றியும் அரசின் காதுகளுக்கு எட்டும் வகையில் வேண்டுகோளும் விடுத்தார். கழகத்தின் சார்பிலும் முடிந்த நிவாரணப் பொருள்கள் அளிக்கப் பட்டன.
குறுகிய நாட்களில் திராவிடர் கழகப் பகுத்தறி வாளர் கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் பொருள் களைத் திரட்டிப் பணி முடித்தமை பாராட்டுக்குரியது.
அதுபோலவே தருமபுரி மாநாட்டையும், மாநில மாநாடு என்று வியக்கும் வகையில் புது முழக்கத்துடன் வெற்றிகரமாக நடத்தி முடிப்பார்கள் என்பதில் அய்யமில்லை. இம்மாநாடு கழக வரலாற்றில் மட்டுமல்ல; ஜாதி - தீண்டாமை ஒழிப்புத் திசையில் புதிய கலங்கரை விளக்கமாக அமைய வேண்டும்.
ஒத்த கருத்துள்ளவர்களை ஓரணியில் திரட்டி வழி வகுக்கும் மாநாடாகவும் அது அமையும்.
தருமபுரி, கிருட்டிணகிரி திருப்பத்தூர், சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களே, பகுத்தறிவாளர் கழகத்தினரே, தோழர்களே இன்றே பணியில் இறங்குவீர் தலைமைக் கழகத்தின் வழிகாட்டலும் கிடைக்கும்.
பெரியார் பணி முடிப்போம்!
புது சமூகம் படைப்போம்!!
வாழ்க பெரியார்! வெல்க திராவிடர் கழகம்!! 15-11-2012
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை உடனே திறக்க வேண்டும்
முதற்கட்டமாக முத்தரப்புப் பேச்சு வார்த்தை தேவை!
தமிழர் தலைவர் அறிக்கை
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை உடனே திறக்க முத்தரப்புப் பேச்சு வார்த்தையை முதல் கட்டமாக நடத்தி, தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டியது அவசர - அவசியமாகும் எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்டோர், எளியோர்கள், கல்விக் கண்ணைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை காலவரை யறையற்ற முறையில் மூடி, தேர்வுகளைத் தள்ளி வைத்திருப்பது குறித்தும் மிகுந்த வேதனையடை கிறோம். அந்தோ பரிதாபம்! 80 ஆண்டு நிறுவனத்திற்கு இப்படி ஒரு அவலப் போக்கா?
சில ஆண்டுகளுக்கு முன்புகூட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இப்படி மூடப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னரே திரும்பவும் அது திறக்கப்பட்டது.
அதன் பிறகு கலை அறிவியல் துறையின் பட்டப் படிப்புக்கான பகுதிகளையே மூடினர் (Undergraduate Course).
இப்போது மீண்டும் வரைமுறையற்ற நியமனங்கள் - நிதி நிலைமை மோசம் என்ற காரணம் காட்டி - திடீரென்று மூடப்பட்டு, விடுதிகளைக் காலி செய்யும்படிச் செய்து, பல்லாயிரக்கணக்கில் பணியாற்றுவோர் தங்களுக்குரிய உத்தரவாதம் தேவை என்பதை வலியுறுத்தி நியாயமான அறப்போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.
புகழ்பெற்ற ஒரு பல்கலைக் கழகத்தின் நிலை இப்படியா தாழ்ந்து போக வேண்டும்?
இதற்கு உடனடியாக பரிகாரம் தேடி பல்கலைக் கழகம் திறக்கப்பட்டு இயங்க வேண்டும். பணியாற்றும் சங்கத்தவர்களின் பல குற்றச்சாற்றுகளில் சாரமில்லை; சத்தில்லை என்று ஒதுக்கிவிட முடியாது.
இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க உடனடியாக முத்தரப்புப் பேச்சு வார்த்தையை முதல் கட்டமாக நடத்திட தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டியது அவசர - அவசியமாகும்.
தமிழக அரசின் உயர்கல்வி அதிகாரிகள், பல்கலைக் கழக நிருவாகத்தினர், பணியாற்றும் பேராசிரியர்கள் - ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இதுபற்றி கலந்துரையாடி, சுமுகமான ஒரு தீர்வை எட்டி, பல்கலைக் கழகம் தொடர்ந்து செயல்பட வைக்க முனைய வேண்டும்.
அதில் தீர்வு ஏற்படவில்லையானால் அடுத்த கட்ட நேரடி நடவடிக்கைகள் எந்த ரூபத்தில் அமைய வேண்டும் என்பதைப்பற்றி அரசு முடிவு செய்யலாம்!
மாணவர்களின் பெற்றோர்கள், பணிபுரிவோர் ஆகியோரின் பொதுமை சார்ந்த நலத்திற்கே முன் னுரிமை தந்து பிரச்சினையை அணுக வேண்டும்.
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
ஜாதீயால் சுடுகாடாக்கப்பட்ட கிராமங்கள்: தமிழர் தலைவர் நேரில் பார்த்துக் கலங்கினார்
கண்ணீர் விட்டுக் கதறிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆறுதல்!
போர்வைகள், உடைகள், உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன
தருமபுரி, நவ.15- ஜாதி வெறியால் வீடுகள் எரிக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாநகர், கொண்டம்பட்டி நத்தம் கிராமங்களில் எரிந்து சாம்பல் மேடாகக் கிடந்த ஒவ்வொரு வீடாகச் சென்று பார்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறதல் கூறி நிவாரண உதவிகளையும் செய்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தருமபுரி மாவட்டம் நத்தம், அண்ணா நகர், கொண் டம்பட்டி கிராமங்களில் தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் பகுதிகளில் 226 வீடுகள் கடந்த 7.11.2012 அன்று ஜாதி வெறியர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உடனே கீழ்க்கண்ட அறிக்கையினை வெளியிட்டார்.
நத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடியிருப்பு கொளுத்தப்பட்டது - கண்டனத்துக்குரியது!
அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
தருமபுரி அருகே நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு ஜாதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதை ஏற்காமல், நத்தம் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்புகள் ஜாதிவெறி கொண்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. நத்தத்தையடுத்துள்ள கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப் புகளையும் கொளுத்தியுள்ளனர். உயிர்ப் பலி இல்லை என்றாலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 35 பேர் தீக் காயங்களுக்கு ஆளாகி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
கலவரம் ஏற்பட்டு நீண்ட நேரத்திற்குப் பிறகு தான் காவல்துறை செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது. திருமணம் நடந்து பல நாட்கள் ஆன நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து காவல்துறை உளவுத்துறை என்ன செய்தது என்று தெரியவில்லை. செய்தியாளர்கள் கிராமத்திற்குள் செல்ல முடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த 2012லும் ஜாதிவெறித்தனத்தோடு நடத்தப் பட்டுள்ள இந்தக் கொடிய செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜாதியின் பெயரால் அரசியல், ஜாதி தீவிரவாதப் பேச்சுகள் - ஜாதி மறுப்புத் திருமணத்தைக் கண்டிக்கும் வெளிப்படையான போக்குகள்தான் இவற்றிற்கு முக்கிய மூல காரணமாகும். இந்தக் கொடுமைக்குப் பிறகாவது சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும்; சம்பந்தப்பட்ட பகுதிகளில் கழகம் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இத்தகைய அநாகரிகமான கலவரங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
8.11.2012
தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.
அங்கிருந்து வெளிவந்து கொண்டிருந்த தகவல்கள் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தன.
நேரில் சென்று உண்மையை அறிய வேண்டும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று கருதி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நேற்று (14.11.2012) முற்பகல் 11.15 மணியளவில் அண்ணாநகர் காலனிக்குச் சென்றார்.
அடுத்து நத்தம் பகுதிகளுக்கும் சென்றார்.
வீடு வீடாகச் சென்று...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுடனும், தோழர் களுடனும் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று நேரிடையான பாதிப்புகளைக் கண்டு கண் கலங்கினர். நடந்து செல்லவேகூட சிரமமாக இருந்தது. அந்த இடிபாடுகளுக்கிடையேயும் கழகத் தலைவர் நடந்து சென்று ஒவ்வொன்றையும் பார்த்தார். முதியவர்களும், தாய்மார்களும் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. அய்யா நீங்கள் தான் எங்கள் பிள்ளைக் குட்டிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வாய்விட்டுக் கதறிய காட்சி நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகும்.
இனி எந்தக் காலத்தில் நிமிரப் போகிறோம்?
ஒரு தலைமுறை கஷ்டப்பட்டு உழைத்து நாங்கள் கட்டிய வீடு, சேகரித்த பொருள்கள், பெண் குழந்தை களுக்காகச் சேகரித்த நகைகள் எல்லாவற்றையும் பறி கொடுத்து நிற்கிறோமே - இனி எந்தக் காலத்தில் எந்தத் தலைமுறையில் நாங்கள் நிமிரப் போகிறோம்?
கட்டிய துணியோடு நிற்கிறோம். பிள்ளைகளின் படிப்புப் பாழாகி விட்டது என்று கதறினார்கள்.
நத்தம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் 156 வீடுகள், அண்ணா நகரில் 35 வீடுகள், கொண்டாம்பட்டி காலனி யில் 35 வீடுகள் என்று திட்டமிட்டுக் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட வன்முறை!
இந்த மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. மாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை தாழ்த்தப்பட்டோர் பகுதியில் எதிர்ப்பாரின்றி எரியூட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடாகச் சென்று முதலில் வீட்டில் பீரோக்களை உடைத்து, அவற்றில் உள்ள நகைகள், பணம் மற்றும் பொருள்கள் இவற்றைக் கொள்ளையிடுவது, எல்லாவற்றையும் சுத்தமாகத் துடைத்து எடுத்துக் கொண்டவுடன் பெட்ரோல் குண்டுகளை வீட்டின் மேல் வீசி எரிப்பது என்கிற அணுகுமுறையைக் கையாண் டுள்ளனர்.
கல் வீடுகளும் தப்பவில்லை
இரு சக்கர வண்டிகள், கார்கள்கூட எரிக்கப்பட்டு எலும்புக்கூடாகக் கவிழ்ந்து கிடந்ததைக் காண முடிந்தது.
சமையல் எரிவாயு இருந்த வீடுகளில் அதைத் திறந்து விட்டு தீப்பிடித்து எரியச் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டு வீடுகள் கல் வீடுகள்கூட தீயிலிருந்து தப்ப வில்லை.
உயிர்ச்சேதம் இல்லை
ஒரு பிரச்சினையில் வன்முறையாளர்கள் கவனமாக இருந்திருப்பது தெரிகிறது. உயிர் சேதம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கின்றனர். அப்படி நடந்தால் விளைவு கடுமையாகி விடும் என்ற அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
கும்பலாக வந்தவர்களைக் கண்டு அஞ்சி நடு நடுங்கி, குழந்தை குட்டிகளைத் தூக்கிக் கொண்டு வாரியடித்துக் கொண்டு ஓடியிருக்கின்றனர்.
நடந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும்பொழுது திடீர் என்று உணர்ச்சி வேகத்தில் நடந்ததாகக் கருத வாய்ப்பில்லை.
திட்டமிட்ட ஏற்பாடுகள்
வீடுகளைக் கொளுத்துவதற்கான எரிபொருள்கள்; பெட்ரோல் குண்டுகள் இவற்றையெல்லாம் முன்கூட்டியே திரட்டி வைத்திருக்க வேண்டும்.
மாவட்டக் காவல்துறை அதிகாரி வெளி மாவட்டப் பணிக்காகச் சென்றுள்ள நேரம்; காவல்துறையினரோ, அதிகாரிகளோ, செய்தியாளர்களோ, சம்பந்தப்பட்ட ஊர்களுக்குள் நுழைய முடியாதபடி மரங்களை வெட்டிக் குறுக்கே போட்டுள் ளனர்.
பல கிராமங்களிலிருந்து ஆட்கள் திரட்டப்பட்டுள்ளனர் (கிட்டத்தட்ட 1500 பேர்களுக்கு மேல்)
ஜாதி மறுப்புத் திருமணம்தான் காரணமா?
இவ்வளவுக்கும் சொல்லப்படும் காரணம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் ராஜா (வயது 24) செல்லங் கொட்டகையைச் சேர்ந்த நாகராசன் அவர்களின் மகள் லதா (வயது21) வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவ இவ்விருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதுதான் இந்த இழி செயலுக்குக் காரணம் என்று மேலோட்டமாகக் கூறப்படுகிறது - பிரச்சாரமும் செய்யப்படுகிறது. (மணமகனின் தாத்தா முன்னாள் இராணுவ வீரர். மணமகன் காவல்துறைப் பணிக்குத் தேர்வு செய்யப்பட் டுள்ளார்).
ஆனால் இந்தத் திருமணம் நடந்தது அக்டோபர் 14ஆம் தேதி. மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் இந்த எரியூட்டல் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
சேலம் காவல்துறை அதிகாரியைச் (DIG) சந்தித்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் நிலைமைகளை எடுத்துக் கூறி பாதுகாப்பு கேட்டுள்ளனர். பல நாட்களுக்குப் பிறகு சொந்த கிராமத்துக்கு வந்துள்ளனர். இரு பிரிவினர்க்கிடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
அது தோல்வியில் முடிந்துள்ளது.
பிணத்தை வைத்து வெறியூட்டல்!
மணமகனின் தந்தையாரை வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நெருக்கி இருக்கிறார்கள். அவர் பெரும் அளவு மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலையும் செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அந்தப் பிணத்தை மெயின் ரோட்டில் கொண்டு வந்து போட்டு ஜாதி வெறியைத் தூண்டும் விதமாகப் பேசி யுள்ளனர்.
அங்கிருந்து கும்பல் கும்பலாகப் பிரிந்து மூன்று பகுதிகளுக்குச் சென்று பொருள்களைக் கொள்ளையடித் தும் வீடுகளைக் கொளுத்தியும் துவம்சம் செய்துள்ளனர்.
காவல்துறை என்ன செய்தது?
இவ்வளவு சூழ்நிலையிலும் காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்குத்தான் அதன் செயலின்மை அப்பட்டமாகத் தெரிகிறது.
மூன்று வார காலமாக அந்தப் பகுதியில் உருவாக்கப் பட்ட உணர்வுகள் - உணர்ச்சிகள்பற்றி உளவுத்துறை கண்டு கொள்ளாமல் இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!
எரிக்கப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு இடத்தையும் நேரில் பார்த்த வகையிலும், பாதிக்கப்பட்ட மக்கள் சொன்ன வகையிலும் ஓர் உண்மை வெளிபடையாகத் தெரிகிறது.
பொறாமையால் ஏற்பட்ட ஜாதி வெறி!
காதல் திருமணத்துக்காக மட்டுமே இந்த வன் கொடுமை அரங்கேற்றப்பட்டதாகக் கருத முடியவில்லை.
பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஓரளவு படித்த, பொருளாதாரத்திலும் சற்று மேம்பட்ட மக்களாக இருந்துள்ளனர். முன்னாள் இராணுவத்தினர், ஆசிரி யர்கள், பெங்களூரு போன்ற இடங்களில் பணியாற்றும் நிலை, பிள்ளைகளும் கல்லூரி அளவில் படிக்கும் சூழல் - இவற்றைக் கண்டு பொறாமையுணர்ச்சியுடனும், தாழ்த்தப் பட்ட கீழ் ஜாதியினர் இந்தளவு வளர்ந்து விட்டனரே என்பதைப் பொறுக்க முடியாமலும் வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள் என்று கருத இடம் இருக்கிறது.
உறுதுணையாக இருப்போம்!
கண்ணீரும் கம்பலையுமாகக் காணப்பட்ட பாதிப்புக்கு ஆளான மக்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆறுதல் கூறினார்.
நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். அரசின் கவனத்துக்கும் எடுத்துக் கூறுவோம்! எங்களால் முடிந்த உதவிகளையும் செய்வோம் என்றார்.
ராஜூ குடும்பத்தின் சோகக் கதை
கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ தாழ்த்தப்பட்ட தோழர். அவரின் மகன் நேதாஜி வன்னியப் பெண்ணான முத்து லட்சுமியைக் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்.
ஒன்றரை ஆண்டுகள் அவர்கள் எங்கு இருந்தனர் என்று தெரியவில்லை. சென்னையில் இருந்ததாகப் பிறகு தெரிய வந்தது. ஒரு நாள் திடீரென பத்து பேர் ராஜூவின் வீட்டுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். ஓடிப் போய் முள் செடிக்குள் பதுங்கிக் கொண்டனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று புலம்பிய ராஜூவின் வீடு இந்த முறையும் தாக்கப்பட்டது. தீக்கு இரையாக்கப்பட்டது. என்னே கொடுமை!
அளிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள்
நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர், ஜாதிக் கலவரத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் விவரம்:
கிருட்டினகிரி மாவட்டம் சார்பாக ரூ.10,000/-, தொழிலதிபர் கே.வி.சண்முகம் ரூ.5000, கோகுல் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் கே.எம்.சுப்ரமணி ரூ.5000, இரா. வேட்ராயன் 20 போர்வைகள், வீ. சிவாஜி 20 போர்வைகள், ஊமை செயராமன் 20 போர்வைகள், தமிழ்ப் பிரபாகரன் 100 கி.கி. அரிசி, கிருட்டினமூர்த்தி 10 போர்வைகள், கருபாலன் (50கி) 2 சிப்பம் அரிசி, தமிழ்ச்செல்வன்5 போர்வைகள், கருணாநிதி (கருநாடக மாநில தி.மு.க து. அமைப்பாளர்) 10 பெட்சீட், கே.வி.கே. சாமி RTO ஆபீஸ் 20 பெட்சீட், இ.பி. முனுசாமி 5 பெட்சீட், கே. திருமால் வழக்கறிஞர் 50 கி. அரிசி, சி. காமராசு 5 போர்வைகள், கதிர் செந்தில் 10போர்வைகள், திருமதி ஜெயலட்சுமி 8 போர்வைகள்,
ஆர். பரிமளம் 5 போர்வைகள், டி.டி. தனபால் துரைசிங் 8 போர்வைகள், ஆர். சின்னராசு 10 போர்வைகள், சரவணன் 20 போர் வைகள், கே.ஜெ. கிஷோர்குமார் 20 போர்வைகள், இ. மாதன்10 போர்வைகள், ஓவியர் சித்தார்த்தன் 6 போர்வைகள், பெ. மதிமணியன் 5 போர்வைகள், வே. கனிமொழி 2 சிப்பம் அரிசி, வே. மலர்விழி 2 சிப்பம் அரிசி, வே. கவியரசி 2 சிப்பம் அரிசி, பி. ராதா பிஎஸ்என்எல் 10 போர்வை, எல்.அய்.சி. பரமசிவம் 10 பாய்கள்,
விமலா சிவாநந்தம் பிஎஸ்என்எல் 20 பாய்கள், கே.ஆர். குமார் 5 போர்வைகள், ஆசிரியர் தீ சிவாஜி, 4 போர்வைகள், ஆசிரியர் சாமிநாதன் 4 போர்வைகள், மணிவேல் ஆசிரியர் 3 போர்வைகள், மா. கிருட்டிணன் 1 சிப்பம் அரிசி, சின்னப்பா சக்கரை 75 புடவை, தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் 75 சட்டை, 75 ஜாக்கெட், அண்ணாமலை 10 போர்வைகள், ஆர். சின்னசாமி (பிஎஸ்என்எல்) 5 போர்வைகள்.
யசோதா சின்னராசு கவுரி - ரவி வீடுகள் சாம்பல்
இந்த இரு பெண்களும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களின் துணைவர்களோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நத்தம் கிராமத்தில் வசிக்கக் கூடியவர்கள்; எந்தவிதப் பிரச்சினையுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த வர்கள் ஜாதிச் சிக்கல் அவர்களைப் பொறுத்த வரையில் ஒன்றும் இல்லை. அவர்கள் வீட்டையும் ஜாதி வெறியர்கள் தீ மூட்டி ஆடித் தீர்த்தனர். பதினேழரைப் பவுன் நகைகள், 27 ஆயிரம் ரூபாய் பணம் முதலிய வற்றைத் திருடி வீட்டையும் தீக்கிரையாக்கினர்.
வசந்தா கதறல்!
எங்கள் வீட்டில் இருந்த பீரோவைத் திறக்க முடியாததால், பீரோவையே தூக்கிச் சென்று விட்டனர் என்று கதறினார் சகோதரி வசந்தா.
ஆசிரியை ஜீவா கண்ணீர்
திடீர் என்று ஒரு கும்பல் எங்கள் வீட்டுக்குள் புகுந்தது. பீரோவை உடைத்து 10 பவுன் நகைகளையும் 35 ஆயிரம் ரூபாயையும் அள்ளிச் சென்றனர். வீட்டுக்கும் தீ வைத்தனர். ஓர் அறைக்குள் குழந்தையுடன் ஒளிந்து கொண்டிருந்த நான் பதறி அடித்து வெளியில் ஓடி விட்டேன் என்று கண்ணீர் விட்டார்.
யோவ்.. பெரியார் என்ன உத்தம புத்திரனா? பெரியாரே ஒரு வந்தேறி.. அவர் பிறந்த மண் என்று சொல்வது தமிழர்களை வேண்டுமேன்றே கேவலப்படுத்துவது..
பெரியார் பற்றிய யோக்கியதை எல்லாமே ஈரோட்டுக்காரர்களுக்கு தெரியும்..
இந்த ஜாதி பிரச்சினைய தூண்டி விட்டதே திராவிடர் கழகம்தான் .. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுகிற கதைதான் ஞாபகம் வருது...
ஒழிக்கப்பட வேண்டியது. சாதியல்ல.. திராவிடர் கழகம்தான்.. இருக்குற கொஞ்ச பேரும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு கத்திக்கிட்டு இருந்த பின், தி.க தானாகவே ஒழிந்து விடும்..
அசல் நாத்திகம்!
தமிழ்நாடு இந்து சமய அற நிலையத் துறை திடீரென்று நாத்திகக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியது ஆச்சரியமானது - ஆனா லும் அது உண்மைதான்.
கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியார் அவர் களின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டது வியப்பை அளிக்கிறது.
சக்தியுள்ள சாமிக்குச் சாவியும் - பூட்டும் ஏன் என்று சுவர் எழுத்தாளர் சுப்பையா அன்று எழுதி னார்.
இந்தக் கருத்தையும் இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.
நமது தமிழக முதல் அமைச்சர் திடீரென்று சென்று தரிசிக்கக் கூடிய ஒன்று உண்டென்றால் அது சென்னையை அடுத்த - திருவொற்றியூரில் உள்ள வடிவுடைஅம்மன் கோயில் தான்.
ஓகோ, அவ்வளவு சக்தியுள்ள (ஆ) சாமியோ - இருந்துவிட்டுப் போகட்டும் - அதனாலென்ன?
சரி, என்ன வந்தது அந்தக் கோயிலுக்கு? ஒன்றும் இல்லை - கோலி விளையாட்டுப் பையன்கள் தீபாவளியன்று வெடித்த பட்டாசு ஒன்று ராஜகோபுரத் தின்மீது போடப்பட்டு இருந்த கீற்றுக் கொட்டகை யின்மீது விழுந்து தீப் பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது போலும்!
என்ன சொல்கிறீர்கள்? சக்திக் கடவுளான வடி வுடை அம்மன் கோயிலிலா இந்தச் சமாச்சாரம்!
வெடித்தது பட்டாசு. கடவுள் சக்தியோ புஸ் வாணமாகி விட்டது! தீபாவளி நாளில் மிகவும் பொருத்தம்தான் - பேஷ்! பேஷ்!!
வடிவுடை அம்மனுக்கு என்ன வந்தது? அதுதான் அடித்து வைத்த சிலை யாயிற்றே! சீறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயில் பற்றி எரிந்தபோது கடவுள் ரெங் கநாதன் சிலையும் வெடித் துச் சிதறவில்லையா?
முதல் அமைச்சர் பிரத்தியேகமாகக் கும்பிடும் சாமி ஆயிற்றே! அதிகாரி களால் சும்மா இருக்க முடியுமா?
உத்தரவு பறந்தது. இனிமேல் இது போன்ற கீற்றுக் கொட்டகைகளைக் கோயில்களில் போடக் கூடாது. தீப்பிடிக்காத ஆஸ் பெஸ்டாஸ் பொருள்களைத் தான் பயன்படுத்த வேண் டும் என்பது இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளின் உத்தரவு சுற்றறிக்கை.
அது மட்டுமல்ல; கோயில் அதனைச் சுற்றி யுள்ள இடங்களில் அக்னி பகவானுக்கும் தடையாம். தீப்பெட்டி, பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற பொருட் களைப் பக்தர்கள் எடுத்து வரவும் தடையாம்.
மின் கசிவு ஏற்பட்டு பகவானுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்ப தற்காக மின் இணைப்பு களை உடனே சரி பார்க் கவும் உத்தரவாம்!
வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னாரே நினைவு இருக்கிறதா? சாமி கும்பிடுவது என்பது பிள்ளை விளையாட்டே என்றாரே! அதனை இந்த இடத்தில் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டால், அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம் என்பது!
- மயிலாடன்17-11-2012
நவம்பர் 25 அழைக்கிறது!
திராவிடப் பெருங்குடி மக்களே! வரும் 25ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் ஒரு புரட்சி விழா!
எத்தனையோ புரட்சி அத்தியாயங்களை நம் மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்த திராவிடர் கழகம் இப்பொழுது அதன் திசையிலே என்றென்றும் ஒளி உமிழும் ஓர் செயல்பாட்டுக்கு உங்களை அழைக் கிறது.
ஜாதி என்பது நமக்கு உரியதன்று. அது இடையில் வந்த ஒரு கூட்டத்தால் திணிககப்பட்ட தீய நஞ்சு.
திராவிடர் இனத்தின் ஒற்றுமையை உருக் குலைத்த எலும்புருக்கி நோய்! நாம் ஓர் இனம் என்ற உணர்வை ஒழித்துக் கட்டிய திட்டமிட்ட ஏற்பாடு அது.
பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் இந்த வருணாசிரம ஏற்பாட்டை ஒழித்துக் கட்டினால் ஒழிய நம் இனத்துக்கு மீட்சியில்லை.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் வாழ் நாள் முழுவதும் பிரச்சாரம் செய்ததும், பாடுபட்டதும் ஜாதி ஒழிப்பு சமத்துவ சமுதாயம் ஒன்றைப் படைப்ப தற்காகத்தான்; ஜாதியின் பாதுகாப்புக் கோட்டை யாக இருந்துவரும் கடவுள் மதம், சாஸ்திரம், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டம் முதலியவற்றின் ஆணி வேருக்கே சென்று அறிவாயுத அணுக்குண்டைப் போட்டவர் அறிவுலக ஆசான் அய்யா.
நாட்டில் ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் - மத மறுப்புத் திருமணங்கள் நடக்கத் தொடங்கின. கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே வேரில் பழுத்த பலா என்று துணைவரை இழந்த பெண்களின் நிலையைக் கண்டு கவிதை வரியில் படம் படித்துக் காட்டினார் நமது இயக்கக் கவிஞர் பாரதிதாசன்.
துணைவரை இழந்தால் இன்னொரு துணை வியை தேடிக் கொண்டால் என்ன என்று துணிச்ச லாக வினா எழுப்பி மக்கள் மத்தியில் சிந்தனை அலைகளை எழுப்பி வந்திருக்கிறோம். அதன் விளைவு ஏராளமான திருமணங்கள் இந்தத் திசையில் நடந்து வருகின்றன.
சிவகாமி - சிதம்பரனார் ரெங்கம்மாள் - சிதம்பரம் என்று தொடங்கி நீண்ட பட்டியலே உண்டு.
மத மறுப்புத் திருமணங்களும் நடந்து வருகின்றன - நாமும் நடத்தியும் வைத்திருக்கிறோம்.
பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்த சுயமரியாதைத் திருமணங்கள் நாட்டில் நடக்கப் புதுமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியவர் புரட்சியின் சின்னமாம் தந்தை பெரியார்! சட்டப்படி அவை செல்லாது என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், சட்டமா? சுயமரியாதையா? என்று வெடித்தெழுந்த வினாவுக்கு சுயமரியாதையே என்று பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், புரோகித மறுப்புத் திருமணங்களை நடத்தித்தான் வந்தனர்.
அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டு தந்தை பெரியார் அவர் களுக்கு காணிக்கையாக்கப்பட்டது.
இப்பொழுது அடுத்த கட்ட அத்தியாயத்தை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் எழுதிட உள்ளது.
ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் விதவையர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம், திருமண விடுதலை பெற்று மறு திருமணம் செய்து கொண்டோர்களுக்கு ஒரு பாதுகாப்பு என்று கூடச் சொல்லலாம். இந்த இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது இடர்ப் பாடுகள் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றிடவும், ஜாதி மறுப்பு - மத மறுப்பு திருமணங்கள், விதவையர் திருமணங்கள், மறு வாழ்வு திருமணங்கள் இவற்றை ஊக்கப்படுத்தவும் வரும் நவம்பர் 25ஆம் தேதி காலை முதல் மாலை வரை முழு நாள் என்று சொல்லும் அளவுக்கு மன்றல் 2012 நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.
ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் விதவைப் பெண்கள் திருமணங்கள் விவாக விடுதலைப் பெற்றோர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம் இவற்றை செய்து கொள்ள விரும்புவோர் அன்று பெரியார் திடலில் கூடலாம்.
முன்னதாகவே பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநருக்குத் தகவல்களைத் தெரிவிக்க லாம்.
ஜாதிக்குள் சுயம்வரங்கள் நாட்டில் நடப்பதுண்டு. இந்த வகையில் நாட்டில் நடைபெறுவது இதுதான் முதல் முறை.
மேலும் மேலும் தொடர்ந்திடவும் வாய்ப்பு இருக் கிறது. திராவிடர் கழகம்தானே எல்லா மறு மலர்ச்சிக்கும் முன்னோடி!
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்! வாகை மலர் சூட்டிக் கொள்வீர்!!
நவம்பர் 25 அழைக்கிறது! அழைக்கிறது!!17-11-2012
Post a Comment