சமதர்மம் என்றால், சாதாரணமாக பாரபட்சமற்ற
நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும்.
ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது ஜாதியில்,
கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை
இருந்து வருகிறது.
இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை
நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால், மதக்காரர்களுக்கும்,
கடவுள் நம்பிக்கைக் கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி
மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக்
கந்தையின்றியும், குடி இருப்பதற்கு ஓட்டைக் குடிசை கூட இல்லாமல்
பரிதவிக்கும் பொழுது எந்தவிதமான வேலையும் செய்யாது, பணக்காரனாக இருக்கின்ற
சந்தர்ப் பத்தால், அக்கிரமமாக அநீதியாக தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்திக்
கொண்டு, தான் மட்டும் படோடோபம் டம்பாச்சாரித்தனமாக வீண் விரையமாக்குவது
சரியல்ல.
எல்லோரும் கஷ்டப் பட்டு வேலை செய்து பலனை
எல்லோரும் சமமாக அனுபவிக்கலாம் என்று சொன்னால், அது முதலாளி களுக்கும்,
பணக்காரர்களுக்கும், ஜமீன்தார், மிட்டா மிராசுதார் முதலியவர்களுக்கும்
விரோதம் என்று வீண் கூக்குரலிடப்படுகிறது.
சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அதுபோலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும், பொருளும் எல்லாம் குடும்ப பொதுச் சொத்து போல் எல்லா மக்களுக் கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம்போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து, உண்டு உடுத்தி இன்ப வாழ்வு வாழ வேண்டுமென்பதுதான்தான் சமதர்மம், மற்றபடி இதில் பயப்படத்தக்க காரியமும், புரியாத காரியமும் இல்லை.
சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அதுபோலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும், பொருளும் எல்லாம் குடும்ப பொதுச் சொத்து போல் எல்லா மக்களுக் கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம்போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து, உண்டு உடுத்தி இன்ப வாழ்வு வாழ வேண்டுமென்பதுதான்தான் சமதர்மம், மற்றபடி இதில் பயப்படத்தக்க காரியமும், புரியாத காரியமும் இல்லை.
இந்த சமத்துவமான வாழ்க்கை வேண்டுமென்று
கூறும்பொழுது சமதர்ம விரோதிகளான மதவாதிகளும், ஆஸ்திகர்களும் துள்ளிக்
குதித்து அது கடவுளுக்காகாது. அவனவன் முன் ஜென்மத்தில் செய்த பாவ,
புண்ணியங்களுக்கேற்றாற்போல் சுகமான வாழ்க்கையோ, கஷ்டமான வாழ்க்கையோ
நடத்துகிறான். பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பது கடவுள் சித்தம் அவர்
கடாட்சத்தால் அவனுக்கே தனி உரிமை கொடுக்கப்பட்ட பொருள்களைப் பொதுவுடைமை
ஆக்கப்படல் அநீதி, கடவுள் கட்டளைக்கு விரோதம் என்று கூப்பாடு
போடுகிறார்கள். இன்றைக்கு முனிசிபல் கட்டடத்தையோ, பொது ரஸ்தாவையோ,
ரயில்வேயையோ எடுத்துக் கொள்ளுங்கள். இதில் யாருக்கு உரிமையில்லையெனக் கூற
முடியும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவற்றை
அனுபவிக்கிறார்களா? இல்லையா? இதனால் எந்தக் கடவுளுக்கு, மதத்துக்கு அல்லது
பணக்காரனுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூற முடியுமா? ``மக்கள் வாழ்க்கைக்கு
இன்றியமையாததான பல வசதிகளையும், சாதனங்களின்றி மற்றவர்கள்
கஷ்டப்பட்டாலும், பரவாயில்லை. எனக்குத் தேவைக்கு மேலிருந்தாலும், நான்
அனுபவிப்பதற்கு வேண்டிய அளவுக்கு மேலிருந் தாலும், அது சும்மா இருந்து
வீணாக அழிந்து போவதானாலும், பிறர் அனுபவிக்க நான் பார்க்கக் கூடாது
என்றாலும், குறுகிய புத்தியும், கீழான எண்ணமும், சுயநல உணர்ச்சியும்
கொண்டவர் களுக்கும்தான் உழைக்கக் கூடாது, உடல் வளையக் கூடாது. ஆனால், பிற
மக்கள் உழைப்பதினால், விளையும் பயனைத் தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும்
என்னும் சூழ்ச்சிமிக்க சோம்பேறி களுக்கும்தான் சமதர்மம் கசப்பாகவோ, வெறுப்
பாகவோ, விரோதமாகவோ இருக்குமே தவிர, அவர்கள் இதைப்பற்றி மறுப்பார்களே தவிர
மற்றபடி உடலைச் சாறாகக் கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளி
மக்களுக்கு இந்தக் கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பெரிதும் சாதகம்
செய்யவல்ல வாழ்க்கை நிலைமை உயர்த்தவல்ல ஜீவ தாது இது என்றுதான்
கூறவேண்டும். உலக ஜனத் தொகையில், 100க்கு 90 பேருக்கு மேற்பட்ட தொழிலாளிகள்
பாமர மக்கள் ஆகியவர்களுக்கு அனுகூலமாயிருக்கின்றன. இந்தத் தத்துவத்தை
நியாய புத்தியும், நேர்மையும் நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட
அனைவரும் ஆதரித்துத்தான் தீருவார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் மலிந்த இன்றைய சமுக
அமைப்பால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ, சாந்தியோ, சமாதானமோ உண்டு
என்று கூற முடியுமா? ஏழைக்கு கஞ்சியில்லை, கட்டத் துணி இல்லை, இருக்க
வீடில்லை. ஓய்வில்லை, இல்லாத பிள்ளைக்கு கல்வி வசதி இல்லை என்பன போன்ற பல
ஓயா கவலையே கவலையாய் சதா வறுமைக் கடலிலே கிடந்துழல்கிறான். பணம் படைத்த
பணக்காரர்களுக்கோ இருப்பதைக் காக்கவேண்டும், மேலும் பெருக்க வேண்டும்,
பிறர் கவராது காப்பாற்றவேண்டும் என்றும் கவலையோடு பேராசை மிகுதியால் மேலும்
மேலும் செல்வத்தைப் பெருக்கவே ஆசைப்படுகின்றார்கள். சாதாரணமாக ஒரு தோட்டி
வேலை செய்யும் கீழ்தர நிலையில் உள்ளவன், ஆடு, கோழி வளர்த்துக் கொஞ்சம்
பணக்காரனாக வேண்டும். பின்னர் மணியக்கா ரனாக ஆக வேண்டும் என்றெண்ணுகிறான்.
மணியக்கார வேலை கிடைத்தாலும், தாசில்தாராக வேண்டுமென்று ஆசிக்கிறான்.
அப்படியானாலும், கலெக்டர் ஆகவேண்டும், கவர்னர் ஆகவேண்டும். வைஸ்ராயாக
வேண்டும், ஏக சக்கிராதிபதியாய் உலகாள வேண்டும். இன்னும் இதற்குமேல் வேறு
உலகங்கள் இருந்தாலும் அவற்றையும் தான் ஒருவனே கட்டி ஆளவேண்டும் என்று
கருதுகின்றான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு
உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும், தேவைக்குமேற்பட்ட சொத்துகளுக்கு
சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கவுரவம் என்றும், தனி மதிப்புக்குப்
பாத்திரமானது என்றும், கண்ணியமானது என்றும் கருதுகின்ற ஒரு ``மூட
நம்பிக்கையே தவிர வேறில்லை.
இந்த மூட நம்பிக்கையின் பயனாய்த் தான்
மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது, பிறரையும்
அனுபவிக்க விடாது, வைக்கோல் போரைக் காக்கும் நாய்போல் வாழ்கின்றான். இந்தத்
தனிவுடைமை வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்குப்
பயன்படக் கூடிய பல பொருள்கள் சாதனங்கள் வீண் விரையம் செய்யப்படுகின்றன.
உதாரணமாக மோட்டார் காரை எடுத்துக்
கொள்வோம். ஒரு செல்வந்தர் குடும்பத்துக்குத் தனியாக ஒன்று அல்லது மேற்பட்ட
கார்கள் வைத்துக் கொண்டிருப்பது இன்றைய அனுபவம். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு
மனிதனுக்கு மூன்று அல்லது நான்கு மணிநேர தேவைக்காக உபயோகிக்கப்படும்
மோட்டார் ஒரு நாளில் இருபது மணிநேரம் வீணாக யாதொரு பயனும் இன்றி
இருக்கிறது. இதில் வீணாக பணம் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலை மாறி
பஞ்சாயத்து போர்டு அல்லது முனிசிபாலிட்டிகளில் ஜனத்தொகைக்குத் தக்கவாறு 10,
15, 20 கார்கள் வைத்துக் கொண்டால், பொதுவில் தேவைப்பட்ட நேரங்களில்
உபயோகித்துக் கொண்டால் வீணாக பணம் முடங்கிக் கிடக்க வேண்டிய தேவையில்லை.
இம்மாதிரியான முறைகளை அனுசரிப்பதால் வீண்
விரயங்கள் தடுக்கப்பட்டு மக்கள் எல்லோரும் மனித வாழ்வை இன்ப மயமாக்கும் பல
சாதனங்களையும் அனுபவித்துப் பயன்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும்.
இதற்கு பாடுபடாது பிறருழைப்பில் படோடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான
பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று
கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும்,
மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.
--------------------செங்குந்த மகாஜன மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, "புரட்சி", 10.6.1934
9 comments:
தருமபுரி நிகழ்ச்சி
கழகத்தின் சார்பில் காவல்துறைத் தலைமை இயக்குநரைச் சந்தித்து அறிக்கை
தருமபுரி மாவட்டம் அண்ணாநகர், நத்தம் காலனி, கொண்டம்பட்டி தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்புகள் - ஜாதி வெறியர்களால் எரிக்கப்பட்டது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நேரில் சென்று (14.11.2012) சேகரித்த தகவல்களின் அடிப்படையில் திராவிடர் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை (கழகத் தலைவரின் கையொப்பத்துடன்) நேற்று (27.11.2012) காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் அளிக்கப்பட்டது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் வழக்குரைஞர்கள் த. வீரசேகரன், ஜெ. துரைசாமி ஆகியோர் சென்றிருந்தனர். நேரில் விளக்கிக் கூறப்பட்டது.
பக்தி முற்றி கோவில் கருவறைக்குள் புகுந்து கடவுள் சிலையைக் கட்டிப் பிடித்த பெண்
காவல்துறையில் ஒப்படைப்பு!
தீட்டுக்கழிக்க யாகமாம்!
கடலூர், நவ. 28- பக்தி முற்றிப்போய் கோவில் கருவறைக்குள் நுழைந்து சாமி சிலையைக் கட்டிப் பிடித்த பெண், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார்.
கடலூரிலிருந்து 5 கல் தொலைவில் உள்ள ஊர் திருவந்திபுரம். அங்குள்ள தேவநாதசாமி கோவிலில் இன்று காலை, மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண் அந்தக் கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்றார். பூசை நடந்துகொண்டு இருந்தபோது, பக்தி உணர்ச்சிவயப்பட்டு கோவில் கருவறைக்குள் புகுந்து சாமி சிலையைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
கோவில் பட்டாச்சாரியார் அதிர்ச்சி அடைந்து புகார் செய்ததன் பேரில், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் அந்தப் பெண்மணி. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சூத்திரப் பெண் கோவில் கருவறைக்குள் நுழைந்ததால் சாமி தீட்டுப்பட்டுவிட்டதாம்; தோஷம் கழிக்க வேண்டுமானால் சிறப்பு ஹோமம் நடத்தப்படவேண்டுமாம்.
தோஷம் - தீட்டுப்பட்டுவிட்டதால் இன்று திருக் கார்த்திகை சம்பந்தப்பட்ட சிறப்புப் பூஜைகள் தடை செய்யப்பட்டுள்ளன. நடை இழுத்துச் சாத்தப் பட்டுள்ளதாம்.
இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறக்க முடியாத ஞாயிறு
சென்னை பெரியார் திடலில் கடந்த 25 ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 9 மணிமுதல் இரவு 7 மணிவரை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் நடத்தப்பட்ட, ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மண முறிவு பெற்றோர், துணைவரை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான மன்றல் நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட பெருவெற்றி பெற்றது.
இணையர் தேடி வந்தவர்கள் அவர்களின் உற்றார் உறவினர் என்று அலை அலையாக வந்த காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி யைத் தந்தது.
ஜாதியை வைத்தும், மதத்தை வைத்தும் மக்கள் மத்தியில் குழப்பங்களை விதைப்போர், இலட்சியம், கொள்கை, கோட்பாடுகள் அற்றுப் போனோர் கடைசியில் ஜாதியைப் பிடித்துக் கரை ஏறலாமா என்று கனவு காண்கிறார்கள்.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஜாதி ஒழிப்புப் பிரச்சாரமும், செயல்பாடும் அதிகம் நடைபெற்ற மண் தந்தை பெரியார் போராடிய தமிழ் மண்ணாகும்.
பெயருக்குப் பின்னால் ஜாதிவாலை ஒட்டிக் கொள்ளாதது தமிழ்நாட்டில் மட்டும்தான்.
செங்கற்பட்டில் 1929 இல் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் தங்கள் பெயர் களுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த ஜாதிப் பட்டங்களைத் தூக்கி எறிவதாக அறிவித்தனர்.
இந்தியத் துணைக் கண்டத்தை எடுத்துக் கொண்டால் மார்க்சியம் பேசுபவர்கள்கூட பெயர் களுக்குப் பின்னால் ஜாதிவாலை ஒட்டிக் கொண் டுள்ளனர்.
ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஹிரேன் முகர்ஜி, சோம்நாத் சட்டர்ஜி, ஈ.கே. நாயனார் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
அதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுத் தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், ஜாதிப் பட்டங்களைப் போட்டுக் கொள்வதில்லை - காரணம் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் ஆழமாகச் செய்த பிரச்சாரத்தின் விளைவுதான்.
தமிழ்நாட்டில்கூட திராவிடர் கழகம் வேரூன்றி யுள்ள பகுதிகளில் ஜாதிச் சண்டைகள் வருவதில்லை.
இப்பொழுது தலித் - தலித் அல்லாதவர்கள் என்ற ஒரு மோசமான - மனித உரிமைக்கு எதிரான அரசியல் அமைப்பைக் கட்டப் பார்க்கின்றனர். அதில் ஒன்றுதான் தருமபுரி மாவட்டத்தில் அரங்கேற்றப் பட்டுள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டதாகும்.
இந்தக் காலகட்டத்தில் பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மன்றல் தேடுதல் முற்போக்குச் சிந்தனையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.
300 பேர்கள் வந்திருந்தனர் - தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அந்த நாளில் மட்டும் 25 பேர்கள் தங்கள் இணையர்களைத் தேடிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சாரம் ஒரு பக்கம் நடந்தாலும், இதுபோன்ற ஆக்க ரீதியான செயல் முறைகள் மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தவல்லதாகும்.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னையில் மட்டுமல்ல; மற்ற மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
இத்தகு திருமணங்களை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற அம்சமும் இதில் அடங்கியுள்ளது.
முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் இதற்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். தங்கள் வாய்ப்புக் கேற்ப பிரச்சாரமும் செய்யவேண்டும்.
தந்தை பெரியார் தம் பிரச்சாரத்தால் மகத்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லையா?
முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த இருபால் இளைஞர்களும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு உள்ளிட்ட திருமணங்களைச் செய்துகொள்வது என்று சூளுரை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!28-11-12
மரியாதை இல்லை!
பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.
(விடுதலை, 22.6.1973)
பெரியார் சுமரியாதை திருமண நிலையத்தின் சார்பில் மன்றல் 2012 விழா
ஜாதி மறுப்பு இணை தேடல் - மக்களின் அங்கீகாரம்!
மன்றல் விழாவை பேரா.அதிரடி க.அன்பழகன், பேரா. டெய்சி மணியம்மை ஆகியோர் தொகுத்து வழங்கினர். (25.11.2012)
சென்னை, நவ.28-சென்னை பெரியார் திடலில், ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மணமுறிவு பெற்றவர், இணையை இழந்தவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாபெரும் இணைதேடல் பெருவிழா நடைபெற்றது. இதில் 300 பேர் விண்ணப்பித் திருந்தனர். மாலையில் தமிழர் தலைவர் தலைமை யில் இரண்டு திருமணங்களும் நடைபெற்றது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் ஏராளமான ஜாதிமறுப்பு, மதமறுப்பு, காதல் திருமணங்களை நடத்தி வந்துள்ள நிலையில், இந்த தொடர் பணியின் பெரும் வீச்சாக, மன்றல் 2012 என்ற பெயரில் இந்த, ஜாதி மறுப்பு இணைதேடும் பெரு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி, கடந்த 25.11.2012 அன்று சென்னை, பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு மன்றல் நிகழ்ச்சி தொடங்கியது.
திட்டமிட்டபடி ஏற்பாடுகள்
பெரியார் திடலில் நுழைந்தவுடன் பதிவு செய்ய வருவோர்க்கு வரவேற்பும், விண்ணப்பம் வழங்கும் பகுதியும் அமைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, விண்ணப்பம் நிரப்புவதற்கு உதவி செய்ய, நிரப்பிய விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு தனி மய்யமும், குருதிப்பிரிவு பரிசோதனை, எடை சரிபார்த்தல், உயரம் பார்த்தல் போன்றவற்றிற்கு தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் நிரப்ப - பெரியார் மணியம்மை மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு இடத்திலும் யாரும் தடுமாறத வகையில் பதா கைகள் வைக்கப்பட்டு பதிவாளர்கள் பயனடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜாதி மறுப்புக்கு பெருகிய ஆதரவு
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை உரிய இடங் களில் வழங்க அய்ந்து மய்யங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. ஜாதி மறுப்பு, மதமறுப்பு, மணமுறிவு பெற்றோர், இணையை இழந்தவர் மாற்றுத்திறனாளிகள் என்று தனித்தனி பிரிவுகளில் பதிவு செய்தோர் வரிசைப்படி நின்று தங்கள் விண்ணப்பங்களை ஒப்படைத்தனர்.
இதில், ஜாதி மறுப்புக்கு நீண்ட வரிசை நின்றிருந்தது. பதிவு செய்தவர்களுடன் இரண்டு நபர்கள் அனுமதிக்கப் பட்டு, அவர்களுக்கு தனித்தனி அடையாள அட்டை அளிக்கப்பட்டிருந்தது. பதிவாளர்களுக்கு, பயன்படும்வகையில் கையேடு, எழுதுகோல், அவர் களின் கருத்தறியும் படிவம் (Feed back form) ஆகிய வையும், அவற்றை வைத்துக் கொள்வதற்கு ஒரு கோப்பும் (File) கொடுக்கப்பட்டது. அத்துடன் மன் றல் சிறப்பு வெளியிலாக 32 பக்க புத்தகம் ஒன்றும் கொடுக்கப்பட்டது.
மணமகள் - மணமகன் அறிமுகம்
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்அவர்களின் தலைமையில் மன்றல்-2012 தொடக்க விழா நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக் குமார், டாக்டர் பிறைநுதல் செல்வி மற்றும் திருமகள் இறையன், வழக்குரைஞர் அ.அருள் மொழி, முனைவர் அதிரடி க.அன்பழகன், டெய்சி மணியம்மை, பெரியார் சாக்ரடீசு ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
பிறகு, முனைவர் அதிரடி அன்ப ழகன், தளபதி, சென்னியப்பன் ஆகியோர் ஜாதி மறுப்பு, மதமறுப்பு, மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், இணைய இழந்தவர் என்ற தனித்தனி தொகுப்புகளிலிருந்து, பதிவாளர்களை அவர்களுக்கென்று அளிக்கப் பட்டிருந்த பதி வெண்களைக் கூறி அழைக்கும் பணியை ஒருங் கிணைத்தனர்.
அவர்களை அறிமுகப்படுத்தும் பணியினை வழக்குரைஞர் அ.அருள் மொழி, இறைவி, பேரா. டெய்சி மணியம்மை ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர். ஒவ்வொரு வரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டபோது, தங்க ளுக்குப் பொருத்தமானவரை குறித்துக் கொள்ளும் வசதியும், வாய்ப்பும், அப்படி தெரிவு செய்தவர் களின் எண்களை குறித்த இடத்தில் கொடுத்து தாங்கள் தெரிவு செய்தவர்கள் பற்றிய குறிப்புகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பை கொடுத்திருந் ததால், இடையில் சம்பந்தப்பட்டவர்களை சந் தித்து பேசி, நடைபெறுகின்ற நிகழ்ச்சிக்கு இடை யூறு ஏற்படுத்தும் போக்கு இல்லாமல், அறிமுக நிகழ்ச்சி தொடர்ந்தது.
இடையிடையே மன்றல் நிகழ்ச்சியின் வழி காட்டுதல்களை பதிவாளர்களுக்கு பிரின்சு என்னா ரெசு பெரியார் நினைவூட்டினார். மனவளப் பயிற்சி யாளர் அருள்வேல், அனைவருக்குமான மனவளப் பயிற்சியாகவும், குறிப்பாக கணவன் - மனைவிக் கான மனவளப் பயிற்சியாகவும் சில கருத்துகளை நகைச்சுவையாகவும் எடுத்துக் கூறினார்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் கருத்து
இணையை தேர்ந்தெடுக்க ஆர்வமுடன் பதிவு செய்து கொள்கின்றனர் மேலும் தங்களுக்கு ஏற்பட்ட அய்யங்களுக்கு விளக்கமும் பெறுகின்றனர்.
பெரியார் சுயமரிதைத் திருமண நிலையத்தின் மூலம் 5.4.2009 அன்று ஜாதி மறுப்புத்திருமணம் செய்துகொண்ட நந்தன் - தேன்மொழி இணையர் இருவரும் தங்களது குழந்தை தமிழிசையுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவர்களிடம், மன்றல் 2012 பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, நந்தன், தருமபுரியில் நடந்த கொடுமைகளுக்குப் பின் சமுதாயம் எப்படி நடக்க வேண்டும் என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவன் என்கிற முறையில், சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதை உணர்ந்து, அந்தப் பயனை இன்றைய இளைய சமூகமும் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
தேன்மொழி கருத்து கூறுகையில், இன்றைய இந்து மத சமூகத்தில் பெண்களுக்கு திருமணம் என்று வருகின்ற போது, ஏராளமான தடைகள் இருந்து வருகிறது. அது பெண்ணுரிமையை கேலிக் குள்ளாக்குகிறது. அதனால், நான் சுயமரியாதைத் திருமணத்தைத் தேர்ந்தெடுத்தேன். இப்போது சுகமாக வாழ்ந்து வருகிறேன் என்று கூறினார்.
இதழாளர்களின் கருத்து
இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தொடங்கப் பட்டது. இன்று ஒரு புரட்சியாக மாறியிருக்கிறது. ஜாதி அரசியல் செய்ய நினைக்கும் பிற்போக்கு வாதிகளுக்கு, திராவிடர் கழகம், அதனுடைய பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறது என்று இதழாளர் கோவி.லெனின் அவர்கள் தன்னுடைய கருத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
இவர் மன்றல் தொடர்பான பதிவு களை தனது முகநூலி லும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்த க்கது. அதேபோல், புலவர் ப.வெற்றியழகன், மலேசியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பார்வையா ளராக வந்து கலந்து கொண்ட, பவனேஷ்வரியும் மன்றலின் தேவை குறித்து தனது கருத்துகளை பதிவு செய்தார்.
பதிவாளரின் கருத்து
மன்றல் 2012 நிகழ்ச்சி பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருந்தால் தமிழ்நாட்டில் என்றோ ஜாதி உணர்ச்சி ஒழிந்து போயிருக்கும். இப்போதும் பரவாயில்லை. இந்த மன்றல் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடை பெற்றால் இன்னும் பத்தாண்டுகளில் ஜாதி ஒழிந்து போய்விடும். இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திராவிடர் கழகத்தின் தலைவருக்கு முதலில் நான் நன்றி செலுத்துகிறேன் என்று பழ.தனசேகரன் உணர்ச்சி பொங்க கூறினார்.
ஜெசிந்தா விடுத்த அறை கூவல்
மணமகனை தேர்ந்தெடுக்க வந்த ஜெசிந்தா தனது மகன் மற்றும் தாயாருடன்
தனது பத்து வயது மகனுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஜெசிந்தா மேடையேறி அறிமுகப் படுத்தும் பொழுது ஆணாதிக்கச் சிந்தனைக்கு சவுக்கடி கொடுத்தது போல ஒரு கருத்தை தெரி வித்து ஒட்டுமொத்த அரங்கையும் தன்பால் ஈர்த்துக்கொண்டார். அதாவது, பெண்கள், ஆண் களை, அவர்களுடைய குழந்தைகளை எங்கள் குழந்தைகள் போல பார்த்துக்கொள்வதாக தாயுள்ளத்தோடு கூறுகிறோம். ஆனால், ஆண்கள், எங்களை குழந்தையோடு ஏற்றுக்கொள்வதாக ஏன் கூற மாட்டேன் என்கிறீர்கள்.
இணையரைத் தேர்ந்தெடுக்க வந்த ஜெகதீஸ்
நாங்களும் வாழ வேண்டாமா? என்று கூறியவுடன் அரங்கத்தில் பரபரப்பும், அதனூடே அந்த தாயுள்ளத்தை அங்கீ கரித்ததற்கு அடையாளமாக பலத்த கரவொலியும் எழுந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பா கவே, மனைவியை இழந்து இரண்டு குழந்தை களுக்கு தந்தையாக இருக்கக்கூடிய ஜெகதீஸ் என்பவர் மேடையேறி ஜெசிந்தா விரும்பினால், அவரை இங்கேயே மணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து வழக்குரைஞர்களின் ஆலோசனை பெறப்பட்டு, நிகழ்ச்சியின் முடிவில் தமிழர் தலைவரிடம் இரு வரும் நேரில் சென்று தாங்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துக் கொண்டனர்.
அது மட்டுமா?
ஜெசிந்தா - ஜெகதீஸ் இருவருக்கு மட்டுமல்ல, பதிவுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டி ருந்ததால், இந்தப் பணி மூலம் அறிமுகம் முடிய முடிய வந்த விண்ணப்பங்கள் உடனுக்குடன் கணினியில் அந்தந்த வரிசைப்படி பதிவு செய்யப்பட் டிருந்தது. இதனால், அறிமுக நிகழ்ச்சி முடிந்தவுடன், முன்புபோலவே அனைவரும் வரிசையில் நின்று அவரவர் குறித்து வைத்துள்ள விருப்ப எண்களுக் கான தகவல்களை உடனுக்குடன் பெற்றுச் சென்று அவர்களை தொடர்பு கொண்டு பேசியதில் 25 பேர்களுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மற்றவர் களும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
பார்ப்பனர் ஒருவர் செய்து கொண்ட ஜாதி மறுப்புத் திருமணம்
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு தயாராக உள்ளதாக பார்ப்பனர்கள் சிலரும் விண்ணப்பித்திருந்தனர். முன்பே விண்ணப்பிருந்த, வெங்கடசுப்பிரமணியன் என்னும் பார்ப்பனர் தமிழ்ச்செல்வி என்பவரை தமிழர் தலைவரின் தலைமையில் ஜாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, பத்து விழுக்காடு அளவுக்கு நல்ல உடல் நலம் உள்ள வர்கள் மாற்றுத்திறனாளிகளை ஏற்றுக்கொள் வதற்கு தயாராக இருந்தனர். பலர் மதமாற்றத்திற்கும் தயாராக இருந்தனர்.
தமிழர் தலைவரின் பாராட்டுரை
மன்றலின் இறுதி நிகழ்ச்சியாக அறிவரசுவுக்கும் மதமறுப்பில் பிறந்த ஜான்சிராணிக்கும், வெங்கட சுப்பிரமணியன் என்ற பார்ப்பனருக்கும் - பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ஆகிய இரண்டு ஜோடிகளுக்கு சுயமரியாதைத் திருமண முறையில் தமிழர் தலைவர் தலைமையேற்று திருமணம் செய்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், இது ஒரு தொடக்கம், இதுபோல் மன்றல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய, மீனாட்சி, மணிமேகலை, தமிழ்வாணன், தமிழ்ச்செல்வன், புருனோ, உடுமலை வடிவேல், மணியம்மை, மரகதமணி, விமல், விஜய், சந்திப்குமார், மதன்குமார், செல்வக்குமார், பூமிநாதன், சிறீதர், கலையரசன், சுகந்தி, வேலவன், செந்தில்குமார், பார்த்திபன், கார்த்திக், அருள்ஜோதி, பாஸ்கர், வழக்குரைஞர் சிவஞானம், பழனிகுமார், பிரபாகரன், பாலகிருஷ்ணன், சங்கர், கதிரேசன், மாதவன், மாட்சி, செல்வி, அன்புச்செல்வன், பழனி, சந்திரகோபால், சுரேஷ், மரகதமணி, அய்சக், விடுதலை நாராயணன், சுகுமார், விடுதலை பிரபாகரன், மேலாளர் சரவணன் (விடுதலை), ஓவியச்செல்வன், அம்பேத்கர், விடுதலை அச்சகப் பணியாளர்கள்,
சைதை செல்வம், பொன் னேரி எழிலன், இசையின்பன், செந்தில் மற்றும் தளபதி பாண்டியன், கோவி.கோபால், ராமு, வி.சி.வில்வம், ராதாமன்றம் செந்தில், இளம் இதழாளர் பயிற்சியாளர்கள்: இராவணன், செல்வக் குமார், பிரபாகரன், வீரன், திருச்சி ஆசிரியர் பயிற்சி நிறுவனப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார் பிரின்சு என்னாரரெசு பெரியார். திட்டமிட்டபடி மன்றல் 2012 மாபெரும் வெற்றி அடைந்தற்கான காரணம், தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் திட்டமிடுதலும் செயலாக்கமும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.(விடுதலை,18.1.1951)
Post a Comment