நரகாசுரப் படுகொலை ஓர் அரிய ஆராய்ச்சி நூல்
{நரகாசுரப் படுகொலை ஓர் அரிய ஆராய்ச்சி
நூல் 1947இல் முதல் பதிப்பாக வெளிவந்தது. இப்பொழுது மீண்டும் இந்நூல்
திராவிடர் கழகத்தின் சார்பாக வெளியிடப்படுகிறது.
இந்நூலுக்குத் தந்தை பெரியார் அளித்த
முகவுரையும், ஆக்கயோன் முன்னுரையும் இங்கே தரப்படுகின்றன. நன்கொடை ரூ.25
மட்டும், சென்னை பெரியார் திடலிலும் திருச்சி - புத்தூர் பெரியார்
மாளிகையிலும் கிடைக்கும்.
- ஆர்}
நரகாசுரப் படுகொலை என்னும்
இப்புத்தகத்திற்கு, நான் முகவுரை எழுத வேண்டும் என்று, எனது நண்பர் ஒருவர்
வேண்டிக்கொண்டார். மகிழ்ச்சியோடு சம்மதித்து எழுதுகிறேன்.
நரகாசுரன் என்பதாக ஒருவன் இருந்தானோ,
இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை, பொய்யோ, மெய்யோ
என்பதும்பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து,
ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு ஆளாக்கி, தங்கள்
உயர்வுக்கும், நமது இழிவுக்கும், தங்கள் வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும்,
அவர்கள் நலத்திற்கும், நமது கேட்டிற்கும், அவர்கள் சமர்த்துக்கும், நம்
முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும்,
கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே
என்பதற்காகவே, நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்களுக்கு
உணர்த்துவதற்கு ஆக பொதுவாகவே, ஆரிய சாஸ்திர புராண இதிகாசங் களின்
ஆபாசங்களையும், காட்டு மிராண்டித் தனங்களையும், விளக்கும் தொண்டை எனது
வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன்.
அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத்திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார்கள்
என்பதாகக் கருதியே, எழுதச் சம்மதித்தேன்.
திராவிட மக்கள் அருள் கூர்ந்து, நரகாசுரன்
வதைப் புராணத்தை, சற்று பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். கதையின்
சுருக்கம் என்னவென்றால்; நரகாசுரன் என்கிற அசுரன், அயோக்கியனாக இருந்தான்.
கடவுளால் கொல்லப் பட்டான். பொதுமக்கள் அவனுடைய சாவுக்காக, மகிழ்ந்து
கொண்டாட வேண்டும் என்பதேயாகும்;
ஆனால், இதற்காக சித்திரித்த கதையின் தன்மை
எப்படிப்பட்டது? அதன் உள் கருத்து எப்படிப்பட்டதாய் இருக்கும்? இந்த 20-ம்
நூற்றாண்டாகிய விஞ்ஞான காலத்தில், இதை நம்பி இக்கருத்துக்கு ஆளாகலாமா?
என்பதைச் சிந்திக்கத் தான், இந்த நரகாசுரப் படுகொலை என்கின்ற புத்தகம்,
அருப்புக்கோட்டை தோழர் ஆ.ளு.இராமசாமி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த
மூல கதைக்கு, நரகாசுரன் தேவையே இல்லை என்றாலும், திராவிடர்களை
இழிவுபடுத்து வதற்கு என்று, எழுதப் புகுந்த கற்பனை யில், ஆரியர்களது நிலை,
தன்மை ஆகியவை எவ்வளவு இழிவாகக் கூடியதாயிருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்
படாமல், இக்காரியத்தில் புகுந்திருக்கிறார்கள்.
இதற்கு ஒரு சமாதானம் என்னவாக
இருக்குமென்றால், இக்கதை தொகுத்த காலத்தில், ஆரியர்கள், அவ்வளவு
காட்டுமிராண்டிகளாகவும், அவ்வளவு மானாவமானக் கவலையற்ற மிருகவாழ்வு
வாழ்ந்தவர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதாகக் கொள்ளலாம். என்றாலும்,
இக்காலத்திலுள்ள ஆரியர்களும்; அதாவது, எவ்வளவோ விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு,
மான உணர்ச்சி கொண்ட இக்கால ஆரியர்களும், இந்த, இது போன்ற ஆபாசக் கதைகளைக்
காப்பாற்றி பிரசாரம் செய்து, மக்களையும் அவற்றை நம்பி நடக்கும்படி
செய்கிறார்கள் என்றால், நம் மக்கள் நிலை அதைவிட காட்டு மிராண்டித்
தனமானதும், மான அவமான லட்சியமற்றதும், மிருகப் பிராயத்திலிருப் பதும்,
அல்லது அப்படியெல்லாம் இருப்ப தாக அவர்கள் கருதி இருப்பதாவது இருக்கலாம்.
எப்படி இருந்தாலும், இனியாவது
பகுத்தறிவோடு, மான உணர்ச்சியோடு, சிந்திக்க வேண்டியது திராவிடர் கடமை
யாகும். ஆரியக் கற்பனையாகிய இக்கதை யில் உள்ள முக்கிய சில குறிப்புகளை
மாத்திரம் குறிப்பிடுகிறேன்.
1. இரணியாட்சன் என்கிற இராக் கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒளிந்து கொண்டது.
2. மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி
உருவம் எடுத்து, சமுத்திரத் திற்குள் புகுந்து, இராக்கதனைக் கொன்று, பூமியை
எடுத்துக் கொண்டு வந்து விரித்துவிட்டது.
3. இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் மோகித்துக் கலவி செய்தது.
4. இக்கலவியின் பயனாய் ஒரு பிள்ளை
பிறந்து, அப்பிள்ளை ஓர் அசுரனாக ஆகி, ஒரு இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி,
தேவர்களுக்கு (ஆரியர் களுக்கு, தன் தாய் தந்தையான கடவுளுக்கும்) கேடு
செய்தது.
5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவுளும் கடவுள் மனைவியும் கொன்றது.
6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ்வது.
7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளிக் கொண்டாட்டம்.
என்பனவாகிய இந்த ஏழு விஷயங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே, இப்புத்தகம் எழுதியவருடைய ஆவல்.
ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப்
புத்தகத்தின் உதவியைக் கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி
கொண்டாட வேண்டியது அவசியம் என்றுபட்டால் அந்தப்படி செய்யுங்கள். அதுவே
ஆசிரியருக்கு மக்கள் கைம்மாறு ஆகும்.
இப்புத்தகம் எழுதியதற்காக தோழர் ஆ.ளு.இராமசாமிக்கு திராவிடர் சார்பாக எனது நன்றி உரித்தாகுக.
-------------------- ஈ.வெ.ராமசாமி
*************************************************************************************
ஆக்கியோன் முன்னுரை
சென்ற ஆண்டு தீபாவளியன்று, அருப்புக்
கோட்டையில் மாபெரும் கருஞ்சட்டைப்படை ஊர்வலமொன்று நடை பெற்றது.
ஊர்வலத்திற்குப் பின், பிரம்மாண்டமான தீபாவளி எதிர்ப்பு கூட்டம் கூடியது.
அக்கூட்டத்தில், தீபாவளிப் பண்டிகை திராவிடர் பண்டிகையா? என்னும்
பொருள்பற்றி, நான், எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பேசினேன். கூட்டம் முடிந்த
பிறகு, சில நண்பர்கள், நான் பேசிய பேச்சுக்களை, ஒரு புத்தக வடிவமாக
வெளியிட்டால், மிகப் பயனுடையதாக இருக்குமென்று சொன்னார்கள்.
அவர்களுடைய ஆலோசனைப்படியே, செய்வதாக
ஒப்புக்கொண்டேன். அவ்வாறு, நான் ஒப்புக் கொண்டதே, இந்நூல் தோன்றுவதற்குக்
காரணமாகும்; நான், அன்று பேசிய பேச்சுக்களை சிற்சில இடங்களில்
சுருக்கியும், விளக்கியும், தக்கன புகுத்தியும், தகாதன விலக்கியும்,
இந்நூலில் எழுதியுள்ளேன்.
நரகாசுரப் படுகொலை என்னும், இந்த நூலை எவ்வளவு பெரிய நூலாக வேண்டுமானாலும் வெளியிடலாம்.
புராண இதிகாசங்களில் வரும்,
புரட்டுகளையும், ஆரியப் பித்தலாட்டங்களையும், ஆதார ஆராய்ச்சி பூர்வமாக
விளக்குவதென்றால், விஷயங்கள் அடுக்கடுக்காக வளர்ந்து கொண்டே போகின்றன.
அவ்வாறு எழுதிக்கொண்டே போவதென்றால்
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்ற இலக்கணத்தைக் கடந்து விடுவதோடு
திராவிட மக்களின் பொருளாதார நிலைமை, எல்லாரையும் வாங்கிப்படிக்க இயலாததாக
ஆக்கிவிடும். எனவே, எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி
எழுதியுள்ளேன்.
நான் இந்த நூலை எழுதி முடிப்பதற்கு
ஆராய்ச்சிப் பெருந்துணையாக, பல நூற்களை கால வரையறையின்றிக் கொடுத்துதவிய,
அருப்புக்கோட்டை சாலியர் பிரச்சாரப் பயிற்சிக் கழகப் புத்தக சாலையாருக்கு,
நான் பெருங்கடன்பட்டுள்ளேன்.
இந்நூலுக்கு நன்கொடையும் கடனுதவியும் செய்த என் நண்பர்களுக்கு நன்றி.
இந்நூலை அச்சிட்டு வெளியிட முன் வந்த
அருப்புக்கோட்டை திராவிடர் கழகத் தலைவர், தோழர். சிவ. சண்முகசுந்தரன்
அவர்களை, நான் என்றும் மறக்க முடியாது.
தீபாவளிக்கு முன்னரே, இந்நூலை
வெளியிடவேண்டுமென்று, நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க விரைந்து அச்சிட்டுக்
கொடுத்துதவிய நாடார் குல மித்திரன் அச்சகத்தாருக்கும் அங்குள்ள தொழிலாள
நண்பர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக.
தீபாவளியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய விரும்பும் பேச்சாளர்களுக்கு, இந்நூல் ஓரளவு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.
25-10-1947
இங்ஙனம்,
அருப்புக்கோட்டை ஆ.ளு. இராமசாமி
அருப்புக்கோட்டை ஆ.ளு. இராமசாமி
14 comments:
தீபாவளி
இழிவும் மடமையும் ஒன்றாய்க் கலந்து
எந்தமிழ் இனத்தை வீழ்த்திய கதைகள்!
தன்னேரில்லாப் பெருமையைத் தாங்கிய
தமிழர் இனத்தை வீழ்த்திய நஞ்சு!
ஆரியக் கேடர்கள் காட்டிய நெறிகளின்
அறியாக் குருடர்கள் வீழ்ந்த படுகுழி!
நாடும் மொழியும் இனத்தை மாய்த்திட
நஞ்சினுங் கொடியோர் காட்டிய கொடுநெறி!
பூமிப் பந்தினைப் பாயாய்ச் சுருட்டி
புகுந்தான் அசுரன் ஆழியினுள்ளே
பன்றியின் உருவில் விட்ணு பாய்ந்தான்;
பாயாய்க் கிடந்த பூமியை மீட்டான்
பூமியும் பன்றியும் பொழுதெலாம் புணர்ந்து - ஒரு
புதல்வனை ஈன்றனர்; அவன்தான் நரகன்
தேவர்கள் என்னும் தீயரை அழிக்க
தீரன்நரகன் களம்பல கண்டான்
வஞ்சகத்தாலே நரகனை வீழ்த்தி
வாட்டிய நாள்தாம் தீபாவளியாம்!
கேட்டவர் காதில் பூவினைச் சுற்றும்
கேடர்கள் கூறிய பொய்மைக் கதைகள்!
ஆரிய அரவம் தீண்டிய நஞ்சிது;
அருந்தமிழ் தோழனே! நெஞ்சினில் கொள்க!
பூமியின் மீதே தவழும் கடல்நீர் - அசுரன்
பூமியைச் சுருட்டி; பின்; ஒளிதலும் எங்கே?
பன்றியின் அழகில் மயங்கிய பூமி - ஆரிய பண்பால்
உயர்ந்தாள்; கலந்தால்; நரகனை ஈன்றாள்!
பாயாய் சுருட்டப் பூமிப்பந்து - பத்தமடையின்
பாய் போல் உளதோ?
ஆரியப் புளுகை அளந்தே கணிக்க
அகிலம் தேடினும் கோல்தாம் (அளவுகோல்) இல்லை!
சாதி மதமும், சாத்திரப் பிணிகள்
சுற்றிய இழிவின் கழிவாம் கடவுள்!
வேதியம் விதைத்த விதையின் விளைவே;
விதியினை நம்பி மதியழிந்திருந்தோம்!
அருந்தமிழ் இனத்தை ஆயிரம் கூறாய் சாதிப் பிளவாய்
ஆக்கிய கொடுமை; ஆரியக் கயமை!
ஆரிய நெறிகள் மண்ணிற் புதைந்து
அழியும் நாளே தமிழரின் திருநாள்!
தென்னவர் இனத்தைத் தழுவிய கேடு
தீபாவளியே! தீதெனக் கொள்க!
திருவிடம் வாழ; தென்மொழி செழிக்க
தேற்றுக நன்னெறி; பெரியார் நெறியே!
- கணியூர் சாமினாதன்
அமெரிக்காவில் குடியேறிய பார்ப்பனீயம்!
ருசியாவில் குடியேறிய பார்ப்பனீயம் அதனைக் குப்புறத் தள்ளியதுபோல அமெரிக்காவில் இப்பொழுது பார்ப்பனீயம் படம் எடுத்து ஆடப் போகிறது.
உலக அமைதிக்காக 1984 அக்டோபர் முதல் இரண்டு தேதிகளில் ருசியாவில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து 11 பார்ப்பனர்கள் அங்கு சென்றனர்.
இந்தியாவிலிருந்து சென்ற பார்ப்பனர் கள் உலக அமைதிக்கு ஒரே ஒரு தீர்வு இருக்கிறது. அது என்ன தெரியுமா? ஆன்மிகம் ஆன்மிகம் தான் என்றார் களே பார்க்கலாம். ருசியாவில் உடனடியாக என்ன செய்ய வேண்டுமாம்? உடனடியாக ருசியாவில் ஆன்மிகப் பிரச்சாரத்தை முடுக்கி விட வேண்டுமாம். இதுகுறித்து புனித அறிவுரை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்கூட தலைப்புக் கொடுத்த துண்டு. (13.10.1984).
விளைவு ருசியாவில் ஆன்மிக வெள்ளம் கரை புரண்டது. மூடிக் கிடந்து உருக்குலைந்து போன சர்ச்சுகள் எல்லாம் திறக்கப்பட்டன. கோர்பச்சேவ் அய்யராகி சிகப்புக் கம்யூனிஸ்டு நாட்டை ஆன்மிகக் காவியாக்கி கடைசியில் நந்தவனத்து ஆண்டியாகப் போட்டுடைத்தார். (Pervosthroyka). இப்பொழுது அமெரிக்காவுக்கு அந்தக் கேடு கெட்டதனம் தொற்றும் போல தெரிகிறது.
அமெரிக்காவில் உள்ள மேலவையான செனட் சபை தொடங்கப்படும் பொழுது இந்து மதத்தில் பிரார்த்தனையாக ரிக் வேதம், உப நிஷத், பகவத் கீதை இதிலிருந்து சில பகுதிகள் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைப் பாடுவதற்கும் ஆசாமி ஒருவர் ஏற்பாடும் செய்யப்பட்டார்; ராஜன்சேட் என்ற சமஸ்கிருத பண்டிதர் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.6.2007).
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அப்பொழுதே இது குறித்து அமெரிக்காவில் இருந்த தமிழர் களுக்கு ஓர் எச்சரிக்கையை அறிக்கை மூலம் தெரிவித்தார் (27.6.2007).
அமெரிக்கா வாழ் இந்தியர்களில் எவரும் இந்துக்கள் மட்டும் இல்லை. தமிழர் முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர் என்று பல்வேறு மதத்தவரும் குடிமக்களாக உள்ள நிலையில், பார்ப்பனீய மதமான இந்து மதத்தின் வேதம், உபநிஷத், கீதை இவைகளை செனட் தொடங்கும்போது பாடுவது ஏற்படையதல்ல.
அமெரிக்கா வாழ் தமிழர்கள், தமிழர் அமைப்புகள், ஏனைய மதத்தவர்கள் முயற்சிகளைத் தடுத்து பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டு ஊடுருவல்களை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் (27.6.2007).
இந்தப் பழைய சங்கதிகள் எல்லாம் இப்பொழுது எதற்கு? - சிலர் கேட்கக் கூடும் - காரணம் இல்லாமலா? இதோ இப்பொழுது இணையதளம் மூலம் கிடைத்திருக்கும் ஒரு செய்தி.
அமெரிக்காவின் வாசிங்டன் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளவர் துளசி கப்பார்ட் (வயது 31) என்ற இந்து மதப் பெண்மணி. இவர் நாடாளுமன்றத்தில் கீதையின் பேரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள இருக்கிறார் என்பதுதான் அந்தச் செய்தி.
(பெண்களைப்பற்றி கீதை என்ன சொன்னது என்று அந்தப் பெண் மணிக்குத் தெரியுமா? பெண்கள் என்றால் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறுகிறதே!)
அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் இதற்காகப் பாராட்டுகளையும், வாழ்த்துக் களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் அந்த இணைய தளச் செய்தி. இரண்டாவது முறையாக பெரு வெற்றி பெற்று இருக்கும் ஒபாமா விழிப்புடன் இருக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற போது மதச் சார்பற்றவர்களுக்கு (Secularists) நன்றி தெரிவித்து கொண்டார். முதன் முதலில் இப்படி நன்றி தெரிவித் தவர் ஒபாமாவே!
அப்படி இருக்கும் பொழுது பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் கற்பிக்கும் கீதை மீது பதவிப் பிரமாணம் எடுப்பதை அனும திக்கக் கூடாது. ஆரியம் ஒரு நடமாடும் நாசம் அதனிடம் வேண்டாமே பாசம்!12-11-2012
மல்லையா!
அய்யா மல்லையா! கருநாடகத்தில் உடுப்பி யருகே விநாயகர் கோயி லில் உள்ள சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்காக தங்கத்தை நன்கொடை யாக வழங்கினீர்கள் (கடவுளுக்கே அல்வாவா?)
தட்சண கன்னடா வில் சுப்பிரமணியன் கோயில் கதவுக்கு தங்க முலாம் பூசுவதற்காக ரூபாய் 80 லட்சம் நன்கொடை வழங் கிய வள்ளல் நீங்கள்! (ஆகா எப்படிப்பட்ட தங்கமான மனிதர்!) இதுகூட இரண் டாவது தவணைதான்! இதற்கு முன்பு 12 ஆண்டு களுக்கு முன்பே இதே கோயிலுக்குக் கணிச மாக வாரி வழங்கினீர்கள் (ஆகா, என்னே இறைப் பற்று!)
ஆமாம் இவ்வளவு செய்கிறீர்களே. அந்த இறைப்பற்று மாந்தப் பற்றாக ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுக்காவது மலரக் கூடாதா?
நீங்கள் நடத்தும் கிங் பிஷர் விமான நிறுவனத்தில் பணியாளர்களாகிய எங்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் கொடுக்கவில் லையே ஏன்? ஒரு பொறி யாளரின் மனைவி தற் கொலைகூட செய்து கொண்டாரே - அப்பொ ழுதுகூட உங்கள் பாழாய்ப் போன மனம் இரங்க வில்லையே!
ஒருக்கால் கடவுள் போன்ற கல்லுக்குதான் மனம் கசிந்து உருகுமோ! அதனால்தான் மரத்துக்கு (கோயில் கதவுக்கு) தங்க முலாம் பூச ரூ.80 லட்சம் ரூபாய் கொட்டி அழுதீர் களோ
இந்தப் பக்தியின் யோக்கியதை இதுதானோ! தெய்வத்துக்கு உள்ளபடியே சக்தியும், கருணையும் இருந்திருந்தால், உங்க ளுக்கு நல்ல புத்தி கொடுத் திருக்குமே!
அது என்ன செய்யும்! எந்தச் சிற்பியோ தன்கைத் திறனைக் காட்டி செதுக்கி வைத்த பொம்மை அதற்கு என்ன தெரியும்?
என்னமோ நீங்கள் நடத்தும் கிங் பிஷர் விமான நிறுவனம் நட்டத்தில் ஓடுகிறதாம்!
என்ன கதை அளக் கிறீர்கள்? அய்.பி.எல். கிரிக்கெட் குழுவை கோடிக் கணக்கில் கொட்டி உங் களால் வாங்க முடிகிறது - அந்தப் பணம் எல்லாம் எங்கிருந்து குதித்தது?
இந்தப் பக்தி விளை யாட்டு எல்லாம் எங்களிடம் வேண்டாம்! நாங்கள் உழைத் திருக்கிறோம். அதற்கான ஊதியத்தை ஒழுங்காகக் கொடு! இல்லை என்றால் விமானம் போல் உங்கள் மானமும் பறந்து போய் விடும் - எச்சரிக்கை!
இப்படிக்கு கிங்பிஷர் விமான ஊழியர்கள்
- மயிலாடன் -
12-11-2012
மூத்த பத்திரிகையாளர் என்ன சொல்கிறார்?
நம் நாட்டில் அரசியல் தலைமை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில், பதினெட்டு வயதினருக்கு வாக்குரிமை வந்துள்ளது. இதன் மூலம், நம் அரசியலில் பெரிய மாற்றம் உருவாக வழி ஏற்பட்டுள்ளது. கேஜ்ரிவால் போன்றவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். இளைஞர்களை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்க முயற்சிக்கின்றனர்.
ஊழல் என்ற ஒற்றைப் பிரச்சினையை மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள். சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளை ஊழல் கட்சிகள் என்று சொல்ல முடியாது. நரேந்திர மோடி, நிதீஷ்குமார், நவீன் பட்நாயக் ஆகியோர்மீது பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. எனவே ஊழலை மட்டுமே பேசி, அரசியல் செய்ய முடியாது.
கல்வி, வேலை வாய்ப்பு, இடஒதுக்கீடு, உணவு, சுகாதாரம் என ஏராளமான மக்கள் பிரச்சினைகள் உள்ளன. அதுபற்றி கேஜ்ரிவால் வாய் திறக்கவே இல்லை. அப்பிரச்சினைகளில் அவர்களின் பார்வை, நிலைப்பாடு என்ன என்பதைச் சொல்லாமல் அவரால் அரசியல் செய்ய முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரும், தி ஹிண்டு நாளிதழின் ரீடர்ஸ் எடிட்டருமான ஏ.எஸ். பன்னீர்செல்வம்.
- ஏ.எஸ். பன்னீர்செல்வம்
இந்தியப் பண்டிகைகளும் மின் பற்றாக்குறையும்
முன்னுரை
உலக நாடுகளில் பண்டிகை கொண்டாடுவதற்கு பெரும்பாலும் அடிப்படையான காரணங்களாக விளங்குபவை பருவகால மாற்றங்கள், வேளாண்மை வளர்ச்சி, ஒரு மனிதன் வாழ்வில் நடைபெறும், பிறப்பு, பருவம் அடைதல், திருமணம், மக்கட்பேறு, இறப்பு முதலியனவும், ஆற்றில் தண்ணீர் திறந்து விடுதல் ஆகும் என்று கூறலாம்.
மின் விளக்குகளுடன் கோவில் கோபுரங்கள்
ஆனால் இந்து மதத்தில் ஏதாவது ஒரு யுத்தத்தில் ஒரு அரசன் வெற்றி பெற்றால், தோற்றவனின் மரணத்தை பெரிய பண்டிகையாக கொண்டாடப்படு கின்றது. அதற்கு இந்த மதசார்பற்ற அரசுகள் விடு முறையும் அறிவிக்கின்றன. தனியார் நிறுவனங்கள் விடுமுறை விடுவதில்லை. இதனை, நாகேஷ் சவுத்திரி என்ற ஆய்வாளர் கண்டறிந்து கூறியுள்ளார். (இதனை விடுதலை மலரில் காண்க). இத்தகைய பண்டிகைகளின் வரிசையில், விஜயதசமி, இராம்லீலா, தீபாவளியும் அடங்கும்.
மேலும், தற்போது இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகளை கொண்டாடும் வகையில், ஜாலியன் வாலாபாக்கில் சுதந்திர வீரர்களை கொன்று குவித்த டயர் என்பவனை விட கொடியவனான இராஜபக்சே தமிழர் பகுதியில் வெற்றித்தூண் நடுவதும் இதில் அடங்கும். வாழ்வுரிமை கேட்ட தமிழர்களை, தீவிரவாதிகளாகவும், அரக்கர் களாகவும் சித்திரித்து, பின்னர் தர்மத்தின் பெயரால் அழித்து பண்டிகைகளையும், வெற்றித்தூண்கள் அமைப் பதும் ஆதிக்கவாதிகளின் இயல்பு ஆகும்.
இவ்வாறு யுத்தங்களில் வெற்றிப் பெற்றதற்கு மதப் பண்டிகைகளாகக் கொண்டாடுவது, வக்கிர உணர்வுகளை, பிற்போக்கு மனப்போக்கினை வெளிப்படுத்துகின்றன. இது அரசியல் காரணங்களையும், ஆதிக்க சக்திகளின் வன்செயல் களையும், அப்பாவி மக்களின் அடிமைத்தனத்தையும் ஊக்கப்படுத்துவதாகவே அமைகின்றது என்பதனை அப்பாவி மக்கள் உணர வேண்டும்.
இதைத்தவிர, பாடுபட்ட அப்பாவி, ஏழை மக்களின் சேமிப்பு/செல்வம் பயனற்ற பண்டிகைளின்போது ஆடம்பரச் செலவுகள் செய்யப்பட்டு வீணடிக்கப்படு கின்றது. இதுவே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தந்த அறிவுரை. கடுமையான மின் பற்றாக்குறை நில வும்போது ஆடம்பரமாக தீபாவளியைக் கொண்டாடுவ தினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள் கீழே விவரிக்கப் படுகின்றது.
தீபாவளியும் ஆடரம்பரமும்
பட்டாசு தயாரிக்கும் சிறுமி, வருமானத்தில் ஒரு பகுதியை வெடித்து கரியாக்கும் பொதுமக்கள்
ஒரே ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த நரகாசுரனைக் கொல்வதற்காக கிருஷ்ணபரமாத்மா, தனது மனைவி சத்யபாமாவுடன் புறப்படுகிறான். மனைவி சத்யபாமாவின் உதவியால் கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை கொன்ற தாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு எங்கேயோ, எப்போதோ, எந்த கிராமத்திலோ வாழ்ந்த நரகாசுரனை கொன்ற கிருஷ்ண பரமாத்மாவின் வீரத்தையும், தீரத்தையும் சிறப்பாக, தீபாவளியாக கொண்டாடுகிறோம்.
தீபாவளி அன்று எண்ணெய் குளியலும், புத்தாடை அணிதல், இனிப்புகள் உண்ணுதல், பட்டாசுகள் வெடித்தலும் நடைபெறுகின்றன. இது உலக அளவில் இந்தியர்களால் கொண்டாடப்படுகின்றது. நரகாசுரனைக் கொன்ற சத்யபாமா முதல் இந்தப் பண்டிகையை அமெரிக்காவில் இந்தியர்களுடன் குடியரசுத் தலைவர் ஒபாமா வரை கொண்டாடியுள்ளார்கள்.
கிருஷ்ண பரமாத்மாவும். மகாத்மா காந்தியும்
மின் விளக்குகளுடன் கோவில் கோபுரங்கள்
ஒரே ஒரு கிராமத்தில் வாழ்ந்த அசுரனை கொன்ற கிருஷ்ணபரமாத்மா வாழ்ந்த இந்தியா பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காலம் அடிமைப்பட்டு இருந்தது. இந்தியர்களுக்கு விடுதலை வாங்கித் தர, இந்த கிருஷ்ண பரமாத்மாவால் முடியவில்லை. ஆனால் குஜராத்தில் தோன்றிய மகாத்மா காந்தி கடைசி அன்னியரான ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்று தந்தார்.
இவ்வாறு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், சுமார் 36 கோடி மக்களுக்கும், மகாத்மா காந்தி பெற்று தந்தது அன்று கிருஷ்ண பரமாத்மா செய்த வீரச் செயலை விட பன்மடங்கு பெரியது என்பது எளிதில் புலப்படும்.
1947இல், ஆகஸ்ட் 15இல் 36 கோடி மக்களுக்கு விடுதலை தந்த மகாத்மாவுக்கு 1948இல் (5 மாதங்களில்) ஒரு மதவெறி பிடித்த இந்துவால் தரப்பட்டதோ ஒரு துப்பாக்கிக் குண்டு. (இதுதான் இந்துத்துவா தந்த பரிசு!) ஆனால் ஒரு கிராமத்தில் வாழ்ந்த நரகாசுரனை கொன்றதற்கு கிடைத்ததோ தீபாவளிக் கொண்டாட்டம்.
மின் விளக்குகளுடன் கடவுளர் உருவம்
உலக அளவில் இது இந்தியர் மனிதாபிமானம் கொண்ட தியாகம் செய்த தலைவர்களை விட, தங்களை அடிமைப்படுத்தும் வன் முறையாளர்களை / ஆதிக்கவாதிகளையே பெரிதும் போற்றுகிறார்கள் என்பதனை தெரிவிக்கின்றது. ஆரியர் களையும், மத மூட நம்பிக்கைகளையும் ஒரு சேர எதிர்த்துப் போராடிய, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், போதித்த பகுத்தறிவு கொள்கை களே இந்தியர்களை சரியான பாதையில் பயணிக்க பெரிதும் உதவும்.
பண்டிகைகளால் ஏற்படும் கேடு
1) தமிழகத்தில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை அதிகம். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்னவென்றால், ஒரு மாநிலத்தில் செல்வ செழிப்பு இருந்தால்தான் கோவில்கள் தோன்றும். மேற்கு வங்கத்தில் பெரிய கோவில் கட்டும் அளவிற்கு செல்வச் செழிப்பு இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் இந்தியாவில், பண்டைக் காலத்தில், செல்வம் கொழித்த கோவில்களுக்கு உதாரணமாக தஞ்சை மாவட்ட கோவில்கள், பூரி ஜெகந்நாதர் ஆலயம், திருவாங்கூர் சமஸ்தான பத்மநாபர் கோவிலைக் கூறலாம்.
இங்கெல்லாம் நூற்றுக்கணக்கானோர் தேவதாசிகளாக இருந்ததாகக் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த கோவில் சொத்துக்களை ஆடம்பர திருவிழாக்கள் கொண்டாடாமல் பயனுள்ள மின்சாரத் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு திருவாங்கூர் மன்னர் செய்திருந்தால் பென்னிகுயிக் தன் சொந்தப் பணத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்ட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. பத்மநாப சுவாமிகள் ஆலயம் இப்போதாவது மின்சாரத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால், ஒளி பொருந்திய கடவுள்களை நம்பிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற மிகவும் உதவும்.
2) இந்து மதத்தில் பல பண்டிகைகள் ஆண்டு தோறும் வருகின்றன. இந்தப் பண்டிகைகளுக்கு செலவு செய்வதனைத் தவிர்த்து பயனுள்ள மின்சாரத் திட்டங்களில் முதலீடு செய்வதால் மின்சார உற்பத்தி பெருகும்.
3) இந்து மதத்தினர், புனிதப் பயணத்துக்காக ஆண்டுதோறும் பல புண்ணிய தலங்களுக்கு செல் கிறார்கள். இதனால் தங்கள் வாழ்வில் ஒளி உண்டாகும் என்று நினைக்கிறார்கள். இந்தப் பயணத்தில் ஒரு பகுதியை மின் திட்டங்களில் முதலீடு செய்தால், தொழில் உற்பத்தி பெருகும், ஆட்குறைப்புகள் நீங்கும். வேலைவாய்ப்பு பெருகும். மக்களிடையே உண்மையான மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும்.
4) இன்றைய மக்கள் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை கிராமப்புற / நகர்ப்புற நிலங்களை, வாங்கி முதலீடு செய்து விடுகிறார்கள். இது நீண்ட கால முதலீடு. இதைவிட இன்றைய தேவையான மின் உற்பத்தித் திட்டங்களில் முதலீடு செய்தால், தங்கள் வாழ்வைப் பாதிக்கும் மின்வெட்டில் இருந்து மீளலாம்.
5) இன்றைய பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினர் பெரும்பாலும் தங்க நகைகள் வாங்குவதில் செலவிடுகிறர்கள். இதனால் தங்க நகைகள் வாங்கவும், விற்கவும் பல வணிக நிறுவனங்கள் / கடைகள் / வங்கிகள் உருவாகுகின்றன. வாங்கும் வசதி உள்ளவர்கள் வாங்குகிறார்கள்.
நகைகளை பணம் கொடுத்து வாங்க இயலாதவர்கள், கொலை, கொள்ளை, திருட்டு செய்கின்றார்கள். மேலும் நகைகளுக்குத் தேவை / கோவில் சிலைகளுக்குத் தேவை இந்த மாநிலத்தில்/ அடுத்த மாநிலத்தில்/ அயல்நாட்டில் நிறையவே உள்ளன. மேலும் பழைய நகைகளைக் கொடுத்து, புதிய நகைகளை வாங்குவதால் நகைக் கடையில் விற்பனை அதிகரிக் கின்றது.
இவ்வாறு புதிய/பழைய நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், நகைத் திருட்டுகள் அதிகரிக்கின்றன. இது சமூகத்தில் பல குற்றங்கள் நடைபெற உதவுகின்றன. இந்த நகைத் திருட்டுகளைக் குறைக்க, மக்கள் நகை வாங்கும் பணத்தில் பெரும் பகுதியை மின் திட்டங்களில்முதலீடு செய்யலாம். அப் போது தடையற்ற மின்சாரம் கிடைக்கும். அதனால் நகைத் திருட்டு குறையும்.
6) தற்போது சூரிய சக்தி மின்சாரம், சில இடங் களில், தெருவிளக்குகளை எரிக்கவும், சாலை சந்திப்பு சிக்கனல்களை இயக்கவும்,சில அரசு கட்டிடங்களில் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், பயன்பாட்டில் உள்ளது. மேலே கண்டவாறு பண்டிகைகளிலும், திருவிழாக் களிலும் புனிதப் பயணத்திலும், தங்க நகை வாங்கு வதிலும், வீட்டுமனைகள் வாங்குவது போன்ற பயனற்ற வகைகளில் செலவழிப்பதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்.
இது மின்வெட்டினால் ஏற்படும், கொலை, கொள்ளை, திருட்டு போன்ற இழப்புகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, தன் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்ள பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. 7) தற்போது வீடுகளில் காற்றாலை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம். (விவரங்கள் 7.11.2012 நாளிட்ட தினகரன், தினத்தந்தி நாளேடு). பண்டிகை களை கொண்டாடுவதற்கு தரும் முன்னுரிமையை வீடுகளில் காற்றாலை அமைக்கத் தரலாம்.
8) மின்சாரத் திட்டங்கள் மட்டுமல்லாமல், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் திட்டம், குப்பைகளை அகற்றும் திட்டம் ஆகியவற்றில், பண்டிகைகள் கொண்டாடுவதை தவிர்த்து பண முதலீடு செய்யலாம். மக்கள் சக்தி மகேசன் சக்தியைவிட பெரிது என்று நிரூபிக்கலாம்.
9) 7.11.2012இல் உச்சநீதிமன்ற அறிவுரையின்படி கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களில் பக்தர்கள் முதலீடு செய்யலாம்.
பண்டிகைகள் கொண்டாடி பகவானின் அருளையும், சிவலோகப் பதவி, வைகுண்ட பதவி பெறுவது மூக்கைச் சுற்றித் தொடுவதற்கு அல்லது கொக்கு/கடவுளின் தலையில் வெண்ணெய் வைப்பதற்கு ஒப்பாகும். ஆனால் நலத்திட்டங்களில் முதலீடு செய்வது; கைமேல் பலன் தருவதாகும்.
முடிவுரை
1) இந்துமத வேதத்திற்கு விளக்க நூல் எழுதியவர்களில் ஒருவர் தயானந்த சரஸ்வதி ஆவர். இவரது காலம் 1824-1883. இவர் வேதங்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தினார்.
விக்கிரக ஆராதனை கூடாது.
கடவுள் அவதாரங்களை நம்பக் கூடாது
தீர்த்த யாத்திரைகளை செய்யக்கூடாது.
தல புராணங்களை நம்பக் கூடாது.
ஜாதகம், விவாக முகூர்த்தம் சம்பந்தமான நூல்களை நம்பக் கூடாது.
பாகவதம், புராணங்களை நம்பக் கூடாது.
நாகசாமியின் நாட்டிய சாஸ்திராவை, அய்ந்தாவது வேதத்தைப் பற்றி தயானந்த சரஸ்வதி தகவல் எதுவும் சொல்லவில்லை.
கடவுள் சிலைக்கு நாமாவளி அர்ச்சனை கூடாது.
இந்த அடிப்படையில்தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மேற்கண்ட போதனைகளை இந்து மத்தினைச் சார்ந்த தயானந்த சரஸ்வதி கூறியிருப்பதால், தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கை களை இந்துக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பலாம்.
இந்த தயானந்தரின் கொள்கைகளில் பல தேசியத் தலைவர்கள் ஈடுபாடு காட்டினார்கள். அவர்களில் சிலர் லஜபதிராய், எம்.ஜி.ராணடே, பகத்சிங், வினாயக் தாமோதர் சவர்க்கார் ஆவார்கள். அரவிந்தர் மற்றும் எஸ்.இராதாகிருஷ்ணனால் பாராட்டப் பெற்றவர்
2) இந்திய அரசில் அமைச்சராக உள்ள திரு.ஜெய்ராம் ரமேஷ் சமீபத்தில் கூறியது தற்போதைய தேவை கோவில் கட்டுவது இல்லை. மக்களுக்குத் தேவையான கழிப்பறையைக் கட்டுவதே மிகவும் தேவையான ஒன்று. இதைப் போல மத்திய மாநில அரசுகள், இந்துமதப் பண்டிகைகளைக் கொண்டாடுவதை தவிர்த்து, மின் திட்டங்களை செயல்படுத்தலாம் என்று சொல்லக்கூடிய காலம் விரைவில் வரும் எனப் பகுத்தறிவு வாதிகள் அனைவரும் நம்பலாம். அவ்வாறு நடைபெறும் நாள் தான் மக்களுக்கு உண்மையான தீபாவளி திருநாள். மற்றது எல்லாம் புஸ்வானம் தான்.
3) டாஸ்மாக் சரக்குகளை குடித்து, உடலையும் செல்வத்தையும் கெடுத்துக் கொண்டு வாழாதே என்று கூறத் தகுதிப்படைத்தவர்கள் காந்தியார், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் போன்றோர் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் இன்று இல்லை. இருந்த போதிலும் பண்டிகை கொண்டாடு பவர்களைவிட, குடிப் பழக்கம் உள்ளவர்களின் பணமே மின் திட்டங்களுக்குப் பயன்படுகின்றது.
பொறியாளர்
ப.கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.,
கண்மணிகள் காதலால் வெண்மணி தொடருவதா? நத்தம் கொடுமைபற்றி தி.மு.க. தலைவர் கலைஞர்
சென்னை, நவ.11- தருமபுரி - நத்தம் தாழ்த்தப்பட்டோர் வீடுகள் எரியூட்டப் பட்டது குறித்து தி.மு.க. தலைவர் கலை ஞர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:
கேள்வி :- தரும புரியில் தலித் வீடுகள் எல்லாம் தீக்கிரையாக் கப்பட்டிருக்கிறதே?
கலைஞர் :- தரும புரி மாவட்டத்தில், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும், நத்தம் தலித் குடியி ருப்பைச் சேர்ந்த இள வரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் என் பதால் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்ப தாகவும், தங் களைப் பாதுகாத்திட வேண்டு மென்றும், சேலம் சரகக் காவல் துறை மற்றும் காவல் துறைத் துணைத் தலை வர் (டி.அய்.ஜி) ஆகியோ ரிடம் நேரில் சென்று இருவரும் முறையிட்டி ருக்கிறார்கள். அதற்குப் பிறகும் பாதுகாப்பு தரப் படாததால், இருவரும் ஊருக்குள் வர முடியா மல் ஊரை விட்டு வெளி யேறி தலை மறைவாக இருந்துள் ளார்கள்.
இந்த நிலையில், இளவரசன், திவ்யா ஆகிய இரண்டு பேரின் பெற்றோரையும் ஊர்ப் பஞ்சாயத்தில் அழைத்து, இருவரையும் பஞ் சாயத் தாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் வாழ விடமாட்டோம் என்றும் ஒரு பிரிவினர் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் வேறு வழியின்றி, திவ்யாவின் தந்தை நாகராஜ் என்ப வர், 7-11-2012 அன்று மாலை தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு மேற்படி பிரிவினர் நாகராஜனின் உடலை தருமபுரி திருப் பத்தூர் நெடுஞ்சாலை யில் வைத்து, போக் குவரத்தைத் தடுத்து, சாலையோரங்களில் இருந்த மரங்களை வெட்டிச் சாய்த்தும், தீ மூட்டி எரித்தும் மறியல் செய்திருக்கிறார்கள்.
இதற்கடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆதிக் கச் சக்தியினர் நத்தம் தலித் காலனிக்குள் நுழைந்து தலித் வீடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித் திருக்கிறார்கள். தலித் மக்கள் உயிரைக் காப் பாற்றிக் கொள்ள வீடு களை விட்டு வெளியேறி யதைப் பயன் படுத்தி அண்ணா நகர் தலித் காலனி மற்றும் கொண் டலம்பட்டி தலித் கால னிக்குள்ளும் நுழைந்து அனைத்து வீடுகளையும் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்துள் ளார்கள்.
இவ்வளவு சம்பவங் கள் நடைபெறும் வரை, அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையில் அங்கே அரசு நிர்வாகமோ, காவல் துறையோ தலையிட வில்லை என்பது அதிர்ச் சியிலும் அதிர்ச்சி அளிக் கக் கூடிய நிகழ்ச்சியா கும்.
காவல்துறையினர் ஏன் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று விசாரித்தபோது, சிவ கங்கை மாவட்டத்தில் உதவி ஆய்வாளரான ஆல்வின், சாதிக் கலவ ரத்தில் கொலை செய்யப் பட்ட சம்பவம் காவல் துறையினரிடம் பயத்தை உருவாக்கிவிட்டது என் றும், அதனால் கலவரம் நடந்த போது தங்கள் உயிருக்குப் பயந்த காவல்துறையினர் ஒதுங்கிக் கொண்டனர் என்றும், மேலும், தர்ம புரி கண்காணிப்பாள ரான ஆஸ்ரா கார்க், பரமக்குடி, மதுரை என கடந்த ஒரு வாரமாக டெபுடேஷன் பணியில் இருந்தார் என்றும், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் காவல் துறையினரும் திட்ட மிட் டுச் செயல்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.
தருமபுரி மாவட் டத்தில் நடைபெற்ற இந்தச் சாதிக் கலவரம் குறித்து விரிவான அறிக் கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டு மென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான தலித் மக்களை அரூர் தொகுதியின் சட் டப் பேரவை உறுப் பினர் திரு.பி. டில்லிபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். 250 வீடுகள் தீ வைக்கப் பட்டுள்ளன.
இரு சக்கர வாகனங்கள், வண்டிகள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்தும் பெட் ரோல் ஊற்றி எரிக்கப் பட்டுள்ளன. வீட்டிற் குள் இருந்த பீரோக் களை உடைத்து நகை கள், பணம் உள்ளிட்ட வற்றை கொள்ளை அடித்துக் கொண்டு அதன் பின்னர் பெட் ரோல் ஊற்றி எரித் திருக்கிறார்கள்.
மூன்று நாட்களாக அங்கே அமைதி ஏற்படவில்லை. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்த தாகத் தெரியவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் தருமபுரி வன்முறையில் வீடுகளை இழந்தவர் களுக்கு தலா அய்ம்பதா யிரம் ரூபாய் வழங்கப் போவதாக முதலமைச் சர் அறிவித்திருக்கிறார். இதற்குக் காரணமான வர்கள்மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
தலித் மக்களின் அச் சத்தைப் போக்க வேண் டும். அவர் களுக்கு மீண் டும் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று தமி ழக அரசை வலியுறுத்து கிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.12-11-2012
சிறீலங்கா இன்னமும் கொதிநிலையிலேயே உள்ளது அய்.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தகவல்
உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தாலும், சிறீலங்கா இன்னமும் கொதிநிலையிலேயே உள்ளது என்று அய்.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறீலங்கா அகதி களை உடனடியாகத் திருப்பி அனுப்பும் அவுஸ்ரேலியா புதிய கொள்கை தொடர்பாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி ஜனநாயக மன்றத்தில் பங்கேற் றுள்ள அவர், இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
நௌரு போன்ற கடல் கடந்த தடுப்பு நிலையங்கள் அமைக்கப் படுவதால் நீண்டகாலம் அவர்கள் தடுத்து வைக்கப்படலாம் என் றும், இன்னொரு மனிதஉரிமை மீறலாக அது உருவெடுக்கலாம் என்றும் கவலை கொள்கிறேன்.
உள்நாட்டுப் போர் 2009ல் முடிவுக்கு வந்தாலும், சிறீலங்கா இன்னமும் கொதிநிலையிலேயே உள்ளது.
இப்போதும் அது ஒரு மோதல் பிரதேசமாகவே உள்ளது. அங்கு இன்னமும் உறுதி நிலை ஏற்பட வில்லை.
அங்குள்ள மக்கள் மீது கட்டுப் பாடுகள் சுமத்தப்படுவதான கவலையளிக்கும் அறிக்கைகளே எனக்கு கிடைத்துக் கொண்டி ருக்கின்றன.
அகதிகளாக அடைக்கலம் தேடி வருவோரைத் திருப்பி அனுப்புவது அவர்களின் தனிப் பட்ட பாதுகாப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என் றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அய்.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யின் இந்தக் கருத்து சிறீலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந் துள்ளது.
திருத்தம்
10.11.2012 அன்று விடுதலை முதல் பக்கத்தில் பா.ஜ.க. ஒரு தரை தட்டிய கப்பல்! என்ற ஊசி மிளகாய் என்ற பெயரில் வந்த கட்டுரையில்.
பாரதீய ஜனதா கட்சி என்பது 1980-க்கு முன்பு பாரதீய ஜனதாவாக இருந்த ஒரு கட்சி என்று வந்துள்ளதை பாரதிய ஜன சங்கமாக இருந்த ஒரு கட்சி என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 12-11-2012
வெட்கங் கெட்ட இனமலர் பூணூல்களே! இப்படி புத்தி கெட்டு அலையலாமா?
ஊருக்கு இளைத்தவன் பிராமணன்!
என்ற தலைப்பில் பி.தனபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஸ்ரீரங்கத்தில், பாவப்பட்ட ஒரு ஐயர், தன் ஓட்டலுக்கு, "பிராமணாள் ஓட்டல்' என்று எழுதி வைத்ததில், வீரமணிக்கு அப்படி என்ன கடுப்பு?ஒருவர், தன் ஓட்டலில், "பிராமணாள் கபே' என்று எழுதி வைக்கக் கூட, இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா?அந்த ஓட்டலுக்கு வீரமணி சாப்பிடப் போக, அங்குள்ள வர், "இங்கு பிராமணாளுக்குத்தான் சாப்பாடு போடுவோம்' என்று சொன் னார்களா?
இல்லையே...பிராமணாள் ஓட்டல் என்றால், பருப்பு, நெய்யுடன், அருமையான முழுச் சாப்பாடு கிடைக்கும் என, பலரும் வருவர்; நாமும் சில சில்லறையைப் பார்க்கலாம் என, அப்படி எழுதி இருக்கலாம் அல்லவா! "பிராமணாள் கபே' என, எழுதியதால், சைவம் சாப்பிடுபவர்கள், தைரியமாகப் போய் சாப்பிடுவர்.
மிலிட்டரி ஓட்டலிலும், சைவ சாப்பாடு கிடைக்கும்; ஆனால், சமைக்கும் பாத்திரம், சைவம் சமைக்க மட்டுமே உபயோகிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் வரும் அல்லவா?"பிராமணாள்' என்று எழுதியதில், எங்கிருந்து வந்தது - வர்ணாசிரமம்? வர்ணாசிரமம் என்றால் என்ன தெரியுமா?வர்ணம் என்றால் என்ன ஜாதி என்பது பொருள். ஆசிரமம் என்பது, ஓர் ஆசானிடம் கற்றுக் கொள்வது.
இங்கு, மகன், தந்தையிட மிருந்து கற்றுக் கொள்கிறான். அதுதான், வர்ணம், ஆசிரமம் = வர்ணாசிரமம். இப்போது, எல்லாவற்றிற்கும் பட்டய படிப்பு வந்துள்ளது; சொல்லிக் கொடுக்கின்றனர். அன்றைய கால கட்டத்தில், தந்தையைப் பின்பற்ற, அந்தத் தொழிலை, அவன் கற்று வந்தான்.இன்று, முடி திருத்தம் செய்வது, மண்பாண்டம் செய்வது போன்றவற் றிற்கு பட்டய படிப்பு உள்ளது. இன்று வரை அது வர்ணாசிரமம் தான்.
வீரமணியிடம் ஒரு கேள்வி... இஸ்லாமிய சாப்பாட்டுக் கடைகளில், "இங்கு, எல்லாம் "ஹலால் செய்யப் பட்டது' என, எழுதியிருப்பர். அப்போது தான், அங்கு முஸ்லிம்கள் சாப்பிடுவர்; அவர்களிடம், "இனி,"ஹலால்' என் பதை எடுத்து விடும்படி சொல்லவேண் டியது தானே...சொல்லமாட்டார்; அப்படி சொன்னால், வீரமணி, "ஹலால்' ஆகி விடுவார்.
எவருக்கு விருப்பம் இருக்கிறதோ, அவரவர்கள், அந்தந்த ஓட்டலுக்குப் போய் சாப்பிடப் போகின்றனர். இந்த, "பகுத்தறிவு' மேதையைக் கேட்டுக் கொண்டா, ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டும்?உங்களது அறை வாயிலில், "மானம் தமிழனின் உயிர்' என, எழுதி இருக்கும். ஆனால், வாயிலில், செருப்பை கழற்றி போட்டு விட்டுத் தான் போக வேண்டும்' என, எழுதப்பட்டிருக்கும்.
இப்போது எங்கே போனது தமிழனின் தன்மானம்? முதலில், நீங்கள் திருந்திய பின், மற்ற வரைத் திருத்த முயற்சியுங்கள்.ஈ.வெ.ரா., போய்விட்டார்; வீரமணிக்கு நல்ல காலம்.பாவம்... ஊருக்கு இளைத்தவன், பிராமணன் என்றாகி விட்டது.... என்ன செய்ய!
தினமலர், 12.11.2012
பூணூல் மலரில் இப்படி எழுதி புளகாங் கிதம் அடையும் புண்-ணாக்கே, நீர் புரிந்து கொள்ள சில செய்திகள்.
மற்றவர்களைப் புண்படுத்த (கீழ் ஜாதியாக) அரசியல் சட்டத்தில் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதா? மாறாக, அரசியல் சட்டப்படி உள்ள அடிப்படைக் கடமைகளில் முக்கியமானது, அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) இதன்படியோ அல்லது அது வற்புறுத்தும் மனிதநேயம் (Humanism) சமூக சீர்திருத்தம் (Reform) படியோ எந்த வகையில் அதற்கு நியாயம் கற்பிக்கப்பட முடியும்?
பிராமணள் ஓட்டல் என்றால் பருப்பு நெய்யுடன் அருமையான முழுச்சாப்பாடு கிடைக்கும் என பலரும் வருவர், நாமும் சில்லறையைப் பார்க்கலாம் என, அப்படி எழுதியிருக்கலாம் அல்லவா என்று கேட்கும் அதிமேதாவியே, அதுபோது ஏராளம் பேர் அன்றாடம் பருப்பு, நெய், வெத்தக்குழம்பு (அவாள் பாஷையில்) வடபாயாசம், தயிருஞ்சா, எல்லாம் தர்ற சரவண பகவான்களும், சங்கீதாக்களும் பல நூற்று கணக்கில் வியாபாரம் செய்து கோடீசுவரர் ஆகியுள் ளனரே - அவர்கள் பிராமணாள் போடவில்லையே - அதற்கு பதில் கூறுவீர்களா?
வேண்டுமானால் பருப்பு, நெய்யுடன் முழுச்சாப்பாடு கிடைக்கும் போடலாமே!
வங்காளத்தில் பிராமணாள் கடையில் மச்ச அவதாரம் - மீன்கறியும் கிடைக்குமே. அதுபோல அங்கே இந்த பருப்பு மட்டும் வேகாது! மீன் வகையறாக்கள் ஏராளம் உண்டே!
ஏழை மிலிட்டரி ஓட்டலிலும் சைவ சாப்பாடு கிடைக்கும் ஆனால் சமைக்கும் பாத்திரம் சைவம் சமைக்க மட்டுமே என்ற சந்தேகம் வரும் அல்லவா? என்று வியாக் கியானம் செய்யும் விவஸ்தையற்றதுகளே, விஜிட்டேரியன் என்று போட்ட ஓட்டல் களுக்கு நாட்டில் பஞ்சமா? அரிதா?
பிராமணாள் என்பது ஜாதி அல்ல; வர்ணம் என்பதை காஞ்சி சங்கராச்சாரியார் கூறியிருப்பது ஒருபுறம் இருக்கட்டும் - சிலநாள்களுக்கு முன், எதற்கு இந்த வீண் வேலை என்று ஓட்டல்காரருக்கு அறிவுரை யாக எழுதி வெளியிட்ட உங்கள் ஏட்டில் வெளிவந்த கடிதமே (1.11.2012) சரியான சான்று அல்லவா?
ஏன் இப்போது இரட்டை வேடம்? ஹலால் என்று போடப்பட்டதால் எந்த முஸ்லீம் யாரைத் தாழ்த்துகிறார்? சூத் திரன் என்பதால் தாசி புத்திரன் என்ற அவமானத்தை, இழிவைச் சுமக்கச் செய்கிறான் என்று கூறமுடியுமா?
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கின் விலை இவ்வளவு என்று கூறி திசை திருப்பும் இந்த தில்லுமுல்லு, திருகுதாளம் - சிண்டு முடியும் சில்லரைத் தனம் ஏன்?
வீட்டுக்கு வெளியே வருபவர் எவரும் செருப்பை முன்பகுதியில் விட்டு விட்டு வருகின்றனர். சுகாதாரம் கருதியே தவிர, அவமானப்படுத்தும் அடிமைத்தனம் ஆகாது. நீங்கள் எல்லாம் - அது இராமன்பீடத்தில் 14 ஆண்டு ஆட்சி புரிந்தது என்பதற்காக வெளியில் வைத்துக் கொண்டே பெரியார் திடலுக்கு வாருங்கள். எங்களுக்கு மறுப்பேது மில்லை உங்கள் வீட்டில் செருப்பைத் தான் வீடு முழுவதும் போட்டுச் செல்லுங்கள்.
எங்களுக் கென்ன ஆட்சேபணை?
இதே பார்ப்பன உணவு விடுதிகள் முன்பு பிராமணர்-கள் சாப்பிடும் இடம் சூத்திராளுக்கு இந்த இடம் என்று எழுதி வைத்திருந்ததை மாற்றிய இயக்கம் இது!
அங்கேயே கிருஷ்ணய்யர்கூட சிறீரங்கத் தில் மாற நினைத்தாலும் இந்த கோபிகை களின் மைந்தர்கள் மாறவிட மாட்டார்கள் போலும்! அட பூணூல் வக்கிரங்களே, மனிதன் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறப் போகிற விஞ்ஞான காலத்தில் இப்படி ஒரு விதண்டாவாதமா? வெட்கமாக இல்லையா, உங்களுக்கு? மகா மானக்கேடு!
உறுதுணையாக இருக்குமா இந்தியா?
சென்னை - அண்ணா அறிவாலயம் கலைஞர் மண்டபத்தில் நேற்று (11.11.2012) மாலை நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் ஈழத் தமிழர் வரலாற்று ஓட்டத்தில் முக்கிய இடம் வகிக்கக் கூடியதாகும்.
டெசோ மாநாட்டில் (சென்னை - 12.8.2012) நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை குறித்த விளக்கங்கள் அடங்கிய ஆவணத்தை அய்.நா.விலும், மனித உரிமை ஆணையத்திடமும் வழங்கிட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் சென்றிருந்தனர். அந்தப் பணி களை வெற்றிகரமாக நடத்தித் திரும்பிய அவ்விருவர்க் கும் நடைபெற்ற வரவேற்புப் பாராட்டு விழா நிகழ்ச்சி அது.
பாராட்டு விழா என்று சொல்லப்பட்டாலும், அதனை மய்யப்படுத்தி ஈழத் தமிழர் உரிமைகள்பற்றி விளக்கமான கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டன.
ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அறவழி யில் போராடியது ஒரு கட்டம். இலங்கை அரசு அசல் சிங்கள இனவாத அரசாக உருவெடுத்து, ஈழத் தமிழினம் என்ற ஒன்று வரலாற்றில் இருக்கக் கூடாது என்கிற திட் டத்தில் செயல்பட்டதன் காரணமாக ஈழத் தமிழர்களிலே போராளிகள் உருவாகி ஆயுதம் தாங்கிப் போராடியது இன்னொரு கட்டம்.
பன்னாட்டு இராணுவ உதவிகளுடன், ஈழத் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்தது மற்றொரு கட்டம்.
இந்த மூன்று கால கட்டங்களிலும் தமிழ்நாடு பலவகைகளிலும் ஈழத் தமிழர்கள் பக்கம் நின்று வந்திருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சியே இதுகுறித்து கருத்தும் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய கால கட்டத்தில் கவனிக்கப்பட வேண் டியது - எஞ்சி இருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமையைப் பற்றியதும் மற்றும் அரசியல் தீர்வுமாகும்.
அய்.நா. மூலம் தான் இதற்குத் தீர்வு காணப்பட முடியும் என்ற நிலையில் பன்னாடுகளின் ஆதரவு மிக முக்கியமாகத் தேவைப்படும் இந்தக் கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட டெசோ என்ற அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தி.மு.க. திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆகியவை இந்த அமைப்பில் இணைந்துள்ளன.
இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில் பல விமர்சனங்கள் எழுந்ததுண்டு.
ஆனாலும் டெசோ உருவாக்கப்பட்டு, சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்பட்டதும், அம்மாநாட்டில் இந்தி யாவின் பல மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல; பன்னாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு திறந்த மனதோடு கருத்துக்கள் வெளியிட்டதும், அவசியமான, ஆழமான கருத்தாக்கம் கொண்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் உலகக் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு நிலையை உருவாக்கி விட்டன.
இந்திய அரசின் போக்கிலும் சில மாற்றங்கள் ஏற்படவும் வழி வகுத்தது.
அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சந்திப்பு என்பது - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் மேலும் அடுத்த கட்ட பாய்ச்சலாகும்.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி வந்த இலங்கை அரசு இப்பொழுது பன்னாடுகளின் முன்னிலையில் கைகட்டி நிற்கும் ஒரு அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு இந்த நேரத்தில் ஓர் அழுத்தத்தைக் கொடுக்குமேயானால் அனேகமாக ராஜபக்சே தண்டனைக்குரிய குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற் கான கூடுதல் சூழல் விரைவில் உருவாகும்.
இந்த விடயத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியா நடந்து கொள்ளவில்லை. குறிப்பாக இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டை யாடப்படுவது என்பதில் இந்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு வருகிறது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்த இரு பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, இந்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது பற்றிய முடிவினை டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் கூறினார்.
நிறைவுரையாற்றிய மானமிகு கலைஞர்அவர்கள் இந்திய அரசு நமக்கு உறுதுணையாக இருந்தால், நாமும் உறுதுணையாக இருக்க முடியும் என்று அறிவித்திருப்பது அர்த்தம்மிக்கதும், அவசியமானதுமாகும்.
உறுதுணையாக இல்லாவிட்டால் நாமும் உறு துணையாக இருக்க முடியாது என்பதை இதன் மூலம் கலைஞர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள்.
இது உல கெங்கும் அலைகளை ஏற்படுத்தக் கூடியதுதான், இதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியா என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்!
பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது.12-11-2012
கட்டப்பட்டிருக்கின்றன
உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.
(விடுதலை, 12.10.1962)
Post a Comment