Search This Blog

2.11.12

தீபாவளி - தத்துவமும் இரகசியமும் -2



டேவிஸ் : டேய்! ராமானுஜம் எங்கேடா புறப்பட்டு விட்டாய்?
ராமானுஜம் : எங்கள் சொந்த ஊருக்குப் போகிறேன்.
டேவிஸ் : உங்கள் சொந்த ஊருக்கா? எதற்காகப் போகிறாய்?
ரா-ம் : அடடே! என்ன இப்படிக் கேட்கிறாய். தீபாவளிப் பண்டிகை
வருகிறதல்லவா, அதற்காகப் போகிறேன்.
டேவிஸ் : என்ன பண்டிகை?
ரா-ம் : தீபாவளிப் பண்டிகை.
டேவிஸ் : தீபாவளியா? அது என்ன பண்டிகையப்பா? எதற்காக அதைக் கொண்டாடுவது?
ரா-ம் : அப்படிக் கேளு, சொல்லுகிறேன். தீபாவளி என்பது உலகத்துக்குக் கேடு விளைவித்த ஒரு அசுரன், கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண்டாடுவதாகும். அதை நீயும் கொண்டாடலாம். இப்பொழுது வெள்ளையனை ஒழித்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண்டாடவில்லையா அதுபோல்.

டேவிஸ் : அப்படியா அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய்தான்? அந்தக் காலத்தில் அணுகுண்டு இருந்திருக்காதே. இந்தக் காலத்தில் அணு குண்டு வைத்திருப்பவனையும், இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்ன என்னமோ கேடு செய்கிறவர் களையும் பற்றி நாம் ஒன்றுமே பேசுவதில்லை. அப்படி இருக்க அந்த அசுரன் யார்? அவன் என்ன கேடு செய்தான்?
ரா-ம் : அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகா விஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத் தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு ஆக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது, தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.

டேவிஸ் : தெரிந்தது. ஆனால், அதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று என் மனம் ஆசைப்படு கிறது. அதாவது, அவன் மகாவிஷ்ணுவுக்கும் பூமிக்கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண்கல் உருவத்தில் இருந்தது. மகாவிஷ்ணுவுக்கு பூமியுடன் எப்படிக் கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படிப் பிள்ளை பிறக்கும்? எனக் குப் புரியவில்லையே?
ரா-ம் : அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய் கலவி செய்வார். அதற்கு அவருக்கு மனைவிகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்யவில்லை; மகாவிஷ்ணு பன்றி உருவ மெடுத்தார்.
டேவிஸ் : பொறு, பொறு. இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை; மகாவிஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்.

ரா-ம் : அதுவா, சரி! சொல்லுகிறேன் கேள். இரண் யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.
டேவிஸ் : பொறு, பொறு; ஓடாதே; இங்கே எனக்கு ஒரு மயக்கம்.
ரா-ம் : இதிலென்னப்பா மயக்கம்? நான்தான் தெளிவாகச் சொல்லுகிறேனே; பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு சமுத்திரத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் என்று.
டேவிஸ் : சரி, அது அர்த்தமாச்சுது.
ரா-ம் : பின்னே, எது அர்த்தமாகவில்லை? சும்மா தொல்லை கொடுக்கிறாயே?

 டேவிஸ் : தொல்லை ஒன்றுமில்லை; உன் சங்கதி தான் என் மூளைக்குத் தொல்லை கொடுக்கிறது; தலை சுற்றுகிறது; அதாவது ஒரு இராட்சதன் - அப்டீன்னா என்ன? அது கிடக்கட்டும். அவன் பெயர் இரண்யாட்சதன். அதுவும் போகட்டும். அவன் கதை அப்புறம் கேட்போம். அந்த இராட்சதன் பூமியை எப்படிச் சுருட்டினான்? பூமிதான் பந்து போல் இருக்கிறதே! அவன் அதைச் சுருட்டுவதானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே ஒழிய, சுருட்ட முடியாது. அதுவும் போகட்டும்; சுருட்டினான் என்கிறாய். சுருட்டி னான் என்றே வைத்துக் கொள்வோம். சுருட்டினானே அவன், சுருட்டும்போது தான் எங்கே இருந்துகொண்டு சுருட்டினான்? சுருட்டிக் கொண்டு ஓடினானே, எதன் மேல் நடந்து ஓடினான்? ஆகாயத்தில் பறந்துகொண்டே சுருட்டி இருக்கலாம்! ஆகாயத்திலே பறந்துகொண்டே ஓடி இருக்கலாம்! கருடன் மகாவிஷ்ணுவையும் அவர் பெண்டாட்டியையும் தூக்கிக்கொண்டு பறப்பதுபோல் பறந்து இருக்கலாம்! ஆனால், அவன் சமுத்திரத்திற்குள் ஒளிந்துகொண்டான் என்றாயே; அந்த சமுத்திரம் எதன் மேல் இருந்தது? பூமியின் மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டோ அல்லது பறந்துகொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே, அது ஒழுகிப்போய் இருக்காதா? அப்போது அடியில் ஒளிந்து கொண்டிருப்பவன் தொப் பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம், இது வேறு உலகமா? நமக்கு ஒன்றும் புரியவில்லையே? இதை எனக்குப் புரிய வைக்க வேண்டும்; நாமும் பி.ஏ., 2வது வருஷம் பூகோளம், வானநூல் சைன்ஸ் படித்தவர்கள்; ஆத லால் இந்த சந்தேகம் வருகிறது. நாம் படிக்காத மடையர்களாய் இருந்தால் குற்றமில்லை. சற்றுச் சொல்லு பார்ப்போம்.
ரா-ம் : இதெல்லாம் பெரியோர்கள் சொன்ன விஷயம். சாஸ்திரங்கள் சொன்ன விஷயம். மதத் தத்துவம். ஆதலால் இவைகளை இப்படியெல்லாம் கேட்கக்கூடாது. நாஸ்திகர்கள்தான் இப்படிக் கேட் பார்கள். கருப்புச் சட்டைக்காரர்கள்தான் இப்படிக் கேட்பார்கள். இத்தனை ஆயிரம் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்களே, ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? சோஷியலிஸ்டுகளில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? நீதான் இப்படிக் கேட்கிறாய்; நீ கருப்புச் சட்டைக்காரன் தான் சந்தேகமில்லை.
டேவிஸ் : நீ என்னப்பா இப்படிப் பேசறே. பி.ஏ. படிக்கிறவனாகத் தெரியவில்லை; பூமிக்குப் பிறந்தான் என்றாய்! பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான் என்கிறாய்! எப்படிப் பிறந்தான்? எப்படித் தூக்கிக் கொண்டு-எப்படிப் போனான்? என்றால், கோபப்படுகிறாய்! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்துக் கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடுகிறார் கள் என்கிறாய். சர்க்கார் இதற்கு லீவு விடுகிறது. பல லட்சம் பிள்ளைகள் அன்று படிப்பதைவிட்டுத் தெரு சுற்றுகிறார்கள்; இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால் என்னைக் கருப்புச் சட்டை என்கிறாய்; கருப்புச் சட்டை போடாதவனுக்குப் புத்தியே இருக்கக் கூடாதா? புத்தி கருப்புச் சட்டைக்குத்தான் சொந்தமா? சரி அதிருக்கட்டும் அப்புறம் அவன் ஓடிப்போய் சமுத்திரத்தில் ஒளிந்துகொண்டான்; அப்புறம்?
 
ரா-ம் : ஒளிந்துகொண்டான்; பூமியில் இருந்தவர்ள் எல்லாம் போய் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.
டேவிஸ் : இரு, இரு இது, பூமியைச் சுருட்டின போது பூமியில் இருந்தவர்கள் ஓடிவிட்டார்களோ? நோட்டீஸ் கொடுத்துவிட்டுத்தான் சுருட்டினானோ?
ரா-ம் : நீ என்னப்பா சுத்த அதிகப் பிரசங்கியாக இருக்கிறே! ஓடிப்போய் முறையிட்டார்கள் என்றால், “எப்படிப் போனார்கள்” “வெங்காயம் வீசை என்ன விலை” “கருவாடும் கத்தரிக்காவும் போட்டுக் குழம்பு வெச்சால் நல்லா இருக்குமா?” என்பது போன்ற அதிகப் பிரசங்கமான கேள்விகளை முட்டாள்தனமா கேட்கிறாயே?
டேவிஸ் : இல்லை, இல்லை கோபித்துக் கொள்ளாதே! சரி; சொல்லித்தொலை. முறையிட்டார்கள், அப்புறம்?
ரா-ம் : முறையிட்டார்கள், அந்த முறையீட்டுக்கு இரங்கி, பகவான் மகாவிஷ்ணு உடனே புறப்பட்டார். சமுத்திரத்தினிடம் வந்தார். பார்த்தார் சுற்றி; எடுத்தார் பன்றி அவதாரம்; குதித்தார் தண்ணீரில்; கண்டார் பூமியை; தன் கொம்பில் அதைக் குத்தி எடுத்துக் கொண்டு வந்து விரித்தார். புரிஞ்சுதா?
டேவிஸ் : புரியாட்டா, கோபித்துக் கொள்ளுகிறாய்; அதிகப் பிரசங்கி என்கிறாய்; சரி புரிந்தது; விரித்தார் பூமியை; பிறகு என்ன நடந்தது?
 
ரா-ம் : பிறகா, பூமியை விரித்தவுடன், அந்தப் பூமிக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு குஷால் உண்டாயிற்று. பூமி அந்தப் பன்றியைப் பார்த்தது. அந்தப் பன்றி இந்தப் பூமியைப் பார்த்தது. அந்தச் சமயம் பார்த்து மன்மதன் இரண்டு பேரையும் கலவி புரியச் செய்துவிட்டான். அப்புறம் சொல்ல வேண்டுமா! கலந்தார்கள்; பிறந்தது பிள்ளை.
டேவிஸ் : சரி; இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன்; கோவிச்சுக்காதே.

ரா-ம் : சரி கேள்.
டேவிஸ் : வராகம் என்பது பன்றி. அது ஒரு மிருக ரூபம்; சரிதானா?
ரா-ம் : சரி.
டேவிஸ் : பூமி கல்மண் உருவம்; சரிதானா?
ரா-ம் : சரி.

டேவிஸ் : இது இரண்டும் எப்படிக் கலவி புரியும்? எப்படிக் கருத்தரிக்கும்?
ரா-ம் : பாத்தியா பாத்தியா; இதுதான் போக்கிரித் தனமான கேள்வி என்பது. கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யலாமல்லவா?
டேவிஸ் : என்னப்பா இராமானுஜம், பாத்தியா பாத்தியா என்று சாயபு மாதிரி பாத்தியா கொடுக்கிறே. இது ஒரு பெரிய செக்ஷுவல் சையன்சு சங்கதி. இதைக்கேட்டால் போக்கிரித்தனமான கேள்வி என் கிறாய்; சரி! இதைப்பற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?
ரா-ம் : அந்தப் பிள்ளைதான் நரகாசூரன்.
டேவிஸ் : இந்தப் பெயர் அதற்கு யார் இட்டார்கள். தாய், தந்தையர்களா?
ரா-ம் : யாரோ ‘அன்னக்காவடிகள்!’ இட்டார்கள்? அதைப்பற்றி என்ன பிரமாதமாய்க் கேட்கிறாய்? எனக்கு அவசரம். நான் போகவேண்டும்; என்னை விடு.
டேவிஸ் : சரி போகலாம். சீக்கிரம் முடி. அப்புறம்?
ரா-ம் : அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல் லை கொடுத்தான். அவனை மகாவிஷ்ணு கொன்றார்.
டேவிஸ் : அடப்பாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படி யென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கி யர்களா?
ரா-ம் : இல்லேப்பா. இந்த நரகாசூரனின் பொல்லாத வேளை. தேவர்கள் கிட்டே அவன் வாலாட்டினான். அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா?
டேவிஸ் : அதற்காகத் தகப்பன் மகனுக்குப் புத்தி சொல்லாமல் ஒரே அடியாகக் கொன்றுவிடுவதா?
ரா-ம் : அது அவர் இஷ்டம். அதைக் கேட்க நாம் யார்? “தேவரனையர் கயவர் அவரும் தாம்-மேவன செய்தொழுகலான்” என்று நாயனார் சொல்லி இருக்கிறார். ஆதலால் நாம் அது ஏன், இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?
டேவிஸ் : சரி கொன்றார். அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?
ரா-ம் : அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால், இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக, அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு (ஆக) நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.
டேவிஸ் : தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?
ரா-ம் : வான் தேவர்கள் வானத்தில் (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள்; பூதேவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள்!
டேவிஸ் : இந்தப் பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?
ரா-ம் : அடமுட்டாள்! அதுகூடவா தெரியாது; அது தான் பிராமணர்கள். பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள்தானே. அகராதியைப் பார்.
டேவிஸ் : பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?
ரா-ம் : என்ன வகுப்பு? நாங்கள் தான்.
டேவிஸ் : நீங்கள் என்றால், நீ அய்யங்கார்; நீங்கள் தானா?
ரா-ம் : நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா. நாங்களும், அய்யர், ஆச்சாரி, சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலிய வர்கள்.
டேவிஸ் : அப்படி என்றால் பார்ப்பனர்கள் யாவரும் பூதேவர் என்கிறாய்.
ரா-ம் : ஆமா! ஆமா!! கல்லாட்டமா ஆமா!!!
டேவிஸ் : சரி, தொலைந்து போகட்டும். நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம்; உங்களுக் குத் தொல்லை கொடுக்க அசுரர், ராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களை எதற்கு ஆகப் பயப்படுத்தத் தீபாவளி கொண்டாட வேண்டும்?
ரா-ம் : இங்கேயே அசுரர் ராட்சதர் இல்லை என்கிறாய். இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் சு.மக்கள், தி.கழகத்தார்கள் இவர்கள் எல்லாம் யார்? பிராமணர் களைப் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள். குறை சொல்லுகிறவர்கள். அவர்களைப் போல் வாழ வேண்டு மென்பவர்கள், வேதசாஸ்திர புராண இதிகாசங்களைப் பகுத்தறிவால் ஆராய்ச்சி செய்கிறவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராக்கதப் பதர்கள், இரக்கமே இல்லாத அரக்கர்கள் தெரிந்ததா? அவர்களுக்குப் பயம் உண்டாவதற்கு ஆக தேவர்களுக்கு இடையூறு செய்தால் நாசமாய்ப் போய்விடுவாய் என்று அறிவு றுத்துவதற்கு ஆகத்தான் தீபாவளி கொண்டாடுவ தாகும். இதுதான் இரகசியம், மற்றபடி ‘கதை எப்படி இருந்தால் என்ன?’
டேவிஸ் : அப்படியா? நீங்கள் 100க்கு 3 பேர், நீங்கள் அல்லாதவர்கள் 100க்கு 97 பேர். எப்படி எத்தனை நாளைக்கு இப்படி மிரட்ட முடியும்?
ரா-ம் : அதைப் பற்றிக் கவலைப்படாதே. காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. இந்தத் தொண்ணூறு பேர்களில் ஒரு பகுதி விபீஷணர்களாக, அனுமார்களாக இருந்து பிராமணத் தொண்டாற்றவும் எதிரிகளை ஒழிக்கவும் பயன்படுத்துவதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம், படித்துவிட்டு உத்தியோகத்துக்குக் காத்துக்கிடக் கும் கூட்டம் கோவில் மடம் தர்ம்ஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம், புத்தகக் கடைக் கூட்டம், பூசாரிக் கூட்டம், பிரபுக் கூட்டம், பாதிரிக் கூட்டம், மேற்பதவி வகிக்கும் உத்யோகஸ்தர் கூட்டம், தாசிக் கூட்டம், சினிமாக் கூட்டம், நாடகப் பிழைப்புக் கூட்டம், கலைவித்துவான் கள் கூட்டம், அரசியல் பிழைப்புக்காரர் கூட்டம், தேசபக்தர்கள் தியாகிகள் கூட்டம் இப்படியாக இடறி விழும்படி சர்வம் பிராமண அடிமையாம் என்பதுபோல் இருக்கும் போது 100க்கு 3, 100க்கு 97 என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.
டேவிஸ் : ஓஹோ! அப்படியா? சரி, சரி, தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்துகொண்டேன். நன்றி, வணக்கம்.
ரா-ம் : சரி நமஸ்தே, ஜே ஹிந்து!

-------------------சித்திரபுத்திரன் என்னும் பெயரில் தந்தை பெரியார் எழுதியது. ‘விடுதலை’ 28.10.1956

1 comments:

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,