Search This Blog

22.7.12

பெண் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் வரும் - பெரியார்

வாழ்க்கை என்ற வியாபாரத்திற்கு இருவரும் கூட்டாளிகள் - பங்காளிகள் என்பது தான். இருவருக்கும் சம உரிமை உண்டு. ஒருவருக் கொருவர் தங்களுக்கு துணைவராகத்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். கணவன் மனைவி என்பது எஜமான்; அடிமை என்ற பொருள் கொடுப்பதாகவேயுள்ளது.

ஒரு நிகழ்ச்சியைப் பற்றி உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகின்றேன். இந்தியர்களிலே முதலில் ஜட்ஜாக இருந்தவர் முத்துசாமி அய்யராவார். அவரிடம் வந்த ஒரு கணவன் - மனைவி வழக்கில் கணவன், மனைவியை எப்படி வேண்டுமானாலும் தன்னிஷ்டப்படி நடத்திக் கொள்ளலாம். அதனால் கணவன், மனைவியின் கையை ஒடித்தது குற்றமல்ல! என்று தீர்ப்புக் கூறினார்.

கணவன் - மனைவி வாழ்க்கை என்பதே பார்ப்பான் வருவதற்கு முன் இங்கு கிடையாது. எந்தச் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் கிடையாது. எவராலும் இதில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டவும் முடியாது.

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கூடி வாழ்ந்தார்களே தவிர, கணவன் - மனைவி என்ற முறையில் அல்ல! இதற்குச் சரியான சான்று கிடையாது! தமிழனுக்குச் சரித்திரமே கிடையாது!

நமக்குள்ள இலக்கியங்களெல்லாம் பார்ப்பான் வந்ததற்குப் பிறகு 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தான் தோன்றின. இவைகள் யாவும் பார்ப்பனர்களாலும், அவனது அடிமைகளாலுமே எழுதப்பட்டவை யாகும். பார்ப்பான் எழுதிய புராணங்களை - இதிகாசங்களை - கட்டுக்கதை களை எல்லாம் அடிப்படையாக வைத்து எழுதப் பட்டனவேயாகும். ஆனதனாலே நமக்குரிய முறை இன்னதென்று அதில் குறிப்பிடவில்லை. பாமர மக்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் இலக்கியங்கள் என்று சொல்லக்கூடிய தெல்லாம் பாரதம், இராமாயணம் என்பவைகளேயாகும். இவற்றில் கூறப்பட்டிருப்பது நம் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும் கேடாகவேயுள்ளது. விபச்சாரத் தன்மை நிறைந்ததாகவே இருக்கிறது.

இன்று ஒரு சில புலவர்கள் சிலப்பதிகாரம் மிகப் பெரிய இலக்கியம் என்று அதைப் பிரசாரம் செய்து, அதனாலேயே தங்கள் வாழ்க்கையை வளர்த்து வருகின்றனர். அதில் என்ன இருக்கிறது? விபச்சாரத்தில் ஆரம்பித்து முட்டாள்தனத்தில் முடிவது தானே சிலப்பதிகாரம்? இதை எவரும் மறுக்க முடியாதே!

எனவே, மணமக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கையான நூல்களையும், முட்டாள்தனமான, அறிவுக்குப்புறம்பான காரியங்களான கடவுள், மத வழிபாடுகளை விட்டு அறிவுப்படி நடக்கப் பழக வேண்டும், ஆடம்பரத்தை விரும்பாமல் வாழ வேண்டும்.

முதலாவதாக பெண்கள் தங்களைச் சிங்காரிப்பதை விட்டுவிட வேண்டும். சிங்காரிப்பது என்பது தாங்கள் அழகற்றவர்கள் என்பதை விளம்பரப்படுத்தவேயாகும்.

குழந்தைகள் பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகளாவது குழந்தை பெறாமலிருக்க வேண்டும். திருமணமான பத்து மாதங்களிலேயே குழந்தையைப் பெற்று விட்டால், அதைக் கொஞ்சத் தான் நேரமிருக்குமே தவிர, தன் கணவனின் காரியங்களைக் கவனிக்கவோ, அவனோடு மகிழ்வாக இருக்கவோ நேரமில்லாமல் போய் விடுகிறது. குழந்தையைக் கொஞ்சவே நேரம் சரியாகப் போய்விடுகிறது. எனவே, குழந்தை பெறுவதை கொஞ்ச காலம் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு அளவாகவும் பெற்றுக் கொள்ள வேண்டும். வதவதவென்று பெற்றுக் கொண்டு தாங்கள் திண்டாடுவதோடு, நாட்டிற்கும் கேடு செய்யக் கூடாது.

குழந்தை பெறுவதால் நாட்டிற்கென்ன கேடு என்று சிலர் எண்ணலாம். இன்றைய மக்கள் தொகைக்குத் தேவையான பொருள்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. மேலும், மேலும் மக்கள் தொகையைப் பெருக்கிக் கொண்டே போனால் உணவுப் பொருள்கள் கிடைப்பது இன்னும் அதிக கஷ்டமாகிவிடும். மக்கள் தொகை பெருகுவதைப் போல் விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பும் பெருகுவதில்லையே. முன் எவ்வளவு நிலம் இருந்ததோ அதுதானே இன்றுமிருக்கிறது. எனவே, அளவோடு மக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

வரவுக்கு மேல் செலவு செய்து கடனாளியாகி, தனது சுயமரியாதையை இழக்காமல், வரவிற் குள்ளாக செலவு செய்ய பழகிக் கொள்ள வேண்டும். இதுதான் நான் மணமக்களுக்கு கூறும் அறிவுரையாகும்.

(16.9.1964 அன்று சேலம் செல்வி ரமணி - கனகராஜி வாழ்க்கை ஒப்பந்த விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 3.10.1964.

இப்போது செய்யப்படுகின்ற திருந்திய திருமணமுறை தான் நாளைக்கு அப்படியே இருக்க வேண்டும். இருக்கும் என்று நான் கூற வரவில்லை. இது 1964ஆம் ஆண்டு மாடல் என்று தான் கூறினேன்.

எப்படி காரின் மாடல் ஆண்டுக்கு ஆண்டு மாறுதல் அடைகின்றதோ, அதுபோல வளர்ச்சி அடைய அடைய அறிவு வளர வளர இந்தத் திருமண முறையிலும் மாறுதல் ஏற்பட்டே தீரும்.

இன்றைக்கு ஆண், பெண்ணைக் கட்டிக் கொள்ளுகின்றார்கள். வரும் காலத்தில் பெண்தான் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் கண்டிப்பாக வரும்.

பெண்களும், ஆண்களைப் போல சகல துறைகளிலும் முன்னேறி விடுவார்களேயானால், தான் விரும்பும் நபரைத் தானே தேர்ந்து எடுத்துக் கொள்ளுவார்கள்.

------------------14.8.1964 அன்று எடமேலையூர் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 29.8.1964

4 comments:

தமிழ் ஓவியா said...

மந்திரத்தால் மழை பெய்யுமா?


கருநாடக மாநிலத்தில் மழை வேண்டி வருண ஜெபம் நடத்தவும், பிரார்த்தனை செய்யவும் ரூபாய் 17 கோடியைக் கொட்டி அழுதுள்ளது. தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், குமாரகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விதவைப் பெண்கள் மண்பானைகளை ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சையெடுத்து அந்த அரிசியைக் கொண்டு உள்ளூர் கோயில் முன்பு உப்பில்லாத கஞ்சியைக் காய்ச்சிக் குடித்தனராம். அவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்று யாரோ கட்டிவிட்ட கதை. ஆனால் மழை பெய்வதாகக் காணோம். இந்தமூட நம்பிக்கைகளைத் தொலைப்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை.

இந்திய நாட்டின் விஞ்ஞான தொழில் நுட்பத் துறை (டி.எஸ்.டி.) மழையினை வரவழைக்கும் பரிசோதனைக்கு என நிதி ஒதுக்கீடு செய்யும் கோரிக் கையை ஆதரித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.

இந்துமத வேதங்களிலும், இதிகாசங்களிலும் மழையை வரவழைக்க வருணதேவனின் கவனத்தை ஈர்க்க நடத்தப்படும் யாகத்தை வரவேற்றுள்ளது.

இந்தச் சடங்கு - யக்ஞம் என்று அழைக்கப்படுவது - வருண தேவனின் மந்திரங்களைப் பாடிப் புகழ்ந்து நடத்தப்படும். யாகக் குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு அதில் மூலிகைகள் போடப்பட்டு, ஏராளமாக நெய்யும் ஊற்றப்படும்.

அதிகாரபூர்வமாக, அதாவது அரசின் சார்பாக, புதுடில்லியிலிருந்து நூறு கி.மீ.க்கு அப்பாலுள்ள மதுரா நகரில், சென்ற வாரம் யக்ஞம் நடத்தப்பட்டது. ஒரு 86 வயது பெரியவர், இந்த யாகத் திற்குத் தலைமை தாங் கினார். கடந்த எட்டு வருடங்களில், தான் 12 யக்ஞங்களை நடத்தி யுள்ளதாகவும், அதில் 9 யக்ஞங்கள் மழையைக் கொண்டு வந்தன என்றும் கூறினார்.

தமிழ் ஓவியா said...

யாகத்தீயின் முன்பு சர்மா சாம வேத சுலோகங்களைப் பாடினார். தினமும் ஆறுமணி நேரம் தீ வளர்க்கப்பட்டு எரிக்கப்பட்டது. 100 கிலோ சந்தனக் கட்டைகளும், 15 வித மூலிகைகளும் இவற்றின் எடைக்குச் சமமான நெய்யும் தீவில் வார்க்கப்பட்டது. ஒலிபெருக்கிகள் வேத சுலோகங் களை பெருத்த சப்தங்களுடன் முழங்கின.

இந்தச் சமயத்தில், இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் (அய்.எம்.டி.) விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு வானத்தில் மேகமூட்டங்களை உருவாக்கி சூழ்நிலையில் சில மாற்றங்களை உண்டாக் கினர். சர்மா இதைத்தான் தன்னுடைய சாதனை என்று கூறிக்கொண்டார். விஞ்ஞானிகள், யாக குண்டத்தில் இருந்து தீயில் வெந்துகிடந்த கரிக்கட்டைகளையும் மற்ற பொருள்களையும் (இலைகள்தான் மேகங்களை மழை நீருடன் பூமிக்குக் கொண்டு வருகின்றன என்று கூறப்பட்டது) சேகரித்து எடுத்துச் சென்றனர்.

விஞ்ஞான தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி.) யின் பேச்சாளர் ஒருவர், தங்களுடைய பரி சோதனைத் திட்டத் தின் படி, பூமியிலுள்ள ஜென ரேட்டர்களை உபயோகித்து வானத்திலிருந்து மேகவிதைகளை (ஊடடிரன -ளுநநனடபே) பூமிக்குக் கொண்டு வர முடியுமா என ஆராய்வதே, யக்ஞத்தின் ஒரு பகுதியாக தாங்கள் இத்திட்டத்தை சோதித்து வருவதாகக் கூறினார்.
சர்மாவின் யாகத்தை நடத்தத் தேவைப்படும் நிதி உதவி முதலியவற்றைச் செய்ய பவுதீகத் துறை விஞ்ஞானிகளும், வானிலை ஆராய்ச்சி அதிகாரிகளும்தான் முடிவு செய்ததாக கூறியதுடன், இந்த உதவியின் மூலமாக இந்து வேதங்களில் கூறப்படும் மழையைக் கொண்டு வரும் யாகச் சடங்குகளைப் பற்றி ஆராய வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அவர்கூறினார்.

மதுராபுரியில் நடந்த யாகத் தீயினால் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. ஆனால், இந்திய விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு தீ வைத்து விட்டது. இத் தகைய யாகங்கள் மூடநம்பிக்கைகளை வளர்க்கவே பயன்படும் என்று பரவலாகப் பேசப்பட்டது.

அதுவும் (முன்னாள்) பிரதமர் ராஜீவ் காந்தி இந்தி யாவை இருப்பத்தோராம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லும்படி விஞ்ஞானிகளைக் கேட்டுக் கொண்டபோதே இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது.விஞ்ஞான தொழில் நுட்பத் துறை அதிகாரிகள், இந்த யாகப் பரிசோத னையை ரகசியமாகவே, பத்திரிகையாளர்களுக்குத் தெரியாமல்தான் வைத்திருந்தனர். ஆனால், வெளிப் படையாக இத்தகைய பரிசோதனைகள் விஞ்ஞானக் குறிக்கோள்களைப் பயன்படுத்தவும், திறந்த மனதுடன் ஆராய்ச்சிகளைச் செய்யவும் பயன்படும் என்று நம்புவதாக இத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கே.எஸ்.ஜெயராமன், புதுடில்லி
Nature Vol. 333, 16 June 1988

தமிழ் ஓவியா said...

தண்டிக்க இயலாத சட்டங்கள் - தீர்ப்புகள்


காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் இதனை வரவேற்றுள்ளார்.

இந்த நிலை வரவேற்கத்தக்கதாகும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினையில் சுருதி பேதம் இல்லாமல் செயல்படவேண்டும் என்பதற்கு கலைஞர் அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
இந்த உணர்வை மற்ற மற்ற அரசியல் கட்சிகளும் பின்பற்றினால் தமிழர்களின் உரிமைகள் பறிபோகா மல் காப்பாற்றப்பட உறுதியான வாய்ப்புகள் கிடைக்கும்.

2002 ஆம் ஆண்டில் காவிரி நதிநீர் ஆணையம் வறட்சிக் காலத்தில் எந்த அளவின் அடிப்படையில் தமிழகத்திற்குத் தண்ணீர் தரவேண்டும் என்ற வரன்முறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அந்த வரன்முறைகளை கருநாடக அரசு கடைப்பிடிக்க வில்லை.

இதனால் தமிழ்நாடு வறட்சியால் பாதிக்கப்பட்டுள் ளது. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தர வின் அடிப்படையில் தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கருநாடக அரசை வலியுறுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரத மருக்கு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கருநாடக அரசு பல தடுப்பணைகளைக் கட்டியதால் தமிழ் நாட்டுக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படுகிறது. அவ்வாறு செய்யக்கூடாது என்று உத்தரவிடுமாறும் மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் இந்தப் பிரச்சினையைச் சட்ட ரீதியாகத்தான் அணுக முடியும் என்பதால் தமிழ்நாடு அரசு, நீதிமன்றம் சென்றுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு காலகட்டங்களில் இவற்றையெல்லாம் வலியுறுத்தும் வகையிலும், மக்களின் கருத்துகளை ஒன்று திரட்டும் வகையிலும் பல்வேறு போராட்டங்களும் தமிழ்நாட்டில் நடத்தி யுள்ளனர்.

உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி கருநாட கம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் முதல மைச்சர்களும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதுண்டு.

பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்தது. 1997 இல் காவிரி நதிநீர் ஆணையம் ஒன்று உருவாக் கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு, நடுவர் மன்ற தீர்ப்புகள் பின் பற்றப்படாவிட்டால் அந்த ஆணையம், அணைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.

இந்த அமைப்பில் பிரதமர், கருநாடகா, தமிழ்நாடு, புதுவை, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்கள் அங்கம் வகிப்பார்கள்.
இன்னொன்று காவிரி கண்காணிப்புக் குழு. இதில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். களத்தில் நிலவும் உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அரசுக்கு இந்தக் குழு அறிக்கை அளிக்கும்.

எல்லாம் சரிதான் - இவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்களாக இருந்தனவே தவிர உருப்படியாக ஏதும் நடந்துவிடவில்லை.
இதில் பெரும்பாலும் அரசியல் கண்ணோட்டம் தான் தலைதூக்குகிறது. பிரதமராக இருந்தாலும் சரி, முதலமைச்சர்களாக இருந்தாலும் சரி பொது நிலை யிலிருந்து, உண்மையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.

காவிரி நதிநீர் ஆணையத்தின் வரைவுத் திட் டத்தை அரசிதழில் (கெஜட்) வெளியிடக் கூட அன் றைய பிரதமர் வாஜ்பேயி முன்வராத நிலையெல்லாம் கூட உண்டு (1998). அடுத்து நடக்க இருந்த மக்க ளவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கருநாடகத் தில் கைப்பற்றவேண்டும் என்ற அரசியல் நோக்கு தான் அதில் பதுங்கி இருந்தது.

நடுவர் மன்றம் சொன்னாலும் சரி, உச்சநீதிமன் றம் சொன்னலும் சரி, அதற்குக் கட்டுப்படுவதில்லை என்பதில், எஃகு உறுதியோடு இருக்கும் கருநாடக அரசு. காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவுக்கு மட்டும் கட்டுப்படுமா என்பது கேள்விக்குறிதான்.

இவ்வகையில் சட்டத்தையோ, தீர்ப்பையோ மீறி னால் அதிகபட்ச தண்டனை என்ன என்பது நிர்ண யிக்கப்படாத வரை எந்த மன்றத்தைக் கூட்டித்தான் என்ன பயன்? 23-7-2012

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....


செக்காட்டுபவனும், பீடா கடைக்காரனும், வண் ணானும் எதற்காக சட்டசபைக்குச் செல்லவேண்டும் என்ற வினாவை விழுப்பிய வருணாசிரம வீரர்! திலகர் பிறந்த நாள் இந்நாள் (23.7.1859)