2400 கோடி ரூபாய் சேதுகால்வாய் திட்டத்திற்கு
மூடநம்பிக்கையால் முட்டுக்கட்டை போட்டுள்ளனர் சிலர்
அம்மாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு
ராமன் பாலன் என்ற மூடநம்பிக்கையைச் சொல்லி 2400 கோடி ரூபாய் சேது கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். மூட நம்பிக்கையாளர்கள் சிலர் காரணமாகி விட்டார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் 17.8.2010 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
இந்தப் பகுதிக்கு வரும்பொழுது எண்ணிக்கொண்டே வந்தேன்
அம்மாப்பேட்டை நிகழ்ச்சிக்கு நாங்கள் வரும்பொழுது இந்தப் பகுதியில் இயக்கத்திற்காக அந்தக் காலத்தில் பாடுபட்ட மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கின்ற தோழர் ராமு அவர்களை நினைத்துக்கொண்டே வந்தேன்.
தந்தை பெரியார் அவர்கள் ரயில் சுற்றுப் பயணம், போராட்டங்களுக்குச் சென்ற காலங் களிலே அம்மாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வருகிற நேரத்தில் கூட, அவர்கள் தன்னந்தனியராக அமைதியாக வருவார்கள். அதற்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்து இங்கே பணியாற்றினார்கள். அதுபோல பல தோழர்கள் உண்டு.
நேரத்தின் நெருக்கடியில் நினைவாற்றலை கூர்மைப்படுத்திக்கொண்டு சொல்ல கடமைப் பட்டிருக்கின்றேன். இங்கே பாராட்டப்பட்ட இவர்கள் எல்லாம் கட்டிய மேடைதான். பலம் வாய்ந்த மேடை. இவர்களுடைய உழைப்பு இல்லாவிட்டால் இந்த இயக்கம் இவ்வளவு பலமாக இருக்காது.
87 வயது இளைஞர்கலைஞர்
இன்றைக்கும் நம்முடைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 87வயது இளைஞராக இருந்து ஓர் அரிய அறைகூவலை அண்மைக் காலத்திலே விட்டார்கள். ஏதோ இந்த ஆட்சி முடிந்துவிடும் என்பதுபோல சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்குச் சொல்லுகின்றோம். திராவிடர் இயக்கத்தினுடைய வரலாற்றை, திராவிடத்தை வெல்ல இனி யாருக்கும் துணிவு கிடையாது. வாய்ப்புக் கிடையாது. (கைதட்டல்). அவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இதை எளிதில் எந்தக் கொம்பனாலும் புரட்டி விட முடியாது என்று தெளிவாகச் சொன்னார்கள்.
வரலாறே தெரியாது
அதற்கு என்ன காரணம்? சிலர் கொச்சையாகப் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். சொல்லு கிறவர்கள் வரலாறு தெரிந்தவர்களா? என்றால் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கே வரலாறு இல்லை. (கைதட்டல்). வரலாறு தெரிந்த வர்களாக இருப்பது ஒன்று; வரலாறு இல்லாத வர்களாக இருப்பது மற்றொன்று. நாளைக்கொரு பேச்சு
அந்த வகையிலே எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று கருதுகிறார்கள். ஆளுக்கொரு பேச்சு. நாளைக்கு ஒரு பேச்சு. எங்கேயிருக்கிறோம். என்ன செய்யப் போகிறோம். என்று தெரியாதவர்கள் பாவம் பதற்றத்தினாலே எதை எதையோ சொல்லுகிறார்கள்.
இந்த இயக்கம்திராவிடர் இயக்கம் தாய்க்கழகம். அடித்தளத்திலே இருக்கக் கூடிய இந்த இயக்கம் இருக்கிறதே, இதனுடைய இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகத்தான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் எப்பொழுதுமே ஒலிக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த மாபெரும் நிகழ்ச்சியை நீங்கள் பார்க்கின்றீர்கள். எங்களுடைய தோழர்கள் ஒன்றிய நிலையிலே இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
அரசியலுக்குச் செல்லாத இயக்கம்
காரணம் என்ன? அரசியலுக்குச் செல்லாத இயக்கம் திராவிடர் கழகம். ஆனால் அதே நேரத்திலே அரசியலை நிர்ணயிக்கின்ற இயக்கம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. (கைதட்டல்).
அரசியலைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்று அலட்சியமாக இருக்க மாட்டோம். நான் அடிக்கடி நண்பர்களுக்கு, இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பிலேகூட ஒரு செய்தியைச் சொல்வ துண்டு. நம்முடைய நாட்டிலே பொதுவான எத்தனையோ பழமொழிகள் உண்டு.
ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?
அதிலே ஒரு பழமொழி என்னவென்றால் மற்றவர்களைப் பற்றி, கொஞ்சம் அலட்சியமாக இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்லுவார்கள் என்று சொன்னால் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?
சாதாரணமாக கிராமப் பகுதிகளில் சொல்லு வார்கள் . ஆனால் அது பொறுப்பற்றவர் களுடைய பழமொழி. தேர்தலுக்கு நிற்காத திராவிடர் கழகத்தினுடைய நிலை என்ன? ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று விட்டுவிடக்கூடிய இயக்கமல்ல.
மாறாக தெளிவான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய மக்களுக்கு வழிகாட்டக் கூடிய ஓர் இயக்கம். எப்படி என்று சொன்னால், ராமன் ஆட்சியாக இருந்தால் அந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். ராவணன் ஆட்சியாக இருந்தால் அதைப் பாதுகாக்க வேண்டும். அந்த ஆட்சிக்கு அரணாக இருக்க வேண்டும். ராமன் என்கிற மூட நம்பிக்கையின் விளைவாக 2400 கோடி ரூபாய் சேதுசமுத்திர கால்வாய் திட்டம் என்ன ஆனது?
150 ஆண்டுகால கனவு
தமிழர்களுடைய நல்வாழ்விற்காக 150 ஆண்டுகாலம் கண்ட கனவுகளை கலைஞர் அவர்களுடைய அரிய திறத்தினாலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மிகப்பெரிய வாய்ப் பினாலே சேதுசமுத்திர திட்டம் முடிவடைந்து இந்நேரம் அந்தக் கால்வாயில் கப்பல் ஓடியிருக்க வேண்டும்.
அதைத் தடுத்த சக்திகள் எங்கிருந்து கிளம்பி யிருக்கின்றன? இங்கேதான் நீங்கள் சிந்திக்க வேண்டும். காரணம் என்ன? மூடநம்பிக்கை. என்ன சொல்லுகிறார்கள்? ராமன் கட்டிய பாலம் என்று சொல்லுகிறார்கள். இந்த மூட நம்பிக்கையினுடைய தாக்கம் உச்சநீதிமன்றம் வரையிலே போய் நிற்கிறது.
2400 கோடி ரூபாய் திட்டம்
2400 கோடி ரூபாய் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு வைத்துவிட்டார்கள். மக்களுடைய வரிப்பணம் முடிந்துவிட்டது. இன்னும் 12 கி.மீ தூரம் கூட இல்லை. அது மட்டுமல்ல. இந்த சேது சமுத்திர திட்டத்தைத் துவக்கியவர்கள் யார் என்றால், யார் எதிர்க்கிறார்களோ அவர்கள்தான் துவக்கினார்கள்.
முகவரி இல்லாத சிலர்
ஆறாவது வழித்தடம் சரியானது என்று சொல்லியே துவக்கினார்கள். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தினாலோ அல்லது அய்க்கிய முற்போக்குக் கூட்டணியினாலோ அல்லது பிரதமர் மன்மோகன் சிங், அல்லது சோனியா காந்தி தலைமை தாங்கிய கட்டத்திலோ வந்ததல்ல. வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்திலேயே, பி.ஜே.பி ஆட்சி இருந்த காலத்திலேயே பல்வேறு வழித்தடங்களை ஆராய்ந்து ஆறாவது வழித்தடம்தான் சரியானது, என்று அனுமதி வழங்கியது.
இன்றைக்கு வழக்கு நீதிமன்றத்திலே இருக்கிறது. முகவரி இல்லாத அரசியல் தரகர்கள் சுப்பிர மணியசாமி போன்றவர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டேன் என்று சொன்னால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பெரியகேடு? இதற்கு அடித்தளம் எங்கே போய் நிற்கிறதென்று சொன்னால் ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று சொல்லுகின்றான்.
ராமன் என்று ஒருவன் இருந்தானா?
ராமன் என்று ஒரு பயல் பிறந்தானா என்பதே சந்தேகம். ஆனால் அவன் பாலம் கட்டினான் என்றான். சரி, கதைப்படி அந்தக் காலத்தில் பாலம் கட்டக்கூடிய வாய்ப்பு இருந்ததா? என்று ஆராய்ச்சி செய்தால் நம்முடைய நாட்டிலே எவ்வளவு காலத்திற்கு முன்னாலே பாலம் கட்டக்கூடிய நிலை இருந்தது என்று சொன்னால், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலே பாலம் கட்டினான் என்று சொல்லுகின்றான்.
17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பாலம் கட்ட முடியுமா? பல அரசியல் கட்சிகளுக்கு பயம் உண்டு. அய்யோ ராமனைப் பற்றிச் சொன்னால் ஓட்டு போய்விடுமோ? அல்லது மக்களைப் புண்படுத்தக் கூடியதாக இருந்து விடுமோ என்று எண்ணுகிறார்கள். ஆனால் திராவிடர் இயக்கம் என்று சொல்லக்கூடிய திராவிடர் கழகம் இந்த ராமன் பற்றிய மூடநம்பிக்கையைத் தாக்கிய காரணத்தினாலே, இதை மக்கள் மத்தியிலே எடுத்துச் சொன்ன காரணத்தினாலே இது ராமன் கட்டிய பாலம் அல்ல; அதைப்பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை என்று சொன்ன துணிவான முதலமைச்சர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே ஒரு முதலமைச்சர் தான் உண்டு. அவர்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறார்.
தி.க.தி.மு.க இணைந்து ஆற்றும் பணி
இன்னமும் அரசியல் களத்திலே நின்று மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றார். எனவே இந்த இயக்கத்திற்கு அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் உண்டு. இது சாதாரண விசயமல்ல. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இது இரண்டும் இணைந்து இந்தப் பணியை செய்தது என்று சொன்னால், ஒன்று மூடநம்பிக்கையை எதிர்க்கின்ற இயக்கங்கள். இன்னொரு பக்கத்திலே மூடநம்பிக்கையை எதிர்ப்பது மட்டுமல்ல; அதைத் தகர்த்து மக்களுக்குப் பயன்படக் கூடிய அளவிலே வர வேண்டும் என்று சொன்னால், அதற்குரிய வாய்ப்பை சாலையைப் போட்டு வேகமாக செல்லக்கூடிய இயக்கங்கள். இந்த இயக்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். எங்களுடைய தோழர்கள் முதுகில் அலகு குத்தி காரை இழுத்தது புண்படுத்துவதற்காக அல்ல. பக்தர்களை சங்கடப் படுத்துவதற்காக அல்ல. எங்களுக்கு என்ன வேறு வேலையே இல்லையா?
மூடநம்பிக்கைகள் இருக்கின்ற காரணத்தால் தான் அந்த மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி ராமனைக்காட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கருதுகின்றார்கள்.
ராமா உன் ஆட்சியில்...
ராமன் படத்தைக் கொளுத்தினார்கள். ராமனை செருப்பால் அடித்தார்கள். இந்த நிகழ்ச்சி எல்லாம் தமிழ்நாட்டிலே நடந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்ததென்றால் எதற்காக?
புராணத்தில் அவனே எழுதி வைத்திருக் கின்றானே. ஒருவன் ராமனிடம் முறையிடுகின்றான். ராமா, உன்னுடைய ராம ராஜ்யத்தில் இவ்வளவு பெரிய அக்கிரமம் நடக்கிறது. என்ன அக்கிரமம் என்று கேட்கிறான். என்னடைய பையன் செத்துப் போனது உன்னால்தான். உன் ஆட்சியில்தான் என் பையனுடைய உயிர் போய்விட்டது என்று சொல்லுகின்றான்.
நான் எப்படி பொறுப்பு என்று ராமன் கேட்கின்றான். மனுதர்மப்படி ஆட்சி நடக்கவில்லை. குலதர்மப்படி ஆட்சி நடக்கவில்லை என்று சொல்லு கின்றான். ராமனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சூத்திரன் கடவுளை அடைய நேரடியாக தவம் செய்யக் கூடிய உரிமை கிடையாது. ஆனால் சம்பூகன் என்ற சூத்திரன். தவம் செய்து கொண்டி ருக்கின்றான். நேராக கடவுளைத் தொழுகின்றான்.
தர்மம் கெட்டுப்போய்விட்டது அவன் எங்கள் மூலம்தான் கடவுளை வணங்க வேண்டும். அதாவது பார்ப்பனர்கள் மூலம்தான் கடவுளை வணங்க வேண்டும். அதைவிட்டு விட்டு நேரடியாக அவன் தவம் செய்வதற்குப் போனான். தவம் செய்வதற்குப் போனதினாலே தர்மம் கெட்டுப்போய்விட்டது. எந்த தர்மம்?
மனுதர்மம்குலதர்மம் கெட்டுப்போய்விட்டது. அதனால் என் பையன் செத்துப்போனான். அவன் பிழைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? கடவுளை நேரடியாகத் தொழுத சம்பூகனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
ராமன் சம்பூகனை வெட்டினான்
ஒரு விசாரணையும் இல்லை. ராமன் நேராகப் புறப்படுகின்றான். நான் கதையில் இருக்கிறபடி சொல்லுகின்றேன். இந்த சம்பவம் நடந்ததா? இல்லையா? என்பது முக்கியமல்ல.
இதனுடைய தத்துவம் மிக முக்கியம். நேராகப் போகின்றான். தவம் பண்ணுவதினாலே யாருக்கு என்ன இடைஞ்சல்? அவன் ஊருக்கு ஒதுக்குப் புறத்திலே கண்ணை மூடிக்கொண்டு இல்லாத கடவுளைத் தேடிக்கொண்டிருக்கின்றான். எத்தனை வருடம் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை. அது வேறு செய்தி. ஆனால் ராமன் என்ன செய்கிறான்? வாளை உருவி சம்பூகணை கண்டந்துண்டமாக வெட்டுகிறான். சம்பூகன் கீழே விழுந்தவுடனே செத்துப் போன பார்ப்பன சிறுவன் உயிர் பெற்று எழுந்தான் என்று கதை எழுதி வைத்திருக்கின்றான்.
இந்த இயக்கத்தில் பக்குவமானவர்
எனவே ராமராஜ்யத்தில் ராமன் செய்த மிகப்பெரிய காரியமென்ன? இந்தக் கொலைச் செயல்தானே? ஆகவே சூத்திர மக்களாகிய நாம் இதை எப்படி ஏற்றுக்கொள்வோம்? இன்றைக்கு அது என்ன வென்று தெரியாமலே நம்முடைய மூளையில் ஏற்றிவிட்டானே!
நூறு தடவை ராமஜெயம் எழுதினால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்கிறான். ராமஜெயம் என்று எழுதினால் என்ன அர்த்தம். சம்பூகனுக்குத் தோல்வி என்று அர்த்தம். ராமஜெயம் எழுதினால் அதனுடைய தத்துவம் என்ன? மனுதர்மத்திற்கு வெற்றி என்று அர்த்தம், குலதர்மத்திற்கு வெற்றி என்று அர்த்தம். ஆகவே இதை எடுத்துச் சொல்வதற்கு தந்தை பெரியாருடைய இயக்கத்தை விட்டால் வேறு நாதி உண்டா? (கைதட்டல்)
கலைஞர் ஆட்சியைத் தவிர, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைத் தவிர, வேறு எந்த ஆட்சியாக இருந்தாலும் அது பார்ப்பன மனுதர்ம ஆட்சியாகத்தான் இருக்கும். அதனால்தான் கலைஞர் அவர்கள் அந்தத் துணிச்சலைப் பெற்றி ருக்கின்றார். இந்த இயக்கத்திலிருந்து பக்குவமானவர்.
தி.மு.கவினுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பலபேருக்குத் தெரியும். கலைஞர் அவர்கள் ரொம்ப அடக்கமாக இருந்து, எல்லோ ருக்கும் மரியாதை கொடுத்து பகைவனுக்கும் அருள்வாய்! என்று ரொம்ப சாந்தமாகப் போகின்றார். ஏனென்றால் அவர் அந்தப் பொறுப்பிலே இருக் கின்றவர். அரணில் இருப்பவரின் வேலை
பாதுகாப்பு அரணில் இருக்கிறவன்துப்பாக்கி வைத்திருக்கிறவன் கொஞ்சம் சந்தேகப்பட்டாலும் சுட்டுவிடுவான். உள்ளே இருக்கிறவர் ஏன் என்று கேட்டால், நான் சந்தேகப்பட்டேன், சுட்டேன். நான் அலட்சியமாக இருந்திருந்தால் உங்களுக்கு ஆபத்து என்று சொல்லுவார். அதுதான் அரணில், பாது காப்பில் இருக்கிறவனுடைய வேலை.
(தொடரும்) -------------"விடுதலை” 25-8-2010
************************************************************************************
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தமிழகத்திற்கு வந்தபொழுது
கதவை சாத்தச் சொன்ன சமூகநீதிப் போராளி யார்?
அம்மாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் தமிழகத்திற்கு வந்தபொழுது அவரைப் பார்க்காதீர் கதவை சாத்திக்கொள்ளுங்கள் என்று சொன்ன சமூக நீதிப் போராளி யார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் 17.8.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பதவி இல்லையென்றாலும் .....
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்க வேண்டும் என்பதற்காகப் பிறந்த இயக்கமல்ல. பதவி கிடைத்தாலும் அந்த இயக்கம் இருக்கும். பதவி இல்லையென்றாலும் அந்த இயக்கம் இருக்கும். அப்படி இருந்துகொண்டிருக்கிறது என்கின்ற வரலாற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இன்றைக்குப் பாக்கிறோமே. நேற்று வரை பதவியில் இருந்துவிட்டு இன்று காலை பதவி கிடைக்கவில்லை என்று சொன்னவுடனே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறதே அதனுடைய விளைவுதானே ஆத்திரத்தோடு நம்முடைய சகோதரர்கள் இங்கே பேசினார்கள்.
சமூகநீதியைப் பேசத் தகுதி இல்லையா?
சமூகநீதியைப் பொறுத்த வரையிலே திராவிட இயக்கங்கள் பேசுவதற்கு தகுதி இல்லை என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவர் யாராக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட தலைவராக இருந்தாலும் அவருக்கும், தமிழ்நாட்டு வரலாற்றுக்குச் சம்பந்தம் உண்டா? திராவிடர் இயக்கம் பிறந்ததே சமூகநீதியினால்தான் (கைதட்டல்). இதை யாராவது மறுக்க முடியுமா? யாராவது மறுக்கட்டும்.
சமூகநீதி என்ற வார்த்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பிரபலப்படுத்தப் பட்டதற்கு முதல் காரணம் திராவிடர் இயக்கம்தான்.
வி.பி.சிங் அவர்களைத் தவிர மிகப்பெரிய சமூக நீதிக்காவலர் வேறு யார்? வி.பி.சிங் அவர்கள் சென்னையில் வந்து பேசும்பொழுது சொன்னார். தமிழ்நாட்டில் சென்னைதான் சமூகநீதிக்கு அடித்தளமான, மூலதனமான தலைநகரம் என்று சொன்னார் (கைதட்டல்).
அந்தத் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே சமூகநீதியை சொல்லிக்கொடுத்தது. இன்றைக்கு சமூகநீதியை அனுபவிக்கின்ற ரொம்ப பேருக்குத் தெரியாது.
தி.மு.க, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே சாலைகளை எல்லாம் அகலமாக, வேகமாகப் போட்டிருக்கின்றார்கள். திருச்சியி லிருந்து தஞ்சாவூருக்கு முக்கால் மணி நேரத்தில் வந்து விடலாம்.
சாலை போட்டவருக்கு நன்றி சொன்னதுண்டா?
அகலமான சாலையில் மேம்பாலத்தின்மீது போடப்பட்ட சாலையில் வண்டி ஓட்டிக்கொண்டு வருகின்றவர் எவராவது நன்றி சொல்லியிருக் கின்றார்களா? எப்பொழுது, யாரால் சிந்திக்கமுடியும்? ஏற்கெனவே சிக்கலில் இருந்து பலமுறை வருவதற்குத் தாமதமாகி பிறகு அந்த சாலையைப் பயன்படுத்தி அதற்கப்புறம் ரொம்ப சுலபமாக இப்பொழுது சாலையில் வருகிறார்கள், பாருங்கள். இந்த இரண்டையும் உணர்ந்தவர்களால்தான் சாலை போட்டது எவ்வளவு நன்மையைத் தந்துள்ளது என்பது அவர்களுக்குப் புரியும். அது மாதிரிதான் சமூகநீதி.
நான் பேசவேண்டும் என்பதாலேயே மனிதநேயர் எஸ்.எஸ்.ராஜ்குமார் சுருக்கமாக முடித்துக் கொண்டார். நான் ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன்.
அப்பொழுது இவர் எங்கிருந்தார்?
குலக்கல்வித் திட்டம் என்ற ஒரு திட்டத்தை ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்தாரே. அதனுடைய வரலாறு என்னவென்று சமூகநீதியைப் பற்றிச் சொல்லுகிறவருக்குத் தெரியுமா? அப் பொழுது இவர் எங்கு இருந்தார்? அவருடைய பொது வாழ்க்கையின் துவக்கம் என்ன?
குலக்கல்வித் திட்டத்தை ராஜகோபாலாச் சாரியார் கொண்டு வந்ததிருக்கிறதேஅரை நேரம் மகன் படிக்க வேண்டும். அரை நேரம் அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும். அதைத் தடுத்து ஒழித்து அந்த இடத்தில் பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசரைக் கொண்டு வந்து அமர்த்திய பெருமை திராவிடர் இயக்கத்தைச் சார்ந்ததல்லவா?
திராவிடர் இயக்கம் இல்லை என்றால்....
திராவிடர் இயக்கம் இல்லையென்றால் என்ன நிலை? இன்றைக்கு முத்தன் மகன் முனியன், குப்பாயி மகள் கருப்பாயி, நியூயார்க்கில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக இருக்கிறார்கள்.
ஜெர்மனியில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலி யாவில் இருக்கிறார்கள். அங்கே இருக்கிறேன். இங்கே இருக்கிறேன் என்று சொல்லுகின்றார்கள்.
அப்பாவுக்கு கையெழுத்து போடத்தெரியாது. ஆனால் மகன் வெளிநாட்டிலிருந்து பேசுகிறார். ஹலோஅப்பா எப்படியிருக்கின்றீர்கள்? நான் ஆஸ்திரேலியாவிலிருந்து பேசுகிறேன். அமெரிக்கா விலிருந்து பேசுகிறேன், என்று சொல்லுகின்றான். அமெரிக்கா காரனுக்கே நமது ஊர் கருப்பன் தான் சொல்லிக்கொடுக்கின்றான். நமது ஊர் முனியப்பன் சொல்லிக்கொடுக்கின்றான் (கை தட்டல்). இதெல்லாம் எப்படி நடந்தது? சரஸ்வதி பூஜை கொண்டாடியதால் நடந்ததா? சரஸ்வதி பூஜை வருடா வருடம் கொண்டாடினான். சரசுவதி பாட்டிக்கே கையெழுத்துப் போடத் தெரியாதே.
கையெழுத்துப் போடத் தெரியாது
சரஸ்வதி என்று பெயர் வைத்திருப்பவர்களுக்கே கையெழுத்துப் போடத் தெரியாதே. தந்தை பெரியார் என்ற மாபெரும் வள்ளல் இந்த சமுதாயத்திற்குச் செய்த மகத்தான புரட்சியினாலே இன்றைக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு வந்திருக்கிறது.
எங்கு பார்த்தாலும் பள்ளிகள்; கல்லூரிகள்
தமிழ்நாட்டில் திரும்புகிற பக்கமெல்லாம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், மெட்ரி குலேசன் பள்ளிகள், எங்கே பார்த்தாலும் பிள்ளைகள் படிப்பு, படிப்பு என்று படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நிறைய பிள்ளைகள் எஞ்சினீயரிங், மருத்து வத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அரசாங் கத்தில் 10ஆயிரம் இடங்களுக்கு மேல் பொறியியல் கல்வியில் இடம் காலியாக இருக்கிறது.
தயவு செய்து ஒன்றே ஒன்றை நினைத்துப் பாருங்கள். 1952க்குப் பிறகு ராஜகோபாலாச் சாரியார் என்று ஒருவர் வந்தாரே, அவர் குலக்கல்வித் திட்டத்தை உண்டாக்கினாரே, அந்தக் குலக்கல்வித் திட்டம் நீடித்து நிலைத்திருந்தால் நம்மவர்கள் பொறியாளர்களாக, டாக்டர்களாக, நீதிபதிகளாக, வக்கீல்களாக சென்றிருக்க முடியுமா? அவரவருடைய அப்பன் தொழிலைத்தானே நாம் செய்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்?
இதை எதிர்த்துப் போராடிய இயக்கம் திராவிடர் இயக்கம். இதைவிட சமூகநீதிக்கு வேறு என்ன செய்ய வேண்டும்? வகுப்புவாரி வரலாறு தெரியுமா?
வகுப்புவாரி உரிமை 1928இல் கொண்டுவரப் பட்டது என்றால், அது தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சி அல்லவா? அதற்கு அடித்தளம் போட்டது நீதிக்கட்சி அல்லவா?
நீதிக்கட்சி போராடி அதனுடைய தலைவர்கள் எல்லாம் போராடி 1920இல் ஆட்சியைப் பிடித்தது. முத்தையாக்கள், டாக்டர் சுப்பராயன்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்துதானே கம்யூனல் ஜி.ஓ.வைக் கொண்டு வந்தார்கள்?
1928லிருந்து 1950வரை சுதந்திரம் பெற்ற பிறகும் வகுப்புவாரி உரிமை இருந்ததால்தான் நம்மவர்கள் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தார்கள்.
பார்ப்பனர் சொற்படி மூவேந்தர்களும்
காரணம் என்ன? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கலாகாது. நமது சேரன், சோழன், பாண்டியன் எல்லோரும் சேர்ந்து என்ன செய்தார்கள்? மூவேந்தர்களும் என்ன செய்தார்கள்?
பார்ப்பானின் சொற்படிதானே நடந்தார்கள். கலைஞர் ஆட்சியில் இன்றைக்கு அப்பேர்ப்பட்ட சூழ்நிலை இல்லை. பார்ப்பனர்களுடைய தர்மம் இங்கே நடைமுறைப்படுத்தப்படவில்லை. மனுதர் மதத்திற்கு இடம் இல்லை. எல்லோர்க்கும் எல்லாமும் என்ற மனித தர்மம் இன்றைக்கு நடைபெறுகின்ற காரணத்தால்தான் இன்றைக்கு எல்லோரும் படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற் பட்டிருக்கின்றது.
என்னென்ன தடைகள் இருந்ததோ அவைகளை எல்லாம் நீக்கப்பட்டதற்குப் பிறகுதானே இந்த சூழல்? யார் அரசியல் சட்டத்தை உருவாக்கி னார்களோ, அவர்களே வாதாடி, அரசியல் சட்டம் செல்லாது என்று சொன்னவுடனே முதல் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் 1951இல் பண்டிதர்நேரு, டாக்டர் அண்ணல் அம்பேத்கர் இவர்களெல்லாம் இருந்த காலத்திலே வந்தது என்று சொன்னால் அதற்கு அடித்தளம் எங்கே இருந்து வந்தது? தந்தை பெரியார் அவர்களுடைய போராட்டத்தினாலே விளைந்தது. இதை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பாராளுமன்றத்திலே பதிவு செய்திருக்கின்றார்கள்.
முதல் அரசியல் சட்டத்திருத்தம் யாரால்?
இது திராவிடர் இயக்கத்தினுடைய விளைவு அல்லவா? இந்த இயக்கம் போராடியதினுடைய விளைவாகத்தான் முதல் அரசியல் சட்டத் திருத்தமே வந்தது. அதுதான் வகுப்புரிமையை சமூகநீதியைக் காப்பாற்றியது.
அதே மாதிரி 1951லே வந்த சமூகநீதி அரசியல் சட்டத்திருத்தம் 69 சதவிகித இடஒதுக்கீடு என்று வந்தது. அதுவும் திராவிடர் கழகம் எழுதிக் கொடுத்த சட்டம் 31சியைப் பற்றி இங்கு சொன்னார்களே, அனைத்துக் கட்சியையும் கூட்டி, அரசியல் சட்டத்தைத் திருத்தி பெரியார் இல்லாத காலத்திலே அண்ணா இல்லாத காலத்திலே இந்த சாதனையை செய்தோம் என்று சொன்னால் இது திராவிடர் இயக்கத்தின் சாதனை அல்லாமல் வேறு என்ன?
சுருக்கமாக ஒன்றைச் சொல்லுகின்றேன். நேரமில்லை. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆட்சி நிருவாகத்தை நடத்துகிறவர்கள் இவர்கள்தான். யார் ஆட்சி வந்தாலும்....
யார் அமைச்சராக வந்தாலும், யார் ஆட்சி வந்தாலும் இவர்கள்தான் ஆட்சி நடத்துவார்கள். இந்திரன்கள் மாறினாலும், இந்திராணிகள் மாறமாட்டார்கள் என்று புராணத்தில் கதை சொல்லுகிற மாதிரி அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள்தான் இந்திராணிகள்.
இந்த இடத்தில் நம்மவர்கள் உண்டா? என்றால் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் மண்டல் கமிசன் பரிந்துரை வந்த காரணத்தால் அதை வி.பி.சிங் போன்றவர்கள் செயல்படுத்திய காரணத்தால் இன்றைக்கு மண்டல் கமிசன் பரிந்துரைப்படி 27 சதவிகிதம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு 23 சதவிகிதம் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் என்று ஆக்கிய காரணத்தால்தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆண்கள், பெண்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுத் தேறியிருக்கின்றார்கள்.
வரலாறு காணாத சாதனை
இந்தியாவிலேயே இது வரலாறு காணாத சாதனை. இதை செய்தவர்கள் யார்? இதற்கு என்ன காரணம்? சமூக நீதியைப் பற்றி பேசத் தகுதி இல்லை என்று சொன்னார் பாருங்கள் ஒரு தலைவர்.
அவர் என்ன செய்தார் தெரியுமா? இதை செய்த சமூகநீதிகாவலர் வி.பி.சிங் அவர்கள் சென்னை வந்தபொழுது, வி.பி.சிங்கை பார்க்காதீர்கள். எல்லோரும் கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருங்கள் என்று சொன்ன சமூகநீதி போராளி அவர்.
இதெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று யாரும் கருதக்கூடாது இப்படி எத்தனையோ செய்திகளை எடுத்துச்சொல்லலாம்.
திராவிடர் இயக்கம் சமூகநீதியின் காவலன்
ஆகவே தமிழ்நாட்டிலே ஒரு சிறு குழந்தைக்குக் கூடத்தெரியும். திராவிடர் இயக்கம் என்று சொன்னால் அது சமூசநீதியினுடைய மிகப்பெரிய காவலன்.
திராவிடர் இயக்கம் இல்லையென்று சொன்னால் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இல்லையென்று சொன்னால் சமூகநீதியில் இட ஒதுக்கீட்டில் நாம் வெற்றி பெற்றிருக்க முடியுமா?
பெரியார் கேட்டார்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீடு 31 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 சதவிகிதம் இடஒதுக்கீடு என்று இருந்ததை 18 சதவிகிதமாக ஆக்கி 31+18=49 சதவிகிதமாக இடஒதுக்கீடு தமிழகத்திலே வந்தது. அதுவும் சட்டநாதன் அவர்களை கலைஞர் தலைவராகப் போட்டார். சட்டநாதன் கமிஷனைப் போட்டார். பெரியார் காலத்தில் இடஒதுக்கீட்டை இன்னும் அதிகப்படுத்தலாமே என்று கேட்டார். இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பிருக்கிறது என்று சொன்னார்.
50க்கும் கீழ் இடஒதுக்கீடு என்றால் நீங்கள் 49 சதவிகிதம் வரை இடஒதுக்கீட்டைக் கொடுக்க லாமே என்று தந்தை பெரியார் பளிச்சென்று சொன்னார். டெல்லிக்காரர்கள் ஏதாவது சொல்லுவார்களே என்று அதிகாரி, அய்யா அவர்களிடத்திலே சொன்னார். பழைய வரலாறு திருச்சி பெரியார் மாளிகையில் மத்திய அரசுக்குப் பரிந்துரை எப்படி எழுதுவது என்று கேட்டபொழுது பெரியார் சொன்னார்நான் சொல்லுகிறேன் பதிலை அந்த மாதிரி எழுதுங்கள் என்று. இதை பலபேர் தெரிந்துகொள்ள வேண்டும். பழைய வரலாறு மக்களுக்குத் தெரியாது.
பெரியார் சட்ட நுணுக்கத்தோடு சொல்லப் போகிறார் என்று அதிகாரி பேனாவைத் திறந்து பதிலை ஆவலோடு எதிர்பார்த்தார்.
அய்யா சொன்னார்வேறு ஒன்றும் இல்லை. இது சாதாரண விஷயம்தான். நான் சொல்லுகிறபடி எழுதுங்கள். 49 என்பது 50க்குக் கீழேதான் என்று எழுதுங்கள் என்று சொன்னார் (சிரிப்பு கைதட்டல்). உடனே 49 சதவிகிதம் வரை கலைஞர் அவர்கள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தினார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9000 ரூபாய் வருமான வரம்பை எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டு வந்த பொழுது அதை எதிர்த்தவர்கள் யார்? திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மற்ற கட்சிகள் அல்லவா?
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் என்று வந்தபொழுது 30 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 20 சதவிகிதம் மிக, மிக பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு என்று கொடுத்தவர் கலைஞர் அல்லவா ஆகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவிகிதம், மலைவாழ் மக்களுக்கு 1 சதவிகிதம் என்று இடஒதுக்கீடு இன்றைக்கு வழங்கப்படுகிறது.
இந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்றி 76ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தில் வைக்கக் கூடிய வாய்ப்பு எப்படி வந்தது? அருள் கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.
ஆகவேதான் நண்பர்களே! சமூகநீதி என்று சொன்னால் திராவிடர் இயக்கம். திராவிடர் இயக்கம் என்று சொன்னால் சமூகநீதி. இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று பிரிக்கவே முடியாது.
எனவே வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. யாராவது இதைப் பற்றி விவாதம் செய்யவேண்டும் என்று விரும்பினால் எந்த மேடையிலும் வாதாட நாங்கள் தயாராக இருக்கின்றோம் (கைதட்டல்).
ஆனால் விவாதம் செய்ய வருகிறவர்களுக்கு வரலாறு இருக்கவேண்டும். வரலாறே தெரியாதவர்களிடம் நாம் விவாதம் செய்ய முடியுமா?
---------------(தொடரும்) “விடுதலை” 26-8-2010