திருமணத்திற்கு முன் மருத்துவச் சோதனை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும்
சேலம் தமிழ் மறவர் புலவர் பி.அண்ணாமலை - சரசு அம்மையார் இல்ல மணவிழா
திருமணத்திற்கு முன் மருத்துவச் சோதனை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும்
தண்ணிழல்-சிவசங்கரி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
திருச்சி, செப். 29- திருமணத்திற்கு முன்
மருத்துவ சோதனை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்று திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
ஆத்தூரில் உள்ள
விஷ்ணுபிரியா திருமண அரங்கில் 11.9.2014 அன்று காலை 10 மணிக்கு
அ.கு.தண்ணிழல் - ப.சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா தமிழர்
தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவரது உரையின்
நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது மிகமிக அவசியம்
ஜோதிடம் பார்ப்பதற்குப் பதிலாக, என்ன
செய்ய வேண்டும்? பெற்றோர்களே மணமக்களைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்கின்ற
திருமணங்களாக இருந்தாலும் சரி, அல்லது காதல் திருமணங்களாக இருந்தாலும் சரி,
சிறப்பாக, வெற்றிகரமாக அந்த மணவாழ்க்கை அமைவதற்கு, நல்ல பாதுகாப்பான
ஏற்பாடுகள் என்ன என்று சொல்வதற்கு, வெறும் விசாரணைகள் மட்டும் உதவி
செய்யாது. அதற்கு மேலாக ஒன்றைச் சொல்லலாம். அதற்குரிய வாய்ப்புகள்
இப்பொழுது ஏராளமாக இருக்கின்றன. அந்த வாய்ப்பு களைப் பயன்படுத்திக்
கொள்ளவேண்டும் என்று, திராவிடர் கழகம்போல் இருக்கக்கூடிய பெரியார்
சிந்தனையாளர்கள், பெரியாருடைய இயக்கங்கள் தெளிவான இந்தக் கருத்தினை
முன்வைத்து வருகிறோம். அது என்ன? மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது
மிகமிக அவசியமாகும். அது தேவையும்கூட. இதனை எடுத்துச் சொல்லும்பொழுது, சில
பேருக்குப் பக்குவம் இல்லை, சொல்வதைக் கேட்பதற்கு. ஜோசியக்காரனிடம்
செல்வதை விட, மருத்துவரிடம் போய் இரண்டு பேருடைய உடல் நிலையைப் பரிசோதனை
செய்து, சான்றிதழ் வாங்க வேண்டும்; அந்த சான்றிதழ் தவறான சான்றிதழாக
அமைந்துவிடாமல், பாதுகாப்பு ஏற்பாட்டோடு செய்து வந்தால், இப்பொழுது
வருகின்ற வழக்குகளில், பெரும் பாலான அளவிற்கு வருவதற்கு வாய்ப்பில்லாமல்
போகும்.
வழக்குரைஞர்களாக இருக்கின்றவர்களுக்கு,
அருள் மொழி போன்றவர்களுக்கு வழக்குகள் குறைந்துவிட் டனவே என்று யாரும்
வருத்தப்படவேண்டாம்; அவர்களுக்கு வேறு வழக்குகள் நிறையவே இருக்கின்றன,
தாராளமாக!
எதற்காக இதனை எடுத்துச் சொல்கிறோம் என்று
சொன்னால், இந்தச் சிந்தனை இருக்கிறதே, அதற்கு முதலில் விதை போட்டவர்கள்
பெரியார் தொண்டர்கள். இப்பொழுது எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்று
சொன்னால், ஒவ்வொரு நாளும் வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று
கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளம், சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய
மதுரைக் கிளையில் ஒரு நீதியரசர் கிருபாகரன் அவர்கள், வழக்கொன்றில் தீர்ப்பு
அளிக்கும்பொழுது அண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு
சமூகத்தின் அடிப்படையாக இருப்பது
குடும்பம். குடும்பத்தின் தலைவன்-தலைவி சாதாரண இணையர் களாக இல்லாத
பட்சத்தில், மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. ஆண்மையின்மை திருமண
முறிவுக் குக் காரணமாக இருக்கிறது. ஆனால், இதை மறைத்து திருமணம் செய்து
விடுகின்றனர்.
இதனால் விவாகரத்து வழக்குகள் எண்ணிக்கை
அதி கரிப்பதற்கு, ஆண்மையின்மை முக்கியக் காரணமாக இருக் கிறது. இந்த
இயலாமையின் காரணமாக தம்பதியரில் ஒருவர் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான
வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக பெண்கள் இருக் கின்றனர்.
இது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவ தாக உள்ளது.
சமூகக் கட்டுப்பாடுகள், கலாச்சாரத்தின்
பெயரில் இத்தகைய பிரச்சினை பெரும்பாலும் வெளியில் சொல்லப் படுவதில்லை.
ஆனால், இதைத் தடுக்காத பட்சத்தில் பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டே இருக்கும். திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை
மேற்கொள்வதன் மூலம் இப்பிரச்சினையைத் தவிர்க்க முடியும். அதோடு, எச்அய்வி,
எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட வர்கள் திருமணம் செய்துகொள்வதையும் தடுத்துவிட
முடியும். மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னுரிமை
அளிக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்ட கருத்துகளின்
அடிப்படையிலும், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மத்திய, மாநில
அரசுகளுக்கு இந்த கேள்விகளை நீதிமன்றம் முன் வைக்கிறது.
ஆண்மையின்மை குறைபாட்டின் காரணமாக ஏற்படக் கூடிய மண முறிவுகளின் எண்ணிக்கை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு வரப்பெற்றுள்ளதா?
இத்தகைய மணமுறிவைத் தடுக்க திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை கட்டாயம் என்பது அவசியம் இல்லையா?
இத்தகைய வழக்குகளை 6 மாதங்கள் அல்லது ஓராண் டுக்குள் முடிப்பதற்கான திருமணச் சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டு வரவில்லை?
இந்த வழக்குகளில் பாதிக்கப்படும் வாழ்க்கைத் துணைக்கு இழப்பீடு மற்றும் ஏமாற்றியவருக்குத் தண்டனை ஆகிய பிரிவுகளை ஏன் சேர்க்கவில்லை?
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண எத்தகைய நடவடிக் கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன எனத் தெரிவிக்கவேண்டும்.
மேற்கண்டவாறு நீதியரசர் தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தார்.
இதுபற்றிய கருத்தரங்குகளை நடத்தவேண்டும்
என்று நீதியரசர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நேற்றுகூட சென்னையில் டாக்டர்
ராஜசேகர் போன்ற நண்பர்கள், அந்தத் துறையின் வல்லுநர்கள் ஒரு செய்தியாளர்கள்
சந்திப்பினை நடத்தியிருக்கிறார்கள். அந்தச் செய்திகள் ஏடுகளிலே
வந்திருக்கிறது.
எதற்காக இதனைச் சொல்கிறோம் என்றால்,
திராவிடர் கழகத்துக்காரர்களான நாங்கள் சொல்கின்ற கருத்துகள் எல்லாம்
முதலில் அதிர்ச்சிக்குரியதாக இருக்கும்; நடை முறையில் அவை ஒத்துவருமா
என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள். ஆனால், காலப்போக்கில் அதுதான் சிறப்பாக
அமையும். யாரும் அதனை மறுக்க முடியாது.
பெரியாருடைய அருந்தொண்டினாலே இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன
சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி
செல்லாது என்று சொன்னார்கள்; பிறகு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி
செல்லும் என்று நீதிமன்றங்களே தீர்ப்பளிக்கக் கூடிய அளவில் வாய்ப்புகள்
உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவேதான், இங்கே
வந்திருக்கின்ற சகோதரிகளுக்குத் தாய்மார்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம்,
இந்த மணமுறையைப் பார்த்து யாரும் அச்சப்படவேண்டிய அவசியமில்லை. அதனை
நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது
என்று சொன்னார்கள். ஆண்களே படிக்காத ஒரு சமுதாயம்; பெண்களைப்பற்றி
கேட்கவேண்டிய அவசியமே இல்லை. அதேநேரத்தில் இப்பொழுது நீங்கள் எண்ணிப்
பாருங்கள்; இப்பொழுது பெண் குழந்தைகளை யாராவது பள்ளிக்கூடத் திற்கு
அனுப்பாமல் இருக்கக்கூடிய துணிச்சல் யாருக்காவது உண்டா? அப்படி நாம்
வீட்டில் வைத்திருக்க முடியுமா? அப்படி வைத்திருந்தால், யாராவது
ஒப்புக்கொள்வார்களா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
இப்பொழுது
ஏராளமாகப் படித்தவர்கள், ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக படித்து
வருகிறார்கள். பெண்கள்தான் முதன்மை யாக வருகிறார்கள். இவையெல்லாம் எப்படி
நடந்தது? தந்தை பெரியாருடைய அருந்தொண்டினாலே இந்த மாற்றங்கள்
வந்திருக்கின்றன.
இந்த அழைப்பிதழைப் பார்த்தாலே
உங்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரும் சிறந்த பட்டதாரிகளாக, இந்தக்
குடும்பத்திற்கு வந்த பெண்கள் பொறியாளர்களாக, வழக் குரைஞர்களாக,
மருத்துவர்களாக இவ்வளவு பேர் வரக் கூடிய அளவிற்கு சமுதாய மாற்றங்கள்
இன்றைக்கு ஏற் பட்டிருக்கின்றன.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு
என்று கேட்ட காலம் இப்பொழுது இல்லை. அப்படி பேசினால், கேலி செய்வார்கள்.
அப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் வருகிறது என்று சொன்னால், தந்தை
பெரியாருடைய இயக்கத்தினாலே - இந்த இயக்கம் என்ன செய்தது என்பதை
புரிந்துகொள்ளவேண்டும். இந்த இயக்கம் இல்லா விட்டால், இவ்வளவு
மகிழ்ச்சியாக, இவ்வளவு கற்றோர் களாக சரி பகுதியாக பெண்கள்
ஆகியிருக்கமாட்டார்கள். எனவேதான், அருமைத் தாய்மார்களே, அன்புள்ளம் கொண்ட
சகோதரிகளே இன்னமும் சொல்லிக் கொள் கிறோம், உங்கள் உரிமைகளை நீங்கள் தெளிவாக
உணருங் கள். இன்னமும் சொத்துரிமை - சம உரிமையாக சட்டம் வந்திருக்கிறது.
ஆனால், இந்த உண்மை பல பெண்களுக்கு இது தெரியாது. சொத்துரிமை சமமாக
இருக்கிறது - நம்மை எந்த ஆணும் இழிவுபடுத்தி பேச முடியாது என்பதுபற்றி.
ஆனால், இன்றைக்கு எவ்வளவு பெரிய கொடுமைகள் பெண்களுக்கு
நடந்துகொண்டிருக்கின்றன என்பது ஒரு பக்கம் நடந்தாலும்கூட, மற்றொரு
பக்கத்தில், அதனை எதிர்த்துப் போராடக்கூடிய அளவிற்கு துணிச்சலைப்
பெற்றிருக்கிறார்கள், சட்டப் பாதுகாப்பைப் பெற்றிருக் கிறார்கள்.
கறுப்புச் சட்டைக்காரர்கள் இடையறாது உழைத்ததினால்தான், இன்றைக்கு மகளிரும் சம உரிமை பெற்றனர்
இவைகளெல்லாம் ஏதோ திடீரென்று நடந்தவைகள்
அல்ல; சத்திய சாய்பாபா கையைத் தூக்கியதால், பொத் தென்று கீழே விழுந்ததல்ல;
ஆதிபராசக்தி, ஓம் சக்தி என்று சொன்னதனால் வந்ததல்ல. மாறாக, இடையறாத இந்த
இயக்கம், சுயமரியாதை இயக்கம், தலைவர் தந்தை பெரியார் அவர்கள், கறுப்புச்
சட்டைக்காரர்கள் இடையறாது உழைத் ததினால்தான், இன்றைக்கு மகளிரும் சம உரிமை
பெற்றனர்.
பெரியார் கேட்டார், மக்கள்தொகையில் சரி
பகுதியாக இருக்கின்ற பெண்கள்; அவர்களுக்கு உரிமை வேண்டாமா? முதலில்
பெண்களுக்கு உரிமை கொடு என்று சொன்னார். பெண்ணை பூட்டி வைக்காதே! பெண்ணை
பொருளென்று நினைக்காதே! பெண்கள் வெறும் அலங்கார பொம்மைகள் அல்ல; பெண்கள்
வெறும் சமையல் கருவிகள் அல்ல! பெண்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்கள்
அல்ல என்று இவ்வளவு கடுமையாகச் சொன்னார். இப்படி சொன்ன பிறகுதான், ஒரு
பெரிய திருப்பம் ஏற்பட்டது. அந்தத் திருப்பம் ஏற்பட்டதன் விளைவுதான்,
இப்படிப்பட்ட அற்புதமான குடும்பங்கள் உருவாகியிருக்கின்றன. இந்தக்
குடும்பம் ஒரு நல்ல கொள்கைப் பல்கலைக் கழகம். இதனால் பெரியாருக்கு லாபமா?
என்று நீங்கள் கேட்கலாம். எங்களுக்கு என்ன இதில் லாபம் இருக்கிறது.
உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையப் போகிறது. உங்களுடைய பிள்ளைகள்
சொந்தக்காலில் நிற்கிறார்கள். உங்களுடைய பெண் பிள்ளைகள் சொந்தக் காலில்
நிற்கிறார்கள். படித்துவிட்ட பெண்கள், உத்தியோகத்திற்குச் செல்லும்
பெண்கள், பதவியில் இருக்கும் பெண்கள் என்று சொன்னால், அவர்களை எந்த ஆணும்
எளிதில் விரட்டிவிட முடியாது. என்னை அடித்தால், நீயும் அடி வாங்குவாய் என்ற
நிலை, 70 ஆண்டுகளுக்கு முன்னால் இல்லை. உன்னால் என்ன செய்ய முடியும்? என்
காலைக் கட்டிக்கொண்டுதானே இருக்கவேண்டும் என்று சொன்னார் கள். இன்றைக்கு
அப்படி அல்ல; பெண்கள் துணிந்து எதிர்த்துப் போராடக் கூடிய நிலையில்
இருக்கிறார்கள். அந்த அளவிற்கு துணிச்சல், தெளிவு வந்திருக்கிறது.
இவையெல்லாம் இந்த இயக்கத்தினாலே ஏற்படுத்தப் பட்டவை. திராவிடர் இயக்கம்
மலர்ந்த காரணத்தினாலே, செயல்பட்ட காரணத்தினாலே இன்றைக்கு இவ்வளவு பெரிய
மாறுதல்கள் வந்திருக்கின்றன. எனவே, அந்த மாறுதல்களில் பூத்த அற்புதமான
மலர்கள்தான் இங்கே மணமக்களாக இருக்கிறார்கள்.
யாருடைய படம் உங்கள் வீட்டில் இருக்கிறதோ, இல்லையோ பெரியார் படம் இருக்கவேண்டும்!
இதிலே காய்த்து கனிந்தவைதான் அவர்களின்
வாழ்க்கை வெற்றிகளாக அமைந்து கொண்டிருக்கின்றன. எனவே, அருமைத் தாய்மார்களே,
யாருடைய படம் உங்கள் வீட்டில் இருக்கிறதோ, இல்லையோ பெரியார் படம் இருக்க
வேண்டும். காரணம், பெரியார் இல்லையானால், மகளிர் இந்த உரிமைகளைப்
பெற்றிருக்க முடியாது; மகளிருக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்க முடியாது.
மகளிருக்குச் சொத்துரிமை, மகளிருக்கு கல்வி உரிமை, மகளிருக்கு பதவி உரிமை,
மகளிருக்கு மான உரிமை, மகளிருக்கு ஒட்டு மொத்தமான வாழ்வுரிமை இவை
அத்தனையும் தந்தவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.
எனவேதான், இன்றைக்கு வளர்ச்சி
ஏற்பட்டிருக்கிறது. உங்கள் பெண் குழந்தைகளாக இருந்தாலும், அவர்களை நன்றாகப்
படிக்க வையுங்கள். அவர்களுக்கு எவ்வளவு சொத்து கொடுப்போம் என்பதைப்பற்றி
கவலைப்படா தீர்கள்; அறிவுசார் சொத்து படிப்பு என்று சொல்லி, அதனை நீங்கள்
தாராளமாகக் கொடுங்கள். அதனை நீங்கள் கொடுத்து, சொந்தக்காலில் நிற்க அந்தப்
பெண்ணை நீங்கள் தயாரித்துவிட்டால், நிச்சயமாக, ஆமையாகவோ, ஊமையா கவோ
ஒருபோதும் அந்தப் பெண் இருக்கமாட்டார். இதைத்தான் தந்தை பெரியார் சொன்னார்.
இது நடை முறையில் இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்,
தாய்மார்களே, சகோதரிகளே நீங்கள் நினைத் துப் பார்க்கவேண்டும்.
சுயமரியாதைத் திருமணங்கள் உங்கள் வீட்டிலும் நடைபெறவேண்டும்
அதேபோல, வைதீக மணம் இங்கே இல்லையென்ப
தால், என்ன சங்கடம்? தேவையற்ற சடங்குகள் இல்லை. மணமக்கள் இருவரும் எவ்வளவு
மகிழ்ச்சியோடு அமர்ந் திருக்கிறார்கள். வைதீக முறையில் மணவிழா நடைபெற்றி
ருந்தால், இவ்வளவு மகிழ்ச்சியாக உட்கார விட்டிருப்பார் களா? இவ்வளவு
வசதியாக உட்கார்ந்திருப்பார்களா? மாங்குச்சி சுள்ளியைப் போட்டுக் கொளுத்தி,
மணமகள் கண்ணைக் கசக்க, மணமகன் கண்ணை கசக்க எதிரே இருக்கின்ற பாட்டி, ஏன்
மணமகள் அழுகிறார் என்று கேட்க, ஏதோ இருக்கும்போல இருக்கு என்று பக்கத்தில்
அமர்ந்திருப்பவர் சொல்ல, இவ்வளவும் ஏற்படுமே, அதற்கெல்லாம் வாய்ப்புகள்
இங்கே இருக்கிறதா என்பதை நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஆகவேதான், சடங்கில்லை, சம்பிரதாயம் இல்லை
என் பதற்காக, நீங்கள் யாரும் கூச்சப்படவேண்டாம்; பயப்பட வேண்டாம்; அச்சத்தை
அகற்றுங்கள்; வாழ்வியலை நோக்குங்கள். அந்த வகையில்தான், இந்த மணமக்களின்
வாழ்க்கையைப் பார்த்து, இதுபோன்ற திருமணங்கள் நம் வீட்டிலும்
நடைபெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
இன்னமும்கூட, பிராமணன், சடங்கு,
சம்பிரதாயங்கள் இல்லாமல் மணவிழாவினை நடத்தினால் என்னாகுமோ, ஏதாகுமோ என்று
நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. எது அறிவுக்கு சரி என்று படுகிறதோ,
எது உங்களுக்குத் தேவை என்று படுகிறதோ அதனை செய்யுங்கள். மணவிழாவிற்கு மாமா
வரவில்லை, சித்தப்பா வரவில்லை, அப்பா வரவில்லை, அம்மா வரவில்லை என்றால்
கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. புரோகிதர் வரவில்லை என்று
கவலைப்பட்டால், அவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
பெரியாருடைய கொள்கைகள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது
திருமணத்தை நடத்தி வைக்கும்பொழுது அந்தப்
புரோகிதர் சமஸ்கிருத மொழியில் சொல்லும் மந்திரத்திற்கு என்ன பொருள் என்று
தெரியாது. மறுபடியும் சமஸ்கிருதம் வரவேண்டும் என்று நினைத்தார்கள்.
பெரியார் ஊட்டிய உணர்வுகள் இங்கே கொழுந்து விட்டு எரிகின்ற காரணத்
தினால்தான், அத்துணைக் கட்சிகாரர்களும் சேர்ந்து தமிழ் நாட்டில் எதிர்த்தன,
அதை உள்ளே நுழையவிடுவதில்லை என்று சொன்னால், இன்னமும் பெரியாருடைய கொள்கை
கள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது, அசைக்க முடியாத, வேரோடி
இருக்கிறது என்பதற்கு அடையாளம்.
நான் பொதுவாகவே மணமக்களுக்கு அறிவுரையை
சொல்வதில்லை. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லை.
மணமக்களுக்கு வேண்டு கோளாக சில செய்திகளை சொல்லவேண்டும்.
உங்களுடைய அறிவு, ஆற்றல் தெளிவானது, உறுதி
யானது. உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தும்; உங்களு டைய பகுத்தறிவு உங்களை
உயர்த்தும். அது உண்மை. ஆனால், நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும்,
எவ்வளவு பெரிய பதவிக்குச் சென்றாலும், கை நிறைய எவ்வளவு சம்பாதித்தாலும்,
எவ்வளவு புகழ் பெற்ற நபராக நீங்கள் ஆனாலும், நீங்கள் மறவாமல் ஒன்றைச்
செய்யவேண்டும். அதுதான், உங்கள் பெற்றோர்களுக்கு நன்றி காட்டவேண்டும்;
உங்கள் பெற்றோரிடம் நீங்கள் பாசம் காட்டவேண்டும்; உங்கள் பெற்றோர்களுடைய
உதவியை நீங்கள் மறக்கக்கூடாது. ஏனென்றால், இப் பொழுது படிப்பு உயர்கிறது;
பாசம் குறைகிறது பல குடும்பங் களில். அது வேதனையாக ஆகக்கூடிய சூழல்
ஏற்படுகிறது.
ஆகவேதான் நண்பர்களே, எல்லா
மணவிழாக்களிலும் உரையாற்றும்பொழுது நான் சொல்வது என்னவென்றால், இல்லறம்,
துறவறம் என்றுதான் முன்பு சொன்னார்கள். பெரியார்தான் அதனை மாற்றினார்;
இல்லறம் - தொண்டறம் என்று சொன்னார். இல்லறத்தில் இருந்துகொண்டே தொண்டறத்தை
செய்யுங்கள். தொண்டறம் என்பது வேறொன்றும் இல்லை. யார் யாருக்கு உதவ
முடியுமோ, அவர்களுக்கெல்லாம் நீங்கள் உதவுங்கள். உங்களுக்கு யார்
உதவினார்களோ அவர்களுக்கு உங்கள் சக்திகேற்ப, உங்கள் வாய்ப்புக்கேற்ப
உதவுங்கள். அதன்மூலமாக மகிழ்ச்சியை நீங்கள் அற்புதமான ஊதியமாகப் பெறக்
கூடிய வாய்ப்பு ஏற்படும்.
அடுத்து, அன்புச் செல்வங்களே, நீங்கள்
சிக்கனமாக வாழுங்கள்; எளிமையாக வாழுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்து வாழுங்கள். அண்ணா சொன்னதை ஒவ்வொரு மணவிழாவிலும் நான் சொல்வது
வழக்கம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள்
விட்டுக் கொடுப்பதில்லை. இதனை நீங்கள் மனதில் வைத்துக்கொண்டு,
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்; வாழ்க்கைக்கும்
விளையாட்டுக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. அது என்ன வென்றால்,
விளையாட்டில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்குப் பரிசு உண்டு.
ஆனால், இல்லற வாழ்க் கையைப் பொறுத்தவரையில், யார் தோற்கிறார்களோ,
அவருக்குத்தான் பரிசு உண்டு. ஆகவேதான், தோற்றுப் போவதால், நீங்கள் யாரும்
வருத்தப்படாதீர்கள். ஒருவர் முந்த, இன்னொருவர் முந்தாமல், ஒருவரிடம் இன்
னொருவர் தோல்வியை விரும்புங்கள். அதில் ஏற்படுகின்ற சுவையை நீங்கள்
அனுபவிக்கலாம். அதில் ஏற்படுகின்ற இன்பத்தைப் புரிந்துகொண்டு வாழலாம்.
ஆகவே, அற்புதமான வாழ்க்கையை உங்கள் வாழ்க்
கையை அருமை இளஞ்சிட்டுக்களே, இளம் மணமக்களே நீங்கள் உங்கள் வாழ்க்கையை
அமைத்துக் கொள்ளுங்கள். அதன்மூலம் இல்லறத்தையும், தொண்டறத்தையும் சிறப் பாக
நடத்துங்கள்.
பெரியார் சொன்னது இன்றைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டதே
தந்தை பெரியாரிடம் ஒருவர் கேட்டார்,
சுயமரியாதைத் திருமண முறையை நடத்துவதற்கு சில வழிமுறைகளைப்
பின்பற்றவேண்டும் என்று சொல்லலாம் அல்லவா என்று.
உடனே பெரியார் சொன்னார், அதுபோல் நான்
செய்தால், அதுவே பிற்காலத்தில் சடங்காக மாறிவிடும். அது தேவையில்லை.
அவ்வப்பொழுது அறிவுக்குத் தோன்றுவது என்னவோ அதுபோல் செய்யவேண்டும். நான்
திருமணம் நடத்துவது என்பது, கார் மாடல் மாதிரி என்று சொன்னார்.
உதாரணத்திற்கு, 2000 ஆம் ஆண்டு வாங்கிய
கார் இப்பொழுது 2014 ஆம் ஆண்டு அவுட் ஆஃப் பேஷனாகி விட்டது. 2013 ஆம் ஆண்டு
வந்த கார் மாடலே, 2014 ஆம் ஆண்டு பழைய மாடலாகப் போய்விட்டது.
அதுபோல, சுயமரியாதைத் திருமணத்தை நடத்துவ
தற்கு நாங்கள் தேவையில்லை; போகப் போக, அவர்களே முடிவு செய்து, தேவையானால்
பெற்றோர்கள், நண்பர்களை மட்டுமே வரச் சொல்லி மாலை மாற்றிக்கொண்டால் போதும்
என்று சொன்னார் தந்தை பெரியார்.
பெரியார் சொன்னது இன்றைக்கு நடைமுறைக்கு
வந்துவிட்டதே! ஆப்பிரிக்காவில் பெண் இருக்கிறார்; அமெரிக்காவில் மாப்பிள்ளை
இருக்கிறார். திருமணத்தை தள்ளிப் போட இருவருக்கும் விருப்பம் இல்லை. உடனே
திருமணத்தை இணையத்தின்மூலம் செய்து கொள் கிறார்கள். பெரியார் என்பவர்
எவ்வளவு பெரிய முன் னோக்கு உள்ளவர்கள்; தொலைநோக்காளர் என்பதற்கு இது ஒரு
அற்புதமான எடுத்துக்காட்டாகும்.
ஆகவேதான், அதைத்தான் இந்த மணவிழா அழைப் பிதழில் அழகாக எடுத்துப் போட்டிருக்கிறார்கள்;
மணமுறைக்கு பழைமையைத் தேடித் திரியவேண்டிய
தில்லை. கால நிலைக்கும், சமுதாய நிலைக்கும், அறிவு முதிர்ச்சி நிலைக்கும்
ஏற்றபடிதான் முறைகள் வகுக்கப்பட வேண்டுமே ஒழிய, ஒரு காலத்து முறைகளே,
எக்காலத்திற்கும் என்றால், மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான்
பொருள்.
அழைப்பிதழில் இருக்கின்ற மற்ற பகுதிகள்
எல்லாம் தகவல்கள். ஆனால், இது இருக்கிறது பாருங்கள்; அறிவை சாணைப்
பிடிக்கின்ற பகுதி. ஆகவேதான், பெரியாருடைய பொன்மொழியை மிகச் சிறப்பாக
எடுத்துப் போட்டிருக் கிறார்கள். அந்த வகையில், சுயமரியாதைத் திருமண
முறையைப் புகுத்தியவர் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
இதற்குச் சட்ட வடிவமாக்கிய பெருமை பேரறி ஞர் அண்ணா அவர்களையே சாரும். 1967
ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்து, தந்தை பெரியார்
அவர்களுக்கே அந்த ஆட்சி காணிக்கை என்று சட்டமன்றத்தில் அறிவித்த அண்ணா
அவர்கள், அந்த மணமுறைக்குச் சட்ட வடிவம் கொடுத்தார்கள். நடந்த
திருமணங்கள், நடக்கும் திருமணங்கள், இனி நடக்கப் போகும் திருமணங்கள்
எல்லாம் செல்லுபடியாகும் என்று சொன்னார்கள்.
அந்த மணமுறை இப்பொழுது சிறப்பாக நடைபெறு
கிறது. எனவே, இங்கு இப்பொழுது நடைபெறுவது சமு தாயத்தாலே ஒப்புக்கொள்ளப்பட்ட
மணவிழா; சட்டத்தாலே அங்கீகரிக்கப்பட்ட மணவிழா. ஆகவே, அதற்குக் காரணமான
இருபெரும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய இருவருடைய
நினைவிற்கும் வீரவணக்கம் செலுத்தி, அவர்களுடைய தொண்டினை நினைவு கூர்ந்து,
மணமக்கள் தண்ணிழல், சிவசங்கரி ஆகியோருடைய மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
-------------------------------- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்---”விடுதலை” 29-09-2014