Search This Blog

22.11.12

நாத்திகம் பேசாமல் நாசமாய்ப் போன பக்திப் பஜனைப் பாட்டா பாடுவார்கள்?

ஆம், அதே புதுச்சேரியில்தான்!
22.7.1945 திரையரங்கு ஒன்றில் திராவிடர் கழகத் துவக்க விழா; ஏற்பாடு செய்தவர் யார்?

இயக்கக் கவிஞன் என்று நாம் மார்புப் புடைக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்தான் அந்த விழா ஏற்பாட்டாளர். வெறும் மாலை நேரம் பொதுக் கூட்டமல்ல காலை - மாலை இருவேளைகளிலும் விழா!

தலைமை ஏற்றவரோ தந்தை பெரியார்! கழகக் கொடியேற்றியவரோ அறிஞர் அண்ணா! தந்தை பெரியார் படத்தைத் திறந்தவரோ மாணவர் க.அன்பழகன் (இன்றைய பேராசிரியர்). திராவிட நாடு படத்தினைத் திறந்து வைத்து ஒரு மணி நேரம் முழங்கியவர் தந்தை பெரியார்.

ஆந்திர மாநிலச் சுற்றுப் பயணத்தை முடித்து வந்ததால் களைப்புற்ற அந்தக் கர்ச்சனைச் சிங்கம் மயக்கமுற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அடைந்தனர் பதற்றம், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி டி.சண்முகம் அவர்களைத் தலைமை ஏற்கச் சொல்லி ஓய்வெடுக்கச் சென்றார் தந்தை பெரியார். பிற்பகல் நிகழ்ச்சியிலோ கலகம் மூண்டது. கறுஞ் சட்டைச் சிறுத்தைகளின் திரண்டு வந்த கருத்து  வெள்ளத்திற்கு முகம் கொடுக்க முடியாத கோழைகள் காலித்தனத்தில் இறங்கினர். அந்தக் காலகட்டத்தில் இவை எல்லாம் சர்வசாதாரணம்.

வீதிகளில் சென்ற கருஞ்சட்டைத் தொண்டர்கள் எல்லாம் தாக்கப்பட்டனர். அதோ பாரடா வாத்தியாரு - அவனை விடாதே - பிடி! என்று ஆத்திரத்தோடு ஓடி வந்தது ஒரு கும்பல். வாத்தியார் என்றால் வேறு யாருமல்ல - நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத்தான் அப்படி அழைத்தார்கள் - விரட்டினார்கள்.
புரட்சிக்கவிஞர் மட்டுமா? காஞ்சி கலியாணசுந்தரமும், அன்றைய திருவாரூர் மு.கருணாநிதி என்ற 21 வயது இளைஞரும் சிக்கிக் கொண்டனர்.

கலைஞர் சிக்கிக் கொண்டார். ஆனமட்டும் அடித்துத் தூக்கி எறிந்து சென்றனர் - பையன் குளோஸ் என்ற எண்ணத்தில். அடிபட்ட அந்த இளைஞனைப் பார்த்த அய்யா ஆசுவாசப்படுத்தினார்.  அதைப்பற்றிக் கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நான் கண்விழித்துப் பார்த்தேன். எங்கேயோ வீட்டுத் தாழ்வாரத்தில் நான் படுக்க வைக்கப்பட்டிருந் தேன். முதிர்ந்த ஒரு தாயும், ஒரு சிறுமியும், ஓர் இளை ஞனும் என் அருகே இருந்தார்கள். நான் கண் விழித்துப் பார்த்தபோது அந்தத் தாய் சொன்ன வார்த்தை என் நெஞ்சில் அப்படியே பதிந்து விட்டது.
அய்யோ, யார் பெற்ற பிள்ளையோ! இப்படிச் சாகக் கிடக்கிறதே? என்பதுதான் அந்தத் தாயின் வாயிலிருந்து வந்த கனிவு மிக்க வாசகம்.

நீண்ட நாள் வரை தேடிக் கொண்டிருந்தேன்; புதுவை யில் எனக்கு உயிரளித்த அந்த நல்லவர்கள் யாரென்று. அதற்குப் பிறகு நான் அவர்களை இரண்டொரு முறை சந்தித்தேன். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்

இதற்கிடையில் காலையில் கலைக்கப்பட்ட கழக மாநாடு மீண்டும் மாலையில் கூட்டப்பட்டு அழகிரிசாமி அந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன வாசகம்தான், காலையில் சில கவலை தரத்தக்க நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கேள்விப்பட் டேன் - நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதாகும்.
என்னுடைய நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் தலைவர்கள் ஊரெல்லாம் ஆள் அனுப்பித் தேடியிருக்கிறார்கள். பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் துடித்துப்போயினர். விடியற்காலை நாலு மணிக்கு தலைவர்கள் தங்கியிருக்கும் இடம் தெரிந்து அவர்களிடம் போய்ச் சேரப் புறப்பட்டேன். மீண்டும் என்னைத் தெருவில் கண்டால் கலக்காரர்கள் உயிரைப் பறித்துவிடக் கூடுமென்று அஞ்சிய எனக்கு உதவி செய்த வீட்டார் என்னை மாறுவேடத்தில் போகுமாறு வலியுறுத்தினர்.

அவர்களே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து, முஸ்லீம் வேடத்தில் என்னை அனுப்பி வைக்கத் திட்ட மிட்டனர். கைலி, நீண்ட ஜிப்பா, தலையில் குல்லாய் இவைகளுடன் ரிக்ஷா ஏறி தலைவர்கள் இருக்குமிடம் சென்றேன். பெரியார் கண்ணுறங்காமல் என்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்டதும் ஆரத் தழுவிக்கொண்டு, சுகமாக இருக் கிறயா? என தழுதழுத்த குரலில் கேட்டார்.

அதற்குப் பிறகு அவரே என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டார். என்னுடன் வா, போகலாம் என்று ஆணையிட்டார். நானும் அவருடன் புறப்படத் தயாரானேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் பெரியாரின் ஈரோட்டுக் குடிஅரசு அலுவலகத்தில் துணையாசிரி யனாகப் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. என் இனிய நண்பர் கருணானந்தம், ஜனார்த்தனம், தவமணி ராஜன் ஆகியோர் குடிஅரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த காலம் அது.
(கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூல் பக்கம் 90, 91)

தேதி சொல்லியாயிற்று - நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பும் சொல்லியாயிற்று, கலவரத்தைப் பற்றியும் விவரித்தாகி விட்டது. இவையெல்லாம் நடந்தது எந்த ஊரில்?

எந்த ஊரிலா - புரட்சிக் கவிஞரை ஈன்று புறந்தந்த அந்தப் புதுச்சேரி மண்ணில்தான் இவ்வளவு அரங் கேற்றங்களும்.
கருஞ்சட்டைத் தோழர் குருதி கொட்டிய அதே புதுவையில்தான் நாளை மறுநாள் (23.11.2012) வெள்ளியன்று திராவிடர் கழக மாநாடு.
1945இல் நடந்ததுபோல காலை - மாலை இரு வேளைகளிலும் மாநாட்டு நிகழ்ச்சிகள். கூடுதலாக ஒரு சிறப்பு - இந்த மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி யும் உண்டு.

ஊரையே கலக்கப் போகிற இந்த கருஞ்சட்டை வெள்ளம் கரைபுரண்டு ஓடப்போகிறது! கருத்துக் கர்ச்சனை கேட்கப் போகிறது. கத்துங்கடல் சூழ்ந்த புதுவையிலே கழகத் தோழர்களின் முழக்கம் கடல் அலைகளையும் அடங்கச் செய்யும். ஆவேசம் உண்டு என்றாலும், அமைதிக்குப் பங்கம் இருக்காது; கனல் பறக்கும் பேச்சு உண்டு - எந்த நிலையிலும் கண்ணியத் திற்குக் குந்தகம் இருக்கவே இருக்காது.

புரட்சி முழக்கங்கள் விண்ணை முட்டும். ஆனால் புரட்டுப் பேச்சுகள் கிடையாது.  பந்தை அடிக்க முடியாத கோழையல்லவா காலை அடிப்பான்? தலைமுறை தலை முறையாக கடல் கடலாய்க் கருத்துச் செல்வங்களைக் குவித்துச் சென்றுள்ளாரே குவலயத் தலைவராம் நமது அறிவுத் தந்தை. முக்கியமானதோர் காலகட்டத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. புதுச்சேரி என்றாலும், தமிழ்நாடு என்றாலும் நம் தமிழ் மக்களின் பூமிதானே. பிரச்சினைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பயணம் செய்யக் கூடியவைதானே.
ஜாதியற்ற சமூகம் படைப்போம், தீண்டாமை நோயைத் தீர்த்துக் கட்டுவோம்! மூடநம்பிக்கையை முற்றாக ஒழிப்போம்; சமூக நீதி சங்கநாதம் செய்வோம்! பெண்ணுரிமைக்குப் பீரங்கிக் குரல் கொடுப்போம்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கு வழி செய்ய வலியுறுத்துவோம். மண்ணுக்கு உரிமை கேட்போரே! மனித உரிமைக்குக் குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! என்று அழைப்புக் கொடுப்போம்!
பெரியார் பணி முடிக்க வாரீர்! வாரீர்!! என்று பெருங்குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! ஒரு சேதி தெரியுமா?  

அதுதான் நமது மாநாட்டு விளம்பரப் பொறுப்பை எப்பொழுதும் நம் எதிரிகள் கையில் எடுத்துக் கொள்வார்களே - அதே வேலையைத்தான் புதுவையிலும் செய்துள்ளார்கள்.

சபாஷ்! அப்படி வாருமய்யா - இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களே! கருத்தைக் கருத் தோடு சந்திக்க இயலாத கடைந்தெடுத்த கோழைகள் காவல்துறைக்கு மூச்சு இரைக்க இரைக்க ஓடி மனு கொடுத்துள்ளார்களாம். கருஞ்சட்டைக்காரர்கள் நாத்திகம் பேசுவார்களாம். நாத்திகம் பேசாமல் நாசமாய்ப் போன பக்திப் பஜனைப் பாட்டா பாடுவார்கள்?
அந்த நாத்திகம்தானே சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி என்ற தன்மான உணர்வும் ஊட்டியது. அந்த நாத்திகம்தானே தமிழர்களுக்குக் கல்வி உரிமையை வாங்கிக் கொடுத்தது - உத்தியோக வாய்ப்புக்கு வழி செய்து கொடுத்தது. இன்னும் எத்தனை எத்தனையோ பட்டியல் உண்டே - இந்த நாத்திக இயக்கம் சாதித்துக் கொடுத்தது சாதனைகள் பற்றி! வாலாட்டிப் பார்க் கிறார்கள் - வாருங்கள், தோழர்களே வங்கக் கடலாய் - கருங் கடலாய்! அடேயப்பா - இத்தனை ஆயிரம் இளைஞர்களா இந்த ஈரோட்டுக் கிழவனாரின் மறைவிற்குப் பிறகும்? என்று கரித்துக் கொட்டட்டும் கபோதிகள்.
காலை கருத்தரங்க நிகழ்ச்சிக்கே வந்து குவிந்திடுவீர்! குடும்பத்தாரையும் கூட்டி வாருங்கள். தமிழர் தலைவர் அழைக்கிறார் புறப்படுங்கள். புரட்சிக் கவிஞன் மண்ணிலே புரட்சி இயக்கத்தின் மகத்துவம் காட்டுவோம், வாரீர்! வாரீர்!!
தீக்குண்டம்! தீக்குண்டம்!
தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காணத்தக்கது. புதுச்சேரி மக்களால் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி! பக்திக்கும், தீமிதிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபிக்கும் - அறிவியல் சிந்தனையைத் தூண்டும் செயல்முறை விளக்கம் இது. வாருங்கள், தோழர்களே!
                    ------------------------மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை 21-11-2012

6 comments:

தமிழ் ஓவியா said...


திறன் பத்து என் சொத்து படியுங்கள்!


இப்போதெல்லாம் இளைஞர்கள் பலருக்கு சிந்திக்கும் ஆற்றலும், அவற்றை எழுத்து வடிவத்தில் கட்டுரை களாக்கி சிறு புத்தகமாகவும் ஆக்கிப் பரப்புகிறார்கள்.
அப்படிப்பட்ட நடுத்தர வயதினரான திரு. வைகை ஆ. விசுவநாதன் என் னிடத்தில் திறன் பத்து என் சொத்து என்ற தலைப்பில் ஒரு கையடக்க நூலை அளித்துச் சென்றார்!

எளிய முறையில் கருத்தைச் சொல்லி கவனத்தைச் சுண்டி இழுத்து சிந்திக்க வைக்கும் திசை காட்டும் கருவிபோல் இருந்தது.

பாராட்டத்தக்க இதுபோன்றவர் களின் பணி - எழுத்துத் தொண்டு மிகவும் போற்றி வரவேற்கத்தக்கதாகும்!

தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாத அன்றன்றும் புதுமைகளை சுவைக்கவேண்டும் என்பார் புரட்சிக் கவிஞர்.

அதற்கேற்ப இச்சிறுநூல், பயணங் களின்போது படிக்கப் பயன்படும் வகை யில் அமைந்துள்ள, பயணக் களைப்ப கற்றும் பலே நண்பனாகவும் கூட அமையலாம் - சில பயணாளிகளுக்கு!

தம்பியண்ணா என்பது இவரது புனை பெயர்.

உங்கள்

பலங்களை

பலப்படுத்துங்கள்;

பலவீனங்களை

பலவீனப்படுத்துங்கள்

- என்ற வரிகளுடன் தொடங்கும் இச்சிறு வெளியீட்டில்,

மனிதாபிமானம்

மற்றவர்

+

நிறைவு

நிலை

+

தக்க செயல்

தனதாக

உணர்வு

எனப் போட்டு,

மற்றவர் நிலையை தனதாக உணர்தல் தன்னிலையில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து, மற்றவர் நிலையை தனது என உணர்ந்து, அவருடைய

நெருக்கடியிலிருந்து அவரை விடுவித்தல் என்று கூறுகிறார்.

ஆம், ஆங்கிலத்தில் நுஅயீயவால என்ற சொல்லின் முழு விளக்கம் இது என்றால் மிகப் பொருத்தம் அது!

மனிதாபிமானமும், நிறைவும் கொண்ட ஒருவரே, மற்றவர் நிலையை தனதாக உணர்ந்து, தக்க செயல் செய்ய முடியும்; இது பிறர் மீது இரக்கம் காட்டுவதல்ல; (Sympathy என்பது இரக்கம் என்பதாகும்) தனது மேம்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துவது.

யார் வெற்றி பெறவேண்டும் என்பதை விட யார் தோற்றுவிடக் கூடாது என்ற நிறைவான உணர்வு இது!

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் (குறள் 214)

என்ற குறளுக்கு மிக அருமையான விளக்கமாக மேற்காட்டிய வரிகள், வந்து நிற்கின்றன!

இதுபோல பலப்பல

பயனுறும் கருத்து முத்துக்கள்!

மனம் திறந்து கேளுங்கள்,

சுவையாக, சுருக்கமாக

சூழலுக்கேற்பப் பேசுங்கள்....!

இதைக் கடைப்பிடிக்க கற்றுக் கொள் வோம், வாரீர்!

எனவே, இக்கட்டுரையும் சுருக்க மாகவே முடிவது நல்லதல்லவா?

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


மூதறிஞர் குழு


1987 இல் சென்னை - பெரியார் திடலில் தொடங்கப்பட்ட தமிழக மூதறிஞர் குழு 25 ஆம் ஆண்டில் தன் பொன்னடிகளைப் பதித்துள்ளது.

நீதியரசர் திரு.பெ. வேணுகோபால் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பொறி யாளர் ஞான. அய்யாசாமி, வரியியல் அறிஞர் ச. இராசரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கி அமைப்பினைச் சிறப்பாக நடத்தித் தந்தார்.

பல்துறைகளைச் சேர்ந்த - தமிழர்களில் பெரு மைக்குரிய பெருமக்கள் எல்லாம் தங்களின் அனுபவக் கடலிலிருந்து ஒளிமிகுந்த முத்துக்களை வாரி வழங்கி இருக்கின்றனர்.

காவிரி நதிநீர்ப் பிரச்சினை முதல், நிதிநிலை அறிக்கை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முதிர்ந்த கருத்துகளை இவ்வமைப்பு வழங்கியதுண்டு.
வெளியுறவுத் துறை செயலாளராக இருந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் தெளிவான கருத்தினைக் கொண்டிருந்த ஏ.பி. வெங்கடேசன் அய்.ஏ.எஸ். அவர்கள் கூட மூதறிஞர் குழுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய துண்டு.

அத்தகு சிறப்புக்குரிய தமிழக மூதறிஞர் குழுவின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் புதிய தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதியாக சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கக் கூடிய நீதியரசர் எஸ். மோகன் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

திரு. எஸ். மோகன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களிடம் அன்பு கொண்டவர். அரசு பிளீடராக பணி ஆற்றிய காலந்தொட்டு பெரியார் திடலோடு நெருங்கிய தொடர்புகொண்டவர்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு மத்திய அரசு வெளியிட்ட சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங் கினார்; நீதியரசர் ஏ. வரதராசன் அதனை வெளி யிட்டார்.

நடைபாதைக் கோவில்களை அகற்றவேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் சங்கநாதம் செய்தார். துக்ளக் போன்ற ஏடுகள் அவர் உரையைக் கடுமையாக விமர்சித்தன; அவற்றைப்பற்றியெல்லாம் அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

ஆங்கிலத்திலும் கவிதை எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவர். அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்று; புரபசர் கே.ஆர்.குமார் கண்களைக் கட்டிக்கொண்டு அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை யிலிருந்து இரு சக்கர வண்டியில் பெரியார் திடலுக்கு வந்து சேரும் நிகழ்ச்சி அது.

புரபசர் கே.ஆர். குமார் கண்களை அண்ணா சிலை அருகில் துணியால் கட்டி விட்டவர் நீதியரசர் திரு. எஸ். மோகன் ஆவார்கள்.

அரசு பணிக்குத்தான் ஓய்வே தவிர, பொதுத் தொண்டுக்கு ஏது ஓய்வு? ஓய்வு என்பது துரு என்றவர் தந்தை பெரியார்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் பொதுப் பணிக்கு வரும்போது அவர்களுக்கேகூட மனதளவிலும், அதன் காரணமாக உடல் அளவிலும் நன்மைதான் ஏற்படும். நேற்றைய கலந்துரையாடல் கூட்டத்தில்கூட தமிழக மூதறிஞர் குழுவின் புரவலர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்தக் கருத்தை எடுத்து வைத்தார்.

தமிழர்களில் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றவர் கள் எல்லாம் ஓய்வுக் காலத்தை பெரியார் திடல் சம்பந்தப்பட்ட பொதுப் பணிகளில் ஈடுபடவேண்டியது அவர்களின் கடமையாகும்.

சங்கர மடத்தை ஒருமுறை போய்ப் பார்க்கட்டும்; அதன்பின் ஒரு முடிவுக்குத் தமிழர்கள் வரவேண்டும். அவர்களிடத்தில் நிலவும் அந்த இன உணர்வு நமக்கு வரவேண்டாமா? அதனைக்கூட தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நினைவூட்டத் தவறவில்லை.

தமிழினத்தில் மிகச் சிறப்பான அறிஞர்கள் இருக் கிறார்கள், நிபுணர்கள் இருக்கிறார்கள், சாதனை யாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டாமா? அதன் காரணமாக நமது இனத்தின் இளைஞர்களும் எழுச்சிப் பெறவேண்டாமா?

அமைப்பு மூதறிஞர்கள் குழு என்றாலும் கூட, அவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை யில் ஆற்றும் உரை இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடியவையாகும்.

பல ஆண்டுகள் மூதறிஞர்கள் சேகரித்த அனுபவம் என்ற குதிரிலிருந்து அவர்கள் கொடுக்கும் அந்தக் கருத்துக் கருவூலங்களை இளைஞர்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டே!

அனுபவத்தைவிட சிறந்த ஆசான் யார்? எனவே, தமிழக மூதறிஞர்கள் குழுக் கூட்டத்திற்கு இருபால் இளைஞர்களும் அதிகம் வரவேண்டும் என்பதே நமது அன்பு வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...

இவர்களுக்கு உதவுவது, சமுதாயக்கடமை

இந்தியா எல்லா துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஆணுக்கு, பெண் இளைத்தவள் இல்லை என்று ராக்கெட் ஏவும் பணியில் இருந்து, எந்த இடத்திலும் எங்களால் ஒளிவிட முடியும் என்று- அது அரசியலாகட்டும், ஆட்சிப் பொறுப்பாகட்டும், எந்தப் பணி யைக் கொடுத்தாலும் நாங்கள் ஆணுக்கு இணையாக முத்திரை பதிப்போம் என்று நமது தாய்க் குலம் சூளுரைத்து வேகமாக முன் னேறி வருகிறது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், ஆண்-பெண் சரிசமமாக வாழ்ந்தாலும், வாழ்க்கைத் துணையை இருவரில் ஒருவர் இழக்கும்போது, பெண் ணுக்கு மட்டும் பெரும் துயர் ஏற் படுகிறது. குடுகுடு கிழவன் என்றா லும், அவன் மனைவி இறந்தவுடன் அடுத்த கல்யாணத்துக்கு தயாராக புது மாப்பிள்ளையாகிவிடுகிறான். ஆனால், இளம் வயதில் கணவனை இழக்கவேண்டிய துர்பாக்கியமான நிலைமை ஒரு பெண்ணுக்கு ஏற்பட் டாலும், தள்ளாத முதுமையின் போது தன் கணவனை இழக்க நேரிட்டாலும், அந்த பெண்ணுக்கு கைம்பெண், விதவை, தாலி அறுத்த வள் என்று சொல்லக்கூடாத வார்த்தைகளால் சொல்லி, அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்து வதோடு மட்டுமல்லாமல், சமுதாய மும் அவளை சற்று தள்ளியே வைத்து பார்க்கிறது.

வாழ்க்கைத் துணை இழந்த பெண்ணின் துயரத்தை பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 1942 ஆம் ஆண்டு எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில், விதவைகள் நிலைமை என்ற பொருளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய நாட் டின் ஆட்சி உரிமை இந்திய மக் களுக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்த்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்பு பிரிவினையும், சாதி வேற் றுமையும் ஒழிய வேண்டுமென்று சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி, மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியராகிய பெண்கள் ஒருபக்கம் அழுத்தப் பட்டு வருவதைப்பற்றி எவருமே போதிய கவலைகொள்வதாகக் காணோம்.

மனிதப்பிறவி கொண்ட ஆணும், பெண்ணும் இயற்கை தத்துவத்தி லும், சமுதாய வாழ்க்கை தன்மை யிலும் ஒருவருக்கொருவர் தாழ்ந் தவர்களல்ல என்பதை அறிவுடைய உலகம் மறுத்தற்கியலாது. உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனா யினும், தம் மனைவியார் இறந்து விட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் தக்க பருவமும், எழிலும் பொருந்திய இளங்கன்னியர்களை தன் துணை வியாக தேர்ந்தெடுத்துக்கொள் கிறான். ஆனால், ஓர் பெண் மகள் கொழுநன் இழந்துவிட்டால், இயற்கை கட்புலனை வலிய அடக் கிக்கொண்டு, மனம் நைந்து, வருந்தி மடியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வருவது என்னே அநியாயம் இது.

இந்த பரிதாபகரமான நிலைமை 1942 இல் மட்டுமல்ல, இப்போதும் இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருந்த இந்தக் காலத்திலும், விதவைகளை சமுதாயம் உரிய முறையில் அங்கீகரிப்பதில்லை. இளம் வயதில் கணவனை இழந்த வர்களில், படித்து வேலைபார்க்கும் பெண் என்றால் ஓரளவு சமாளித் துக்கொள்வார்கள். மறுமணம் செய்துகொள்பவர்களும் பழைய வாழ்க்கையை மறந்துவிட முடியும். ஆனால், படிப்பறிவும் இல்லாமல், மறுமணமும் செய்துகொள்ளா மல், ஏழ்மையில் வாழும் பெண் களின் நிலைமையோ அந்தோ பரிதாபம். தாலி கட்டிய கணவனை மனதிலே தெய்வமாக வைத்துக் கொண்டு வாழும் அவளுக்கு வயிற்றுப் பசிக்கு சோறிட மட்டும் வசதியில்லாத நிலைமை. நல்ல வேளையாக மத்திய-மாநில அரசு கள் விதவைகள் பென்சன் என்று கூறப்படும் உதவிகளை அவர் களுக்கு வழங்குகிறது. ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென் றால், மத்திய அரசாங்கத்தால் 40 வயதுக்கு மேல் இந்த பென்சன் வழங்கப்படுகிறது. 40 வயதுக்கு மேல் ஒரு பெண் விதவையானால், ஒருவேளை அவளை காப்பாற்ற அவளது பிள்ளைகள் தலை யெடுத்துவிடுவார்கள். ஆனால், 18 வயதில் விதவையாகும் பெண்ணின நிலைமை பரிதாபத்துக்குரியது.

இப்போது மத்திய அரசாங்கம் விதவைகள் பென்சன் பெறுவதற் கான வயது வரம்பை 40 வயதி லிருந்து 18 வயதாக குறைக்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது. இதே போல, திருமணமே செய்து கொள் ளாமல், முதிர் கன்னிகளாக வாழ்ப வர்களுக்கும், விவாகரத்தான வர்களுக்கும் இது போல பென்சன் வழங்க மத்திய அரசாங்கம் பரி சீலித்து வருகிறது.

இது மிகவும் நல்ல திட்டம். இதை ஏற்கெனவே தமிழக அரசு செயல்படுத்தி, பாரத திரு நாட்டுக்கே முன்னோடியாக விளங்குகிறது. இதற்கு பரிசீலனையே தேவை யில்லை. உடனடியாக மத்திய அரசு ஆதரவற்ற இது போன்ற பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் வயது வரம்பை 40 வயதிலிருந்து 18 வயதாக குறைக்க வேண்டும், எண் ணிக்கை வரம்பை இந்நேர்வில் ஒருபோதும் வலி யுறுத்தக்கூடாது, மாநில அரசுக்கு முழுமையாக நிதி உதவி செய்ய வேண்டும் என்பதுதான், சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள எல்லோருடைய கோரிக்கையாகும்.
- நன்றி: தினத்தந்தி தலையங்கம், (21.11.2012).

தமிழ் ஓவியா said...


செத்தான்நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

தமிழ் ஓவியா said...

குவாலியர், நவ. 21- பெண்களைக் கேலி செய்பவருக்கு ஓட்டுநர் உரிமம், பாஸ் போர்ட் மற்றும் அரசு உதவி எதுவும் கிடைக் காது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வரு கிறது.

பெண்களை கேலி, கிண்டல் செய்ப வர்கள் ஏராளம். இதுபற்றி காவல் நிலையத் தில் ஒரு சில வழக்குகள் மட்டுமே பதிவாகின் றன. ஆனால், அதில் சிக்குபவர்கள் சாதா ரண தண்டனையுடன் தப்பி விடுகின்றனர்.

தண்டனை காலம் முடிந்ததும், மீண்டும் அதே நபர் அந்த பெண்ணை கிண்டல் செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. இதை யடுத்து, பெண்களை கேலி செய்யப்படு வதை தடுக்க மத்தியப் பிரதேச மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது பற்றி குவாலியரில் நடந்த நிகழ்ச்சி யில் ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:

பெண்களிடம் தவறாக நடப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்களை கேலி கிண்டல் செய்பவர்கள் பற்றி புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி செய்யப்பட உள்ளது.

இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும்.

பெண்களைக் கேலி செய்த வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் பற்றிய விவரங் கள் கொண்ட பட்டியலை தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு அரசு உதவி கள் எதுவும் கிடைக்காது.

நடத்தை சான்றி தழ் தரப்படாது. மேலும், அவர்கள் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெறவும் முடியாது. - இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

தமிழ் ஓவியா said...


என்றும் பயன் தரும் இனிய சிந்தனைகள்!


ஒரு விஷயத்தைத் தத்துவ விசாரணை செய்ய முதலில் என்ன? ஏன்? எதற்காக? எப்படி? எங்கே? எப்போது? என்ற ஆறு வினாக்களைப் போட்டு, திருப்தியான பதில் பெற வேண்டும். - தந்தை பெரியார்

தாங்கள் வகுப்புணர்ச்சியை விடாமல் இருந்து கொண்டு, அதே சமயம், மற்றவர்களைப் பார்த்து வகுப்புணர்ச்சியை விட்டு விடுங்கள் என்று கூறுப வர்கள் தென்னிந்தியப் பார்ப்பன அரசியல்வாதிகள் ஆவார்கள் - லாலாலஜபதிராய்

கோயில் உள்ளே சிலை; இடையே திரை; அதன் பின்னே அய்யர்; அவர் தயவு வைத்தால் திரை விலகும். தயவுக்கு தட்சணை வேண்டும். தயாபரனைக் காண இத்தனை தடைகள்; என்ன நயவஞ்சகம் பொதுவிடத்தில்? - பேரறிஞர் அண்ணா

விவாதம் இருக்கலாம்; வாக்குவாதம் செய்யலாம்; ஆனால் விதாண்டா வாதம்தான் இருக்கக் கூடாது. - முத்தமிழறிஞர் கலைஞர்

விருப்பங்களை (Aptitude) விலை கொடுத்துப் பெறலாம். மன உறுதிகளை (Attitude) மனப் போக்கினை எங்கும், எவரும் விலை போட்டு வாங்கிவிட முடியாது - தமிழர் தலைவர் வீரமணி

எடுத்ததை எல்லாம் கடவுளாக்கி வழிபட்டு கோயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விசித்திர வழக்கம் இந்தியாவில் இருக்கிறது. பெயரளவில் பக்தி, பண்ணிவிட்டு நடைமுறையில் நேர்மாறான செயல்களைச் செய்வதும் நம்மவர் வழக்கமாகி விட்டது _ பண்டித ஜவகர்லால் நேரு

உன் மனம் வலிக்கும்போது சிரி; பிறர் மனம் வலிக்கும்போது, சிரிக்க வை - சார்லி சாப்லின்

பார்க்கின்ற மனிதர்களிடம் அன்பு செலுத்த முடியாத நீ பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்தப் போகிறாய்? - அன்னை தெரசா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம்தான் _ அப்துல்கலாம்

ஆம்! அறியாமை அகல, பழமைப் பஞ்சாங்கத்தைப் பொசுக்கும் ஆற்றல்மிகு திராவிட இயக்கத்தின் தீப்பொறிகளே!
நீவிர் எழுந்து நடந்தால் எரிமலையும் வழிகொடுக்கும்! வரலாறும் வாழ்த்து சொல்லும்!! செல்வோம்!! வெல்வோம்!!

தொகுப்பு: நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்