கலைவாணர் பிறந்த நாள் - நவம்பர் 30
தந்தை பெரியாரும் தமிழ்க் கலைவாணரும்
தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்கள்,
தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் தன்மானம் பெற்று உரிமை பெற வேண்டும் என்று
விரும்பினார். தகுதி இருந்து, திறமை இருந்து, ஆற்றல் இருந்து தன்மானத்தை
இழக்காதவர்களை எல்லாம் தூக்கி நிறுத்தியவர் தந்தை பெரியார், கலைத்
துறையிலும் பெரியாருடைய கண் ணோட்டம் சுயமரியாதைக் கண் ணோட்டமாக இருந்தது.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுக்குத் தந்தை பெரியார் ஆதரவு
காட்டினார்.
கலைவாணர் திரைப்படம், நாடகம் வாயிலாகச்
சுயமரியாதைக் கருத்து களை நாட்டில் உலவ விட்ட நாகரிகக் கோமாளியாக
விளங்கினார். அவரே அதனை நல்லதம்பி திரைப்படத்தில் நாட்டுக்குச் சேவை செய்ய
நாகரிகக் கோமாளி வந்தானய்யா, ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி - நல்ல அழகான ஜதை
யோடு வந்தானய்யா! மோட்டாரை விட்டிறங்கி வந்தானய்யா! முன்குடுமி
சீவிக்கிட்டு வந்தானய்யா! ராட்டினம் போல் சுழன்று வந்தானய்யா! - நம்ம
ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்த்து வந்தானய்யா! என்று பாடினார்.
30.8.1957-இல் நம் நாடு இதழில்
தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடாக விளங்கிய இதழில் தந்தை பெரியாரின்
பகுத்தறிவுக் கோட்பாட்டின் வழி நின்றவர்தாம் என்பதை அவர் மறைந்த போது
வெளியிட்ட இரங்கல் செய்தி யில் பதிவு செய்திருப்பது கலைவாணர் பகுத்தறிவு
நெறி, பகுத்தறிவு இயக்க வழி நின்றவர் என்று காட்டும்.
தமிழகம், தன்னைச் சிரிக்க வைத்தே
சிந்திக்கச் செய்த பகுத்தறிவுக் கலைஞனை இழந்து தவிக்கிறது. அன்பும்,
பண்பும் நிறைந்த கள்ளமில்லா வெள்ளை உள்ளமும், எப்போதும் இதழ்க்கடையில்
தங்கும் புன்னகையும், அகமும் முகமும் மலர்ந்து தரும் அன்புரையும்
நகைச்சுவையோடு இணைந்த நற்கருத்தும் இனி நமக்கு எங்குக் கிடைக்கும்?
கலைவாணர் மறைந்துவிட்டார். ஆனால் கலைத் துறை மூலம் பகுத்தறிவு வளர்ச்சிக்கு
அவர் ஆற்றிய அரும்பணி, பொது வாழ்வுத் துறையில் அவர் காட்டிய அக்கறை, ஏழை
எளிய மக்கள் மீது அவர் கொண்ட அன்பு, அவர்களின் ஈடேற்றத்திற்காக - ஈட்டிய
பொருளை எல்லாம் வாரி வழங்கிய வள்ளல் தன்மை - திரைப்பட உலகிற்கு அவர்
செய்துள்ள சேவை முதலியவற்றால் அவர். தமிழ் நாட்டில் பெற்றுள்ள புகழ்,
தென்னவர் உள்ளத்தில் பெற்றுள்ள இடம் என்றும் மறையாது - மங்காது
கலைவாணர் திரைப்படத்தில் சிரிப்பு நடிகர்.
ஆனால் அவரிடம் ஆழ்ந்து ஊறித் திளைத்தது தந்தை பெரியார் ஊட்டி வளர்த்த
பகுத்தறிவு உணர்ச்சி. எனவே அதைச் சுட்டிக் காட்டாமல் எவரும் கலைவாணர்
குறித்துப் பேசினால் பேசாமல் விட்டு விட முடியாது என்பதற்கு சென்னை -
மெரீனா கடற்கரையில் 6.9.1957ஆம் நாள் நடைபெற்ற கலைவாணரின் இரங்கல்
கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சை முதலில் தொட்டுக் காட்டுவோம்.
ஏனென்றால் இப்படி ஒரு பகுத்தறிவுக் கலைஞர் கலைவாணர் இருக்கிறார் என்று
தந்தை பெரியாருக்கு முதலில் எடுத்துக் கூறித் தந்தை பெரியாரை முதலில்
பாராட்டச் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா இரங்கலுரையில் கூறுகிறார்:
கலைவாணர் மக்களின் உள்ளத்தைத் தொட்டுச்
சிரிக்க வைத்தவர் உல கிலேயே இவர் ஒருவர் தாம் மக்களிடத் திலே தொடர்பு
கொண்டு, மக்களுக்காக உழைத்த கலைஞராவார். இவரைப் போன்ற நல்ல உள்ளம்
படைத்தவர்கள் நாட்டிலே இருப்பது மிக அபூர்வம்.
மக்களின் மன அழுக்கு நீங்க, மூடநம்பிக்கை
அகல, குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஒழிய, தாழ்ந்த மக்கள் தன்னுணர்ச்சி பெற
இதுவரை இந்த நாட்டில் எந்த ஒரு நடிகனும் கலை வாணரைப் போல் பணியாற்ற
முடிந்த தில்லை. இந்த நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும்கூட இப்படிப்பட்ட
ஒரு கலைஞன் இருந்ததுமில்லை, இருக்கவுமில்லை. (நம் நாடு 7.9.1957).
பெரியார் வழியில் பகுத்தறிவுப் பாதையில்
தனி வாழ்க்கையும், கலை வாழ்க்கையும் மேற்கொண்ட கலைவாணர் பெரியாரைப் பற்றிக்
குறிப்பிடுகையில் தூங்காமை, கல்வி துணிவுடைமை என்ற நீங்காக் குணம் படைத்த
ஆங்காரமான அறிவுத் தந்தை பெரியார் பிறந்த நாடு என்றே குறிப்பிட்டுச்
சொன்னார் என்றால் அவர் உள்ளத்தில் பெரியார் உரம் எந்த அளவிற்கு ஊறித்
திளைத் திருத்தது என்பது விளங்கும்.
கலைவாணர் கதர் கட்டினாலும், காந்தியைப்
பெரிதும் போற்றினாலும் தன்னை ஒரு சுயமரியாதைக்காரன் என்றே கூறிக் கொண்டார்.
இதற்குச் சான்று வேண்டுமாயின் 1952 தென்றல் ஏட்டின் பொங்கல் மலருக்கு
அளித்த நேர்முகம் இது.
ஆதிமுதல் குடிஅரசு, கிருஷ்ண சாமி பாவலர்
நடத்திய தேசபந்து ஆகிய இரண்டு பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன்.
அப்போதுநான் சிறுவன். நாடகக் கம்பெனியில் வேலை. பக்தி மார்க்கத்திற்கும்,
நாஸ் திகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நான் அப்போது நானாகத் தெரிந்து
கொண்டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன். சுயமரியாதைக் கொள்கை
நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு
மாணிக்க வாசகர்
கலைவாணர் நடித்த மாணிக்க வாசகர் எனும்
திரைப்படம்தான் அண்ணாவை ஈர்த்தது மட்டுமல்லாமல் பெரியாரிடம் கலைவாணரை
அண்ணா அழைத்துச் செல்லவும், பெரியாரின் பாராட்டைக் கலைவாணர் நேரில் பெறவும்
துணை புரிந்தது.
1939இல் வெளிவந்த திரைப்படம் இசை மேதை
எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த மாணிக்கவாசகர் எனும் படம். அதில்
மேஸ்திரி வெங்குப் பிள்ளையாகக் கிருஷ்ணன் நடித்தார்.
அந்தப் படத்தில் மன்னர் எதையும் தானே
சொந்தமாகச் சிந்தித்து முடிவெ டுப்பதில்லை. அரச குடும்பத்துப் புரோகிதர்
சொல்வதைத்தான் அவர் கேட்கிறவர். இதைக் குறித்து அரண் மனை நிருவாகி வெங்குப்
பிள்ளையிடம் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கப் புரோகிதர் அவர்களைக் கடந்து
போவார்.
நம்மைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று
யூகித்த புரோகிதர், உச்சிக்குடுமி வைத்துப் பூணூல் அணிந்தவர் அவர்கள்
பேசுவதை ஒட்டுக் கேட்பார். அதைப் பார்த்துவிட்ட வெங்குப் பிள்ளை
பாத்திரமேற்ற கலைவாணர் தலையை ஆட்டிக் கொண்டு என் கையில் இருக்கும் இது என்ன
தெரியுமா? எழுதுகோல்! தர்ப்பைப் புல் இல்லை. தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு
நினைவு வைச்சுக்க ஜாக்கிரதை என்று புரோகிதர் காதில் விழும்படி உரக்கக்
கூறுவார்.
அண்ணாவின் வியப்பு
மாணிக்கவாசகர் படத்தைத் தம் நண்பர்களுடன்
பார்த்து விட்டு அண்ணா வியந்து போனார். நாம் இத்தனை வருடங்களாகச் சொல்ல
முயற்சி செய்ததை ஒரு நிமிடத்தில் சொல்லி விட்டாரே, இவர் என்று தந்தை
பெரியாரிடம் அண்ணா சொல்ல, அதைக் கேள்விப்பட்ட பெரியார் கலைவாணரை நேரில்
பார்க்க விரும்பினார்.
பெரியார் பாராட்டு
அண்ணா, அவரைப் பெரியாரிடம் அழைத்துக்
கொண்டு போனார். பெரியார் பாராட்ட, பெரியார் அறிமுகம் கிடைத்த மகிழ்ச்சியில்
கிருஷ்ணன் பெரியாருக்கு மாலை அணிவித்து வணங்கினார். தாம் சொல்ல விரும்பும்
கருத்துக்கள் கிருஷ்ணனுக்குப் பிடித்துப் போனவையாக இருந்தது குறித்து
அறிந்த பெரியார் மகிழ்ந்தார்.
கலைவாணரைப் பெரியார் பாராட்டிப் பேசிய
பேச்சுக்கள் பலவாகும். 31.7.1944இல் சென்னையில் சந்திரோதயம் நாடகத்துக்குப்
பெரியார் தலைமை வகித்தார்.
நாடகத்திற்குச் சென்னை மாநில
மாஜிஸ்ட்ரேட், கலைவாணர், தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசிகர் பல திரைப்பட
நடிகர்கள் உட்பட சுமார் 4000 பேர் வரையில் வந்திருந்தனர்.
மண்டப ஒலி பெருக்கி பெரிதாய் வைத்து மேடை
நடிப்பு, பேச்சுக்கள் ஆகியன ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும்படி
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் நடிப்பின் கடைசிப் பகுதியில்
சொற்பொழிவாற்றினார்.
தாய்மார்களே! தோழர்களே! நகைச்சுவை அரசு
என்.எஸ். கிருஷ்ணன் முதலாகிய திராவிடக் கலைவாணர்களே! கலா நிபுணர்களே!
உங்கள் மத்தியில் பேசக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்
தோழர் அண்ணாதுரை அவர்களால் துவக்கப்பட்டு, அவரே தலைமை வகித்துச் சுயமரியாதை
இயக்கத்தார் ஆதரவில் நடைபெற்ற சந்திரோதய நாடகத்தைக் கண்டு களித்தீர்கள்.
நீங்கள் 4000 பேர் கண்டும் கேட்டும் உணர்ச்சி பெற்று அனுபவித்த மகிழ்ச்சி
இன்பம் எவ்வளவோ அவ்வளவு இன்பத்தைவிட பெரும் பாகத்தை நான் ஒருவன் அனுபவித்
தேன். திராவிட கலைவாணர்களாகிய தோழர்கள் என்.எஸ். கிருஷ்ணன் தியாகராஜ
பாகவதர், தண்டபாணி தேசகர் முதலியோர் முன்பு ஒருவர் நடிப்பது என்றால் அதுவே
ஒரு அதிசயிக்கத் தகுந்த காரியமாகும். அப்படி இருந்தும் நீங்கள் ஆரம்பம்
முதல் முடிவு வரை மிக்க மகிழ்ச்சியோடு சுவைத்ததை நான் கண்டு வந்தேன் என்று
தொடங்கினார்.
அடுத்து அவர் நாடகத் துறையில் இன்று சில
திராவிடர்கள் நடந்து வரும் மானங்கெட்ட தன்மையான நடிப்புகளை மாற்றி
திராவிடர் நலனுக்கு ஏற்ற வண்ணம் நடித்துக் காட்டி அதை நாட்டில் பரவச் செய்ய
நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் மங்கள கான சபை என்னும் ஒரு
நடிகக் குழுவை தனதாக்கி அதன் செயலை ஏற்று நடத்தப் போகிறார்கள் என்று கேட்டு
மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நானறிந்த வரை சுமார் 10,15 வருட காலமாகவே
திராவிட உணர்ச்சி கொண்டு துணிந்து திராவிடத் தொண்டு ஆற்றுவதானது உண்மைத்
திராவிடன் ஒவ்வொருவரும் அவருக்குக் கடமைப்பட்ட வனாக ஆக வேண்டியதாகும்
என்பதோடு மற்ற நடிகர்கள் வெட்கப்பட வேண்டியது மாகும் என்று கூறியவர் தோழர்
என்.எஸ். கிருஷ்ணன் தொண்டானது திராவிடர்கள் தன்மானம் பெற்று மனிதத் தன்மை
அடைந்து விட்டார்கள் என்று திராவிட சரித்திரத்தில் முக்கிய இடம் பெற
வேண்டியதாகும் என்று பாராட்டினார்.
அதோடு பெரியார் அந்தக் கூட்டத்தில் சில சிந்தனை விதைகளை வழக்கம் போல விதைத்தார்.
கலையோடு மனிதனுக்கு அறிவு, மானம், இனப்
பற்று ஆகியவை இருக்க வேண்டாமா? பணமே தானா பெரிது? என்று கேட்டதோடு தாங்கள்
பெற்ற கலை வளத்தால் பெற்ற செல்வத்தை உண்மைத் திராவிடன் திராவிடனுக்கும்
பயன்படுத்தாவிட்டாலும் திராவிடர் கேட்டிற்குப் பயன் படுத்தாமலாவது இருக்க
வேண்டாமா? அப்படித் திராவிடருக்குக் கேடாகப் பயன்படுத்தியவர்களைப்
பயன்படுத்துபவர்களை எப்படித் திராவிடர் என்று நம்மால் சொல்ல முடியும்
என்று கேட்டார் பெரியார்.
சற்றுக் கடுமையாகவே, இவர்தான் பெரியார்
என்று சொல்லும் வகையில் பொருத்தமாக, அப்பப்பா இந்த சினிமாக்களையும் புராண
நாடகங்களையும், பாட்டு பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டால், நம் கள்,
சாராயக் கடைகளையும், தாசிவேசிகள் குச்சுக்காரிகள் வீடும், மார்வாடி செட்டி
கொள்ளைகளும் ஆயிரம் பங்கு மேலென்று சொல்லுவேனே சுயமரியாதைக்காரர்களின்
காரியம் போதிய வெற்றி பெறாமல் தடைப்படுவதற்குக் காரணமே இந்த முக்கலையும்,
முக்கலைவாணர்களும், முக் கலை ரசிகர்கள் என்று சொல்லப்படுபவர்களுமாவார்கள்
என்று கடுமையாகச் சாடினார்.
அடுத்துப் பேசிய கலைவாணர் தந்தை பெரியார்
அவர்கள் சொன்னது சரியானதே என்றார் பெரியாரவர்கள் சொன்னதெல்லாம் சரியானதே.
நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம்
என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும்.
இதில் என்ன தப்பு என்றார். பெரியார் அவர்கள் இந்த மாதிரி வெகு நாளைக்கு
முன்னமே எங்களுக்குச் சொல்லி, எங்களை மிரட்டிக் கண்டித்திருக்க வேண்டும்.
இப்பொழுது துணிந்து சொன்னதற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அண்ணாதுரை
அவர்கள் எங்கள் விரோதம் கூடாது என்பதற்கு ஆக எங்களைப் பாராட்டியும்
பெரியார் சொன்னதைக் கொஞ்சம் பூசிமெழுகியும் பேசினார். அப்படி ஒருவர்,
இப்படியும் ஒருவர் இருக்க வேண்டியதுதான் பெரியார் எங்கள் தலைவர்; அண்ணாதுரை
என் குரு, தந்தை, சகோதரர் ஆவார். நாங்கள் பெரியார் தொண் டுக்கு உதவியளிக்க
வேண்டியவர்களாவோம். அதுவே எங்கள் நன்றி அறிதல் கடமையாகும் என்றார்
(குடிஅரசு 6.8.1944).
இதனைப் போலவே 8-9-1944-இல் ஈரோட்டில்
கிந்தனார் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றபோதும், 1.11.1944இல் இழந்த காதல்
நாடகத்திற்குத் தலைமை ஏற்றபோதும் பெரியார் அய்யா அவர்கள் என்.எஸ்.
கிருஷ்ணனைப் பாராட்டிப் பேசியுள்ளார்.
நகைச்சுவை அரசர் கிருஷ்ணன் அவர்கள், நான்
அறிந்த வரை சுமார் 10,15 வருஷ காலமாகவே, திராவிட உணர்ச்சி கொண்டு துணிந்து
திராவிடத் தொண்டு ஆற்றி வருவதால் உண்மைத் திராவிடன் ஒவ்வொருவனும்
அவருக்குக் கடமைப்பட்டவன் ஆகிவிட்டான் என்பதோடு, மற்ற நடிகர்கள், நாமும்
இப்படி நடிக்கவில்லையே என்று வெட்கப்பட வேண்டியும் ஏற்பட்டு விட்டது தோழர்
கிருஷ்ணனின் தொண்டானது திராவிடர்கள் தன்மானம் பெற்று மனிதத் தன்மை அடைந்து
விட்டார்கள் என்ற திராவிட சரித்திரத்தில் முக்கிய இடம் பெற வேண்டிய தாகும்.
இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு
பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற,
புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத் துறையிலும் இசைத் துறையிலும்
ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
நம் அருமை கிருஷ்ணன் அவர்கள் தனது தொழிலை
வெகு தூரத்திற்கு மாற்றியும், புரட்சி செய்தும், மற்றவர் களுக்கு
வழிகாட்டியாகவும் ஆகிவிட்டார். கலை சீர்திருத்தம் சரித்திரத்தில் கிருஷ்ணன்
பெயர் பொன் னினால் பொறிக்கப்படும்
கிந்தன் கதை நடத்துவதில் கதை பொய்யானாலும்
அதை மக்களுக்கு மானமும், அறிவும் முற்போக் குணர்ச்சியும் ஏற்படும்படி
செய்து அதன் வருவாயில் பெரும்பாகம் பொது நலத்துக்கு உதவுகிறார்.
பணப் பிசாசுக்கு அவர் மனம்
அடிமைப்படவில்லை. மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்ற கவலை அவருக்கு இல்லை.
இதுபோல எவனொருவன் தன்னலமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி
பெறுவான் என்பதோடு ஒரு புரட்சி வீரன் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே
எடுத்துக் காட்டாகும்
கிருஷ்ணனைப் பற்றி நான் நினைக்கும்
போதெல்லாம் அவரை ஒரு புரட்சி வீரரென்றே கருதுவது ஏன்? அவர் ஒரு நல்ல
தேவையான புரட்சியில் வெற்றி கண்டவர் இனி அவர் செத்தாலும் சரி, அவர் பணம்
காசெல்லாம் நழுவி அன்னக் காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி நாடகப் புரட்சி
உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால் அச்சரித்திரத்தின் அட்டைப் பக்கம்
கிருஷ்ணன் படம் போடா விட்டால் அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும்
பெரியார் வரிசையில்...
ஒரு முறை அக்கிரகாரத்து அதிசய மனிதர்
வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதியி ருந்தார். இதுபற்றி
மாறபாடன கருத்துடை யவர்கள் வ.ரா.வும் எப்படி இவ்வாறு எழுதலாம் என்று
மோதினர். உடனே அவர் இது பற்றி என்னிடம் கேட்பதைவிடப் பெரியாரிடமே கேட்டுப்
பாருங்கள் என்று கூறவே பெரியாரிடம் போய் இதுகுறித்துக் கேட்டார்கள்.
அதற்குத் தந்தை பெரியார் தனக்கே உரிய
வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர்
என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும்
நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு
குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப்
போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு
பெரியார் மேல் கலைவாணரின் பற்று
திரைப்பட உலகிலே முதன் முதலாக பெரியார்
என்ற பெயரை அறிவித்தவர் கலைவாணர் என்று கூறலாம். பணம் படத்தில் வரும்
பாடலில் தினா - முனா கானா என்பதில்
பெரியார் வள்ளுவப் பெரியார்
அந்தப் பாதையில் நாடு சென்றிட வழி
வகுப்பதும் அதன்படி நடப்பதும் எங்கள்
அந்தப் பாதையில் நாடு சென்றிட வழி
வகுப்பதும் அதன்படி நடப்பதும் எங்கள்
ராஜா ராணி படத்தில் சாக்ரடீஸ் ஒரங்க
நாடகம் இடம் பெறும். அந்த நாடக நிகழ்ச்சிக்குக் கலைவாணர் தலை மையேற்று
நாடகத்தில், சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுக்கும் கட்டத்தில் நாடகத்தைப்
பார்த்துக் கொண்டிருந்த கலைவாணர் மேடைக்கு ஓடிப் போய் நாட்டுக்கு நல்லது
செய்த பெரியாரையா சாகச் சொல்றீங்க? என்று பதறிக் கேட்பார். அவர் தந்தை
பெரியாரை நினைத்துக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மக்களின் ஆரவாரக்
குரலால் திரை அரங்கே அதிரும்.
கலைவாணர் தந்தை பெரியாரைக் குறித்துக்
கூறிய இந்த வைர வரிகளில் பெரியார் அவர் நெஞ்சில் வாழ்ந்தார் என்பது
விளங்கும். தமிழகம் பெற்றிருக்கும் பொதுச் செல்வங்களில் அவரும் ஒருவர்.
பூப்போன்ற நெஞ்ச முள்ளவர் புகழுக்காகத் தம் போக்கை மாற்றிக் கொள்ள
மாட்டார். அவருக்காக வேண்டுமானால் புகழ் தான் தனது போக்கை மாற்றிக் கொள்ள
வேண்டும். புனிதமான மனிதர் துணிவு என்றும் மூன்றெழுத்து முத்தமிழ் பண்பை
மனித உருவில் காண வேண்டுமாயின் அந்த உருவம் ஈ.வெ.ரா.தான் வேறு எதுவும்
இல்லை
வானொலியில்...
1947 முதல் விடுதலை நாள் கொண்டாட இருந்த
வேளையில் சென்னை வானொலியில் கலைவாணரின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று
ஒலிபரப்பப்பட இருப்பதாக விளம்பரம் செய்தனர். கலைவாணர் நடத்தும் அந்த
நிகழ்ச்சிக்குரிய எழுத்து வடிவத்தைச் சென்னை வா னொலி நிலையத்துக்கு
அளித்தவர் ராங்கு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்கள் வரிசையில் தந்தை
பெரியார் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.
ஒலிபரப்புப் பதிவாக வேண்டிய நாளில் நிலையம் வந்த கலைவாணரிடம் வானொலி நிலைய உயர் அதிகாரி எழுத்து வடிவத்தில் பெரியார் பெயர் நீக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி ஒலிபரப்பின் போது பெரியார் பெயரைச் சொல்லாமல் விட்டுவிடச் சொன்னபோது கலைவாணர் அதிர்ச்சி அடைந்ததுடன், பெரியார் பெயர் இடம் பெறாது என்றால் எந்த நிகழ்ச்சியும் தன்னுடைய நிகழ்ச்சி வானொலியும் இடம் பெறாது என்றால் எந்த நிகழ்ச்சியும் தன்னுடைய நிகழ்ச்சி வானொலியில் இடம் பெறாது என்று வெளியேறினார். அதிகாரிகள் செய்வதறியாது திகைத் தனர். மறுபடியும் கூடிப் பேசி கலைவாணர் விரும்பியவாறே பெரியார் பெயரைச் சேர்த்துச் சொல்லுவதை அனுமதிக்க வைத்து அதன்படியே நிகழ்ச்சியை ஒலிபரப்பினார்கள் என்றால் கலைவாணர் தந்தை பெரியார் மீது கொண்ட பற்றும் அன்பும், மதிப்பும் சாதாரணமானதா?
14.1.1948 திராவிடன் பொங்கல் மலரில் இச்செய்தி அன்றே இடம் பெற்றது.
தந்தை பெரியார் கலைவாணர் குறித்து என்ன
கருத்துக் கொண்டிருந்தாரோ அதே கருத்தை மாற்று முகாமைச் சேர்ந்தவரானாலும்
தந்தை பெரியாரின் நண்பராகவே வாழ்ந்த இராஜாஜியும் கொண்டிருந்தது வியப்பு
எனலாம். எனவேதான் இராஜாஜி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் விட்டுச் சென்ற
இடத்தில் வேறு யாரும் புகுந்து புகழ் பெற இயலாது என்று வெகு பொருத்தமாகச்
சொன்னதை இங்கே சுட்டிக் காட்டுவோம். அது உண்மையே. கலைவாணர் மறைந்து 50
ஆண்டுகள் ஆனபின்பும் வெற்றிடமாகவே அவ்விடம் நிரப்பப்படாத இடமாகவே உள்ளது
என்பது உண்மையே.
---------------- - முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 30-11-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை