Search This Blog

4.7.11

கோவில்களில் கொள்ளை நகைகள் ஏன் ஏன்?


இந்தியாவில் உள்ள கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கம், வைரம், அணிமணிகள் இவற்றை அரசு கையகப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் செழித்து, மக்கள் வளமுடன் வாழ முடியும்.

எல்லாம் கடவுள் செயல் என்றும், படைப்புகள் எல்லாவற்றிற்கும் உரியவன் பகவான் என்றும் ஏட்டில் எழுதி வைக்கும் ஆன்மிக சிரோன்மணிகள் பற்றற்ற பகவானுக்காக இப்படி விலை உயர்ந்த பொருள்கள் தூசு படிந்து கிடப்பதுபற்றி என்ன சொல்லுகிறார்கள்?

திருவனந்தபுரம் பத்பநாபசாமி கோயிலில் பாதாள அறைகளில் ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேலான மதிப்புடைய பொருள்கள் குவிந்து கிடக்கின்றன என்று நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன.

இன்னும் ஒரு அறையை மட்டும் திறக்க வில்லையாம். அதனைத் திறந்தால் சாமி குற்றம் ஆகிவிடுமாம். இத்தனை அறைகளைத் திறந்தபோது வராத சாமி குற்றம், குறிப்பிட்ட அறையைத் திறக்கும் பொழுது மட்டும் எங்கிருந்து குதிக்கப் போகிறதாம்!

பொருளாதாரத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிடுவார்கள். ரூபாய்களை எவ்வளவுத் தொகை அளவுக்கு அரசு அச்சடித்து விநியோகம் செய்கிறதோ, அந்த அளவுக்கு மதிப்புள்ள தங்கம் இந்தியாவின் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டும்; அப்பொழுது தான் பண வீக்கம் தடுக்கப்படும் என்று பொரு ளாதாரத்தில் பால பாடமாகச் சொல்லுகிறார்கள்.

இந்தியாவில் பணவீக்கம்பற்றிப் பெரிதும் பேசப் படுகிறது. இந்தியாவில் ஒரு ரூபாயின் உண்மையான மதிப்பு வெறும் 14 காசுகளாக இருக்கின்றன என்றெல்லாம் சொல்லுவதில் குறைச்சல் இல்லை.

இந்தப் பொருளாதாரம் எல்லாம் தெரிந்த மேதைகள் பிரதமராகவும், நிதித்துறை அமைச்சராக வும், திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருக்கும் இந்நாட்டில், கோவில்களில் ஒன்றுக்கும் பயன் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் இந்தத் தங்கங்களை எல்லாம் கையகப்படுத்தினால் என்ன?

மக்களுக்குப் பயன்படாத பணம் குழவிக் கல்லுக்காக குந்த வைக்கப்படுவானேன்? படித்த மக்களிடத்தில் குடி கொண்டிருக்கும் மவுடிகம்தான் மக்களின் வறுமைக்கும், பணவீக்கத்துக்கும் காரணம் என்பது விளங்கவில்லையா?

பக்தி கிறுக்கு பிடித்த மக்கள் கடவுளுக்குக் காணிக்கையைக் குவிக்கிறார்கள் என்பது உண்மை தான். இது ஒரு வகையில் கடவுளை இழிவுபடுத்தும் செயல் என்பதை அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.

கடவுளிடத்தில் காணிக்கை என்னும் லஞ்சம் கொடுத்துதான் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதே கடவுள் லஞ்சம் வாங்கக் கூடியவர் என்ற கருத்தில்தானே!


லஞ்சம் வாங்குவதும் குற்றம்; லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் உள்ள நாட்டில் இப்படி பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், லஞ்ச லாவண்யம் அதிகார பூர்வமாக பட்டவர்த்தனமாக ஆனந்த நடனம் புரிகிறதே - இதைப்பற்றி எந்தப் பொது நலவாதிகளும் வாய் திறப்பதில்லையே - ஏன்?

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. வி.ஆர். கிருஷ்ணஅய்யர் வாய் திறந்து இருக்கிறார்: திருவனந்தபுரம் பத்மநாபபுரம் கோயிலில் கொட்டிக் கிடக்கும் பொருள்களை, மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருத்துக் கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே ஒரே ஒரு பெரிய மனிதராவது மக்கள் நலக் கண்ணோட்டத்தில் வாய் திறந்துள்ளது - வரவேற்கத்தக்கதாகும்.

ஒரு கால கட்டத்தில் கோயில் சொத்துகள் எல்லாம் புரோகிதச் சுரண்டலுக்கு வாட்டமாக, வசதியாக இருந்ததுண்டு.

நீதிக் கட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் தான் அந்தச் சுரண்டலுக்கு, கோயில் திருட்டுக்கு மூக்கணாங் கயிறு போட்டது என்ற வரலாற்றுக் குறிப்பையும் நினைவூட்டுவது பொருத்த மாகும். பக்தர்களுக்குக் கடைசியாக ஒன்று:

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே

- இந்தத் திருமந்திரப் பாடல் என்ன சொல்லுகிறது?

ஆண்டவனுக்கு ஒன்று கொடுப்பது நடமாடும் மனிதர்களுக்குக் கொடுப்பது ஆகாது; மனிதர்களுக்கு ஒன்று கொடுப்பதுதான் கடவுளுக்குக் கொடுப்பதாகும் என்று திருமந்திரம் சொல்லுகிறதே - திருமந்திரம் என்ன நாத்திக நூலா? சிந்திப்பீர், பக்தர்களே!

-------------------”விடுதலை” தலையங்கம் 4-7-2011

2 comments:

தமிழ் ஓவியா said...

பூஜை போடுதல் என்றால் என்ன?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையில் வசிக் கும் என் தோழியிட மிருந்து, போன் வந்தது. தன் மகள், இந்த ஆண்டு, பிளஸ் 2 செல்வதாகவும், அவள், அதிக மதிப்பெண் எடுப்பதற்காக, என் மக ளுக்கு செய்த பூஜையை, அவளது மகளுக்கு செய்ய வேண்டும் என்றும், அதற்கு எவ்வளவு செல வானாலும், பரவாயில்லை என்றும் கூறினாள். என் மகளின் படிப்புக்காக, எந்த ஒரு பூஜையோ, யாகமோ நான் செய்ய வில்லை என்பதால், குழம்பி, அவளிடமே விவரம் கேட் டேன்.

உன் பொண்ணு, சரி யாவே படிக்காமல் இருந்த தாகவும், வாரிய பூஜைக்குப் பிறகு நன்றாக படித்து, 1,086 மார்க் எடுத்திருப்ப தாகவும் கூறினாயே... என, என் தோழி சொல் லவும், குபீரென சிரித்து விட்டேன்; ஏனென்றால், அது, வாரிய பூஜை அல்ல; வாரியல் பூஜை!

என் பொண்ணு, சரி யாகப் படிக்காமல், மொபைல் போன், டிவி என்று பொழுதை கழித்ததால், துடைப்பத்தால், நாலு சாத்து சாத்தி, படிக்க வைத்தேன். இதைத்தான், ஒருமுறை சென்னையிலி ருந்து, போன் செய்த என் தோழியிடம், எங்கள் ஊர் நெல்லை சொல் வழக்கில், ஏளா.. இவ எப்ப பாரு போனுல பழக்கம் உட்டு கிட்டு படிக்கதே இல்ல. ஒருநா நல்லா வாரிய பூசை போட்டேன். அதோட, போன் தூக்கிப் போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சா... இப்ப, 1,086 மார்க் எடுத்திருக் கால்லா... என்று கூறி னேன்; அதை, ஏதோ ஆன் மிகப் பூஜை என நினைத்து விட்டாள் தோழி!

நான் விவரத்தைச் சொல்லவும், தோழி சிரித்து விட்டாள். சொல் வழக்கால் ஏற்பட்ட தமாஷைப் பார்த் தீர்களா?

குறிப்பு: திருநெல்வேலி பகுதியில் துடைப்பத்தை, வாரியல் என்பர்.
- ஆர். இசக்கியம்மாள், தென்காசி,
(தினமலர் வாரமலர் 3.7.2011)

அவர்கள் சிரிப்பது இருக்கட்டும்; நம் மக்கள் மத்தியிலே பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக உண்மை யிலே பூஜை செய்பவர்கள், யாகம் செய்பவர்கள் இருக் கத்தான் செய்கிறார்கள்.

கடவுள் பூஜை நடக்க வில்லை; மாறாக வேறு பூஜை நடந்திருக்கிறது; வழக்கில் சொல்லுவார்கள். இன்னைக்கு என் மனை விக்கு நல்ல பூஜை நடந் தது என்பர்கள். இந்த இடத்தில் பூஜை என்றால் அடி, உதை என்று தான் பொருள்.

சென்னைத் தோழி நினைத்த மாதிரியான பூஜை நடக்கவில்லை - மாறாக வேறு பூஜைதான் நடந்திருக்கிறது - அது தான் வாரிய பூஜை (வாரி யல் என்றால் துடைப்பம் - விளக்கமாறு)
படிக்கவில்லை என்பதற் காக விளக்கமாறு பூஜை நடத்துவதும் தவறு தான். அதே நேரத்தில் கோயில் பூஜையைவிட இந்தப் பூஜைக்குத் தான் பலன் உண்டு என்று தெரிய வருகிறது.

அதேபோல கோயிலில் சாத்து படி என்பார்கள். கடவுளுக்கு அபிஷேகம் செய்து நகைகளை பூட்டி புதிய துணிகளை அணிவிப் பர்கள் - அதுதான் சாத் துப்படி.

இன்றைக்கு நிறைய என் மகனுக்குச் சாத்துப் படி என்று ஒருவன் சொன்னால், அதற்கு நன்றாக அடி - உதை என்று பொருள்.

கோவில் சம்பந்த மாகப் புழக்கத்தில் இருக் கும். இதுபோன்ற சொற் கள்கூட மரியாதை கலந் ததாக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
--------விடுதலை 4-7-2011

நம்பி said...

மக்கள் நலனுக்கு பயன்படுத்தவேண்டும் என்று ஆன்மீகத்தில் நாட்டமுள்ள பெண்கள் பலரும் வலியுறுத்துகிறார்கள்.

இன்னும் பல ஆயிரக்கணக்கான அரசுபள்ளிக்கூடங்களில் மாணவர்கள் முதுகு வளைய தரையில் அமர்ந்து பாடம் பயில்கிறார்கள், பாடம் எழுதுகிறார்கள்.

இன்னும் பல சிறார்கள் மதிய உணவு சாப்பிடுவதற்கு கூட சரியான இடவசதியில்லாமல் குப்பை மேடுகளில், கழிவுகளுக்கிடேயே, துர்நாற்றத்துக்கிடையே அமர்ந்து உணவு உண்ணுகின்றனர்.

பல பள்ளிகள் கூரைகளே இல்லாமலும், குடிசைகளில், வெட்ட வெளியில், அதிக சிதிலமடைந்த ஆபத்தான கட்டிடங்களில் காற்று வசதியில்லாமல் இயங்குகின்றன. இதை பத்திரிகைகள் செய்திகளாக வெளியிடுகின்றன. ஆனால் யாரும் கண்டுக்கொள்வதாய் தெரியவில்லை.

தமிழகத்தில் மட்டும் உள்ள பள்ளிகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலே பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதி இல்லை. கழிவறை வசதி இல்லை. இருந்தாலும் சுத்தப்படுத்தவற்கு ஆள் இல்லை. (இவர்களுக்கு மினரல் வாட்டர் வழங்கினால் நன்மை!)

மாணவர்கள் பயில சென்றால், வாந்தி, பேதியுடன் திரும்பி வருகின்றனர். இம்மாதிரி கோயில்களில் முடங்கி கிடக்கும் பணத்தினையும்,நகைகளையும் நல்ல வசதியுடன், அதிக சுகாதாரத்துடன் அரசு பள்ளிகளை அமைக்கப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகளை ஒழித்துக் கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தான் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட பெண்கள், ஆண்கள் வைக்கும் கருத்து. இதில் பெண்கள் தான் முதலில் இம்மாதிரி மக்கள் நலத்திட்டத்திற்கு இந்த பணத்தைப் பயன்படுத்த குரல் கொடுக்கின்றனர். இது வரவேற்க கூடியது.