Search This Blog

16.8.14

பக்திப் பிரச்சினையில் மட்டும் புத்தியைச் செலுத்த மறுப்பது ஏன்?



மனிதர்களுக்குப் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதை அறிவோம். ஆனால் இந்த நாட்டில் கடவுளுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவதை என்னென்பது!


கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்று சொல்லுகின்றனர் மதவாதிகள். அப்படிப்பட்ட கடவுளே பிறந்தார் என்றால் - அந்தப் பிறப்புக்கு யார் காரணம்? கடவுளைப் பெற்றெடுத்தவர்கள் யார் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.


இந்த மதக் கடவுள்களில் 60 ஆயிரம் மனைவிகளைக் கொண்டவன் ஒரு கடவுளாம்! தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு நகராட்சி மக்கள் தொகை அளவுக்கு ஒரு கடவுளுக்குப் பெண்டாட்டிகள் என்றால் இப்படி சொல்லுவதற்கு, எழுதுவதற்குக் கூச்சப்பட வேண்டாமா? குறைந்த பட்சம் நாகரிகப் பண்பும், பகுத்தறிவுத் தரமும் இருக்க வேண்டாமா?


சிறுபிள்ளைகள் சிறுநீர் கழித்துக் கூட்டாஞ் சோறு ஆக்குவதைப் புரிந்து கொள்ள முடியும்; அதையே பெரியவர்கள் செய்தால்  அவர்களைப் பற்றி சமூகம் என்ன நினைக்கும்?


அந்த நினைப்பும், சிந்தனையும் ஏன் கடவுள் நம்பிக்கைப் பிரச்சினையில் வரவில்லை? காரணம் பகுத்தறிவு இன்மையும் தன்னம்பிக்கையின்மையும் தான்.


இன்றைக்குக் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடுகிறார்களே - இந்தக் கடவுள்கூட கவுதமப் புத்தரின் கருத்துப் பிரச்சாரத்தால் மக்கள் சமூகத்தில் விளைந்த மாற்றங்களை மடைமாற்றம் செய்ய உருவாக்கப்பட்ட ஆரிய சூழ்ச்சிதான் என்பது வரலாற்றாளரின் கணிப்பு.


சினிமா கவர்ச்சியைக் காட்டி மக்களை ரசிகர்களாக்கி, அதன் வழி அரசியலில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பது போல, புத்த மார்க்கத்தை அழித்து மக்கள் மத்தியில் காமரசப் போதைகளைக் கொடுத்து மக்கள் சிந்தனையைக் கீழ்த்தரத்துக்குக் கொண்டு சென்ற கற்பனைக் கதாபாத்திரம்தான் கிருஷ்ணன் என்ற கற்பனைப் பாத்திரம்!


குளத்தில் குளிக்கும் பெண்களின் உடைகளைத் தூக்கிச் சென்றான் என்பதும், மரத்தில் ஒளிந்திருந்து குளிக்கும் பெண்களை ரசித்தான், என்பதும் கேவலம் அல்லவா!


அப்படி செய்தவன் ஒரு கடவுள் என்றால், நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டுமே! அப்படி ஒரு கடவுள் ஒரு மதத்தில் இருந்தான் என்பதைக் கூடுமான வரை தட்டிக் கழிக்கப் பார்த்தால், பரவாயில்லை கொஞ்சம் புத்தி வந்திருக்கிறது, நாகரிகம் அரும்பியிருக்கிறது என்று மகிழ்ச்சி அடையலாம்.

அதற்கு மாறாக அந்த ஆபாசக் கடவுளைப் புகழ்வதும், அதற்காக அரசு விடுமுறை அளிப்பதும் ஆட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் அந்த நாளில் மக்களுக்கு வாழ்த்துச் சொல்லுவதும் ஆரோக்கிய மானதுதானா?
தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா வாழ்த்துச் சொல்லி இருப்பது சரியானதுதானா?


மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை ஊட்டுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதிபடுத்துகிறபோது அது முதல் அமைச்சருக்குப் பொருந்தாதா?
அதுவும் அண்ணாவின் பெயரையும், திராவிட இயக்கப் பெயரையும் கட்சியில் பொறித்துக் கொண்டுள்ள முதல் அமைச்சர் - இவற்றிற்கு மாறாக நடந்து கொள்ளலாமா?


சின்ன வயதில் வெண்ணெயைத் திருடி, பெரிய வயதில் பெண்ணைத் திருடுபவனும் ஒரு கடவுளா? என்ற அறிஞர் அண்ணா கேட்ட கேள்விக்கு அண்ணா திமுக பொதுச் செயலாளரிடமிருந்து பதில் கிடைக்குமா?
உலகில் தீமைகள் ஒழிந்து, அறம் தழைத்தோங்கிட பகவான் மகா விஷ்ணு ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடி  மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ணஜெயந்தி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைக்க அவதாரம் எடுத்துள்ளாராம் கிருஷ்ணன்.

கடந்த ஆண்டு இதே போல அறிக்கை கொடுத் துள்ளாரே முதல் அமைச்சர் ஜெயலலிதா - இந்த ஓராண்டுக்குள் எந்தெந்த தீமைகளை ஒழித்துக் கட்டியுள்ளார் என்று பட்டியல் கொடுக்க முடியுமா?


அதுவும் தமிழ் நாட்டுக்கு மட்டும் இல்லையாம். இந்தியாவுக்கு மட்டும் இல்லையாம்; உலகத்தில் உள்ள தீமைகளை எல்லாம் ஒழிக்க அவதரித்தவராம்.


இந்த ஓராண்டில் மட்டும் உலகம் பூராவும் எத்தனை எத்தனைக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன? ஈராக்கிலும்  காசாவிலும் மக்கள் படுகொலைக்கு ஆளானார்களே - அதனைத் தடுத்து விட்டாரா இந்தக் கிருஷ்ண பகவான்?


தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தொடர் கதையாக நடந்து கொண்டுள்ளதே. காவல் துறையைக் கையில் வைத்துக் கொண்டுள்ள முதல் அமைச்சரால்தான் தடுக்க முடியவில்லை.


அவர் நம்பும், துதிக்கும் ஸ்ரீமான் கிருஷ்ண மூர்த்தி யாவது மானசீகத்தால் தடுத்திருக்கலாமே அல்லது அந்தக் கெட்ட புத்தியைக் கெடுத் திருக்கலாமே!

அரசியல் பிரச்சினைகள் என்றால் தமது கெட்டிக் காரத்தனத்தையெல்லாம் ஒன்று சேர்த்து அஷ்டாவ தானம் செய்யும் சிரோன்மணிகள் கடவுள், மதம், பக்தி என்றவுடன் மாத்திரம் குறைந்தபட்ச அறிவைக்கூட செலுத்தாதது ஏன்?


தந்தை பெரியார் எவ்வளவு தேவைப்படுகிறார் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

  --------------------"விடுதலை” தலையங்கம் 16-08-2014





0 comments: