Search This Blog

24.8.14

உரிமையும் பொறுப்பும் - பெரியார்


    இன்று நம் நாட்டில், எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி என்கிற முழக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் சமுதாயத்திலே நாணயக்குறைவும் யோக்கியக்கேடும் மலிந்துவிட்டன. சுதந்திரம் பெற்றோம் என்று சொல்லிக்கொள்ளத் தலைப்பட்ட பிறகு, ஒருவரை ஒருவர் எப்படி ஏமாற்றுவது? எந்த மாதிரியான வேஷம் போட்டால் எப்படியெல்லாம் சுரண்ட முடியும்? என்கிற போக்கும், எந்த அயோக்கிய வேலைகளையும் செய்யலாம் என்கிற துணிச்சலும் பொதுவாகச் சமுதாயத்தில் வலுவாக வளர்ந்திருக்கின்றன. சட்டங்களுக்கு ஒரு மதிப்போ, சமுதாய ஒழுங்குக்கு ஒரு மரியாதையோ இன்று நம் நாட்டில் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லிவிடலாம்.

    சமுதாயத்தின் உட்புறத்தில் உள்ள இந்த ஊழல்களின் வாடையே வெளிப்புறத்தில் களவு, கொலை என்கிற பெயரால் வீசுகிறது. இப்போது சமீப காலமாய்த் தமிழ் நாடெங்கும் நடந்து கொண்டு வரும் களவுகளையும், கொலைகளையும் கணக்கிட்டுக் கூட்டினால் எந்தத் திராவிடனும் வேதனை அடையாமல் இருக்க முடியாது. விசித்திரமான திருட்டுகள்! விதவிதமான கொலைகள்! அறியாமையை நிலைநிறுத்தி வைத்து அதை அழகு பார்த்து வரும் இந்த நாட்டில் கொண்டு வந்த மதுவிலக்கினால் ஆயிரக்கணக்கான கொலைகள் குறைந்துவிட்டன என்று ஒருபுறம் கணக்கிட்டாலும், இன்று அந்த ஆயிரக்கணக்கான கொலைகள் என்ற கணக்கையும் மிஞ்சிவிட்டது, நாட்டில் அன்றாடம் நடந்து வருகிற தற்கொலைகள்.

    அடிமை நாடாக இருந்த காலம் என்று சொல்லப்படும் ஆகஸ்டு 15க்கு முன்னால், நாட்டில் நடந்து வந்த களவுகள் எத்தனையோ, அவை, இன்று ஒன்று பத்தாக வளர்ந்திருக்கின்றன.

    இல்லாமையினால் _- எப்படியோ பிழைக்கவேண்டும் என்கிற ஏக்கத்தினால் தனி மனிதனாகவோ, சிலர் சேர்ந்தோ நடத்தியதுதான் முன்பு பெரும்பாலான திருட்டுகளுக்குக் காரணம் என்றும், அவைகளில் அநேகமாக எல்லாவற்றுக்கும் தடயங்கள் அகப்பட்டு, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும் சொல்லக்கூடிய நிலையிருந்தது. இன்று பெருகிவரும் திருட்டுக்களையும், அவைகளில் பலவற்றுக்குத் துப்புக் கிடைக்கவில்லை என்பதையும் எண்ணினால், கட்டுப்பாடாக அங்கங்கே உள்ள ஒரு பெருங்கும்பல் இத்துறையில் ஈடுபட்டிருக்க வேண்டுமோ என்றுதான் எவரும் எண்ண வேண்டியதாயிருக்கிறது.

    சுதந்திரம் புகுந்த ஆகஸ்ட்டுக்கு முன்னால், இந்த நாட்டில் வருஷவாரியாக நடந்த களவு, கொலைகளின் எண்ணிக்கையையும், பின்னால் நடந்திருக்கும் களவு, கொலைகளின் எண்ணிக்கையையும், அவ்விருவகையின் தரத்தையும் அரசாங்கம் வெளிப்படுத்துமானால், அது நிச்சயமாக எவருக்கும் திகைப்பையேயுண்டு பண்ணும்.

    இந்த நிலை விரைவில் மாறாவிட்டால், மாறுவதற்காக வழிவகையைச் செய்யாவிட்டால், அயோக்கியத்தனம் செய்யாத _- களவு செய்யாத _- கொலைபுரியாத மனிதன் என்ன ஒரு மனிதனா? என்கிற நிலைக்குத்தான் சமுதாயத்தைக் கொண்டுபோய் வைப்பதாய் முடியும். கள்ள வியாபாரம் செய்யாத ஒரு வியாபாரி, இந்த நாளில், எப்படி ஒரு வியாபாரி என்று தலையெடுக்க முடியவில்லையோ; பொய், பித்தலாட்டம் பேசாத _- செய்யாத வக்கீல், எந்தக் காலத்திலும், எப்படி ஒரு வக்கீல் என்று மதிக்கப்படுவதில்லையோ; லஞ்சம், லைசென்ஸ், சிபாரிசு என்று இல்லாத ஒரு காங்கிரஸ்காரர், இந்த நாளில் எப்படி ஒரு காங்கிரஸ் வீரர் _- தியாகி என்று புகழப்படுவதில்லையோ, இவைகளைப்போலவே, அயோக்கியத்தனம் செய்யாதவன் அறிவற்றவன் என்று இழித்துப் பழித்துப் பேசும்படியானநிலை ஏற்பட்டுவிடுமானால் இன்றைய நடப்பில், அது ஆச்சரியப்படுவதற்கில்லை.
    இந்த நிலை வளரவேண்டியதுதானா? இந்தப் போக்குத்தான் நாட்டுச் சமுதாய மக்களுக்கு _- அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழி வகுக்கவேண்டுமா? இதை எண்ணி எண்ணி நாம் கவலைப்படுகிறோம். இதற்குப் பரிகாரம் என்ன? இந்த ஊழலுக்கு அடிப்படை என்ன? இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில் எங்கே கை வைக்கவேண்டும்? என்பவைகளில் கருத்தைச் செலுத்தி, நாம், மக்களுக்கு -_ இன்றைய ஆளவந்தார்களுக்கு அடிக்கடி எடுத்துக்காட்டி வருகிறோம். ஆனால், இதில் கவலை காட்டவேண்டிய பொறுப்பிலுள்ள, அரசியலை நடத்தும் ஆளவந்தவர்கள் _- அவர்களை ஆட்டிப் படைப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? களவும், கொலைகளும் கண்ணுக்குத் தெரியவில்லையா? காதுக்கு எட்டவில்லையா? அல்லது அவை சர்வ சாதாரணமென்று நினைக்கிறார்களா? சமுதாயத்தில் ஊழல் என்றால், மக்களே திருந்தவேண்டுமே தவிர, வேறு எப்படி அது சாத்தியப்படும் என்று கேட்கிறார்கள் காங்கிரஸ் பெருந்தலைவர்கள். மக்களுக்கு உரிமையுணர்ச்சி வந்துவிட்டது; ஆனால், பொறுப்புணர்ச்சி வேண்டாமா? என்று இதை விளக்குகிறார்கள் அவர்கள்.

    பொறுப்புணர்ச்சி இல்லை என்று கண்டு பிடிக்கும் இவர்கள், பொறுப்புணர்ச்சியை மக்கள் கொள்வதற்குச் செய்திருக்கும் வழி என்ன? வந்து விட்டது உரிமையுணர்ச்சி என்று வாய் கூசாமல் சொல்லுகிறோமே, உண்மையாகவே மக்களிடையே உரிமையுணர்ச்சி பிரதிபலிக்கிறதா? உரிமையை மேலும் மேலும் இழந்து வருகிறோம் என்கிற உணர்ச்சி பிரதிபலிக்கிறதா என்பதை ஏன் எண்ணிப் பார்க்கக்கூடாது? சமுதாய ஊழலுக்குக் காரணம், சமுதாயத்திலுள்ள தனித்தனி மக்களே என்று சண்டமாருதமாகப் பொழிந்து தள்ளும் இவர்கள், சமுதாயத்தின் வழிகாட்டியாக _- சமுதாயத்தை நடத்திச் செல்பவர்களாக உள்ள நம்முடைய தாறுமாறான போக்கே -_ நம்முடைய இழி நடத்தையே சமுதாயத்தில் எதிரொலிக்கிறது என்று கண்ணியமாக ஒப்புக்கொண்டு, அதற்கான பரிகாரம் ஏன் செய்யக்கூடாது?

    பொறுப்பு என்பதே உரிமையின் மீது தானே! உரிமையுள்ள இடத்தில் பொறுப்பை உரக்கக் கூவித்தானா அழைத்து வரவேண்டும்? உரிமையுணர்ச்சி வந்துவிட்டது, பொறுப்புணர்ச்சி வரவில்லை என்கிறவர்கள், உண்மையாகவே உரிமையுணர்வு எது என்றே அறியாதவர்களாக இருக்கவேண்டும் அல்லது உண்மையைத் திரித்துக் கூறும் உலுத்தர்களாக இருக்கவேண்டும் ஏன்?
    உரிமையும் பொறுப்பும் ஒன்றோடொன்று இணைந்தவை; இணைந்தவை மட்டுமல்ல கலந்தவை! எங்கெங்கு உரிமையுண்டோ அங்கெல்லாம் அந்த உரிமையின் முழுப் பகுதியிலும் பொறுப்புணர்ச்சி பற்றிப் படர்ந்திருப்பதையே ஒவ்வொருவரும் காணுகிறோம். பொறுப்புணர்ச்சி இல்லை என்றால் அங்கு உரிமையுணர்ச்சி இல்லை என்பதுதான் தெளிவு. மக்கள் பொறுப்புணர்ச்சி உடையவர்களாக _- சமுதாயத்தின் அங்கத்தினர்களாகிய நாம் செய்யும் ஒவ்வொன்றும், சமுதாயத்தையே பாதிக்கும் என்கிற பொறுப்பையுடையவர்களாக இல்லை என்றால், நம் சமுதாயம் நம் நாடு என்கிற உரிமையுணர்வு நிச்சயமாக மக்களுக்கு இல்லை என்பதுதானே அதற்கு உண்மை.

    இந்த உரிமையுணர்வை மக்கள் கொள்ளும்படி இன்றைய ஆளவந்தார்கள் செய்திருக்கும் ஏற்பாடு என்ன? ஆளவந்தவர்களின் மூலபலமான காங்கிரஸ் இத்துறையில் சாதித்திருப்பது என்ன? சாதிக்கப்போவது என்ன?
    நாள் முழுவதும் பாடுபடுகிற பாட்டாளிக்குப் பாட்டின் பலனிலே பங்குண்டு. அவன் நடைபிணமாய் வாழ்வதற்கு என்றிருக்கும் நிலைமாறி, பாடுபட்டுக்கிடைக்கும் பலனை பாடுபடுபவனே அடைவான் என்கிற நிலை வந்துவிட்டதா? அந்த நிலைக்கான அடிப்படை போடப்பட்டிருக்கிறது என்றாவது, பாடுபடுபவன் இன்றைய நிலையில் எதிர்பார்க்கத்தான் முடியுமா? நிலைமை இப்படி இருக்கும்போது அதாவது உரிமையுணர்வுக்கே இடமில்லாதபோது பொறுப்புணர்வைப் பற்றிப் பேசுவதினால் ஏதாவது பயன் உண்டாகிவிடுமா? உரிமையில் செலுத்தப்படும் மற்றவர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்படாதவரை, ஆதிக்கத்தில் அடங்கி நிற்கும் உழைப்பாளர்களிடத்தில் உரிமையில் ஒரு பொறுப்பை எப்படித்தான் எதிர்பார்க்க முடியும். ஆம்! வீட்டுக்கொரு சுற்றுச்சுவர்போல நாட்டுக்கொரு எல்லைகட்டி, நாட்டுச் செல்வம் நாட்டிலேயே சுழலும்படியாக வழிசெய்யட்டும்! நாட்டு மக்கள் தாம்பிறந்த நாட்டில், உரிமையுள்ள தாய்நாட்டில், தாம் வாழ ஒரு மார்க்கமில்லையே என்று தவிக்கும் தவிப்படங்க வழி வகுக்கட்டும்!

    உழைப்பவர் யார், யாருண்டோ அவர்களுக்கெல்லாம் உல்லாச வாழ்வுக்கு நாட்டில் இடம் உண்டு என்கிற பிரகடனத்தை விடுக்கட்டும்! மக்களின் மொழி, கலை, நாகரிகம், முதலியவற்றில் மக்களுக்கே. முழு உரிமையும் என்கிற பேச்சை நடத்தையில் காட்ட முன்வரட்டும்! மக்கள் மக்களாகவே மதிக்கப்படுவர், மக்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லை என்கிற நம்பிக்கையையூட்டட்டும்! இதுதான் இன்று திராவிடர் கழகம் கூறுவது, வேண்டுவது. முழக்கமிடுவது!

    இந்த உரிமையுணர்வு மக்களுக்கு ஊட்டப்படாதவரை, சமுதாயத்தில் ஒரு ஒழுங்கையோ சமுதாய மக்களிடம் நாணயத்தையோ நல்ல நடத்தையையோ பொறுப்பான செயல்களையோ எப்படி எதிர்பார்க்க முடியும் என்று நாம் கேட்கிறோம்.

                 -------------------------------------  தந்தைபெரியார் - ”குடிஅரசு”, 19.02.1949

    0 comments: