(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும் மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)
அயோத்தியா காண்டம்
அய்ந்தாம் அத்தியாயம் தொடர்ச்சி
அதைச் செவியுற்ற தசரதன், நான் பயந்தபடி
இவளுக்கு உடம்பில் அசவுக்கியமில்லாமற் போனது என் பாக்கியமே என்று
புன்சிரிப் புடன் அவளுடைய முகத்தை நன்றாய் ஆசை தீரப் பார்க்கவேண்டுமென்று
அவளைத் தூக்கி எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டு அவளிடத்தில்
வைத்திருக்கிற எல்லையற்ற காமவிகாரத்தால் என்ன சொல்லுகிறோ மென்று
யோசிக்காமல். அழகில் ஈடற்ற வளே! என் உயிருக்குயிரான இராமன்மேல் ஆணை
யிட்டுச் சொல்லுகிறேன். நீ வேண்டுவதைச் சொல்லி என்னைக் காப்பாற்று.
பார்ப்பவர் கண்களையும் மனத்தையும் கவரும் உன் அழகின் மகிமையையும் என்
திறமையையும் நீ முழுதும் தெரிந்தும் இப்படி அய்யுற லாமா? என்கிறான்.
கைகேயிக்கு அவ்வாக்குறுதியால் சந்தேகம்
தீர்ந்தது. ஆனால், தான் கேட்டபின் அவன் மறுத்தலும் கூடும் ஆகையால் அவன்
வாக்கை உறுதி செய்து அவனைக் கட்டுப்படுத்த எண்ணிக் கைகேயி, நீர் கூறிய
வாக்குறுதி உண்மையானால் அதை முப்பத்து முக்கோடி தேவர் களும் மற்றெல்லோரும்
கேட்கட்டும். தேவதைகளே, நீங்களே இவர் வாக்குறுதியை நன்றாகக் கேட்டு
இதற்குச் சான்றாவீர்கள் என்று உரக்கக்கூவினாள். இவ்வாறு அவனைக்
கட்டுப்படுத்தினாள். அவன் காமத்தால் மோகித்து எதைக்கேட்டாலும்
கொடுப்பானென்ற நிச்சயத்தால், நான் சம்பாரசுரப் போரில் உமது உயிரைக்
காப்பாற்றியதற்காக இரண்டு வரங்கள் தந்தீர்; இப்போதும் நான் எதைக்கேட்டாலும்
கொடுப்பதாக மறுபடியும் வாக்குறுதி செய்தீர். இப்போது அவற்றைக் கேட்கப்
போகிறேன். நீர் தராது மறுத்தால், நான் உம்மால் அவமானம் செய்யப்பட்டு உயிரை
மாய்ப்பேன் என்றாள்.
தசரதன் அவளுக்கு வசப்பட்டு, அவற்றைக்
கொடுத்தேன் கேள் என்றான். இப்படிக் காமத்தால் மோகித்துக் கேட்ட வரங்களைக்
கொடுக்கத் தயாரா யிருக்கும் தன் கணவனைப் பார்த்துக் கைகேயி, முதல் வரம்,
இராமன் முடிசூட்டிற்குச் சேகரித்த பொருள்களைக் கொண்டே என் மகன் பரதனுக்கு
முடிசூட்ட வேண்டும். இரண்டாவது வரமாவது, இராமன் மரவுரி முதலியன அணிந்து
பதினான்கு ஆண்டுகள் காடேகவேண்டும். தாமதம் கூடாது; உமது வாக்குறுதியை
நினைவு கொள்ளும். கடன் வாங்கினவனைக் கடன் கொடுத்தவன் கேட்கும்போது அவனுக்கு
வருத்தமுண்டாகும். ஆனால் அது குற்றமா? இராமன் இன்றைக்கே காட்டுக்குப்
போவதை நான் பார்க்க வேண்டும். சத்தியத்தைக் காப்பாற்றுவதே நற்கதிக்கு வழி!
என்று கூறினாள். இடியொலி கேட்ட நாகம் போலத் தசரதன் அறிவிழந்து விழுந்தான்.
இவ்வரலாற்றை ஆராய்வோம்.
இதனால் தசரதன் மிகவும் காமவிகாரத்தில்
ஈடுபட்ட வனென்பது தெளிவாகிறது. அதனாலேயே பட்டத்து மனைவியர் மூவரோடு
அறுபதினாயிரம் காமக்கிழத்தி யரையும் வைத்திருந்தவனாவான். தசரதன் கிழவ
னென்றும், கைகேயி பாலியமானவளென்றும் இவ்வர லாற்றில் கூறப்படுகிறது.
முன் வரலாறுகளால் தசரதனைப்போலவே அவன்
மனைவியரும் வயதானவரென்றே தெரியவருகிறது. இங்கே கைகேயி பாலியமானவளென்று
சொல்லப்படு கிறாள். இது முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. கைகேயி
பாலியமானவளென்று கொண்டால் அவளை அவள் தந்தையாகிய கேகய மன்னன், அறுபதினா
யிரத்தின் மேலும் வயதான தசரதனுக்கு எவ்வாறு மணஞ்செய்து கொடுத்தானோ? இவ்வளவு
வயதான கிழவனாகிய தசரதனிடம் அவள் என்ன இன்பந்தான் பெற்றாளோ? மகனுக்கு
விடிந்தால் முடிசூட்டு. தந்தையாகிய தசரதன் கைகேயியைப் புணர்வதற்கு மிகவும்
காம விகாரத்தோடு இவ்வாறு தட்டழிகிறான். என்ன ஆச்சரியம்? கோப அறைக்கு
ஓடிப்போய் அவளுக்கு நோயோவென அய்யுற்றுக் கவலைப்படு கிறான். உடம்புக்கு
ஒன்றுமில்லையென்று அவள் கூறவே, தன் தீய காரியத்திற்கு இடைஞ்சலில்லையென்று
மகிழ்கிறான். இவனுடைய காம வெறியைப் பற்றி வால்மீகி முனிவர் மேலே குறித்த
கதையாலேயே பல இடங்களில் கூறுகிறார். தசரதன் காம விகாரத்தால் சத்தியம்
செய்கிறவன். பின்னால் தன் சொல்லை மாற்றினாலும் மாற்றுவானென்றே அவனைக்
கட்டுப்படுத் துவதற்கு அவன் வாக்குறுதியைப் பலரும் அறியும்படி கைகேயி
சத்தமிட்டுக் கூறுகிறாள்.
தசரதனோ தன் இழிந்த தன்மைக்கேற்பக்
குற்றமில் லாதவரைக் கொலை செய்தல், கொலை செய்தோரை விட்டுவிடுதல் முதலான
செயல்களைக்கூடச் செய்வ தாகக் கைகேயியிடம் கூறுகிறாள். இவ்வளவு தூரம்
கேவலமான புத்தியையும் ஒழுக்கத்தையும் உடைய வனாகிய தசரதனை நல்லவனைப்போலக்
காட்டி உலகத்தாரை ஏமாற்றினார் கம்பர். தசரதனைப் பற்றிய மேலே கண்ட கேவலமான
வரலாறு முழுவதையும் கம்பர் கூறாமல் மறைத்தார்.
சபையாரிடத்திலே விடை பெற்றுக்கொண்டு
தனியாகக் கைகேயியை நாடிவந்த தசரதனை அவளு டைய அரண்மனைக்கு மன்னர் பலர் சூழ
வந்தானென்று கம்பர் கூறுகிறார். ஆதலின் உண்மைக் கதையை மறைப்பதே அவருடைய
நோக்கம் போலும்! அவன் தனியே போப அறைக்குச் சென்று கைகேயியைக் கண்டான் என
வால்மீகி கூறக்கம்பரோ, வேலைக்காரி களோடும் சென்று அவளைக் காண்பதாகக்
கூறுகிறார். இவையெல்லாம் தசரதனுடைய கேவலமான காமவெறித் தன்மையை மறைத்து,
அவனை நல்லவனைப்போல உலகுக்குக் காட்டி மயக்கப் போலும்!
தசரதன் கைகேயியனுடைய அழகிய முகத்தைப்
பார்த்து மகிழ்வதற்காக அவளை எடுத்து மடிமீது வைத்துக் கொள்கிறான் என்று
வால்மீகி கூறியிருக்கக் கம்பரோ அவளை வாரியெடுத்ததாகவும், அவள் அவன் கையைத்
தள்ளிக் கீறே மறுபடியும் விழுந்தாளென்றும் கூறுகிறார். தசரதன் தன்னிடம்
கைகேயி பேசிய பின்னரே அவளைத் தூக்கி மடிமீது வைத்தக் கொண்டானென்றும்
வால்மீகி கூறுகிறார்; கம்பரோ போனவுடனே அவன் அவளைத் தூக்கியதாகக்
கூறுகிறார்.
தசரதன் முதலில் தன் புண்ணியத்தின் மேல்
ஆணையிடுகிறன்; பின்னரே இராமன்மேல் ஆணை யிடுகிறான். அவன் தன் புண்ணியத்தின்
மேல் ஆணை யிட்டதைக் கம்பர் கூறாது விடுத்தார்.
மேலே கண்ட வரலாற்றை வால்மீகி பத்து, பதினொன்று என்ற இரண்டு சருக்கங்களிலே மிகவும் விவரமாகக் கூறியிருக்கக் கம்பர், அதையே கைகேயி சூழ்வினைப் படலத்தில் முதல் பத்துப் பாடல்களால் மிகச்சுருங்கக் கூறுகிறார். இது தசரதனுடைய இழி குணத்தை மறைக்கவே.
மேலே கண்ட வரலாற்றை வால்மீகி பத்து, பதினொன்று என்ற இரண்டு சருக்கங்களிலே மிகவும் விவரமாகக் கூறியிருக்கக் கம்பர், அதையே கைகேயி சூழ்வினைப் படலத்தில் முதல் பத்துப் பாடல்களால் மிகச்சுருங்கக் கூறுகிறார். இது தசரதனுடைய இழி குணத்தை மறைக்கவே.
ஆறாம் அத்தியாயம்
இராமன் காடேகவும் பரதன் நாடாளவும் கூறிய
கைகேயியின் பேச்சு காதில் விழுந்தமாத்திரத்தில் தசரதன் மிகவும் கலங்கினான்.
அது கனவோ நனவோ என அய்யுற்றான். தனக்குப் பித்தேறியதோ என எண்ணிக் கொஞ்சம்
தெளிந்து கொடுங்கோபத்துடனே கைகேயியை எரிக்கிறவன் போலப் பார்த்து. அடி,
கெட்டவளே! நானாவது, இராமனாவது உனக்குச் செய்த தீமை உளதோ? எல்லாரும்
இராமனைப் புகழ்கின் றார்களே! என்னிடம் அளவற்ற அன்பை வைத்திருக்கும் அவனை
எவ்வாறு பிரிவேன்.
அவனைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆசை
வளர்கிறது. அவனை ஒரு கணம் பார்க்காமலிருந்தாலும் என்னுயிர் போய்விடும்.
அவனில்லாமல் என்னுடலில் உயிர் நிற்காது. தீயவளே! பிடிவாதத்தை விடு. என்
தலையால் உன் அடிகளைத் தொட்டு வேண்டுகிறேன். இதுவரை அவனை நல்லவ னென்றாயே.
இது என்னை மகிழச்செய்வதற்கா அல்லது அவன் உனக்கு பணிவிடை செய்வதற்கா? உனக்கு
யார் இக்கெட்ட புத்தியைச் சொன்னது? இராமன் மிக்க செல்லமாக வளர்ந்தான்.
அவனைக் காட்டுக்கு அனுப்ப உன் மனம் எப்படித்துணிந்தது? அவன் எல்லோருக்கும்
பிரியமானவனாயிற்றே? உலகம் சம்மதிக்குமோ? அவன் உனக்குப் பணிவிடை செய்வதில்
கொஞ்சமாவது தவறுவ தில்லையே. பரதனைக் காட்டிலும் அவன் உனக்குச் சிறந்த
பணிவிடை செய்கிறானன்றோ? அப்படியிருக்கப் பரதனிடத்தில் என்ன சிறப்பைக்
கண்டாய்! மனிதரிற் சிறந்தவனான இராமனைக் காட்டிலும் அதிகமாக உனக்கு ஊழியம்
செய்கிறவர் யார்? உன்னிடத்தில் அதிக மரியாதையையும் வணக்கத்தையும் வைத்து,
உன் சொற்படி நடக்கிறவர் இராமனைத் தவிர யார்? அப்படி யிருக்க அவனைக்
காட்டிற்குத் துரத்த எப்படி உன் மனம் துணிந்தது? அவன் தன் பணியிலும்
கொடையிலும் எல்லோரையும் வசப்படுத்துகிறான். அவன் எல்லோ ருடைய மனம்போலவும்
நடப்பவனாயிற்றே. கைகேயி! எனக்கோ வயதாகிவிட்டது. நெடுநாள் பிழைத்திருக்க
மாட்டேன். கிழவனான நான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பவன். ஆகையால்
என்னிடத்தில் இரக்கம் வை. நீ எனக்கு வயதிற் சிறியவளாக இருந்தாலும் உன்
கால்களைத் தொடடுக் கைகூப்பி வேண்டுகிறேன். நான் இராமனுக்குச் சொன்ன
சொல்லைத் தவறும்படி செய்யாதே என்று வேண்டிக் கொண்டான்.
பின் கொஞ்சநேரம் மூர்ச்சையடைந்து எழுந்து
தள்ளாடிப் புலம்பிய தசரதனை நோக்கிக் கைகேயி, உம்மையொத்த மன்னர் உம்முடைய
உயிரைக்காத்த கைகேயிக்கு என்ன உதவி செய்தீரென்று கேட்டால் யாது கூறுவீர்?
தன்னுயிரைக் கொடுத்து யா என்னைக் காப்பாற்றினாரோ, யாருடைய தயவால் நான்
பிழைத் திருக்கிறேனோ, அவளுக்கு அப்போது இரண்டு வரங்கள் கொடுத்துவிட்டு
இப்போது அவற்றை மறந்து விட்டேனென்று சொல்வீரோ? சிபி முதலியவர் குலத்திற்
பிறந்தவரா நீர்? கெட்ட எண்ணமுள்ளவனே! நீ அதர் மமாக நடந்து இராமனுக்கு
முடிசூட்டிக் கவுசலையோடு சுகமாக வாழ எண்ணங்கொண்டிருக்கிறாயல்லவா?
இராமனுக்கு முடி சூட்டினால், உன்னெதிரிலே நஞ்சைக் குடித்து இப்போதே
இறப்பேன். கவுசலையைக் காட்டிலும் உனக்கு நானே அதிக சுகத்தைக் கொடுக்
கிறவளல்லவா? ஆதலின் கோசலையை எல்லோரும் வணங்குவதை நான் பார்ப்பதைவிட உயிரையே
விடுவேன் என்று கூறினாள். தசரதன் எவ்வளவு கெஞ் சியும் மறு மொழி கூறவில்லை.
அவன் கொஞ்சநேரம் அவளை இமை கொட்டாமற் பார்த்திருந்து, இராமா என்று கூவிக்
கீழே விழுந்தான்.
பின் அவன் வணக்கமாய், பெண்ணே! உன்னைச்சிறு
பெண்ணாக மணந்தேன். அப்போது உன் கெட்ட குணத்தை அறிய முடியவில்லை. இப்போது
வயதான பிறகு உன் தீய குணம் வெளியாகிறது. குடிகளுடைய கோபத்தைத் தேடாதே.
பரதன் மிகவும் நல்லவனல்லவா? ஆதலில் அவன் இராமனிருந்தாலே நாட்டிலிருப்பான்.
என்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் இந்த நாட்டைச் சமமாகப் பிரித்துக்
கொடுக்கிறேன். அல்லது பரதனுக்கு முடிசூட்டுகிறேன். இராமன் மாத்திரம் வயதான
என்னருகிலிருக்கும்படி செய்; பலநாளாகச் சிந்தித்துச் செய்த இத்தீர்மானத்தை
இப்படிக் கெடுக்கலாமா? பலருக்கு முன்பாக இராமனுக்கு முடிசூட்டு நாளை என்ற
என்வாக்குப் பொய்யாகுமே! கோசலை மிகவும் உத்தமி. அவள் முன் என்ன சொல்வேன்?
உனக்காக அவளைச் சரியாக நான் நடத்தலானாலும் சரி, எனக்கு நன்மை தராத இந்தக்
காரியத்தை உன் பேச்சைக்கேட்டு நான் செய்யவே மாட்டேன். உனக்குச்சாவு
வரக்காணோமே. அய்யோ! உன் கால்களைப் பிடித்து வணங்குகிறேன் தயவு செய்!
4 comments:
அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...
ஆப்.கி.பார் டிராமா சர்க்கார்
அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...
ஒலகத் தலவரா அவதாரம் எடுக்கற அடுத்த முயற்சியில நம்ம அண்ணன் நேபாளம் போனது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... அங்க கோவிலுக்குப் போனாரு, ரோட்ல நடந்தாரு, அல்லாரையும் பாத்தாரு. இதெல்லாம் தாண்டி இன்னொரு சூப்பர் வேல செஞ்சாரு. அது என்னா? செண்டிமெண்டா அடிச்சாரு.
எம்.ஜி.ஆர் நடிச்ச நாளை நமதே படத்த ரீரிலிஸ் பண்ணாரு. பல வருசம் முன்னாடி ஜீத்பகதூர்னு ஒரு பையன் அப்பா, அம்மாவ பிரிஞ்சி இந்தியா வந்துட்டான்.
அவன அண்ணன் குஜராத்ல கண்டெடுத்து வளத்தாரு. அவனும் வளந்தான், அண்ணனும் வளந்தாரு. அவன் பெரிய பையன் ஆனான், அண்ணன் பிரைம் மினிஸ்டர் ஆனாரு.
அவன அவங்க குடும்பத்தோட சேத்து வைக்கனும்னே நேபாள் டூர் போட சொன்னாரு. நேபாளுக்கு ஜீத்பகதூரையும் கையோட கூப்பிட்டுக்கிட்டுப் போனாரு. பிரியா படத்து ரஜினி மாதிரி ரோடு ரோடா பாடிக்கிட்டே போனாரு. அவங்க குடும்பத்தக் கண்டு பிடிச்சாரு.
அவங்ககூட சேத்து வச்சி, கண்கலங்குனாரு. நாளை நமதே இந்த நாளும் நமதே பாட்டு ஓடுச்சு. கூடி நின்ன இந்தியப் பத்திரிக்க கண்ணெல்லாம் ஆறா ஓடுச்சு. ஆனா ஜீத்பகதூரு கலங்கவேயில்ல... ஏன்? அங்கதான் ஒரு டிவிஸ்ட். ஜீத்து, மோடி அண்ணனுக்கே தெரியாம திருட்டு லாரில போயி அவங்க குடுமபத்த 2012 ஆகஸ்ட் 23_லயே பாத்துட்டான். இத அவன் தன் மூஞ்சிபுத்தகத்ல (Facebookல) படமா போட்டுட்டான். இது அண்ணனுக்குத் தெரியாமலே இருந்துடுச்சி.
அதுக்கு முன்னாடி 2012 ஜூன் 17ஆம் தேதி ஜீத் போட்ட ஸ்டேடஸ்:
Hey Fri Gm
Bye bye India.
2012 ஜூன் 19ஆம் தேதி போட்ட ஸ்டேடஸ்:
Hey Fri Today is I m v happy
Bcos I m my home (Nepal)
இதுவும் வளமான குஜராத் கதயான்னு யாரும் கேக்கக் கூடாது. அது அல்லாம் அண்ணன் தூங்கும் போது நடந்தது. ஆனாலும் அண்ணன் கடம ஒணர்ச்சியோட ஜீத்பகதூர அவங்க குடும்பத்தோட சேத்து வச்சிட்டு ட்வீட்டும் போட்டுட்டாரு.
அப்ப நம்ம வேல... ம், பாடுங்க...
# நாளை நமதே, இந்த நாளும் நமத
- எஸ்.எஸ்.சிவசங்கர்
உங்களுக்குத் தெரியுமா?
இராசாராம் மோகன்ராய் வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேறுயாரும் அதைப் படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
கல்கியின் பூணூல் வித்தை
என்னடா.. இது! கல்கிக்கு வந்த தமிழ்ப் பற்று! சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டாராம் ஜெயலலிதா. அந்தத் தியாகத்தை, போர்க்குணத்தைப் படம் போட்டுப் பெருமைப்படுகிறது கல்கி (3.8.2014). உங்க சோலையில இந்த மயிலையும் கொஞ்சம் ஆடவிடுங்க என்று மென்மையாக சமஸ்கிருத வாரத்தை நுழைத்து, வான்கோழியாகிய இந்தியைத் திணிக்கிறாராம்.
அதனால் தமிழ்ப்பூங்காவில் மோடி நுழைக்க வந்த இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அம்மையார் தடுக்கிறார்.
அதெல்லாஞ் சரி! அனை வருக்கும் தெரியும் என்பதால் ஆதரிக்க முடியாது என்ற நிலையில், இந்தியைத் திணிப்பு என்றும் வான்கோழி என்றும் பொதுவாக எதிர்ப்பது போல் காட்டிவிட்டு, அதனினும் விஷமான சமஸ்கிருதத்தை மயில் என்று சாங்கோபாங்கமாக உயர்த்திக் காட்டுகிற வித்தை அட..அட... இதுதாங் காணும் பூணூல் வித்தை!
- அன்பன்
கடவுள் இருந்தால்....!
கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் நம்பும் கடவுளின் முக்குணங்கள், முத்தன்மைகள் - மனித சக்திக்கு மேற்பட்டதாக கூறப்படுவன.
(1) சர்வ சக்தி - எல்லாம் வல்லவன்.
(2) சர்வ வியாபி - எங்கும் நிறைந்த பரம்பொருள்.
(3) சர்வ தயாபரன் - கருணையே வடிவானவன்.
உள்ளபடியே அப்படிப்பட்ட தன்மைகள் அக்கடவுளர் - கடவுளச்சிகளுக்கு உள்ளனவா என்று எந்த பக்தராவது புத்திகொண்டு சிந்திக்கின்றனரா? ஆராய்கின்றனரா? இல்லையா?
வெறும் நம்பிக்கை அதுவும் குருட்டு நம்பிக்கைதானே.
அதனால்தான் பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்றார் அனுபவரீதியான வகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார்!
அன்றாடம் அத்துணை மதநம்பிக்கையாளரும் கடவுளை வணங்கி, பிராத்தனை என்ற கையூட்டும் - லஞ்சமும் தரத் தவறுவதே இல்லை.
அப்படி இருந்தும் அன்றாட நிகழ்வுகள் பெரும்பாலான மக்களுக்குத் துன்பமும், இழப்பும், தொல்லையும் ஆகத்தானே உள்ளதே தவிர, மகிழத்தக்கதாக உள்ளதா?
கடவுளை நம்பாத, நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் மட்டும்தான் தொல்லைகளை, துன்பத்தை அனுபவிக்கின்றார்களா? இல்லையே. நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் இப்படி துன்பத் தீயில் வெந்து கருகுகின்றனரே.
உத்தரகாண்டில் யாத்திரைக்குப் போனவர்கள் அளவுக்கு அதிகமான மழை, வெள்ளம் மூலம் அடித்துச் செல்லப்பட்டவர்கள்,
மராத்திய மாநிலம் புனேயில் மலின் என்ற ஊரில் பழங்குடிமக்கள் வீடுகளோடு, நிலச்சரிகளில் புதையுண்டு பிணக்குவியல்களைத் தோண்டி எடுக்கும் அவலம் கண்றாவிக் காட்சி அல்லவா?
பீகாரில் நதி வெள்ளப் பெருக்கெடுத்ததோடு, பல்லாயிரவர் வீடிழந்து, வாழ்விழந்து நிற்கின்றனர்!
இஸ்ரேலில் - பாலஸ்தீனப் பச்சிளங் குழந்தைகள்மீதும் ஈவிரக்கமில்லா இஸ்ரேலின் குண்டுமழை,
சீனாவில் 3.8.2014இல் 6.8 ரிக்டர் அளவுக்கு கடும் பூகம்பம் - பல நூற்றுக்கணக்கில் மக்கள் பலி,
கோவில் தரிசனம் மற்றும் பல மத விழாக்களுக்குச் சென்று, நேர்த்திக்கடன், காணிக்கை தந்துவிட்டுத் திரும்புவோர் சாலை விபத்துகளில் குடும்பம் குடும்பமாகப் பலியாகும் கொடுமை!
பச்சிளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பிணமாகும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகச் செய்திகள் நாள்தோறும் வருகின்றனவே.
கடவுள் சர்வசக்தி படைத்தவராக இருப்பின் தடுத்திருக்க வேண்டாமா?
கடவுள் சர்வ வியாபி - எங்கும் நிறைந்தவர் _ இப்படி நடப்பதை வேடிக்கை பார்த்து வாய்மூடியாக இருப்பாரா?
எல்லாவற்றையும்விட மேலாக கருணையே வடிவானவராக இருந்தால், தனது பிள்ளைகள், தன்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாக கொள்ளைச்சாவு சாவுவதைக் கண்டு வாளா இருப்பாரா?
எண்ணிப் பாருங்கள்!
நாத்திகம் நன்னெறி என்பது அப்போது புரியும்.
கி.வீரமணி,
ஆசிரியர்.
Post a Comment