Search This Blog

15.8.14

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமா?


இந்தியத் துணைக் கண்டம் விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஓடி விட்டன. குடிஅரசாகி 64 ஆண்டுகள் பறந்து விட்டன.

மக்கள் தொகை வளர்ந்திருக்கிறதே தவிர மக்களுக் கான அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, குடியிருக்க வீடு என்கிற அடிப்படைத் தேவை கள்கூடப் பூர்த்தியாகவில்லை. குடி தண்ணீருக்கேகூட அல்லாடும் பரிதாபம்!

இதே கால கட்டத்தில் விடுதலை அடைந்த சீனா தோளைத் தூக்கி நிற்கிறது. நாமோ சுளை சொத்தை யான வெறும் தோலாகவே காணப்படுகிறோம்.
நாள் ஒன்றுக்கு வெறும் 20 ரூபாய் பொருளீட்டக் கூடிய மக்கள் இந்தியாவில் 77 விழுக்காடாம். இந்த இருபது ரூபாய் நாள் ஒன்றுக்கு இரண்டே இரண்டு கோப்பைத் தேநீர் பருகலாம். மற்ற தேவைகளுக்கு என்ன செய்வது?

அய்ந்து நட்சத்திரக் கலாச்சாரம் ஆகாயத்தை முட்டினால் போதுமா?
பெரும்பாலான மக்கள் ஆகிய உழைக்கும் மக்களின் நிலை என்ன? வங்கிகள் கடன் கொடுக்கும் பொழுதுகூட நடுத்தர விவசாயியின் டிராக்டருக்குக் கடன் வாங்கினால் அவன்மீது விதிக்கப்படும் வட்டியைவிட மேல் தட்டு மனிதர்களுக்காக வழங்கும் கார் கடனுக்கு வட்டி குறைவு என்றால் - இது என்ன பார்வை?

விவசாயம் சாவியானாலும் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடனை வட்டியோடு கட்டியாக வேண்டும்; அப்படி கட்டாவிட்டால் ஆடு, மாடுகளைக் கிட்டிப் போட்டு ஓட்டிக் கொண்டு சென்று விடுவார்கள். ஆனால், இந்த நாட்டில் பெரும் பணத் திமிங்கலங் களிடமிருந்து வாராக் கடனைக் கணக்கிட்டால் விவசாயிகளின் கடன் என்பது வெறும் தூசுதான்!


அதுவும் இப்பொழுது மத்தியில் வந்துள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது  - கார்ப்பரேட் கம்பெனிகளின் கடைப் பார்வைக் காதலுக்குக் கசிந்துருகக் கூடிய ஒன்றே!


இந்தியாவில் மானுட வளர்ச்சிபற்றி அய்.நா. தந்துள்ள அறிக்கை அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியைக் காட்டிலும் நேபாளம், வங்காளதேசத்தின் வளர்ச்சி அதிகம்.


1995ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் அண்டை நாடுகளான வங்காளதேசம், பூடான், நேபாளம் இவைகளைக் காட்டிலும் இந்தியாவில் குழந்தைகளின் மரணம் குறைவு! ஆனால் 2010இல் நிலைமை என்ன தெரியுமா? அந்த நாடுகளைவிட இந்தியாவில் குழந்தைகள் மரணம் அதிகம்; 1000 குழந்தைகளில் 48 குழந்தைகள் மரணிக்கின்றன.


பாலின சமத்துவத்தில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு இடம் 127. தேசியக் குற்றப் பிரிவு அமைப்பின் 2013க்கான புள்ளி விவரப்படி இந்தியாவில் நாள் ஒன்றுக்கு பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 93. 2012இல் பாலியல் வல்லுறவு 24,923 என்றால் 2013இல் இது 33,707 ஆகத் தாவியுள்ளது!


தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் 2012இல் இந்த எண்ணிக்கை 737; ஆனால் 2013ஆம் ஆண்டிலே 923 வழக்குகள் பதிவாகியுள்ளன. 19 விழுக்காடு அதிகரித் துள்ளது. இதில் குழந்தைகள் மீதான வல்லுறவு என்னும் காட்டு விலங்காண்டித்தனம் 48; வெட்கித்தலை குனிய வேண்டாமா!?

பொருளாதாரக் கண்ணோட்டம் என்றால் சொல் லவே சகிக்கவில்லை. ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும், பாதுகாப்புத் துறையிலும்கூட அந்நிய முதலீடு 49 விழுக்காடாம்.


எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி. இதுபோன்ற அரசின் முடிவுகளைக் கடுமையாக எதிர்த்து வந்தது; நாடாளுமன்றத்தையே கூட முடக்கியதுண்டு.
கடந்த ஜூலை 30ஆம் தேதி மத்திய அமைச் சரவைக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக் கப்பட்டுள்ளன. தொழிலாளர் சட்டங்களில் சில திருத்தங்களாம்!


பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலாளி வர்க்கமும் தங்கள் இலாப வேட்டைக்குத் தொழிலாளர் களின் உழைப்பினை உறிஞ்சிடும் வகையில் தொழி லாளர் நலச் சட்டங்களில் திருத்தம் வருகிறது.


தொழிலாளர்களின் வேலை நேரம் உயர்த்தப்பட உள்ளது. 90 நாட்கள் வேலை செய்தால் ஒரு தொழிலாளியின் பணி நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் - இனி அது 240 நாட்களாக உயர்த்தப்படுமாம்.


ஒரு தொழிற்சாலையில் 19 பேர் பணியாற்றினாலே தொழிற்சாலை  சட்டமும், தொழிலாளர் சட்டமும் செல்லுபடியாகும் என்ற இன்றைய நிலையை மாற்றி 40 தொழிலாளர்கள் பணியாற்றும் இடத்துக்குத் தான் பொருந்துமாம்.


வரதட்சணை சட்டத்திலும் மாற்றம் வருகிறதாம் - போகிற போக்கைப் பார்த்தால் வளர்ச்சி என்பது வீழ்ச்சியில் தான் இருக்கும் போல் தோன்றுகிறது.

கல்வியை எடுத்துக் கொண்டால் 52 சதவீத மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விடுகின்றனர்.


தீண்டாமைக் கொடுமை இன்னொரு பக்கத்தில்; மனிதன் மலத்தை மனிதனே சுமக்கும் அவலம்; கழிப்பறை வசதி இல்லாத கல்விக் கூடங்கள்  என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.


தற்போது மத்தியில் உள்ள ஆட்சியோ மதச் சார்பற்ற தன்மையைத் தகர்க்க கூடியதாகும். ஆட்சிக்கு வந்த 60 நாட்களில் மதக் கலவரங்கள் அதிகரித்துள்ளன என்று நாடாளுமன்றத்திலேயே குற்றஞ் சாட்டப் பட்டுள்ளது.

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா காலாவதியாகி விட்டது என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது.

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்பது - இதுதானா?
                 ---------------------"விடுதலை” தலையங்கம் 15-8-2014
Read more: http://viduthalai.in/page-2/85897.html#ixzz3ASftMgev

0 comments: