பெண்களுக்கு விழா எடுக்கப்படுகிறது என்றால் அது நம்
இயக்கத்தில்தான்; பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் நம் இயக்கம்தான்!
பெரியார் பேருரையாளர் இறையனார் பத்தாம் ஆண்டு நினைவுநாள் - திருமகள் பவளவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் இல்லாத ஹிந்து மதம் நூலை வெளியிட்டு சிறப்புரை
பவள விழா
நாயகி திருமகள் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், அவரது
துணைவியார் மோகனா வீரமணி அவர்களும் பயனாடை அணிவித்து வாழ்த்து
தெரிவித்தனர். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார
அணிச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் ஆகியோர்
உள்ளனர். பெரியார் பேருரையாளர் இறையன் எழுதிய இல்லாத ஹிந்து மதம் நூலை
தமிழர் தலைவர் வெளியிட, இந்திய குடிசைவாழ்வோர் கூட்டமைப்பின் தேசியத்
தலைவர் நேருதாசன் பெற்றுக்கொண்டார். (சென்னை, பெரியார் திடல், 12.8.2014).
சென்னை, ஆக.14- பெண்களுக்கு விழா
எடுக்கப்படு கிறது என்றால், அது நம் இயக்கத்தில்தான்; பெண்களுக்கு
முக்கியத்துவம் அளிப்பதும் நம் இயக்கம்தான் என்று தமிழர் தலைவர் ஆசிரியர்
அவர்கள் பாராட்டுரை நிகழ்த்தினார்
அவரது உரை வருமாறு:
சென்னை பெரியார் திடலில் நடிகவேள்
எம்.ஆர். இராதா மன்றத்தில் (12.8.2014) மாலை சுயமரியாதைச் சுடரொளி பெரியார்
பேருரையாளர் பேராசிரியர் இறையன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு
நாளையொட்டி அவர் எழுதிய இல்லாத ஹிந்து மதம் நூலை தமிழர் தலைவர் ஆசிரியர்
அவர்கள் வெளியிட்டார்கள். சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள்
இறையன் பவளவிழாவும் கொண்டாடப்பட்டது.
தமிழர் தலைவர் உரை
பேராசிரியர் இறையனார் பத்தாம் ஆண்டு
நினைவு நாள், வாழ்வியலில் துன்பமும், இன்பமும் இணைந்தது என்று வாழ்க்கைத்
தத்துவத்தை சொல்லுகிற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி உள்ளது. தோழியர்
திருமகள் பவளவிழா கொண்டாடும் இந்த நேரத்தில் இறையனார் உருவமாக இல்லையே
தவிர, கொள்கையாக இருக்கிறார். அவர் எழுதியுள்ள நூல் இன்று
வெளியிடப்பட்டுள்ளது. அவர் கொள்கைபூர்வமாக நம்மிடையே வாழ்கிறார்.
தந்தை பெரியார் இல்லையே என்று
கவலைப்படுகிறோமா? அவர் கொள்கைகளை, பணிகளை நிறைவேற்றி வருகிறோம்.
அதுபோல்தான், இறையன் குடும்பத்தில் பிள்ளைகள், பெயரப்பிள்ளைகள் என்று
அனைவருமே கொள்கையில் உள்ளவர்கள்.
அவர்களுக்கு வேறு கொள்கை தெரியாது. அப்படி
ஒரு கொள்கைக் குடும்பமாக உள்ளார்கள். இயற்கையின் அடிப்படையில் ஏற்பது.
வாழ்வியலை நோக்குவது குறித்து தத்துவவாதிகள் கூறும்போது, தாகம்
ஏற்படுகிறது.
குவளையில் அரைக்குவளை நீர் உள்ளது.
அரைக்குவளைதானே இருக்கிறது என்று எண்ணாமல், அது தாகம் தீர்க்கும் என்கிற
அணுகுமுறைபற்றிக் கூறு வார்கள். இவ்வளவு காலம் திருமகள் இருப்பார்களா?
என்று இருந்த நிலை மாறி இன்று பவளவிழா கொண்டாடுகிறார் கள் என்பதை எண்ணி
எண்ணி பெருமைப்பட வேண்டும்.
சிறிய நூலாக இருந்தாலும், சக்தி வாய்ந்த கேப்ஸ்யூல்!
இறையனார் அவர்கள் கொள்கையாக வாழ்ந்து கொண்
டிருக்கிறார். அவர் இல்லையே என்று வருத்தப்படுவதற்கு இல்லை. சுயமரியாதை
வீரர்கள் கொள்கைகள், சாதனை கள் படைத்து வாழ்கிறார்கள். இந்தக்
குடும்பத்தினர் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, பெண்ணுரிமை என்று அனைத்திலும்
எடுத்துக்காட்டான குடும்பமாக உள்ளார்கள்.
இறையன் இழப்பு என்பது அவர்கள்
குடும்பத்தாரைவிட இயக்கத் துக்குத் தான் பெரிய இழப்பு. அவர் நிறைய
படிப்பார். அவருக்கு இரவெல்லாம் பகல். நிறைய குறிப்புகளாக எழுதுவார்.
அவரைச்சுற்றி புதைபொருள் ஆராய்ச்சிபோல் இருக்கும். இதழாளர் பெரியார்
நூலுக்காக ஜஸ்டிசைட் இதழை 6 மாத காலமாகத் தேடி, பின்னர் கண்டெடுத்தார்
என்று வளர்மதி கூறினார்கள்.
வாழையில் குருத்து வரும் போது, வாழையை
சாய்த்து விடுவார்கள். ஆனால், இறை யன் குடும்பத்தில் வாழையடி வாழையாக
மட்டுமின்றி, ஆலம் விழுதுகளாக, ஆல மரம்போல் குடும்பம் கொள் கைக் குடும்பமாக
உள்ளது. இறையனார் அவர்கள் எழுதிய இல்லாத ஹிந்து மதம் என்கிற இந்த நூலைப்
பரப்ப வேண்டும். ஆய்வுரைகள், நூல் அறிமுகப் பொதுக் கூட்டங்கள் நடத்த
வேண்டும்.
எதிர்ப்புகள் இருக்கும். இருந்தாலும்
நடத்த வேண்டும். ஆதாரபூர்வமாக உள்ள நூல் இது. தந்தை பெரியாரின் இனிவரும்
உலகம் போல், சிறிய நூலாக இருந்தாலும், சக்தி வாய்ந்த கேப்ஸ்யூல்போல் உள்ள
நூல் ஆகும். இதை யாராவது மறுக்கட்டும்.
மகளிர் இல்லாமல் எந்த ஒரு இயக்கமும் வெற்றி பெறாது
இன்றைய காலகட்டத்தில் இந்தியா என்கிற
பெயரையே இந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இசுலாமியர்களோ, கிறித்தவர்களோ, பார்சி களோ யாராக இருந்தாலும் இந்துக்களாக
மட்டுமே இருப் பார்கள் என்று கூறுகிறார்கள். இறையனார், ஆசான், புலவர்
இராமநாதன் ஆகியோர் பெரியார் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஆய்வாளர்களாக
இருந்ததுபோல், அய்யா தந்தை பெரியார் காலத்தில் கைவல்யம், மா.சிங்காரவேலு,
சிதம்பரம் ஆகியோர் இருந்தார்கள்.
ஆலயப்பிரவேசம் என்னும் நூலை சிதம்பரம்
எழுதினார். இங்கே ஏராளமான மகளிர் இருக்கிறார்கள். மகளிர் இல்லாமல் எந்த ஒரு
இயக்கமும் வெற்றி பெறாது. மதம் என்று சொல்லும்போது, தோற்றுவித்தவர்,
இதற்கு என்று நூலோ, எந்தக் காலத்துக்குரியது என்று எதுவுமே கிடை யாது
என்கிற பலவீனங்களை, பலம் என்று சொல்லுகிறார் கள்.
இந்த மதத்தைத் தோற்றுவித்தது யார்?
என்றால், யாரும் கிடையாது என்கிறார்கள். இந்து மதத்தில் உள்ள கொடுமைகள்
எப்படி இருந்தது? பெண்கள் மேலாடை அணிவதற்கு உரிமை கிடையாது. கிராமத்தில்
வயதானவர்கள் பாட்டிமார்கள் ஜாக்கெட் அணியமாட்டார்கள். மற்றபடி இந்து
மதத்தில் மேல்ஜாதி பெண்கள் மேல் ஆடைகள் அணிவார்கள்.
கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஆடை அணிவதற்குத்
தடை இருந்தது. 1689 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் மொக லாயர்
ஆட்சி ஏற்பட்டு, அவர்கள் முசுலிம் பெண்களைப் போலவே சூத்திரப் பெண்கள்
உடலைத் துணியால் மறைத்துக் கொள்ளவேண்டும் என்று மேலாடை அணிய உரிமை
கிடைத்தது.
வெளளைக்காரர்கள் காலத்தில் ரவிக்கை,
குப்பாயம் வந்தது. தோள் சீலைப் போராட்டம் நடைபெற்றது. இப்படி பெண்களைக்
கொச்சைப்படுத்திய மதம் இந்து மதம். பெண் களை சதி என்று உயிரோடு கொளுத்திய
மதம் இந்து மதம்.
வெள்ளைக்காரன் வைத்த பெயரால் பிழைத்தோம் என்று கூறுவது பெரியார் அல்ல; சங்கராச்சாரியார்
இறையன் எழுதிய இந்த நூலிலே சங்கராச்சாரி
படம் உள்ளது. இந்து மதம் என்று ஒன்று கிடையாது. அன்னியர் களால்,
வெளளைக்காரர்களால் இந்துக்கள் என்று அழைக்கப்பட்டோம். வெள்ளைக்காரன் வைத்த
பெயரால் பிழைத்தோம் என்று கூறுவது பெரியார் அல்ல. சங்கராச்சாரி யார்
கூறியுள்ளார். இன்று இந்துஸ்தான் என்று கூறுகிறார் கள். இந்து மதம்
என்றால் சிந்துவிலிருந்து வந்ததால் இந்து என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்.
இந்த நூல் இறை யனார் மறையவில்லை என்பதன்
அடையாளம். மருத்துவர் மீனாம்பாள் நோய் குறித்து பேசினார். நான்
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டபோது, அமெரிக்காவில் மருத்துவர்கள்
நடக்க அறிவுறுத்துவார்கள். அங்கு ஒரு மைல் நீளத்துக்குக்கூட மால் என்கிற
வணிக வளாகங்கள் இருக்கும். காலையில் ஒரே குளிராக இருக்கும். பத்து
மணிக்குமேல்தான் கடைகள் திறக்கப்படும். அதுவரை கடைகள் மூடி இருக்கும். பல
பேர் உள்ளே நடைப்பயிற்சி செய்வார்கள்.
நம்மைப் பார்த்தால் பேசுவார்கள். அறிமுகமே
தேவை இல்லை. நம் நாட்டில் மருத்துவரிடம் நோய் வந் துள்ளதை சொல்லக்
கூச்சப்படுவார்கள். கணவனிடம்கூட சொல்லாமல் இருப்பார்கள். அதுவே ஆபத்தாக
முடிந்து விடும் அபாயமும் உண்டு. சுயமரியாதைக்காரர்களுக்கு தன்னம்பிக்கை
இருக்கிறது.
அதுவே நோய்த் தடுப்பாற்ற லைக்
கொடுக்கிறது. இறையன் எழுத்துமூலம் என்றால், திருமகள் தொண்டுமூலம் செயல்
ஆற்றுகிறார். சுயமரியா தைத் திருமண நிலையத்தின் இயக்குநராக செயல்பட்டு
வருகிறார்.
கொள்கை வயப்பட்ட நல்லதொரு குடும்பம்
சுயமரியாதை இயக்கத்தில் ஏ.பி.ஜனார்த்தனம்
கொள் கையில் இருந்ததுபோல், அவர் வாழ்விணையர் பொதுக் குழு உறுப்பினர்
மனோரஞ்சிதம் அவர்கள் உள்ளார்கள். அதேபோன்று கணேசனுக்குப் பின் பார்வதி, குண
சீலனுக்குப் பின்னர் தங்கமணி, டெய்சி மணியம்மையின் தாயார் ரத்னாவதி
அம்மையார் உள்ளார்கள்.
இறை யனுக்குப்பின் திருமகள், அவர்
பிள்ளைகள், பெயரப் பிள்ளைகள் கொள்கையில் தீவிரமாக உள்ளார்கள். கொள்கை
வயப்பட்ட நல்லதொரு குடும்பம். இந்த நிகழ்ச்சி ஊக்கப்படுத்த
உற்சாகப்படுத்தும் நிகழ்வாக உள்ளது.
இதே எம்.ஆர்.ராதா மன்றத்திலே முகவை
இராஜ மாணிக்கம் என்று கம்யூனிஸ்டாக இருந்து திராவிடர் இயக்கத்தில் இணைந்து
பணியாற்றியவர்.
ஆண்களுக்கு மட்டுமே அறுபது ஆண்டு ஆனால்
விழா எடுப்பதுபோல் ஏன் பெண்களுக்கு விழா எடுக்கக்கூடாது? மற்றவர்கள்
என்றால், மணிவிழா, பவளவிழா என்றால் ஆணுக்குத்தான் எடுப்பார்கள். அவர் அருகே
பெண்ணை அமர வைப்பார் கள். நாம் ஏன் பெண்களுக்கு விழா எடுத்து, ஆண்களை
அமரச் செய்யக்கூடாது என்று பேசிக் கொண்டிருந்தோம்.
உடனே, முகவை இராஜமாணிக்கம் நானே
நடத்துகிறேன் என்று அவர் வாழ்விணையருக்கு விழா எடுத்தார். அப்படி
பெண்களுக்கு விழா எடுக்கப்படுகிறது என்றால் நம் இயக்கத்தில்தான்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது நம் இயக்கம். பெண்களுக்கு தனித்துவம்,
தனித்த அடையாளம் இருக்க வேண்டும். ஆரியர்கள் வந்தபோது, பெண்களுடன்
வரவில்லை.
மாறாக, மனுதர்மத்துடன்தான் வந்தார்கள்
என்று நக்கீரனில் அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் எழுதினார். இந்து
மதத்தில் பெண்கள் பிறப்பிலிருந்து தந்தையின் கட்டுப்பாட்டிலும்,
திருமணத்துக்குப்பின் கணவன் கட்டுப் பாட்டிலும், கணவனுக்குப்பிறகு மகனின்
கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும என்பது மனுதர்மம். தனித்த அடையாளம்
இல்லாத எந்த ஒரு இனமும் வாழ்ந்ததாக இல்லை.
திராவிடர் என்கிற அடையாளத்தை பெரியார்
கொடுத்தார். ஆங்கிலேயே முறையில் மிஸ்டர், மிஸஸ் என்று குறிப்
பிடுகிறார்கள். ஒரு பெண்ணைக் குறிப்பிடும்போது, திருமதி என்று சொல்லி கணவன்
பெயரைக் குறிப்பிடுகிறார்கள். எலிசபெத் கணவரை மிஸ்டர் எலிசபெத் என்று சொல்
கிறார்களா? பகுத்தறிவுக் கொள்கை வெற்றிதான் மனித நேய வெற்றியாகும்.
-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார்.
கழகத் துணைத் தலைவர் தலைமையுரை ஆற்றினார்
முன்னதாக, விழாத் தலைமை ஏற்று
திராவிடர்கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரையாற்றினார்.
கலையரசன் வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர்
பிறைநுதல் செல்வி, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, பொதுக்குழு
உறுப்பினர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், மருத்துவரணித் தலைவர் மருத்துவர்
மீனாம்பாள், தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முனைவர் வளர்மதி ஆகியோர்
வாழ்த்துரையாற்றினர்.
நிறைவாக தமிழர்தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஆற்றி னார்கள். பவளவிழா கொண்டாடும் சுயமரியாதை வீராங் கனை திருமகள்
அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா வீரமணி பயனாடை
அணிவித்துப் பாராட்டினர்.
கலந்துகொண்டோர்
நிகழ்ச்சியில் மாநில மகளிரணி அமைப்பாளர்
கலைச் செல்வி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, தலை மைச் செயற்குழு
உறுப்பினர் பார்வதி, திராவிடன் நலநிதித் தலைவர் த.க.நடராசன், பிரான்சைச்
சேர்ந்த மூத்த பத்திரி கையாளர் காசிலிங்கம், கட்டுமானத்துறை மடிப்பாக்கம்
திலகர், விடுதலை நகர் ஜெயராமன், திரைப்பட இயக்குநர் கள் ராஜூவிக்ரம்,
ஜெய்சங்கர், பேராசிரியர் மங்களமுரு கேசன்,நக்கீரன் துணை ஆசிரியர் கோவி.லெனின்,
பிரதீபா, கவிஞர் அரிமா, கவிஞர் மதிமாறன், பெரியார்களம் செயலாளர் ஆடிட்டர்
ஜெயராமன், நேருதாசன், வழக்கு ரைஞர் குமாரதேவன் வடக்கு மண்டல அமைப்புச்
செயலாளர் வெ.ஞானசேகரன், மண்டலத் தலைவர் இரத் தினசாமி, மண்டலச் செயலாளர்
பொன்னேரி பன்னீர் செல்வம், மாவட்டத் தலைவர்கள் தி.வே.சு.திருவள்ளுவன்,இரா.வில்வ நாதன், ஆவடி கந்தசாமி,
உதயக்குமார், தென்னரசு, கு.ஆறுமுகம் மற்றும் தங்கமணி குணசீலன், மாநில
இளைஞரணி துணை செயலாளர் தமிழ்சாக்ரடீஸ், வெங்கடேசன், மதியழகன், ராஜி,
மருத்துவர் வீரமுத்து, ஏழுகிணறு கதிரவன், வடசென்னை பகுத்தறிவாளர் கழகச்
செயலாளர் கோவி.கோபால் உள்பட ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பவளவிழா நினைவுப் பரிசு
திருமகள் இறையன் குடும்பத்தவர்களான
வெற்றிமணி, இறைவி, மாட்சி, இசையின்பன், பசும்பொன், கலைமதி, புயல், திவாரி,
தொண்டறம், அடலேறு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தனர்.
வழக்குரைஞர் தமிழன்பிரசன்னா தமிழர் தலைவருக்கும், திருமகளுக்கும் பயனாடை
அணிவித்து சிறப்பு செய்தார். லெனின் காவிரிச் செல்வன் திருமகளுக்கு பவளவிழா
நினைவுப் பரிசை வழங்கினார்.
ஏற்புரையாற்றிய திருமகள்
பவளவிழா கொண்டாடும் திருமகள் தன்னுடைய
ஏற்புரையில், இத்தகைய விழாவை எடுக்கும்படி தமிழர் தலைவர் அவர்கள்தான்
கேட்டுக்கொண்டார்கள். இப்படி யொரு விழாவில் என் இணையர் இறையனார் இல்லையே
என்கிற வருத்தம் எனக்கு உள்ளது. நான் மருத்துவ மனையில் இருக்கும்போதுகூட
அவர் தன்னுடைய கொள்கைப்பணியில்தான் இருந்தார்.
அப்போது அம்மா மோகனா அவர்கள்
மருத்துவமனைக்கே எனக்கு உணவு கொண்டுவந்து தந்து பார்த்துவிட்டு
செல்வார்கள். அதே போல், வெற்றிச்செல்வி அவர்களும், அவர்கள் தாயார்
ருக்குமணி அம்மாவும், பார்வதியும், அவர்கள் அம்மாவும் எனக்கு வேண்டிய
அத்துணை உதவிகளையும் செய்தார் கள்.
மருத்துவமனையில் நான் இருக்கும்போது, அவர்
வர வில்லையே என்று எண்ணமுடியாத அளவில் நம்முடைய தோழியர்கள் அனைவரும்
எனக்கு உற்ற துணையாக, ஆறுதலாக இருந்தார்கள் என்பதை நன்றி உணர்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இணைப்புரை - நன்றியுரை
இணைப்புரைகளை மாநில மாணவரணிச் செயலாளர்
பிரின்சு என்னாரெசு பெரியார், மண்டல மாணவரணி மணியம்மை வழங்கினார்கள்.
பெரியார் மாணாக்கன் நன்றி கூறினார்.
317 நூல்கள் விற்பனை
இல்லாத இந்து மதம் நூல் வெளியீட்டு விழாவை
யொட்டி ஏராளமானவர்கள் தமிழர் தலைவரிடமிருந்து நூலைப் பெற்றுக்கொண்டார்கள்.
வெளியீட்டு விழாவின் போது 317 நூல்கள் விற்பனை ஆயின.
தமிழர் தலைவர் வெளியிட்டார்
சுயமரியாதைச் சுடரொளிகள், மகாபாரத
ஆராய்ச்சி (ஒரு பகுதி), பெரியார் ஆயிரம் (ஒரு பகுதி), தமிழின மீட்பர்
பெரியார், புரிந்துகொள்வீர் புராணங்களை - இதிகாசங் களை, செயற்கரிய செய்த
செம்மல், இதழாளர் பெரியார் ஆகிய நூல்களை எழுதியுள்ளார் இறையனார் அவர்கள்.
அவர் எழுதிய இல்லாத ஹிந்து மதம் என்னும் நூலை தமிழர் தலைவர், ஆசிரியர் இந்த
நிகழ்வில் வெளியிட்டார்.
0 comments:
Post a Comment