சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று
மத்திய அரசு அறிவித்துவிட்டது. அது தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை
ஏற்படுத்திவிட்டது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனை
எதிர்த்து ஆகஸ்டு முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துவிட்டார்.
சமஸ்கிருதமும் ஒரு மொழிதானே _ குறிப்பிட்ட
பள்ளிகளில்தானே கொண்டாடச் சொல்லியிருக்கிறார்கள் என்று சிலர் முட்டுக்
கொடுக்கக் கிளம்பியுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா
வகையறாக்களைச் சேர்ந்தவர்கள்.
சமஸ்கிருதம் என்பது இந்தோ _ ஆரியக்
குடும்பத்தைச் சேர்ந்தது. ஆரியக் கலாச்சாரத்தின் சின்னம்! இதுகுறித்து
பார்ப்பனரான சூரிய நாராயண சாஸ்திரியே (பரிதிமாற்கலைஞர்)
தெளிவுபடுத்திவிட்டார்.
வடமேற்கே பல்லாயிரங் காலத்திற்கு
அப்புறமுள்ளது, அய்ரோப்பாக் கண்டத்தினொரு பகுதியாகிய ஸ்காந்திநேவியம் என்ற
இடத்தினின்றும், ஆரியர் என்ற சாதியார் புறப்பட்டு, நாலா பக்கங்களிலும்
சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப்
பாகத்திலுள்ள துருக்கிஸ்தானம் என்ற இடத்திற்றிறங்கினர். இவ்விடம் தங்கிய
ஆரியர்களே, கைபர் கணவாய் வழியாக இந்தியாவிலும் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு
புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ, அன்றித் தீமைக்கோ? இதனை யறிவுடையோர்
எளிதிற் உணர்ந்து கொள்வார்கள். (தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 22, 23)
அத்தோடு நிற்கவில்லை பரிதிமாற் கலைஞர்.
தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப் படிக்கத் தெரியும்.
எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்திய
முனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும் ஆரியரோடு கலந்த
பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், பொருந்தாமை
யறிக (தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 24) என்று கூறுகிறார் ஆய்வாளரான
பரிதிமாற் கலைஞர்.
அத்தோடு அய்யர் குலத்தில் பிறந்த அவர் நின்றுவிடவில்லை.
வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும்
இயங்கியும் அதற்குத் தமிழ்மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற
ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை
யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர்.
அவர்களெல்லாம் ஆன்ம நூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி
சான்றவராயு மிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள்
வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்
என்ற நால்வகைச் சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்.
முற்கடைப் பலனில் வேறாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினில்நீர் நாட்டினீர்
என்று ஆரியரை நோக்கி முழங்குங்
கபிலரகவலையுங் காண்க. இன்னும் அவர்தம் புந்திநலங்காட்டித் தமிழர்களிடம்
அமைச்சர்களெனவும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைத்துக் கொண்டனர்.
தமிழரிடத்திலிருந்த பல அரிய விஷயங்களையும்
மொழிபெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும்,
வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.
(அதே நூல் பக்கம் 26, 27)
ஆரியர் உண்டாக்கிய பிராமண, சத்திரிய,
வைசிய, சூத்திரர் என்ற பிரிவுகளைத்தான் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்
என்று தமிழாக்கிக் கூறியுள்ளார் என்பது அடிக்கோடிட்டுக் காணத் தகுந்ததே!
மனித சமூகத்திலே பிறப்பின் அடிப்படையில்
நான்கு கூறுகளாகப் பிரித்தது போதாதென்று தமிழிலும் ஊடுருவி தெலுங்கு,
கன்னடம், மலையாளம், துளு என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்துத்
தள்ளிவிட்டது சமஸ்கிருத ஆரியம்.
சூரிய நாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற்
கலைஞர் அவர்களே இந்த உண்மையை உரித்துக் காட்டியிருக்க, ஏதோ கால்டுவெல் என்ற
கிறித்தவர் ஆரியர் _ திராவிடர் என்று பிரிவினை விஷத்தை உண்டாக்கிவிட்டார்
என்று பார்ப்பனர்கள் கூறுவது எவ்வளவு பெரிய அப்பட்டமான திரிபுவாதம்!
தந்தை பெரியார் அவர்களும் இதே கருத்தினை தன் ஆய்வு மூலம் கூறியதுண்டே! (விடுதலை 15.2.1960)
இவ்வழி மொழிகளிலே தெலுங்குதான் வடமொழியோடு
மிகவுங் கலந்து விசேடமான திருத்தப்பாடடைந்தது; தனது நெடுங்கணக்கையே
திருத்தி விரித்துக்கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல்
இலக்கணத்தையும் மிகத் தழுவிக்கொண்டது.
தெலுங்கிலக்கணமெல்லாம்
தமிழ்ப்போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கை
அனுசரிக்கப் புகுந்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று.
இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயப்பட்ட ராதிய பிராமண வையாகரணர்கள் செய்த
தவறு. இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம்.
இவ்வாறே கன்னடமுந் தெலுங்கை யொட்டிப்
பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச்
சீர்படுத்திக்கொண்டது. இதனாலன்றோ பழங்கன்னடம் என்றும் புதுக்கன்னடம்
என்றும் அஃது இருவேறு பிரிவினதாகி யியங்குகின்றது. பழங்கன்னடத்தைத்
தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப் புலவர் பலர் இன்றுமுளர்.
இனி மலையாளமோ வெகுநாள் காறுந்
திருந்தாதிருந்தது. இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர்
எழுத்தச்சன் என்பானொருவனால் மிக்க திருத்தப்பாடு அடைந்தது; உடனே வடமொழிச்
சொற்களையுஞ் சொற்றொடர்களையும் சந்திகளையும் முடிபுகளையும் மலையாளம்
மேற்கொண்டது.
(தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 25, 26)
சமஸ்கிருதம் தமிழுக்கு, தமிழர்களுக்குச் செய்த நாசங்கள் கொஞ்சமா _ நஞ்சமா?
தமிழர்களின் ஊர்ப் பெயர்களையெல்லாம் தமிழ் அரசர்களைக் கையில் போட்டுக் கொண்டு சமஸ்கிருதமயமாக்கினார்களே!
திருமறைக்காடு என்ற அழகிய தமிழ்ப் பெயர் வேதாரண்யம் ஆனது எப்படி?
திருமுதுகுன்றம் _ விருத்தாசலம் ஆகிவிட்டதே! புளியந்தோப்பு _ திண்டிவனம் ஆன கதை என்ன?
குடமூக்கு கும்பகோணம் ஆனதும்,
குரங்காடுதுறை கபிஸ்தலம் என்று தாவியதும், திருச்சிற்றம்பலம் சிதம்பரம்
ஆனதும், மயிலாடுதுறை மாயூரம் ஆனதெல்லாம் பாழ்படுத்தும் பார்ப்பனர்களின்
சமஸ்கிருத வேட்டைதானே!
ஊர்ப் பெயர்கள் எல்லாம் மட்டுமல்ல; தமிழர்களின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட கொடுமையை என்னென்று சொல்லுவது!
அருண்மொழித் தேவனாகிய தமிழரசன்கூட தன் பெயரை ராஜராஜனாக மாற்றிக் கொண்ட மயக்கத்தை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
கேசவன் என்றும் ஆதிகேசவன் என்றும் பெயர்
சூட்டிக்கொண்ட நம் தமிழர்கள் வெட்கப்பட வேண்டாமா? (கேசம் -_ மயிர்
இதற்குமேல் விளக்கத் தேவையில்லையே!)
செங்குட்டுவன், இளங்கோவன், நெடுஞ்செழியன்,
இளவழகன், அறிவுடை நம்பி என்ற தமிழ்ப் பெயர்கள் எல்லாம் தொலைந்தது இந்தப்
பாழும் சமஸ்கிருத நஞ்சால்தானே!
தமிழன் கட்டிய கோவிலுக்குள் அடித்து வைக்கப்பட்டுள்ள குழவிக் கற்களாகிய கடவுள்களுக்கெல்லாம் தமிழில் பெயர் உண்டா?
கபாலீஸ்வரன், அருணாசலேஸ்வரர்,
சுந்தரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சிறீரெங்கநாதர்,
அபயாம்பாள், கற்பகாம்பாள் என்று பட்டியல் நீள்கிறதே!
இவையெல்லாம் சமஸ்கிருதம் என்னும் ஆரிய பார்ப்பன மொழியின் ஆதிக்க அழுக்குகள் அல்லவா?
தமிழ் இலக்கியத்திற்குள்ளும் அதன் வாலாட்டம் உண்டே!
கலித்தொகை, குறுந்தொகைகளில் அகநானூறு,
புறநானூறுகளில் இரண்டு விழுக்காடு, திருக்குறளில் மூன்று விழுக்காடு,
சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களில் ஆறு விழுக்காடு, தேவார,
திருவாசகங்களில் பதினைந்து விழுக்காடு, வில்லிபாரதம், கம்பராமாயணம், கந்த
புராணங்களில் 20 முதல் 25 விழுக்காடு, பிற்காலத்தில குவிக்கப்பட்ட தல
புராணங்களில் 50 விழுக்காடு என்று சமஸ்கிருத கழிவுநீர் தமிழ்
இலக்கியத்திற்குள் கலந்துவிட்டதே.
பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு
மெய்யும் பிராமண வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் சத்திரியர்
வருணமென்றும், நான்கு மெய்கள் வைசிய வருணமென்றும் பிற இரண்டும் சூத்திரர்
வருணம் என்றும் புகுத்தியதும் ஆரியம் _ சமஸ்கிருதம் என்பதையும் எண்ணிப்
பாரீர்!
நமது தமிழ் மன்னர்கள் எல்லாம் கல்விக்
கழகங்களில் சொல்லிக் கொடுத்தது எல்லாம் சாரக சமிதை, அஷ்டாங்க இருதய சமிதை
என்கிற வடமொழி சாத்திரங்கள்தானே கற்றுக் கொடுக்கப்பட்டன. அவற்றைத்
தமிழர்கள் படிக்க முடியுமா என்றால் அதுதான் இல்லை. சூத்திரன் அவற்றைப்
படிக்கலாமா? படித்தால் நாக்கை அறுக்க வேண்டுமே.
தன்மான இயக்கம் தலைதூக்கியதற்குப்
பிறகுதானே தந்தை பெரியார் அவர்கள் தலைமை தமிழர்களுக்குக் கிடைத்த பிறகுதானே
தலைகீழ் மாற்றம் வந்தது.
1937இல் பிரதமராக இருந்த ஆச்சாரியார்
(ராஜாஜி) இந்தியைப் புகுத்திய நிலையில் தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்து
எழுந்த இந்தி எதிர்ப்பு இயக்கம் கொடுத்த நன்கொடைதானே தமிழர் மறுமலர்ச்சி.
நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனதும்,
இராமையன் அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் மதியழகன் ஆனதும், அரங்கசாமி
அரங்கண்ணல் ஆனதும், கோதண்டபாணி வில்லாளன் ஆனதெல்லாம் அதற்குப் பிறகு
அல்லவா!
அக்ராசனாதிபதி தலைவர் ஆனார், உபந்நியாசம்
சொற்பொழிவானது, வந்தனோபசாரம் நன்றி என்று மலர்ந்தது. நமஸ்காரம் ஒழிந்து
வணக்கம் வந்ததெல்லாம் எப்பொழுது முகிழ்த்தது என்பதை _ திராவிடத்தால்
வீழ்ந்தோம் என்று பார்ப்பன தொங்கு சதைகளாக இருந்து குரல் கொடுக்கும்
தமிழ்த் தேசியவாதிகள் சிந்தித்துப் பார்க்கட்டும்!
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராக இருந்த பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியாருக்கு மாதச்
சம்பளம் ரூ.81, அதே நேரத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த குப்புசாமி
சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300க்கு மேல். இதனைச் சுட்டிக்காட்டி தந்தை
பெரியார் எழுதியதன் பலன்தானே நீதிக்கட்சி பிரதமர் பனகல் அரசர் ஆணை
பிறப்பித்து சமமாக்கினார். (விடுதலை 15.2.1960)
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனையைக் கிழித்தெறிந்ததும் நீதிக்கட்சியே!
அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில்
பங்கேற்க வந்த திருவாங்கூர் மன்னர் ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்து
சமஸ்கிருத வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட
நேரத்தில், தந்தை பெரியார் கடும் எதிர்ப்பினைச் சுடச்சுட
வெளிப்படுத்தினார்.
வடமொழியைப் பரப்புவோர்க்கு ஆயுதமாக
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிவிடக் கூடாது, வேண்டுமென்றால் அந்த
நன்கொடையைத் திருப்பிக்கூட அனுப்பிவிடலாம் என்று ஆவேசப்பட்டார். அந்தச்
சூழலில் திருவாங்கூர் மன்னர், வள்ளல் அண்ணாமலையார், பேராசிரியர்
இரத்தினசாமி ஆகியோர் கலந்து பேசி, பல்கலைக்கழக மாணவர் விடுதியை
விரிவுபடுத்திட அந்நிதியைப் பயன்படுத்துவது என்று முடிவுக்கு வந்தனர் _
அந்த முடிவுக்காக தந்தை பெரியார் பாராட்டினார். (விடுதலை 12.7.1943,
தலையங்கம்)
1956இல் சமஸ்கிருத கமிஷன் ஒன்றை மத்திய
அரசு அமைத்தது. பல்கலைக் கழகங்களிலும் வெளியிலும் சமஸ்கிருத மொழிக்குப்
புத்துயிர் ஊட்டுவதுதான் அதன் நோக்கம். அந்தக் காவிகளின் கருத்துரைப்படியே
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி தலைமையில் எட்டு
உறுப்பினர்களைக் கொண்ட மத்திய சமஸ்கிருத போர்டு ஒன்று உருவாக்கப்பட்டது.
அதற்காக அந்தக்கால மதிப்பில் பல லட்ச ரூபாய்க்குக் கொட்டி அழப்பட்டது.
1959ஆம் ஆண்டில் சமஸ்கிருத விஸ்வ
பரிஷத்தின் கூட்டம் புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அதன்
தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடந்தது. அதில் போடப்பட்ட
தீர்மானம் என்ன தெரியுமா? அரசிடம் சொல்லி _ சமஸ்கிருதப் படிப்புக்கென்று
ஒதுக்கப்பட்டுள்ள தொகையைச் செலவழிக்காவிட்டாலும்கூட, அதை சமஸ்கிருதம்
அல்லாதவற்றிற்குச் செலவு செய்யக் கூடாது; அது சம்பந்தமாக சட்டங்கள்
இயற்றுவதோ உத்தரவு பிறப்பிப்பதோ தடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து
அதற்காக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அனந்தசயனம் அய்யங்கார், உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி பி.பி.சின்ஹா, உட்பட பலரையும் நியமித்துக் கொண்டனர். (பவன்ஸ்
ஜர்னல் _23.3.1959) என்றால் அந்தப் பெரிய மனிதர்களின் தாராள உள்ளத்தைத்
தாராளமாகவே தெரிந்து கொள்ளலாமே!
சமஸ்கிருதம் பேசுவோர் நாட்டில் 0_01
சதவிகிதமாக இருந்தாலும்கூட இந்தியாவில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில்
அந்தத் துறையை வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும்
பொழுதெல்லாம் செத்த மொழியைச் சிங்காரிக்கும் வேலையில்தானே இறங்குகிறார்கள்.
வாஜ்பேயி தலைமையிலான ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த
முரளி மனோகர் ஜோஷி என்ன செய்தார் என்பதை நினைவுப்படுத்திக் கொள்ளலாமே!
1998_1999 ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்ததோடு அவர் திருவாய் மலர்ந்தது என்ன?
சமஸ்கிருதம் நமது வேத மொழி, நமது
கலாச்சாரம் சமஸ்கிருதத்தில்தான் உள்ளது. நாம் மொழியை மறப்பது நமது
கலாச்சாரத்தை மறப்பதற்கு ஒப்பாகும். தெய்வீக மொழியான சமஸ்கிருதம் அனைத்துப்
பள்ளிகளிலும் அட்டவணைப் படுத்தப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும்
சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். பள்ளிகளில் சரஸ்வதி
வந்தனா கட்டாயம் இடம்பெற வேண்டும்.
நாட்டின் வளமான எதிர்காலத்தைக் கருத்தில்
கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தரவேண்டும். இதை மத
ரீதியாகப் பார்க்காமல் கலாச்சாரப் பாதுகாப்பு ரீதியாகப் பார்க்கவேண்டும்.
என்று சொன்னாரே! இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் அழகாகப் படம் பிடித்துக்
காட்டினார்.
தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி
பயின்றும், தமிழரெனச் சொல்லிக்கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து
வந்தாலும்; தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும்,
பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக்
கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்
மீதுதான் (திராவிட நாடு 2.11.1947)
தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களைப் பற்றி
அண்ணா அவர்கள் படம் பிடித்துக் காட்டினாலும் இந்தியாவில் மட்டுமல்ல; உலகம்
முழுவதும் உள்ள பார்ப்பனர்களின் நிலைப்பாடும் இதுதான்.
பார்ப்பனர்கள் தங்கள் செத்த மொழி மீது
இவ்வளவு வெறி பிடித்துக் காணப்பட்டாலும் தமிழர்கள் தங்கள் மொழி உணர்வை
வெளிப்படுத்தினால், அதன் வளர்ச்சிக்காகக் குரல் கொடுத்தால், செயல்பட்டால்
பார்ப்பனர்கள் என்னென்னவெல்லாம் பட்டம் சூட்டுவார்கள் தெரியுமா?
தமிழை வளர்க்கிறேன் என்று அரசு
நிர்வாகத்தில் புகுந்து குட்டிச்சுவராக்கும் இவர்களை மொழி நக்சலைட்டுகள்
என்றுதான் கருதவேண்டும். முதல்வர் (கலைஞர்) தமிழைச் சொல்லி ஏமாற்றுகிறவராக
இருப்பதால், சென்னை மேயர் முதல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் வரை தமிழை
அமல்படுத்துகிறோம் என்று கம்பு, கடப்பாரை சகிதம் கிளம்பி விடுகிறார்கள்.
துப்பாக்கி ஏந்துகிறவர்கள்தான் தீவிரவாதிகள் என்பதல்ல. இதுபோல நடைமுறைக்கு
ஒவ்வாத மொழிவெறி பிடித்து அலைகிறவர்களும், அந்த மொழிவெறியைத் தங்கள்
அதிகாரத்தின் மூலம் ஜனங்கள் மீது திணிக்கிறவர்களும் தீவிரவாதிகள்தான்.
இவர்கள் மொழி நக்சலைட்டுகள். (துக்ளக் 15.9.2010)
தமிழ்மொழியைச் செம்மொழியாக்க சட்டம்
கொண்டு வந்தால், ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும்
மட்டன் பிரியாணி கிடைக்குமா என்று (தினமலர் வாரமலர் 13.6.2004) எழுதுகிறதே!
செத்தொழிந்த சமஸ்கிருதத்தை மத்திய அரசு அதிகாரத்தின் துணைகொண்டு விழா
கொண்டாடச் சொல்லும் கூட்டம்தான் நம்மைப் பார்த்து மொழி நக்சலைட்டுகள் என்று
பட்டம் சூட்டுவதைக் கவனிக்க வேண்டும்.
நம் தமிழ் வேந்தர்கள்கூட பார்ப்பன சமஸ்கிருதத்தைத்தான் கட்டியழுது கொண்டு இருந்தனர். நாயக்க மன்னர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
மதுரையில் நாயக்க மன்னர் ஆண்ட காலத்தில்
பத்தாயிரம் மாணவர்கள் படித்தனர். அத்தனைப் பேரும் பார்ப்பனர்களாக இருந்தனர்
என்று ராபர்ட்_டி_நொபிலி பாதிரியார் எழுதிய கடிதத்தில் (22.11.1610)
குறிப்பிட்டுள்ளார் என்றால் அந்தக் கல்வி முழுமையும் சமஸ்கிருதத்தில் உள்ள
வேதக் கல்விதான்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் பூணூல்தனம்தான் சாதாரணமானதா?
குறளில் வரும் அறம் என்னும் சொல்லுக்கு
உரை எழுதும்பொழுது _ அறம் என்பது மனு முதலிய நூல்களுள் விதித்தன செய்தலும்,
விலக்கியன ஒழித்தலும் ஆம்! என்றுதானே எழுதினார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவர் எங்கே, ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் வருணதரும மனுதர்மம் எங்கே?
சமஸ்கிருதம் _ ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டு ஆதிக்கத்தின் குறியீடு என்று சொல்லுவது இந்த அடிப்படையில்தான்.
சமஸ்கிருதத்தைப் பற்றி விவேகானந்தர்
கூறியிருப்பதை தமிழ்க்கடல் மறைமலை அடிகள் சுட்டிக் காட்டுகிறார்: மதச்
சண்டைகளும்; சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய்
இருந்ததும் _ இருப்பதும் சமஸ்கிருத மொழியே யாகும் என்றும், சமஸ்கிருத மொழி
நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று
வருந்திக் கூறினார் விவேகானந்தர். (மறைமலை அடிகளின் தமிழர் மதம் _ பக்கம்
24)
சமஸ்கிருதம் செத்துச் சுண்ணாம்பாகிப்
போனதற்குக் காரணமே இந்தப் பார்ப்பனர்கள்தான். பார்ப்பனர்களைத் தவிர,
மற்றவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க
வேண்டும்; காதால் கேட்கக் கூடாது; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற
வேண்டும் என்று எழுதி வைத்திருந்தால் _ பெரும்பான்மை மக்களுக்குத் தடை
விதித்திருந்தால் அந்த மொழி செத்து ஒழிவதைத் தவிர வேறு வழியில்லையே!
சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை அதுதான் நடந்தது.
சமஸ் = எல்லாம்; கிருதி = தொகுக்கப்பட்டது
என்று பொருள். டர்கிஸ் மொழி, ஈரானிய மொழி, பர்மீயன் மொழி, கிரேக்க மொழி
ஆகிய மொழிகளின் கூட்டுக் கலவையே இது. கி.மு.53இல் குசான வம்சத்தைச் சேர்ந்த
கனிஷ்கர்தான் சமஸ்கிருத மொழியை உருவுக்குக் கொண்டு வந்தவர். இந்த
லட்சணத்தில் சி.பி.எஸ்.இ. இயக்குநர் சுற்றறிக்கையில் எல்லா மொழிகளுக்கும்
சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்று தம்பட்டம் அடிக்கிறார்.
நடராஜப் பெருமான் தன்னை மறந்து ஆடிக்
கொண்டிருந்தபோது அவரது உடுக்கிலிருந்து ஹயவரடு _ ஹல் முதலிய பதினான்கு வேறு
வேறான சப்தங்கள் வெளிவந்தன. அவற்றை முறைப்படுத்த பாணினி ரிஷி
சமஸ்கிருதத்தை உண்டாக்கினார் என்ற கதையளப்பும்கூட உண்டு. அதனால்தான் இது
தேவ பாஷையாம்.
அப்படியென்றால் எதிர்க்கேள்வி இடியாக இறங்காதா? தெய்வ மொழி செத்த மொழி ஆனது ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி.
என்னதான் முட்டுக் கொடுத்தாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர செத்த மொழியான பிள்ளை பிழைக்காது - பிழைக்கவே பிழைக்காது!
சமஸ்கிருதம் பற்றி பார்ப்பனர்கள்
பார்ப்பனர்கள்
தங்களைப் பார்ப்பனர்களாகவேதான் கருதுகின்றனரே தவிர தங்களைத் தமிழர்கள்
என்று ஒருக்காலும் உளப்பூர்வமாக ஒப்புக் கொள்வதில்லை; தமிழைத் தங்கள்
தாய்மொழியாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு ஒரு தேர்வு வைத்துப் பார்க்கலாம்.
சமஸ்கிருதம்பற்றி பார்ப்பனர்களின் எண்ணம் என்ன என்பதை காஷாயதாரியாகிய
சங்கராச்சாரியிலிருந்து லவுகீகம் பேசும் அரசியல் பார்ப்பனர்கள் வரை
கூறியுள்ள கருத்துகள் எடுத்துக்காட்டிற்காக கீழே திரட்டித் தரப்பட்டுள்ளன.
இவற்றின் வழி பார்ப்பனர்கள் யார்? அவர்களின் உள்ளுணர்வு எத்தகையது என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
காஞ்சி சங்கராச்சாரியார்
சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம்.
அதாவது பரம்பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது.
அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ ஒரு தேசமோ கிடையாது. இதைத்தான் சர்வ
வியாபகத்வம் என்பார்கள்.
உலகில் முதன்முதலில் தமிழ்மொழி
தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகுதான்
சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பாணினி
என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது
முதற்கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று
கூறுகிறார்கள். ஆனால் பாஷா சாஸ்திரம் என்று சொல்லக் கூடிய (Philology)
சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று
கூறப்பட்டுள்ளது.
(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியின் ஞான வழி (வானதி பதிப்பக வெளியீடு) என்ற நூலிலிருந்து)
சி.ராஜகோபாலாச்சாரியார்
தமது முன்னோர்கள் தமக்கு வைத்துவிட்டுப்
போன பழைய பெருமைகளைப் புறக்கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமைகள்
ஸம்ஸ்கிருதத்துடன் இணைக்கப்பட்டவை.
பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளி
லிருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு
வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால்
மகா பெரிய விபத்தாகும்.
அது பணம் இருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்குப் பிச்சையெடுப்பதற்கு ஒப்பாகும்.
ஒரு பள்ளிப் படிப்பில் ஸம்ஸ்கிருதம்
சேர்ந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஹிந்துவாயிருந்தாலும்,
முஸ்லீமாயிருந்தாலும் நமது பழைய பெருமைகளுக்குத் திறவுகோல்
ஸம்ஸ்கிருதம்தான்.
புத்தர்கள், ஹிந்துக்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள் முதலியவர்களுக்கு ஸம்ஸ்கிருதத்தைத் தவிர வேறு பெருமைகள் கிடையாது.
இப்போதைய நவீன கல்விகளுடன்
ஸம்ஸ்கிருதத்தையும் சேர்த்துக் கற்றுக் கொண்டால் இன்னும் ஒரு தலைமுறைக்குள்
ஹிந்து மதம் இப்போது இருப்பதுபோல் இராது. ஸம்ஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை.
அதை ஈசுவர பாஷை என்றுகூடச் சொல்லலாம்.
_ சென்னை லயோலா கல்லூரி ஸம்ஸ்கிருத சங்கத்தின் துவக்க விழாவில் 24.7.1937 அன்று பிரதமர் அமைச்சர் சி.ராஜகோபாலாச்சாரியார் பேசியது.
சர். சி.பி.ராமசாமி அய்யர்
1914-_1919 ஹோம் ரூல் இயக்கக் காலத்தில்
நான் இந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் செய்து, இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி
தேவையென்றும், அந்தப் பொதுமொழி சமஸ்கிருதம் என்றும் பிரச்சாரம் செய்து
வந்தேன். அப்போது கொண்ட இந்தக் கருத்தை பின்னரும் நான் விடவில்லை. உண்மைத்
தேசிய மொழியும் ஹிந்தி மொழியின் தாயுமான இந்த சமஸ்கிருத மொழி,
எளிமையாக்கப்பட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவும் பேசவும் தகுந்ததாகச்
செய்யப்பட வேண்டும்
_அண்ணாமலைப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் சர்.சி.பி.ராமசாமி அய்யர், உதகமண்டலத்தில் (5.6.53) நடைபெற்ற
இந்தி பிரசார சபைக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசியதிலிருந்து.
எஸ்.சத்தியமூர்த்தி அய்யர்
என் கைக்கு அதிகாரம் வந்தால் நான்
சர்வாதிகாரி இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச்
செய்வேன். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அத்தனைப் பேரும் கட்டாயம்
சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையும் உடனே
ஏற்படுத்திவிடுவேன். ஏனெனில் காந்தியார் உயிருடன் இருக்கும்போதே
இராமராஜ்யம் ஏற்பட்டுவிட வேண்டும் என்பது என் ஆசை. இராமராஜ்யமென்பது
வருணாசிரம தருமத்தை _ அவரவர் தம்தம் சாதி முறைப்படியே தொழில் செய்ய
வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு திராவிடக் கவியாகிய
கம்பரே இதை ஒப்புக் கொண்டும் இருக்கிறார். இது பற்றிய வடமொழி இலக்கியத்தைத்
தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். இராமராஜ்யம் ஏற்பட வேண்டுமானால்
எல்லோரும் சமஸ்கிருதம் படித்தே தீர வேண்டும்.
_ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், மெயில் 25.7.1939.
வி.வி.கிரி
சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதை நான் 1957 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றேன்.
_ சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் வி.வி.கிரி ஆற்றிய உரையிலிருந்து 2.1.1968
கோல்வாக்கர்
மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான்
இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம்வரை, இந்திக்கே நாம்
முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.
_ கோல்வாக்கரின் ‘Bunch of thoughts’ அத்தியாயம் 8, பக்.113. ஆர்.வெங்கட்ராமன்
புதிய கல்விக் கொள்கையின் பள்ளிக்கூடப்
பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் ஒரு விருப்பப் பாடமாக சேர்க்கப்படவில்லை.
இந்தக் குறை நீங்கி பள்ளிக்கூட மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்க வசதி கிடைக்க
வேண்டும். நாட்டின் அறிஞர்களிடையே கலாச்சார ஒற்றுமையை வளர்க்கும் ஒரு
இணைப்பு சமஸ்கிருதம். ஒரு காலத்தில் இந்தியாவின் மொழி, சிந்தனையில்
சமஸ்கிருதம் நிரவி நின்றதோடு, அதன் ஆன்மப் பிரதிபலிப்பாகவும் விளங்கியது.
_ பாலக்காடு மாவட்டத்தின்
பட்டாம்பியிலுள்ள அரசு சமஸ்கிருத கல்லூரி பவள விழா நிகழ்ச்சியில்
குடியரசுத் துணைத் தலைவர் திரு.ஆர்வெங்கட்ராமன் ஆற்றிய உரை
(ஆதாரம்: தினமணி சென்னைப் பதிப்பு: நாள்: 15.12.86 பக்,9)
ஆனந்த விகடன்
முதல் மூன்று பாரங்களில் மட்டுமே இந்தி
கட்டாயம் இருப்பதால், அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு சமஸ்கிருதத்தை
விருப்பப் பாடமாக வேணும் வைக்கலாம்.
_ ஆனந்த விகடன் 17.10.1937
*************************************************************************************
தந்தை பெரியாரின் கணிப்பு
பார்ப்பனர்களில் ஒரு சாரார்
வெகுநாள்களுக்கு முன்னாலேயே இந்த நாட்டுக்கு குடி வந்திருந்தாலும் இந்த
நாட்டிலேயே நிலையாக வாழ்பவர்களானாலும் இந்த நாட்டுப் பழங்குடி மக்கள்
எல்லோரையும்விட தாங்கள் மேலானவர்கள் என்று பிரித்துக் காட்டி தனித்து நிற்க
வகைசெய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்மொழியைத்
தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசுகிறவர்களே ஒழிய
அம்மொழியில் உள்ள அன்புக்காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல.
உதாரணம் என்னவென்றால், இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய வைதீக
காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த்தனைகளிலும் தமிழை விலக்கி
வைத்திருக்கிறவர்கள்.
இந்தப் பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வடமொழி)யையே மேலாக எண்ணுவதோடு அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாய் முயற்சிப்பவர்கள்.
இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஒழுக்க
ஆதாரங்கள் தமிழ் மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை
கூறுகிறதை ஏற்றுக் கொண்டு அதன்படி பெரிதும் ஒழுகுபவர்கள்.
_ தந்தை பெரியார், குடிஅரசு, 4.5.1939)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமலிங்க அடிகளாரும் சமஸ்கிருத வழிபாடும்
இது, திருவருட்பா 6-_ஆவது திருமுறையில்
வசன பாகத்தில், சத்தியப் பெரு விண்ணப்பம் என்னும் தலைப்பின்கீழ். (தென்மொழி
-_ தமிழ்) என்னும் துணைத் தலைப்பில் உள்ளது.
இடம்பத்தையும், ஆரவாரத்தையும்,
பிரயாசத்தையும், பெருமறைப்பையும், போது போக்கையும் உண்டு பண்ணுகிற ஆரிய
முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது. பயிலுதற்கும் அறிதற்கும்
மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய்,
சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள்வலத்தால் கிடைத்த
தென்மொழியொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென்மொழிகளாற் பலவகைத்
தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர் என்கிறார். அவர் நம்பும் கடவுளை
நோக்கிக் கூறுகிறார் வடலூர் இராமலிங்க அடிகளார்; அத்தகைய தமிழ் வழிபாட்டு
மொழியாகத் தகுதி இல்லை என்கின்றனர். எப்படி இருக்கிறது?
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------ கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆகஸ்ட் 01-15 2014 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை