கதர்
[பெரியார் ஆரம்பத்தில் காங்கிரசில் சேர்ந்த போது கதரின் அவசியத்தை வலியுறுத்தி தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து கதர் துணியை மக்களை உடுத்த வைத்ததோடு தானும் தன் குடும்பத்தாரையும் உடுத்த வைத்தார். பின் கதர் புரட்டை அறிந்து அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். முன்பு தான் சொன்ன கருத்துதானே என்றில்லாமல் நாட்டு மக்களுக்கு எது நன்மையோ அதை தயங்காமல் மக்களிடம் பிரச்சாரம் செய்த ஒரே தலைவர் பெரியார். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்தக் கட்டுரையை வாசித்து உண்மையை அறிய வேண்டுகிறோம்
------------------------------ தமிழ் ஓவியா]
இது எழுதவேண்டியதற்கு ஏற்பட்ட முக்கிய காரணம் என்னவென் றால், சுயமரியாதை இயக்கத்தை பழிக்கவும், தூற்றவும், அதன் மீது மூடப் பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாக்கவுமான, இழிதகைப் பிரசாரத்துக்கு அனுகூலமாக சில காங்கிரஸ்காரர் என்று சொல்லிக்கொண்டு சோம்பேரி யாய் இருந்து வயிர்வளர்க்கும் வீணர்கள் “சுயமரியாதைக்காரர்கள் கதரை வெறுக்கிறார்கள்” என்றும் “ஏழை மக்களைக் காப்பாற்றும் கதருக்கு விரோதமாய் இருந்து ஏழைகளுக்கு துரோகம் செய்கிறார்கள்” என்றும் பொதுக்கூட்டங்களில் விஷமப் பிரசாரமும், திண்ணைப் பிரசாரமும் செய்து வருவதால் கதரின் வண்டவாளத்தை ஏழை மக்களே அறியட்டும் என்கின்ற எண்ணத்தின் மீது கதர் என்ற தலைப்பின் கீழ் மறுபடியும் சில குறிப்புகள் எழுத முன்வந்தோம்.
கதர் என்பது எது என்றால் “பஞ்சை கையினால் அரைத்து, கையினால் கொட்டி, கையினால் நூற்று, கையினால் நெய்த துணிக்கு” கதர் என்று பெயர். இவற்றுள் கையால் பஞ்சை அரைப்பது என்பது இப்போது சாத்தியமற்ற காரியமாகப் போய்விட்டது. யந்திரத்தினால் தான் (ஜின்னிங் செய்ய) அரைக்க முடிகின்றது.
கதரைப்பற்றி கதரை ஆரம்பித்த-கண்டு பிடித்த கதர் கர்த்தாக்கள் ஆரம்பத்தில் கதருக்காக சொன்ன காரணங்கள் யாவரும் அறிந்ததேயாகும். அதாவது,
1. “யந்திரம்” என்பது பேயின் பிரதி பிம்பம் ஆதலால் யந்திர உலகத்தை அழித்து கையினால் வேலை செய்யும் பழய கால வாழ்க் கையை புதுப்பிக்க வேண்டியது அவசியமானதால் எல்லோரும் கை ராட்டினத்தில் நூல் நூற்க வேண்டியது என்பதை முக்கிய காரண மாகவும்,
2. இரண்டாவதாக அவனவனுக்கு வேண்டிய சாதனங்களை அவன வனே உற்பத்தி செய்துகொள்ளும் தன்னம்பிக்கை தன்மை யை அடையவேண்டும் என்கின்ற தத்துவத்தில் முதலாவதாக அவன வனுக்கு வேண்டிய துணியை அவனவனே நூற்று அவனவனே நெய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
3. அதன் பிறகு மூன்றாவதாக இந்தியாவுக்கு வேண்டிய துணியை இந்திய மக்களே நூற்று நெய்து கட்டிக் கொள்வார்களேயானால் இங்கிலாந்து தேசம் வரட்சி அடைந்து தரித்திரம் பொங்கி இந்தியர் களிடம் சரணாகதி அடைந்து “சுயராஜ்ஜியம்” கொடுத்து விடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.
4. நான்காவதாக கைராட்டினத்தால் நூல் நூற்பதானால் இந்தியா வில் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிற ஏழை மக்களுக்கு கதர் ஒரு ஜீவனோபாயமாக இருக்கும் என்றும் அதனால் அனேக ஏழை களுக்கு வேலை கொடுக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
மற்றும் கதர் வேலைத்திட்டமானது இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் கிடைக்கும் வரைதான் அமுலில் இருக்குமே தவிர, சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு ஏழைகளுக்கு வேறு தொழில்கள் ஏற்பாடு செய்வதன் மூலம் கதர் திட்டம் எடுத்து விடப்படும் என்றும் சொல்லப்பட்டது. இவைகள் தவிர இன்னும் எத்தனையோ காரணங்களை கதருக்காக சமயோசிதம் போல் ஆளுக்குத் தகுந்தபடி அவ்வப்போது சமாதானமாகச் சொல்லப்பட்டும் வந்தது. இவ்வளவும் சொன்னவைகள் போராமல் வீர வைணவர்கள் வீர சைவர்கள் என்பவர்கள் போல் வீர கதர்காரர்கள் தங்களுடைய அதி தீவிர கதர் பக்தியைக் காட்டுவதற்கு தக்கிளியினால் நூல் நூற்றுக்கொண்டு அதாவது பக்தர்கள் சிறிது ஒழிந்த நேரம் கிடைத்தாலும் சிவசிவ, ராம ராம, என்றும் உரு ஜபிப்பது போல் ஒழிந்த நேரம் எல்லாம் தக்களியினால் நூல் நூற்றுக் கொண்டே இருப்பதின் மூலம் செய்கையில் காட்டிவந்தார்கள். இன்றும் சிலர் அம்மாதிரி செய்தும் வருகிறார்கள். மற்றும் ராட்டினத்தின் மூலமாகவோ, தக்கிளியின் மூலமாகவோ நூல் நூற்பதை தேசிய தவமாகவும், அது ஒரு ஆத்மார்த்த தத்துவமாகவும் சொல்லப்பட்டது.
இவைகள் தவிர கதர் கட்டாதவர்கள் தேசிய சபையில் அங்கத்தினரா யிருக்க அருகதை அற்றவர் என்றும், மற்றும் ராட்டினத்திலோ, தக்கிளியிலோ நூல் நூற்று தேசிய சபைக்கு நூலையே சந்தாவாகக் கொடுக்க வேண்டு மென்றும் சொல்லப்பட்டது.
இவ்வளவும் தவிர ஒரு முக்கிய விசேஷ மென்ன வென்றால் இந்த பத்து வருஷ காலத்தில் இந்த கதர் திட்டத்திற்காக கதர் இயக்கத்திற்கும் பிரசாரத்துக்கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட ரூபாய்கள் பொது ஜனங்களிடம் வசூல் செய்து செலவழிக்கப்பட்டு வந்திருப்பதாகும்.
இவ்வளவு சக்திகளையும், லட்சியங்களையும், தத்துவார்த்தங்க ளையும், மகிமைகளையும், பிரசாரச் செலவையும் கொண்ட கதர் நாளதுவரை பொருளாதாரத்திலோ அரசியலிலோ “ஆத்மார்த்தத்திலோ” தொழில் முறை யிலோ ஏழை மக்களுக்கு-இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு அம்மன் காசு அளவு (அம்மன் காசு என்பது கால் அணாவுக்கு ஐந்துகொண்ட புதுக் கோட்டை நாணயம்) பலனாவது கொடுத்திருக்கிறதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டியது அறிவுடையோருடையவும், நடு நிலைமையோரு டையவும் கடமையாகும்.
கதருக்கு முதலில் கூறப்பட்ட காரணங்களாகிய யந்திரம் கூடாது என்பதானது இனி உச்சரிப்பதற்கே முடியாத காரியமாய்ப் போய்விட்டது. ஏனெனில் யந்திரம் என்பது அறிவு வளர்ச்சியுடையவும், முற்போக்கு முயற்சியினுடையவும் அறிகுறியாகும். அறிவு வளர்ச்சியும் முற்போக்கு முயர்ச்சியின் பயனும் கூடாது என்று சொல்ல இந்த இருபதாவது நூற்றாண் டில் பயித்தியக்கார ஆஸ்பத்திரியிலும் கூட மனிதன் இருக்க மாட்டான். அன்றியும் கதர் கர்த்தாவாகிய காந்தியாரே நூல் நூற்பதற்கு அதாவது குறைந்த நேரத்தில் அதிகமான நூல் உற்பத்தி செய்யத்தகுந்த ஒரு யந்திரம் (ராட்டினம்) கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுப் பதாக விளம்பரம் செய்து இரண்டு வருஷகாலமாய் முயற்சித்து வருகிறார். அந்தப் படி ஒரு ராட்டினம் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டால் அப்போது அதை யந்திரம் என்று சொல்லாமல் என்ன சொல்ல முடியும்? ஒரு சமயம் “சக்ராயுதம்” என்று காந்தியார் பெயரிடக்கூடும். (ஆரியம் (கேப்பை) அரைக்கும் கல்லுக்கும் யந்திரம் என்று தான் பெயர்) ஆகவே அந்தப் பருப்பு இனி வேகாது.
அதற்கு அடுத்த காரணங்களாகிய கதர் இங்கிலாந்தை பட்டினி போட்டு விடும் என்று சொல்லுவது. ஒரு தடவை ராமா என்றால் சகல பாவ மும் போய்விடும் என்பது போன்ற சங்கதிக்குத்தான் சமமாகச் சொல்ல வேண்டுமே ஒழிய மற்றபடி அதில் யாதொரு உண்மையும் இருக்க இட மில்லை. மற்றும் மேலே கூறப்பட்ட மற்ற காரணங்களும் அதுபோலவே பரிகசிக்கத் தக்கதாகத்தான் ஆகிவிடும். நிற்க,
மற்றபடி அவனவனுக்கு வேண்டியதை எல்லாம் அவனவனே செய்து கொள்ளக்கூடிய சக்தியை ஒவ்வொருவனும் அடைய வேண்டுமென் பதானது ஆதியில் மனித சமூகம் காடுகளிலும், மலைப்பொந்துகளிலும் காட்டு மிராண்டிகளாய், காட்டுமனிதர்களாய் திரிந்தவர்களுக்குத்தான் இது சாத்தியப்பட்டிருக்கக்கூடும். எப்படியெனில் ஒரு மனிதனுடைய தேவை காய், கிளங்கு தவிர வேறொன்றும் இல்லாதிருந்திருக்கும். ஆனால் இப் போதைய காட்டு மிராண்டிக்கும், காட்டு மனிதனுக்கும் கூட இது சாத்திய மாகக் கூடியதல்ல என்றே சொல்லுவோம்.
மேற்கண்ட கொள்கை மூடமக்கள் காதுக்கு இனிமையானதாகவும், ஞாயமானதாகவும் காணக்கூடும். கருத்துக்கு இதைவிட முட்டாள் தனமான கொள்கை வேறு ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் மனித சமூகம் கூடி வாழவேண்டுமானால் கூட்டுறவும் ஒருவருக்கொருவர் சேர்ந்து செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் இருக்க முடியவே முடியாது.
ஏழைகளுக்கு பலனுண்டா?
எனவே இப்போது சிறிது செல்வாக்கு இருக்கும் ஒரே ஒரு காரண மாகிய "கதர் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கக்கூடியது" என்பதில் ஏதாவது உண்மையோ, நாணையமோ இருக்கின்றதா? என்று பார்ப்போம்.
கதரைப்பற்றிய நமது ஆராய்ச்சி அனுபவத்தில் நூல் நூற்பது ஒரு வெட்டி வேலை என்பதோடு, அது ஏழைகளை ஏமாற்றி நிரந்தரமாய் ஏழை வகுப்பு என்று ஒன்று இருந்து வருவதற்காகச் செய்யப்படும் சூட்சி என்றே முடிவேற்பட்டிருக்கிறது.
ஏன் வெட்டி வேலை?
ஏன் ராட்டினத்தில் நூல் நூற்பதை வெட்டி வேலை என்கிறோம் என்றால் ராட்டினத்தால் ஆணோ, ஒரு பெண்ணோ ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நூல் நூற்பதால் ஒரு அணா அல்லது ஒன்றே காலணா கூலி கிடைக்கின்றது என்பது கதர் நிபுணர்கள் கணக்கு. இந்தப்படி கதர் நூலில் கூலி கிடைப்பதில்லை என்றும், நூல் நூற்பதின் மூலம் நூல் நூற்கும் கூலியும் போய் கையிலிருந்தும் பணம் கொஞ்சம் நஷ்டமாகின்றதென்றும் நாம் சொல்லுகின்றோம். எப்படியெனில் இதை சற்று வாசகர்கள் கவன மாகவும். நுட்ப அறிவு கொண்டும் கவனித்துப் பார்த்தால் தான் விளங்கிக் கொள்ளக்கூடும். இல்லாத பக்ஷம் “பார்ப்பான் வயிற்றில் கொட்டும் பண்டம்” மேல் லோகத்தில் ஆவி ரூபமாய் இருக்கிற “பெற்றோர்களுக்குப் போய்சேருகின்றது” என்கின்ற மாதிரியில் தான் “கதர் நூற்றால் ஒரு அணா கூலி கிடைக்கின்றது” என்கின்ற பொய் நம்பிக்கை உண்டாகிவிடும்.
கதர் விளக்கம்
54, இஞ்சு அகலமுள்ள கதர் துணி 10 கஜம் கொண்டது 41/2 ராத்தல் இடை இருக்கும். இதில் சேதாரம், கஞ்சி, கனம் போனால் மீதி 4 ராத்தல் பஞ்சுக்குத் தான் நூற்கப்பட்ட கூலி கொடுக்கப் பட்டிருக்கும். அதாவது ராத்தல் ஒன்றுக்கு 5 அணா கூலி வீதம் 4 ராத்தலுக்கு 1-4-0 கூலி கொடுக்கப் பட்டிருக்கும்.
ஆனால், இந்த 10 கஜம் கதர் துணி என்ன விலைக்கு விற்கப் படுகின்றது என்று பார்த்தால் இன்று 5-10-0க்கு விற்கப்படுகின்றது. இந்த 54, இஞ்சு அகலம் 10 கஜம் துணி இந்திய மில் நூலால் நெய்யப்பட்ட துணி இன்று ஈரோடு பஜாரில் சலவை செய்தது கஜம் ஒன்றுக்கு 0-3-6 வீதம் (10 கஜத்துக்கு) 2-3-0க்கு தாராளமாய் கிடைக்கின்றது. இது கதரை விட எவ்வளவோ மடங்கு துணி மிகவும் நைசாயும், முருக்காயும், கெட்டியாயும் இருப்பதை யாரும் பார்க்கலாம்.
ஆகவே 2-3-0வுக்கு கிடைக்கும்படியான துணியைவிட மட்ட மானதும், முருக்கும், கெட்டியும் இல்லாததுமான முரட்டுத் துணியை கதர் என்கின்ற காரணத்தால் 5-10-0 விலை போட்டு வாங்குதன் மூலம் 4ராத்தல் துணிக்கு 3-7-0 அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். இந்த 3-7-0 அதிகம் கொடுக்கும் பணத்திலிருந்து தான் நூல் நூற்றவர்களுக்கும் 1-4-0 கொடுக்கப் படுகின்றதே தவிர கதரின்-துணியின் பொருமானத்தில் இருந்து கொடுக்கக் கூடியதல்ல என்பதை புத்தியில் பதியவைக்க வேண்டுகிறோம்.
கதர் நூற்பதால் ஜனங்களுக்கு ஒரு ராத்தல் ஒன்றுக்கு நூற்பவர் களுக்குக் கொடுத்த கூலி போக மேல்கொண்டு 0-8-9 அணா வீதம் நஷ்ட மேற்படுகிறது. இது தவிர 2 ராத்தல் பஞ்சில் நூற்கப்பட வேண்டிய துணிக்குப் பதிலாக 4 ராத்தல் பஞ்சு செலவாகின்றது. இதுவும் தவிர 6 மாதத்திற்கு வரக்கூடிய துணி 4 மாதத்திலேயே கிழிந்து விடுகின்றது. மற்றும் துணி முரடாகவும், உபயோகத்துக்கு அசவுகரியமாகவும் இருந்து வருகின்றது.
இதில் தான் ஏழைக் கூலிகளுக்கு தினம் 10 மணி வேலை செய்தால் 15 பை அதாவது 0-1-3 கூலி கிடைக்கிறது என்று சொல்லி ஏமாற்றுகின் றார்கள். இந்த ஏமாற்றத்தை அறிந்து கொள்ளாத மூடர்கள் தான் கதரால் ஏழைகளுக்கு லாபம் என்று சொல்லலாமே தவிர பொருளாதாரக்கணக்கும், புள்ளி விபரமும் தெரிந்தவன் கதரால் மக்களுக்கு ராத்தல் ஒன்றுக்கு 0-13-9 வீதம் பொது ஜனங்கள் பணம் நாசமாகின்றது என்றும், ஒன்றுக்கு இரண்டாக பஞ்சு வீணாகின்றது என்றும்தான் சொல்லித் தீரவேண்டும். இதிலிருந்து நமக்கு தோன்றுவ தென்னவென்றால் ‘ஏழைமக்களை’ 10 மணி நேரம் உழைக்க செய்து வேலை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு 0-1-3 அணா கூலி கொடுப்பதை விட அவர்களை சும்மா உட்காரவைத்து சாப்பாடு போடுவதானால் மேல்கண்டபடி பொதுஜனங்களை ஏமாற்றி நஷ்டமடையச் செய்யும் பணத்தில் இருந்து இன்னம் இரண்டு பங்கு ஜனங்களுக்கு சாப்பாடு போடலாம் என்று தைரியமாய்ச் சொல்லலாம் என்பதேயாகும்.
அன்றியும் கதர் இலாகாவிலோ, வியாபாரத்திலோ கலந்திருப்ப வர்கள் புண்ணிய nக்ஷத்திரங்களில் நாமம், விபூதி, உருத்திராட்சம், துளசி மணி விற்பதில் தங்கள் பக்தியைக் காட்டுவது போல் கதர் தொழிலில் ஈடு பட்டு வயிறு வளர்ப்பதன் மூலமும் பணம் சம்பாதிப்பதன் மூலமும் தங்கள் பக்தியைக் காட்டுகிறார்கள். இதைக் கண்டு பாமர மக்கள் ஏமாந்து பின் பற்றி வருகிறார்கள்.
காந்தியாரின் தத்துவார்த்தமும், காங்கிரசு தயவும், 10 லக்ஷக்கணக்கான ரூ. செலவு கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் பிரசாரமும் இல்லாவிட்டால் கதர் விற்பனையாகி “ஏழைகளுக்குப் பயன்படுமா” என்பதை யோசித்துப் பாருங்கள். இந்தப்படி ஒருவர் தயவில் பிழைப்பது தானா “ஏழைகள்” பிழைக்கும் வழி என்றும் இது எத்தனை நாளைக்கு நடக்கும் என்றும் கேட்கின்றோம்.
ஆகவே இந்திய மக்களின் பொது அறிவையும் தேசிய ஞானத்தை யும் மதிக்க இந்தக் கதர்பக்தி ஒன்றே போதுமானது.
இந்திய தேசிய தலைவர் என்பவர்களின் நாணையத்தையும், யோக்கியப் பொருப்பையும் கவனிக்கவும் இந்த கதர் பிரசாரம் ஒன்றே போதுமானது. இந்திய தேச பக்தர்கள், தேசீய வாதிகள், தேசத்தொண்டர்கள் ஆகியவர்களின் பகுத்தறிவுக்கும், விடுதலை ஞானத்திற்கும் இந்தக் கதர் பிரசாரமே போதுமானது.
இந்திய பாமரமக்களின் மத சம்மந்தமான அறிவுக்கு அவர்களது சடங்கு ஆச்சாரம், ராமாயணம், பாரதம், பெரியபுராணம். திருவிளையாடல் புராணம் ஆகிய விஷயத்தில் உள்ள நம்பிக்கை முதலியவை எப்படி அளவு கருவியாய் இருக்கின்றதோ அது போல்தான் இந்திய மக்களது பொருளாதார ஞானத்துக்கும், அரசியல் ஞானத்துக்கும் ஏழைகள் விடு தலைக்கும் அவர் களது கதர் தத்துவமே அளவு கருவியாய் இருந்து வரு கின்றது.
கடைசியாக ஏழை மக்களை காப்பாற்றுவது என்பது ஒரு மனிதனி டத்தில் இருந்து 3-7-0வை ஏமாற்றிப் பறித்து ஒரு மனிதனுக்கு 1-4-0 வை கொடுப்பது அல்ல என்றும், ஏழைகள் யார்? அவர்கள் ஏன் ஏழைகளாய் இருக்கிறார்கள்? ஏழைகள் என்கின்ற மக்களே இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை கவனித்து அதற்கு ஏற்றபடி நடப்பதுதான் நாணையமான காரியமாகுமே ஒழிய இந்தமாதிரியான பித்தலாட்டங்களால் ஒருநாளும் ஏழ்மைத் தன்மை நீங்கிவிடா தென்றும் உறுதியாய்ச் சொல்லுகிறோம்.
உதாரணமாக இந்த 10 வருஷ காலமாய் கதர் நூல் நூற்றவர்களுக்கு கொடுத்த கூலியைக் கணக்குப் பார்த்தால் கதர் பிரசாரத்துக்குச் செலவழிக்கப் பட்ட பணத்தைவிட கொஞ்சமாகத் தான் இருக்கும். ஆனால் அவர்கள் பெயரைச் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி அடைந்த பணம் கதர் நூற்ற “ஏழைகளுக்கு” கொடுத்ததைவிட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.
ஆகவே இனிமேலாவது கதர் பக்தர்கள் தங்களுடைய ஆவேசத் தில் சுயமரியாதைக்காரர்களை வையாமலும், பழிசுமத்தாமலும் வேறு வழியில் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறோம்.
------------------------------- தந்தை பெரியார் --”குடி அரசு” - தலையங்கம் - 16.07.1933
11 comments:
ஆதாரமே இல்லை
சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை. - (விடுதலை, 26.8.1967)
போர்க் குற்றங்கள்மீது நடவடிக்கை:
இலங்கைக்கு,அமெரிக்காஎச்சரிக்கை
சர்வதேச சமூகம் பொறுமை காக்காது!
இலங்கை உள்நாட் டுப் போரில், ராணுவத் தின் அட்டூழியம் மற் றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விடில், சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது என்று தெற் காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளி யுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ் வால் கூறினார்.
போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசின் நடவடிக்கை யில் வரும் மார்ச் மாதத் துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால் அய்.நா. தலைமையி லான விசாரணை கோரு வோம் என்று இங்கி லாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த மாதம் கூறியிருந்தார். இக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் நிஷா பிஸ் வால் இவ்வாறு கூறி யுள்ளார்.
அய்.நா. அறிக்கை
2009-ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங் களில், சிங்கள ராணுவத் தால் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என் றும், ராணுவத்தினர் கடும் போர்க் குற்றங் களில் ஈடுபட்டதாகவும், அய்.நா. அறிக்கை கூறு கிறது.
இந்நிலையில், போர்க் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்கும் விவகாரத்தில் இலங்கை அரசு தாமாக முன்வந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிஷா பிஸ்வால் கூறியுள் ளார்.
இந்த விவகாரத்தில் இலங்கை தங்கள் நாட்டு சட்ட திட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ் வாறு நடந்து கொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும் போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத் தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லா விட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறு மையாக இருக்காது என்றார் நிஷா பிஸ்வால்.
இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனு மதிக்க முடியாது என்று கூறிவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, உள் நாட்டு விசாரணைக்கும் உத்தரவிட மறுத்து வருகிறார். ராணுவத்தின் அத்துமீறல் குற்றச்சாட் டுகளையும் அவர் மறுத்து வருகிறார்.
அதிகாரப் பகிர்வை நோக்கி சிறு நடவடிக் கையாக கடந்த செப் டம்பர் மாதம் நடை பெற்ற இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற்ற போதி லும், அங்கு ஊடகங்கள் மீதான நெருக்குதல், மனித உரிமை மீறல்கள் போன்ற சமீபத்திய செய் திகள் அதிர்ச்சி அளிக் கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மோடிக்கான விசா வழங்கும் கொள்கையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு
வாஷிங்டன், டிச.5- அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந் தாலும் அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வும், மோடிக்கு விசா வழங்குவது தொடர் பான கொள்கையில் மாற்றம் எதுவும் செய் யப்படவில்லை என்றும் அதிபர் ஒபாமாவின் அமெரிக்க நிர்வாகம் மீண்டும் தெரிவித்துள் ளது.
இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியா விற்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:
அமெரிக்க விசா விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின் றேன். அனைவரது விசா விண்ணப்பத்தின் மீதும் உரிய ஆய்வு நடத்தப் படும். அதன்படி விசா விண்ணப்பம் சமர்ப்பிக் கும் அனைவரது விண் ணப்பமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அந்த நடைமுறையின் இறுதி முடிகள் குறித்து பேச இயலாது என்றார் பிஸ் வால்.
அப்போது நரேந்திர மோடிக்கு விசா வழங் குவது குறித்து செய்தி யாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப் பினர். அதற்கு பதில் அளித்த பிஸ்வால், "அமெரிக்க விசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. விசா விண்ணப்பங்கள் எப்போதும் விண்ணப் பத்துக்கு தகுந்தவாறு பரிசீலனை செய்யப் படுகின்றன.
அரசு விசா, அரசு அதிகாரிகளுக்கான விசா, சுற்றுலா விசா என விசாக்களில் பல்வேறு விசாக்கள் உள்ளன.
எனவே, விசா விண் ணப்பத்தின் தன்மை மற்றும் யார் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்பதைப் பொறுத்தே அதன் மீதான முடிவுகள் இருக்கும்' என்று கூறினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவ ரத்தைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது. அதே நிலைதான் தற்போ தும் நீடித்து வருகிறது என்பதை அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.
பெரியார் சமத்துவபுரத்தில் கோயிலா?
கரூர் மாவட்டம், வெள்ளியணையில் இம்மாவட்டத்தில் முதல் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இச்சமத்துவபுரத்தில் கடந்த 2010 ஆண்டு மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி அவர்கள் மார்பளவு பெரியார் சிலையை நிறுவினார். சிலையின் அருகில் புற்றுக் கண் கோயில் திடீரென முளைத்துள்ளது. சமத்துவபுரத்தின் உள்ளே பால நாகம்மா கோயில் என இரண்டு கோயில்கள் சமத்துவபுரத்தில் உள்ளன. இந்த இரண்டு கோயில்களிலும் பாம்பு புற்றின் அருகில் சாமி படங்களும், மஞ்சள் துணி கட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் தெளித்து தினம் பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த கோயில் அருகே வேப்ப மரம், மற்றும் கோயிலை கீற்றுக் கொட்டகை அமைத்து பெரியார் சமத்துவபுரத்தின் நுழைவு பகுதியில் பெரியார் சிலை அருகே கோயில் அமைத்து சில சமூக விரோதிகள் தீய செயலில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அந்த கோயிலை அப்புறப்படுத்தி ஜாதி சமய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் கழகத் தோழர்களையும், பகுத்தறிவு சிந்தனை யாளர்களையும் ஒன்று திரட்டி பெரிய போராட்டம் நடைபெறுவதை தவிர்க்க உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும். எந்த நோக்கத்துக்காக பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டதோ அதை உருக்குலைக்க சதி நடக்கிறது. அரசு தலையிடட்டும்.
செய்திக்குப் பின்னால்...!
உலகளவில் கணினிகளில் தீங்கிழைக்கும் மென்பொருள் அதிகமாகக் கொண்டுள்ள நாடு களின் பட்டியலில் இந்தியாவுக் குள்ள இடம் மூன்று.
(இதுபோன்றவற்றில் இந்தியா தானே பொதுவாக முதலிடத்தைப் பிடிக்கும். கோட்டை விட்டுவிட்டதோ!).
நாடாளுமன்றம் நேற்று கூடி யது.
(கூடியது சரி... நடக்குமா என்பதுதான் கேள்வி)
டில்லியில் தேர்தலில் இரவிலும் வாக்குப் பதிவு.
(இரவில் வந்த சுதந்திர மாயிற்றே!)
மின் கணக்கீட்டில் முறைகேடு களைத் தடுக்க ரிமோட் மீட்டர்கள்.
(பெரும்பாலோருக்கு அதிர்ச்சி (ஷாக்)யாக இருக்குமே!)
ஒரே நாளில் மூன்று இடங் களில் சென்னை மாணவர்கள் தகராறு.
(படித்துக் கிழிப்பது என்பது இதுதானோ!).
லஞ்சம் கேட்கும் அதிகாரி களைக் கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
(இலஞ்சமே ஒருவகைப் போதைதானே!).
கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் சாராய உற்பத்திக்கு எதிர்ப்பு!
(சர்க்கரை இல்லாவிட்டால் என்ன? சாராயத்தை உற்பத்தி செய்ய வேறு மார்க்கங்கள் இல்லையா, என்ன?)
மது அருந்த மாட்டோம்; போனில் பேச மாட்டோம்! - ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உறுதிமொழி!
(ஓடுற தண்ணீரில் எழுதிய எழுத்தாக இருக்கக்கூடாது!)
கடுங் குற்றங்களுக்கு எஃப்.அய்.ஆர். பதிவு கட்டாயம்.
(அப்படி எஃப்.அய்.ஆர். செய்யாத அதிகாரிகள்மீது எஃப்.அய்.ஆர். பதிவு செய்வார்களா?)
சவுதியில் தவிக்கும் 30 தமிழர்கள் இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம்!
(உலகுக்கு இளைத்தவர்கள் இந்தத் தமிழர்கள்தானே!)
தென்னக ரயில்வேக்கு ஒதுக் கீடு குறைகிறது.
(ஒழுங்காக டிக்கெட் வாங்கிப் பயணம் செய்கிறவர்கள் இவர்கள்தானே - அதற்குத் தண்டனை வேண்டாமா?)
ராட்சத பளு தூக்கும் லிப்ட் அறுந்து விழுந்தது - வாலிபர் பலி!
(ராட்சத பளு தூக்கியைவிட வாலிபர் கனபாடியோ!)
மின்வெட்டுக் காரணமாக தமிழ்நாட்டில் ரூ.65 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு!
(மின்வெட்டா? தமிழ்நாட்டிலா? இருக்காதே, ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் சரி செய்துவிட்டார்களே, ஹி....ஹி...)
அந்தோ, தென்னாப்பிரிக்க விடுதலைச் சிங்கத்தின் குரல் ஓய்ந்துவிட்டதே!
உலகின் மனித உரிமைப் போரில் கறுப்பினத்தின் மறுக்கப்பட்ட உரிமை களுக்காக, மண்டியிடாத போர் முழக்கத்தை உரிமை முழக்கமாகச் செய்து, அதற்குரிய கடும் விலையாக 27 ஆண்டு வெஞ்சிறையில் வாடி, இருட்டினை சுவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்று, இறுதிவரை போராடி, எந்த வெள்ளை இனம் நிறத்தைக் காட்டி அதிகாரம் செய்ததோ அவர்களுக்கும் சேர்த்த அதிபராக, அமர்ந்து, தனது இயக்கத்தின் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்ட மாவீரர் நெல்சன் மண்டேலாவின் (வயது 95) மறைவு, தென்னாப்பிரிக்க மக்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள சமத்துவ, சமவாய்ப்பு, சமூகநீதிப் போராளிகள் அனைவருக்குமே இழப்பு ஆகும்!
இளைய தலைமுறைகள் இவர்தம் லட்சியத் தியாகத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும்!
நெல்சன் மண்டேலாவை வெறும் படமாகப் பார்க்காதீர்கள் இளைஞர்களே,
பாடமாகக் கொண்டு, நெல்சன் மண்டேலாவின் நெறியில் நடைபோட உறுதியேற்று, சூளுரையுங்கள்!
நெறியோடு சுதந்திரப் போர் நடத்தி, வெற்றி கண்ட அம்மனிதகுல மாணிக்கத்திற்கு எமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!
- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
6.12.2013
மறக்க முடியாத டிசம்பர் 6
டிசம்பர் 6 என்றால் மனித உரிமை ஆர்வலர்கள் அண்ணல் அம்பேத்கரை நினைவு கூர்வார்கள்.
சங்பரிவார் கும்பலோ பாபர் மசூதி இடிப்பு நாள் என்று மகிழ்ந்து கொண்டாடும்; உலக நாடுகள் முன் இந்தியா தலைகுனிய பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று காந்தியார் படுகொலை, இரண்டு பாபர் மசூதி இடிப்பு, மூன்று குஜராத் படுகொலைகள்.
இந்த மூன்றுக்கும் காரணமானவர்கள் இந்துத் துவா நஞ்சு கக்கும் சங்பரிவார்க் கும்பல்!
பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு பிரிட்டனும், அமெரிக்காவும் இன்றுவரை விசா கொடுக்க மறுப்பது ஏன்? அதன் பின்னணி அவமானகரமானது அல்லவா!
ஒரு பட்டப்பகலில் பல்லாயிரக்கணக்கான மத வெறியர்களை ஒன்று திரட்டி, 500 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்து நொறுக்கித் தள்ளி விட்டார்கள். அதன் மூலம் இந்தியாவின் மானம் மரியாதை எல் லாம் அடித்து நொறுக்கப்பட்டு விட்டன என்று பொருள்.
இதுகுறித்து அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணை ஆணையம் 68 பேர்கள் மீது குற்றவாளிகள் என்று பட்டியலிட்டது.
அதில் அடல் பிஹாரி வாஜ்பேயும் ஒருவர். இதில் வெட்கக் கேடு என்னவென்றால் வாஜ்பேயியை அந்தக் குற்றச்சாற்றுப் பட்டியலில் எப்படி சேர்க்கலாம் என்று கூறி நாடாளுமன்றத்தை முடக்கினார்களே அதுதான்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் எப்பொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மவாதிகள் அவர்கள்.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் இதே வாஜ்பேயி உ.பி. தலைநகரமான லக்னோவில் என்ன பேசினார்?
நாளைய தினம் அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்கள் மீது அமர்ந்து கொண்டு பஜனைப் பாடல்களைப் பாட முடி யாது. மண்ணை சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்யவேண்டும் - என்று பேசினாரே!
இதுபற்றி அவுட்லுக் நிருபர் பின்னர் வினா எழுப் பியபோது வாஜ்பேயி சொன்ன பதில் அபாயகரமானது.
நான் லக்னோவில் பேசியது உண்மைதான். அது நகைச்சுவைக்காக கூறப்பட்ட - வேடிக்கையான பேச்சு - என்றாரே பார்க்கலாம்.
500 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களுக்கான வழிபாட்டுத் தலத்தை இடிக்கச் சொன்னது வாஜ்பேயிகளுக்கு வேடிக்கையானதாம். அதன் விளைவாக நாடெங்கும் கலவரங்கள் நடை பெற்று பன்னூறு பேர்கள் கொலையுண்டது - நகைச் சுவையா!
இவர்தான் அவர்கள் கட்சியிலேயே யோக்கிய மான மனிதராம். தந்தை பெரியார் ஒன்றைக் கூறுவார் என் வீட்டுப் பிள்ளைகளிலேயே மிகவும் நல்லவன் - அதோ கூரை மீது ஏறிக் கொள்ளி வைக்கிறானே அவன்தான்! என்றானாம் ஒருவன். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளி அதற்குப்பின் இந்தியாவில் துணைப் பிரதமராகக் கூட (எல்.கே.அத்வானி) வந்துவிட்டார். இன்னொருவர் முரளி மனோகர் ஜோஷி; அவர் இந்தியாவின் மனித வள மேம்பாட்டுத் துறை (கல்வி) அமைச்சகராகவே வந்து விட்டார்.
இவர்கள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்கு களும் சாதாரணமானவையல்ல. இந்தியன் குற்ற வியல் சட்டம் 147, 153(ஜெ), 153(பி) மற்றும் 505 பிரிவுகள்; கலகம் விளைவித்தல், மக்களிடையே குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், சட்ட விரோத மாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் துணிதல், பிரிவினை உண்டாக்கும் என்ற குற்றங்கள் இதில் அடங்கும்.
21 ஆண்டுகள் ஓடிவிட்டன; ஆனாலும் பெரிய மனிதர்களாக பெரிய பதவிக்காரர்களாக இவர்கள் நாட்டில் ராஜ நடை போட்டுத் திரிகிறார்களே, எப்படி?
இதில் குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று - பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பாபர் மசூதி இடிப்புக் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?
இந்துக்கள் ஆண்மையுள்ளவர்கள்; பேடிகள் அல்லர் என்று நிரூபித்து விட்டார்களாம்.
இந்தத் தன்மை உள்ளவர்களின் கைகளில் ஆட்சி சென்றால் நாடு என்னவாகும்? சுடுகாடாகும்- எச்சரிக்கை!
பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழக பொதுக் குழுவும், தலைமைச் செயற் குழுவும் பலமுறை தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளன என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வும் விரும்புகிறோம்.
மனிதக் கொடுமை
தன் இனத்தையே அடிமைப்படுத்தி, அதைக் கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலேயே அதிகமாய் இருந்து வருகின்றது.
(உண்மை, 15.5.1977)
கலைவாணர் பற்றி பெரியார்
புராணம், மோட்சம், நரகம், சாஸ்திரம், கடவுள்கள் ஆகியவை பற்றிய அபிப்பிராயங்கள் மக்கள் உயிரோடு கலந்தும், வாழ்வோடு கலந்தும், மதத்தோடு கலந்தும் பலவிதமான ஸ்தாபனங்களோடு செல்வாக்காய் பத்திரமாய் அனேக காவலாளிகளோடு இருப்பதை வெறுக்கும்படியாக சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கும் படியில் - அதுவும் இதைப் பார்க் கவும் கேட்கவும் பணங்கொடுத்து விட்டு வந்து பகலும் இரவும் காத்துக்கிடக்கும்படியாகச் செய்து வருகிறார் என்.எஸ். கிருஷ்ணன்.
சாகும்வரை செய்துகொண் டே இருக்கப் போகிறார் என்றால் இதைவிட ஒரு புரட்சி வீரனை நாம் எங்கு காணமுடியும்? வேறு எத்தனை பேர்தான் இருக் கிறார்கள்? நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்ப்போம்.
(பேராசிரியர் அன்புக் கொடி நல்லதம்பி எழுதிய சிரிப்பில் மலர்ந்த சிந்தனை மலர்கள் என்ற நூலிலிருந்து....)
பிறப்பில் தீண்டாமை கருதலாமா?
தீண்டாதாரிடையே ஒழுக்கமில்லை என்று சிலர் சொல்கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடையரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன்.
தீண்டாதார் என்று சொல்லப்படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.
அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதாரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண்டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?
-திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)
மூன்று ஆண்டுகளுக்குள் சிறுகனூரில் பெரியார் சிலை அமையும் விடுதலை வாசகர் வட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு
மதுரை, டிச. 6- மதுரையில் விடுதலை வாசகர் வட்டம் முதலாம் ஆண்டு விழா மாட் டுத்தாவணி பேருந்து நிலை யத்தின் எதிரில் உள்ள செய் தியாளர் அரங்கத்தில் 5.12.2013 அன்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழின எழுச்சிப் பாடகர் இளைய இசைமுரசு இராசா முகமதுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று விடுதலை வாசகர் வட்டத் துணைத் தலைவர் ச.பால்ராஜ் உரையாற்றினார்.
விடுதலை வாசகர் வட்டத் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பொ.நடராசன் தலைமை உரை நிகழ்த்தினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, மதுரை செல்வம், எஸ்.முனிய சாமி, மா.பவுன்ராசா, க.அழகர், அ.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிட முன்னேற்ற கழக பேச்சாளர் துரை.எழில்விழியன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் முனைவர் நம்.சீனிவாசன், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோ ரது வாழ்த்துரைக்கு பின்னர் இந்துத்துவா நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் தமி ழர் தலைவர் உரையாற்றினார்.
மாமுத்து மகள் பெரியார் பிஞ்சு சர்மதி கடவுள் மறுப்பு
அவர் தமது உரையில் நேர நெருக்கடியைப் பற்றி சொன் னார்கள். நெருக்கடி காலத்தையே (Emergency Period) சமாளித்த வர்கள் நாங்கள். இந்த நேர நெருக்கடி காலத்தையும் சமா ளிப்போம். பெரியார் உலகத் தைப் பற்றி சொல்லும்போது எங்களின் உயரம் பற்றி துரை. எழில்விழியன் குறிப்பிட்டார்.
நான் உயரமானவன் அல்ல. உயரம் குறைவானவன். ஆயிரக் கணக்கான பெரியார் தொண் டர்களின் உயரத்தால் நான் உயர்வாக நிற்கின்றேன். அதற் கும் மேலாக தந்தை பெரியாரின் தோள்களுக்கு மேலாக நிற்ப தால் நான் உயரமாக இருக்கி றேன். தந்தை பெரியாரின் தன் னலமற்ற உழைப்பால் தியாகத் தால் அவர்களின் தோள்களுக்கு மேலாக இருக்கக் கூடிய நாங் கள் உயரமாக இருக்கின்றோம்.
தமிழின எழுச்சிப் பாடகர் இளைய இசைமுரசு இராசா முகம்மதுவின் இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது
பெரியார் உலகம் என்பது 15 ஆண்டுகால திட்டம். ஆனால் மூன்று மூன்று ஆண்டுகளாக வேலை நடைபெறும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பெரி யார் சிலை அமையும். பெரியார் உலகம் முடியும்போது உள்ளே சென்று வெளியே வருபவர்கள் ஒரு விழிப்புணர்வைப் பெறு வார்கள் அறிவியல் மனப்பான் மையைப் பெறுவார்கள். அவர் களுக்கு மிகப்பெரிய தெளிவு ஏற்படும்.
இந்துத்துவா என்பது நேற்று கொடுமையான சட்டங்களால் ஆனது. பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று ஆனது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனர்கள் ஏமாற்றிய விதத்தை ஆதாரங்க ளோடு எடுத்துரைத்தார். சூத்திர னுக்கு எது கொடுத்தாலும் கல் வியைக் கொடுக்காதே என்பது நேற்றைய இந்துத்துவா.
இன்று ஊடகங்களில் இணைய தளங்களில் கோய பல்ஸ் பிரச்சாரம் செய்கிறார் கள். மோடி வந்தால் அனைத் தும் மாறிவிடும் என்கிறார்கள். 2002 கோத்ரா சம்பவம் அதற் குப் பிறகு நடைபெறும் தொடர்ச் சியான சம்பவங்கள் மோடி யார் என்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள் ளது. ஆனால் ஏதோ வெளிநாட் டில் உள்ள பேருந்து நிலை யத்தை போட்டு அது குஜராத் தில் உள்ளது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
இதைப் போன்ற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பதவிக்கு வரத்துடிக்கின் றார்கள். இவர்கள் வரமாட் டார்கள். ஆனால் நாளை இவர் கள் வந்தால் பழைய மனுதர்ம ஆட்சி மறுபடியும் வரும். ஜாதி அடிப்படையிலான வேலைக்கு கட்டாயப்படுத்தப் படுவோம்; அண்ணல் அம்பேத் கர் குறிப்பிட்ட சமமில்லாத பாகுபாடு என்பதுதான் அவர் களுடைய அடிப்படை தத்து வம்.
வர்ணதருமத்தை நியாயப் படுத்துவார்கள்; அதைப்புகுத் துவார்கள் எனக் குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸினுடைய அதிகா ரப்பூர்வ புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி விளக் கினார். இந்துத்துவாக்களின் அபா யத்தை உணர்வோம் என்று குறிப்பிட்டு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
நிறைவாக விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஆ.முருகா னந்தம் நன்றி கூறினார். நிகழ்ச்சி யின் துவக்கத்தில் பெரியார் பிஞ்சு கடவுள் மறுப்பு கூறியது அனைவரையும் வியக்கவைத்தது. விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பெரி.காளியப்பன், வழக்குரைஞர் ந.தமிழ்மணி, விடுதலை ராதா, பொ.தனராசு, வழக்குரைஞர் மு.சித்தார்த்தன், இரா.வே.சுசீலா, மு.கனி, திருமதி மோகனா வீரமணி, ஆசிரியர் இராமசாமி மற்றும் ஏராளமா னோர் பங்கேற்றனர்.
Post a Comment