Search This Blog

10.12.13

பார்ப்பான் என்று சொல்லவே நடுங்குகிறார்களே? - பெரியார்

நம் மக்கள் என்றென்றும் ஊழியம் செய்யும் சூத்திரராய் இருப்பதா?

எனக்கு 78-வயது முடிந்து 79-வது பிறந்ததைப் பாராட்டுவதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எனக்கும் வாழ வேண்டுமென்ற ஆசைதான். ஏன்? ஏதோ எழுபத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தோம் இன்னும் கொஞ்சம் காலம் இருப்போம் என்றல்ல; நான் ஈடுபட்டுள்ள பணியை மேலும் தொடர்ந்து செய்யவே. நான் பொதுவாழ்வில் ஈடுபட்டு இன்றைக்கு 37,  38  ஆண்டகளாகின்றன. நான் காங்கிரசில் சேர்ந்தது 1920-இல். அதற்கு முன் முனிசிபாலிட்டி, தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு முதலிய ஸ்தாபனங்களில் இருந்தாலும் அவையெல்லாம் சொந்தப் பெருமைக்கு, மதிப்புக்கு என்றுதான். பொதுவாழ்வு என்றால் முன்பெல்லாம் பெருமைக்கு என்று இருந்தது. ஆனால் இன்று காந்தி வந்தபிறகு அது பித்தலாட்டத்திற்கு என்று மாறிவிட்டது.

பொது வாழ்வில் ஈடுபட்டு 37 ஆண்டுகள் ஆனாலும் எனக்கு உலக அறிவும், அனுபவமும் என்னுடைய 10  வது வயதிலிருந்தே உண்டு.

இந்தக் காலத்து மாணவர்களுக்குப் பொது அறிவே இருப்பதில்லை. அதிலும் ஒரு மாணவன் அதிக மார்க் (மதிப்பெண்) வாங்குகிறான் என்றால் பொது அறிவு இன்னமும் மோசம், வெறும் புத்தகப் பூச்சி என்றுதான் அர்த்தம். அவர்கள் பழகுவதெல்லாம் அந்தப் புத்தகங்களோடும் ஆசிரியர்களோடும் தான். பொது மக்களோடு பழகுகின்ற வாய்ப்பிருக்கிறவர்களுக்குத்தான் பொது அறிவும், அனுபவமும் பெற வாய்ப்பிருக்கிறது.

உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் பெங்களுர் போயிருந்தேன். மைசூர் அரசாங்கத்தில் Chief Justice (தலைமை நீதிபதி) ஆக இருந்து ரிட்டையர் (ஓய்வு) ஆகிவந்தவர் ஒருவர். அவருக்கு நம்முடைய கொள்கையில் நிரம்பப் பற்று உண்டு. அவரைச் சந்திக்க நேரிட்டபோது அவர் சொன்னார்: "நீ பொது நலத்திற்காக வேலை செய்கிறாய். ஆனால் உனக்குப் போதுமான ஆதரவு இல்லை. வேறு நாடாயிருந்தால் உன்னைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள்" என்றார். அதற்கு, "ஆதரவில்லாமல் போனாலும் போகட்டும், குழியல்லவா பறிக்கிறார்கள்!" என்று நான் சொன்னேன்.

மேலும் பேசிக்கொண்டிருந்தபோது, "பார்ப்பன ஆதிக்கம் உங்களுடைய ஊரில் மிகவும் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை அய்கோர்ட்டில் (உயர் நீதிமன்றம்) ஒரு தீர்ப்பு ஆனது; மிகவும் அநியாயமான தீர்ப்பு. நீங்கள் பண்ணி வைத்த திருமணங்களை யாரும் குறை சொல்ல முடியாது. நான் இருந்திருந்தால் என்னிடம் அந்த வழக்கு வந்திருந்தால் வேறு விதமாக தீர்ப்பளித்திருப்பேன்" என்று சொன்னார்.

அது என்னவென்றால் சுயமரியாதைத் திருமணம் சம்பந்தமாக அய்க்கோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று இரண்டு பார்ப்பன ஜட்ஜீகள் (நீதிபதிகள்) தீர்ப்பளித்தார்கள்;

"சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்வதுதானே" என்று அவர் கேட்டதற்கு நான் சொன்னேன், அங்கு இருப்பவரெல்லாமும் பார்ப்பனர்கள்தானே அவர்கள் மேலும் பலமாக ஆணி அடித்து விடுவார்கள்" என்றேன்.

இதேபோல் மற்றொரு வழக்கு ஒன்றும் உண்டு. திரு. முத்தையா முதலியார் காலத்தில் கம்யூ G.O (அரசு ஆனை) உத்தரவு போட்டார். அதன் மூலம் (வகுப்புவாரி உரிமை) நம்முடைய மக்களுக்கு அரசு வேலைகளில் இடம் ஒதுக்கி வைத்தார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் செய்யும் போது வகுப்புவாரி உத்தரவு செல்லாது என்று சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் சட்டம் செய்தவர்களுள் ஒருவர். அவரே வக்கீலாக (வழக்குரைஞராக) வந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு செல்லாது என்று வாதாடினார். அந்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பாகிவிட்டது.

"இந்தத் தீர்ப்பைப் பார்த்ததும் எனக்கு வருத்தமாயிருந்தது. என்னிடம் இந்த வழக்கும் வந்திருந்தால் கட்டாயம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரித்திருப்பேன். அந்த மாதிரியிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு அர்த்தம் பண்ணியிருப்பேன்" என்று மைசூர் ராஜ்ஜியத்தில் ரிடையர் ஆன அந்த சீஃப் ஜஸ்டிஸ் (தலைமை நீதிபதி) சொன்னார்.

"இந்த மாதிரி உணர்ச்சியுள்ளவர்கள் நாலுபேர் உதவியாக இருந்தால் உங்களுடைய அனுபவமெல்லாம் பயன்பட்டால் எவ்வளவோ சாதிக்கலாம்," என்றேன் நான்.

அதற்கு அவர் "எனக்கு என்ன அனுபவம் இருக்கிறது? முப்பது வருஷமாக ஜட்ஜாக (நீதிபதியாக) நான் இருந்தேன். கோஷா பெண் மாதிரி! நான் கிளப்புக்குப் போகக்கூடாது. யாரிடமும் பழகக்கூடாது; கல்யாணங்களுக்கும் போகக்கூடாது; பொது இடங்களுக்கும் போகக் கூடாது; ஏனென்றால் பழகினால் யாரேனும் ஏதாவது சிபாரிசுக்கு வந்துவிடுவார்கள். இந்த வகையில் பொதுமக்களோடு பழகாத கோஷாப் பெண்போல் இருந்த எனக்கு என்ன அனுபவம் இருக்கப்போகிறது? வக்கீல்கள் சொல்லும் பொய்யிலிருந்து மெய்யைக் கண்டுபிடிப்பதிலேயே என் காலம் எல்லாம் கரைந்து விட்டது" என்று சொன்னார்.

எதற்குச் சொல்லவந்தேன் என்றால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பொது அறிவு பெற, அனுபவம் பெற வாய்ப்பு இருப்பதில்லை.


என்னுடைய நிலைமை அப்படியில்லை. 60, 80-வருஷமாக (ஆண்டாக) எனக்கு உலகம் தெரியும். அப்போது இவ்வளவு பித்தலாட்டம், ஏமாற்றம் எல்லாம் மக்களுக்குத் தெரியாது. கடன்கூட வாய்ப் பேச்சில்தான்.

மோசடி என்பதே அன்று கிடையாது. வழக்கு ஏதும் ஏற்படாது. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. கையொப்பம் வாங்கினாலும் முடியவில்லை. அடமானம் வைத்துப் பணம் கொடுத்தாலும் திருப்பி வாங்க முடியவில்லை. இதெல்லாம் சொந்த வாழ்க்கையில் காந்தி வந்தபின் மோசடிகள்.


காந்தியார் வந்தபிறகு பொது வாழ்க்கையில் பித்தலாட்டம் பெருகிவிட்டது. அதைவிட ஆச்சரியம் பித்தலாட்டத்தை மக்கள் தவறு என்று நினைப்பதில்லை. சாமர்த்தியம், கெட்டிக்காரத்தனம் என்று நினைக்கிறார்கள்! சட்டசபைக்குப் போவதற்கோ பதவிக்குப் போவதற்கோ இன்று அயோக்கியத்தனம் செய்தால்தான் முடிகிறது. எவன் உண்மை பேசுகிறானோ எவன் உள்ளபடி சொல்லுகிறானோ அவனை ஒழிப்பதுதான் மற்றவர்களுடைய வேலை! இதுதான் பார்ப்பன தருமம்.

உலகத்திலேயே இரண்டு மூன்றுபேர் உண்மை பேசி நடந்திருக்கிறார்கள். முதலாமவர் புத்தர்; இரண்டாமவர் இயேசு; மூன்றாமவர் கொஞசம் தைரியமாகக்கூடச் சொல்லியிருப்பவர் முகமதுநபி!

ஆனால் இந்து சாஸ்திரத்தில் புத்தன் என்றால் அயோக்கியன் என்று பொருள். அயோக்கியன் கொலைக்காரன் அவனைச் சித்திரவதை செய்ய வேண்டும் என்று சொல்கிறது. இராமாயணம் அவனை ஒழிக்க வேண்டும் அவன் பெண்டு பிள்ளைகளைக் கற்பழிக்க வேண்டும். ஒழிக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்கள்! அவர்களைக் கொன்றால் புண்ணியம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். தேவாரம், திருவாசகம், நாலாயிர பிரபந்தத்தில் முஸ்லிம்களைத் தொட்டால் தீட்டு; முஸ்லிமைத் தொட்டால் துணியை எல்லாம் எடுத்துப்போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு வேறு துணியை உடுத்த வேண்டும்!

அன்பைப் போதித்த முகமது நபியை, இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை இந்த வகையில் நடத்தினார்கள்! இந்தப்படியாக நாட்டில் உண்மைக்கு, நியாயத்திற்குத், தத்துவத்திற்குப் பாடுபட்டால் அவர்களுக்கு மரியாதைக் குறைவு. 1957-ஆம் ஆண்டிலும் பித்தலாட்டத்திற்கும் அயோக்கியத்தனத்திற்கும் தான் சிறப்பு.

எங்களைப் பொருத்த வரையில் அடிப்படையில் பித்தலாட்டம் செய்து பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொல்கிறோம். "உண்மையை அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து கேட்டால் கேள், கேட்காவிட்டால் போ" என்று இப்படி சொல்லக்கூடிய நிலைமை இந்தியா பூராவும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஒரு பஞ்சாயத்து போர்டு எலக்க்ஷனுக்குக் கூட நாங்கள் போவதில்லை.

சுத்த முட்டாள் சட்டசபைக்குப் போனால் கூட மாதம் ரூ.150/- படிதினம் 15/- (1957-ல்) கிடைக்கிறது! பர்மிட், லஞ்சம் எல்லாம் கிடைக்கிறது ஆகவே எந்தப் பித்தலாட்டம் செய்தாவது, எந்தக் கொள்கையை - எதைவிட்டுக் கொடுத்தாவது சட்டசபைக்குச் செல்ல வேண்டும். யாரை நினைத்தாலும் நினைத்துக் கொள்ளுங்கள்.

எங்களோடு இருந்தவரை வணக்கம் என்று சொன்னவன் இப்போது நமஸ்காரம் என்று சொல்கிறான்.

சமஸ்கிருத துவேஷம், பார்ப்பன துவேஷம் என்று பார்ப்பனர் நினைப்பர். வோட்டுக்குப் போகின்றவன் எல்லாம் நமஸ்காரம் என்று சொல்லுகிறான்! இந்த சின்ன சங்கதிக்கே இப்படி! அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.

எங்களோடு இருந்தவரை பார்ப்பான் என்று சொன்னான். இப்போது 'பிராமணன்' என்று சொல்கிறான்! பார்ப்பான் என்று சொன்னால் அவன் மனம் புண்படுமாம். பார்ப்பான் என்று சொல்லவே நடுங்குகிறார்களே?

இன்று எங்களுடைய அந்தஸ்து (செல்வாக்கு நிலை) உயர்ந்து வருகிறது. எந்த அளவுக்கு என்றால் காங்கிரஸ்காரர்கள் கூட எங்களுடைய தயவை விரும்புகிறார்கள். மக்கள் எங்களிடம் நம்பிக்கை வைத்துவிட்டார்கள். எங்கள் சொல்படி கேட்கிறார்கள் என்றால் நாங்கள் எந்த விதமான எங்களுடைய சொந்த சுயநலத்திற்கும் பாடுபடுவதில்லை. ஏதோ உழைக்கிறோம் என்றால் அது பொது நலத்தை உத்தேசித்துதான். எங்களுக்குச் சுயநல நோக்கம், எண்ணம் இல்லை என்பதை எல்லோரும் நன்கு உணர்ந்துவிட்டனர்.


திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை ஜாதியை ஒழிப்பது. சுதந்திரம் வந்து இன்றைக்குப் பத்து வருஷமாகின்றது. அது ஒழிவதற்குப் பதிலாக மேலும் மேலும் பலப்பட்டு வருகிறது. எங்களுடைய முயற்சிக்கு ராசகோபாலாச்சாரி முதல் எல்லோரும் எதிரிகள்; நாங்கள் இதை எளிதில் ஒழிக்க முடியுமென்று எண்ணினோம். "பிராமணன்" என்று போர்டு (பெயர்ப்பலகை) போடக்கூடாது பார்ப்பான் மணியடிக்கிற கோவிலுக்குப் போகக் கூடாது என்ற திட்டங்களை வைத்து, முதல் திட்டத்திற்குக் கிளர்ச்சி ஆரம்பித்தோம். இன்றைய தினம் வரை 650-பேர் சிறைக்குப் போயிருக்கிறார்கள். இந்தக் கிளர்ச்சி இந்த அளவிற்குப் பலப்பட்ட பின்பும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று யோசித்தேன். இராசகோபாலாச்சாரி சொன்னார் "நாங்கள் எப்போது சொன்னோம் ஜாதி ஒழிய வேண்டுமென்று எங்கே சொன்னோம்?" என்றார். உடனே நான் ஏதோ சூது இருக்கிறது என்று அரசமைப்புச் சட்டத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில் அடிப்படை உரிமைகள் தந்திருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய ஜாதியை, மதத்தைக் காப்பாற்ற உரிமை தந்திருக்கிறான். ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளலாம். பிராமணன் என்ற தன்மையில் வாழலாம்; அதைக் காப்பாற்றித் தர அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்தச் சட்டம் இருக்கிறவரை - ஜாதியைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறவரை, நம்முடைய நிகழ்ச்சி எந்த வகையில் பயன்படும்?

இந்தச் சட்டத்தை மாற்றும் உரிமை இந்தச் சென்னைச் சட்டசபைக்கு இல்லை. அந்த உரிமை மத்திய அரசாங்க - டெல்லி சட்டசபைக்குத்தான் (பாராளுமன்றம்) இருக்கிறது. அங்கும் மூன்றில் இரண்டு பங்கு மேஜாரிட்டி (பெரும்பான்மை வாக்களிப்பு) கொண்டு வந்துதான் மாற்ற முடியும். இது எவ்வாறு முடியும்?

நம்முடைய சூத்திரத் தன்மை என்றுமே இருப்பதா? இந்தக் காலத்தில் கூட நாம் இந்தத் தன்மையை மாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதா?

ஆதிக்கக்காரன் சட்டசபை ஆசை காட்டி விட்டான். அந்த சட்டசபைக்குப் போகின்றவர்களாவது சாதியை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்களா? அப்படிச் சொன்னால்தான் முடியுமா?

ஆகவே இந்த நிலையில் ஜாதியை ஒழிக்க நான் அரசமைப்புச் சட்டத்தைச் - ஜாதியை, மதத்தைக் காப்பாற்றுகிற சட்டத்தைக் - கொளுத்தப் போகிறேன்.

ஜாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். இளைஞர்களாயிருப்பவர்கள் இரத்தத்தில் கையெழுத்துப் போட்டு அனுப்புங்கள், காந்தி சிலையை உடைக்கிறேன், பார்ப்பானை ஒழிக்கிறேன்' என்று!


ஒன்றுமில்லாத குப்பை சங்கதிக்கு முதுகுளத்தூரில் 30, 40-பேர் செத்திருக்கிறார்கள். 3000-வீடுகளுக்குத் தீ வைத்திருக்கிறார்கள்! வெட்டி நெருப்பில் எறிந்தார்கள்! வெட்டித் தலையைக் கொம்பில் சொருகிக் கொண்டு ஆடினார்கள்! ஒன்றுமில்லாத சப்பைச் சங்கதிக்கு இம்மாதிரி செய்திருக்கிறார்கள். நம்முடைய மக்கள் என்றென்றும் கக்கூஸ் (மலக்கழிவு) எடுக்க வேண்டியது; தெருக்கூட்ட வேண்டியது, உடலுழைப்பு செய்து சூத்திரராகவே இருப்பது, நாம் கைகட்டிக் கொண்டு சும்மாவே இருப்பதா?

நம்முடைய உயிரை நாம் பலி கொடுக்க வேண்டும். நான் வேண்டுமானால் வாய்தா (காலக்கெடு) கொடுக்கிறேன். ஆனால் ஏதும் செய்யாமல் நாம் எவ்வளவு காலம் சும்மாயிருப்பது? இவற்றையெல்லாம் முடிவு செய்து நீங்கள் எனக்கு எழுதுங்கள்! உங்களுடைய தைரியத்தை, வீரத்தை அறிந்துதான் நான் எதையும் செய்கிறேன். இரத்தத்தில் கையெழுத்துப் போட்டு எனக்கு எழுதுங்கள்!

நம்முடைய இன இழிவைப் போக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை வாருங்கள்!

-------------------------------------------------------------- 08.1.1957-ல் வலங்கைமானில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா.  சொற்பொழிவு---”விடுதலை” 20.10.1957

19 comments:

தமிழ் ஓவியா said...


பெரியாரியல் பெண்ணியப் பயிற்சிப் பட்டறை

கழகக் குடும்பத்தினருக்கு, வணக்கம்!

நம் இயக்கக் கொள்கைகளை, நாடெங்கிலும் பரப்பி, பகுத்தறிவு சமுதாயம் படைக்க, பெண் பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கில் டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில், 15 முதல் 25 வயதிற்குட்பட்ட இளம் பெண்களுக்கு சென்னை பெரியார் திடலில் சிறந்த சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்டு பேச்சுப் பயிற்சிப் பட்டறை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பங்குபெற்று தங்கள் பேச்சுத் திறனைப் பட்டை தீட்டிக்கொள்ள விரும்பும் இளம் பெண்கள் தங்கள் பெயரைக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மின்னஞ்சல் maniammaidaisy@gmail.com

தொடர்பு எண்கள்:

வி.டெய்சி மணியம்மை 9884851997, உமா செல்வராசு 9444868564, த.மரகதமணி 9841936691

அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்), வி.டெய்சி மணியம்மை (மாநில செயலாளர், மகளிர் பாசறை), அ.கலைச்செல்வி (மாநில செயலாளர், மகளிரணி)

Read more: http://viduthalai.in/page-8/71785.html#ixzz2n7PCVFIw

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.

(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/71759.html#ixzz2n7PtZVgx

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் கோயிலும் வேதவிதிமுறையும்


பார்ப்பனர்கள் தங்கள் சுரண்டல் தொழிலுக்கான கேந்திரங்களாகக் கோயில்களைப் பயன்படுத்தி வருவது பெரும் உண்மையே! போட்டிக் கடை வைத்து விளம்பரம் செய்வதுபோல ஒவ்வொரு கோயிலுக்கும் தவப் புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு பக்திப் போதையில் சிக்கியுள்ள - படித்த மற்றும் படிக்காத பாமர மக்களை தத்தம் கோயில்களின் பக்கம் கவர்ந்து இழுக்கிறார்கள்.

இந்த விளம்பர யுக்தியில் சிதம்பரம் நடராஜன் கோயிலைத் தட்டிக் கொள்ள முடியாது. அந்த அள வுக்குப் புளுகு மூட்டைகளை அள்ளி விட்டுள்ளனர்.

சைவக் கோயில்களில், கோயில் என்று சொன் னாலே அது சிதம்பரம் நடராஜன் கோயிலைத்தான் குறிக்குமாம். அப்படியென்றால் மற்ற கோயில்கள் எல்லாம் குட்டிச் சுவர்களா?

பொதுவாக சைவக் கோயில்களில் லிங்க வழிபாடு என்பது மிகவும் முக்கியம். சிதம்பரத்திலே அது கிடையவே கிடையாது, அதற்கு முக்கியத்துவமும் இல்லை.

இது தொடர்பாகப் பிரச்சினை வரும் போது மிகவும் சாமர்த்தியமாக ஆகாசலிங்கமாக இருப்பதாகக் கதை கட்டி விட்டார்கள்.
ஆகமம் ஆகமம் என்று எதற்கெடுத்தாலும் கூச்சல் போடுகிறார்களே - சிதம்பரம் கோயிலில் ஆகம விதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை; மாறாக வேத முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

இது குறித்து பிரபல ஆன்மிகப் பழமான காஞ்சி புரம் அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியது கவனிக்கத் தக்கதாகும்.

வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டது தான் ஆகமம்; அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத் ஆகமம் வைகனாஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்திற்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை அதாவது வழிபாட்டு முறையைப் புறக்கணிச்சுட்டு வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியது தான் ஆகமம் ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்களில் முக்கியமானது பல பொருட்கள், அதாவது மாடுகள், ஆடுகள், குதிரைகள் ஆகிய வற்றைப் பலி கொடுக்க வேண்டும்.

அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்று வரை பசுக்களைப் பலி கொடுக்கும் சோம யாகம் முதலியவற்றைச் செய்து வர வேண்டும் என்பது அய்தீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன், இன்று அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.

வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும், வேதம் சொன்ன வட மொழியில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லித் தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள் என்று அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியுள்ளார் (ஜூனியர்விகடன் 12.3.2008 பக்கம் 18)

சொல்லுவது யார் என்பதைப் பார்க்க வேண்டும்; திராவிடர் கழகத் தலைவர் இதனை சொல்லவில்லை, வேதம் மற்றும் ஆகமங்களில் கரை கண்டவர் அத்துப்படியானவர் என்று அவாள் வட்டாரத்திலேயே ஏற்றுக் கொள்ளப்படுபவர் - மறைந்த பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அத்தியந்தமாக இருந்தவர்; இன்னும் சொல்லப் போனால் அவருக்கு ஆலோசகராக இருந்த வரும்கூட!

சம்பிரதாயங்களை, கோயில் வழிமுறைகளை அப்படியே துல்லியமாக - கறாராகக் கடைப்பிடித்தே தீர வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள், அதற்காக உச்சநீதிமன்றம் வரை செல்லக் கூடியவர்கள் அவர்கள் கடைப்பிடிக்கும் வேதமுறைப்படியான வழிபாட்டு முறைப்படி ஏன் உயிர்களைப் பலியிடுவ தில்லை?

அரசு காரணம் என்றால், அதன் பொருள்,கோயில் பிரச்சினைகளில் அரசு தலையிடும் அதிகாரம் படைத்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சிதம்பரம் நடராஜன் கோயிலை அந்த முறைப்படி எடுத்துக் கொள்ளும்போது அதனை எதிர்த்து ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும்?

இன்னொரு கேள்வியும் இருக்கிறது. தில்லைக் கூத்தன் ஆடுவதால்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் கூறுவது உண்மையானால், அதில் அந்தரங்க சுத்தியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்குமேயானால், அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுவதற்குப் பதிலாக அந்த ஞானக் கூத்தனாகிய நடராஜப் பெரும் மானிடம்தானே முறையிட வேண்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை? அவர்களுக்கே அந்தக் கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று தானே பொருள்? பக்தர்கள் சிந்திப்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/71761.html#ixzz2n7Q4CRoT

தமிழ் ஓவியா said...


இன்று (டிச.10): சர்வதேச மனித உரிமைகள் தினம்


ஒவ்வொரு மனிதனும், தான் வாழ்வதுடன், பிற ரையும் வாழவிட வேண் டும் என்பதை வலியுறுத் தும் விதமாக டிச., 10ஆம் தேதி, மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக் கும் வலியுறுத்துவதே இதன் நோக்கம். 1948, டிச.10ஆம் தேதி அய்க் கிய நாடுகளின் பொது சபையால் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை, பெருமைப்படுத்தும் விதத் தில் 1950இல் இத்தினம் தொடங்கப்பட்டது.

உல கில் வாழும் அனைத்து மனிதர்களும் சமமான வர்களே. ஒருவரிடமி ருந்து நாம் எவ்வித உரி மையை எதிர்பார்க்கி றோமோ, அதே உரி மையை மற்றவர்களுக் கும் வழங்க வேண்டும். யாரும் யாரையும் அடி மைப்படுத்தக் கூடாது.

ஒருவர் பிறக்கும் போதே, அவருக்கான மனித உரிமைகள் வந்து விடுகின்றன. உயிர் வாழ் வதற்கான உரிமைகள், கருத்து சுதந்திரம், மனி தன் சுதந்திரமாக வாழ் வதற்கான கல்வி, மருத் துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம். இது அனைத்து மக்களும் அங்கீகரிக்கக்கூடிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவை.

இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் 1991, அக். 13இல் இந்திய மனித உரிமைகள் பாது காப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/71800.html#ixzz2n7QzMXyo

தமிழ் ஓவியா said...


கேரளாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தமிழர்களை வெளியேற்றுவதா?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, சோலையூர், புதூர், அகழி, பாலூர், சாவடியூர் போன்ற கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் பல ஆண்டுகளாக விவசாயத்தினை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு உழைக்கும் மக்கள் ஆவார்கள். அவர்கள் கேரள மாநில வாசிகளே!

இவர்கள் பழங்குடி மக்களிடமிருந்து நிலத்தை முறையாகப் பெற்று (விலை கொடுத்து வாங்கி) பத்திரப் பதிவும் செய்து வரி செலுத்தி வந்தனர். 1986 இல் அந்த நிலங்களை வாங்கியது செல்லாது என கேரள அரசு அறிவித்தது.

அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆதரவுடன் பெரிய அறப்போர் வெடித்தது; அப்போது பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது.

இப்போது கேரள அரசின் கெடுபிடி காரணமாக அவர்கள் நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கேரளாவாழ் அட்டப்பாடி தமிழர்கள் ஒருங்கிணைந்த போராட்டத்தை - அறவழிப்பட்ட எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்!

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு, கேரள முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிடவும், தேவைப்பட்டால், தொலைப்பேசிமூலம் பேசி, இப்பிரச்சினையை சுமூகமாக, முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் முடிவுக்குக் கொண்டு வந்ததுபோல செய்யவேண்டும்!

மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு, கேரள அரசுடன் பேசவேண்டும்; அவசரம், அவசியம்!

இரண்டு மாநில மக்களின் நல்லுறவு பாதிக்கப்படாமல் வாழை இலை முள்ளை அகற்றுவதுபோன்று, மென்மையும், உறுதியும் கலந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்து அதன்மூலம் நல்ல பயன் கிடைக்கச் செய்யவேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தமிழர்களின் உடைமைகள் அவை

எனவே, நியாய அடிப்படையில் அவர்களை வெளியேற்றுவது மிகப்பெரிய தவறு; சமூகநீதி அவர்களுக்கும் தேவை.

பழங்குடியினருக்கான நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, பல தலைமுறைகளாக அந்தப் பகுதியைத் தம் உழைப்பின்மூலம் வளப்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களை வெளியேற்றுவது எந்த வகையில் நியாயமாகும்? பழங்குடி மக்களுக்கு நியாயம் வழங்க எத்தனையோ வழிகள் உண்டு; அதுபற்றி கேரள அரசு சிந்திக்கட்டும்!

ஒரு பக்கத்தில் ஒருமைப்பாடு பேசிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் அதற்கு உலை வைப்பது தேசியமா? என்பதும் முக்கியமான கேள்வியாகும்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை 11.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/71806.html#ixzz2nAvtzpxL

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை- பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
(குடிஅரசு, 25.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/71834.html#ixzz2nAwmEJeG

தமிழ் ஓவியா said...


மோடி அலையா?


நடந்து முடிந்த அய்ந்து மாநிலங்கள் தேர்தலில், மூன்று மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பி.ஜே.பி. மிகவும் எதிர் பார்த்தது டில்லி மாநிலத் தேர்தல் - இந்தியாவின் தலைநகரமாயிற்றே! அதில் வெற்றிக்கொடியை ஏற்றினால், இந்திய ஆட்சியே தங்கள் கைக்கு வந்துவிடும் என்ற ஆசையில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்தது பி.ஜே.பி.

மோடி அலை வீசுகின்றது என்று கூறி, சிலர் புறப்பட்டுள்ளார்கள்; அந்த நரேந்திர மோடி புது டில்லியில் அதிகமான பொதுக்கூட்டங்களில் பேசி னார். பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்பட்டது. மோடியைப் பிரதமராக்கித் தீருவது என்பதில் கோவணங் கட்டிக்கொண்டு களத்தில் நிற்கும் பெரிய பெரிய முதலாளிகள், பின்னணியில் இருக்கும்பொழுது பணம் எல்லாம் ஒரு பொருட்டா?

இவ்வளவு முயற்சிகள் செய்த பிறகும், டில்லியைக் கைப்பற்ற முடியவில்லை. முந்தா நாள் பெய்த மழையில் முளைத்த காளான் என்று சொல்லு வார்களே அதேபோல தோன்றிய ஒரு கட்சி (ஆம் ஆத்மி கட்சி) காங்கிரசையும், பி.ஜே.பி.யையும் தண்ணீர் காட்டிவிட்டது.

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புதிதாக முளைத்த அந்தக் கட்சிகூட, வெறும் ஊழலை முன்னிறுத் தியதே தவிர, அந்தக் கட்சிக்கு வேறு சமுதாயக் கொள்கைகள் சொல்லும்படியாக ஏதுமில்லை.

தேர்தலில் செலவு செய்ய, அந்தக் கட்சிக்குப் பணம் எங்கிருந்து குதித்தது என்பதும் கேள்விக் குறியாகும். அந்தக் கட்சியின் தலைவர், எந்தக் கட்சியின் உதவியையும் நாடப் போவதில்லை; நாங்களும் எந்தக் கட்சிக்கும் உதவிக் கரம் நீட்டப் போவதில்லை என்கிறார். அந்தக் கட்சியின் இன்னொரு மூத்த தலைவரோ, (அவர் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன்) வேறு குரலில் இப்பொழுதே பேச ஆரம்பித்துவிட்டார்; பி.ஜே.பி.,க்குக் காதல் கண் சிமிட்டுவதைக் காண முடிகிறது.

காங்கிரசையும் பிடிக்கவில்லை; பி.ஜே.பி.யையும் பிடிக்கவில்லை. அதைத் தாண்டி மூன்றாவது கட்சி தலையைக் காட்டியதால், அதற்கு டில்லியில் ஆதரவு கிடைத்துவிட்டது என்று பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்த கருத்து - கருத்தூன்றத் தக்கதாகும்.

இந்தத் தேர்தல் முடிவு வெளிவந்த நிலையில், வழக்கமாக நீட்டி முழங்கும் நரேந்திர மோடியின் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை - பெட்டிப் பாம்பாகி விட்டார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே பி.ஜே.பி.,க்குச் சாய்கால் உள்ள மாநிலங்கள்தான். ராஜஸ்தானைப் பொறுத்தவரை காங்கிரசும், பி.ஜே.பி.,யும் மாறி மாறி வந்துள்ளன என்பதுதான் உண்மை.

இதற்கிடையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மோடி அலை எங்கும் வீசுகிறது; மோடிதான் அடுத்த பிரதமர் என்று தனக்கே உரித்தான முறையில், நீட்டி முழங்கி இருக்கிறார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையை முன்னிறுத்தி, காங்கிரஸ் தோல்வி தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால், ஈழத் தமிழர் பிரச்சினையில் பி.ஜே.பி., தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிக்கக் கூடியது என்று சொல்ல வருகிறார் என்றால், அதைவிட நகைச்சுவை வேறு ஒன்று இருக்க முடியாது.

சென்னையில் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பி.ஜே.பி.பற்றி ஒரு முக்கிய தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, பி.ஜே.பி. அதற்கு முட்டுக்கட்டை போட்டது; இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் இந்தியா எப்படி தலையிடலாம் என்று கூறிவிட்டது என்று கூறி இருக்கிறாரே - இதுவரை பி.ஜே.பி. தரப்பிலிருந்து மறுப்பு உண்டா?

பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிக்கவில்லையா? தமிழக மீனவர்கள்தான் தாக்கப்படவில்லையா?

குளிக்கப் போய், சேற்றில் விழலாமா?

Read more: http://viduthalai.in/page-2/71835.html#ixzz2nAwuEDMI

தமிழ் ஓவியா said...


2ஜி கூட்டுக்குழு அறிக்கை: கலைஞர் கருத்து

சென்னை, டிச.11- 2ஜி தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:

கேள்வி :- அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு, பா.ஜ.க., மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித் திருக்கி றார்களே?

கலைஞர் :- குற்றம் சாட்டப்பட்டவரையே விசாரிக்காமல் - அவர் தன்னை விசாரிக்க வேண்டு மென்று கோரிக்கை வைத்த பிறகும் அவரை அழைக்காமல் - அந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையை தி.மு. கழகம் மட்டுமல்ல; விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்றும், நாடாளுமன்ற வரலாற்றில் இன்று மோசமான நாள் என்றும், அது பற்றிப் பேசவே வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா கூறியிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், இந்த அறிக்கையை நாங்கள் புறக்கணிக்கிறோம், இது திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட மோசடி அறிக்கை, பிரதமர் உள்ளிட்டோரைத் தப்பிக்கச் செய்வதற்காக திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசும்போது, பி.சி. சாக்கோ அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யானது முழுமையற்ற, வேண்டுமென்றே தன்னிச்சை யாக, உரிய ஆவணங்கள் இன்றி தயாரிக்கப்பட்ட அரைகுறையான அறிக்கை. இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து கொண்டி ருக்கும் ஆ.ராஜா இந்தக் குழுவில் சாட்சிய மளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியதோடு, இந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதை எதிர்த்து கழக உறுப்பினர்கள் வெளி நடப்புச் செய்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-3/71846.html#ixzz2nAxCxhkd

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும் சட்டம் ஒழுங்கு படும்பாடு!


கேள்வி :- சட்டம், ஒழுங்கு இன்று (10-12-2013) ஒரு நாளில் மட்டும்?

கலைஞர் :- 10-12-2013 ஒரு நாளில் மாத்திரம் ஏடுகளில் வந்துள்ள சட்டம் ஒழுங்கு பற்றிய செய்திகளின் தலைப்புகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

தாயைக் காப்பாற்ற முயன்ற மகன் செங்கத்தில் சுட்டுக் கொலை. சென்னையில் மூன்று இடங்களில் போலீசார்போல வேடமணிந்து செயின் பறிப்பு. பெண்ணாகரத்தில் போதையில் மூன்று போலீசார். அரசு நிலத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் அலுவலகம். திருவண்ணாமலை யில் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு பேர் தீக்குளிக்க முயற்சி.

நடிகர் மயில்சாமியிடம் 50 ஆயிரம் கேட்டு மிரட்டல். துரைப்பாக்கத்தில் பெண்ணிடம் 12 சவரன் அபேஸ். சென்னைத் தெருக்களில் தண்ணீர் புகுந்து மீனவர்களின் 2 வீடுகள் இடிந்தன. மது விருந்தில் தகராறு - ஒருவருக்கு பீர் பாட்டில் குத்து. மீனம்பாக்கத்தில் இஞ்சினீயரிடம் 20 சவரன் கொள்ளை. ஆலந்தூரில் பெண் ஊழியரைத் தாக்கி நகை பறிப்பு.

வீட்டு மனை வழங்க 2000 ரூபாய் லஞ்சம். ஆவடியில் மூதாட்டியிடம் 23 சவரன் கொள்ளை. சோழவரத்தில் தம்பதியரிடம் நகை பறிப்பு. திருப்போரூர் அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் நள்ளிரவில் பயங்கரத் தீ - பெட்ரோல் ஊற்றி எரித்ததாகப் புகார். ரயிலில் 25 சவரன் நகை பறித்த நான்கு பெண்கள்.

இன்ஸ்பெக்டருக்கு எதிராக பா.ஜ.க. திடீர் போர்க்கொடி. அய்யப்ப பக்தர்கள்போல் கொள்ளையர்கள் ஊடுருவல். தூத்துக்குடி அருகே பெண் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுக் கொலை. வேலூர் சிறையில் மோதல். பெரவள்ளூரில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து இரண்டரை லட்சம் ரூபாய் கொள்ளை. கோயம்பேட்டில் பால் விற்கும் பெண் உரிமை யாளரைத் தாக்கிக் கொள் ளை.

இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிறது சட்டம் ஒழுங்கு!

- தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையிலிருந்து
(முரசொலி, 11.12.2013)

Read more: http://viduthalai.in/page-5/71813.html#ixzz2nAxQGugi

தமிழ் ஓவியா said...


இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா? நாடாளுமன்றத்தில் தி.மு.க. எதிர்ப்பு

புதுடில்லி, டிச.11-இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித்து டில்லி மாநிலங் களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினர்.

இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித் தும், இந்திய மீனவர்கள் தொ டர்ந்து இலங்கையால் சிறை பிடிக்கப்படுவது குறித்தும் விவா திக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மாநிலங் களவை தலைவருக்கு மனு அளித் திருந்தார்.

ஆனால், இதற்கு நேரம் ஒதுக்க மறுத்ததால், கனிமொழி தலைமையில் தி.மு.க. உறுப்பி னர்கள் பிரச்சினை எழுப்பினர்.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பது நிறுத்தப்படவில்லை. இதேபோல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த மீனவர்களை விடுவிக் கவும், மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென்று, கனிமொழி எழுப்பிய கோரிக்கையை மாநிலங் களவை தலைவர் ஏற்க மறுத்தார். இதையொட்டி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தலைமை செயலாளருக்கு 193ஆம் பிரிவின் கீழ் ஆ.ராசா ஒரு மனு அளித்தார்.

அதில், அரைகுறையாகவும், நடைமுறைக்கு ஒவ்வாத வகை யிலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த கூட்டுக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் நாடாளு மன்ற விதிமுறைகளில் வரை யறுக்கப்பட்டுள்ள நடைமுறை களுக்கு எதிராகவும், தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் முன்வைக்கப் பட்டுள்ளதால் இந்த அறிக்கை குறித்து அவையில் விரிவாக விவா திக்க வேண்டும் என்று கூறியுள் ளார்.

193ஆம் விதியின் கீழ் நடை பெறும் விவாதத்தில் வாக்கெடுப்பு கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. மாநிலங்களவை துணைத் தலைவரான பா.ஜனதா எம்.பி. ரவிசங்கர் பிரசாத்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான கூட்டுக்குழு அறிக்கை விவாத மின்றி ஏற்றுக் கொண்டது தவறு என்று குற்றம்சாட்டினார்.

Read more: http://viduthalai.in/page-5/71810.html#ixzz2nAxYQicR

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டவர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., ஆகலாம்; அர்ச்சகர் ஆகக்கூடாதா?
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளை போதாதா?
சிதம்பரத்தில் சி.பி.எம். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் முழக்கம்!

சிதம்பரம், டிச.11- சிதம்பரம் நடராஜன் கோயி லில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளையைத் தடுத்து நிறுத்த அக்கோயில் அரசின் கட்டுப் பாட்டில் தொடரவேண்டும் என்றார் சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.பால கிருஷ்ணன்.

சிதம்பரம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காந்திசிலை அருகில் 9.12.2013 திங் களன்று நகர சி.பி.எம். செயலாளர் தலைமையில் சிதம்பரம் நடராசர் கோயிலை அரசே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமென ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிதம் பரம் தொகுதி மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப் பினர் க.பாலகிருட்டிணன் சிறப்புரையாற்றினார். அவர் உரையில்...

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்றவுடன் வைக்கப்பட்ட உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய் சேர்ந்துள்ளது. இதற்கு முன் தீட்சிதர்கள் காட்டிய கணக்கு வெறும் நாற்பதாயிரம் ரூபாய் தான். மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான பணம் என்றால் கடந்த ஆண்டுகளில் எத்தனை கோடியிருக்கும். தற்பொழுது வெளிநாட்டைச் சார்ந்த ஒரு குடும்பம் மூன்றரைக் கோடி மதிப் புள்ள பவழ மாலை நன்கொடை கொடுத் துள்ளதாக செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது.

தற்பொழுது கோயில் நிர்வாக அதிகாரி நு.டீ. அது குறித்து தீட்சிதர்களுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளார். இச்செய்தி எப் படியோ வெளியே வந்துள்ளது. இச்செய்தி தெரியாமல் போயிருந்தால் என்னவாகியிருக் கும்? தீட்சிதர்கள் சார்பில் ஒரு மூட்டை சிமெண் டாவது செலவு செய்து பராமரிப்பு செய்துள் ளீர்களா? என்னென்ன நகைகள் உள்ளன என்ற பட்டியல் வெளியிட்டு இருக்கிறீர்களா?

கோடிக் கணக்கான சொத்துக்களை, பல ஏக்கர் நிலங் களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு தனிப்பட்ட குழுவிடம் இருப்பது சரியா? இந்த தீட்சிதர்கள் துரத்தி அடித்ததால்தானே வள்ளலார் வடலூருக்கு ஓடினார். தீட்சிதர்கள் அவரை விரட்ட வில்லை என்றால் இங்குதானே இருந்திருப்பார்.

பெருமாளைத் தரிசிக்க உள்ளே போக முடியுமா?

சிதம்பரம் கோயிலின் உள்ளே கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் சட்டப்படி தீட்சி தர்களுக்குச் சென்றுவிட்டால், நாங்கள் எங்கள் பெருமாள் கோயிலுக்குச் செல்வதை தீட்சிதர்கள் தடுத்தால், என்னசெய்வது என்று அவர்கள் கேட் கிறார்கள், தமிழில் பாடினால், ஆறுமுகசாமி ஓதுவார் தேவாரம் பாடினால் தீட்டாகிவிடு மென்றால், பிறகு எதற்குக் கோயில்? தமிழ்நாட் டில் தமிழுக்கு இடமில்லையென்றால் தமிழர் களுக்கு என்ன மரியாதை? யோக்கியதை?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் இவர்களுக்கு என்ன வந்தது? அதற்கும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு; சிதம்பரம் கோயில் விவகா ரத்திலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு. உச்ச நீதிமன்றம் என்ன இவர்களுக்கு மட்டும் சொந் தமா? ஒருவர் அய்.ஏ.எஸ். ஆகலாம்; அய்.பி.எஸ். ஆகலாம் ஆனால் அர்ச்சகர் ஆகமுடியாது என்றால், இந்த நிலை நீடிக்கவிடக் கூடாது.

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்பது என்பது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுதே நடைபெற்ற முயற்சி; தந்தை பெரியார் பிறந்த மண்ணில் - திராவிட இயக்கங்களின் ஆட்சியில் - சிதம்பரம் கோயிலை அரசு ஏற்கவில்லை என்றால், வேறு எந்த ஆட்சியில் நடைபெறும்?

தமிழக முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்து மதத்திற்கே தலைவர் என்ற காஞ்சி சங்கராச்சாரியையே சிறையில் அடைத்த உங்களுக்கு தீட்சிதர்களின் ஆணவத்தை அடக்குவது பெரிய வேலையில்லை.

ஒருவேளை தீர்ப்பு நமக்குச் சாதகமாக இல்லையென்றாலும்கூட தமிழக அரசின் முயற்சி தொடரவேண்டும். இனிமேலாவது சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும். வர்ணாசிரம தர்ம ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சிறப்புரையாற் றினார்.

நிகழ்ச்சியில் சி.பி.அய். நகர செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய லாளர் வ.க.செல்லப்பன், மாநில ப.க. அமைப்புச் செயலாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மற்றும் பலர் உரையாற்றினர்.

Read more: http://viduthalai.in/page-8/71847.html#ixzz2nAxxTrzW

தமிழ் ஓவியா said...


செய்திக்குப் பின்னால்.....

இந்தியாவில் ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4.21 கோடி என்று மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை இணை யமைச்சர் பரத்சிங் சோலங்கி தெரிவித்துள்ளார்.

(இதைச் சொல்லுவதற்கு ஓர் அமைச்சர் தேவையா? மனித உயிர் என்பது மிகவும் மலிவானது என்ற நினைப்பா?).

விபத்துகள்

ஒரு நாளில் மட்டும் ஒட்டன்சத்திரம் அருகில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் சாவு.

(ஒட்டன் சத்திரம் காவல் நிலையத்தில் விரைவாக யாகம் நடத்தப்படும் என்று எதிர் பார்க்கலாம்.)

மக்கள் நீதிமன்றம்

மாநில அரசுகளின் ஊழல்பற்றி விசாரிக்கும் மக்கள் நீதிமன்றம் (லோக் ஆயுக்தா) அமைக்கப் படுகிறது. ஆனால், குஜராத்தைப் பொறுத்தவரை 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதற்கான நீதிபதி நியமிக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி டி.பி.புச் நியமிக்கப்பட்டுள்ளார்.

(ஊழலற்ற உத்தமபுத்திரன் என்று மோடி பற்றி தம்பட்டம் அடித்தார்களே, அப்படிப் பட்டவர் ஆட்சியில் ஏன் இத்தனை ஆண்டு களாக இந்த நீதிமன்றம் செயல்படவில்லை? மடியில் கனமோ!)

கங்குலியாயிற்றே!

பாலியல் புகாரில் சிக்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து இன்னும் விலகவில்லை.

(கங்குலி ஆயிற்றே! மனுதர்மத்தில் இது குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கலாம்.)

அன்னா ஹசாரே!

நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, தனது சொந்த கிராமத்தில் அன்னா ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

(டில்லியில் இவர் நடத்திய போராட்டத்தின் லாபத்தை இன்னொருவர் அபகரித்துவிட்டாரே! ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்?).

அமெரிக்க இராணுவத்தில் சீக்கியருக்குத் தடை!

அமெரிக்க இராணுவத்தில் அமெரிக்கவாழ் சீக்கியர்களை மத நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, இராணுவப் பணிகளில் நிராகரிப்பது குறித்து சர்ச்சை அமெரிக்காவில் எழுந்துள்ளது.

(இந்தியாவில் காவல்துறையில் அய்யப்பன் வேடம் போட்டுக் கொண்டே அதிகாரிகள் முதற் கொண்டு பணி புரியவில்லையா? தலைப் பாகை மதச் சின்னம் என்றால், பூணூல் அணி கிறார்களே, அது எந்த சின்னம்?).

கிரிக்கெட்

ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் ஜாகீர்கானைச் சேர்த்திருக்கவேண்டும். - தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் நிட்னி.

(சர்மாக்கள் இருக்கும்போது ஜாகீர்கான்கள் கண்களில் படுவார்களா?)

Read more: http://viduthalai.in/e-paper/71865.html#ixzz2nGeXMptJ

தமிழ் ஓவியா said...


ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது!கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை மதுரவாயலில் கடந்த (2.12.2013) திங்களன்று கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் லாவன்யா, சதீஷ், கேமரா மேன்கள் விமல் காளிதாஸ் உட்பட ஏழு பேர் தனியார் பள்ளி வேன் ஓட்டுநர்களால் தாக்கப்பட்டனர். தாக்கியவர்களின்மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யக்கோரி போராட்டம் நடத்திய சக பத்திரிகையாளர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இரவு முழுவதும் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் காலை 9.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனராம்.

அதனை தொடர்ந்து ஆணையர் அலுவலகத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள்மீதே வழக்கு தொடர மதுரவாயல் காவல்துறையினர் முயற்சிப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது வரை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் கைது செய்யப்படவில்லை என்பது முறையல்ல - வருந்தத்தக்கதுமாகும்.

செய்தியாளர்கள் என்பவர்கள், ஒரு நாட்டுத் தூதுவர் போன்று, செய்திகளை சேகரித்து தருபவர்கள்; அவர்களை தாக்குவது அறம் அல்ல. தாக்கியோர்மீது உரிய நடவடிக்கை உடனடியாகத் தேவை.

இன்றேல் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் (ஊடக உலகம்) நிலைக்காது என்பதால் அனைவரும் கவலைப்பட வேண்டிய செய்தி.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
12.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/71858.html#ixzz2nGejzmQr

தமிழ் ஓவியா said...


வெளிச்சத்துக்கு வரும் சாமியார் ஆசாராம் மகனின் கேவலங்கள்


பாலியல் வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண்சாயி கடந்த வாரம் அரியானாவில் மாறுவேடத்தில் இருந்த போது கைதானான். பஞ்சாபியரைப்போல் வேடமிட்டு வெளிநாட் டிற்கு தப்பிச்செல்ல இருந்த நேரத்தில் அரியானா மாநில எல்லையில் பிடிபட்ட அவன் பல பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினேன் என்றும், அவர்கள் உண்மையைச் சொல்லாமலிருக்க படமெடுத்து மிரட்டினேன் என்றும் உண்மை யைக்கூறினான், இதை குஜராத் காவல் துறையினர் உறுதிசெய்துள்ளனர். சூரத் காவல்துறை ஆய்வாளர் ராகேஷ் அஸ்தனா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, கடந்த வாரம் வன் கொடுமை வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண் சாயியை காவல்துறை பொறுப்பில் எடுத்து விசாரித்தோம், அப்போது அவன் தன் மீதானகுற்றத்தை ஒப்புக்கொண்டான்

பல பெண்களிடம் உறவு

மேலும் அவர் வாக்குமூலத்தில் கூறியதாவது நான் என்னுடைய 8 பெண் சீடர்களுடன் தொடர்ந்து உடல் ரீதியான தொடர்பிலிருந்தேன், அதில் இருவருக்கு என் மூலமாக குழந்தை பிறந்தது, அதை மறைத்து பரோடாவைச் சேர்ந்த எனது சீடர் ஒருவருக்கு எனது தந்தையின் ஆலோசனைப்படி திருமணம் செய்து வைத்தேன். ஆசிரமத்திற்கு வருகைதரும் பல பெண்களிடம் உறவு வைத் துள்ளேன். என் தந்தையின் செல்வாக்கை பயன் படுத்தி அனைவரையும் மிரட்டி வைத்துவிடுவேன், சிலர் ஒன்றும் சொல்வதில்லை, ஆனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு புகார் கூறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றான்

மேலும் தலைமறைவாக இருந்த 58 நாட்கள் எங்கு தங்கி இருந்தேன், யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதையும் கூறினான். ஒடிசா அல்லது ஆந்திரா சென்று கடல் மார்க்கமாக சிங்கப்பூர் சென்று அங்கிருந்து கனடா செல்ல திட்டமிட்டதையும் அதற்கான ஏற்பாடுகள் செய்து தருபவர் தாமதமாகிக்கொண்டு வந்ததால் பஞ்சாப் சென்று தரை மார்க்கமாக பாகிஸ் தானுக்கு செல்லும் திட்டம் இருந்ததாக கூறினார்.

நீதிமன்றம் இன்று மாலை வரை காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இன்று மாலையோடு காவல்துறை பொறுப்பு முடிவதால் நாளை காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்.

Read more: http://viduthalai.in/e-paper/71867.html#ixzz2nGewp4UR

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு, அமெரிக்கா எச்சரிக்கை! கலைஞர் கருத்து


சென்னை டிச.12- ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசு பற்றி அமெரிக்கா கூறியுள்ள கருத்து குறித்து திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

கேள்வி :- இலங்கை அரசின் நடவடிக் கைகள் பற்றி காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட காமரூன் தெரிவித்த கருத்துகளை பல நாளேடுகளும் வெளியிட் டன. பிரான்ஸ் நாட்டின் கருத்தினைத் தாங்களே வெளியிட்டிருந்தீர்கள். தற் போது அமெரிக்க நாடு கூட இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- உண்மைதான்! இலங்கை உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் அட்டூழியம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விட்டால், சர்வதேச சமூகம் இனியும் பொறுமை யாக இருக் காது என்று தெற்காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் கூறி யிருக்கிறார்.

போர்க் குற்றங்கள் தொடர் பாக இலங்கை அரசின் நடவடிக்கையில், வரும் மார்ச் மாதத்துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால், அய்.நா. தலைமை யிலான விசாரணை கோருவோம் என்று இங்கிலாந்துப் பிரதமர் கூறிய கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தாலியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, இலங்கை ராணுவத்தின் மீதான போர்க் குற்றம் தொடர்பான வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்காக ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/71864.html#ixzz2nGf7NxId

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு. - (விடுதலை, 12.3.1965)

Read more: http://viduthalai.in/page-2/71870.html#ixzz2nGfMmDBY

தமிழ் ஓவியா said...


ஒரே நேரத்தில் 107 தமிழக மீனவர்கள் கைது!


கோடியக்கரை நடுக்கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள், 107 பேர்களை இலங்கை சிங்களக் கடற்படையினர் கைது செய்து, இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், கல்லார், சாமந்தான் பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, வேளங்கண்ணி பகுதிகளைச் சேர்ந்த 215 தமிழின மீனவர்கள் 32 விசைப் படகுகளில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி, சட்ட விரோதமாக, தமிழக மீனவர்களின் விசைப் படகுகளைச் சுற்றி வளைத்து, இந்த வேலையைச் செய்துள்ளனர்.

இந்திய அதிகாரிகள், ஏன் இந்திய அமைச்சர்கள் கூட பழுதடைந்த கிராமபோன் தட்டுப்போல, ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்லி வருவது வாடிக்கையும், விஷமம் கலந்த வேடிக்கையுமாகும்.

தமிழக மீனவர்கள் எல்லைகளைக் கடந்து, இலங்கை கடற்பகுதிக்குள் என்று மீன்பிடிப்ப தால்தான், இலங்கைக் கடற்படை சிறைப்பிடிக்கிறது, என்பது தான் பச்சைப் பொய்யான பல்லவியாகும். அது அப்பட்டமான பொய் என்பதற்கு நேற்று நடந்த நிகழ்வே போதுமான சாட்சியமாகும். நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களைத்தான் சிங்களக் கடற்படை சுற்றி வளைத்துச் சிறைபிடித் திருக்கிறது.

சர்வதேச சட்டப்படி கூட கடற்பகுதியிலிருந்து 12 மைல் தூரம் அந்த நாட்டுக்குச் சொந்தமானதாகும். கச்சத் தீவைப் பொறுத்தவரை இராமேசுவரத்தி லிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது; இலங்கைக் கடற்கரைப் பகுதியிலிருந்தோ 13 மைல் தூரத்தில் உள்ளது. இந்தச் சர்வதேச சட்டப்படி பார்த்தாலும்கூட கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்க இலங்கை மீனவர்களைவிட தமிழின மீனவர்களுக்குத்தான் உரிமை அதிகம் ஆகும்.

1983 முதல் இன்று வரை 600 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

எந்த அளவுக்கு, இந்தக் கொடுமை நீண்டு இருக்கிறது என்றால் - இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு, இழுத்துச் செல்லப் படுகிற தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி, இந்தியத் தேசியக் கொடியைக் கோவணமாகக் கட்டச் செய்து கெக்கலி கொட்டுகின்றனராம்.

பொதுவாக, பார்ப்பன ஏடுகளும் சரி, இந்திய அதிகாரிகளும் சரி, இந்திய மீனவர்கள் என்றுகூடக் குறிப்பிடுவதில்லை; மாறாக தமிழக மீனவர்கள் என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்.

நாம் இவ்வாறு சொன்னால், பிரிவினை வாடை வீசுகிறது என்று பேசும் அந்த 22 காரட் தேசிய வாதிகள், மீனவர்கள் பிரச்சினை என்று வரும் பொழுது மட்டும், அவர்களே பிரிவினைவாதிகள் ஆகி விடுகின்றனரே!

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கும், கொன்று குவித்துக் கொண்டி ருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு, இந்திய இராணுவம் பயிற்சி கொடுக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

இந்தியத் தேசியக் கொடியைக் கோவணமாகக் கட்டச் செய்கிறார்கள் என்ற நிலையில்கூட இந்திய அரசுக்குத் தார்மீக ரீதியான சினம் சீறி எழவில்லையே!

தமிழின மீனவர்கள் அல்லாமல் இந்தியாவின் சீக்கியர்களுக்கோ, வங்காளிகளுக்கோ இப்படி வன்கொடுமைகள் நடந்திருந்தால் என்ன நடந் திருக்கும் என்பதை பொதுவான நிலையில் உள்ள வர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும்.

தமிழ்நாடு அமைதி காக்கிறது; நிதானத்தை கடைபிடிக்கிறது, மத்திய அரசு உரியதைச் செய்யும் என்று நினைத்தால் அதனைத் தமிழர்களின் கோழைத்தனம் என்று இந்திய அரசு கருதுகிறது.

டாடா நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்கள், ஆழ்கடலில் மீன்பிடிக் கிறார்கள்; அவர்களிடத்தில் சிங்களக் கடற்படை வாலை ஆட்டுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆக ஊருக்கு இளைத்தவர்கள் தமிழக மீனவர்கள்தான் என்ற நிலை நீடிப்பது சரியானதல்ல. மிதிக்க மிதிக்கப் புழுவும் புலியாகும் என்பதை மறந்து விட வேண்டாம்!

தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதுதான்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியலைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, தமிழின உணர்வோடு, அல்லது மனிதநேய உணர்வோடு ஒன்று சேரட்டும் - ஒரு நொடியில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்து விடுமே!

Read more: http://viduthalai.in/page-2/71874.html#ixzz2nGfWSzpv

தமிழ் ஓவியா said...


பெரும் முதலாளிகள் வாங்கிய கடனை வசூலிப்பதில் பாராமுகம் - கல்விக் கடன் வாங்கும் மாணவர்களிடம் கிடுக்குப்பிடி ஏன்?


தி.மு.க தலைவர் கலைஞர் கேள்வி

சென்னை, டிச.12- கோடிக்கணக்கில் கடன் வாங்கும் முதலாளிகளிடம் இருந்து கடன் வசூலிப் பதில் பாராமுகம், கல்வி கடன் வாங்கும் மாணவர் களிடம் கெடுபிடி ஏன் என்ற நியாமான வினாவை தொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். விவரம் வருமாறு:-

கேள்வி :- ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் வங்கிகளிலே கடன் வாங்குபவர்களை கிட்டி கட்டி வசூலிக்கும் வங்கிகள், கோடிக் கணக்கிலே கடன் பெற்றவர்களைக் கண்டு கொள்வதில்லையாமே?

கலைஞர் :- மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக அவர்களின் புகைப்படங்களை வங்கியின் வாசலில் வைத்தது பற்றி நான் சில மாதங்களுக்கு முன்பு அது தவறு என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். 2008ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள வங்கிகளின் மொத்த வராக் கடன் 39 ஆயிரத்து 30 கோடி ரூபாய். 2012இல் இந்தத் தொகை 1 இலட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 2013 மார்ச் 31ஆம் தேதியன்று பொதுத் துறை வங்கிகளுக்கான மொத்த வராக் கடன் 1 இலட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய். இந்தக் கடன்களை பாக்கியாக வைத்திருப்பவர் களில் முக்கியமானவர்கள், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (விஜய் மல்லையா) 2,673 கோடி ரூபாய்; விஸ்டம் டைமன்ட்ஸ் அண்ட் ஜுவல்லரி நிறுவனம் 2,660 கோடி ரூபாய்; எலெக்ட்ரோ தேர்ம் இந்தியா நிறுவனம் 2,211 கோடி ரூபாய்; ஸும் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் 1,810 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் 1,732 கோடி ரூபாய்; எஸ். குமார்ஸ் நேஷன்வைடு லிமிட் 1,692 கோடி ரூபாய்; சூர்யா வினாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,446 கோடி ரூபாய்; கார்ப்பரேட் இஸ்பட் அலாய்ஸ் லிமிடெட் 1,360 கோடி ரூபாய்; போரவர் பிரிசியஸ் ஜுவல்லரி அண்ட் டைமன்ட்ஸ் 1,254 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்ஸ் லிமிட் 1,197 கோடி ரூபாய்; வருண் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,129 கோடி ரூபாய். டெக்கான் க்ரோனிக்கல் ஹோல் டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ள பாக்கி 700 கோடி ரூபாய். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்கிட் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் வைத்துள்ள கடன் பாக்கி 938 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறதாம். (குடியரசுத் தலைவருக்குத் தான் வெளிச்சம்) வங்கியில் ஒருவர் வாங்கிய கட னைத் திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்த வில்லை என்றால் கிரிமினல் குற்றமாகும். ஆனால் இத்தனை கோடி ரூபாய் வங்கிகளிலே கடன் பெற்று பாக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை இன்றி, சலுகை காட்டப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-3/71892.html#ixzz2nGfqYjhq

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு


இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு

ரோம், டிச.12- 2009ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் மீது நடந்தது இனப்படு கொலையே என நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இலங் கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணு வத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் போர் விதி முறை களை மீறி படுகொலை செய்யப்பட்டனர்.

எனவே, இலங்கை போர்க்குற்றம் புரிந்த தாகவும், விசாரணை நடத்த வலியுறுத்தியும் அய்.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றியது. இந்த நிலையில், இத்தாலி தலைநகர் ரோமை தலைமையகமாக கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்றது. மனித படுகொலையே என தீர்ப்பளித்தது. கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிகட்ட போர் தொடர்பாக சர்வதேச மனித உரிமை ஒன்றியம் மற்றும் இலங்கை சமாதானத்திற்கான அய்ரில் போரம் ஆகியவை கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன. அதைத் தொடர்ந்து நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது உண்மை. மேலும், இறுதிகட்ட போரின் போது மனித படுகொலை நடந் துள்ளது என்றும் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பாயத்தின் அறிக்கை சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப் படுவது வழக்கம். இருந்தாலும் வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ள அய்க்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மா நாட்டில் இந்த அறிக்கை சமர்பிக்கப்படு மா? என்பது பற்றி எதையும் உறுதியாக கூற முடியாது என மக்கள் தீர்ப்பாய பிரதி நிதிகள் இலங்கை வானொலிக்கு தெரிவித் துள்ளனர். மேலும், விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாகவோ அல் லது பயங்கரவாதி களாகவோ அடை யாளப்படுத்த முடியாது என்றும் கூறி யுள்ளனர்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் குறித்து சர்வதேச நீதிமன்றம் ஒன்று முதல் தடவையாக இது போன்ற தீர்ப்பளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: http://viduthalai.in/page-3/71897.html#ixzz2nGg2tVK7