Search This Blog

23.8.11

பெரியார் கலை இலக்கியத்திற்கு விரோதியா?

பெரியாருக்கு தமிழ் கலை-இலக்கியம் தெரியுமா?

இப்படிக் கேட்டவர்கள் இருக்கிறார்கள்
சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவார்ந்த விளக்கம்

பெரியாருக்கு தமிழ் தெரியுமா? கலை தெரியுமா? இலக்கியம் தெரியுமா? என்று இப்படிக் கேட்டவர்கள் இருக்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் 10.8.2011 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முதல் தொடர் சொற்பொழிவு வருமாறு:

தொடர் சொற்பொழிவு நிகழ்த்த காரணமென்ன?

அந்தக் காலத்தில் அடாது மழைபெய்தாலும் விடாது நாடகம் நடத்துவோம் என்று உறுதியாகச் சொல்லுவார்கள். அதுபோல நமது நிகழ்ச்சிகளை தள்ளிவைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தோம். இருந்தாலும் வழக்கமாக அப்படிச் செய்வதில்லை.

இன்று மாலை சென்னையிலே ஆங்காங்கு மழை பெய்துகொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையிலே அதையும் தாண்டி நம்முடைய தோழர்கள் நிறைய வந்திருக்கிறீர்கள்.

அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய கலை, இலக்கியச் சிந்தனைகள் என்ற இந்த தலைப்பிலே மூன்று நாள்கள் தொடர் சொற்பொழிவுகளாக நடைபெறுவதற்கு என்ன காரணம் என்று சொன்னால் பல நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கின்றபொழுது தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும் தந்தை பெரியார் அவர்களுடைய மொழி பற்றிய சிந்தனைகளைப் பற்றி பேசக் கூடிய வாய்ப்புக் கிடைத்து அது பதிவு செய்யப்பட்டு நூலாக வந்திருக்கிறது.

ஏனென்றால் பல பேர் மேலெழுந்த வாரியாக தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை சரியாகப் படிக்காமலோ, புரிந்து கொள்ளாமலோ அவர்கள் விமர்சிப்பது உண்டு. அதை எல்லாம் பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். ஆதாரபூர்வமாக இனிவரக்கூடிய தலைமுறையினரில் சிலர் திரிபுவாதம் செய்வது.

திரிபுவாதங்களுக்கு-பதில்

அய்யா அவர்களுக்கு ஏதோ தமிழே தெரியாது என்று சொல்லுவது போல. கருத்துகளை சரியாகப் படிக்காமலோ, புரிந்துகொள்ளாமலோ, அவர்கள் விமர்சிப்பது உண்டு. அதை எல்லாம் பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். ஆதாரபூர்வமாக இனிவரக்கூடிய தலைமுறையினரில் சிலர் திரிபு வாதம் செய்வது.

அய்யா அவர்களுக்கு ஏதோ தமிழே தெரியாது என்று சொல்லுவது போல. வெளியே சொல்லுவது அய்யா அவர்கள் கலை, மற்ற எல்லாவற்றிற்குமே கடுமையான எதிரிகள் என்று சொல்லுவதைப் போல ஒரு தவறான படத்தை வரைந்து காட்டுவது. நடைமுறையிலே இருக்கக்கூடாது என்பதற்காக அதை எந்த இடத்திலிருந்து யார் மறுக்க வேண்டுமோ யார் தெளிவு படுத்த வேண்டுமோ, அவர்கள் இந்தப் பணியை செய்திருக்கிறார்கள். என்று காட்டக்கூடிய வண்ணம் இந்த உரைகள் விரைவிலே நல்ல அளவுக்கு உரு கொண்டு பெரிய நூலாக வெளிவரும் என்பதை முதற்கண் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதிலே என்ன பயன் என்றால்... உட்கார்ந்து எழுதுவது என்பதிருக்கிறதே அதை எளிதாக எழுதிவிடலாம். ஆனால் ஒரே நேரத்திலே கேட்பது என்பது பதிவு செய்வது என்பது அதனுடைய பலன் ஒரு வகையாக இருக்கும். அதுவே ஒரு நூலாக வெளிவரும்பொழுது ஒருவர் மட்டும்தான் படிக்க முடியும். ஆனால் காதால் கேட்பது என்பதுகூட ஒருகுடும்பத்தில் பேசிய ஒலிநாடாவைப் போட்டு எல்லோருமே உட்கார்ந்து கேட்கலாம். அது மட்டுமல்ல இப்பொழுதெல்லாம் பல நாடுகளிலே நண்பர்கள் எல்லா இடங்களிலும் வாகனங்களை ஒட்டிக்கொண்டு செல்லும்பொழுதுகூட, காதிலே கேட்டுக்கொண்டு அல்லது போக்குவரத்து நெருக்கடி இருக்கும்பொழுதுகூட, வண்டிகள் நிறைய நிற்கும் பொழுதுகூட இதைக்கேட்டு அவர்கள் அந்த நேரத்தையும் பயனுள்ள வகையில் சங்கடம் இல்லாமல், சலிப்பு இல்லாமல் கேட்டுக்கொள்கிறார்கள்.

இப்படி ஒலி நாடாக்கள் மூலமாகவும், பேச்சு மூலமாகவும் வந்து பிறகு அது புத்தகமாக வருகிறபொழுது அது பல வகையான பயன் பாட்டைத் தருகிறது. மறு பயனையும் விளை விக்கிறது என்பதற்காகத்தான் இந்த உரைகளைத் தேர்ந்தெடுத்தோம்.

அருமை நண்பர்களே, நம்முடைய பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் சுட்டிக் காட்டியதைப் போல, தந்தை பெரியார் அவர்கள் ஒப்பற்ற சிந்தனையாளர், பேச்சாளர். எழுத்தாளர் எல்லாவற்றிற்கும் மேலாக கருத்தாளர். இவைகளுக்கு மேலே தனித்தன்மைகொண்ட ஒரு புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்கள் (கைதட்டல்).

தலைசிறந்த புரட்சியாளர் மனிதநேயப் பற்றாளர்

அப்படிப் புரட்சியாளராக இருக்கின்ற தந்தை பெரியார் அவர்கள் வெறும் புரட்சியாளராக இருப்பதற்கு என்ன அடித்தளம்? என்று யோசித்தோமாயானால் அவர்கள் ஒரு தலைசிறந்த மனிதநேயப் பற்றாளர்.

சுயமரியாதை இயக்கம் பிறந்ததற்கே அடித்தளம் இதுதான். ரூட்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த வேரிலிருந்து நாம் செல்வோமேயானால் அய்யா அவர்கள் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தி சொல்லும்பொழுது ஒரு செய்தியை மிக அற்புத மாகச் சொன்னார்கள். அய்யா அவர்கள் ஒரு நல்ல பகுத்தறிவுவாதி. ஒரு பூரண பகுத்தறிவுவாதி. அய்யா அவர்கள் ஒரு இலக்கணத்தை சொன்னது போல ரொம்ப அழகாக சொன்னார்கள்.

எனக்கு என்று இருக்கின்ற பற்று.....!

எனக்கு எந்த பற்றும் கிடையாது. அந்தப் பற்று, இந்தப் பற்று என்றெல்லாம் தனிப்பட்ட பற்று கிடையாது. மாறாக எனக்கு அறிவுப் பற்றுதான் உண்டு. வளர்ச்சிப்பற்றுதான் உண்டு. மனிதப் பற்றுதான் உண்டு என்று அழகாகச் சொல்லியி ருக்கின்றார்.

எனவே அய்யா அவர்களுடைய இயக்கமாக இருந்தாலும், அவருடைய இலட்சியங்கள் ஆனா லும் அவருடைய போராட்ட முறைகள் ஆனாலும், அவர்கள் எதை இலக்காக வைத்து எப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்என்று நினைத்தார்களோ அவை அத்தனையும் இதை மய்யப்படுத்தியதாகத்தான் இருந்தது.

இதை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும். ஆகவேதான் இந்த பின்னணியோடு எந்தத் தலைப்பைப்பற்றி பெரியார் அவர்கள் ஆராயும்பொழுது நாம் அதைத்தெரிந்துகொள்ள வேண்டும். சிந்திக்கவேண்டும்.

அய்யா அவர்கள் மனிதர்களின் பொழுது போக்கிற்கு அல்லது அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்கு அல்லது அறிவை வளர்ப்பதற்கு, ஒரு அற்புதமான பண்பாட்டு நிலையிலே பார்க்கும் பொழுது மிக முக்கியமானது கலைகளும், இலக்கியங்களும்.

பெரியார் கலை இலக்கியத்திற்கு விரோதியா?

எனவே பெரியார் இலக்கியத்திற்கு விரோதி அல்ல. கலைகளுக்கு விரோதி அல்ல. ஆனால் இன்றைக்கு இருப்பதை எல்லாம் தேடிப் பிடித்துப் பார்க்கும்பொழுது எல்லாம் குப்பைகளாக இருக்கிறதே எல்லாம் மனிதஅறிவு வளர்ச்சிக்குப் பயன்படவில்லையே. பயன்படாமல் போனால் போகிறது மனித அறிவு வளர்ச்சியை கொடுக்காமல் இருந்தால் பரவாயில்லையே அவ்வளவும் இது மனித சமுதாயத்தைக் கெடுக்கிறதே என்று பெரியார் கவலைப்பட்டார். வேதனைப்பட்டார்.

தனக்கு கெட்டபெயர், தனக்குப் பழி தனக்கு பலபேருடைய விமர்சனங்கள் அல்லது வசை மாரி பொழிவது இவை எல்லாம் வருவதற்கு எனக்குக் கவலை இல்லை.

ஒரு விஞ்ஞானி உலகம் உருண்டை என்று சொன்னவுடனே உலகம் தட்டை என்று சொன்ன வர்கள் அவரை சபித்தார்கள் என்பது வரலாறோ அதுபோலவே ஒரு சமூக விஞ்ஞானியாக நின்று உண்மைகளாக நிதர்சனமாக எக்ஸ்ரே கருவி உள்ளதை அப்படியே எடுத்துக்காட்டுவதைப் போல எடுத்துக்காட்டி அதன் மூலம் சரிப்படுத்தி ஒரு புதிய நோக்கோடு ஒரு புதிய போக்கோடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தந்தை பெரியார் அவர்கள் எதையும் அணுகுவார்கள். அப்படி அணுகும்பொழுது மிகுந்த ஆச்சரியமாக இருக்கும்.

பெரியாருக்கும் கலைக்கும் என்னய்யா சம்பந்தம்?

பெரியாருக்கும், கலைக்கும் என்னய்யா சம்பந்தம்? பெரியாருக்கு இலக்கியத்தில் என்ன தெரியும் என்று சிலர் கேட்டார்கள்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் இலக்கியம் பேசிய புலவர்கள் மொழி வல்லுநர்கள் இவர்கள் எல்லாம் சாதிக்காதது பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு இருக்கிறதே அது சாதாரணமானதல்ல.

எழுத்துச் சீர்திருத்தத்தின் மூலமாக இன்றைக்கு தமிழ்மொழி உலகமெல்லாம் பரவக்கூடிய அளவிற்கு (கைதட்டல்). அவை எளிமையாக்கு வதற்கு அதுவும் கணினி யுகத்திலே மிக அற்புதமாக முன்னோட்டமாக அய்யா அவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள்.

எத்தனையோ தமிழறிஞர்கள் இருந்தாலும்...

ஆனால் நம்முடைய நாட்டிலே எத்தனையோ மொழி வல்லுநர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அய்யா அவர்கள் அளவுக்கு சிந்திக்கவில்லை. தந்தை பெரியார் அவர்களோ தன்னைப் பற்றிச் சொல்லும் பொழுது தான் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவன் என்று சொல்லுகிறார்.


தந்தை பெரியார் அவர்கள் ஒரு பூரண பகுத்தறிவுவாதியாக இருந்து செய்லபட்டதன் விளைவாக இன்றைக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை இந்த நாட்டுப் புலவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் பொதுமக்களில் பலர் ஒப்புக்கொள்ளக்கூடிய அளவிற்கு அறிவு உலகம் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு இன்றைக்குத் தாராளமாக இருக்கிறது.

எதையும் பயன் கருதித்தான்...

பெரியார் அவர்களைப் பொறுத்தவரையிலே தெளிவாகச் சொல்லுவார்கள். எதையும் பயன்கருதித்தான் மனிதர்கள் ஏற்பதோ அல்லது தள்ளுவதோ இருக்க வேண்டும். பயனில்லாத ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு அதை நாம் உணர்ந்துகொண்டிருப்பதால் என்ன இலாபம்? அதனாலே என்ன பயன்? என்று தந்தை பெரியார் கேட்பார்.


பெரியார் அவர்களுக்கு இருந்த கோபம் என்ன? மனிதன் என்று சொல்லும்பொழுது நம்முடைய மக்கள் மானமும் அறிவும் அற்றவர்களாகத் திகழ்வர்.

திராவிட சமுதாயத்தைத் திருத்தி...

அய்யா அவர்களுடைய குறிக்கோள் அதுதானே. திராவிட சமுதாயத்தைத் திருத்தி மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே பணி. தன்னுடைய இலக்கு என்ன என்பதை பெரியார் சொல்லுகிறார். அதுதான் மனித நேயப்பணி. மற்றபணிகளுக்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பணிகளை செய்வதற்கு வேறு யாருமே கிடையாது.

மானத்தையும், அறிவையும் ஆகவேதான் அவர்கள் சொன்னார்கள். மானத் தையும், அறிவையும் கெடுப்பது கடவுளாக இருந்தாலும் சரி, மதமாக இருந்தாலும் சரி, ஜாதியாக இருந்தாலும் சரி, சடங்குகளாக இருந்தாலும் சரி, இலக்கியங்களாக இருந்தாலும் சரி, அரசியலாக நோய் தெரிகிறது. அறியாமையை விட ஒரு பெரிய நோய் உலகத்தில் வேறு ஏதாவது உண்டா? அந்த அறியாமையில் இரண்டு வகை உண்டு. அறியாமையைப் பொறுத்த வரையிலே எனக்குத் தெரியவில்லை என்பதிருக்கிறது பாருங்கள் அது அறியாமை. நான் அறியவில்லை என்று சொல்லுவது சரி. எனக்குத் தெரியவில்லை என்பது முதலில் தெரியவேண்டுமா இல்லையா? (சிரிப்பு-கைதட்டல்).

காட்டிக்கொள்ளும் பொழுதுதான் பிரச்சினையே!

இப்பொழுது பிரச்சினையே என்னவென்றால் அறியாமையில் இருக்கின்ற நாம் எல்லாம் அறிந்தவர்களைப்போல மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளும்பொழுதுதான் பிரச்சினை வருகிறது.

அறிந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் அல்லவா?, அதை நாம் ஒப்புக்கொள்வதற்கு மனமில்லை. மற்றவர்களிடையே திருத்தம் சொல்லும்பொழுது அதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? இல்லையா? என்பது ஒரு பக்கத்திலே இருக்கட்டும். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறதா? என்பது வேறு. பகுத்தறிவுவாதிகளாக இருக்கிற நம்மில் பலருக்குக் கூட, நன்றாக ஆழ்ந்து நாம் சிந்திப்போமேயானால் நாம் தப்புப் பண்ணினோம் என்பதை நாமே பல நேரங்களில் ஒப்புக்கொள்வதில்லையே. இன்றைக்கு சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினையே அதுதான்.

மனித சுபாவம்

நாம் தவறு பண்ணிவிட்டோம். அதில் நாம் திருந்த வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத் தால் அல்லது நமது நண்பர்களுக்கு சுட்டிக் காட்டினால் நம்மை வாழ்க்கை இணை நலத்திலே இருக்கிறவர்கள் சுட்டிக்காட்டினால் நாம் அதை ஏற்றுக்கொள்வதில்லையே.

காரணம் இல்லை, இல்லை என்று அதை நியாயப்படுத்துவதில் இறங்குகிறோம். காரணம் மனித சுபாவங்களில் இருக்கின்ற மிகப்பெரிய கெட்டகுணம் இது. தன் முனைப்பு ஈகோ.


உணருகிறவனே வளர முடியும்

தவறு வந்துவிட்டால் கூட, தான் செய்வதை நியாயப்படுத்த வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று ஒரு மனிதன் தவறை உணருகிறானோ அப்பொழுதுதான் வளரமுடியும்.


ஒரு சமூகமும்அப்படித்தான். ஒரு காலத்தில் மோசமாக இருந்தோம். உதாரணமாக கிரேக்கத்தில் ஆயிரம் கடவுள்கள் இருந்தன. மாஜி கடவுள்கள் தூக்கிப்போடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இன்றைக்கு அவைகளை நகைச்சுவைகக்குப் பயன்படுத்துகிறார்கள்.


இன்றைக்குக்கூட விடுதலை இதழில் வாழ்வியல் சிந்தனையில் எழுதியிருக்கின்றேன். அது மாதிரி கடவுள்கள் நகைச்சுவைக்குப் பயன்படு கின்றன. நம்முடைய நாட்டில் அப்படி இல்லையே.

இலக்கியத்தைக்கூட இலக்கியத்தை இலக்கியமாகக் கூடப் பார்க்கத் தயாராக இல்லை. கம்ப இராமாயணத்தைப் பற்றிச் சொன்னால் அது ஆண்டவனின் அவதாரம். கடவுள் சொன்னது சேக்கிழார் புராணமா? உலகெலாம்அவர்தான். அடி எடுத்துக்கொடுத்தார் அப்புறம் தான் வந்து உட்கார்ந்தார்.

இதை குற்றம் சொல்லுவதற்கு, விமர்சனம் செய்வதற்கு யாராவது முன்வருவார்களா?

------------------- தொடரும்........"விடுதலை” 23-8-2011

0 comments: