Search This Blog

8.8.11

ஆகஸ்ட் துரோகி ஆச்சாரியார் ராஜாஜி !


1942இல் இதே நாளில் (ஆகஸ்டு 8) வெள்ளையனே வெளியேறு (Quit India) போராட்டத்தை காங்கிரஸ் கை கொண்டது. நாடெங்கும் கலவரங்கள், தீ வைப்புகள், ரயில்கள் மீதான தாக்குதல்கள் என்று அங்கு இங்கு எனாதபடி நடந்தன.

சென்னையில் மட்டும் 26 இடங்களில் துப்பாக்கிச் சூடு; 39 பேர்கள் பலி!

வங்காளத்தின் சில பகுதிகளில் போட்டி அரசுகள் கூடப் பிரகடனப்படுத்தப்பட்டன. ஆனால் அவை நீடிக்கவில்லை. காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. சிறையிலிருந்து வெளிவந்த காந்தியார் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. ஜப்பான் பல நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்த கால கட்டம். அடுத்து அதன் குறி சென்னை, அந்த நேரத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக இந்தியாவில் தொடங்கப் பட்ட வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம் பிரிட்டிஷ் அரசை எரிச்சல் அடையச் செய்தது. அதன் விளைவு தான் கொடும் அடக்கு முறைகள்!

வைசிராய்க்குக் கெஞ்சிக் கூத்தாடிக் கடிதம் எழுத வேண்டிய நிலையைக் காந்தியாருக்கு ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் ராஜாஜி ஆகஸ்டுபோரை எதிர்த்தார் - ஏன் காங்கிரசிலிருந்தும் வெளியேறினார்; அப்பொழுதுதான் ஆகஸ்ட் துரோகி ஆச்சாரியார்! என்ற பட்டத்தைக் காங்கிரஸ்காரர்களே சூட்டினர்.

அப்படிப்பட்ட ஆகஸ்டுடுத் துரோகிக்குத்தான் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்ற கிரீடம் சூட்டப்பட்டது. பின்னர் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், வங்காள கவர்னராகவும், சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் அவரால் பவனி வர முடிந்தது என் றால் காரணம் அவர் முது கில் பூணூல் தொங்கியது தான்.

இந்தியாவில் யாரும் செய்யாத தியாகத்தைச் செய்த வ.உ.சிக்கு என்ன கிடைத்தது? வறுமைப் பாம்பு அல்லவா, அவரைத் தேடிப் போய்க் கடித்தது!

இந்த ஆகஸ்டு 8இல் இவற்றை எல்லாம் கண்டிப்பாகச் சிந்தித்துத்தானே ஆகவேண்டும்?

--------------- மயிலாடன் அவர்கள் 8-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: