Search This Blog

25.8.11

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? சித்திரைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

திருத்தணிக்குக் கிடைத்த தீனி!

தமிழர்களின் வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு துக்க தினம். நாகப்பட்டினத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகச் சரியாக ஈரோட்டுக் கண்ணாடி வழியாக தெளிவு படுத்தி விட்டார்,
பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு! என்று!

1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கூடி எடுத்த முடிவு. அதிலும் முதன்மைத் தமிழ்ப் பேரறிஞர்கள் தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர்சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோரும் அந்த அவையில சுடர்விட்ட தமிழ் ஆய்ந்த பெரும்புலிகள்! அறிவுக் கருவூலங்கள் அணி செய்த அந்த மிக உயர்ந்த மேடையிலே, அவையிலே எடுக்கப்பட்ட அரும்பெரும் முடிவுகள் மூன்று.

(1) திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.

(2) அதையே தமிழர் ஆண்டு எனக் கொள்வது

(3) திருவள்ளுவர் காலம் கி.மு.31

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் தமிழர் மாநாடு, அதன் தலைமை நாவலர் சோமசுந்தர பாரதியார்.
அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட தமிழினச் சிங்கங்கள் கூடின.

தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.

நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதுதான் தாமதம் - மாநாடே களை கட்டியது!

பெரியார் இப்படிக் கூறியதுதான் தாமதம். தமிழ்த் தென்றல் திரு.வி.க., எழுந்து என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்தச் சுயமரியாதை இயக்கத்தை - நான் தாயாக இருந்தேன்; அவர் தந்தையாக இருந்து வளர்த்தார். இன்று அதே சுயமரியாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்தப் பொங்கலை ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழகமே பாராட்டுதலை செய்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். அது முதற்கொண்டே பொங்கல் தமிழ்ப் புத்தாண்டினை ஆதரித்துக் கருத்துகள் எழுதப்பட ஆரம்பித்துவிட்டன.
என்றாலும் கருத்துருவில்தான் நின்றது. அரசு ஆணையாக, சட்டமாக அரும்பிட வில்லை.

இந்தத் தொடர்ச்சியின் தொடு புள்ளியாகத்தான் அய்ந்தாம் முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற மானமிகு கலைஞர் அவர்கள் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டிற்கான - தமிழர் பண்பாட்டுத் திசையில் பெருமைக்குரிய மணிமகுடமான சட்டத்தினை நிறைவேற்றினார். (29.1.2008)

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலகப் பந்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் பெருக்கத்தில் திளைத்தனர்.

நேற்று . . . நேற்று . . .

ஆரியப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழர் மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் வாள் வீச்சாகப் புதியதோர் சட்டம் பாய்ந்து விட்டது - ஆம், பாய்ந்தே விட்டது. தமிழ்நாட்டு சட்டம் 2011 என்ன சொல்லுகிறது?


சித்திரை முதல்நாள்தான் புத்தாண்டுப் பிறப்பாக மாற்றப்பட வேண்டும் என்று யாரோ கோரிக்கைகளை வைத்தார்களாம்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏதோ கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்களாம். யார் அந்தத் தொல்பொருள் அறிஞர்கள்? யார் அந்தப் பொது மக்கள்.

தினமணியின் முன்னாள் ஆசிரியரும், தொல்பொருள் ஆய்வாளருமான அய்ராவதம் மகாதேவன் என்ன சொல்லுகிறார்?


சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற்காலத்தில் அயனப் பிறப்பு நாள்கள் தலை கீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு நாளென்று கொண்டாட நேரிடும்.

இன்றைய பஞ்சாங்கங்கள் வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதைக் காலத்தின் நிர்ணயத்துக்கு விட்டுவிடலாம்.

என்றாரே அய்ராவதம் மகாதேவன் என்ற தொல்லியல் அறிஞர். (தினமணி: 26.1.2008)

அதே தினமணியில்தான் சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முதல் நாள் கட்டுரை வருகிறது. மறுநாளே சட்டப் பேரவையில் அது சட்டமாகிறது - என்னே கொடுமை!

முதல் அமைச்சர் உரையில் கூட விளக்கம் இல்லையே. வழக்கமான அரசியல் வாடை கலந்த பேச்சுக் கச்சேரி தானே நடந்திருக்கிறது.

கலைஞர் தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒரு சுயவிளம்பரத்திற்காகவாம்.

அப்படிப் பார்க்கப்போனால், தந்தை பெரியாரும், மறைமலை அடிகளார், திரு.வி.க., உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் தங்கள் சுயவிளம்பரத்திற்காகத் தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்களா?


நிதானம் வேண்டாமா? கலைஞரைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு நாட்டின் மரியாதைக்குரிய பெரும் தலைவர்களையெல்லாம் இழிவு படுத்தலாமா?

பிரபவ என்று தொடங்கி அட்சயஎன்று முடிவுறும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயருண்டா? எல்லாம் பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தைச் சார்ந்ததுதானே!

தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது இதனைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்வானா?

ஒரு சட்டம் போட்டு அதிகார பூர்வமாக தமிழன் தலை மீது பார்ப்பன கலாச்சாரத்தைச் சுமத்தி வைக்கும் அரசு - எப்படி அண்ணா அரசாகும்? திராவிட இயக்க அரசாகும்? அந்தப் போர்வையில் நடக்கும் ஆரிய ஆட்சி - பச்சையான பார்ப்பன ஆட்சி என்றுதானே பொருள்?

புத்த மதத்தில் ஆரியம் புகுந்த அவலம். திராவிட இயக்கத்துக்கும் நேர்ந்துவிட்டது என்றுதானே வரலாறு எழுதும்? என்னே அவலம்! என்னே அவலம்!!

இதற்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ ஒப்புதல் அளித்த உறுப்பினர்கள் எந்தக் கட்சியைத் சார்ந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் கருப்புப்புள்ளிகளுக்குச் சொந்தக்கார்களே! தமிழர் மீதான பண்பாட்டுப் படையெடுப்பை மீட்டெடுத்தார் கலைஞர். மீண்டும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பைப் புதுப்பித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்றுதானே வரலாறு கூறும். கலைஞரை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு, தனக்குத் தானே தமிழின விரோத வலை விரித்துச் சிக்கிக் கொள்ளலாமா?

2008 தி.மு.க. சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு சந்துரு வழங்கிய தீர்ப்பு என்ன?

சமஸ்கிருதத்தில் உள்ள அறுபது ஆண்டுகளின் பெயர்களைக் கூட தமிழில் மாற்ற குழு ஒன்று அமைக்கலாம் என்கிற அளவுக்கு நீதிபதி கூறியுள்ளார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவோ சமஸ்கிருதத்தில் அப்படியே இருக்க வேண்டும்; அதில் கை வைக்கக்கூடாது என்று ஒட்டாரம் செய்வது எந்த இன உணர்வின் அடிப்படையில்?

கேள்வி எழாதா? தமிழர்கள் கேட்கமாட்டார்களா?

நீதிபதியின் தீர்ப்பில் என்ன கூறப்பட்டது?

தமிழ் கால நெடுங்கணக்கில் 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று உள்ளது. இதில் 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதத்தில்தான் பெயர்கள் உள்ளன. இது எவ்வாறு ஏற்பட்டது என்பதை இதுவரை எந்த அறிஞரும் விளக்கவில்லை. எனவே, இந்த 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று தொடர்பான விவாதம் முடிவற்றதாக உள்ளது. தமிழர்கள் இப்போது வாழும் நிலப்பரப்பை பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் ஆண்டுள்ளனர். ஆட்சியாளர்களின் மத நம்பிக்கை சார்ந்த உத்தரவின் அடிப்படையில் அல்லது ஆட்சியாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சகாப்தம் என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது.

தமிழ்நாடு இதே போல பல சகாப்தங்களைக் கண்டுள்ளது.

1. சாலிவாகன சகாப்தம்

2. ஹிஜ்ஜிரி சகாப்தம்

3. கிறிஸ்துவ சகாப்தம்

4. சகா சகாப்தம் (திருவாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியில் நடைமுறையில் இருந்தது.)

அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த பிறகு, இப்போதைய அரசு திருவள்ளுவர் சகாப்தத்தை ஆண்டுக் கணக்காக ஏற்றுக் கொண்டுள்ளது. திருவள்ளுவரின் சகாப்தத்தின்படி இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது 2039 ஆம் ஆண்டு ஆகும். தமிழர்கள் இப்போதுதான் முதல் முறையாக தங்களுக்கென ஒரு சகாப்தம் உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட காலக் கணக்கு முறையை மாற்றி, மற்றொரு காலக் கணக்கு முறையை அரசு புகுத்துவது என்பது புதிதானதல்ல. அரசியல் சாசன வரம்பிற்குட்பட்டு மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை சரியாக உணர்ந்து கொள்ளப்படாத மத நம்பிக்கையின் அடிப்படையில் கேள்வி கேட்பது ஏற்கத் தக்கதல்ல. சமஸ்கிருதத்திலுள்ள 60 ஆண்டுகளின் பெயர்களையும் தமிழ் மொழியில் மாற்றுவது குறித்து பரிசீலித்து உரிய திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு வல்லுனர்கள் குழுவை அரசு நியமிக்கலாம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியிருக்கும்போது தமிழ் சகாப்தத்தை நடைமுறைப்படுத்தவும் அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதுதான் அர்த்தமாகும்.

தமிழ் சகாப்தம் தொடர்பான அறிவிப்பை, 2008ஆம் வருடத்தில் 2ஆவது சட்டமாக அரசு கொண்டு வந்துள்ளதில் சட்ட முரண்பாடோ அல்லது அரசியல் சாசனத்திற்கு புறம்பான நிலையோ எதுவுமே இல்லை. என்றாரே நீதியரசர்!

டிராபிக் ராமசாமி என்னும் பார்ப்பனரும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை எதிர்த்துப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.


மாண்பமை நீதியரசர்கள் முகோபாத்தியாயா மற்றும் வேணுகோபால் ஆகியோர் பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ் நாடு சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவிடம் ஒரு மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளனரே! (13-2-2008)

(இதற்கு மாறாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இப்பொழுது. சமச்சீர் கல்வியில் செய்த அதே குளறுபடி இதிலும் இருக்கத்தான் செய்கிறது.)

யாரோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், வானியல் அறிஞர்களும் சொன்னார்களாமே! இதைக் குறித்து தமிழ்ப் பேராசிரியர் தமிழண்ணல் என்ன சொல்லுகிறார்?

சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் தை முதல் நாளாகும் என்றல்லவா கூறியுள்ளார். இதனை மறுக்க முடியுமா?

இவ்வாண்டு நூற்றாண்டு காணும் டாக்டர் மு.வ. என்ன கூறுகிறார்?

இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடையெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.

சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

- டாக்டர் மு.வரதராசனார், (ஆதாரம் 1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்). அதே நேரத்தில் பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

கேள்வி: தை மாதத்தை புத்தாண்டின் முதல் மாதமாக அறிவித்திருக்கிறாரே முதல்வர் கலைஞர். இதனால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் யாவை?

பதில்: அவருக்கு ஒரு திருப்தி. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். கலைஞர் அறிவிக்கிற புதிய புத்தாண்டு தினத்தன்று அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். அவ்வளவுதான். வேண்டுமானால் கிடைத்தது சாக்கு என்று மற்றொரு சங்கமம் நிகழ்ச்சி நடத்தலாம் (துக்ளக் 30.1.2008)

ஃ ஃ ஃ அனைவருக்கும் வணக்கம். பொங்கல் வாழ்த்துகள் (ஒரு வாசகர் - புத்தாண்டு வாழ்த்து இல்லையா? என்று கேட்டார்) அதை மூன்று மாதம் கழித்துச் சொல்கிறேன். நாளைக்குத் திடீரென தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்தால் அதற்காக எங்களுக்குத் தீபாவளி வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நீங்கள் கூறினால், அதைச் செய்வதற்கு நான் தயாராக இல்லை.

எந்தப் பண்டிகை வழக்கமாக நம்பிக்கையின்படி கொண்டாடப்பட்டு வருகிறதோ, அந்தப் பண்டிகையைத் தான் நான் ஏற்றுக் கொள்கிறேனேயொழிய, இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வரோ, ஒரு அரசோ உத்தரவிட்டு எதையும் சொல்வதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோதமானது. கலாச்சாரத்திற்கு விரோதமானது. நான் இதை ஏற்கவில்லை.

(துக்ளக் ஆண்டு விழாவில் சோ. ராமசாமி - துக்ளக் 27.1.2010)

முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த சட்டத்தின் வாசகத்திலும், முதல் அமைச்சரின் அது தொடர்பான சட்டப் பேரவைப் பேச்சிலும் துக்ளக் சோ ராமசாமி எழுதி வந்த, பேசி வந்த அந்தப் பச்சையான வாடை அப்படியே வீசுகிறதே - இதன் பின்னணி என்ன?

தி.மு.க.வுக்குப் பெரியார் ராமசாமி ராஜகுரு என்றால் அதிமுகவுக்கு ராஜகுரு சோ ராமசாமியா?
தமிழர்கள் மத்தியில் இது மெள்ள மெள்ள இது பரவாதா? 1971 மீண்டும் திரும்பும் நிலை ஏற்படாதா?

அடுத்த கேள்விக்கு வருவோம்.

கேள்வி: ஜி.ஜெயராமன், கூந்தலூர்.

தமிழர்களின் புத்தாண்டு தைமுதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல்வர்?

பதில்: எல்லாம் கிடக்க கிழவியை மணையில் அமர்த்திய கதைதான்! (கல்கி 27.1.2008)

பார்ப்பனர்கள், பார்ப்பன ஊடகங்கள் பிசிறு சிறிதும் இல்லாமல், சுருதி பேதம் இல்லாமல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதைப் பூணூலை முறுக்கிக் கொண்டு சிலம்பம் ஆடுவதன் நோக்கம் என்ன?

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இதன் பின்னணியையும், முன்னணியையும் புரிந்து கொள்ளாதா?

இன உணர்வுக் கண்ணோட்டத்தில் இது ஒரு முக்கியமான கால கட்டமாகிவிட்டது.

வரும் ஞாயிறன்று திருத்தணியிலே கழக மாநாடு - சிலிர்த்தெழும் பேரணியுடன்!

அதன் எழுச்சிக்குத் தீனியைக் கொடுத்து விட்டனர்! அங்கு எடுக்கப்பட வேண்டிய முடிவுகளுக்கான உந்துதலை நமது தோள்களுக்குக் கொடுத்துவிட்டனர்!

இருப்புக் கொள்ளாமல் இளைஞர் உள்ளம் துடிப்பது தெரிகிறது!

மாணவர் பட்டாளம் அலை மோதுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மகளிர் பாசறை ஒரு சுற்றுப் பயணம் சென்றுஅவர்களைத் தயார்படுத்திவிட்டது.

நேற்று வந்த செய்தி - கூடுதல் விளம்பரங்களுக்கு வேலையில்லாமல் ஆக்கி விட்டது.

வடக்கு எல்லை திருத்தணி - வரலாற்றில் புதிய எல்லையை வரைய இருக்கிறது!

வாருங்கள் தோழர்களே!

வலிமையைக் காட்டுவோம்!
தை முதல்நாள் - கழகத்தின் முயற்சியும் கலைஞரின் செயல்பாடும்

சென்னை கலைவாணர் அரங்கில் 29-4-1990 அன்று நடந்த புரட்சிக் கவிஞர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முதல்வர் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு என்று சித்திரை முதல் நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்படும் அறுபது ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ்ச் சொல்லே அல்ல! நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த குழந்தைகள்தான் பிரபவ என்று தொடங்கி, அட்சய என்று முடியும் 60 குழந்தைகள் என்று கூறுவது தமிழர் பண்பாட்டிற்கும், பகுத்தறிவுக்கும் பொருத்தமற்ற அருவருப்பான கதையாகும். உலக மத்தியில் தமிழர்களைத் தலை குனிய வைக்கும் செய்தியாகும். தமிழுணர்வும், இனவுணர்வும் படைத்த கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் இக்கால கட்டத்திலேயே இந்த ஆபாசத்துக்கு விடை கொடுக்கப்பட்டு, தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டுமாய் புரட்சிக் கவிஞரின் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்தப் பொருத்தமான நாளில் கேட்டுக் கொள்கிறோம்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கலைஞர் அவர்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கிறார்கள்.


இவ்வாறு மானமிகு கி.வீரமணி அவர்கள்முதல்வர் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்து அவ்விழாவில் முதல்வர் கலைஞர் பேசும்போது கூறியதாவது:

தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் துவங்கவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எனது அருமை இளவல் வீரமணி இங்கே குறிப்பிட்டார்.

தளபதி வீரமணியின் சிந்தனையையும் சிந்தையில் தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும்.


தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கலைஞர் குறிப்பிட்டார்.

------------------”விடுதலை” 30-4-1990
*********************************************************************************
-----------------------”விடுதலை” 24-8-2011 இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு
இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் - வானநூல். கணியன் - வான நூல் வல்லவன். கணியர் - சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனை ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணி யார் என்பது இவரது இயற்பெயர்; கணி - சோதிட வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார். பதினெண்கீழ்க் கணக்கில் திணைமாலை நூற் றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர். சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கி னானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்து முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படு கிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).

குறுந்தொகையில், கோப்பெருஞ் சோழன் என்ற மன்னன் பாடிய பாட லொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் - இன்று பக்கம் என்பதையே - பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.

கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப் பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.

ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்து மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.

சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடி னர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக் கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத் தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறி குரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.

காதலர்கள் ஆறுகளிலும் அருவி களிலும் நீராடியும், பூங்காக்களில் விளை யாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.

மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா - காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.
அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

தமிழ் ஓவியா said...

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வட திசையாகச் சாய்ந்து செல்லும் நாள் - தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது - ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு - முன்பு யாடு என்றே வழங்கியது. இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவை யான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடு கிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர். அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு - மேட ராசியே முதலா வதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க் கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக் கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.

மேஷம் என்பதற்கு - முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண் டினைக் கணக் கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி - யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்க மெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் - இளவேனி லின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.

தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத் தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பி டுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்து விட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர் களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந்நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

----------------------------- தமிழண்ணல் எழுதிய கட்டுரை"விடுதலை” 26-8-2011

தமிழ் ஓவியா said...

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? சித்திரை முதல் நாளா?


சி. செல்லையா
தலைவர், உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கனடா

தமிழருக்குத் தொடராண்டு இல்லை. தற்பொழுது நாம் கடைப் பிடிப்பது சித்திரை மாதம் முதல் நாள். அத்துடன் தை முதல் நாளைப் புத் தாண்டு பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

மற்றைய இனத்த வர்களுக்கு புத்தாண்டு ஒன்றுதான். தமிழருக்கு மாத்திரம் ஏன் இரு ஆண்டுகள்? ஆகவே தமிழராகிய நாம் புத்தாண்டு தை முதல் நாளா! சித்திரை முதல் நாளா என்பதைத் திட்டவட்டமாக முடிவெடுத்து அதைப்பின்பற்ற வேண் டும்.

தற்பொழுது நாம் கொண்டாடும் புத்தாண்டு சாலிவாகனன் எனும் வட நாட்டு மன்னரால் ஏற்படுத்தப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இவர் கி.பி. 78 இல் இம்முறையை ஏற்படுத்தினார். அவ்வாண்டு பிரபவ விபவ பிரம் மோஸ்துத என்ற 60 ஆண்டுகள், சித்திரை தொடக்கம் சூழற்சி முறையில் வருகின்றன.

இவைகளில் ஒரு ஆண்டு கூட தமிழ்ப் பெயரோ அல்லது தமிழி னத்துடன் தொடர்புடையதாகவோ இல்லை. ஆகவே தான் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது முறையல்ல என்று தீர்மானித்து, 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் புலவர்கள் கூடி தமிழர்க்கென்று ஒரு தனி ஆண்டுதேவை என்று கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். ஆனால் அக்காலத்தில் பார்ப்பனர் மிகப் பலம் வாய்ந்தவர்களாக இருந்தமையால், அவர்களின் கடும் எதிர்ப்பால் இம்முடிவை ஒத்திவைக்க நேரிட்டது.

1971ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த பொழுது, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று, தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் நடைமுறைப் படுத்த ஆணை பிறப்பித்தார். ஆனால் பார்ப்பனரின் எதிர்ப்பு வலுவாக இருந்தா லும், பார்ப்பனர்களுக்கு அடிவருடிகளாக இருந்து செயற்பட்ட தமிழ் அரசியல்வாதி களின் செயற்பாடுகளாலும் இத்திட்டம் மக்கள் மத்தியில் ஒரு குழப்பநிலையே காணப்படுகிறது.

மீண்டும் கலைஞர் தற்பொழுது ஆட்சிக்கு வந்ததும், தான் ஒரு தமிழன், ஆகவே தான் 1971 ம் ஆண்டு ஆணை பிறப்பித்த தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை மீண்டும் ஆணை பிறப்பித்து, அதற்கான சட்டப் பேரவைக் கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா தொடங்கி வைத்த போது, தை முதல் நாளே தமிழ்த் திரு நாளாக கலைஞர் அறிவித்ததையும் தெரி வித்து, இது இன்றிலிருந்து நடை முறைப்படுத்தப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இது ஜெயலலிதாவிற்குப் பிடிக்கவில்லை. தான் ஒரு பிராமணப் பெண், தான் மீண்டும் தலைமைப் பதவிக்கு வரும்போது இச்சட்டத்தை மாற்றி அமைப்பேன் என்று முழக்கமிட்டுள்ளார். ஆனால் கலைஞர் கூறுகிறார், செம் மொழி வருமே என்று கருதியது உண்டா? வந்ததா இல்லையா? அதேபோல தமி ழாண்டு தை முதல் நாளே என்று வந்தே தீரும்.

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் களும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்துகின்றன.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்கு
தமிழ்ப் புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்குத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தையே முதற்றிங்கள்;
தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று, பல்லாயிரத்தாண்டாய்த்
தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்

புதுவருடப்பிறப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய நாள். சித்திரை மாதம் தமிழரின் தாயகங் களான தமிழ்நாடு, புதுவை, தமிழீழம் ஆகிய பிரதேசங்களில் சூரிய வெப்பம் அதிகரிக்கும் மாதமாக உள்ளது. தை மாதம் சூடும் குளிரும் குறைந்த மாதம். அத்துடன் விவசாயிகள் அறுவடை முடித்து விட்டால் தானியங்களைத் தங்களது வீட்டிற்குக் கொண்டு வந்து மனநிறைவுடன் குடும்பத்துடன் அனை வருடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது தை முதல் நாளே தமிழர் புத்தாண்டாக ஏற்று உலகத் தமிழினம் நடைமுறைப்படுத்துவது சாலச்சிறந்தது.

நன்றி: சுதந்திரன் வார இதழ், ஈழம்

தமிழ் ஓவியா said...

தை முதல் நாளைக் கொண்டாடுவோம் - புரோகிதர் கூட்டத்தை முறியடிப்போம்!


பெரியார் வழிவந்த நாம் பழைய பஞ்சாங்கத்தை ஏற்க முடியுமா? பூசுரர் கூட்டம், ஆரியர் கூட்டம் தமிழை அழிக்கத் துடிக்கிறது!

தை முதல் நாளைக் கொண்டாடுவோம் - புரோகிதர் கூட்டத்தை முறியடிப்போம்!

கலைஞரின் இனமான எழுச்சி முரசம்

சென்னை, ஆக. 27- தை முதல் நாள் தான் தமிழர் களின் புத்தாண்டு - அதனைச் சிறப்பாகக் கொண் டாடியே தீருவோம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

சென்னை தங்க காலையில் வியாழனன்று (25.8.2011) ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

இன்றைக்குத் தமிழ் நாட்டிலே பொங்கல் நாள் - தமிழர் திருநாள் - தைத் திருநாள்தான்; புத்தாண்டு பிறக்கும் நாள் என்று உறுதிபடத் தெரிவித்து, அதைக் கொண்டாடி வருகின்றோம். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றோம். அந்தக் குதூகலப் பொங்கலை குழந்தைகள், குமரிகள், கிழவிகள், கிழவர்கள், உழவர்கள், பாட்டாளிகள், தொழிலாளர்கள் அத்தனை பேரும் தமிழகத்திலே கொண்டாடுகின்ற நிலையை ஏற்படுத்தினோம். இப்போது ஜெய லலிதா அம்மையார் அறிக்கை விட்டிருக்கிறார். அதை அவருக்கு யார் சொன்னார்களோ தெரியாது அவரைச் சுற்றியிருப்பவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். (சிரிப்பு) அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு உள்ள கோபமெல்லாம், இந்தக் கருணாநிதியும் தி.மு.கழகத்தாரும் சேர்ந்து நம்முடைய ஆரியக் கலாச்சாரத்தை அழித்து விடுவார்கள் போலிருக் கிறதே என்று அம்மையாரிடத்திலே சொல்லி, தமிழ்ப் புத்தாண்டு - தைத் திங்கள் முதல் நாள் என்பதை மாற்ற வேண்டும் - அந்தச் சட்டத்தையே உடைத்தெறிய வேண்டும் என்று கூறி நேற்றைக்கு அறிவித்துவிட்டார்கள். இனிமேல், தை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டு நாளல்ல. பழைய வழக்கம்போல் மரபுப்படி, சித்திரை முதல்நாள்தான் தமிழர்களுடைய வருஷப்பிறப்பு நாள் என்று அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் அறிவிக்கும் போது கூட, நாங்கள் தமிழ்ப் புத்தாண்டைக் கொண் டாடுகிறோம். வேண்டுமானால், யாருக்காவது சித்திரை முதல் நாளைத்தான், ஆண்டுத் தொடக்க நாளாக கொண்டாட வேண்டும் என்று எண் ணினால், அவர்கள் கொண்டாடி விட்டுப் போகட் டும்! என்றுதான் சொன்னோம், கட்டாயப்படுத்த வில்லை. நினைவூட்டினோம். ஆனால், தமிழர்களு டைய ஆண்டு தைத் திங்கள் முதல் நாளிலிருந்து தொடங்குகிறது என்பதைச் சொன்னோம். தந்தை பெரியார் வழியிலே வந்த நாம்.

சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

இவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? அவர்கள் சொல்லுகின்ற அந்த ஆண்டுக் கணக்கை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? பெரியார் வழியிலே வந்த நாம் - பெரியார் சொல்வதற்காக அல்ல - நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த ஆண்டு எப்படிப் பிறந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள் என்றால், தேவலோகத்திலே - என்ன இது, திடீ ரென்று தேவலோகத்திற்குப் போகிறானே என்று எண்ணக் கூடாது - நடந்ததாக எழுதி வைக்கப் பட்டதைச் சொல்லுகிறேன்.

தமிழ் ஓவியா said...

இந்த வருஷங்கள் எப்படி வந்ததாம்? தேவ லோகத்தில் நடந்த ஒரு செயல். ஒரு நாள் கிருஷ்ணனைப் பார்த்து நகர்வலம் வந்த நாரதர் - கிருஷ்ணா எனக்கொரு ஆசை என்றார். என்ன ஆசை நாரதா என்றான் கிருஷ்ணன். ஒரு அழகான பெண்ணோடு நான் ஒரு நாளாவது வாழ வேண்டும் என்றார் நாரதர். கிருஷ்ணனுக்கு கோபம் வந்து விட்டது. நம்மைப் பார்த்து இப்படிக் கேட்கிறாரே என்று. இருந்தாலும் நாரதரிடம் நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன், நீ இந்த ஊரில் எல்லா வீடுகளுக்கும் போ, எந்த வீட்டிலேயாவது அழகான ஒரு பெண் உனக்காக இருந்தால், நீ அவளை ஏற்றுக் கொள்ளத் தடை இல்லை. அவள் உன்னோடு வருவாள், போ என்று அனுப்பி வைத்தார். நாரதர் போனார். ஒவ் வொரு வீட்டிலும் ஒரு புருஷனோடு பெண் இருந் தாளே தவிர தனியாக ஒரு பெண் இல்லை. திரும்பி வந்தார் நாரதர். ஏன் என்று கிருஷ்ணன் கேட்டார். எல்லா வீடுகளிலும் பெண் ஆணோடு தான் இருக்கிறாள், அதனால் எனக்கேற்ற பெண் எங்கும் கிடைக்கவில்லை என்றார். சரி என்னை என்னச் செய்யச் சொல்கிறாய் என்றான் கிருஷ்ணன். அதற்கு நாரதர் நானே பெண்ணாக ஆகி விடுகிறேன், நீ ஆணாக இருந்து என்னைச் சந்தோஷப்படுத்து என்று நாரதர் கிருஷ்ணனைக் கேட்கிறார். சரி, உன் இஷ்டப் படியே ஆகட்டும் என்று நாரதரைப் பெண்ணாக்கி நாரதர், நாரதியாகி - கிருஷ்ணன், நாரதர் இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருந்து அவர்கள் இருவருக்கும் அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம். கடவுளுடைய காதல் அல்லவா? அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் அறுபது பிள்ளைகள் பிறந்தன. அந்த அறுபது பிள்ளை களுக்கும் வைத்த பெயர்கள் தான் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்மகீ, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராஷச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாஷி, குரோதன, அட்சய என்ற அறுபது வருஷங்கள். (தலைவர் கலைஞர் அவர்கள் இவ்வாறு அறுபது ஆண்டுகளின் பெயர்களையும் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூடியிருந்த பல்லாயிரக்கணக் கானோர் பெருத்த ஆரவாரத்தோடு கையொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்).

நம்முடைய தலையிலே எழுதி வைத்தனர்

அது தான் தமிழா, உன்னுடைய ஆண்டுக் கணக்கு என்று நம்முடைய தலையிலே எழுதி வைத்தார்கள். தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். அறுபது ஆண்டுகள் ஒரே சக்கரமாகச் சுழலும்போது, நீ எந்த வருடம் பிறந்தாய் என்று என்னையே கேளுங்கள் - அவர்களுடைய கணக்குப் படி - நான் ரக்தாட்சி வருடம் பிறந்தேன் - அப்படி யென்றால் இப்போது எனக்கு என்ன வயது என்றால் அறுபது ஆண்டுகள் பெயர்கள் சுற்றிக் கொண்டே வரும் போது, அந்த வருடக் கணக்கு சரியாக வராது. அதே நேரத்தில் 1924ஆம் ஆண்டு பிறந்தேன் என்றால், ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக் கிட்டு ஆங்கிலக் கணக்குப்படி இப்போது 87 வயது என்று சரியான கணக்கைச் சொல்ல முடியும். ஆனால் அந்தக் கணக்கில் - புராணக் கணக்கில் - ஆண்டுகளைக் கணக்கிட்டால் - சரியான வயது கணக்கு வராது. எனவே தான் அந்தக் கணக்கையும் பார்த்து, அதையும் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டுமென்று நான் சொன்னேனே - மறைமலை அடிகள் தலைமை யில் 500 புலவர்கள் பச்சையப்பன் கல்லுரியிலே கூடி சிந்தித்துச் செயல்படுத்தினார்களே, அந்த ஆண்டுக்கணக்கை அதாவது தை முதல் நாளி லிருந்து ஆண்டுக்கணக்கைத் தொடங்க வேண்டும், தை முதல்நாள் தான் நம்முடைய தமிழர்களுடைய ஆண்டு பிறந்தநாள் என்று தொடங்க வேண்டு மென்று சொன்னார்களே, அதைக் கடைப்பிடித் திருக்க வேண்டும். நமது கலை - கலாச்சாரம் - மரபுகளுக்கு வந்துள்ள பெரிய ஆபத்து! அதைக் கடைப்பிடிக்காமல், சுற்றிச் சுற்றி நாம் மறுபடியும் இருந்த இடத்திற்கே வந்துவிடக் கூடிய அளவிற்குள்ள ஆண்டுகள் நமக்குத் தேவையில்லை என்பதற்காகத்தான் நான் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இனி தை முதல் நாள், நம்முடைய தமிழர் ஆண்டு பிறந்த நாள். அந்த நாளில் வெடிகளை வெடிப்போம் - அந்த நாளில் பலகாரங்கள் செய்து படைப்போம் - அந்த நாளில் வாழை மரங்களை வீட்டு வாசல்களில் நாட்டுவோம் - அந்த நாளில் தெருவில் கோலங்கள் இடுவோம் - வீட்டில் கோலங்கள் இடுவோம் - குளித்து முழுகி, அந்த நாளில் ஆடவரும், பெண் டிரும் குதூகலமாக இருப்போம் என்று தை பிறந்தநாள், வழி பிறந்தநாள் என்று கொண்டாடு வோம் என்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே அதை அறிவித்தோம்.

தமிழ் ஓவியா said...

பழைய பஞ்சாங்கங்கள்

நேற்றைய தினம் சட்டமன்றத்திலே என்ன அறி வித்திருக்கிறார்கள்? இனிமேல், இந்த ஆண்டுக் கணக்கு பழைய கணக்குதான். புதிய மரபை நாங்கள் கடைப்பிடிக்க முடியாது. பெரியார் என்ன? மறை மலையடிகள் என்ன? யாராக இருந்தால்தான் என்ன? அவர்கள் சொன்னால் நாங்கள் கேட்க மாட்டோம். நாங்கள் பழைய பஞ்சாங்கப்படிதான் நடப்போம் என்று பழைய பஞ்சாங்கத்தைத் தூக்கி தலையிலே வைத்துக் கொண்டு, நடக்க ஆரம்பித்திருக்கிறார் கள் என்றால், நான் கேட்கின்றேன். நம்முடைய கலை, கலாச்சாரம், மரபு இவைகளுக்கெல்லாம் எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்பதை தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு இது சாதாரண விஷயமாகத் தெரியலாம். எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்ச மாக செல்லரிப்பதைப்போல நம்முடைய செல்வங் களையெல்லாம், அறிவுச் செல்வங்களையெல்லாம், நம்முடைய கலைச் செல்வங்களையெல்லாம், நம்முடைய இதிகாசச் செல்வங்களையெல்லாம், நம்முடைய இலக்கியச் செல்வங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து அழித்து அவை களை இல்லாமலேயே புதைத்து, எதிர்காலத்திலே தமிழன் என்று ஒருவன் இருந்தான் என்று சொல்வ தற்கே ஆள் இல்லாமல் நம்முடைய சமுதாயம் போய்விடுமோ - இன்றைக்கு தி.மு.கழகம் இருக்கிற காரணத்தால் தான், பெரியார் பிறந்த காரணத் தால்தான், அவர் வழியிலே அண்ணா பணியாற்றிய காரணத்தால்தான், அவர் வழியிலே நாமெல்லாம் தொண்டாற்றிய காரணத்தால் தான் எதற்கும் அஞ்சாமல் இந்தியை எதிர்த்து, தமிழை வாழ வைத்து எதற்கும் அஞ்சாமல் பல உயிர்களைக் கூட தத்தம் செய்து நாம் தமிழை காப்பாற்றினோமே அந்தத் தமிழுக்கு இன்றல்ல, நான் இன்றைக்கு உயிரோடு இருக்கிறேன், நான் இல்லாத காலத் திலேகூட யாரும் அறியாமல், உங்களையெல்லாம் அறியாமல் தமிழ் மொழியை கொள்ளை கொண்டு போய்விடுவார்கள், தமிழை அழித்து விடுவார்கள்.

தமிழ் உணர்வை எந்த உலுத்தர்களும் அழித்து விடாமல் பாதுகாப்போம்! ஆகவே, இன்றைக்கு தமிழக சட்டமன்றத்திலே ஜனநாயகத்திற்கு மாத்திரம் ஆபத்தல்ல, நம்முடைய தமிழ் மொழிக்கே ஆபத்து. நாம் பேசுகின்ற தமிழ் இலக்கியத்திற்கே ஆபத்து, நாம் பேசுகின்ற, பாடு கின்ற தமிழ் இசைக்கே ஆபத்து, தமிழுக்கே ஆபத்து. அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்திட ஜனநாயகத்தை நாம் காப்பாற்றுவது முதலாவதாக, இரண்டாவதாக இருந்தாலும்கூட, முதலாவதாக இருக்க வேண்டி யது, இன்றைக்கு அழிக்கத் தலைப்பட்டிருக்கிறார் களே, நம்முடைய தமிழ் உணர்வை அந்த உணர்வை - நாம் காப்பாற்றித் தீர வேண்டும். அந்த உணர்வை எந்த உலுத்தர்களும் அழிக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன். பூசுரர்கள் கூட்டம், புரோகிதர்கள் கூட்டம், ஆரியக் கூட்டம், தமிழை அழிக்க பின்னுகின்ற வலைகளை யெல்லாம் அறுத்தெறிந்து தமிழ் வாழ, தமிழர் வாழ நாம் உயிரையும் கொடுக்கத் தயாராவோம் என்று கூறி உங்கள் அன்பான வரவேற்புக்கும் நீங்கள் காட்டுகின்ற எழுச்சிக்கும், இத்தகைய இளைஞர்கள் எல்லாம் இருக்கின்ற வரையில் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்கின்ற அந்த நம்பிக்கை யோடு உரையை நிறைவு செய்கிறேன். - இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

-------------------” விடுதலை” 27-8-2011