Search This Blog

15.8.11

சுதந்திர தினம் ஆகஸ்டு 14 ? ஆகஸ்டு 15?

இன்று ஆகஸ்டு 15 ஆம் நாள். இந்தியா டொமினியன் அந்தஸ்து பெற்ற நாள். ஆண்டு தோறும் மிட்டாய் கொடுத்து அதன்மூலம் மக்களுக்கு அல்வா கொடுத்துக் கொண்டிருக்கும் நாள்.

பாலாறும், தேனா றும் ஓடும் என்றனர். பாலாறு பாழாறாக ஆனதுதான் மிச்சம்.

இந்தச் சுதந்திர நாளில் மாநில முதல் அமைச்சர்கள் கொடியேற்றும் உரிமை கூட ஒரு கால கட்டத்தில் இருந்திடவில்லை. அதனை மாற்றி ஆகஸ்டு 15 இல் கொடியேற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்தான்.

இருக்கட்டும். ஆண்டு தோறும் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றி 9.30 மணிக்கு முடிவடைய வேண்டிய இந்த விழா 9.30 மணிக்கு இவ்வாண்டு மாற்றி அமைக்கப்பட்டது ஏன்?

காரணம் வெளிப்படை. இராகு காலமாம். அதை எங்கே கண்டு பிடித்தார்கள்? அமெரிக்காவில், ஜப்பானில் இல்லாத இராகு காலம் இங்கு மட்டும் எங்கேயிருந்து குதித்தது?

இராகு காலத்தில் பசியிருக்காதா? இராகு காலத்தில் விமானம், ரயில்கள் புறப்பட்டால் அவற்றில் ஏறமாட்டார்களா?
இராகு கால நேரம் நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் என்று நீதிபதியிடம் சொல்லுவார்களா?

வாராக் கடன் ஒன்று எதிர்பாராத விதமாக இராகு கால நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் நேரம் என் றால் நாளைக்கு வந்து கொடுங்கள் என்று கூறு வார்களா? (இதனைப் பல திருமண நிகழ்வுகளில் திரா விடர் கழகத் தலைவர் கூறு வதுண்டு).

இராகு கால நேரத்தில் நெஞ்சுவலி வந்தால் ஒன்றரை மணிநேரம் கழித்துத் தான் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வார்களா? இராகு காலத்தில் ஒரு குழந்தை கிணற்றில் விழுந்து விட்டால், காப்பாற்றக் கிணற்றில் குதிக்க மாட்டார்களா? (சிந்தனைச் சிற்பி சி.பி.சிற் றரசு, கி.வா.ஜெகன்னாதனைக் கேட்டு மடக்கினார்.)

இப்படி அதிகாரப் பூர்வமாக மூடத்தனமாக ஓர் அரசு நடந்து கொண்டால் நாட்டு மக்களின் கதி என்ன?

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51 A-h) கூறுகிறதே. இது ஆட்சி யில் உள்ளவர்களுக்குப் பொருந்தாதா?

பெரியாருக்கும் அண்ணாவுக்கும் தெரியாத இந்த இராகு காலம் திராவிட இயக்கப் போர்வையில், ஆட்சியில் இருப்பவர்களுக்கு மட்டும் புரிந்துவிட்டதோ!

இந்து மனப்பான்மை யாரிடம் எல்லாம் குடித்தனம் நடத்துகிறதோ அவர்கள் எல்லாம் இந்த மூட நம்பிக்கைப் பறவை நோய்க்கு ஆளாகத்தான் வேண்டும்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க முன் வந்தார்களே, அப்பொழுதே இந்தப் பிரச்சினை வெடித்து உலக மக்கள் நையாண்டி செய்யும் நிலை ஏற்பட்டதே! தொடக்கமே மூடத்தனத்தில் மூழ்கிதான்!

வெள்ளைக்காரன் ஆகஸ்டு 15 அன்று சுதந்திரம் கொடுக்க இருக்கின்றானே. அந்த நாள் - நேரம் அஷ்டமி யாயிற்றே! அஷ்டமியில் சுதந்திரம் வாங்கினால் கஷ்டமியில் அல்லவா முடியும் என்று ஆன்மிக உலக்கைக் கொழுந்துகள் அழுது புரண்டன.

நேரு கொஞ்சம் பகுத்தறிவுவாதிதான். இந்தக் கருத்தில் அவருக்கு உடன் பாடில்லை; ஆனால் சுற்றுக் கிரகங்கள் எல்லாம் அவாள் ஆயிற்றே! பூணூலைச் சவுக்காக்கிச் சுழற்றுவார்களே!

ஆங்கில அரசை அணுகிப்பார்த்தார்கள். அவர்கள் அசைந்து கொடுக் கவில்லை. சட்டம் நிறை வேற்றியாகி விட்டது. அதில் மாற்றமில்லை என்று கறாராகக் கூறிவிட்டனர்.

பார்ப்பனர்கள்தான் கெட்டிக் காரர்கள் ஆயிற்றே. உடனே ஒரு அந்தர்பல்டி அடித்து ஒரு சமாதானம் சொன்னார்களே பார்க்கலாம்!இந்துக்களுக்கு பொழுது விடிவது என்பது காலை 5 மணிக்குத்தான். வெள்ளைக்காரன் ஆகஸ்டு 15 நள்ளிரவில் 12 மணிக்கு சுதந்திரம் கொடுப்பதால், நமக்கு அது முதல்நாள்தான். (அதாவது ஆகஸ்டு 14 தான்). அஷ்டமி, கஷ்டமி ஒரு புடலங்காவும் கிடையாது என்று பல்டி அடித்தனர்.

அப்படியென்றால் ஆகஸ்டு 15 ஆம் நாளில் ஏன் சுதந்திர தினம் கொண் டாடப்படுகிறது? ஆகஸ்டு 14 அன்றுதானே கொண் டாடப்பட வேண்டும்?

ஹி . . . ஹி . . இம் மாதிரியெல்லாம் இடக்கு முடக்காகக் கேட்டால் நாங்கள் என்ன சொல்லுவது என்பதுதான் அவாளின் பதில்.

சரி. நல்ல நேரம் பார்த்துத்தான் சுதந்திரம் வாங்கப் பட்டதே. இரவில் வந்த சுதந்திரம் இன்னும் விடியவில்லையே, ஏன்? (புரட்சிக் கவிஞர் இப்படிக் கேட்டார்.)


---------------- மின்சாரம் அவர்கள் 15-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

குறிப்பு: திருச்சி மாநகராட்சியில் மேயர் சுஜாதா அம்மையார் நல்ல கொழுத்த இராகு காலத்தில் காலை 7.30 மணிக்குக் கொடியேற்றினார். கொடி மேலே ஏறாமல் சிக்கிக் கொண் டதோ!

0 comments: