Search This Blog

21.8.11

ஆரக்ஷன் படமும் ஆதிக்கவாதிகளின் வஞ்சகமும்நடிகர் அமிதாபச்சன், சயிப் அலிகான் உள்ளிட்டோர் நடித்த ஆரக்ஷன் என்ற இந்தித் திரைப்படம் வடமாநிலங்களில் குறிப்பாக, உத்தரப்பிரதேசம், ஆந்திரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டது.

தடையை எதிர்த்து திரைப்படத்தின் இயக்குநர் பிரகாஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்; தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

மேற்கண்ட மாநிலங்கள் ஏன் தடை செய்தன? என்பது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.

இந்தத் திரைப்படம் முழுவதும் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு முக்கியம் என்பதோடு, இடஒதுக்கீட்டுப் பிரச்சினையைக் கேலி, கிண்டலுக்கு உட்படுத்தியதுதான் எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாகும்.

நெற்றியில் 27 சதவிகித இடஒதுக்கீடு என்பதைப் பொறித்திருப்பது. அறை எண் 27 என்று காட்டுவது எல்லாம் மக்கள் தொகையில் பெரும்பாலரான பிற்படுத் தப்பட்ட மக்களை வீணாக வம்புக்கு இழுப்பதாகும்.

இன்றைக்கு நீதிமன்றங்களில் உயர் ஜாதிக்காரர்களுக்காகவும், ஆதிக்கவாதிகளுக்காகவும் வாதாடக் கூடிய புகழ் பெற்ற வழக்குரைஞர்கள் எதை எடுத்து வைக்கின்றனரோ, அதே கருத்துக்களைத் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் விதைக்கிறார்கள்.

பொதுவாக ஊடகங்கள், அவை பத்திரிகையாக இருந்தாலும் சரி மின்னணு வகையறாக்களாக இருந்தாலும் சரி - இவற்றில் பெரும்பாலும் உயர் ஜாதி பார்ப்பனர்கள் காலாட்டிக் கொண்டு திரிகிறார்கள்.

இவர்களின் கருத்துகளை மக்கள் கருத்துகளாக திணிக்கும் - மாற்றும் அபாயகரமான வேலையில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீடு உள்ளது என்பதுதான் உண்மை; ஆனால் இந்த இட ஒதுக்கீட்டால் பயன் அடைபவர்கள்கூட சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையில், அவர்களைக் குழப்பும் வேலையில் இந்த தீய சக்திகள் பூணூலை முறுக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளன.

கருத்துரிமை இல்லையா என்று கேட்கலாம். அதே கருத்துரிமை பகுத்தறிவாளர்களுக்குக் கூடத்தான் உண்டு; மூடநம்பிக்கைகளை எதிர்த்துக் கருத்துக்களைத் திரையில் உலவ விட்டால் இதே ஆதிக்கவாதிகள் கருத்துரிமை என்ற அடிப்படையில் ஆதரிப்பதுண்டா?


1989இல் ஒரே ஒரு கிராமத்திலே என்ற திரைப்படம் இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவரால் தயாரிக்கப்பட்டது. அந்தத் திரைப்படத்திலும் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்களையே இழிவுபடுத்திய வசனம் இடம் பெற்றது.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அன்றைய பிரதமர் வி.பி. சிங் அவர்கள் அறிவித்தபோது; அவர் ஆட்சியை பிஜேபி கவிழ்த்தது ஒருபுறம் இருக்கட்டும்; உயர்ஜாதிக்காரர்கள் வீதிக்கு வந்து போராடவில்லையா?

அப்பாவி இளைஞனைத் தீயில் தள்ளிக் கொன்று விட்டு, இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீக்குளித்தான் என்று ஏடுகளில் தலைப்புச் செய்தியாகப் போட வில்லையா?

இந்த இந்தித் திரைப்படத்தில் முக்கியமாக வைக்கப்படும் விவாதம் என்ன? திறந்த போட்டி என்பதே கூடாது என்பதுதான் மய்யப் புள்ளியாக உள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் தனித் தனியே இடஒதுக்கீட்டளவு உள்ள நிலையில், எதற்காகத் திறந்த போட்டியில் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற வினா எழுப்பப்படுகிறது.

இதன் பின்னணியில் உள்ள நயவஞ்சக நஞ்சு ஊற்று என்ன தெரியுமா? தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் உள்ள 50 சதவிகித இடஒதுக்கீடு போக 3 சதவிகிதம் உள்ள உயர் ஜாதியினருக்கு, பார்ப்பனர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பம் விடலாம் என்பதுதான்.

இன்னும் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் சட்டப்படி இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர்களாகிய உயர் ஜாதியினருக்குச் சந்தடி இல்லாமல் 50 விழுக்காடு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறார்கள்.

கருத்துரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறினாலும் இதுபோன்ற சட்ட விரோத, நியாய விரோத சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடவும் ஒடுக்கப்பட்ட மக்கள் நடவடிக்கைகளில் இறங்கவும் உரிமை உண்டே!

பெரும்பான்மை மக்களின் சமூகநீதிக்கு எதிராக நயவஞ்சகமாக ஒரு கூட்டம் சன்னமான சதி வேலைகளில் ஈடுபட்டால், இதனால் பாதிக்கப்படக் கூடிய ஒடுக்கப்பட்ட மக்களான பெரும்பான்மை மக்கள் கிளர்ந்து எழுந்து வீதிக்கு வந்து போராடினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாதா?

ஆதிக்கவாதிகளும், அவர்களுக்குச் சார்பாக உயிர் வைத்துக் கொண்டு இருக்கக்கூடிய ஊடகங்களும், மற்றும் நீதிமன்றங்களும் இந்த வகையில் சிந்திக்கட்டும்! சிந்திக்கட்டும்!!

----------------- “விடுதலை” தலையங்கம் 20-8-2011

0 comments: