Search This Blog

5.8.11

பக்தியின் பெயரால் தலையில் தேங்காய் உடைத்தால் ....

சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவர் டாக்டர் என். திலோத் தம்மாள் M.D., D.C.H; D.M (Neurology) M.Ph., (U.S.A)


பக்தியின் பெயரால், மத மூடநம்பிக்கை காரணமாக தலையில் தேங்காய் உடைப்பதுபற்றி கூறுகிறார்.

தேங்காயைக் கையால் உடைக்கும் போது எலும்பு, சதைக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படும். ஆனால் தேங் காயைத் தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும். அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். கராத்தே பயிற்சியில் கை யால் உடைப்பதுபோல் செய்யலாமே என்று கேட்கலாம். தலையில் உள்ள எலும்பு மட்டுமல்ல; உள்ளே மிகவும் மிருது வான ஜெல்லி மாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையைத் தூக்கிக் குலுக்கினால்கூட மூளை ஆடலாம்.

மூளையில் மூன்று நிலை உண்டு. முதலில் அதிர்ச்சி (Concussion) அடுத்து அடிபடுவதால் கண்ணிப்போகுதல் (Contusion) மூன்றாவது Nuronal Damage, Oxonal Damage.

ஆக்சோனல் என்பது தான் அடிப்படை செல். அதாவது நரம்புகள் சிதறிப் போவது.

குத்துச் சண்டையில் பத்து அடி அடித்தவுடன் பார்த்தால், அடி வாங்கி யவர் தள்ளாடி தள்ளாடிப் போய் குடிகாரன் மாதிரி மயக்கமாகி விடுவான். இந்த நிலை தலையில் தேங்காய் உடைக்கும் பொழுதுகூட நிகழலாம்.

இதன் காரணமாக ரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம். இது உடனேயும் நடக்கலாம். தாமதமாகவும் ரத்தக் கட்டி வரலாம். இது உயிருக்கே ஆபத்தில் முடியக் கூடும் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப் புகளுக்கும் பிற்காலத்தில் இழுத்துச் செல்லலாம் என்று பிரபல நரம்பியல் மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

இவ்வளவும் எதற்கு? சில கோயில்களில் தலையில் தேங்காய் உடைப்பது என்பது ஏதோ நேர்த்திக் கடனுக்காக மட்டுமே.

ஆனால் சில குறிப் பிட்ட கோயில்களில் தலையில் தேங்காய் உடைப்பது என்பது மட்டுமே வேண்டு தலையாகவும் பெரிய திருவிழாவாகவும் நடக்கிறது.

குறிப்பாக கரூரையடுத்த மேட்டு மகாதானபுரம் என்னும் ஊரில் உள்ள மகாலட்சுமி கோயிலுக்கு வயது 400-க்கு மேல்.

ஆண்டுதோறும் ஆடி 18 அன்று இக்கோயிலில் தலையில் தேங்காய் உடைப்பது என்பது மிக முக்கியமான விசேஷமாகும்.

இந்த ஆண்டும் நேற்று முதல் நாள் இந்தத் திருக் கூத்து நடந்திருக்கிறது. அதில் பல பேர்களின் மண்டையும் உடைந்து ரத்தம் பீறிட்டு இருக்கிறது.

அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட் டுள்ளனர்.

இதுதான் பக்தியா? பக்தி என்று வந்துவிட்டால் கிறுக்குத்தனமும் கூடவே வந்துவிடுமோ!

இதனை அரசு எப்படி அனுமதிக்கலாம்? மது ரையை அடுத்த பேரையில் குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் கொடுமை நடந்தது. அதற்குப் பெயர் குழி மாற்றுத் திருவிழாவாம். என்ன கொடுமையடா இது? அதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் குரல் கொடுத்தபின் அந்த விழா சட்டப்படி தடுத்து நிறுத்தப் பட்டது.

தலையில் தேங்காய் உடைப்பதும் அதுபோல தடுத்து நிறுத்தப்பட வேண்டாமா? மீறி செய் பவர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டாமா? பரீட்சையிருக்கலாம். ஆனால் அதுவே விஷப் பரீட்சையாக இருக்கக் கூடாதல்லவா!

பக்தி சமாச்சாரம் என்று அரசு பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது!

அடிக்கிற அடியில் உயிரே போய் விட்டால் அப்பொழுதுகூட மதவிவகாரம் என்று கண்டு கொள்ள மாட்டாதா அரசு?

இதனைக் கண்டிக்காமல் நமது நாட்டு ஊடகங்களும் குறிப்பாக தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பித் தொலைக்கின்றனவே!

இங்கு யாருக்குத் தான் பொறுப்பு - கவலை இருக்கிறது திராவிடர் கழகத்தைத் தவிர?

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக் கவசம் அணிய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கும் அரசு - இதிலும் கவனம் செலுத்த வேண்டாமா?

---------------"விடுதலை” 5-8-2011

0 comments: