Search This Blog

6.8.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -5

புளுகுணி சித்தர்களின் புராணம்!

நீதிக் கட்சியைப் பற்றி நிதான மின்றித் தூற்றித் திரியும் கும்பலுக்குத் தீர்க்கமான பதில்கள் நிச்சயம் உண்டு.

இன்று பார்ப்பனர் அல்லாதார் - குறிப்பாகத் தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து முன்னேற்றத் திசையில் அழுத்தமான அடிகளை எடுத்து வைக்கின்றனர் என் றால் அதற்கான அடித்தளத்தை உரு வாக்கிய பெரும் சரிதம் அதற்குண்டு.

அன்றைக்கு 1610 இல் மதுரையில் படித்த 10 ஆயிரம் மாணவர்களும் பார்ப்பனர்களே என்று ராபர்டி நொபிலி எழுதிய கடிதம் கூறுகிறது.

இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவ, மாணவிகள் 1,45,450 (89 விழுக்காடு) என்று சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திருவாசகம் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழாவில் (20-11-2010) குறிப் பிட்டாரே!

இந்தச் சாதனைக்கு முஷ்டியை உயர்த்தி உரிமை கொண்டாடும் உரிமை, பெருமை நீதிக்கட்சிக்கு உண்டே!

தனது ஆதிக்கத்தில் மண் விழுந்த தற்குத் மண் வெட்டியைத் தூக்கியது இந்த நீதிக்கட்சியல்லவா என்கிற ஆத்திரத்தில்தான் இன்றைக்குக் கூட துக்ளக் வட்டாரம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு மண்ணை வாரித் தூற்றக் கிளம்பியுள்ளது!

நீதிக் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அது பல தொகுதி களாக விரிவடையும் என்றாலும் சில முக்கிய சாதனைகளை பட்டியலிட வேண்டியது அவசியமே!

முதல் அமைச்சரவையின் சாதனையை (1920-1923) ஆணை எண் 116 வாயிலாக நீதிக்கட்சியே வெளி யிட்டுள்ளது.

* பொதுத் துறையில் தாழ்த்தப் பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன

* துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக் காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற் படுத்தப்பட்டன.

* தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

* தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட் டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

* தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டனர். பின்னர் தனி அலுவலர் என் பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

* தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என் னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது. * குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.

* கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25 - நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

* ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு -_ அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல் லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன. * தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.

* ஆதி திராவிடர்களுக்கு விவசாயத் திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

* அருப்புக் கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப் பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.

* மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

* கள்ளர் சமுதாய முன்னேற்றத் திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நிய மிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

* நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்து வோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

* பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

* தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளி களைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

* ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத் திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டு கோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

* குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப் படுத்த ஆணை வெளியிடுதல்.

* ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

* தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளு தல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

* மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப் பட்டன.

* சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

* கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட் டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

* உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.

* மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (ஷிவீஜீமீஸீபீ) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

* அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

* சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

* கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த் தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

அரசு ஆணைகளின் தொகுப்பு:

1. பெண்களுக்கு வாக்குரிமை அர சாணை எண். 108 நாள்: 10-05-1921

2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25-3-1922

3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20-5-1922.

4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக் கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21-6-1923.

5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர் களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11-2-1924; (ஆ) 1825 நாள்: 24-9-1924.

6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27-01-1925.

7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 20-5-1922. (ஆ) 1880 நாள் 15-9-1928

8. வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப் பட்ட ஆணை அரசாணை எண்.226 நாள் 27-2-1929

9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18-10-1929. பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு நீதிக் கட்சியில் அலை அலையாக நன்மைகள் நடந்தேறியிருக்க நீதிக் கட்சி ஆட்சியைத் தலித் மக்கள் புறக்கணிப்பு என்று (துக்ளக் 13-7-2011) தலைப்புக் கொடுத்து எழுதுகிறது என்றால் இவர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.

நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையின் காலம் (1923-1926). இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப் பட்ட இரு சட்டங்கள் முத்து முத்தானவை.

ஒன்று அறநிலையப் பாதுகாப்பு சட்டம் ஆகும்.

ஆண்டாண்டு காலமாகப் பார்ப் பனர்களின் அடுப்பங்கரையாக கோயில் கள் இருந்தன. கோயில் அர்ச்சகர்களைக் கோயில் பூனைகள் என்று கூறி ஒரு நூலையே எழுதியுள்ளார் கோவை கிழார். (1945).

கோயில் கொள்ளையைக் கட்டுப் படுத்தக் கொண்டு வரப்பட்டதுதான் இந்தச் சட்டம்.

பார்ப்பனர்கள் தலையில் அல்லவா கை வைத்து விட்டனர். விடுவார்களா? அதற்கு மேல் வாயை அகலப்படுத்த முடியாத அளவுக்கு அலறினார்கள்.

நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்க வில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்ட வனையே சட்டம் போட்டுக் கட்டுப் படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம் மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒருமனதாக எதிர்க்க வேண்டும்

- இப்படி பேசியவர் யார் தெரியுமா? பார்ப்பனர் குலத் திலகம் வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள்தான்.

சட்டசபையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது ஒவ்வொரு பார்ப்பன மெம்பரும் தொண்டை கிழிய கத்தினர் - நா வறண்டு போகும் அளவிற்குப் பேசித் தீர்த்தனர். சிலர் சாபமிடவும், சபிக்கவும் செய்தனர். சத்தியமூர்த்தி அய்யர் இட்ட கூச்சல் ஒரே காட்டுக் கூச்சல்தான். ஆங்கி லத்தில் பேசியும், கத்தியும் போதாது என்று சமஸ்கிருதத்திலும் பேசினார் - கத்தினார்.

சமஸ்கிருதத்தில் பேசியதும், கதறியதும் பலன் அளிக்க வில்லை என்று சமஸ்கிருதத்திலேயே பாடவும் செய்தனர்.

(கே.குமாரசாமி எழுதிய திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் வாழ்வும் தொண்டும் பக்கம் 73)

இதனையும் மீறி சட்டம் நிறை வேற்றப்பட்டது.

பார்ப்பனர்களாலேயே ராஜதந்திரி என்று ஒப்புக் கொள்ளப்பட்ட பனகல் அரசர் ( ராமராயநிங்கர்) மிகச் சாதுரியமாகக் காயை நகர்த்தி பார்ப்பனர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்.

அம்மசோதாவை நிறைவேற்றுவ தற்காக சிறப்பு உறுப்பினராக யாரை நியமித்தார் தெரியுமா? என்.கோபால் சாமி அய்யங்காரை. அந்தப்பதவிக்கான பெயர் எக்ஸ்பர்ட் மெம்பர் என்பதாகும். அடுத்துப் பாருங்கள்.

அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தத் துறையின் தலைவராக யாரை நியமித்தார் தெரியுமா? ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதாசிவ அய்யரை.

உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி மாதிரி பார்ப்பனர்கள் நெளிந்தனர். கோபால்சாமியை விஞ்சி விட்டாரே எக்ஸ்பர்ட் பனகல் அரசர்!

இத்தகைய சட்டத்தின் அவசியம் எத்தகையது என்பதற்கு சிதம்பரம் நடராசர் கோயில் சமாச்சாரத்தைத் தெரிந்து கொண்டால் போதுமே.

அந்தக் கோயில் தீட்சதர்களின் உடைமை என்றும் இந்து அறநிலை யத்துறையின் கீழ் வராது என்றும் சாதித்து வந்தனர்.

மாநில அரசு எவ்வளவோ முயன்றும் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கி விடுவார்கள் தீட்சதர்கள்.

2006 இல் மானமிகு கலைஞர் அவர் கள் முதலமைச்சராக வந்தபோதுதான் சிதம்பரம் கோயிலை வகையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். (இப்பொழுது கூட அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில்தான் உள்ளது? விடுவார்களா ருசி கண்ட பூனைகள்)

தீட்சதர்கள் கையிருப்பில் சிதம்பரம் கோயில் இருந்த போது அவர்கள் நீதிமன்றத்தில் காட்டிய கணக்கு என்ன தெரியுமா? ஆண்டு ஒன்றுக்கு வரவு ரூ 33,199 ; செலவு ரூ.33 ஆயிரம் மிச்சம் ரூ.199 என்று பேட்டா செருப்பு விலை போல சொன்னார்கள்.
அதே கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்த நிலையில் அதன் வருமானம் என்ன தெரியுமா? கோயிலின் நிருவாகத்தை ஏற்றுக் கொண்ட 18 மாதங்களில் நிதி வருவாய் 25 லட்சத்து 12 ஆயிரத்து485ரூபாய். (இதில் டாலர்கள், தங்கம், வெள்ளி காணிக்கைகள் அடங்காது.)

இப்படி எவ்வளவு காலமாகவோ கொள்ளை அடித்துக் கொண்டு உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தின் குரல் வளையை நெருக்கிய சட்டத்தை நீதிக் கட்சிதான் கொண்டு வந்தது. பார்ப்பனர்களுக்கு உள்ளபடியே கடவுளிடத்தில் பக்தி இருக்குமானால் கோயில் கொள்ளையர்களிடமிருந்து கோயில் சொத்துக்களை மீட்ட நீதிக்கட்சிக்கு ஒரு நெடும் சரணம் போட வேண்டுமே - போடுவார்களா?

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களை கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு தேவரடியார் (தேவடியாள் என்றுதான் வழக்கில் சொல்லுவார்கள்) என்று முத்திரை குத்தும் கேவலமான முறை ஒழித்துக்கட்டப் பட்டதும் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் அம்மையார்தான் இதற்கான மசோ தாவை முன்மொழிந்தார். அதற்கும் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு! - அதிலும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள்தான் அண்டங்காக்கைக் கூச்சல்.

தாசிகுலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்று கூடக் கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதைத் திரும்பச் செல்ல விரும்பு கிறேன். தாசிகள் கோயில் பணிக் கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரதநாட்டியக் கலை அழிந்து விடும். ஆண்டவன் கட்ட ளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயம் ஆகும்! - என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் தாவினார்.

தந்தை பெரியார் சவுக்கடி கொடுத்தது போல பதிலடி கொடுத்தார்.

ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இதுதான் ஆண்டவன் கட்டளையா? மற்றக் குலத்துப் பெண்களும் மாறி மாறிப் பொட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாதா? என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் படிக் கேட்டார்.

சட்டமன்றத்தில் ஒரு பெண்ணாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சத்தியமூர்த்தி அய்யரை நோக்கிப் போட்டார் கிடுக்கிப்பிடி! ரோஷம் இருந்தால் மனுஷன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகலாம்தான்!

தொன்றுதொட்டு உள்ள இந்த வழக்கத்திற்கு இது காறும் இருந்து வந்த எங்கள் குலப் பெண்கள் செய்தது போதும்; இனி உங்கள் குலப் பெண்கள் தேவர்க்கு அடியார்களாக இருந்து மோட்சப் பிராப்தி பெறலாமே! என்றாரே பார்க்கலாம். வாயாடி சத்தியமூர்த்தி, வாயைப் பொத்தி மவுன சாமியார் ஆகிவிட்டார்.

திருவாளர் சத்தியமூர்த்தி, இந்த மசோதாவை எதிர்த்துப் பேசும் போது சொன்ன ஒரு கருத்து மிகவும் கவனிக்கத் தக்கது. பார்ப்பனர்கள் எந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

இன்று தேவதாசி தொழிலை நிறுத்தினால் ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகர் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்து விடுவாரே! என்று ஆத்திரப்பட்டுப் பேசியிருக்கிறார். (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம், கலைஞர் ஆட்சியில் அதற்கான சட்டம் - அதனைத் தொடர்ந்தது.

69 சதவிகித அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் பயிற்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நடைமுறைப் படுத்தப்படாமை - இவற்றையும் நினைவில் கொள்க!) சத்தியமூர்த்தி அய்யரின் கணக்கு சரிதானே!

வகுப்புரிமைச் சட்டம்

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி.சுப்பராயன் முதல் அமைச்சராக இருந்த போதுதான் ( 4-12-1926 - 27-10-1930) எஸ். முத்தையா முதலியார் அவர்களின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தொடக்கத்தில் சுயராஜ்யக் கட்சி (காங்கிரசின்) ஆதரவுடன்தான் டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையை அமைத்தார். இந்த அமைச்சரவையில் ஆரோக்கியசாமி முதலியார், ரங்கநாத முதலியார் ஆகியோர் இரு அமைச் சர்கள்.

சைமன் கமிஷனை வரவேற்பதா, கூடாதா என்ற பிரச்சினையில் சுயராஜ்யக் கட்சிக்கும், முதல் அமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கும் கருத்து வேற்றுமை வெடிக்க, அமைச்சரவை யிலிருந்த இரு அமைச்சர்களும் பதவி விலகினர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிக்கட்சி டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு தந்த தால் ஆட்சி கவிழாமல் காப்பாற்றப் பட்டது. எஸ். முத்தையா முதலியாரும், எம்.ஆர். சேதுரத்தின அய்யரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆளும் கட்சியின் கொறாடாவானார். இந்த அமைச்சரவை பதவி ஏற்ற நாள் 1928 மார்ச் 16.

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற இந்த அமைச்சரவையில் தான் எஸ். முத்தையா முதலியார் அவர்களின் சிறப்பான முயற்சியால் முதல் இட ஒதுக்கீடு உத் தரவு (Communal G.O.) நிறைவேற்றப்பட் டது. நிறைவேற்றப்பட்ட நாள் 13-9_-1928 (அரசு ஆணை எண். பொது 744).

உண்மை இவ்வாறு இருக்க துக்ளக்கில் (13.-7-.2011) கம்யூனல் ஜி.ஓ. என்ற தலைப்பில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்த பேனாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பி உள்ள திருவாளர் லட்சுமி நாராயண அய்யர் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகாக காங்கிரசின் ஆதரவு பெற்ற சுப்பராயன் அமைச் சரவைதான் கம்யூனல் ஜி.ஓ. ஆணையை நிறைவேற்றியது என்று கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாமல் புளுகின்றார் என்றால், இந்தப் புளுகினிச் சித்தர் களைப் பற்றி என்ன எடை போட?

பொய்யும், புனைசுருட்டும் செய்தாவது நீதிக் கட்சியை - பார்ப்பனர் அல்லாத அமைப்பை, திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்திக் காட்ட வேண்டும் என்கிற மூர்க்கத் தனம்தானே இதன் பின்னணியில் இருக்கின்றது.

இதற்கும் ம.பொ.சி.யைத் வேறு துணைக்கழைத்துக் கொள்கிறார். ம.பொ.சி எழுதும் சரக்கின் பொய்மை யும் இதன் மூலம் அம்பலமாகிவிட்டது.

பனகல் அரசர் ஆட்சியின் சாதனைகளைப் பாரீர்!

கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு இருந்த கால கட்டம் அது; பனகல் அரசர் என்ன செய்தார்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார். (ராஜாஜி அவர்கள் 1937 இல் ஆட்சிக்கு வந்த போது இந்த முறையை நீக்கினார் என்பதைக் கவனித்துக் கொள்க!)

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சூழ்ச்சியைத் தவிடு பொடியாக்கினார் பனகல் அரசர்.

சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாத சம்பளம் ரூ. 300, தமிழ்ப் பேராசிரியர் கா. நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 - இந்த பேதத்தை நீக்கியது இவ்வாட்சியே.

1922 ஆம் ஆண்டு மார்ச்சு 25 முதல் பழந்தமிழ்க் குடிகளைப் பறையர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக் கப்படுவதை மாற்றி ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.


1923 இல் புதிய பல்கலைக் கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னா ளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக இது காரணமாயிற்று.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை இந்திய மயமாக்கிய பெருமையும் நீதிக்கட்சி முதல் அமைச்சர் பனகல் அரசரையே சாரும். அய்ரோப்பிய உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கிடையேதான் இந்தச் சட்டம் நிறைவேறியது.

வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியினர் என்று சொல்பவர்களின் பற்களை உடைக்கும் இந்தச் சட்டம். முதன் முதலில் சென்னையில் இந்திய மருத் துவக் கல்லூரியும் இப்பொழுதுதான் ஏற்படுத்தப் பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர தமிழ்ப் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது. சென்னை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு தமிழைக் கட்டாய பாடமாக்க மறுத்தது.

இதனை எதிர்த்து நீதிக் கட்சியைச் சேர்ந்த இராஜரத்தின முதலியார் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனம் தெரிவித்தார்.

நீதிக்கட்சி பிரமுகர்கள் ஆர். வெங் கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப் படுவதற்கு வழி வகுத்தனர். (தமிழ் நாட்டிலேயே இப்படி ஒரு நிலை!)

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் 1921 இல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார். இதற்காக சென்னை மாநகராட்சி பணம் செலவழிப்பதை நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாநில அரசே ஏற்றுக் கொண்டது. (அரசாணை எண். 1008 (L & M) நாள்:7-6-1922.

இதன் காரணமாக பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதி கரித்தது.

இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு. இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது. பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர்தான்.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சமஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக் கொடுக்கப்பட ஆவன செய்தார் ஜில்லா போர்டு தலைவராக இருந்த நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம்.

பார்ப்பனர்களுக்கு மட்டும் வடித்துக் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த ராஜா மடம், உரத்தநாடு விடுதிகளை மற்றவருக்கும் திறந்து விட்ட தகைமையும் அவரையே சாரும்.

இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த ஊ.பு.அ. சவுந் தரபாண்டியன், பேருந்துகளில் தாழ்த் தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆணையிட்டார்.

தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளிகளில் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் தாலுகா போர்டு தலைவராக இருந்த நீதிக் கட்சி முன்னணித் தலைவர்களுள் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார்.

நீதிக்கட்சியின் நேர்மையும், நீதிநெறியும், தொண்டுள்ளமும், நிர்வாகத் திறனும் வரலாற்றில் விஞ்சி நிற்கக்கூடியவை.

வெளிநாடுகளிலிருந்து வரும் பார்லிமெண்டரியன்கள் சென்னைக்கு வந்து நீதிக்கட்சி நடத்தும் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளைக்கண்டு வியந் தும் பாராட்டியும் உள்ளனர்.

இத்தகைய இயக்கத்தின் மீது சேறு வாரி இறைக்க முண்டாசு கட்டி முன் வருகின்றனர் என்றால் அது அவர்கள் நேர்மையற்ற- தன்னல வெறியுடைய ஆரியத் தன்மையைத்தான் அடை யாளம் காட்டும்.

---------------(வளரும்) --கலி.பூங்குன்றன் அவர்கள்"விடுதலை” ஞாயிறுமலர் 6-8-2011 இல் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

துக்ளக் . . . ளக் . . . ளக்!


கேள்வி: பெண்களுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம் என்று ஒரு ஆய்வு கூறுகிறதே?

பதில்: பெண்களுக்கு வேண்டாத வர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆய்வை நடத்தி, இந்த முடிவை வெளியிட்டு இருக்கிறார்கள். நியாய மாகப் பார்த்தால், மூன்று வேளை சாப்பாட்டிற்கு சுமார் ஒன்றரை மணி நேரம், மேக்கப் பெய்து கொள்வதற்கு சுமார் இரண்டு மணி நேரம், வம்பு தும்புகளை அறிந்து கொள்வதற்கு சுமார் ஒரு மணி நேரம், ஏதாவது வீட்டு வேலை இருந்தால், அதைக் கவனிக்க அரை மணி நேரம் போக - 19 மணி நேரம் பெண்களுக்கு தூக்கம் அவ சியம் என்று ஒரு ஆய்வு கூறினால், அது ஏற்கத்தக்கதாக இருக்கும். ஆண் களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். (துக்ளக் _3-.8.-2011)

இது மாதிரி எந்த வீட்டில் நடக் கிறதோ இல்லையோ துக்ளக் சோ ராமசாமி வீட்டில் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. எல்லாம் அனுபவம்தானே!

19 மணி நேரம் அவாள் வீட்டில் பெண்கள் தூங்குவதால் பாத்திரங்கள் கழுவுவது, வீடு கூட்டுவது, துணிகளைத் துவைப்பது, சமைப்பது, இத்தியாதி காரியங்களை திருவாளர் சோ ராமசாமியே அவர் வீட்டில் செய்து அதன் மூலம் பெண்களுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கிறார் என்று நம்புவோமாக! போதும் போதாதற்கு அவர்களின் லோகக் குரு ஜெயேந்திர சரஸ்வதியாருடன் மணிக் கணக்கில் பேசும் பெண்களும் அக்ரகாரத்தில்தானே இருக்கிறார்கள்.

அவையெல்லாம் சோவுக்குத் தெரியாதா என்ன? சும்மா சொல்லக்கூடாது.

இவற்றையெல்லாம் நேரில் அறிந்து வைத்திருப்பதால்தான் அவரால் இப்படி எல்லாம் எழுத முடிகிறது

கேள்வி: தேர்தலில் தோல்வி என்பது சகஜம்; போட்டிருக்கும் சட்டை கிழிந்து விடுவது போல என்கிறாரே, பேராசிரியர் அன்பழகன்?

பதில்: இந்த மாதிரியெல்லாம் தி.மு.க. தலைவர்கள் பேசினால் அவர் கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு நிற்பது போலத்தான் இருக்கும். ஒரு தேர்தல் தோல்விக்காகச் சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலைமைக்கு பகுத்தறிவுவாதிகள் தள்ளப்பட்டிருப்பது, அவர்களை பஃபூன்களின் அந்தஸ் திற்கு உயர்த்தி இருக்கிறது.

(இதுவும் துக்ளக்கில்தான் 3.-8.-2011)

சட்டை கிழிவது போல தேர்தலில் தோல்வி என்பதும் சகஜம்தான் என்ற தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் அவர்கள் கூறியதற்கு இப்படி வியாக்கியானம் செய்கிறார் சோ.

கிழிந்ததற்கும் கிழிப்பதற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாத கீழ்ப் பாக்கங்கள் ஏடுகளை நடத்திக் கொண்டு இருக்கின்றன.
தேர்தலில் தோற்றதால் அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்,- இனி பொதுவாழ்வில் ஈடுபடமாட்டேன் என்று பேராசிரியர் சொல்லவில்லையே!

1967 தேர்தலில் தமிழ்நாட்டில் தோற்றபோது, காலம் எல்லாம் பதவியில் ஒட்டிக் கொண்டு சுகம் அனுப வித்த திருவாளர் ஆர்.வெங்கட் ராமய்யர் என்ன சொன்னார்?

கட்சியை வளர்க்கப்போகிறேன் - களப்பணி ஆற்றப் போகிறேன் என்றா சொன்னார்? சங்கீதம் கேட்கப் போகிறேன் என்றுதானே சொன்னார். அந்த மாதிரி சொல்லவில்லையே தி.மு.க. பொதுச் செயலாளர்.

வாழ்நாளில் காங்கிரஸ் கட்சியில் ஈடுபட்டுப் பணியாற்றியதும் இல்லை; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது மில்லை. ஆனாலும் டாக்டர் இராதா கிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலை வராகவும், பிரமோஷனில் குடியரசுத் தலைவராகவும் ஆகவில்லையா?

பேராசிரியர் அன்பழகன் அப்படி அல்லவே! மாணவர் பருவத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு பிரச்சார கராக விளங்கி, தி.மு.க.விலும் தொடக்க முதல் இருந்து உழைத்து போராட்டங்களைச் சந்தித்துச் சிறைச் சாலைத் தண்டனைகளையும் அனுப வித்தவராயிற்றே! 90 அகவையில், 70 ஆண்டுகளுக்கு மேலான பொதுப் பணிக்குச் சொந்தக்காரராயிற்றே! பதவி என்பது கிழிந்துபோன சட்டை என்று அவர் சொல்லுவது அவரின் சிறப்பைக் காட்டக் கூடியது தான்.

உண்மையிலேயே பஃபூனாக இருக்கக் கூடிய ஒரு ஆள் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரைப் பார்த்து பஃபூன் என்று எழுதுவது எல்லாம் அவாளின் யோக்கியதை யைத்தான் புலப்படுத்தும்.
-----”விடுதலை” ஞாயிறுமலர் 6-8-2011