Search This Blog

2.8.11

பெரியாரின் சிந்தனை முத்துக்கள்


தொண்டு ஏந்தியவர்கள், துண்டு ஏந்தவும் தயங்காதீர்!

தென் கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ் என்று அய்.நா. யுனெஸ்கோ மன்றம் பாராட்டி தந்தை பெரியார் அவர்களுக்கு விருது வழங்கியபோது. அது எவ்வளவு பொருத்தமானது, துல்லியமானது என்பதை தந்தை பெரியார் அவர்களது எழுத்துக்கள், பேச்சுகளை குடிஅரசு களஞ்சியத்தில் படிக்கும்போது மிகவும் தெளிவாக, புரியாதவர்களுக்கும் புரியும்.

இங்கு சுட்டிக்காட்டப்படும் ஒரு அருமையான பகுதி 1944 குடிஅரசு ஏட்டில் வெளியான அய்யா அவர்களது சொற்பொழிவிலிருந்த சிந்தனை முத்துக்கள் - வாழ்வியல் சிந்தனை வீச்சுகள்!

"வாலிபர்களே, இளைஞர்களே, நீங்கள் முதலில் உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தைரியமாய்ப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு, உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும். ஒருவன் தன் சொந்த காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத் தொண்டு என்று வந்துவிட்டால், இவை இரண்டையும் லட்சியம் செய்யக் கூடாது. இதை மானத்திலும், காலத்திலும் கவலை கொண்ட திருவள்ளுவரே கூறியுள்ளார். மனத்துள்ளே குற்றம் குறை இருந்தால், வெளியில் செய்யும் காரியமும் குறையுடையதாகவே இருக்கும் என்பதை நான் விஞ்ஞான (சயின்ஸ்) முறைப்படி கூறுகிறேன். ஆகையினால் வாலிபத் தோழர்களே, உண்மை, ஒழுக்கம், தைரியம் ஆகிய மூன்றையும் நீங்கள் தொண்டு காரியத்திற்குத் துணிவுடன் நடத்தினீர்களேயா னால் வெற்றி உங்களை வந்து பணியும், உங்கள் எதிரிகள் நாசமாவார்கள்!" - எவ் வளவு சிறப்பான அறிவுரைக் கொத்து பார்த்தீர்களா இளைஞர்களே, வாலிபர்களே!

பொது வாழ்க்கை என்பதற்கும், தனி வாழ்க்கை என்பதற்கும் உள்ள வேறு பாட்டினை எவ்வளவு அருமையாக ஒரு வாழ்வியல் பேராசிரியராக நின்று தந்தை பெரியார் விளக்குகிறார் பாருங்கள்!

தனக்கென பிறரிடம் உதவி கேட்டால் அது யாசகம், பிச்சை மிகவும் கேவலமாகக் கருதப்படும் இழி தன்மை.

ஆனால் அதே நபர், ஒரு பொதுக் காரியத்திற்காக, ஒரு பள்ளிக்கூடம் கட்டு வதற்கு, மருத்துவமனை கட்டுவதற்கு, பொது மக்களுக்குப் பயன்படும் நூலகம் - படிப்பகம் கட்டுவதற்கு பிறரிடம் சென்று நன்கொடை திரட்டினால் அது யாசகம் ஆகாது; பிச்சை ஆகாது! மாறாக தொண்டறம் ஆகும்! இதைச் செய்யக்கூட கால, நேரம் பார்க்க வேண்டாம் என்கிற வள்ளுவர் குறளை மிக அருமையாக விளக்கியுள்ளார் தந்தை பெரியார்!

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும் (குறள் - 1028)

இதை ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர் நிலையில் நின்று குறளுக்கு விளக்கம் தருகிறார் வள்ளுவரை புலவர்களின் சிறைக் கூடத்திலிருந்து விடுதலை செய்த தந்தை பெரியார் அவர்கள்!

மானத்திலும், காலத்திலும் கவலை கொண்ட வள்ளுவர் என்று விளக்கி திருவள்ளுவர், மானம் பற்றியும், காலத்தின் அருமை பற்றியும் மிகுதியும் கவலை கொண்டு வலியுறுத்திய மாமனிதர். அவரே அதற்குரிய தன்மையும், அவசியமும் நிலைக்கேற்ப மாறுபடுகின்றது என்று கூறுகிற அழகை பெரியார் எப்படி விளக்கிய தோடு, வாழ்ந்தும் காட்டினார் பார்த்தீர்களா?

எனவே பொதுப் பணி - பொதுத் தொண்டுக்கு வரும் நண்பர்கள் - குறிப்பாக இளைஞர்கள் வெட்கப்படா தீர்கள் - கூச்சப்படாதீர்கள் பிறரிடம் கேட்கப் பெறுவதற்கும், ஒன்றை உருவாக்குவதற்கும்!

தொண்டை ஏந்தியவர்கள், துண்டையும் ஏந்த வெட்கப்படாதீர்கள்! காலம் கருதிடச் சொன்னவர் இதற்கு விதி விலக்கு தந்துள்ளார் - மறவாதீர்!

------------------”வாழ்வியல் சிந்தனைகள்” பகுதியில் தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதியது “விடுதலை” 2-8-2011

0 comments: