Search This Blog

28.1.13

மதுவிலக்கு நாடகம் - பெரியார்



தேசியத்தின் பேரால் ஏதாவது ஒரு நாடகம் நாட்டில் நடந்து கொண்டி ருக்கா விட்டால் மக்கள் காங்கிரசையும், காந்தியையும் அடியோடு மறந்து விடுகின்றார்கள்.

ஆதலால் தேசீய தொழில்காரர்களுக்கு ஏதாவது ஒரு வேலை நடத்திக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேற்பட்டிருக்கின்றது. அதற்கு ஏற்றாப்போல் காங்கிரஸ் பக்தர்களுக்கும் பொதுஜனங்களின் காணிக்கைப் பணம் தாராளமாய் இருக்கின்றது. அதற்கேற்றாப்போல் வேலையில்லாத் தொந்திரவால் கஷ்டப்படும் வாலிபர்களும் நாட்டில் ஏராளமாய் இருக்கின் றார்கள். ஆகவே இவ்விரண்டும் சேர்ந்தால் பெட்றோல் எண்ணைக்கும், நெருப்புக்கும் உள்ள சம்மந்தம் போல் ஒன்றுக்கொன்று வெகு சுலபமான சம்மந்தம் ஏற்பட்டு விடுகின்றது.

ஆகையால் இவை இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன வேலை செய்யலாம் என்று பார்த்தால் பொது ஜனங்கள் சீக்கிரம் ஏமாறுவதற்கு அனுகூலமாக கள்ளுக்கடை மறியல்கள் தான் தென்படுகின்றது. ஆகவே இதன் மீது தலைவர்கள் என்பவர்கள் வாலிபர்களை ஏவி விடுவதால் ஏதாவது ஒரு கலகம் ஏற்படுகின்றது. அக்கலகத்தை பிரமாதப்படுத்தி விளம்பரம் செய்வதே பெரிய தேசீயப் பிரசாரமாகக் கருதப்பட்டு விடுகின்றது. இந்த முறையிலேயே மதுவிலக்கு நாடகம் நடைபெறுகின்றது.

விளம்பரக்காரர்களும், ஸ்தல ஸ்தாபனம், சட்டசபை, முதலியவை களில் ஸ்தானம் பெறக் காத்துக்கொண்டிருக்கின்றவர்களும் இந்த நாடகத் திற்கு சில சமயங்களில் பாத்திரங்களாய் இருக்கவேண்டியவர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். இதன்பயன்களை நாடகக் கம்பெனி சொந்தக்காரர் களாகிய தலைவர்கள் என்பவர்களே அடைகின்றார்கள்.

உதாரணமாக திருப்பூரில் நடந்த மறியலில் அடித்தவர்களும், அடிப் பட்டவர்களும், அதாவது அடித்ததாகக் கெட்டபேர் வாங்கினவர்களும், அடிபட்டு அவஸ்தைபட்டதாகச் சொல்லப்பட்டவர்களும் ஒரே ஊர்க்காரர், ஒரே கூட்டத்தார்கள், ஒரே ஜாதி சொந்தக்காரர்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இதன் பலன் பெருமை அசோசியேட் பிரஸ், பிரீபிரஸ் சேதிப் பெருமை சமாதானம் செய்துவந்த பெருமை முதலாகிய கௌரவங்க ளெல்லாம் உயர்திரு. சி. ராஜகோபாலச்சாரியார் அவர்களது “பாத சன்னி தானத்திற்கு”ப் போய்ச் சேரவேண்டியதாகி விட்டது.

நம்மவர்கள் மூடத்தனமாக நடந்து, பட்டதுதான் பயன். ஒரு சமயம் யாராவது கொஞ்சம் இவ்வித இயக்கத்தால் பிழைக்க வேண்டியவர்களல்லா தவர்கள் ஒருவர், இருவர் இதில் சேர்ந்து அடிபட்டதாகப் பேர்வாங்கியிருந்தா லும் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு ஸ்தானம் ஒதுக்கி வைக் கப்படுவது மல்லாமல் மற்றபடி இதனால் என்ன பயன் என்பது விளங்க வில்லை.

இந்த மறியலில் சம்மந்தப்பட்ட வாலிபர்களைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. மற்றபடி பெரியவர்கள், தேசபக்தர்கள், பொதுநல சேவைக் காரர்கள் என்பவர்களை ஒன்று கேட்கின்றோம்.

அதாவது இந்தக் கள்ளுக்கடை மறியல் செய்வது என்பது இதனால் அதாவது இவர்களது மறியலில் கள்ளுக்குடி நின்றுவிடும் என்று கருது கின்றார்களா? அல்லது வெள்ளைக்காரனை இந்த நாட்டைவிட்டு ஓட்டு வதற்கு அல்லது “சுயராஜியம்” பெறுவதற்குப் பயன் படக்கூடியது என்று கருதுகிறார்களா என்று கேட்கின்றோம். கள்ளுக்கடை ஏலத்தில் எடுத் திருப்பது திருப்பூர் பிரபுக்கள். மறியல் செய்வது திருப்பூர் பிரபுக்கள். கள்ளுக்கு மரம் வளர்த்து குத்தகைக்கு விடுவது அக்கம் பக்கத்தில் பிரபுக்கள்: இந்தக் கள்ளைக் குடிப்பது திருப்பூர் தொழிலாளிமக்கள். அரசாங்கத்தில் மாதம் ரூ. 5000 வாங்கிக்கொண்டு கள்ளு நிர்வாகம் பார்ப்பது இந்த மாகாணப் பிரபுக்கள் (ஜனப்பிரதிநிதிகள்). மேலும் ஜனப்பிரதிநிதியாக இந்த வேலைக்குப் போட்டி போடுவதும் இதே ஜில்லா பிரபுக்கள். மற்றும் இந்த இலாகாவில் மாதம் ரூ. 2500 சம்பளம் முதல் ரூ. 12 சம்பளம் வரையில் வாங்கி ஜீவனம் செய்து கொண்டு வேலை பார்க்கும் சுமார் 10000பேர்களும் இந்த மாகாண இந்திய (படித்த) மக்களேயாவார்கள். மற்றும் இந்தக் கள்ளு, சாராய வியாபாரத்தால் தொழிலால் பிழைக்கும் சுமார் 20000 மக்களும் இந்த மாகாண இந்திய மக்கள். இப்படியெல்லாம் இருந்தாலும் இந்தத் தொழிலும் சட்டத்தில் குற்றமானதல்ல. மதத்தில் குற்றமானதல்ல, ‘ஒழுக்கத்திலும்’ குற்றமானதல்ல (அளவுக்கு மீறினால் குற்றம் சொல்லலாம்) இந்த நிலையில் யாரோ இரண்டு பேர் ஏதோ காரணத்திற்காக கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டு யாரோ இரண்டொருவனை ‘அப்பா, சாமி கள்ளுக் குடிக்காதே’ ‘காந்தி கட்டளை இட்டு இருக்கிறார்’ ‘ராஜகோபாலாச்சாரி கட்டளையிட்டி ருக்கிறார்’. ‘சத்தியமூர்த்தி கட்டளையிட்டு இருக்கிறார்’ என்று சொல்லி விடுவதாலேயோ அல்லது அந்தக் குடிகாரனிடமோ, கள்ளு வியாபாரக் காரனிடமோ இரண்டு அடி வாங்கிக்கொண்டு அதை ஒன்று பத்து நூறாகப் பெருக்கிப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து விடுவதாலேயோ கள்ளுக் குடி நின்று போகுமோ? என்பதை யோசித்துப் பாருங்கள்.

சத்தியாக்கிரகம், மறியல் என்பவைகள் வீண் சண்டித்தனமே யில்லாமல் அதில் ஏதாவது கடுகளவு நாணையமோ, யோக்கியப் பொறுப்போ, இருக்க முடிகின்றதா? என்றுகேட்கின்றோம். உண்மையாய் யோக்கியமாய் கள்ளை நிறுத்த சத்தியாக்கிரகம் செய்பவர்கள் கள்ளு மந்திரி வீட்டில் கள்ளு இலாகா அதிகாரி வீட்டில் - மரம் கள்ளுக்குவிடும் குடியானவன் வீட்டில் - கள்ளு இறக்கும்போது மரத்தடியிலும் மற்றும் இது முதலாகிய ஆரம்ப நிலையிலிருந்து ஏதாவது ஒன்றில் செய்தால் சிறிது அர்த்தமாவது உண்டு. அவைகளை விட்டு விட்டு எல்லாக் காரியமும் நடந்தும், செலவாகும் பணமெல்லாம் செலவாகி, செய்யவேண்டிய சடங்கெல்லாம் செய்யப்பட்டு கள்ளுக்கடைக்குள் கள்ளு வந்து விற்பனைக்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது “காந்திக்கு ஜெ” “கள்ளுக்குடிக்காதே” என்று சொல்லுவதால் எப்படி நிற்கமுடியும் என்பதை அனுபவ ஞானமுள்ள மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

மேலும் இந்துக்களில் இருக்கும் அவ்வளவு விகிதாச்சார குடிகார ரும், கிறிஸ்துவர்களில் இருக்கும் அவ்வளவு விகிதாச்சார குடிகாரரும் போல அவ்வளவு விகிதாச்சார குடிகாரர்கள் மகமதியர்களில் இருக்கின்றார் களா என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஒருக்காலமும் அவ்வளவு குடிகாரர்கள் இல்லை என்றே சொல்லு வோம். இதன் காரணம் என்னவென்றால் அவர்களது மதமானது கள்ளை அவ்வளவு கடினமாக வெறுக்கின்றது. மற்றபடி இந்துக்கள் என்பவர் களிலும் மற்றும் சற்று கல்வி அறிவு மேல்ஜாதிக்காரர்கள் என்கின்ற எண்ணத்துடன் சரீரப்பாடுபடாமல் சோம்பேரியாய் இருக்கும் சைவ வேளாளர் தொண்டை மண்டல வேளாளர் பெருவாரியான வியாபாரிகள் வைசிய செட்டிமார்கள் என்பவர்கள் முதலியவர்களிலும் குடிக்கின்ற மக்கள் விகிதாச்சாரம் மிகவும் சுருக்கமானதேயாகும். அந்த சுருக்கமும் ஏதோ ஒருவித நாகரீகப்பைத்தியக் காரணமாக, செயர்க்கைவாசனை காரணமாக இருப்பதல்லால் மற்றபடி குடிகாரர்கள் என்கின்ற முறையில் ஏற்படுவது கிடையாது. ஆகவே இன்றைய குடிகார மக்களின் குடிக்கு காரணம் என்ன என்பதை அறிவாளிகள் இப் போதாவது யோசித்துப்பார்த்தால் உண்மை உணராமலிருக்க முடியாது.

சாதாரணமாக கள் இலாகா சனப்பிரதிநிதிகள் ஆதிக்கத்திற்கு வரா மலிருந்து சர்க்கார் இடமே இருந்திருந்தால் அது சம்மந்தமாக சட்டம் முதலியவைகள் செய்யவாவது சற்று இடமிருக்கும் இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் ஜனப்பிரதிநிதிகளில் மெஜாரிட்டி யார் யாரோ அவர்களே அந்த இலாகாவை நடத்தும் வேலையை ஒப்புக் கொள்ளும் மந்திரியாகிவிட்டதால் மந்திரிவேலை கிடைக்காதவர்களும் அடுத்த தடவை அதை அடையலாம் என்று காத்திருப்பவர்களும் அதைப் பற்றி ஏதாவது பேசிக்கொண்டும் இவ்வித பிரசாரம் செய்து கொண்டு மிருக்கலாமே யொழிய மற்றபடி இதனால் எல்லாம் கள்ளுக்குடியை ஒழிக்க காரியத்தில் ஒரு துரும்பை அசைத்துவிட முடியுமா? என்று கேட்கின்றோம். வீணாக இது பொதுஜனங்களில் பதவி வேட்டைக் காரருடைய சுயநல வஞ்சகத்தையும் பாமரமக்களின் முட்டாள் தனத்தையும் கைமுதலாக வைத்துக்கொண்டு நடத்தும் போலி நாடகமே யொழிய மற்றபடி கள்ளு மறியலில் சிறிதும் பயனும் நாணயமும், யோகியப் பொறுப்பும், புத்திசாலித் தனமும் இல்லையென்றே சொல்லுவோம்.

அன்றியும் அரசியல் கருத்துக் கொண்ட மறியல்களை நிறுத்தி விட்டு பொருளாதாரத்திற்கும் சன்மார்க்கத்திற்குமான தனிப்பட்ட சீர்திருத்தத் துறையில் மறியல் செய்வதாய் சொல்லி ராஜி பேசிக்கொண்டு ஜெயிலிலி ருந்து வெளியில் வந்த பிறகு மறுபடியும் அரசியல் கருத்தில் செய்யும் மறியலில் எவ்வளவு தூரம் பயனும் நாணயமும் உண்டாகும் என்பதைப் பொது ஜனங்களே யோசித்துப் பார்ப்பதன்மூலம் இந்திய தேசீயத்தின் நாணயத்தையும் தலைவர்களின் நாணயத்தையும் அறிந்துகொள்ளட்டும் என்றே விட்டு விடுகின்றோம்.

            ---------------------தந்தைபெரியார் --” குடி அரசு” - கட்டுரை - 07.06.1931

11 comments:

தமிழ் ஓவியா said...


மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பெரியார் மற்றும் திராவிடர் இயக்கப் பாடங்களை நீக்குவதா?


மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பெரியார் மற்றும் திராவிடர் இயக்கப் பாடங்களை நீக்குவதா?

ஊழல் பெருகுவதற்குக் காரணம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உத்தியோகங்களில் இருப்பதுதான் என்று கூறுவதா?

பிப்ரவரி 2 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்தூர் மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

ஆத்தூர் ஜன.28- திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தி லிருந்து தந்தை பெரியார் மற்றும் திராவிடர் இயக்கத் தொடர்பான பாடங்களை நீக்கியதை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஆத்தூரில் நேற்று (27.1.2013) திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

ஆத்தூர் பகுதி - திராவிடர் கழகத்துக்கு மிக முக்கிய பகுதியாகும். 1957இல் தந்தை பெரியார் அவர்களால் அறி விக்கப்பட்டு, நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் இந்த வட்டாரத்திலிருந்து ஏராளமானவர்கள் பங்கு கொண்டு சிறையேகினார்கள்.

ஆத்தூர் தோழர்கள்மீது அய்யா வைத்திருந்த நம்பிக்கை

சென்னையில் பிராமணாள் என்ற பெயர்ப் பலகையை நீக்க மறுத்த பார்ப்பனர் ஒருவர் நடத்திய முரளீஸ் கபேயை எதிர்த்துத் திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தின் போது - இந்தப் பகுதியிலிருந்துதான் தந்தை பெரியார் அவர்கள் தோழர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டபோது ஏராளமான தோழர்கள் சென்னைக்கு வந்து மறியலில் கலந்து கொண்டு சிறைப்பட்டனர்.

ஆச்சாரியார் ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட குலக் கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டதற்கு 1953இல் இரண்டு நாட்கள் இந்த ஊரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாடும், அதன் தீர்மானங்களும் தான் முக்கிய காரணமாகும் (பலத்த கரவொலி)

மாநாட்டு வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டு

அப்படிப்பட்ட ஊரில் இடையில் கொஞ்சம் தொய்வு தென்பட்டாலும், இப்பொழுது நடையில்லை - விரைந்து ஓடவே ஆரம்பித்து விட்டனர்; இது தொடர வேண்டும். இம்மாநாடு இவ்வளவு வெற்றிகரமாக நடைபெறக் கடுமையாக உழைத்த மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் உட்பட அனைத்துத் தோழர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொழுது ஏற்பட்டுள்ள உணர்வினை நம் கழகத் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாப் பகுதிகளிலும் கிளைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

இந்த வட்டாரத்தில் இயக்கத்திற்காக அரும்பாடுபட்ட தோழர்களையெல்லாம் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். தென்னங்குடிபாளையம் வெங்கடாசலம், ஆத்தூர் வி. ஆறுமுகம், அக்கி செட்டிபாளையம் செல்லமுத்து, போட்டோ சுந்தரம், மெடிக்கல் ஸ்டோர் முருகேசன், ஏத்தாப்பூர் ஒய்.பி. இராமன், பேராசிரியர் வெள்ளையன், வாழப்பாடி குமார், வீரமுத்து, காளிசெட்டியூர் ராஜு என்று ஒரு நீண்ட பட்டியலுண்டு அந்தத் தோழர்களின் தன்னலமற்ற இயக்கத் தொண்டுக்காக இந்த நேரத்தில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜாதி ஒழிப்பு என்பது நமது முக்கிய கொள்கை

ஜாதி ஒழிப்பு என்பது நமது இயக்கத்தின் முக்கிய கொள்கையாகும். கல்வி, வேலை வாய்ப்புகளில் என்பதற்கு மட்டுமே ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்கிறோம். அது மருந்தில் குறிப்பிட்ட அளவுக்கு விஷம் கலப்பது போன்றதாகும். கிருமிகளைக் கொல்ல இந்த விஷம் தேவைப்படுகிறது. அம்மை நோயை ஒழிக்க அம்மைக் கிருமிகளையே பயன்படுத்துவது போன்றதாகும் இது. இதனைப் புரிந்து கொள்ளாமல், கிருமிகளைக் கொல்லத்தானே மருந்தில் விஷம் சேர்க்கப்படுகிறது - முழு அளவு விஷத்தையே குடித்து உடனடியாக, ஒட்டு மொத்தமாக கிருமிகளை அழித்து விட லாம் என்று நினைத்தால் என்னாகும்?

காலாவதி மருந்து போன்றது ஜாதி

சிலர் இப்படித்தான் கிளம்பியிருக் கிறார்கள். ஜாதியை அரசியல் மூலதன மாக்கிக் கரையேறலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள் - அது நிறைவேறப் போவதில்லை.

மக்களிடத்தில் எடுத்துக் கூறிட கொள்கைகள், இலட்சியங்கள் இல்லாத வர்கள் மக்களிடம் ஜாதி உணர்வைத் தூண்டி விடலாம் என்று நினைக் கிறார்கள்.

மருந்துகளில் நீங்கள் பார்க்கலாம் - அதில் உற்பத்தியான வருடம், காலாவதி யாகும் வருடத்தைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டு இருப்பார்கள். கடைகளில் மருந்துகளை வாங்கும்போது அதைக் கவனமாக கவனிக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

சில நாட்களுக்குமுன் ஒரு செய்தி வந்தது. காலாவதியான மருந்துகள் விற்கப்பட்ட செய்திதான் அது.

காலாவதியான மருந்துகளை எடுத் துக் கொள்வதால் பல்வேறு தீய விளைவு கள் ஏற்படும்.

ஜாதி என்பதும் காலாவதியான ஒரு சரக்கு; அதனைக் கையில் எடுத்துக் கொள்வதால், எடுத்துக் கொள்பவர் களுக்குத்தான் தீமையாக - எதிர் விளைவை உண்டாக்குவதாக அமையும்.

எதிரிகள் அல்ல - திருத்தவே விரும்புகிறோம்

சமுதாயத்தில் இந்தத் தீங்கைச் செய்யப் புறப்பட்டவர்களைக்கூட நாங்கள் எதிரிகளாகக் கருதவில்லை. மாறாக அவர்களைத் திருத்தவே விரும்புகிறோம் (பலத்த கரஒலி!)

தேநீர்க் கடைகளில் இரண்டு கிளாஸ்கள் இருக்கிறதே - சாராயக் கடைகளில் அவ்வாறு இருப்பதில்லையே! ஒரு கிளாஸ் உள்ளே போய் இரண் டாவது கிளாசும் பயன்படுத்தியவுடனேயே பக்கத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட தோழரைப் பார்த்து பிரதர் என்கிறானே - சாராயக் கடைகளில் பார்க்கப்படாத ஜாதி வேறு இடத்தில், எங்கிருந்து குதித்தது?

பாரதக் கலாச்சாரம் இதுதான்!

பாரதக் கலாச்சாரம் பாரதக் கலாச்சாரம் என்று பசப்புப் பேசுகிறார்களே, என்ன அந்தப் பாரதக் கலாச்சாரம்?

மச்சகந்தி யார்? மீனவ சமுதா யத்தைச் சேர்ந்த பெண்மணிதானே. பட்டப் பகலில் படகில் செல்லும் பொழுது பராசரமுனிவன் என்ன செய்தான்? படகோட்டிய அந்த மீன வப் பெண் பருவம் அடையாதவள்கூட!

முனிவர் என்ன செய்கிறார்? பருவம் அடைந்தவராக ஆக்குகிறார்.

பட்டப் பகலாயிற்றே - சூரியன் தலைக்கு மேலே இருக்கிறானே என்கிறார் அந்தப் பெண். அதுபற்றி கவலைப்படாதே - சூரியனையே மறைத்து விடுகிறேன் என்று சொல்லி அவ்வாறே செய்கிறான். சூரியனை மறைத்தால் இப்படியெல்லாம் தான் நடக்கும் (பலத்த கைதட்டல்!)

மீனவப் பெண் அல்லவா - நாற்றம் அடிக்கிறது. உடனே என்ன செய் கிறான் பராசர்! பரிமள மணம் வீசச் செய்கிறான் - அதனால் அந்தப் பெண் பரிமளகந்தி என்று அழைக்கப்படுகிறாள்.

சென்ட்டை முதன் முதலாகக் கண்டுபிடித்து சென்ட் வியாபாரம் செய்தவன் பராசரன்தான் (பலத்த சிரிப்பொலி)

அப்படி இருவருக்கும் பிறந்த வியாசன் மகா பாரதத்தை எழுதினா னாம். இதுதான் பாரதக் கலாச்சாரம் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஆத்தூர் மாநாட்டில் தமிழர் தலைவர் 2013

ரத்த தானத்தில், உறுப்புகள் தானத்தில் ஜாதி பார்ப்பதுண்டா?

ஜாதி ஜாதி என்கிறார்களே! விபத்தில் சிக்கிய அய்யங்காருக்குத் தேவையான ரத்த குரூப் ஒரு தாழ்த்தப்பட்டவரிடம் இருக்கிறது என்று தெரிந்து அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் ரத்தம் கொடுக்க முன் வந்தால் அந்த அய்யங்கார்ப் பார்ப்பனர், நான் செத்தாலும் சாவேனே தவிர - அந்தத் தாழ்த்தப்பட்டவரின் ரத்தம் வேண்டாம் என்று சொல்லுவாரா?

தமிழ் ஓவியா said...

டாக்டரின் கையை பிடித்துக் கொண்டு அந்த நோயாளியான அய்யங்கார்ப் பார்ப்பனர் என்ன சொல்லுவார்?

நான் அதையெல்லாம் பார்க்க மாட்டேன் - நான் பெரியார் கட்சியில் எப்பொழுதோ சேர்ந்து விட்டேன்! என்று தானே அய்யங்கார் சொல்லுவார்!

(பலத்த சிரிப்பும் - கைதட்டலும்!)

கண்தானம் செய்யும்போது, சிறு நீரக தானம் செய்யும்போது, ரத்த தானம் செய்யும்போது வராத ஜாதி, பார்க்கப் படாத ஜாதி மற்ற நேரத்தில் மட்டும் தேவைப்படுகிறதா?

உடல் உறுப்புகளை தானம் செய்கிறவர்கள் செத்தாலும் இன்னொரு வகையில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்! சுயமரியாதை இயக்கத்தில் திராவிடர் கழகத்தின் அடிப்படை கொள்கை; பிறவியின் அடிப்படையில் பேதம் பேசும் இந்த ஜாதியை ஒழிப்பதுதான் எங்களின் முக்கிய கொள்கையாகும். மனித நேயம்தான் எங்கள் கோட்பாடு.

மனோன்மணீயம் பல்கலைக் கழகத்தில் பெரியார் பாடங்களை நீக்குவதா?

தந்தை பெரியார் வாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிந்த ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவே பாடுபட்டார். அவரின் சிந்தனைகளை நாட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்பி வருகிறோம்.

இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியார் அவர்களின் இத்தகைய கருத்துகள் புகட்டப்பட வேண்டும்.

இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சம்பந்தப்பட்ட பாடங்கள் திராவிடர் இயக்கம் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. பல்கலைக் கழக மாணவர்கள் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பிப்ரவரி 2ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

இந்த ஆத்தூர் மாநாட்டில் ஒன்றை அறிவிக்க விரும்புகிறேன். மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தில் நீக்கப்பட்ட தந்தை பெரியார் சம்பந்த மான, திராவிடர் இயக்கம் சம்பந்தமான பகுதிகளை நீக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும், நீக்கப்பட்ட அந்தப் பாடங்களை மறுபடியும் இடம் பெறச் செய்ய வலியுறுத்தியும் மாவட்டத் தலைநகரங் களில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ஆர்ப் பாட்டம் நடைபெறும் (பலத்த கரஒலி).

தந்தை பெரியார் தமிழர்களின், ஒடுக் கப்பட்ட மக்களின் மூச்சுக் காற்றாகும். அந்த மூச்சுக் காற்றைச் சுவாசித்துத்தான் வாழ்ந்து வருகிறோம். தமிழர்களின் உணர்வோடு விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்.

ஊழலுக்குக் காரணம் தாழ்த்தப்பட்டவர்களாம் -பிற்படுத்தப்பட்டவர்களாம்!

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும்தான் ஊழல் செய் கிறார்கள் என்று வடநாட்டில் ஒரு பிர கஸ்பதி ஆஷிஷ்நந்தி என்பவர் கூறி இருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும்தான் இந்நாட்டின் பெரும் பான்மை மக்கள். அவர்களைப் பார்த்து ஊழல்காரர்கள் என்று சொல்லுகிறார்கள் என்றால், எவ்வளவுத் திமிர் - ஆணவம்?

இரண்டு பாட்டில் சாராயத்துக்காக இந்தியாவின் இராணுவ ரகசியத்தைக் காட்டிக் கொடுத்த கூமார் நாராயணன் யார்? தாழ்த்தப்பட்டவரா? பிற்படுத்தப் பட்டவரா? அசல் பார்ப்பனர்தானே!

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் செய்யாத ஊழலா?

சுதந்திர இந்தியாவின் முதல் பெரிய ஊழல் எது? முந்திரா ஊழல்தானே - டி.டி. கிருஷ்ணமாச்சாரி நடத்திய ஊழல்தானே.

அந்த ஊழல் பேர் வழியும்; அவருக்குத் தண்டனை கொடுத்த நீதிபதி எம்.சி. சாக்லாவும் காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரே நேரத்தில் அமைச்சர்களாக இருந்த வெட்கக் கேடு அரங்கேறவில்லையா?

எஸ்.ஏ. வெங்கட்ராமன் அய்.சி. எஸ்.,எஸ். ஒய். கிருஷ்ணசாமி அய்யரின் ஊழல் புகழ் பெற்றதாயிற்றே!

சேட்டன் தேசாய் யார்?

மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த சேட்டன் தேசாய் செய்யாத ஊழலா? வருமான வரித்துறையினர் அவர் வீட்டுக்குள் புகுந்து பார்த்தபோது செங் கற்களை அடுக்கி வைத்ததுபோல ஆயிரம் ரூபாய் கட்டுகள் அடுக்கி வைப்பட்டு இருந்ததே!

தங்கக் கட்டிகள் பார் பாராக அங்கு குடியிருந்ததே. திருப்பதி வெங்கடாசல பதிக்கு அடுத்தபடியாக தங்கக் கட்டி அதிகம் வைத்திருந்தவர் இந்த சேட்டன் தேசாய் என்ற பார்ப்பனர்தானே!

85 விழுக்காடும் - 3 விழுக்காடும்!

நாம் 85 விழுக்காட்டினர். 3 சதவிகித உள்ள பார்ப்பனர்கள் நம்மை இழிவு படுத்து வதை ஏற்க முடியுமா?

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பெரியாரியல் பாடங்கள் நீக்கப்பட்டதையும், தாழ்த்தப் பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர் களையும் ஒட்டு மொத்தமாக ஊழல் பேர் வழிகள் என்று இழிவுபடுத்தியுள்ளதையும் கண்டித்து பிப்ரவரி 2ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்தியாவில் இடஒதுக்கீட்டின் மூலம் படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் அமெரிக்காவில் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் இத்தகையவர்கள் தான்.

இவர்கள் செயல் பாட்டை நிறுத்தினால் அமெரிக்காவின் செயல்பாடே முடங்கும் என்ற நிலை. இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்தவாறு இழிவுபடுத்திப் பேசுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அடிமைத்தளை அகற்றம்

கழக மாநாடு என்றால் அதில் புரட்சி இல்லாமலா? ஆத்தூர் மாநாட்டில் தலைவாசல் புத்தூர் சேகர் - முத்துலட்சுமி - இணையர் அடிமைத்தளையாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சி இடம் பெற்றது. அடிமைத்தளை அகற்றப்படும் பொழுது முத்துலட்சுமி அவர்களிடம் உங்கள் விருப்பத்தின் பேரில்தான் இது நடக்கிறதா? அல்லது வற்புறுத்தலின் பேரில் அகற்றப்படுகிறதா என்று திராவிடர் கழகத் தலைவர் கேட்டபோது, முத்துலட்சுமி அவர்கள் என் விருப்பத் தின் பேரில்தான் நடக்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

நூல்கள் வெளியீடு!

கழக நூல்களை கழகத் தலைவர் வெளியிட, அவற்றைப் பெற்றுக் கொண்டவர்களின் விவரம் வருமாறு: ஆசிரியர் வீராசாமி, மருத பழனி வேல், கிருஷ்ணமோகன், டாக்டர் சேகர், நக்கீரன் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு!

தந்தை பெரியார் கொள்கையை ஏற்று இயக்கத்தில் நீண்ட காலமாக அருந்தொண்டாற்றிவரும் கீழ்க் கண்ட தோழர்களை மேடைக்கு அழைத்துப் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். மானமிகு பெரியார் பெருந் தொண்டர்கள் ஏ.வி. தங்கவேலு, ஏ.டி. அங்கம்மாள், கொமரு, பாப்பாத்தி கொமரு, வாழப்பாடி சுகுமார், அமிர் தம் சுகுமார், கடம்பூர் பரமசிவன், நாவில குறிச்சி கிருஷ்ணன் ஆகி யோர் கழகத் தலைவரால் சிறப்புச் செய்யப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...


ஆத்தூர் மாநாடு


சேலம் - ஆத்தூர் மாநாடு - ஆத்தூருக்கே உரிய சிறப்போடு செறிவாக நடந்தேறியது. மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி பொது மக்களைப் பெரிதும் ஈர்த்தது.

மாநாட்டு ஏற்பாடுகள் வெகு நேர்த்தி! தந்தை பெரியார் கருத்துக்கள் அடங்கிய பதாகைகள் பொது மக்களைப் பெரிதும் கவர்ந்தன; சுவர் எழுத்துகளும், கழகக் கொடி தோரணங்களும் பளிச் சென்று, பார்த்தவர்களின் கண்களுக்குப் பட்டன.

ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) குலக் கல்வித் திட்ட ஒழிப்புக்கு 1953இல் இதே ஆத்தூரில் நடைபெற்ற மாநாடு முக்கியமானது. திராவிடர் கழகம் மூட்டைப் பூச்சி, எறும்பு போல நசுக்கப்பட வேண்டும் என்று முதல் அமைச்சராகவிருந்த ராஜாஜி சொன்னார் என்றால் அதன் பொருளென்ன? அதற்குள் வன்முறை நகமும், பல்லுமாகத் திணிக்கப் பட்டு இருக்கிறதா - இல்லையா?

அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் இதே ஆத்தூரில் சுயமரியாதை - திராவிடர் கழக மாநாடு இரண்டு நாள்கள் நடத்தப்பட்டன (10,11-10-1953).

பார்ப்பனர்கள் திராவிடர் கழகத்தை ஒழிப்பதற்காக திராவிட மக்களுக்குள்ளாகவே கலக மூட்டவும், தூண்டிடவும் முயல்வதால், கழகத் தோழர்கள் நிராயுதபாணியாக இருக்கிறார்கள் என்று கருதி காலித்தனம், பலாத்காரம் செய்யத் தூண்டு மாதலால், திராவிடர் கழகத்தினர் சட்டத் துக்குக் கட்டுப்பட்ட அளவுக்கு, ஒவ்வொருவரும் ஆணும் - பெண்ணும் ஒரு கத்தியைத் தற்காப்புக் காக அவசியம் எப்போதும் மடியில் வைத்திருக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

- என்று ஆத்தூர் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அதற்குப் பிறகுதான் பார்ப்பனர்கள் அடங்கி னார்கள். முதல் அமைச்சர் ராஜாஜி வாய்த் துடுக்காகப் பேசுவதை நிறுத்திக் கொண்டதோடு, முதல் அமைச்சர் நாற்காலியையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அனேகமாக அவரின் அரசியல் வாழ்வு, பொது வாழ்வு முற்றுப் புள்ளியைத் தாங்கி மூலையிலும் முடக்கப்பட்டது.

இன்றைக்கு ஜாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்துவது - தாழ்த்தப்பட்ட மக்களை தனிமைப்படுத்த முயற்சிப்பது - பெண்களைப் போகப் பொருளாக, அற்பப் பதராக நினைப்பது எனும் இரு பிரச்சினைகள் வாலைச் சுழற்றிக் கொண்டு கொம்பைத் தீட்டிக் கொண்டு குதித்தாடுகின்றன.

இந்த இரு நிலைகளுமே மிகவும் பிற்போக்குத் தனமான, பாசிசப் புத்தியைப் பறைசாற்றக் கூடியவை யாகும்.

இவை குறித்த தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற் றப்பட்டுள்ளன.

திராவிடத்தைக் கொச்சைப்படுத்தி தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு, நாத்தழும்பேறப் பேசிக் கொண்டு இருப்பவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன?

தலித் - தலித் அல்லாத மக்கள் என்ற இரு கூறு போடுவது தானா? அப்படியென்றால் தலித் மக்கள் அவர் களுடைய தமிழ்த் தேசியத்திற்குள் வரமாட்டார்களா?

ஆக தமிழ்த் தேசியம் என்பது ஜாதிஉணர்வு கொண்டது. திராவிடர் தத்துவம் என்பது ஜாதி ஒழிப்பை முதன்மைப்படுத்தக் கூடியது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

ஜாதிக் கூட்டணி என்று வரும்போது தலைவர் களாகத் தங்களுக்குத் தாங்களே அறிவித்துக் கொள்வோர். பின்னாலே எத்தனைப் பேர் திரண்டு நிற்கிறார்கள்? பல்வேறு ஜாதிக்காரர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் சிதறிக் கிடக்கிறார்கள். அத்த னையையும் உதறி வீசி எறிந்துவிட்டு, இந்தத் தலை வர்கள் பின் அணி வகுத்து நிற்கப் போகிறார்களா? அசட்டுத் துணிச்சல்தான்.

நேற்று ஒரு செய்தி இந்து ஏட்டில் (27.1.2013) தருமபுரி மாவட்டத்தில் வன்னிய ஜாதியைச் சேர்ந்த ஒரு பையன், கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அய்ந்து மாதங்கள் ஓடிவிட்டன. பெண் வீட்டார் எதிர்த்துப் பார்த்தார்கள் - முடியவில்லை. தனிக்குடித்தனம் சென்ற அந்தப் பெண் கருவுற்ற நிலையில், பெண் வீட்டார் அந்தப் பெண்ணை தம் வீட்டுக்கு அழைப்பது போல் அழைத்து, கருச்சிதைவு செய்திட வற்புறுத்தியுள்ளனர். பெண் மறுத்த நிலையில் வழக்கு நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளது.

இவ்விரு சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் - ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்; அந்தத் தலைவர்களின் ஜாதிக்குள் ஏற்பட்டு விட்ட இந்த நிகழ்வுக்கு இதற்கு என்ன செய்ய முடியும்? சட்டப்படி தடுக்க முடியாத நிலையில் கைப்பிசைந்து நிற்க வேண்டிய பரிதாப நிலைதான்.

இந்தத் தலைவர்கள் குற்றப்படுத்தும் தாழ்த்தப் பட்டவர் இதில் இடம் பெறவில்லை. இரு பிற்படுத்தப் பட்டவர்களிடையே நடைபெற்றுள்ள காதல் திருமணம் ஆகும். ஜாதி மறுப்புத் திருமணம் அவர்களின் முடிவும், முயற்சியும் தவறு என்பதற்கு இந்த யதார்த்த நிலைதான் தக்கதோர் பதிலாகும்.

இவர்கள் திருந்த வேண்டும் என்று ஆத்தூர் மாநாட்டில் திராவிடர் கழகத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ள யதார்த்த நிலையை உணர்வார்களாக!

ஆத்தூர் மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைத் துத் தோழர்களுக்கும் பாராட்டுகள் உரித்தாகுக! புத்தெழுச்சி நிலவும் இந்தச் சூழலை - இயக்க வளர்ச் சிக்கு பயன்படுத்திக் கொள்வார்களாக!

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும்.

விடுதலை, 22.9.1972

தமிழ் ஓவியா said...

தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை! தேவை!!


ஜாதி-தீண்டாமை ஒழிப்பை முன்னெடுப்போம்

பெண்கள் மீதான கொடுமைக்கு முடிவு தேவை!

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது!

தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை! தேவை!!
பதவி உயர்விலும் இடஒதுக்கீடு - சட்டத்திருத்தம் செய்க!
ஆத்தூர் திராவிடர் எழுச்சி மாநாட்டில் தீர்மானங்கள்

ஆத்தூர், ஜன. 28- தனியார்த் துறைகளிலும் இடஒதுக் கீடு தேவை என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆத்தூர் திராவிடர் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

சேலம் ஆத்தூரில் 27.1.2013 அன்று நடைபெற்ற திராவிடர் எழுச்சி மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

முன்மொழிந்தோர்: விஜய் ஆனந்த், நகரச் செயலாளர்
தீர்மானம் 1:

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு

திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை ஜாதி ஒழிப்பாகும். அதற்காக தந்தை பெரியார் தம் வாழ் நாள் முழுவதும் பாடுபட்டு வந்திருக்கிறார் - பிரச்சாரம் - போராட்டம் என்ற அணுகுமுறைகளால் இதில் குறிப்பிடத் தக்க அளவுக்கு கழகம் வெற்றி பெற்றே வந்திருக்கிறது.

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தி பல்லாயிரக் கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் மூன்றாண்டு காலம் வரை தண்டனை பெற்றனர். இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஜாதி மறுப்புத் திருமணங்கள் தமிழ் நாட்டில் அதிகம் நடந்து வருவதற்குத் திராவிடர் கழகம் மேற்கொண்டுவரும் தொடர் பணியே காரணமாகும்.

பெயர்களுக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவது தமிழ்நாட்டில் வெட்கப்படத்தக்கதாகக் கருதப்படும் ஒரு நிலையை உருவாக்கி உள்ளோம்.

இந்த நிலையில், அரசியல் நோக்கத்தோடு, வாக்கு வங்கிக்காக ஜாதியை முன்னிலைப்படுத்தியும், ஜாதி மறுப்புத் திருமணங்களையும், காதல் திருமணங்களையும் கொச்சைப்படுத்தியும் பிரச்சாரம் செய்வதும்- தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராக ஜாதி அடிப்படையில் அணி திரட்டுவதும் மிகமிகப் பிற்போக்குத்தனமானவை - மனித சமத்துவத்திற்கு எதிரானவை - தமிழர்களிடையே ஜாதி அடிப்படையில் பிணக்குகளையும், கலவரங்களையும் உருவாக்கிட வழிவகுக்கக் கூடியவை என்பதால் இதனை அறவே புறக்கணிக்குமாறு தமிழர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி தமிழ்த் தேசியம் பற்றி இன்னொரு பக்கத்தில் பேசிக் கொண்டு, தலித் அல்லாதோர் என்ற ஓர் அணியை திரட்டுவதன் மூலம் தமிழ்த்தேசியம் என்பதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் இல்லை என்பது பெறப்படுகிறது; தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழர்கள் அல்ல என்பதுதான் தமிழ்த்தேசியம் என்பதன் உட்பொருள் என்பதும் விளங்கிவிட்டது.

தமிழ்த்தேசியம் என்பது ஜாதியைப் பாதுகாக்கக் கூடியது, திராவிடர் என்பது ஜாதி ஒழிப்புக் கொள்கை களைக் கொண்டது என்பது இதன்மூலம் விளங்கிவிட்டது என்பதால், தமிழ்த்தேசியம் பேசுவோரிடத்தில் எச்சரிக்கை யாக இருந்து அத்தகையவர்களை அறவே புறக்கணிக்கு மாறு தமிழர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டில் தூண்டப்படும் ஜாதி உணர்வை முறியடிக் கும் வகையில் ஜாதி ஒழிப்பை முன்னெடுக்கும் வகையிலும் திராவிடர் கழகம் இன்னும் தீவிரமாக செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

முன்மொழிந்தோர்: அமிர்தம் சுகுமார்
தீர்மானம் 2:

பெண்கள் மீதான வன்முறைக்கு முடிவு தேவை

தமிழ் ஓவியா said...


அண்மைக்காலமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அளிக்கலாம் என்று நீதிபதி வர்மா குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்பும் சில சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சட்டங்கள் நகமும், பல்லும் உள்ளவைகளாக இருந்து துல்லியமாக செயல்படுத்தப் படுவதுதான் முக்கியமாகும் என்பதை இம்மாநாடு மத்திய மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.

சட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கல்வித் திட்டத்தில் பெண்ணியம், பாலியல் தொடர்பான பாடங்கள் இடம்பெறச் செய்யவேண்டும் என்று இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.

சின்னத் திரை, பெரிய திரைகள் மற்றும் பத்திரிகை, ஊடகங்கள் அத்துகளை மீறி பாலியல் உணர்வுகளைத் தூண்டும் அளவுக்கு அவற்றின் உள்ளடக்கங்கள் அமை வதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தணிக்கை முறைகளை ஏற்படுத்தவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. நாடெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத் திட புரட்சிப் பெண்கள் மாநாட்டினை திராவிடர் கழக மகளி ரணி மற்றும் பாசறை சார்பில் நடத்துவது என்றும் தீர் மானிக்கப்படுகிறது.

முன்மொழிந்தோர்: தியாகராசன், மண்டலச் செயலாளர்
தீர்மானம் 3:

ஈழத் தமிழர் பிரச்சினை

இலங்கையில் நடைபெற்றுவரும் சிங்கள இனவாத அரசு சொந்த நாட்டு மக்களான ஈழத் தமிழர்கள்மீது போர் தொடுத்து, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையிலும், எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை கேள்விக் குறியாகி, இன்னமும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தான் வாழ்ந்து தீரவேண்டிய அவல நிலை உள்ளது.

இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு இலங்கை அரசு கொடுத்த எந்த வாக்குறுதியும் காப்பாற்றப்படவில்லை.

மேலும் மேலும் ஈழத் தமிழர்களை ஒடுக்குவதிலும் தமிழர் தம் கலாச்சார அடையாளங்களை அறவே ஒழிப்ப திலும்தான் மூர்க்கத்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக் கிறது. தமிழர்களில் ஊர்ப் பெயர்களை அரசு ரீதியாக சிங்கள மொழியாக மாற்றியுள்ளது. ஈழத் தமிழர்களின் கல்வி வாய்ப்புக் கதவுகள் அடைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உலக நாடுகள் மற்றும் அய்.நா. இதில் அவசரமாகத் தலையிட்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வாதா ரங்களுக்கு உத்தரவாதம் கிடைக்கும் வகையில் இலங்கை அரசுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுக்கவேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
ராஜபக்சே மீதான விசாரணையைத் துரிதப்படுத்து மாறும் அய்.நா.வையும், மனித உரிமை ஆணையத்தினை யும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இப்பிரச்சினையில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் நடந்துகொள்வ தில்லை. பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டும் இரட்டை நிலையை மேற்கொண்டு வருவதுடன், இலங்கை இராணுவத்துக்குத் தமிழ்நாட்டைத் தாண்டி வேறு பகுதிகளில் இந்தியா பயிற்சி அளிக்கும் என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களை இலங்கை அரசு மேலும் ஒடுக்குவதற் குத்தான் இந்திய அரசின் செயல்முறை பயன்படும் என்பதை இந்திய அரசுக்கு உலகத் தமிழர்கள் சார்பிலும், மனிதநேய அமைப்பின் சார்பிலும் இம்மாநாடு திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைத் தனிமைப்படுத்திப் பார்க்கும் இந்திய அரசின் போக்கு சரிதானா? அதன் பாரதூர விளைவுகளை இந்திய அரசு சிந்தித்துத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறதா என்ற வினாவையும் இம்மாநாடு எழுப்பிட விரும்புகிறது.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று இம்மாநாடு மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தோர்: தமிழ் பிரபாகரன், மண்டல மாணவரணி செயலாளர்
தீர்மானம் 4:

பாடத்திட்டங்களில் பெரியாரியல் பாடங்கள் இடம்பெறச் செய்க!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் திராவிடர் இயக்கத் தொடர்பான தந்தை பெரியார்பற்றியதான பாடத் திட்டங்களை நீக்கு வது என்ற முடிவை இம்மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல;

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் திராவிடர் இயக்கம், சமூகநீதி வரலாறு, பெரியாரியல் பாடத் திட்டங்களைக் கண்டிப்பாக இடம்பெறச் செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும், பல்கலைக் கழகங்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தோர்: அண்ணாதுரை, நகரத் தலைவர்
தீர்மானம் 5(அ):

தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு!

தனியார்த் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் இட ஒதுக்கீடு என்பது அரசினைச் சார்ந்த துறைகளுக்கு மட்டும்தான் என்று இருந்துவரும் நிலைமை மறுபரிசீலனைக்கு உட்பட்டதாகி விட்டது. எனவே, தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடுக்கு அதிகாரப்பூர்வமாக வழி செய்யும் வகையில், சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசும் இத்திசையில் மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி, வலியுறுத்துமாறு இம்மாநடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தோர்: சுரேஷ், மண்டல இளைஞரணி செயலாளர்
தீர்மானம் 5(ஆ):

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்கிற சட்டம் நிறைவேற்றப்பட முடியாமல் மக்களவையில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இது சமூகநீதிக்கு எதிரான போக்கு என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுவதுடன், பதவி உயர்வு என்பது பணி நியமனத் தையும் உள்ளடக்கியதுதான் என்ற நிலைப்பாட்டின்படி, இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட கட்சிகளைக் கடந்து அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்வதுடன், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதி ஒருவர்கூட இல்லாத நிலையில், காலி இடங்கள் நிரப்பப் படும்போது முன்னுரிமை இதற்கே அளிக்கப்படவேண்டும் என்பதை இம்மாநாடு வற்புறுத்துகிறது. இதுகுறித்து நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வையூட்டும் வகையில் திராவிடர் கழகம் பிரச்சாரத்தை முடுக்கி விடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் காட்டிய ஆர்வமும் - அக்கறையும்!


தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற மனித உரிமைக் குரலை ஏற்று, தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் கலைஞர் அவர் களால் இருமுறை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, சட்டத்தின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பயிற்சி பெற்றவர்கள் உச்சநீதி மன்றத்தின் இடைக்கால ஆணை காரணமாகப் பணியமர்த்தம் செய்யப் படாத நிலையில் உள்ளவர்கள் - அந்த அமைப் பின் சார்பாக ஆத்தூர் மாநாட்டு மேடையில் ராஜா விண்ணரசு கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

மாநாட்டினையொட்டி ஆத்தூரின் பல பகுதிகளிலும் பதாகைகளை வைத்து கழகத் தலைவரைப் பாராட்டியுள்ளனர். வாண வேடிக்கைகளையும் ஏற்பாடு செய்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பிலும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அன்பர் களும் கழகத் தலைவருக்குச் சால்வை அணி வித்துச் சிறப்பு செய்தனர்.

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரை இழிவுபடுத்திய ஆஷிஷ்நந்திமீது நடவடிக்கை


ஜெய்ப்பூர், ஜன. 28-பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் தான் அதிகம் ஊழல் செய்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர் ஆஷிஷ் நந்தி பேசியதன் வீடியோ ஆதாரத்தை ஜெய்ப்பூர் இலக்கிய திரு விழா அமைப்பாளர்களி டம் இருந்து காவல் துறை கேட்டுள்ளது. அது கிடைத்ததும் ஆஷிஷ் நந்தி மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் அரசியல் விமர்சகர் ஆஷிஷ் நந்தி நேற்றுமுன்தினம் பேசி யது சர்ச்சையை ஏற் படுத்தியது. ஊழல்பேர் வழிகளில் பெரும்பா லானவர்கள் பிற்படுத்தப் பட்டோர். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்தான் என்று அவர் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆஷிஷ் நந்தி மீது காவல் துறையில் ராஜஸ்தான் எஸ்.சி, எஸ்.டி அமைப்பு சார்பில் புகார் செய்யப் பட்டது.

இது தொடர்பாக காவலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று காலை நடக்க இருந்த கலந்துரையாடலிலும் ஆஷிஷ் நந்தி பங்கேற் பதாக இருந்தது. இதை யடுத்து, கலந்துரை யாடல் நடக்க இருந்த அரங்குக்கு அருகே எஸ்.சி, எஸ்.டி அமைப்பினர் குவிந்தனர். அவர்கள் ஆஷிஷ் நந்தியை உடன டியாக கைது செய்ய வலி யுறுத்தி முழக்கமிட்டனர்.

இதற்கிடையே, நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் ஆஷிஷ் நந்தி கலந்து கொள்ள வில்லை. அவர் ஜெய்ப் பூரில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டதாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்த விவரங் களை அறிந்து கொள்ள விசாரணை அதிகாரி யான உதவி ஆணையர் சுமித் குப்தாவை செய்தி யாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவர் விடு முறையில் இருப்பதாக அவரது அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவித் தனர். இதையடுத்து, கூடுதல் ஆணையர் கிர்ராஜ் மீனாவிடம் கேட்டதற்கு, ஆஷிஷ் நந்தி மீதான புகார் பற்றி விசாரணையை தொடங்கி உள்ளோம்.

அவரது பேச் சின் வீடியோ பதிவை கூட்ட அமைப்பாளர் களிடம் கேட்டுள் ளோம். அது கிடைத்த தும் விசாரணை தீவிர மாகும். ஆஷிஷ் நந்தி ஜெய்ப்பூரில் இருந்து வெளியேறிவிட்டாலும், பூர்வாங்க விசாரணை முடிந்ததும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.