Search This Blog

17.1.13

ஓர் இனத்தின் பண்பாட்டு உணர்வுக்கு எதிராகச் செயல்படலாமா?

பண்பாட்டுத் தளத்தில் கை வைத்தால்...

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக ஆட்சியில் மானமிகு கலைஞர் அவர்களால் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த அ.இ.அ.தி.மு.க., ஆட்சி அதனை மாற்றி, மீண்டும் புராண அடிப்படையிலான சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் எனும் வகையில் புதிய சட்டம் ஒன்றைப் பிறப்பித்து தமிழ் - தமிழர் விரோத ஆட்சி என்பதைத் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு விட்டது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் இந்த நிலைப் பாட்டுக்குப் பின் இவ்வாண்டு தமிழ்ப் புத்தாண்டாம் தமிழர் திருநாளான பொங்கல் விழா தமிழ்நாடு அளவில் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட் டுள்ளது. அதில் எழுச்சிக் கனல் பறந்துள்ளது.
விளையாட்டுப் போட்டிகள்,  கலை நிகழ்ச்சிகள் என்று எங்குப் பார்த்தாலும் விழாக் கோலத்தைக் காண முடிந்தது. அ.இ.அ.தி.மு.க. அரசின் ஆணையைப் புறந்தள்ளும் வகையில் மக்கள் இத்தகைய செயல்பாட்டின்மூலம் அறிவிப்புக் கொடுத்துள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சட்டம் என்ப தற்காக ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொண் டாலும் வெகு மக்கள் எப்படி எண்ணுகிறார்கள் - நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானதாம்.

தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சட்டமும், தீர்ப்புகளும்  ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், வெகு மக்கள் சட்டத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல், இலட்சக்கணக்கில் சுயமரியாதைத் திருமண முறையை ஏற்றுக் கொண்டு செயல்படவில்லையா? அதுபோல்தான் இதுவும்.

ஓர் இனத்தின் பண்பாட்டு உணர்வைப் புறந்தள்ளும் ஓர் அரசின் எந்த உத்தரவும், சட்டமும் மதிப்பைப் பெறாது என்பதைத் தமிழக  அரசு உணர்ந்து செயல்படுவது நல்லது.

தலைநகரமான சென்னையில் கவிஞர் கனிமொழி அவர்களின் அரிய முயற்சியால் சங்கமம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக தமிழர் திருவிழா கோலாகலமாக, தமிழ் மண்ணுக்கே உரித்தான  கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. லட்சக்கணக்கான தமிழர்கள் கண்டு களித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் நல்ல வாய்ப்புக் கிடைத்தது; தமிழர்களின் கலை வடிவங்கள் அழிந்து படுமோ என்று அஞ்சிய நேரத்தில், கவிஞர் கனிமொழி மற்றும்  கஸ்பார் போன்றவர்களின் திட்டங்களும், முயற்சியும் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தின என்றால் அது மிகையாகாது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2012இல் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற இயலாத ஒரு  நிலை ஏற்பட்டது - கெட்ட வாய்ப்பே!

திராவிடர் கழகத்தின் தலைமையிடத்தில் பெரியார் திடலில் அதனை ஓர் அளவுக்கு ஈடுகட்டும் வகையில் மூன்று நாட்கள் பல்வேறு கலை நிகழ்ச்சி களுடன், வெகு நேர்த்தியுடன் 2012 பொங்கல் நாள்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டன.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் அதனை முன்னின்று நடத்தியது. இவ்வாண்டும் வரும் 25,26 ஆகிய நாட்களில் வெகு சிறப்புடன் நடத்திடத் திட்டமிட்டுள்ளது.

இன்றைக்கு சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையிலும், நாளை கோட்டூர்புரத்திலும் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பாசறை சார்பில் இரு நாட்கள் இசை, கரகாட்டம், நையாண்டி மேளம், மயிலாட்டம், காவடியாட்டம், மாடாட்டம், தெருக்கூத்து, பெரிய மேளம், தப்பாட்டம், சேர்வையாட்டம், ஜிக்காட்டம் என்று பல்வேறு கலை  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஓர் இனத்தின் பண்பாட்டு உணர்வுக்கு எதிராகச் செயல்படலாம் என்று யார் நினைத்தாலும் அவர்கள் அம்மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்பது வரலாறு கற்பிக்கும் ப டமாகும்.

திருவள்ளுவர் சிலையானாலும் சரி, அறிஞர் அண்ணா நூலகமாக இருந்தாலும் சரி, தமிழ்ப் புத்தாண்டானாலும் சரி, இவற்றில் கை வைப்பது - தமிழினப் பண்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையே!

சோ தினமலர் வகையறாக்களின் பாராட்டுகள் மட்டுமே போதுமானது என்று நினைத்தால், அதற்கான சேதாரத்தை சந்தித்தே தீர வேண்டும். உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்துத்தானே தீர வேண்டும்!

                     -------------------------"விடுதலை” தலையங்கம் 17-1-2013

10 comments:

தமிழ் ஓவியா said...


தினத்தந்தி பார்வையில் புத்தக மதிப்புரை வட நாட்டில் பெரியார்


1940,41ஆம் ஆண்டுகளில், வடநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் சுற்றுப் பயணம் செய்தார்.

அப்போது, பாகிஸ்தான் பிரிவினைக்குப் போராடி வந்த ஜின்னாவைச் சந்தித்துப் பேசினார். சட்ட மேதை அம்பேத்கர், பெரியாரை வரவேற்று விருந்தளித் தார். பெரியார் பேசிய பொதுக் கூட்டத்துக்கு அம் பேத்கர் தலைமை தாங்கினார். அவர் பேச்சை பேரறிஞர் அண்ணா தமிழில் மொழி பெயர்த்தார்.

திராவிடர் கழகம் பற்றியும், பெரியாரின் சமூக சீர் திருத்தக் கொள்கைகள் பற்றியும் வடநாட்டார் நன்கு அறிந்து கொள்ள இந்த சுற்றுப் பயணம் உதவியது. பின்னர் பல்வேறு கட்டங்களில், பெரியார் வடநாட்டில் சுற்றுப் பயணம் செய்தார்.

இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சிகளையெல்லாம் தற்போதைய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மிகச் சிரமப்பட்டு தொகுத்து, இரண்டு புத்தகங்களில் அரிய ஆவணமாக்கி இருக்கிறார். படிப்பதற்கு சுவையாகவும், சிந்தைக்கு விருந்தாகவும் இந்த நூல்கள் அமைந் துள்ளன. அபூர்வமான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

(வெளியீடு: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் திடல் 84/1 (50) ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7

விலை முதல் பாகம் ரூ.90. இரண்டாம் பாகம் ரூ.150).

நன்றி: தினத்தந்தி 16.1.2013

தமிழ் ஓவியா said...


விளையாட்டிலும்கூட வருணப் பார்வையா?

கோவையைச் சேர்ந்தவர், பெயர் கவுசல்யா. தந்தையார் இரவு காவலர் (Watchman) இந்தப் பெண் 3ஆம் ஆண்டு பி.காம்., படித்துக் கொண்டு இருக் கிறார். தடகளப் போட்டிகளில் இந்தப் பிற்படுத்தப்பட்ட பெண்மணி இதுவரை தேசிய அளவில் பெற்றுள்ள பரிசுகள் எத்தனை எத்தனை தெரியுமா?

18 தங்கம், 12 வெள்ளி, தென்னிந்திய அளவில் - 23 தங்கம், 15 வெள்ளி, தமிழக அளவில் 60 தங்கம், பெற்று பெரும் சாதனை படைத்துள்ள இந்த வீராங்கனைமீது தமிழ்நாடு அரசு, இந்திய அரசுகளின் பார்வை படாதது ஏன்?

இதுவே அக்கிரகார குஞ்சாக இருந்தால் அய்.நா. மன்றம் வரை கொண்டு சென்று இருக்க மாட்டார்களா?

விளையாட்டில்கூட வருணப் பார்வை தானா?

ஒலிம்பிக் போட்டியில் 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா பல்லிளித்து வருகிறதே - இதுபோன்ற ஒடுக்கப்பட்ட மக்களைத் தேடுங்கள், அங்கே திறமை குடி கொண்டு இருக்கிறது. பதக்கங் களைக் குவிக்கும் ஆற்றல்களுக்குப் பஞ்சமில்லை.

இதற்குப் பிறகாவது அரசுகளின் கவனம் திரும்புமா? எங்கே பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...

அபாயம்!

2011ஆம் ஆண்டில் பாலியல் வன்முறை, கொலை உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரமாம்.

மாசான கங்கை

நாட்டில் புண்ணிய நதிகளான கங்கை உள்ளிட் டவைதான் அதிக மாசுபட்டுள்ளன.
- எல்.கே. அத்வானி - ஒப்புதல் வாக்குமூலம் (மும்பையில் 15.1.2013)

தமிழ் ஓவியா said...


ரூ.700 கோடி நில அபகரிப்புச் செய்த சாமியார்


போபால்: ரூ. 700 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டதாக சாமியார் அசாராம் பாபு மற்றும் அவர் மகன் மீது குற்றச்சாற்று எழுந்துள்ளது. டில்லி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனத் துக்கு உள்ளானவர் ராஜஸ்தான் மாநில சாமியார் அசா ராம் பாபு. பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவர்களைப் பார்த்து அண்ணா என்று அழைத்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்று கூறினார். இதற்கு நாடுமுழுவதும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள 700 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக அசாராம் பாபு மற்றும் அவரது மகன் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது. ஜெயந்த் விட்டமின்ஸ் எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை 2000-மாவது ஆண்டு முதல் அபகரித்து இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நிறு வனத்தின் பங்குகளை வைத்துள்ள ஒருவர் கம்பெனி விவ காரங்களுக்கான அமைச்சகத்தில் புகார் செய்ததை அடுத்து இந்த மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...


தளபதி மு.க.ஸ்டாலின் இப்பொழுது வாசிக்கும் புத்தகம் எது?


நீங்கள் இப்போது வாசித் துக் கொண்டு இருக்கும் புத்தகம்?

மு.க. ஸ்டாலின்: திரா விடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி தொகுத்த வடநாட்டில் பெரியார் என்ற புத்தகம்; பம்பாய், லாகூர், அமிர்தசரஸ், கல்கத்தா, செகந்திராபாத், லக்னோ ஆகிய பகுதிகளுக்குச் சென்று, பெரியார் கொள்கை முழக்கம் இட்டதை நம் மனக்கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது அந்தப் புத்தகம். இன்றைக்கு பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள் அனைத்து மாநிலங் களிலும் பரவி விட்டது. அதற்கு அடித்தளம் அமைத்த பயணத்தைப் பற்றிய முழுமையான நூல் இது. அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக் கும் ஆசிரியர் தொகுத்த இரண்டு பாகங்களும் இன்றைய தலைமுறை அறிய வேண்டியது.

- ஆனந்தவிகடன் 23.1.2013 பக்கம் 43)

தமிழ் ஓவியா said...


மனிதன்


மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


செய்தியும்-சிந்தனையும்

சுரண்டவே!

செய்தி: கோவில்களில் தரிசனத்துக்குக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து 13 லட்சம் பக்தர்கள் கையொப்பமிட்டுள்ளனர். ஒரு கோடி கையொப்பம் பெற்று அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

சிந்தனை: கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி என்பதுதான் நினைவிற்கு வருகிறது.

வேதங்களில் கோவில் அமைப்பு முறை என்பதெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால், சிவன், பிரம்மா, பார்வதி, சுப்பிர மணியன் என்று எந்தப் பெயரில் கடவுளும் கிடையாது.

மக்களின் பணத்தைச் சுரண்டவே பிற்காலத்தில் செய்யப்பட்ட சதிதான் இந்தக் கோவில்கள்.

காயமே பொய்யல்ல!

செய்தி: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 36 வீரர்கள் காயம்.

சிந்தனை: காயமே இது பொய்யடா என்பது உண்மையல்ல. ஜல்லிக்கட்டில் அது நிஜம்.

மிருகத்தோடு சண்டை போடுவது வீரமல்ல; உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், மூர்க்கத்தனத்தோடு காளை முட்டவந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமும், வீரமும் ஆகும்.

கண்மாயில் சிலைகள்

செய்தி: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே செவல் கண்மாயில் மூன்று சாமி சிலைகள் மற்றும் மூன்று காசு மாலைகள் கண்டெடுக்கப்பட்டன.

சிந்தனை: சாமி சிலைக்குச் சக்தி உண்டு - அதைச் சாதாரணமாக நினைக்கவேண்டாம் என்று புரூடா விடுகின்ற பக்தி வியாபாரிகள், பாகவதர்கள், சங்கராச்சாரியார்கள் இது போன்ற செய்திகள் நாளும் வெளிவந்து கொண்டு இருக்கின்றனவே - இதற்கு என்ன பதில்?

இவை கடத்தப்பட்டு இருந்தால், சாமியின் சக்தி என்பது சுத்த கப்சா என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்தானே! மண் மூடிப் போயிருந்தாலும் இதே கேள்விதான்.
ஒவ்வொரு கோவில் பற்றியும் தல புராணங்கள் என்ற பெயரால் எவ்வளவுப் புளுகுகள்! அட, அண்டப் புளுகே - உன் பெயர்தான் கடவுளா?

தமிழ் ஓவியா said...

காலி

செய்தி: சென்னை மாவட்ட ஆட்சியாளர் பதவி கடந்த 50 நாள்களாக காலி!

சிந்தனை: பொதுவாக சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் பதவி என்ற ஒன்று இருப்பதுபற்றி யாரும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

அவ்வளவுக் கனமற்ற பதவி இது. எல்லாம் மாநகராட்சிதான் - போதும் போதாதற்கு மாநில அரசின் தலைமைப் பீடமும் சென்னையில்தானே இருக்கிறது.

150 ரூபாய் நாணயம்

செய்தி: வினேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி ரூ.150 நாணயம் வெளியிடப்படும்.

சிந்தனை: இந்து மதத்தை அமெரிக்காவில் சென்று ஏதோ பரப்பினார் என்பதற்காக இந்த ஏற்பாடு என்றால், கண்டிப்பாகக் கண்டிக்கத் தக்கது. இந்தியா மதச் சார்பற்ற அரசா? இந்து மத அரசா? என்ற கேள்விதான் எழும்.

இந்தியாவில் சமூகச் சீர்திருத்தவாதிகள், சமூகப் புரட்சியாளர்கள் இருக்கிறார்கள். நியாயமாக இவர்களுக்குத்தான் இதுபோன்ற சிறப்புகள் செய்யப்படவேண்டுமே தவிர, மக்களை மடையர்களாக்கும், மதங் கொள்ளச் செய்யும் பேர்வழிகளுக்கல்ல!

கெடு!

செய்தி: கருநாடக மாநில ஆட்சிக்கு இனி நான் கெடு வைக்கப் போவதில்லை - எடியூரப்பா!

சிந்தனை: கெடு வைத்து கெடு வைத்து கெட்டவர் எடியூரப்பாவுக்கு நிகர் எடியூரப்பா தான்.

கருநாடக வாக்காளர்கள் ஏற்கெனவே பி.ஜே.பி.,க்கு கெடு வைத்துவிட்டனர் என்பது மட்டும் உண்மை!

தமிழ் ஓவியா said...

கேள்வி - பதில் சித்திரபுத்திரன்

கடவுள்

கேள்வி: கடவுள் எங்கே இருக்கிறார்?

பதில்: முட்டாள்கள் உள்ளத்தில் இருக்கிறார்.

கேள்வி: கடவுள் எப்போது ஏற்படுத்தப்பட்டார்?

பதில்: மக்கள் காட்டுமிராண்டிகளாய், முட்டாள்களாய் இருந்த காலத்தில்.

கேள்வி: கடவுள் பக்தி எங்கே இருக்கிறது?

பதில்: சிறிது பாகம் மடையர்களிடத்திலும், பெரும் பாகம் அயோக்கியர்களிடத்திலும் இருந்து வருகிறது.

கேள்வி: கடவுளைப் பரப்புவதற்கும், பாதுகாப்பதற்கும் பாடுபடுபவர்கள் யார்?

பதில்: சிறு அளவு மூடர்களும், பெரும் அளவு பார்ப்பனர் களுமேதான்.

கேள்வி: நமது நாட்டில் கடவுள்களால் ஏற்பட்ட பலன் என்ன?

பதில்: ஜாதிப் பிரிவும், பார்ப்பனர் உயர்வும், அயோக்கியத்தன மான வாழ்வும்தான்.

மதம்

கேள்வி: மக்கள் யாவரும் ஒன்றாக இணைய வேண்டுமானால் என்ன ஆகவேண்டும்?

பதில்: மதங்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இந்துமதம்

கேள்வி: மக்கள் பகுத்தறிவாளர்களாய், சமத்துவம் உள்ளவர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாக, ஒழுக்கம், நாணயம், நன்றி, விசுவாசம் உள்ளவர்களாக ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: இந்து மதம் என்னும் பார்ப்பன (ஆரிய) மதமும் அதன் சார்பு நூல்களும் தடை செய்யப்பட்டாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பாரத ஸ்டேட் பாங்கா - பஞ்சாங்கக் குப்பையா?


பாரத ஸ்டேட் பாங்கு என்பது நாட்டு டைமையாக்கப்பட்ட முக்கிய வங்கியாகும். எல்லா மதங்களைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் அதன் வாடிக்கையாளர்களாக உள்ள நிலையில் இந்த வங்கி வெளியிட்டுள்ள மாதாந்திரக் காலாண்டரைப் பார்த்து அதிர்ச்சி அடைய நேரிட்டது.

மதச் சார்பற்ற ஓர் அரசின் நிறுவனம் வெளியிட்ட காலண்டராக அது தோற்றமளிக்கவில்லை.

மாறாக காஞ்சி மடத்தில் தயாரிக்கப்பட்டது போன்ற பஞ்சாங்கக் குப்பையாகவும், இந்துமத சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களின் அடங்கலுமாகவே இருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமை என்று குடிமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் (51A(h)
என்ற கோட்பாடு ஒன்று இருக்கிறது என்ற நினைப்புக் கொஞ்சம்கூட இல்லாத புராணக் குப்பைத் தொட்டியாக இந்தக் காலண்டர் வெளி யிடப்பட்டுள்ளது.

இராகு காலம், எம கண்டம், குளிகை என்பதோடு நிற்காமல் வாஸ்து நாள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. அசல் கஞ்சனூர் பஞ்சாங்கமே தான்!

மாதம் ஒன்று வீதம் 12 தாள்கள் அடங்கியுள்ளன. அவற்றின் பின் பக்கங்களில் இடம் பெற்றுள்ள கிடைத்தற்கரிய சிறப்பான தகவல்கள் என்ன தெரியுமா?

1) யஷ்கானம் எனும் நாட்டியம்பற்றியது. அதைப் பற்றிய குறிப்புகள் என்னென்ன?

கதையில் நல்லவர்கள் கண்ணுக்கு இனிமையான வண்ணங்களிலும், தீயவர்கள் அல்லது ராட்சச வேடம் ஏற்பவர்கள் அதற்கேற்ற வண்ணங்களில் பயங்கரமாகத் தோற்றம் அளிக்கும் வகையில் ஒப்பனை செய்து கொள்கிறார்களாம்.

தீயவர்கள் அல்லது ராட்சசர்களாம் - இதன் பொருளைப் புரிந்துதான்வெளியிட்டு இருக் கிறார்களா? அல்லது அறியாமையின் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்களா?

புராணங்களில், இதிகாசங்களில் ராட்சசர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்க வில்லையா? தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டே அந்த நாட்டுக்குரிய மக்களைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?

இன்னொரு பக்கத்தில் குலசேகர ஆழ்வார் பற்றியதாகும். திருமாலைப் பற்றிப் புகழ்ந்து தள்ளும் பாடல்களும் - விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த பக்கத்தில் இடம் பெற்றிருப்பது என்ன தெரியுமா? வாரணாசி என்னும் காசிபற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.

கங்கைக்கு நிகரான நீருமில்லை. காசிக்கு நிகரான ஊருமில்லை என்ற பீடிகையுடன் இந்து மதத் தலப் புராணக் குப்பை கொட்டப்பட்டுள்ளது - பட விளக்கங்களுடன் அதோடு நிற்கவில்லை. முக்கியமாகக் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டியது ஒரு பக்கம் முழுவதும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பிரதாபங்கள் முழுக்க முழுக்க பல்வேறு தோற்றப் படங்களுடன்

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய; சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய மகா குற்ற வாளிபற்றி அரசு வங்கி வெளியிட்ட காலண்டரில் சாங்கோ பாங்கோமாக வெளியிட்டது எந்த அடிப்படையில்?

இன்னும் உண்டு; அற்புதங்கள் ஆற்றிய திருஞானசம்பந்தர் பற்றி முழு பக்கத்தில் பல வகை படங்களுடன்;

சட்டப்படி நியாயப்படி இப்படி காலண்டர் வெளியிடப்பட்டதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய காலண்டர் அச்சிட்டதற்காக செலவு செய்யப்பட்ட பெருந் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிட மிருந்து பறி முதல் செய்ய வேண்டும். இந்தியா முழுமைக்கும் என்றால் எத்தனைக் கோடி பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும்? அரசு செலவில் இந்துத்துவா பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னணியில் இந்துத்துவா சக்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் - நிதித்துறை இதுபற்றி முழு அளவில் விசாரணை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மை கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக சட்டப்படியாக நடவடிக்கையையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்; நடந்திருப்பது சாதாரண விஷயமல்ல!

ஸ்டேட் பாங்கு என்பது தனியாருடையதோ - குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவருடையதோ அல்ல - எல்லோருக்கும் பொதுவான அரசு சொத்து! அதனை முறை கேடாகப் பயன்படுத்தியுள்ளதால் சட்டப் படியான நடவடிக்கை அவசியம் தேவை! தேவை!!19-1-2013