திருநெல்வேலி
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து தந்தை
பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன
என்ற தகவல் நிச்சயம் தமிழ் நாட்டு மக்களைச் சூடேற்றும் என்பதில்
அய்யமில்லை.
இந்த நிலைக்குக் காரணம் என்ன? மூல ஊற்று எது? என்பது வெளியில் வந்தாக வேண்டும்.
நீராரும் கடலுடுத்த என்ற பாடலை எழுதிய
பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் பெயரால் அமைந்த பல்கலைக் கழகத்தில் இப்படி
ஒரு நிலையா என்ற கேள்வி எழுவது இயல்பே!
தமிழைப் பற்றிச் சொல்லும் பொழுதுகூட
ஆரியம் போல் உலக வழக்கொழிந்ததல்ல என்று தெளிவாகவே சொல்லியுள்ளார். இப்படி
சொல்லுவதற்கு அறிவு மட்டும் போதாது - துணிவும் தேவையாகும்.
அப்படிப்பட்ட பல்கலைக் கழகத்தில்
ஆரியத்தின் அடி வேர் - ஆணி வேர் வரைத் துப்புரவாகத் தோண்டி, எடுத்துத்
தூக்கி எறிந்த பகுத்தறிவுப் பகலவன் பற்றிய பாடம் இடம் பெறக் கூடாது என்று
நினைப்பதன் பின்னணியில் ஆரியம் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும்
கல்வியைக் கொடுக்காதே எனும் சதுர் வர்ணச் சமூக அமைப்பில் அதன் வேரைக்
கெல்லி எறிந்து, உச்சரிக்கும் உதட்டையும், பற்களையும், நாவினையும் பிடுங்கி
எறிந்த இந்தத் தேசத்தின் பெருந் தந்தை - தத்துவப் போதகர் - இனம், மொழி,
பண்பாடு மீட்பர் சுய சிந்தனையாளர் தந்தை பெரியார் பற்றிய பாடங்கள்,
தத்துவங்கள் போதிக்கப்படாத பல்கலைக் கழகம் ஒரு கல்வி நிறுவனமாகவே இருக்க
முடியாது.
தமிழ் நாட்டுக்குரிய மார்க்சியம் என்று சொன்னாலும் அது தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைப் பகுத்தறிவியல் தானே! மறுக்க முடியுமா?
பிறவிப் பேதத்தை வீழ்த்தும் தத்துவத்தைச் சொன்ன ஒரு தலைவரின் அறிவியல் சிந்தனைகளை மாணவர்கள் மனதில் விதைக்காவிட்டால் களைகளும், முட்செடிகளுமாகத் தானே வளருவார்கள்?
பிறவிப் பேதத்தை வீழ்த்தும் தத்துவத்தைச் சொன்ன ஒரு தலைவரின் அறிவியல் சிந்தனைகளை மாணவர்கள் மனதில் விதைக்காவிட்டால் களைகளும், முட்செடிகளுமாகத் தானே வளருவார்கள்?
ஒருமுறை ஆனந்த விகடன் இதழ் கல்விக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று எழுதி இருந்ததே - அக்கிரகார இதழுக்கே தெரிந்த உண்மை இன்றைய பல்கலைக் கழகப் பொறுப்பாளர்களுக்குத் தெரியாமல் போன மர்மம் என்ன?
திராவிடர் இயக்கம் என்று எடுத்துக்
கொண்டாலும், இந்த மண்ணுக்கு உரியது. கல்வியைக் கடை கோடி மனிதர்க்கும்
கொண்டு செல்லக் காரணமாக இருந்தது. சமூக நீதிக்கான முதல் சட்டத்தை
தோற்றுவித்தது திராவிடர் இயக்கம்.
பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் தானே.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து பெண்கள் விடுதலைத் திசையில் புதிய மைல் கல்லைக் கொடுத்தது நீதிக்கட்சி ஆட்சிதானே.
இந்த வரலாறுகளை எல்லாம் நீக்கிவிட்டு
மாணவர்களைப் பழைய புராணக் குப்பைத் தொட்டியில் ஊற வைக்கப் போகிறார்களா?
விஞ்ஞான மனப்பான்மையை அவர்களுக்கு வளர்க்க வேண்டாமா? அப்படியென்றால்
பகுத்தறிவு இயக்கம் நடந்து வந்த பாதைகளை பாடங்களாக வைக்க வேண்டாமா?
தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று
அய்.நா. மன்றம் விருது கொடுத்த தலைவரை, தமிழ் நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்
கழகம் புறந்தள்ளப் பார்ப்பது - புத்திசாலித்தனமல்ல - புத்தி பேதலித்த
நிலைதான்.
அப்பல்கலைக் கழக செனட் மற்றும்
சிண்டிகேட் உறுப்பினர்கள் உடனடியாக இதில் தலையிட்டு, நீக்கப்பட்ட பாடங்களை
மறுபடியும் இடம் பெறச் செய்யும் கடமையைச் செய்து, அவப் பெயரிலிருந்து மீள
வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பிப்ரவரி 2ஆம் தேதி தமிழ்நாடெங்கும்
மாவட்டத் தலை நகரங்களில் இதுகுறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை திராவிடர் கழகத்
தலைவர் அறிவித்துள்ளார். அந்தப் போராட்டத்துக்கு வேலையில்லாமல் செய்தால்
நல்லது; இல்லையெனில் இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படும் வரை
போராட்டம் தொடர்வது தவிர்க்கப்படவே முடியாது. எச்சரிக்கை!
8 comments:
ஆசிரியருக்குக் கடிதம்
பஞ்சாங்க பாங்க்தான்?
வெளியூர் ஞாயிறு 20.1.2013 அன்று வெளிவந்த நமது விடுதலை நாளிதழில் பாரத ஸ்டேட் பாங்கா - பஞ்சாங்கக் குப்பையா? என்ற தலைப்பிலான தலை யங்கம் கண்டேன்.
அத்தலையங்கம் மிக அருமையாக - துணிச்சலாக - மணியாக இருந்தது மதச் சார்பற்ற ஓர் அரசு நிறுவனம் வெளி யிட்ட காலண்டராக அது தோற்றமளிக்க வில்லையென்று குறிப்பிட்டிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது.
மேலும் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போலவே புராணக் குப்பைத் தொட் டியாகவே இந்தக் காலண்டர் வெளியிடப் பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தப் பட்ட மூடத்தன சமாச்சாரங்களின் அடங்க லாகவே இருக்கின்றது.
சட்டப்படி, நியாயப்படி இப்படி காலண்டர் வெளியிட்டதற்கு காரணமான வர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளீர்கள்.
நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில் நாமே நேரடியாக வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தின் வாயிலாக சட்டப்படியான நியாயத்தை பெற வேண்டும் என்ற என்னுடைய இந்த வேண்டுகோளை தங்கள் முன் வைக்கிறேன். அதற்கு தாங்கள் ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
- கவிஞர் எச்.செய்க் முகமது
(நகர கழகத் துணைத் தலைவர்
திராவிடர் கழகம், நாகர்கோயில்)
பெரியாரின் கொள்கைகள் உயிர்பெற வேண்டும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்த நாட்டை வேற்றுமையில் ஒற்றுமை என்று பாராட்டும் தலைவர்கள் ஏராளம் உண்டு. பல சாதிகள், பல மதங்கள், பல மாநிலங்கள், பல மொழிகள் என்று எவ்வளவோ வேற்றுமைகள் இருந் தாலும், அவற்றில் எல்லாம் ஒற்றுமை காணப்படவேண்டும் என்பதுதான் மறைந்த பல தலைவர்களின் கனவாக இருந்தது. மற்ற வேற்றுமைகளில் எல் லாம் பண்டைய காலங்களில் ஒற்றுமை இருந்தாலும், சாதி விஷயத்தில் மட்டும் நீண்ட நெடுங்காலமாக ஆண்டான் அடிமை, மேல் சாதி கீழ் சாதி என்று பெரிய பிரிவினை இருந்தது. கிழக்கே தோன்றிய விடிவெள்ளி காண் என்பது போல, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இந்த தமிழ்நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்த பிறகுதான், அவரது முழக்கங்களி னால் இந்த சமுதாயம் விழித்துக் கொண்ட பிறகுதான், இந்த வேற்றுமை உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின.
பெரியாரை ஏதோ கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர் என்பதுபோல மட்டும், சில சக்திகள் சித்தரிக்கிறதே தவிர, உண்மையில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, நலிந்த மக்கள் உயர்வுபெற வேண்டும், பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து எழுந்து நிற்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணில் அடங்கா சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதில், மிக முக்கியமானதாக அவர் கருதிய சீர்திருத்தம், பொதுமனித சமூகத்தில் மக்களின் பிறப்பின் காரண மாக உயர்வு தாழ்வு கற்பித்திருப்பதை பற்றியதாகும். இந்தமுறை நமது இந்தியாவைதவிர, வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மோசமான கற்பனையின் மீது கையாளப்படுவதே இல்லை என்று முழங்கி, தன் பணிகளை தொடங்கினார். அவர் விதைத்து சென்ற அந்த கொள் கைதான் இன்று செடியாகி... மரமாகி... ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று எல்லோரும் மகிழ்ந்து கொண்டிருக்கிற நேரத்தில், இடிவிழுந்ததை போல, ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் சமூக ஆர்வலர் என்றும், எழுத்தாளர் என்றும் சொல்லிக்கொள்கிற ஆஷிஸ் நந்தி என்பவர் பேசியிருக்கிறார். பெரும் பாலான ஊழல்வாதிகள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்தான். இப்போது மலைவாழ் மக்கள் அந்த பட்டியலில் அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு சொல்வேன். குறை வான ஊழல் இருக்கும் மாநிலம் ஒன்று உண்டு என்றால், அது மேற்குவங்காளம் தான். அங்கே கடந்த 100 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் சாதியை சேர்ந்த யாரும் அதிகாரத்தின் பக்கத்திலேயே நெருங்க முடிய வில்லை. மிகவும் சுத்தமான மாநில மாக அது இருக்கிறது என்று சேற்றை வாரி இறைத்திருக்கிறார்.
இந்த வார்த்தைகளை கேட்டபிறகும், பொங்கியெழ வேண்டிய அரசியல் வாதிகள் ஏதோ வாய் மூடி மவுனியாக இருக்கிறார்கள். நந்தி என்று கூறப்படும் இந்த மனிதரின் முதல் குறி, பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் சமுதா யத்தை சேர்ந்த அரசியல்வாதிகள்தான். அடுத்த குறிதான் மற்ற அதிகாரிகள் மற்றும் இந்த சமூகத்தை சேர்ந்த மக்களை பற்றியதாகும். வடநாட்டில் உடனடியாக ஏதோ சில எதிர்ப்புகள் எழுந்ததை கண்டவுடன், உப்புக்கு சப்பாக சில விளக்கங்களை நந்தி கூறியிருக்கிறார். ஆனால், இந்த விளக்கங்கள் எல்லாம் நிச்சயமாக அவர் ஏற்படுத்திவிட்ட பெரிய காயத்திற்கு மருந்தாய் போய்விடாது. இதற்கு ஒரு காரணம் என்னவென்றால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் சாதிகளை சேர்ந்த மக்களே ஒற்றுமை யாக இருந்து உயர்வடைய வேண்டும் என்று நினைக்காமல், அவர்களுக்குள்ளே சமீபகாலமாக மோதல்கள், பூசல்கள் ஏற்படுவதுதான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையே மோதல்கள் நடப்பது குறித்தும், பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக் களுக்கு இடையே நடக்கும் மோதல் கள் குறித்தும் கூறும்போது, ஒரே நீரோடையில் புலியும், மானும் தண்ணீர் குடிக்க முடியாவிட்டாலும், மானும் மானுமாவது ஒற்றுமையோடு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, அவைகளுக்கு இடையே பலத்த சண்டைகள் ஏற்பட்டு ஒன்றையொன்று காயப்படுத்திக் கொள்கிறதே! என்று கவலையோடு கூறினார். அந்த உவமையின் உண்மை வெளிப்பாடாக சமீபகாலங்களில் ஏற்படும் மோதல்கள், தகராறுகள் காரணமாகத்தான் இப்படிப்பட்ட கருத்துகள் தைரியமாக உலா வருகின்றன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி இனி தமிழ்நாட்டில் நிறை வேறிவிடக்கூடாது. நந்தி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழக அரசியல்வாதிகள் முன்னணி யில் நிற்கவேண்டும். பெரியாரின் கொள்கைகள் உயிர்பெற வேண்டும்.
நன்றி: தினத்தந்தி தலையங்கம் (29.1.2013)
மூட மக்கள்
ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)
டெசோ சார்பில் தலைவர்கள்
இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் மான்டிநீக்ரோ தூதருடன் சந்திப்பு
ஈழத் தமிழர்கள் அவல நிலைபற்றி எடுத்துக் கூறி விளக்கம்
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகோள்!
பேரா. சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழர் தலைவர் கி.வீரமணி, குடியரசுத் தலைவர் மாண்பமை பிரணாப்முகர்ஜி, தளபதி மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி., தொல். திருமாவளவன் எம்.பி., (புதுடில்லி, 28 .1.2013)
புதுடில்லி, சன.29- டெசோ அமைப்பின் சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியாவுக்கான மான்டிநீக்ரோ நாட்டின் தூதர் ஆகியோர் சந்திக்கப்பட்டு, இலங்கையில் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து வாழ்வுரிமை பாதிக்கப்பட்டுள்ள அவல நிலை நீக்கப்பட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோளும் முன் வைக்கப்பட்டது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் ஈழத் தமிழர்கள் அன்றாடம் அனுபவிக்கும் துயரங்களை விளக்கும் குறுந்தகடுகளும், ஒளிநாடாப் பேழைகளும் அப்பொழுது அளிக்கப்பட்டன.
தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைத் தொடர்பாக, தமிழீழ ஆதரவாளர்களின் கூட்டமைப்பின் (டெசோ) உறுப்பினர்கள் 1) தளபதி மு.க. ஸ்டாலின் (பொருளாளர், தி.மு.க.), 2. தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), 3. தொல். திருமாவளவன், (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) 4. பேரா. சுப. வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), 5. சுப்புலட்சுமி ஜெகதீசன் - இவர்களோடு ஒருங்கிணைப்பாளர் திமு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் ஜனவரி 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் உள்ள அய்.நா. சபையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள 47 நாடுகளின் தூதுவர்களைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, டெசோ மாநாட்டின் முக்கிய தீர்மானங்களைத் தந்து அவர்தம் ஆதரவினைக்கோரி ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்கத் தங்கள் பணியை நேற்று தொடங்கினார்கள்.
மான்டிநீக்ரோ நாட்டின் தூதர் சந்திப்பு
பேரா. சுப. வீரபாண்டியன், டி.ஆர். பாலு எம்.பி., தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், மான்டிநீக்ரோ நாட்டிற்கான இந்தியத் தூதர் ஜேனிடார்பரி, தொல். திருமாவளவன் எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன். (புதுடில்லி 28.1.2013).
இதன் தொடக்கமாக நேற்று (28.1.2013) மாலை 4 மணிக்கு மான்டிநீக்ரோ நாட்டின் கவுரவ தூதுவர் டாக்டர் ஜேனிடார்பரி அவர்களை அந்நாட்டின் தூதரகத்தில் சந்தித்து, இலங்கையில் இன்று வரை நடந்து வரும் அவல நிலைகளின் ஒலி, ஒளிப் படத்தையும், டெசோ அமைப்பு சார்பாக அய்.நா. மாமன்றத்திற்கு அளித்த கருத்துக்கள் அடங்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்ட மனுவையும் அளித்தனர். மேலும் மனுவைப் பெற்றுக் கொண்டு, இப் பிரச்சினை தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களை உறுப்பினர்கள் எடுத்துக் கூற, முழுவதையும், கேட்டும், அவர்கள் ஏற்கெனவே அறிந்த கருத்துக்களையும் ஒப்பிட்டு, இப்பிரச்சினையில் தம் நாட்டின் சார்பாக எவ்வாறெல்லாம் உதவ முடியுமோ அத்தனையையும் செய்வதாக உறுதியளித்தார்கள். மனித வள வளர்ச்சி குறியீட்டில் (HDI) உலகின் 54ஆவது தர வரிசையிலே உள்ள நாடு மான்டிநீக்ரோவாகும். தென் கிழக்கு அய்ரோப்பாவில் கொஸோவா, குரோஷியா, போஸ்னியா ஆகிய நாடுகளுக்கு அருகே அமைந்த ஒரு சிறிய நாடு.
இவர் ஒரு பெண் தூதுவர்; பெண்களுக்கே உரித்தான தாயுள்ளத்தோடு இப்பிரச்சினைக்கு மேலும் தனது கருத்தாக அனைத்து நல்லுறவு நாடுகளின் தூதர்களை ஒரே இடத்தில் இந்திய அரசின் மூலமாக அழைத்து ஒரு சிறப்புக் கூட்டம்கூட நடத்தலாம். எங்கள் நாட்டின் பிரதமர் திரு. மிலோ டியூக்கநோவிக் இந்தியா வரும்போது இதை அழுத்தம் தரும் அளவிற்கு நான் இதைச் செய்வேன் என்றும், எங்கள் பிரதமர் இதுபோன்று உலக நாடுகளில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் மனப்பான்மை கொண்டவர் என்றும் தம் நாட்டின் பங்கை சிறப்பாக இப்பிரச்சினைக்கு முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக தெரிவித்தார். அய்.நா. மாமன்றத்திலும் தொடர்ந்து மான்டிநீக்ரோ, இப்பிரச்சினையைத் தீர்க்க தொடர்ந்து வலியுறுத்தும் என்ற நல்லெண்ணத்தை டெசோ அமைப்பின் குழுவினரிடம் எடுத்துரைத்தார்.
குடியரசுத் தலைவரோடு சந்திப்பு
பின்னர் மாலை 6 மணியளவில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி அவர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் டெசோ சார்பில் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் சந்தித்து, தற்போதுள்ள இலங்கைப் பிரச்சினை, தமிழர்களின் நிலை, தமிழர்கள் பகுதிகளெல்லாம் சிங்களமயமாக்கும் நிலை குறித்தெல் லாம் குழுவின் சார்பாக தி.மு.க. சார்பில் தளபதி அவர்களும், தமிழர் தலைவர் அவர்களும் விரிவாக எடுத்துக் கூறினர். தொடர்ந்து டெசோ அமைப்பின் சார்பிலான கோரிக்கை மனுவையும், இலங்கையில் தற்போது நடந்து வருகிற சம்பவங்களைச் சித்திரிக்கும் ஒலி, ஒளி நாடா பிரதிகளையும் வழங்கினர்.
குழு வினரின் ஆக்கபூர்வமான கருத்துக்களை குடியரசுத் தலைவர் அவர்கள். அனுதாபத் துடன் கேட்டு தான் இதுபற்றி என்ன செய்ய இயலுமோ அதைச் செய்வதாக உறுதி அளித்தார்.
இந்தியா அழுத்தம் தர வேண்டும்!
இலங்கைப் போர் முடிந்து 3,4 ஆண்டுகள் ஆன நிலையிலும், உயிருடன் வாழும் ஈழத் தமிழர்கள் மேலும் மோசமாகி (Bad to Worse)யுள்ளார்கள். கிழக்கு வடக்குப் பகுதியில் தமிழர்கள் இராணுவ ஆட்சியின்கீழ் தான் இன்னமும் அவதிப் படுகின்றனர். முள்வேலி முகாம்களில் வாழும் அவலமும் உள்ளது; தமிழர்கள் பகுதிகளில் திட்டமிட்டே சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்படுகின்றன.
உறுதியளித்தபடி எந்த அரசியல் தீர்வை யும் இலங்கை அரசு அளிக்க இதுவரை முன்வரவில்லை. நமது இந்திய அரசு இதுபற்றி அழுத்தம் தர வேண்டியது அவசர - அவசியமாகும் என்பதை டெசோ குழுவினர் குடியரசுத் தலைவர் அவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்து, டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள், DVD ஒளிக்காட்சிகள் அடங்கிய பேழைகள் உட்பட வழங்கினர்.
டெசோ உறுப்பினர்களுடன் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் (புதுடில்லி, 28.1.2013)
அமெரிக்கத் தூதருடன் இன்று சந்திப்பு
இன்று முற்பகல் அமெரிக்கத் தூதர், எஸ்டோனிய நாட்டுத் தூதர், இத்தாலி நாட்டுத் தூதர் ஆகியோரைச் சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நாளையும் சில நாட்டுத் தூதுவர்கள் சந்திக்கும் வாய்ப்புகளும் ஏற்பாடாகி வருகின்றன.
- டில்லி நமது சிறப்புச் செய்தியாளர்
கழகப் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி!
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பெண்ணியம், தலித்தியம் மாற்றப்படவில்லை
பல்கலைக் கழகம் அறிவிப்பு
திருநெல்வேலி, ஜன. 30- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உள்பட்ட கல்லூரி களில் 2012-2013 ஆம் கல்வியாண்டில், தமிழ் இளங்கலை (பி.ஏ., தமிழ்) பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டக் குழு கூட்டத்தில் மூன்றாம் பருவத்திற்குரிய துணைப் பாடமாகிய (Allied Paper) பெண்ணியம் மற்றும் நான்காம் பருவத்திற்குரிய துணைப் பாடமாகிய (Allied Paper) தலித்தியம் என்ற பாடம் நீக்கப்பட்டுள்ளது என்று ஒரு சில வார இதழ் மற்றும் செய்தித் தாளில் வெளியானது. 29.1.2013 அன்று நடைபெற்ற தமிழ் பாடத் திட்டக் குழுக் கூட்டத்தில் மூன்றாம் பருவத்திற்குரிய பெண்ணியம் மற்றும் நான்காம் பருவத்திற்குரிய தலித்தியம் என்ற பாடம் மாற்றம் செய்யப்படவில்லை என பாடத் திட்டக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: மேற்கண்ட பாடங்கள் நீக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவலையொட்டி 2.2.2013 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆத்தூர் மாநாட்டில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைக் கழகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது என்பதை அறிவிக்கிறோம்.
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
தினத்தந்தி பார்வையில் அய்ரோப்பாவில் பெரியார்
அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளை சுற்றிப் பார்த்த வன் பி.ஏ. படிப்பாளிக்கு சமமாகும் என்கிறார், தந்தை பெரியார். அவர், இலங்கை, ரஷியா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மக்களின் வாழ் வும், சமுதாய உணர்வும் எப்படி இருக்கிறது என்பதை நேரில் கண்டறிய 1931 டிசம் பர் முதல் 1932 நவம்பர் வரை, சாதாரண மக்களு டன் இணைந்து கப்பல்மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண் டார்.
அவரது அனுதாபங்கள், வெளிநாடுகளில் அவருக் குக் கிடைத்த வரவேற்புகள், அங்கு அவர் ஆற்றிய சொற் பொழிவுகள் ஆகியவற்றை அந்தக் காலத்தில் வெளியான குடிஅரசு பத்திரிகை அவ்வப்போது பிரசுரித்தது. முக்கிய மான பல வரலாற்று தகவல்கள் அடங்கிய அந்த செய்திகளை, ஆசிரியர் கி. வீரமணி பூமிக்குள் புதைந்து கிடக்கும் வைரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு வருவது போல, அரிய பல செய்திகளை அழகாக தொகுத்து தந்து இருக்கிறார்.
அத்துடன், பெரியார்மீது நடைபெற்ற தேசத் துரோக வழக்குபற்றிய விவரங்களை யும், பெரியாரின் அரிய புகைப்படங்களையும் இதில் இடம்பெறச் செய்ததன்மூலம், ஈ.வெ.ரா. என்ற மாமனிதரை வழிவழியாக வரும் சமுதாயம் முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் இந்தப் புத்தகத்தை தந்து இருப்பது பாராட்டுக்குரியது.
(வெளியிட்டோர்: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 84/1,(50), ஈ.வெ.ரா. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7; விலை: ரூ.150).
நன்றி: தினத்தந்தி, 30.1.2013
Post a Comment