Search This Blog

11.1.13

பெண்கள் எந்த ஆடையை அணிவது? மனுதர்மவாதிகள் இன்னும் சாகவில்லை!

மனுதர்மவாதிகள் இன்னும் சாகவில்லை

பெண்களைப்பற்றி ஆண்கள்தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆள் ஆளுக்கு அறிவுரைகளை அள்ளி விடுகிறார்கள்.

பெண்கள் ஜீன்ஸ் போடக் கூடாது; குட்டைப் பாவாடை அணியக் கூடாது என்கிறார்கள். புதுச்சேரியிலோ பெண் கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என்று அருள் வாக்குத் தருகிறார்கள். பெண்கள் பற்றி ஆண்கள் பேசும் மட்டும் பெண்கள் பெண்ணுரிமை எங்கிருந்து குதிக்கப் போகிறது?

அதைத்தான் தந்தை பெரியார் திருப்பித் திருப்பி வலியுறுத்திக் கொண்டுள்ளார்.

இந்து சமூக அமைப்பில், சூத்திரர்கள், பஞ்சமர்கள், பெண்கள் எல்லாம் பேசக் கூடாதவர்கள். தங்கள் உரிமை களைப்பற்றி வாய்த் திறக்கக் கூடாதவர்கள்.
பெண்களையும், சூத்திரர்களையும் கொல்லுவது பாவமல்ல என்கிறது மனுதர்மம். பாவ யோனியில் பிறந்த வர்கள் என்கிறது கீதை.

பெண்கள்  தங்கள் உரிமைகள் பற்றிப் பேச வேண்டிய முக்கியமான இடம் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த இடம்!

ஆம், சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும்,  பெண்களின் உரத்த குரல் உக்கிரமாக  வெடித்தாக வேண்டும். மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களுக்கு,  50 விழுக்காடு இடங்கள் கிடைப்பது தான் நியாயம்.

ஆனால் நிலைமை என்ன 33 விழுக்காட்டுக்கே தாளம் போட வேண்டி இருக்கிறதே.

1996ஆம் ஆண்டு முதல் இந்த மசோதா தத்தளித்துக் கொண்டு இருக்கிறதே!
1952 முதல் தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 10 விழுக் காட்டு எண்ணிக்கையை பெண்கள் தாண்டவில்லையே! அதிகபட்சம் 2009 நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் சதவிகிதம் இந்தியாவில் 10.7 ஆகும்.
முசுலிம் நாடுகளில் பெண்களுக்கு உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவார்கள். உண்மை என்ன வென்றால் முசுலிம் நாடுகளைவிட இந்தியா பின் தங்கியே உள்ளது. உலக வரிசையில் இதில் இந்தியா வுக்குள்ள இடம் 104; பாகிஸ் தானுக்கோ 42 ஆம் இடம் போதுமா!

இந்தியாவில் அனைத்து மாநிலங் களிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 4030 என்றால், பெண்கள் வெறும் 311 பேர் மட்டுமே!

இந்த நிலை நீடிக்கு மட்டும் பெண் கள் குரல் பிரதிநிதித்துவ சபைகளில் ஒலிப்பதெங்கே?


பெண்கள் எந்த ஆடையை அணிவது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் ஆண்கள் என்பது எவ்வளவு கேவலம்?

மருமகளை மாமியார் எட்டி உதைத்தால் அது ஒன்றும் குற்றமல்ல; என் மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான் என்று மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல.  இந்தியக் குற்றவியல் பிரிவு 498 அவை தண்டனைக்குரியதல்ல என்று சொல் லுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கறாராகத் தீர்ப்புக் கூறி விட்டதே! சென்ற நூற்றாண்டில் அல்ல - இந்த நூற்றாண்டில்தான் 27.7.2009இல் வந்த தீர்ப்புதான்.

முதல் இந்தியன் நீதிபதி என்று பெருமை சாற்றும் ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் கணவன் மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்புச் சொல்லவில்லையா?

காலம் மாறினாலும் மனுதர்ம வாதிகள் வாழையடி வாழையாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்னும் அவர்கள் சாகவில்லை! அதன் அடிப்படையில்தான் சர்சங் சலாக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) மோகன் பகவத்  எனும் சித்பவன் பார்ப்பனர் பகருகிறார்.

                      -----------------------------"விடுதலை” 11-1-2013

19 comments:

தமிழ் ஓவியா said...


ஜால்ராவா?


தி.மு.க.வின் அடுத்த தலைமைக்கு அடை யாளப்படுத்தப்பட்ட தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை கொடுத்து விட்டாராம்.

இது தினமலர் கும் பலுக்குக் குமட்டிக் கொண்டு வருகிறது. ஜால்ரா சத்தமாம் அது.

கார்ட்டூன் போட்டு வேறு கிண்டல்!

யாருக்கும் ஜால்ரா அடிப்பது திராவிடர் கழகத் தின் வேலையல்ல. அடிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. தலைப்புக் கொடுப்பதிலிருந்து செய்தி வெளியிடும் முறைவரை ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் தினமலர்களா ஜால்ராவைப் பற்றிப் பேசு வது!

ஒரு கருத்தை வர வேற்பது ஜால்ரா என்று பொருளானால் எந்த ஊடக மும் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது - கூடவும் கூடாது.

திராவிடர் கழகம் தாய்க் கழகம் என்கிற முறையில் தி.மு.க. பற்றிக் கருத்துக் கூற உரிமையுள்ளது.

இதற்கு முன்பும்கூட திராவிடர் கழகம் அந்தக் கடமையைச் செய்துள்ளது. திமுகவிலிருந்து எம்.ஜி. ஆர். பிரிந்தபோதுகூட தந்தை பெரியார் எம்.ஜி. ஆரை அழைத்துப் பேச வில்லையா!

கலைஞருக்கும் நாவல ருக்கும், கருத்து மாறுபாடு ஏற்பட்டபோது அன்னை மணியம்மையார் அந்தக் கடமையினைச் செய்துள் ளார்களே.

ஏன்? தி.மு.க., அ.தி. மு.க. இணைப்புக்குக்கூட திராவிடர் கழகத் தலைவர் தன்னாலான முயற்சியை மேற்கொள்ளவில்லையா?

இந்திய யூனியன் முசுலிம் லீக்கில் அப்துல் சமது, அப்துல் லத்தீப் ஆகியோருக்கிடையே கருத்து வேற்றுமை வந்த போதுகூட சிறுபான்மை மக்கள் மத்தியிலே பிளவு வரக்கூடாது; அது பாது காப்பானதல்ல என்ற அடிப்படையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதுண்டே!

மீண்டும் இரு அமைப் புகளும் ஒன்று சேர்ந்த போது நாவலர் அப்துல் சமது அவர்கள் முதலாவ தாகத் தொடர்பு கொண்டு நன்றி சொன்னது திரா விடர் கழகத் தலைவர் அவர்களுக்குத்தான் என்பதெல்லாம் புரியாமல் பூணூல்கள் பேனா பிடிக்கக் கூடாது.

தி.மு.க.வில் பிளவு ஏற்படாதா! அதன் மூலம் பார்ப்பனீயம் என்ற பார்த் தீனியம் தமிழ் மண்ணில் மண்டக் கூடாதா என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த கூட்டத் துக்கு தி.மு.க.வில் அது நடக்கவில்லை என்கிற போது அய்யோ அப்பா அம்மா என்று அம்மிக் குழ வியை எடுத்துக் கொண்டு வயிற்றில் குத்திக் கொள் கிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.

தினமலர், நமது எம்.ஜி.ஆர்.கள் புலம்புவது திராவிடர் கழகத் தலைவர் சரியான கடமையை சரி யான தருணத்தில் மிகச் சரியாகச் செய்துள்ளார் என்பதற்கான நற்சான்றிதழே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மோடி மஸ்தான் வேலை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறிவு சார் சமுதாயத்தை உருவாக்கு வதில், உலக சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற, குஜராத் மிகுந்த ஆர்வத்துடன் தயாராக உள்ளது

- என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர பாய் தாமோதர தாஸ் மோடி சிலாகித்து இருக்கிறார்.

ஊடகங்கள் பார்ப்பனர்கள் கைகளிலும், இந்துத்துவாவாதிகளின் கரங்களிலும் மிகப் பாதுகாப்பாக இருக்கும் காரணத்தால், திருப்பித் திருப்பி பொய்களை அவிழ்த்துக் கொட்டி, மக்கள் மத்தியில் மாயப் பிம்பங்களை உருவாக்கி விடுகிறார்கள்.

உண்மையைச் சொல்லப் போனால் இந்தியாவின் பல மாநிலங்களைவிட குஜராத் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியே இருக்கிறது.

இந்தியாவின் ஏழை மாநிலமான உத்தரப் பிரதேசத்தைவிட குஜராத்தில் தான் பசிப் பட்டினிக்காரர்கள் அதிகம் என்று சொல்லி யிருப்பவர் ஓர் அரசியல்வாதியல்ல;

பிரபலப் பொருளாதார நிபுணர் அபுசலே ஷெரீப் (ஒருக்கால் இவரையும் முஸ்லீம் முத்திரை குத்தி புறக்கணித்தாலும் புறக்கணிப்பார்கள் இந்துத்துவாவாதிகள்).

இந்தியத் திட்டக் குழு சொன்னது என்ன?

நுண்ணூட்டச் சத்து குறைபாட்டில் குஜராத் மாநிலம் இன்னொரு சோமாலியா! என்று கூறியுள்ளதே! குஜராத் மாநிலத்தில் 44.6 விழுக்காடு குழந்தைகள் (5 வயதுக்குட்பட்ட வர்கள்) சத்துக் குறைபாட்டால் அல்லற்படுகின் றனர் என்று கூறுவது திட்டக் குழுவாகும்.

மொத்த உற்பத்தியில் 3ஆவது இடத்தில் இருக்கும் குஜராத், தனி நபர் பங்களிப்பால் 9ஆவது இடம்; கல்வியில் 14ஆவது இடத்தில் தான் மோடி ஆளும் குஜராத் மாநிலம் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே எல்லாத் துறைகளிலும் முதல் இடத்தில் இருப்பது குஜராத் மாநிலம் என்பது அசல் மோடி மஸ்தான் வேலையே!

அடுத்தவர்களைச் சுரண்ட வேண்டும், ஒடுக்க வேண்டும் என்ற அமைப்புகள் ஆதிக்கவாதிகள்! அந்த முத்திரை தங்கள்மீது விழுந்து விடக் கூடாது என்பதற்காக திசை திருப்பிட வேறு கல்யாணக் குணங்களைப் பெரிதுபடுத்தி விடுவார்கள்.

மோடி ஆட்சியில் தான் 2000 முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக் கான சிறுபான்மையினரின் வீடுகளும், வணிக நிறுவனங்களும் கொளுத்தப்பட்டன மோடி அரசின் திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தினால் நிகழ்ந்தவை இவை!

இந்தியாவில் மட்டுமல்ல; மோடி அரசின் இந்தப் பிற்போக்குத்தனம் உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

அமெரிக்கா ஒரு முறை அல்ல - இரு முறை மோடிக்கு விசாவை மறுத்துவிட்டது. குஜராத் நிகழ்வுக்குப் பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்லுவேன் என்று அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி கூறினாரா - இல்லையா?

குஜராத்தில் பொடாவின் கீழ் மோடி அரசில் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால், அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர். அதாவது பாதிக்கப்பட்ட சமூகத்தினரே கைது செய்யப்பட்டனர். பாதிப்புக்குக் காரணமான சமுதாயத்தினர் ஒருவர்கூட கைது செய்யப் படவில்லை.

இந்தப் பிற்போக்குவாதிதான் அறிவார்ந்த சமுதாயத்தினை உருவாக்குவதில் உலக சமுதாயத்துடன் இணைந்து பணியாற்றப் போகிறாராம்.

இப்படிப் பெரிய பெரிய விடயங்களைப் பேசி தன்னை ஒரு பெரிய நிலைக்கு உயர்த்திக் காட்டி, அதன் மூலம் பிரதமர் நாற்காலிக் கனவைக் கண்டு கொண்டுள்ளார் இந்த மோடி மஸ்தான். சூட்சமம் புரிகிறதா?

தமிழ் ஓவியா said...


மூடப் பழக்கத்தின் காட்டு விலங்காண்டித்தனம்


தினகரன் 2.1.2013 தேதி இதழில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பீராஜனூர் எனும் கிராமத்தில் சண்முகம் என்ற விவசாயி கடந்த 15 வருடங்களாக சபரி மலைக்குச் சென்று வருகிறார். வழக்க மாகச் சபரிமலைக்குச் செல்லும்போது வீட்டின் அருகில் உள்ள ஒரு கருங் கல்லைக் கருப்பன் சாமியாக வழிபட்டு வந்தார்! தற்போது சபரிமலைக்குச் செல்லும்போது கல்லை எடுக்கச் சென்றபோது சதுரமாக இருந்த கருங்கல் தற்போது பெரிதாகி விட்டதாம்? கல் வளர்ந்த செய்தி அறிந்த சுற்று வட்டார மக்கள், அங்கு திரண்டனர். கல் வளர்ந்தது பற்றி விவசாயி ஒரு சாமியாரிடம் குறி கேட்டாராம். குறி சொன்ன முட்டாள் அந்த கருங்கல் அய்யப்பன் சாமி என்றும், அங்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். கருங்கல்லை சாமியாராகப் போற்றி பூசை செய்து வருகின்றனர்! இதைப் பார்க்க சுற்று வட்டார மக்கள் விவசாயியின் வீட்டிற்குத் திரண்டு வருகின்றனர்.

கருங்கல் எப்படி வளர்ச்சி அடையும் என்று சிந்திக்கும் பகுத்தறிவு அந்த மக்களுக்கு இருக்க வேண்டாமா? குறி சொல்பவர் அந்த கல் அய்யப்பசாமி என்று சொன்னால் அப்படியே நம்பி விட வேண்டுமா?

அதே தினகரன் இதழில் 9ஆம் பக்கத்தில் காட்டுவிலங்காண்டித்தன மான ஒரு செய்தி. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு குரும்பா, குருமன்ஸ் இன மக்களின் கடவுளான வீரபத்ரசாமி திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - முக்கண்டப்பள்ளியில் சனவரி 1ஆம் தேதி நடந்தது. அங்குள்ள தோப்பம்மா மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடந்த விழாவில் வீரபத்திர சாமி, சித்தப்ப சாமி என பல்வேறு சாமிகளை வைத்து பூசை கள் நடத்தினர். பின்னர் பக்தர்கள் வாலுடன் நடனமாடினர். குடும்ப நலன் (!) வேண்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கைகளை மேலே உயர்த்தி தங்கள் குலதெய்வத்தை வணங்கினர். அவர்கள் தலைமீது கோயில் பூசாரி தேங்காய்களை உடைத்தார். தலையில் தேங்காய் உடைத்தால் மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என்று நரம்பியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொது நல அரசு இதைத் தடை செய்ய வேண்டும்.

தேங்காய் உடைப்பதைத் தொடர்ந்து சிறுமியர் மற்றும் பெண்களைப் பேய் நெருங்காமல் இருக்க, பூசாரி சாட்டை யால் அடிக்கும் காட்டுமிராண்டித்தன மான வழிபாடும் நடந்தது.

இந்தக் கேவலமான நிகழ்ச்சியை படித்த இளைஞர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சில முட்டாள்கள் விநாயகர் சிலை பால் குடிக்கிறது என்ற பொய்யைக் கிளப்பி விட்டனர். பல முட்டாள்கள் நடக்காத இந்த நிகழ்ச்சியை க்யூ வரிசையில் நின்று பார்த்தனர். இதற்குக் காவல் துறை பாதுகாப்பு வேறு.
திராவிடர் கழகம் இந்த முட்டாள் தனத்தை எதிர்த்து விடுதலை இதழிலும் மேடைகளிலும் தீவிர பிரச்சாரம் செய்த பின் இந்த கோமாளித்தனம் ஒரு முடி வுக்கு வந்தது.
சென்ற 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங் களின் சில கிராமங்களில் இரத்தக் காட்டேரி, கால்நடைகளைத் தாக்கிய தால் இறந்ததாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உடனடி யாக கழகத் தொண்டர்கள் பொய் வதந்தியை எதிர்த்து பிரச்சாரப் பணி மேற்கொள்ள ஆணையிட்டார். அதன்படி 2012 ஏப்ரல் 6,7,8 ஆகிய நாள்களில் தருமபுரி மாவட்ட கிராமங்களில் பெரியார் தொண்டர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்து இரத்தக் காட்டேரி பற்றிய மூட நம்பிக்கையை ஒழித்தனர்.

ஆண்டுதோறும் அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பலர் சாலை விபத்தில் இறக்கின்றனர். 2.1.2013 அன்று கேரள மாநிலம் தென் மலை அருகே பக்தர்கள் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரு பக்தர் இறந்தார். 13 பக்தர்கள் புனலூர் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (தினமணி நாள்: 3.1.2013).

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் இயங்கி வரும் திராவிடர் கழகமே இல்லையென்றால் தமிழகத்தில் மூலைக்கு மூலை முட்டாள்தனமும், மூடப்பழக்கங்களும் கொடி கட்டிப் பறக்கும். சென்ற கார்த்திகை மாதம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தைக் காண 15 இலட்சம் பக்தர்கள் கூடினர். இலட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குச் சரியான உணவு கூட கிடைக்காத நம் நாட்டில் 5000 கிலோ நெய்யைக் கொப்பரையில் கொட்டி தீபத்தை பத்து நாட்களுக்கு எரிய விடுகின்றனர்.

இராமாயணமும், மகாபாரதமும் உண்மையானவை அல்ல. கற்பனைக் கதைகள் என்று கூறிய பண்டித நேரு முட்டாள்களின் கடவுள் வழிபாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

எடுத்ததையெல்லாம் கடவுளாக்கி வழிபட்டு கோயில்களின் எண்ணிக் கையை அதிகரிக்கும் விசித்திர வழக்கம் இந்தியாவில் இருக்கிறது. பெயரளவில் பக்தி பண்ணிவிட்டு நடைமுறையில் நேர்மாறான செயல் களைச் செய்வதும் நம்மவர் வழக்கமாகி விட்டது(விடுதலை ஞாயிறு மலர் 24.11.2012).

- இர. செங்கல்வராயன், செய்யாறு

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் சிலை


01.01.2000இல் உலகளவு புகழையும், சிறப்பையும் தமிழுக்கும், தமிழருக்கும் பெற்றுத் தந்த அய்யன் திருவள்ளுவர் பெருந்தகைக்கு முக்கடல்கள் முழக்கமிடும் இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் முகில் முட்டும் சிலையெடுத்தார் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

தமிழகத் தமிழாசிரியர் கழகத்திலிருந்து 1330 தமிழாசிரியர்கள் வெண்ணிற ஆடை அணிந்து, ஆளுக்கு ஒரு குறள் எழுதிய அட்டையை ஏந்தி, கோட்டையத்திலிருந்து நடைப்பயணமாக, முழக்கத்துடன் சென்று சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தோம். அது எவராலும் மறக்க முடியாது.

அச்சிலை கடல் காற்று ஈரப்பதத்தாலும், கடல் உப்புத் தண்ணீராலும், சேதமடையாமலிருக்க, மண்ணியல் வல்லுநர்கள் நன்கு ஆய்வு செய்து, சிலையின் மெருகு குலையாமலிருக்க, மூன்று ஆண்டுகளுக்கொரு முறை ஜெர்மனியிலி ருந்து கிடைக்கக் கூடிய, ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இரசாயன கலவை பூச வேண்டுமென அறிவுறுத்தியிருந்தார்கள்.

இரசாயன கலவை பூசுவதற்கு முன் ஃபாலி சிலிக்கான், பூசி விட்டுப் பின் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். 2000-த்தில் சிலை நிறுவிய பின் 2003இல் அப்பொழுதிருந்த முதல்வர் அப்பணியைச் செய்யவில்லை. அதனால், ஓராண்டிலே அச்சிலையில் ஆங்காங்கே உப்பரிப்பு ஏற்பட்டு, அதன் நிறம் மாறியது. தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் போராட்டத்தால் அந்தப் பணி ஏதோ கடனுக்குச் செய்யப்பட்டது. அதன் பிறகு 2006-இலும், 2009இலும் கலைஞர் அரசு இரசாயன கலவை பூசுதலைத் தவறாமல் செவ்வனே செய்தது.

தற்பொழுது 2012இல் அப்பணியைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சிலை உறுதித் தன்மையை இழந்து விடும். சிலை முழுவதும் கீறல்கள் ஏற்பட்டு, மாதம் ஒன்றரை செ.மீ. அளவு சிலை தேய்ந்து கொண்டே போகும். தமிழறிஞர்களை இழிவு செய்பவர்கள் அதன் பயனை அனுபவித்தே தீர வேண்டும். இதற்கு உடனே ஆவன செய்ய சமூக ஆர்வலர்கள், தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள் போன்று, ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. ஆதலின், உடன் ஆவன செய்யக் கனிவுடனும், பணிவுடனும் வேண்டுகிறேன்.

புலவர் வெ.அ. முத்துக்கண்ணன், தலைமையாசிரியர் (ஓய்வு), மேலூர்

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை யில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு. (விடுதலை, 12.3.1965)

தமிழ் ஓவியா said...


மத மாற்றத்துக்கும் கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி?


இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்கு காரணம் என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.

நம் நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமிருந்தும் புராகிதர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்.

வங்காளத்தில் விவசாயிகளுக்கிடையில் இந்துக்களை விட முஸ்லீம்கள் அதிகமாக விருப்பத்தை காணலாம். அதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவசாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார்களுடைய கொடுமையிலிருந்து விலகிக் கொள்வதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்.

தோட்டிகளையும், பறையர்களையும் இன்றை இழிநிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் என்னும் கேள்வி எழுமாயின் அதற்கு விடை வருமாறு: அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள் பொறுப் பாளிகள் அல்லர்.

அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப் பாளிகளாவோம் நம்முடைய துன்பத்துக்கும் நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள், மதத்தின் போலிகளும், அவநம்பிக்கை உடையவர்களும் இருக்கிறார்கள்.

அத்தகைய நயவஞ்சகர்கள் மதத்தின் உட்கருத்தை வலியுறுத்தாமல் வெளி ஆசாரங்களைப் பிரமாதப்படுத்திச் சுயநலத்தை வளர்ப்பவர்களாயிருக் கிறார்கள். அவர்கள் பராமார்த்திகம், வியகாரிகம் என்ற கொள்கைகளின் வடிவங்களில் கொடுமையான செயல்கள் பலவற்றை உருவாக்கி யுள்ளார்கள். அவை அவர்களுடைய குற்றங்களாகும்.

ஏழைகள் என்று கூக்குரலிடுவதற்குப் பலர் இருக்கிறார்கள். ஏழைகளின் நலனுக்காக ஏதாவது செய்வதற்குச் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளுடைய துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு உண்மையாகவே உருகி அழுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? மக்கள் இனத்துக்காகப் பாடுபடும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? மனிதர்களாகப் பிறந்துள்ள நாம் மனிதர்களுக்காக உருகாவிட்டால் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? பசியின்றி பட்டினியின்றி மக்களினம் வாழ நாம் என்ன செய்கின்றோம்? மக்களையெல்லாம் மகேசுவரன் நிலைக்கு உயர்த்த நாம் என்ன செய்கின்றோம்? இவ்வுலக வாழ்வை கடந்து அப்பால் செல்லுவதற்கும் இந்துமதம் சிறந்த வழிகாட்டியாகவிருக்கின்றது.

இந்தமதத்தைச் சரியாக அறிந்து அதை மக்களுக்குப் புரியும்படி செய்வது இந்துவினுடைய பொறுப்பாகும். இதைச் செய்யாததால் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மக்கள் போகின்றார்கள். பொதுவாக நம்மவர்களிடையே பேச்சு அதிகம். செயல் குறைவு. கிளிப்பிள்ளை போன்று புத்தகத்தில் படித்தவற்றையும் பிறரிடமிருந்து கேட்டவற்றையும் பேசிக் கொண்டிருப்போம்.

நமக்குப் பேசத்தான் தெரியும் நமக்கு எதையும் செயல்படுத்தத் தெரியாது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் போதுமான உடல் பலம் இல்லை. நம்முடைய துன்பத்துக்கு நம்மிடமுள்ள உடல் பலகீனமே காரணமாகும்.

மேலும் நாம் சோம்பேறிகளாகவிருக்கின்றோம். செயல்புரிய வேண்டும் என்ற உற்சகம் நம்மிடம் இல்லை. நம்மிடம் ஒற்றுமையும் இல்லை. ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மையும் இல்லை. நம்மிடம் சுயநலம் மிகவும் அதிகம். கீழ்நிலையிலுள்ள மக்கள் புறக்கணிப்பது மதமாற்றத்துக்கு ஒரு காரணமாகும்.

(தர்மசக்கரம் துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11)

தமிழ் ஓவியா said...


வ.உ.சி.யின் வாய்மொழி


பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும், பிராமணரல் லாதார்களுடைய பொருள்களைக் கவருவதற்காக தொன்று தொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், கொலை களையும், பிறதீயச் செயல்களையும் எடுத்துக் கூற வேண்டும்.

இந்து சமயம் என்பதன் புரட்டுகளையும், பொய்களையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லாதார்களின் பொருள்கள் கொள்ளை யிடப்படுவதையும், அக்கொள்ளையினின்றும், தாழ்வினின்றும் பிராமணரல்லாதார்கள் தப்புவதற்கான அவசியத்தையும் வழிகளையும் விளக்கிக் கூற வேண்டும்.

வ.உ.சி.யின் ஞான சூரியன் முன்னுரையில்
தகவல்: மன்ற வாணன்

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். இதை எதிர்க்குமா?


முஸ்லீம் கலாச்சாரத்தை எதிர்ப்பதாக ஆர்.எஸ்.எஸ். ஆரிய வெறிக்கூட்டம் பறைசாற்றிக் கொண்டு அலைகிறது.

இதோ இந்தச் செய்திக்கு அது என்ன கூறுகிறது?

12.9.1982 கல்கியில் பின்கண்ட செய்தி வெளியாகி உள்ளது.

சிறீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் அர்ஜூன மண்டபத்தில் துலுக்க நாச்சியார் சன்னதி ஒன்று இருக்கிறது.

அமாவாசை, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் துலுக்க நாச்சியாருக்காக உற்சவ மூர்த்தி சிறீரங்கநாதருக்கு திருமஞ்சனம் செய்து கைலிகட்டி அலங்கரிக்கிறார்கள் என்று செய்தி வெளியாகி உள்ளது.

இவர்களது கடவுளே கைலிகட்டி, முஸ்லிம் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளாரே... இதனை எதிர்த்துப் போராடு வார்களா?

உண்மை, 15.1.1983

தமிழ் ஓவியா said...


இந்து என்றால்...


இந்து - சப்தசாகர் என்னும் இந்தி மொழிப் பேரகராதி வாரணாசியில் உள்ள நாகரிணி பிரச்சார சபா என்னும் அமைப்பு வெளி யிட்டுள்ளது. அதன் ஆசிரியர்கள் இந்தி மொழிப் பண்டிதர் களான இராமச்சந்திரசுக்லா, இராமச்சந்திர வர்மா, ஷியாம சுந்தரதாஸ் ஆகியோர் அந்த அகராதியில் இந்து என்பதற்கு தந்துள்ள பொருள் விளக்கம்.

1. Black and Ugly

2. An uncultural Brooot

3. A Decoit

4. Anything belonging to india.

(பேராசிரியர் க.அன்பழகன், திருச்சி திராவிடர் கழக மாநில மாநாட்டில் 12.6.1982)

தமிழ் ஓவியா said...


வளைகாப்புக்கு வாருங்கோ!


இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென் றால், எங்கள் வீட்டு வளைகாப்புக்கு வாருங்கள்! வாருங்கள்!!

யாருக்கு வளைகாப்பு? எங்கள் வீட்டு லட்சுமியாகிய பசுமாட்டுக்கு.

என்ன கிண்டலா? கிண்டலும் அல்ல - சுண்டலும் அல்ல!

ஸ்ரீகோமாதா வளைகாப்பு என்று அழைப்பிதழே அச்சுப் போட்டு வந்துடுச்சு.

எந்த ஊரில்?

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த மேற்பனைக்காடு மாரியம்மன் கோவிலில் இந்த வளைகாப்பு வைபவம்!

அழைப்புக் கொடுப்பவர்கள் எஸ். சன்னாசி, எஸ். தமிழரசி; அவ்வண்ணமே கோருபவர்கள் தி.சொ. சக்திவேல், தி.சொ. ராஜேந்திரன்.

அதோடு முடிந்ததா? இதற்குத் தலைமை தாங்குபவர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராம் (இதைவிட அவருக்கு வேறு வேலை என்ன?)

முன்னிலை வகிப்போர் ஏழு பேர்கள்; வரவேற்புரை யாளர், சிறப்பு அழைப்பாளர்கள் இல்லாமலா? அவர்கள் ஆறு பேர்கள். மேலும் 26 பேர்கள்... எதற்காக அவர்கள் என்று அழைப்பிதழில் போடப்படவில்லை. இதில் நல்லையா என்பவர் சுயமரியாதைக்காரர் போலிருக் கிறது. என்னைக் கேட்காமல் எப்படி என் பெயரைப் போட்டாய் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் (ஊரில் ஒரு புத்திசாலி - வாழ்க!).

வளைகாப்புக்குரிய அந்தப் பெண்ணாகிய பசு மாட்டுக்குப் பெயரும்கூட இருக்கிறது.

செல்லப் பொன்னாம் - மாட்டின் பெயர் (செல்லமாகக் கொஞ்சுவார் போலிருக்கிறது).

கோமாதாவின் உரிமையாளரும், வளைகாப்பு அழைப்பாளருமான சன்னாசி, மாடுகள் வளர்த்து பால் கறந்து வியாபாரம் செய்கிறாராம்.

வரும் 13 ஆம் தேதி அந்தப் பசுவைக் குளிப்பாட்டி மாலை போட்டு கோவிலில் கொண்டு போய்க் கட்டி, அப்புறம் வளையல் போடவேண்டுமே! பெண்களுக்குக் கையில்தானே போடுவார்கள்? மாட்டுக்குக் கை ஏது? கால்கள்தானே. எதுவாக இருந்தால் என்ன? வளைகாப்பு என்று முடிவு செய்த பிறகு வளையலை மாட்டுவதற்கு இடமா இல்லை?

காலில் போடுவதற்காக வெள்ளிக் காப்பாம்.

விசேஷத்திற்கு வந்தவர்களை சும்மா அனுப்ப முடியுமா? கேசரி, வடை, தேநீர் அளித்து உபசரிப்பாம்.

(மொய் எழுதுவதுபற்றி அழைப்பிதழில் குறிப்பிடப்படவில்லை).

பக்திபடுத்தும் பாட்டைப் பார்த்தீர்களா? மாட்டு மூத்திரத்தையும், சாணியையும், பால், தயிர், வெண்ணெய் யையும் கலக்கிக் கொடுத்தால், பஞ்ச கவ்யம் என்று தட்சணை கொடுத்துக் குடிக்க வைத்துவிட்டானே பார்ப்பான். அதைவிடவா இது மோசம் என்று யாரேனும் கேட்டால், பதில் சொல்லுவது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஆக, ஒரு புதுப் புராணம் தயாராகி விட்டது. பசு மாட்டுக்கு வளையல் காப்பு நடத்தினால், அவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று அவிழ்த்து விட வேண்டியதுதான். பாருங்களேன் ஊருக்கு ஊர் கிள(ப்)ம்பி விடுவார்களே!

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

பரப்பியவன் அயோக்கியன்

வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்ன அந்தத் தலைவரின் வாய்க்கு எவ்வளவுச் சர்க்கரையைக் கொட்டலாம்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்று அதற்கு மேலும் சென்று சொன்ன அந்தப் பெரியாரை - ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கண்ணீர் பொலபொலவென்று நம்மையறியாமலேயே கொட்டும்!

எப்படிப்பட்ட விடயத்தில் அந்தப் புரட்சியாளர் ஈடுபட்டுள்ளார் என்பதன் அருமை புரியும்.

தகவல் உதவி: புதுக்கோட்டை கண்ணன், விடுதலைச் செய்தியாளர்

பாண்டியன் said...

ஏம்பா. நீங்க எல்லாம் செவிட்டு பயல்களா. மதுரை ஆதினம் பெண் உடை குறித்து பேசினது உம் காதுகளில் விழவே இல்லையா.

தமிழ் ஓவியா said...

விவேகானந்தர் - 150


விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள்.

பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விழாவுக்கு அங் கிருந்து இவருக்கு ஏதோ தனி அழைப்பு வந்த தென்று.. அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

அமெரிக்கா உருவாகி 400ஆம் ஆண்டு விழா ஒன்று ஏற்பாடாகி இருந்தது. உலகில் பல நாடு களிலிருந்து பொருட்காட்சிகள் நடத்தினார்கள்; பல நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி இடம் பெற்றது.

ஒரு நாள் உலக மதங்களில் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு 1893இல் சிகாகோவில் நடத்தப்பட்டது. இந்து மதத்திலிருந்து யாரையாவது ஒருவரை அழைக்க நினைத்தார்கள்.

பார்ப்பனர் ஒருவருக்குத் தான் அழைப்பு வந்தது. கடல் தாண்டி செல்லுவது தோஷம்! என்பதால் செல்ல மறுத்த நிலையில், பார்ப்பனர் அல்லாதாரான விவேகானந்தர் சிக்கினார். அதுதான் உண்மை.

வெள்ளைக்காரர்கள் லேடீஸ் அண்ட் ஜென்டில் மென் என்று அழைப்பார்கள். இந்தியாவிலிருந்து சென்ற விவேகானந்தரோ பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைத்து விட்டாராம். அடேயப்பா, இதுதான் இந்தியாவின் கலாச்சாரம்; இதுதான் இந்து மதத்தில் தகத்தகாய தத்துவம் என்று வானத்தை கிழித்து எழுதி வருகிறார்கள்.

உண்மையிலே இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?

பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் ஒரு வருணாசிரம மதத்தில் சகோதரத்துவம் என்பதற்கு எள் மூக்கு முனை அளவுக்கு இடம் உண்டா?

பிறப்பில் ஒரு குழந்தையின்மீது அத்துமீறித் திணிக்கப்பட்ட ஜாதி, அந்தக் குழந்தை பெரியவ ராகி செத்த பிறகு எரிக்கப்படும், அல்லது புதைக் கப்படும் இடுகாடு - சுடுகாட்டில் கூடத் தொடர்கிறதே.

மனிதன் சாகிறான்; ஆனால் பிறப்பின் போது அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதை உள்ள ஒரு மதத்தில் ஏதோ சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால், அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துக்காட்டிச் சொல்லப்பட்ட பொய்யுரையாகும்.

விவேகானந்தரைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்பற்றி பல நேரங்களில் அம்பலப்படுத் தினார் என்பது என்னவோ உண்மை. ஆனால் அதனை எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

அமெரிக்கா சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்குச் செல்லுவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து விவேகானந்தர் கூறும் கருத்தினை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றனவா?

பூணூல் என்பது கோவணம் கட்டும் அரைஞாண் கயிறு என்று சொல்லி இருக்கிறாரே - அதைப்பற்றி எல்லாம் வெளியிடுவதுதானே!

ஆதி சங்கரர் ஆணவக்காரர் - இதயமில் லாதவர் - புத்தரோ கருணைக் கடல் என்று விவேகானந்தர் கருத்துத் தெரிவித்துள்ளாரே அதையும் எழுத வேண்டியதுதானே!

தந்தை பெரியாரைச் சந்தித்த அமெரிக்கர் ஒருவர் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா அமெரிக்காவிலேயே பிரமாதமாகக் கொண்டாடப் படுவது குறித்து சிலாகித்துச் சொன்ன பொழுது, முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே சொந்தமா? என்று எதிர் கேள்வி போட்டு மடக்கிய நிகழ் வெல்லாம் உண்டு.

இந்து மதத்தை எந்த வகையில் எவர் ஏற்றுக் கொண்டு இருந்தாலும், அவரிடம் அளப்பரிய திறமைகள் குடி கொண்டிருந்தாலும் அதனை மதிக்கத் தேவையில்லை.

மதம் மிருகங்களுக்குப் பிடிக்கட்டும் - மனிதனுக்கு வேண்டாம்!12-1-2013

தமிழ் ஓவியா said...


பாடுபடுவான்


இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதை யாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். - (குடிஅரசு, 3.5.1936)

தமிழ் ஓவியா said...


சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்


1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

தமிழ் ஓவியா said...


பெரியாரின் இலட்சியங்கள்! -ஜி.டி.நாயுடு-


பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை.

அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கை களை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன். இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.

(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் ஆண்டு


- மறைமலையடிகளார்

வள்ளுவனார் இற்றைக்குக் குறைந்தது 1900 ஆண்டுகட்கு முன் பிறந்தவர் என்பது பற்றி யான் விரி வான ஆராய்ச்சி செய்து, திருக் குறளாராய்ச்சி என்று முன்னர் எழு திய முற்பகுதியிலும், மாணிக்க வாசகர் காலமும் வரலாறும் என்ற நூலிலும் எழுதியுள்ளேன். அவற்றிற் குறித்துள்ள சான்றுகளை எல்லாம் ஈண்டெடுத்துக் கூறி விளக்கக் காலம் போதாது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதி கார ஆசிரியராகிய இளங்கோவடிகள் காலத்திலேயே எழுதப்பட்ட நூலாகும் என்பது சிலப்பதிகாரத்தின் இறுதியில் ஆசிரியர் மணிமேகலை மேலுரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் என்பதனால் அறியப்படும் நூலொன்றை இயற்ற எண்ணங் கொண்டவராய் ஆசிரியர் கோவலன் கதையைக்கூறி, அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோரேத்தலும், ஊழ் வினை யுருத்துவந்தூட்டு மென்பதூஉஞ், சூழ் வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதிகாரமென் னும் பெயரானாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென, முடிகெழு வேந்தர் மூவர்க்குமுரிய தடி கணீரே யருளுக என உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன், என் பது உற்று நோக்கற்பாலது.

சாத்தனார் பாண்டியன் அவைக் களப் புலவர்; அவர் சிலப்பதிகாரம் இயற்றப்புகுவராயின் பாண்டியனைக் குறைத்துப் பேச நேருமாதலால் அதற்கு உளமிசையாராய், இளங் கோவடிகளைப் பாடச் சொன்னார் என்பதும், துறவிக்கு வேந்தன் துரும் பாதலின், துறவியாகிய அடிகட்கு அஃது எளிதாம் என்பதும் உய்த் துணரற் பாலனவாம். வேந்தர் மூவர்க்குமுரிய தடிகணீரே யருளு கென்றாற்கு என்பதற்குரை கூற வந்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தான் பாடக் கருதி வினாவின் சாத்தற்கு அங்ஙனங் கூறாது இங்ஙனக் கூறினாரென்க என் சொல்லியவாறோவெனின் இச்செய் கின்ற காப்பியம் மூவேந்தர்க்குமுரிய தென்பதனால் ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவேமென்பது கருதி, நீரே, அருளுகென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம்பட்டாரென் பதாயிற்று என ஊரை எழுதிப் போந்தமையுங் குறிப்பிடற்பாற்று.

இளங்கோவடிகள் சேர நாட்டில் வஞ்சி நகரத்திலிருந்து அரசு புரிந்த சேரலாதனென்னும் அரசனுடைய இளைய மகனார்; சேரன் செங்குட் டுவனின் இளவல் ஒரு நாள் அரச வையில் இவர் தம் தந்தையுடனும் தமையனுடனும் வீற்றிருந்த காலை ஒரு நிமித்தகன் வந்து இவரை அடி முதல் முடி வ ரை நெடிது நோக்கி, அரசு வீற்றிருக்கும் இலக்கணம் இவர்க்குண்டென, அதுகேட்ட தமையன் செங்குட்டுவன் அழுக்காறு மிகுந்த கண்ணெரி தவழ அண்ணலை, நோக்குவதைக் கண்ட இவர். உடனே தமையனுக்குத் துன்பம் வராதபடி அரசு துறந்ததைக் கூறிக் குணவாயிலிற் சென்று துறவு பூண்டு.

சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத் தந்தமி லின்பத்தரைசார் வேந்த ராயினார். இத்தகைய பெரியாராகிய இளங்கோவடிகளும் கூலவாணிகள் சாத்தனாரும் சிலப்பதிகாரக் கதைத் தலைவியாகிய கண்ணகிக்குக் கல் நாட்டு விழா நடைபெறுங் காலை இலங்கைக் கயவாகு முதலாவன் வந்திருந்தான் என்று குறிப்பிடப்பட் டுள்ளது.

அவனுடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று இலங்கை மகா வமிசத்தினாலும் பிற ஆராய்ச்சியினாலும் கணிக்கப் பட்டுள்ளது. எனவே, சிலப் பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது பெறப்படும்.

அக்காலத்தே சாத்தனார் பாத்திரமாகிய மணிமேகலை யுமாகும். அம்மணி மேக லையில், தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழு வாள். பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றப் பொய்யில் புலவன் பொருளுரை என்று திருவள்ளுவரையும் அவர் நூலாகிய திருக்குறளையும் ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார்.

எனவே, திருவள்ளுவனார் காலம் 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 31ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்.

தமிழ் ஓவியா said...


சிந்துவெளி மக்கள்


சிந்துவெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டு பிறப்பும்ஆயிற்று.
- விஞ்ஞானி நெல்லை சு. முத்து

தை முதல் மார்கழி வரை உள்ள பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே. இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.
- முனைவர் சி. இலக்குவனார்

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் ஆண்டு


இந்த 60 ஆண்டு சுழல் முறை யால் தமிழ்மொழி, மரபு, மாண்பு, பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும், இழிவும் எண்ணிப் பார்த்து, சிந்தித்து, உணர்ந்து, தெளிந்த தமிழ் அறி ஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச் சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை வினவினேன். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும் என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்கள் தலைமையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா. நமச்சிவாயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

1921ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் எடுத்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள் ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்துவ ஆண்டுடன் 31அய்க் கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண் டைத் தொடங்கி வைத்தார். 1935+31 = 1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். புதன் - அறிவன்; சனி - காரி. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2006+31=2037. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டுமுதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

- புரட்சி கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...


தைத் திங்கள் முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்!


- தமிழ் நம்பி

1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி ஒரு மனதாக வரையறை செய்து வெளியிட்ட வரலாற்று சாசனம்தான் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது.

கிருஷ்ணன் - நார தருக்குப் பிறந்ததாகக் கூறும் 60 ஆபாச ஆண்டுகளை அப்புறப் படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டது. எனவே, சித்திரை முதல் நாளில் தொடங் கும் புத்தாண்டு என்பது இந்துத்துவாவாதிகள் தமிழர்கள்மீது நடத் திய திணிப்பே ஆகும்.

திருவள்ளுவர் பெய ரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள் வது; திருவள்ளுவர் காலம் கி.மு.31; தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று மறைமலையடிகளார் 18.1.1935இல் உறுதி செய்துள்ளார்.

1971 முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப் பிலும், 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும், 1981 முதல் தமிழ் நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடை முறைப்படுத்தி வருகிறது.

ஆனால், சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து, தமிழக அரசு தொடர்ந்து விடுமுறையும் அளித்து வருகிறது.

தமிழக அரசு அதி காரபூர்வமாக, தை முதல் நாளைத் தமி ழாண்டுத் தொடக்க மாக அறிவித்து, அந் நாளில் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி - பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சென்னை பல்லாவரத்தில் 16.12.2000 அன்று ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டத்தை நடத்தியது.

அவ்வண்ணமே, மலேசியாவின் தலைநகராம் கோலாலம்பூரில் 6.1.2001 அன்று உலகப் பரிந்துரை மாநாட்டினை மலேசியா திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம் போன்ற இயக்கங்கள் முகாமையாக இருந்து மேலும் தமிழின உணர்வடைய 15 இயக்கங்களும் சேர்ந்து இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.

அய்ந்தாம் முறை யாக அரியணை ஏறி யுள்ள கலைஞர் அவர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத் தாண்டு என அறி வித்தது தமிழை அரியணை ஏற்ற மறுத்தே வந்துள்ளார். 2007ஆம் ஆண்டு விடுமுறை நாள்களை அறிவித்த தமிழக அரசு சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து அந்நாளில் விடுமுறையும் அளித் துள்ளது.

கடந்த 15.12.2006 அன்று மதுரை காம ராசர் பல்கலைக் கழகம், கலைஞருக்கு வழங்கிய முனைவர் பட்டத்தில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தமிழில் கையொப்ப மிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் இதன் மூலம் கலை ஞருக்கு உணர்த்து வதுதான் என்ன?

நான் தமிழராக வாழத் தொடங்கி விட்டேன், தமிழக முதல்வராகிய தாங்கள் இனியேனும் தமிழை வாழச் செய்யும் தமிழ ராக, முதல்வராக மாற வேண்டும் என்பதுதான், சரிதானே, தமிழர்களே!

- மறைமலையடிகளார்
யாதும் ஊரே மார்கழி 2036 - சனவரி 2007