Search This Blog

16.2.12

அம்பேத்கருக்கும் பூணூலா?

விட்டால் அண்ணல் அம்பேத்கருக்கும் பூணூல் போட்டு விடுவார்கள் போலிருக்கிறது.
ஒப்பற்ற தேசியத் தலைவர்! என்று தலைப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் எழுதுகிறது.

நாகபுரியில் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அவர் புத்த மதத்தைத் தழுவினார் (மதம் அல்ல - மார்க்கம்!) அவருடன் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் புத்த மதத்தில் இணைந்தனர்.

தாழ்த்தப்பட்டவன் தீண்டாத்தகாதவன் என்றெல்லாம் சொல்லி, அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கணக்கற்றவை. எனினும் அவர் தீண்டாமைப் பிரச்சினையை தேசியக் கண்ணோட்டத்துடன் அணுகினார். புத்த மதத்தில் இணைவதற்கு அவர் கூறிய காரணங்கள் இதைத் தெளிவாக்குகின்றன.

புத்த மதம் பாரதீய இந்து கலாச்சாரத்தில் பிரிக்கப்பட முடியாத அங்கம். எனவே, இந்த மாற்றத்தால் இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கோ, பாரம்பரியத்திற்கோ எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்

இவ்வாறு அண்ணல் அம்பேத்கர் சொன்னதாக ஆர்.எஸ்.எஸ். வார இதழ் வழக்கம் போல தனது வக்கணைப் புத்தியை, திரிபு வாதக் கொள்ளியைச் கழற்றிச் சொல்லி இருக்கிறது.

நாக்பூரில் அண்ணல் இந்து மதத்தை விட்டு உதறி புத்த மார்க்கத்தில் இணைந்த போது அவரும், அவரைச் சார்ந்த லட்சோப லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களும் (ஆயிரக் கணக்கில் என்று விஜயபாரதம் புளுகு வதைக் கவனிக்கவும்) இணைந்த போது மேற்கொண்ட உறுதிமொழிகளையும் வெளியிட்டு இருந்தால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.

அவர்களால் அதனை எடுத்துப் போட முடியாது. காரணம் அவர் அதில் இந்து மதத்தின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியிருக்கிறாரே! அவர்கள் வெளியிடா விட்டால் என்ன? விடுதலை இதோ வெளியிடுகிறது.

1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்தி லிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த் தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:

1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.

9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.

14. நான் பொய் சொல்லமாட்டேன்.

15. நான் திருட மாட்டேன்.

16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்

20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன். இந்த உறுதி மொழிகளில் இந்து மதத்தின் மீது ஏதாவது அபிமானம் காணப்படுகிறதா?

நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.

உண்மை இவ்வாறு இருக்க, மத மாற்றத்தால் இந்து மதக் கலாச்சாரத்துக்கோ பாரம்பரியத்திற்கோ எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று சொன்னாராம் அண்ணல். எங்கே சொன்னார்? எப்பொழுது சொன்னார்? ஆதாரத்துடன் வெளியிட வேண்டாமா? கொஞ்சம் அசந்தால் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அய்யங்காராக்கிப் பூணூலையும் போட்டு விடுவார்கள் போலும்!

------------------- “விடுதலை” 16-2-2012 இதழில் - கறுஞ்சட்டை - எழுதிய கட்டுரை

1 comments:

kumaresan said...

...
இது மனுவாதிகளின் பாரம்பரியத் தந்திரமாயிற்றே... இந்து மதத்தை விட்டு வெளியேறிய புத்தரையே கடவுளின் அவதாரமாகச் சித்தரிக்கத் தயங்காதவர்கள். புத்தம் இந்துமதத்தின் ஒரு கிளைதான் என்று கூசாமல் சொன்னவர்கள். சமணத்தையும் அப்படிச் சொல்லியே விழுங்க முயன்றவர்கள். சீக்கியத்தை அவ்வாறு ஏப்பம் விட எத்தனித்தவர்கள்.

தங்களால் எதிர்க்க முடியாத சக்தி என்று புரிந்துகொண்டுவிட்டால் இப்படியாகப் புகழ ஆரம்பித்து, படிப்படியாகத் தங்களது பிரகாரத்தில் ஒரு ஓரமாக நிறுத்திவைத்துவிடுவதில் வல்லவர்களாயிற்றே.

கவனம் தேவை. ஆகா, இவர்களே போற்றிவிட்டார்கள் என்று மயங்கிவிடலாகாது என்ற எச்சரிக்கை தேவை.