மகா சிவராத்திரி என்று கூறி, நாள் முழுவதும் பட்டினி கிடந்து, இரவெல்லாம் கண் விழித்துப் பயப்பக்தியைக் காட்டும் பக்தர்காள்!
இந்தப் பக்தியின் இரகசியம் என்ன? இதோ:-
ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக் கேடனும் ஆவானாம். இதனால் ஊரை விட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோவில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான்.
இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோவிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகா சிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம்.
இதுதான் மகா சிவராத்திரியின் இரகசியம்!
எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் சிவனைக் கும்பிட்டால், மகா சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் பாவம் போகும். மோட்சம் கிடைக்கும் என்றால் இது ஒழுக்கக் கேட்டை ஊக்குவிப்பது ஆகாதா? பக்தர்களே, சிந்திப்பீர்!
----------------"விடுதலை” 20-2-2012
1 comments:
இந்த வெர்ஷன் எங்கிருந்து எடுத்தாளப்பட்டது என்று லிங்க் கொடுக்க இயலுமா!?
Post a Comment