Search This Blog

19.2.12

பூணூலை அறுத்து எறியும் காட்சி -இயக்குநருக்கு மிரட்டல்


சத்யா - பவீனா இணைந்து நடித்து வெளிவந்த ஒரு திரைப்படம் சூழ்நிலை - இதனை இயக்கியவர் செந்தூரன்.
நிழல்கள் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகனாக வரும் பார்ப்பனர் (நிழல்கள் ரவியே பார்ப்பனர் தானே!) மாமிசம் சாப்பிடுகிறாராம் - ஒரு கட்டத்தில் பூணூலையும் அறுத்து எறிகிறாராம்.

இதற்காகத் தொலைப்பேசி மூலம் இயக்குநர் செந்தூரனை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வளவுக்கும் இயக்குநர் ஒன்றும் பார்ப்பனர் எதிர்ப்பாளரல்ல; வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார்!

இந்தக் காட்சிக்கான சமாதானத்தைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்.

பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடுவது என்ன இந்தக் காலத்தில் அதிசயமா?

அந்தக் காலத்திலிருந்து ஆரியப் பார்ப்பனர்கள் மாமிசம் தின்றவர்கள்தானே!

யாகங்களில் தீ வளர்த்துக் கொல்லப்படும் மிருகங்களின் எந்தெந்த பாகத்தை எப்படியெல்லாம் ருசித்துத் தின்னவேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி ஆயிற்றே!

இயக்குநர் செந்தூரன் அவர்களை மிரட்டும் பார்ப்பனர்கள், ஒவ்வொரு முனியாண்டி ஓட்டல் வாசலிலும் நின்று, எந்தெந்த பார்ப்பனர்கள் சாப்பிடச் செல்லுகிறார்கள் என்று பார்த்து, சட்டையைப் பிடித்து இழுத்து, பிடரியில் இரண்டு சாத்துக் கொடுக்கவேண்டியதுதானே! யார் தடுத்தது?

பூணூலை அறுத்ததுதான் பிரச்சினை என்றால், இதற்கு முன்புகூட எத்தனையோ படங்களில் பூணூலை அறுத்து எறியும் காட்சி இடம் பெற்றுள்ளதே!

புரட்சி இயக்குநர் பாரதிராஜா எடுத்த அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது ஆகிய படங்களில் பூணூலை அறுத்தெறியும் காட்சி இடம்பெற்றதே! பார்ப்பனர்கள் அப்பொழுதெல்லாம் கண்மூடித் தவம் செய்து கொண்டு இருந்தார்களா? அஞ்ஞான வாசம்தான் செய்துகொண்டு இருந்தார்களா?

அப்படிப் பார்க்கப்போனால், காந்தியாரே பூணூலை அறுத்தெறிந்திருக்கிறாரே!

அறுத்தெறிந்தவர் சாதாரணமானவர் அல்லவே! சாதாரண ஆத்மா அல்லவே - மகாத்மாவாயிற்றே!

அவர் அறுத்தெறிந்தபோது எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார் யார்?

பூணூலை அறுத்தெறிந்ததற்குக் காந்தியார் என்ன காரணம் சொன்னார்?

லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமலிருக்கும் போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆத லால் நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு - மாசற்ற வாழ்வு வாழவேண்டும்; ஆத்மார்த்தீக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்கவேண்டும், இப்பூணூல் இன்றுள்ள இந்துக்கள், இன்று இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலை அணிந்துகொள்வதற்குத் தகுதியுள்ளவர்களா என்பது எனக்குச் சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண்டாமை, உயர்வு தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம் - யாவும் ஒழிந்த பிறகுதான் இந்துவுக்குப் பூணூல் அணியும் உரிமையுண்டு; ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை - (சுயசரிதம்: பக்கம் 480) என்றாரே காந்தியார் - இதற்குப் பதில் என்ன?

காந்தியார் கூற்றில் கருத்துக் குழப்பம் இருக்கிறது என்றாலும், பூணூலை அறுத்து எறிந்தார் என்பதுதான் இந்த இடத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டியதாகும்.

பூணூல் என்னமோ ஜாதியை, தீண்டாமையை ஒழிக்கும் தத்துவம்போல காந்தியார் கூறியிருப்பது அடிப்படையில் தவறானதே!

பூணூல் என்பதே ஜாதியின் சின்னம்தான்; அதுவும் உயர்ஜாதிக்காரர்கள் அணியும் சின்னம்தான்.

தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களோ நான்காம் ஜாதி என்று இந்து மதத்தால் அறிவிக்கப்படும் சூத்திரர்களுக்கோ இந்து சாஸ்திரப்படி பூணூல் அணிய உரிமை கிடையாதே!

சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிடவேண்டும் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 9; சுலோகம் 224).

உயர்ஜாதி ஆணவத்தைக் காட்டும் பூணூலை அறுக்கவேண்டும் என்று இழிவுபடுத்தப்பட்ட மக்கள் நினைத்தால், திட்டமிட்டால் அதைக் குற்றமாகவோ, நியாயத்துக்கு விரோதமானதாகவோ கூடக் கருத முடியாதே!

இப்பொழுது இல்லாவிட்டாலும், அப்படி ஒரு காலம் வராது என்று கூற முடியாதே!

முஸ்தாபா கமால் பாட்சா செய்யவில்லையா?

இவ்வளவுக்கும் பூணூல் என்பது அந்தக் காலத்தில் கோவணம் கட்டுவதற்குப் பயன்படும் அரைஞாண் கயிறு என்றுதானே விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்?

இதற்கா அச்சுறுத்தல்?

--------------------- கறுஞ்சட்டை 19-2-2012 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...

இதற்குப் பிறகுமா கடவுள் பக்தி?


குஜராத் மாநிலத்தில் நேற்று நடந்த சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுமார் 9 லட்சம் பக்தர்கள் திரண்டிருந்த ஒரு கோவில் ஊரில் (ஜுனாகத் நகர் கிர்னார் மலையடிவாரம்) திடீ ரென்று இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட பெரும் சப்தம் கேட்டு, மிரண்டு திடீரென ஏற்பட்ட நெரிசலால் அங்கு திருவிழாவிற்கு வந்தவர்களில் 6 பேர் (பக்தர்கள்) பலியாயினர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்து, அனைவரது ஆழ்ந்த அனுதாபங்களையும் பெற்ற வண்ணம் உள்ளது!

சிவராத்திரிக்காக விருதுநகருக்குச் சென்று திரும்பும்போது கார் - வேன் மோதி பலி என்ற செய்தி இன்று காலை தொலைக்காட்சிகளில் ஒளிபரப் பாயின.



கடவுளர்களை தரிசிக்க, திருப்பதி, சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் விபத்தினாலும் மற்றும் நெரி சலினாலும் இறப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்தபாடே இல்லை! மாறாக, எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது!

சபரிமலை விபத்து ஒரு நீதி விசாரணைக்கே அவசியப்பட்டது!

இந்தக் கடவுள்களை கருணையே வடிவானவன்; எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அது உண்மையானால், இப்படிப் பட்ட நிகழ்வுகள் பக்தகோடிகளுக்கு ஏற்படலாமா? உயிர்ச்சேதம் - பலிகள் நடைபெறலாமா?
புயல்கள், பூகம்பங்கள், சுனாமிகள் - அதனால் ஏற்படும் அழிவுகளும், சோகங்களும் அன்றாட அவலச் செய்தியாகி, ஏடுகளை ஆக்கிரமிக்கலாமா?

சிந்தியுங்கள் இளைஞர்களே, பக்தர்களே!

தென் அமெரிக்க ஹோண்டூராஸ் சிறைச்சாலை யில் ஏற்பட்ட கோர தீ விபத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் செத்து மடிந்தனரே - உள்ளத்தை உருக்கும் செயல்கள் கடவுளர்களின் கருணையால் தடுக்கப்பட்டு, மக்கள் காப்பாற்றப் பட்டனரா?
எந்த மதக் கடவுளரும் எந்த பக்தரையும் காப்பாற்றவில்லையே!

தீ அணைப்பு வீரர்கள் ஏதாவது ஒரு இடத்திற்கு உடனே விரைந்து வந்து தீயை அணைக்கத் தாமதித்தாலோ, கொண்டுவரும் தீயணைப்புக் கருவிகள் சரியாக வேலை செய்யாமல் பழுதுடன் இருந் தாலோ, அவர்கள்மீது எவ்வளவு புகார் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், ஊடகங்கள் எப்படி வானத் திற்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள்?

ஆனால், எல்லாம் அவன் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முணுமுணுக்கும் பக்த கோடிகளும், கடவுள், மத நம்பிக்கையாளர்களும் இந்த மாதிரி நிகழ்வு களுக்குப் பிறகும் தங்களது கடவுள் நம்பிக்கை அடிப்படையற்ற கற்பனை என்பதை ஏனோ புரிந்து, கடவுள் நம்பிக்கை என்ற வைரஸ் நோயிலிருந்து விடுபட மறுக்கிறார்கள்?
ஆதிமனிதன் - காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில், காற்றை, தீயை, மின்னலை, இடியை, மழையை - வெள்ளத்தை, நோய் சாவினை கடவுள்களாகப் போற்றி பயந்து வணங்கியது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த 21 ஆம் நூற்றாண்டில், புதிய கிரகங்களைக் கண்டறிவது, விண்வெளியில் பயணம் செய்வது ஏவுகணைவிட்டு - விண்கலனை உருவாக்கி விண் வெளிப் பயணம் செய்வது - இவ்வளவு செய்தும் இன்னமும் இந்தப் பலவீனம் - பக்திச் சுரண்டலுக்குப் பலியாகி, பொருளையும் அறிவினையும் இழக்கலாமா?

காஞ்சிபுரம், திருப்பரங்குன்ற அர்ச்சகர்கள் - மகளிரைச் சூறையாடுகின்ற அவலம் கோவில் கருவறைகளிலும், வெளியிலும் நடைபெறுவதன் ஓலத்தின் ஓசை கேட்ட பிறகுமா மணியாட்ட கோவிலுக்கு ஆறறிவு படைத்த மனிதர்கள் போவது?

பக்திப் போதையைத் தெளிவிக்க பகுத்தறிவு வெளிச்சத்தை - பெரியார்தம் சுயமரியாதைச் சூரணத் தைத் தந்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவோம், வாரீர்!

- கி.வீரமணி 20-1-2012

தமிழ் ஓவியா said...

கடவுள் பக்தி வளர்க்கும் ஒழுக்கத்தைப் பாரீர்!


அய்யப்பன் கோவிலில் உண்டியல் எண்ணியதில் முறைகேடு

திருவனந்தபுரம், பிப். 20- சபரிமலை அய்யப்பன் கோவில் உண்டியல் எண் ணியதில் சுருட்டல் வேலை நடந் துள்ளதாக தணிக்கைத் துறை அம் பலப்படுத்தியுள்ளது.

மண்டல, மகர ஜோதி உற்சவ காலத்தில், சபரிமலை அய்யப்பன் கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் மற்றும் தங்கப் பொருள்களை எண்ணும் போது, முறைகேடுகள் நடந்துள்ளதாக நிதி தணிக்கைத் துறை தெரிவித் துள்ளது.
கேரளா பத்தனம்திட்டா மாவட் டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரஜோதி உற்சவ காலத்தில், நாட் டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கோடிக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவிலில் உள்ள உண்டியல்களில், காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். பணமாக மட்டு மின்றி, தங்கம், வெள்ளி போன்ற பொருள்களையும் உண்டியலில் போடுகின்றனர்.

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை களை எண்ணுவதற்கு வசதியாக, கோவிலில் பாதுகாப்பு அறை அமைக் கப்பட்டுள்ளது. அங்கு திருவிதாங்கூர் தேவஸ்தானத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அவற்றை எண்ணி, உடனுக்குடன் இதற்காக நிய மிக்கப்பட்டுள்ள தனியார் வங்கியில் டிபாசிட் செய்வர். இது தான் நடை முறை. இவ்வாறு காணிக்கையாகச் செலுத்திய பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருள்களை எண்ணும் போது முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், அவ்வாறு முறைகேடுகள் நடந்தால், அவற்றைக் கண்காணிக்க வும், பதிவு செய்யவும், இரு ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டிருந்தன.

அந்த கேமராக்களில் ஒன்று உற்சவ காலத்தில் பழுதடைந்து விட்டது. மற்றொன்றை செயல்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இத னால், அங்கு நடந்த செயல்பாடுகள் கேமராவில் பதிவாகவில்லை. பக்தர் கள் அளித்த வெளிநாட்டுக் கரன்சி கள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை உடலில் ரகசிய பகுதிகளில் மறைத்து சிலர் கடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இவ்வாறு நடைபெறாமல் இருக்க, பல ஆண்டுகளுக்கு முன், பணத்தை எண்ணி முடித்து வெளியே வருபவர் களின் ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டது. அது மனித உரிமை மீறல் என்ற குற்றச் சாட்டு எழுந்ததால், அவ்வாறு செய் வது நிறுத்தப்பட்டது. இவ்வாறான முறைகேடுகளால், தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற் பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. அய்யப்பன் - மிகக் கோபக்காரன், புலி மேல் சவாரி செய்பவன் என்று புரூடா விடும் பேர்வழிகள், அய்யப்பன் கோவில் உண்டியல் பணத்தையே சுவாகா செய்கிறார்களே - இதற்கு என்ன பதில்? 20-1-2012

தமிழ் ஓவியா said...

பரஞ்ஜோதி அம்மன் கோவிந்தா! உண்டியல் உடைத்து கொள்ளை


காஞ்சிபுரம், பிப்.20-காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பரஞ்ஜோதி அம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அப்படி வரும் பக்தர்கள், கோயில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ள உண்டி யலில் பணம், காணிக்கை செலுத்துவார்கள்.

நேற்று மதியம் 11 மணிக்கு கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், சுவரில் பதிக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். இதையறிந்த பொதுமக்கள் கோவில் முன் திரண்டனர். சில நபர்கள் மதில் சுவர் ஏறி குதித்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடுகின்றனர். 20-2-2012

தமிழ் ஓவியா said...

பக்தீயால் பலி!

ஆவடி, பிப்.20-சாமி கும்பிட்டபோது விளக்கு தீ நைட்டியில் பட்டு தீப்பிடித்ததில் மாணவி உடல் கருகி பலியானார்.

ஆவடி திருமலைராஜ புரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகள் சிவதர்ஷினி (13). அங்குள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 31ஆம் தேதி மாலை செந்தாமரை கடைக்கு சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த சிவதர்ஷினி, சாமி படத்தின் முன் விளக்கு ஏற்றி, தரையில் விழுந்து சாமி கும்பிட்டுள்ளார்.

அப்போது அவளது நைட்டியில் விளக்கு தீ பட்டு எரிந்தது. தீப்பிடித்த நிலையில் கதறியபடி தெருவுக்கு ஓடிவந்தாள் சிவதர்ஷினி. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். கடையிலிருந்து திரும்பி வந்த செந்தாமரை, மகளை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு நேற்று முன்தினம் சிவதர்ஷினி இறந்தார்.20-2-2012