Search This Blog

16.12.10

அது என்ன ஆருத்ரா தரிசனம்?


ஆருத்ரா!

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்பற்றிச் சிறப்பிதழ்கள்; ஆன்மிகத்தைப் பரப்பி மக்களை மொட்டை அடிப்பதற்கென்றே தான் பல ஏடுகள் இருக்கின்றனவே!

அது என்ன ஆருத்ரா? மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் சிதம்பரத்தில் நடை பெறும் விழாவாம் இது. ஆருத்ரா அல்லது திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரியதாம். இந் நாளில் இரவு ஆரம்பித்து மறு நாள் காலைவரை அபிஷேகம் நடக்குமாம். (மூச்சுத் திணறப் போகிறது - ஜாக்கிரதை!)

மக்கள் மத்தியிலிருந்து பக்தி ஒரு சிறு நொடியும் அக லாமல், உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எந்தத் தெருப் புழுதியையாவது செய்து கொண்டே இருக்கவேண்டுமே!

மனிதன் தனக்குக் கற்பித்துக் கொண்டதையெல்லாம் கடவுளுக்கும் கற்பித்துவிட் டான்; காரணம் அந்தக் கடவு ளைக் கற்பித்ததே மனிதன் தானே!

பஞ்சப் பூதங்களுடன் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) சேர்த்து லிங்க வடிவத்தில் சிவனை வழிபடுகிறார்களாம். அதில் சிதம்பரம் நடராஜன் என்பவர் ஆகாய வடிவத்தில் இருக்கும் கடவுளாம்.

108 வகை நடனங்களில் கரை கண்டவராம். காளிக்கும் இவருக்கும் நடனப் போட்டி ஏற்பட்டதாம். காளி சற்றும் சளைக்காமல் ஆடினாளாம்.

ஆண்களுக்கே உரிய குயுக்திப் புத்தியால் இடது காலை தலைக்குமேல் தூக்கி ஆடிக் காட்டினாராம் நடராஜன்.

பெண்ணாகிய காளி காலைத் தலைக்குமேல் தூக்கி ஆபாசமாக ஆடமாட்டாள் அல்லவா! இந்தக் கீழ்த்தரமான ஆபாச நடவடிக்கையால் நட ராசன் நடனத்தில் வெற்றி பெற்றுவிட்டாராம். இப்படி அவர் ஆடியதற்குப் பெயர் ஊர்த்துவ தாண்டவமாம்!

இதுபோன்ற கேவலங் களுக்குத் தத்துவார்த்தம் கற்பித்து விடுவார்கள். அப் பொழுதுதான் மக்கள் சிந்திக்க மாட்டார்கள். இதிலும் அப்படித் தான்; நிலவுலகில் உள்ள உயிர்களுக்கு அருள்பாலிப்பது போலவே, வானுலகத்தவர்க்கும், அருள் செய்வதற்கென்றே ஊர்த் துவத் தாண்டவம் ஏற்பட்டதாம்.

இந்த நடராஜன் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்த போது அவரது உடுக்கிலிருந்து ஹயவரடு-ஹல் முதலிய 14 வேறு வேறான சப்தங்கள் வெளிவந்தன. அவற்றை முறைப் படுத்தி பாணினி ரிஷி சமஸ் கிருதத்தை உண்டாக்கினான். (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி - கல்கி, 25.6.1972) தெய்வ மொழி என்பது இதுதானோ - என்னே சாமர்த்தியமான புளுகு!

மொழி எப்படி தோன்றுகிறது என்ற அறிவியல் சிந் தனைக்கு இது எதிரானது அல்லவா!

எல்லாம் பார்ப்பனர்களின் கைசரக்கே - ஆருத்ரா தரிசனம் என்கிறபோது அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகம் நினைவிற்கு வருகிறது - இதோ ஒரு காட்சி!

வெள்ளையன்: சாமி தானுங்க எசமான் இருக்கு.

மாயேந்திரன்: இங்கே வாடா (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்கடா, கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்கச் செய்கிறார்) நிற்கிறான் வெள்ளை. பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறார் மாயேந் திரன் (வெள்ளை காலை ஊன் றுகிறான்). காலைத் தூக்கச் சொல்லுகிறார் மாயேந்திரன். (மறுபடியும் காலைத் தூக்கி சிறிது நேரம் நின்றுவிட்டு காலை ஊன்றுகிறான்) ஏய்! ஏண்டா ஊன்றுன? தூக்குடா காலை என்கிறார் மாயேந்திரன்!

வெள்ளை: கால் வலிக்கு துங்க எசமான்

மாயேந்திரன்: ஏண்டா, ரெண்டு நிமிஷம் நிக்கறதுக்கே கால் வலிக்குதுன்னு சொல்றீயே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊன்றாமே இருக்குதடா?

வெள்ளை: எங்கே எசமான்?

மாயேந்திரன்: சிதம்பரத் திலே!

வெள்ளை: அது கல்லு எசமான்!

பக்தன் வாயாலேயே அண்ணா இப்படி சொல்ல வைத்தாரே - அதுதான் அண்ணா!

ஆருத்ரா தரிசனத்துக் காகக் காத்துக் கிடக்கும் பக்தர்கள் சிந்திப்பார்களாக!

-------------- மயிலாடன் அவர்கள் 16-12-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

சொர்க்கவாசலின் மூடத்தனத்தைப் பாரீர்!

மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!

சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:

நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் ஸ்ரீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!

அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப் பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்காவல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?

நன்றி:- “விடுதலை” 16-12-2010

anba said...

உண்மை என்றுமே அழியாது...